ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 08

மருதம் - புனலாட்டுப் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - புனலாட்டுப் பத்து (ஓரம்போகியார்)

மயில் இறங்குவது போல மகளிர் நீரில் பாயும் ‘பண்ணை’ விளையாட்டு இந்தப் பகுதியில் தெளிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் புதுவெள்ளம் வரும்போது மகளிரும் மைந்தரும் கலந்து திளைத்து நீராடுவர். இப்படித் திளைக்கும் மகளிர் பெரும்பாலும் பொதுமகளிரே. இங்கு வரும் இத்தகைய நீராட்டுப் பாடல்களில் தலைவன், தோழி, பரத்தை ஆகியோரின் உரையாடல்கள் உள்ளன.

பாடல் : 071
சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. . . . .[071]

பொருளுரை:

மகிழ்ந! நீ விரும்பிய காதலியோடு நேற்று புனலில் விளையாடினாய் என்கின்றனர். இதனை மறைக்கமுடியுமா? சூரிய ஒளியை யாருக்கும் தெரியாமல் புதைத்துவைக்க முடியுமா? அவள் சூது நிறைந்தவளாம், சிறிய வளையல்கள் அணிந்தவளாம். சூரத்தனத்தால் உடலை நொடிப்பவளாம்.

பாடல் : 072
வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை உண்கன் ஏஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே. . . . .[072]

பொருளுரை:

தன் களவுக்காலக் காதலி தன்னோடு நீராடினான் – என்கிறான் தலைவன். அப்போது தன் காதலியின் அழகைப் புகழ்கிறான். வயலில் மலர்ந்த ஆம்பலைக் கையில் [கயில்] பின்னி அமைத்துத் தழையாடையாக்கி இடையில் [அல்குல்] உடுத்திக்கொண்டு இடையை நொசிப்பாளாம். அவளது கூந்தல் அசைந்தாடுமாம். கண் குவளைப்பூப் போல மலர்ந்திருக்குமாம். பெருமித அழகு [ஏஎர்] கொண்டவளாம். மலர்களை அடித்துக்கொண்டு வெள்ளம் [மலிர்நிறை] வந்தபோது உடன் வந்து புனலில் அவனுடன் விளையாடினாளாம்.

பாடல் : 073
வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்
கள்நறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே. . . . .[073]

பொருளுரை:

அந்த முகவெட்டுக்காரி [ஒண்ணுதல்] வண்ணவண்ண ஒளி வீசும் தழையாடை உடுத்திக்கொண்டு பண்ணை (நீரில் தலைகீழாகப் பாய்தல்) பாய்ந்தாள். அதனால் அவள் உடுத்தியிருந்த தழையாடை மணமும், அலை மோதியதால் பூத்திருந்த குவளை மலர்களின் மணமும் தண்ணெனக் குளிர்ந்து கிடந்த பெருந்துறைப் புனலில் கமழ்ந்தது. – தலைவன் வியப்பு.

பாடல் : 074
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே. . . . .[074]

பொருளுரை:

கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி அவள் நீரில் பாய்ந்தாள். அது வானத்திலிருந்து மயில் இறங்குவது போல இருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயில் தோகையையும், கோகைக்கண்களையும் போல விளங்கின. – தலைவன் வியப்பு.

பாடல் : 075
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
அலர்தொடங் கின்றால் ஊரே மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே. . . . .[075]

பொருளுரை:

மகிழ்ந! பழைய மருதமரம் இருக்கும் பெருந்துறையில் ஒருத்தி உன்னோடு நேர்ந்து நீரில் விளையாடினாள் என்பது இங்கே பலரது ஒவ்வாத வாய்களில் அலராகப் பூத்துப் பேசப்படுகிறது. நீ ஏன் மறைக்கிறாய்? – தோழி சொல்கிறாள்.

பாடல் : 076
பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்
தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்
ஒள்தொடி மடவரால் நின்னோடு
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. . . . .[076]

பொருளுரை:

வானுலகில் வாழும் பெண்களுக்குத் தெய்வம் போன்று நீ இவ்வுலகில் வாழும் பெண்களுக்கு விளங்குகிறாய். ஒளிவளையல் குலுங்கும் கைகளை உடைய மகளிர் உன்னோடு சேர்ந்து நீரில் விளையாடி அவர்களது மேனியில் அழகுநலம் மேலோங்கித் திகழ்கின்றனர். அவர்களது கூந்தல் கோரைப்புல் போல் வளர்ந்து கிடக்கிறது. இளம் பூக்கள் போல் மேனியில் சுணங்கு பூத்துக் கிடக்கிறது. (உன் மனைவி பாவம்) – தோழி கவலையுடன் சொல்கிறாள்.

பாடல் : 077
அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி
நின்னொடு தண்புணல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே. . . . .[077]

பொருளுரை:

மகிழ்ந! அம்ம! வாழி! உனக்கு ஒன்று சொல்கிறேன். பேரூரெல்லாம் அலர் தூற்றட்டும். நீரில் அலை ததும்பட்டும். உன்னோடு தண்ணென்று புனலில் விளையாடித் திளைப்பேன் – பரத்தை கூறுகிறாள்.

பாடல் : 078
கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே. . . . .[078]

பொருளுரை:

சோழ வேந்தன் கிள்ளியின் யானை போல் வெள்ளம் என் பெண்மை நிறையை அழித்துக்கொண்டு விரைந்து பாய்கிறது. சிறை அணையை அழித்துக்கொண்டு பாயும் அதில் விளையாடித் திளைக்கலாம். எம்மோடு வருக. என் தோள்களைத் தழுவி மிதக்கும் புணையாக்கிக் கொள்க – பரத்தை அழைக்கிறாள்.

பாடல் : 079
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மகள் ஆயினும் அறியா
நீயார் மகனைஎம் பற்றியோயே. . . . .[079]

பொருளுரை:

விரும்பும் பார்வையோடு தனியே நீராடுபவள் யார் மகள் என்று வினவிக்கொண்டே அவன் பரத்தையைப் பற்றினான். நான் யார் மகள் என்பது உனக்குத் தெரியுமே. நீ யார் மகன்? என்னைப் பிடித்து இழுக்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே அந்தப் பரத்தை அவனுடன் சென்றாள். – இப்படித் தோழி சொல்கிறாள்.

பாடல் : 080
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்
தலைப்பெயல் செம்புனல் ஆடித்
தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே. . . . .[080]

பொருளுரை:

கோவித்துக்கொள்ள மாட்டேன். உண்மையைச் சொல்லிவிடு. அழகிகளுக்கு உன் தோள் துணைநிற்க, புதுமழை பொழிந்து வந்த செம்புனலில் நீராடியதால் தானே உன் கண்கள் சிவந்துள்ளன – தலைவி ஊடுகிறாள்.