ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 06

மருதம் - தோழி கூற்றுப் பத்து (ஓரம்போகியார்)


மருதம் - தோழி கூற்றுப் பத்து (ஓரம்போகியார்)

தலைவியின் ஊடலைத் தோழி எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பரத்தையரிடமிருந்து வந்த கணவனை தலைவியின் வாயிலாக இருந்து தடுக்கும் பாடல்களும், தலைவனுக்கு வாயிலாக இயங்கித் தலைவியின் ஊடலைத் தணிக்கும் பாடல் ஒன்றும், களவுக்காலத்தில் தலைவனைத் தடுக்கும் பாடல் ஒன்றும் இதில் உள்ளன.

பாடல் : 051
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே. . . . .[051]

பொருளுரை:

தலைவி கருவிற்றிருக்கிறாள். புளியங்காயை வாயில் போட்டுச் சப்ப விரும்புகிறாள். தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு வீடு திரும்புகிறான். தோழி சொல்கிறாள். ‘உன் மார்பு இவளுக்குப் புளியங்காய் அன்று’ என்கிறாள். அவன் மார்பை இவள் தழுவ விரும்பவில்லை என்பது பொருள். நீலநிற ஆண் நீர்கோழி பெண் நீர்க்கோழிக்கு ஆசை கொள்ளும் நீர்த்துறை ஊரன் அவன்.

பாடல் : 052
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய
எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. . . . .[052]

பொருளுரை:

மகிழ்ந! (உடல் மகிழ்ச்சிஉயில் திளைப்பவன்) இங்கே இவள் தழையாடைக்காக வயலைக் கொடியைப் பின்னி, இவளது விரல்களும் சிவந்துவிட்டன. அத்துடன் இவளது சிவந்த வரியோடும் கண்களும், சிவந்த வாயும் உன் ஏக்கத்தால் வருந்துகின்றன. இப்படி இவளை விட்டுவிட்டு உன் தேரை யார் வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்தாய்? – தோழி வினவுகிளாள்.

பாடல் : 053
துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர நீயுற்ற சூளே. . . . .[053]

பொருளுரை:

தலைவனுடன் நீராடத் தலைவி ஆற்றுத் துறைக்குச் செல்கிறாள். இந்த நீர்த்துறை தலைவன் தன் விலைப்பெண்டிருடன் நீராடிய துறை என்று எண்ணி நீராடத் தயங்குகிறாள். தலைவன் அழைக்கிறான். பிற மாதரைத் தொடேன் என்று முன்பு உரைத்த சூள் (சத்தியம்) என்னவாயிற்று – என்று தோழி தலைவனை வினவுகிறாள்.

இயல்பாக மலரும் தாமரை வெள்ள-அலை மோதி மலரும் வயல் கொண்ட ஊர – என விளிப்பது அவன் தலைவியை வற்புறுத்தி மலரச் செய்வதை உணர்த்தும் இறைச்சிப் பொருள்.

பாடல் : 054
திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரின் ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. . . . .[054]

பொருளுரை:

தலைவன் முறை வைத்துக்கொண்டு தலைவியுடனும், பரத்தையுடனும் வாழ்கிறான். பரத்தையிடம் செல்லும் முறை வருகிறது. தலைவியின் குறிப்பைத் தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.

திண்தேர்த் தென்னவன் ஆளும் பாண்டிநாட்டுத் தேனூர் அருவியில் கோடைக்காலத்திலும் நீர் வழியும். அதுபோல இவள் வளையல் நழுவி ஓடும்படி விட்டுவிட்டு பச்சைக் கோரைப்புல்லில் மகிழும் பரத்தையிடம் செல்லவிருக்கிறாய். இதனை எண்ணி இவள் பயந்துகிடக்கிறாள் – என்கிறாள் தோழி.

பாடல் : 055
கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்
தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. . . . .[055]

பொருளுரை:

கரும்புச்சாறு பிழியும் எந்திரம் யானை பிளிர்வது போல ஒலிக்கும் ஊர் தேனூர். தேர் வழங்கும் கொடையாளி ஆளும் ஊர் தேனூர். அந்தத் தேனூர் போல அழகு திகழ்பவள் இவள். இவள் அழகையெல்லாம் துய்த்த நீ இப்போது விட்டுவிட்டுப் பிரிகிறாய். இதனை எண்ணி இவள் நெற்றி பசந்து வாடுகிறது – இவ்வாறு தோழி கூறுகிறாள்.

பாடல் : 056
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே. . . . .[056]

பொருளுரை:

வெல்போர்ச் சோழர் ஆளும ஆமூரில் பகல் போல இரவிலும் விளக்கு எரிவால் அங்கு இரவா, பகலா என்று தெரிவதில்லை. அந்த ஊர் போன்ற நெற்றியை உடையவள் இவள். இவள் தேம்பும்படி விட்டுவிட்டு நீ பரத்தை இல்லம் சென்றுவந்துள்ளாய். இப்போது போகவே இல்லை என்று கூறி இவளைத் தேற்றுகிறாய். நீ தேற்றும் மொழியால் இவளுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை – என்கிறாள் தோழி.

பாடல் : 057
பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய
அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே. . . . .[057]

பொருளுரை:

ஆம்பல் பூக்கள் பகலில் தோன்றும் தீப் போல வயலெல்லாம் பூத்துக் கிடக்கும் ஊர் தேனூர். இவள் அந்தத் தேனூர் போல அழகுநலம் உடையவள். இவளைப் புலம்பும்படி விட்டுவிட்டு நீ உன் பெண்ணிடம் செல்கிறாயே, அவள் அந்த அளவுக்கு அழகுநலம் கொண்டவளா? – இது தோழியின் வினா.

பாடல் : 058
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே. . . . .[058]

பொருளுரை:

நெல் மூங்கில் போல் ஓங்கி வளரும் ஊர் இரும்பை. வள்ளல் விரான் வாழும் ஊர் இரும்பை. அந்த இரும்பை ஊர் போல் அழகுநலம் மிக்கவள் இவள். இவளையே நொந்து வருந்தும்படி [அணங்கும்படி]ச் செய்பவன் போல் இருக்கின்றாய். பிறருக்கும் இப்படித்தான் இருப்பாய். வாழிய நீ. தலைவியைப் பிரிந்து மற்றொருத்தி வீட்டுக்குச் செல்லும் நீ அவளையும் பிரிந்து இன்னொருத்தி வீட்டுக்கும் சென்று அவளையும் வருந்தும்படிச் செய்வாயே. – தோழி தலைவிக்காக ஊடல்.

பாடல் : 059
கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்குமருந் தாகிய யான்இனி
இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே. . . . .[059]

பொருளுரை:

மகிழ்ந! என் நெஞ்சம் நொந்து வருந்துவதைக் கேள். பரத்தையிடம் சென்று மீண்ட உன்னைத் தலைவி ஊடியபோது, உனக்கு மருந்தாகி அவள் ஊடலைத் தீர்த்துவைத்தேன். அப்போது என் தலைவியின் ஊடலுக்கு மருந்தாக அமையாமல் போய்விட்டேனே! என்ன செய்வேன்?

பாடல் : 050
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியுரநின் மொழிவல் என்றும்
துங்சுமனை நெடுநகர் வருதி
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே. . . . .[060]

பொருளுரை:

பழமையான வயல்களில் [பழனம்] காட்டுக்கோழி [கம்புள்] தன் பெண்கோழியைக் கூவி அழைக்கும் ஊரன் நீ. உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். இவள் உறங்கும் அகன்றுயர்ந்த மனைக்கு இவளைப் பெற வருகிறாய். இவள் தந்தையின் கையிலிருக்கும் வேலைக் கண்டு அஞ்ச மாட்டாயா? இது களவொழுக்கக் காலத்தில் தலைவன் வரவைத் தடுத்தது.