ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 45

முல்லை - பாசறைப் பத்து (பேயனார்)


முல்லை - பாசறைப் பத்து (பேயனார்)

போர்ப் பாசறையில் இருக்கும் தலைவன் தலைவியின் நினைவில் கலங்குகிறான்.

பாடல் : 441
ஐய ஆயின செய்யோள் களவி
கார்நாள் உருமொடு கையறப் பிரிந்தென
நோய் நன்கு செய்தன் எமக்கே
யாம்உறு துயரம் அவள் அறியினோ நன்றே. . . . .[441]

பொருளுரை:

செம்மையானவளாகிய என்னவளிடம் யான் சொன்ன உறுதி மொழி நொய்மை உடைத்தாயின. கார் காலம் இடியுடன் வந்திருக்கிறது. நான் செய்வதறியாமல் கையற்றுப் பிரிந்திருக்கிறேன். எனக்கே இது துன்பம் தருகிறது. என்னவளுக்கு எப்படி இருக்கும்? நான் படும் வேதனையை அவள் அறிந்தால் நல்லது.

பாடல் : 442
பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்றும் விசும்பினுயர் நிலையுலகத்து
அருந்ததி அனைய கற்பின்
குரும்பை மணிப்பூண் புதல்வன் கற்பின் . . . .[442]

பொருளுரை:

பெருத்த சினம் கொண்டடுள்ள வேந்தன் தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டால் அவளுக்கு என் விருந்து கிடைக்கும். இருண்டு தோன்றும் வானில் மேல் உலகத்தில் இருக்கும் அருந்ததி போன்ற கற்பினை உடையவளாகிய இவள் என்னவள். தென்னம்பூ போன்ற மணிப்பூண் அணிந்த என் மகனின் தாய். அவளுக்கு விருந்து கிடைக்கும்.

பாடல் : 443
நனிசேத்து என்னாது நல்தேர் ஏறிச்சென்று
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவம் தில்அவள் கவின்பெறு சுடர்நுதல்
விண்ணுயர் அரண்பல வெளவிய
மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. . . . .[443]

பொருளுரை:

மிகவும் தொலைவில் உள்ளது என்று எண்ணாமல் தேரில் ஏறிச் செல்வேன். நிலாப் பிறை போன்ற அவள் நெற்றியைக் காண்பேன். வானளாவிய கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றிய வேந்தன் போர்த்தொழிலைக் கைவிட வேண்டுமே?

பாடல் : 444
பெருந்தோள் மடவரல் காண்குவெம் தில்ல
நீண்மதில் அரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து
வைந்நுதி மழுகிய தடங்கோட்டு யானை
வென்வேல் வேந்தன் பகைதணிந்து
இன்னும் தன்னாட்டு முன்னுதல் பெறினே. . . . .[444]

பொருளுரை:

அகன்ற தோளை உடைய பெண் அவள். அவளைச் சென்று காண்பேன். நீண்ட மதில் கொண்ட கோட்டைகளைக் குத்தியதால் தன் தந்தத்தின் கூர்மை மழுங்கிப்போன யானை வெற்றி வேலை உடைய வேந்தன் யானை யானையின் மேல் வேந்தன் பகையுள்ளம் தணிந்து இன்றே தன் நாட்டுக்குத் திரும்புவானாயின் அவளைக் காண்பேன்.

பாடல் : 445
புகழ்சால் சிறப்பின் காதலி புலம்பத்
துராந்துவந் தனையே அருந்தொழில் கட்டூர்
நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை
உள்லூதொறும் கலிழும் நெஞ்சம்
வல்லே எம்மையும் வரவிழைந் தனையே. . . . .[445]

பொருளுரை:

என் காதலி புகழத்தக்க சிறப்பினை உடையவள். அவளை விட்டுவிட்டு வந்தாய். யெஞ்சமே! பல்வேறு மொழிகள் பேசும் பாசறையில் இருக்கிறாய். காளை பசுவைத் தழுவிக்கொண்டு இல்லம் திரும்பும் மாலை வேளை. இதனை நினைக்கும்போது நெஞ்சு அழுகிறது. நெஞ்சே, என்னை உடனே போருக்கு வரும்படி அழைத்துவந்தாயே. இப்போது என்ன செய்வேன்?

பாடல் : 446
முல்லை நாறும் கூந்தல் கம்ழ்கொள
நல்ல காண்குவ மாஅ யோயே
பாசறை அருந்தொழில் உதவிநம்
காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே. . . . .[446]

பொருளுரை:

முல்லை மணக்கும் அவள் கூந்தல் மணக்க மணக்கக் காணவேண்டும். மாமை நிறம் கொண்ட மாயோளை - திருமகளை – காணவேண்டும் பாசறையில் அரிய தொழிலை நிறைவேற்றிய பின்னர் என் காதல் வாழும் நாட்டுக்குச் செல்லும்போதுதானே காணமுடியும்.

பாடல் : 447
பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே
பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை
யாடு சிறைவண்டு அழிப்பப்
பாடல் சான்ற காண்கம்வாள் நுதலே. . . . .[447]

பொருளுரை:

மன்னவன் தொழில் விடுதி பெறட்டும். சிரல் என்னும் மரங்கொத்திப் பறவை போன்று பூக்கும் செம்முல்லை மலர்களை வண்டுகள் தம் சிறகை விரித்துப் பறந்துகொண்டு அவிழ்க்கட்டும். அந்த மலர் சூடிய அவளது ஒளி மிக்க நெற்றியைக் காணவேண்டும்.

பாடல் : 448
தழங்குரல் முரசம் காலை இயம்பக்
கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.
மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்
பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றே
அஞ்சில் ஓதியை உள்லுதொறும்
துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே. . . . .[448]

பொருளுரை:

காலை வேளையில் தழங்கும் குரலோடு முழங்குகிறது. வேந்தன் பெருஞ்சினத்துடன் போர்த்தொழிலில் ஈடுபட்டுள்ளான். மெல்லிய தாழ்ந்த நிலங்களில் முல்லை பூத்திருக்கிறது. பொங்கும் மழைமேகம் துளிகளைச் சிதறி கார் காலத்தைக் காட்டுகிறது. அழகிய சிலவாகிய கூந்தலை உடைய அவளை நினைக்கும்போதெல்லாம் உறக்கமே இல்லாமல் துன்புறுகிறேன்.

பாடல் : 449
முரம்புகண் உடையத் திரியும் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
ஒள்நுதல் காண்குவம் வேந்துவினை முடினே. . . . .[449]

பொருளுரை:

தேரின் சக்கரம் முரம்பு நிலம் உடையுமாறு செல்லும். கட்டிக் கிடப்பதை வெறுக்கும் குதிரையை அதில் பூட்டுவேன். தேர் வலிமையாகச் செல்லும். என்னவளின் ஒளி மிக்க நெற்றியைக் – முகத்தைக் – காண்பேன். வேந்தன் போர்த்தொழிலைக் கைவிட வேண்டுமே.

பாடல் : 450
முரசுமாறு இரட்டும் அருந்தொழில் பகைதணிந்து
நாடுமுன் னியரோ பீடுகெழ வேந்தன்
வெய்ய உயிர்க்கு நோய்தணியச்
செய்யோள் இலமுஅலைப் படீஇயர்என் கண்ணே. . . . .[450]

பொருளுரை:

பெருமை மிக்க பகையரசர் இருவரும் மாறி மாறி முரசை முழக்கினர். இப்போது பகைமை தணிந்து நாடு திரும்புகின்றனர். காதல் நோய் கொடுமையாகப் பெருமூச்சு விடுகிறது. இது தணியவேண்டும். என்னவள் – செய்யோள் – திருமகள் - இளமுலை என் கண்ணில் படவேண்டும்.