ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 47

முல்லை - தோழி வற்புறுத்த பத்து (பேயனார்)


முல்லை - தோழி வற்புறுத்த பத்து (பேயனார்)

பிரிந்து சென்ற தலைவன் குறித்த பருவத்தில் திரும்பி வாராமையால் வருந்தும் தலைவியை, “வந்துவிடுவார்” என்று சொல்லிப் பொறுத்திருக்கும்படித் தோழி வேண்டியது.

பாடல் : 461
வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்
கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே
இனையல் வாழி தோழி எனையதூஉம்
நின்துறந்து அமைகுவர் அல்லர்
வெற்றி வேந்தன் பாசறை யோரே. . . . .[461]

பொருளுரை:

வானம் பிசுபிசுப்பது போலக் கொத்துக் கொத்தாக பிடவம் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. காடே பிசுபிசுப்பது போல கார்மழை பொழிகிறது. தோழி, வருந்தாதே. நான் சொல்வதைக் கேள். வெற்றி வேந்தன் பாசறையில் இருக்கும் அவர் எந்த வகையிலும் உன்னை விட்டுவிட்டு அமைதியுடன் இருக்கமாட்டார். விரைவில் வந்துவிடுவார்.

பாடல் : 462
எதில பெய்ம்மழை காரென மயங்கிய
பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி
எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்
தகையெழில் வாட்டுநர் அல்லர்
முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே. . . . .[462]

பொருளுரை:

ஏதுமில்லாமல் மேகம் மழை பொழிகிறது. அதனைக் கார் காலம் என்று நம்பி ஒன்றுமறியாத கொன்றை மாலை போல் கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்குகிறது. அதைப் பார்த்துக் கார் காலம் என நினைத்துக்கொண்டு அழுகிறாய். உன் தகைமை மிக்க அழகினை வாடும்படிச் செய்பவர் அவர் அல்லர். முல்லை நிலம் பூத்துக் கிடக்கும் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். விரைவில் வந்துவிடுவார்.

பாடல் : 463
புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்
நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய
வாராது அமையலோ இலரே நேரார்
நாடுபடு நன்கலம் தரீஇயர்
நீடினர் தோழிநம் காத லோரே. . . . .[463]

பொருளுரை:

புதரின் மேல் மறுமணம் கமழும்படி அழகுடன் பூத்திருக்கும் மலர்களை உன் கூந்தலில் அழகு திகழும்படி புனைந்துகொள்வதற்காக அவர் வந்துவிடுவார். வராமல் இருக்க மாட்டார். பகைவர் நாடுகளில் மண்டிக் கிடக்கும் அரிய செல்வங்களைக் கொண்டுவருவதற்காக அவர் அங்கே காலம் தாழ்த்துகிறார். கவலை வேண்டாம்.

பாடல் : 464
கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென
இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்
நல்தோள் மருவரற்கு உலமரு வோரே. . . . .[464]

பொருளுரை:

உன் கண்ணைப் போலக் கருவிளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். அவர் பிரிவால் உன் மேனியில் தோன்றும் பொன் நிறம் போல பீர்க்கம் பூ கூத்திருக்கும். அந்தக் கோடைகாலக் காட்டுப் பாதையில் அவர் உன்னை மறக்க முடியாது. உன் தோளை அணைப்பதற்குத் துடிப்பவர் ஆயிற்றே.

பாடல் : 465
நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்
கார்செய் கானம் பிற்படக் கடைஇ
மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க
வருவர் வாழி தோழி
செருவெம் குருசில் தணிந்தனன் பகையே. . . . .[465]

பொருளுரை:

தண்ணீர் கொட்டுவது போலப் பாயும் குதிரை பூட்டிய தேரில் வருவார். கார்மேகம் பொழிந்து அழகைக் காட்டும் காட்டில் தேரை ஓட்டுக்கொண்டு வருவார். மலர் மாலை சூடிய அவர் மார்பகத்தை நீ தழுவுவதற்காக வருவார். தோழி இதனைக் கேள். போரில் ஆசை கொண்ட மன்னன் பகைமையைத் தணித்துக்கொண்டான்.

பாடல் : 466
வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு
அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே
எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்
காமர் சுடர்நுதல் விளங்கும்
தேமொழி அரிவை தெளிந்திசின் யானே. . . . .[466]

பொருளுரை:

அவரை வேந்தன் தூதுவராக அனுப்பி வைத்திருக்கிறான். அது விழுமிய தொழில். அதனை ஏற்று அவர் சென்றிருக்கிற்றார். அரசன் தன் பட்டத்து யானைமேல் ஏற்றி அனுப்பி வைத்திருக்கிறான். இனி, எண்ணிய நாள் வருவதற்கு முன்பதாகவே வந்துவிடுவார். நீ பெண்ணியல்பால் கலங்குகிறாய். அழகிய சுடரும் நெற்றியை உடையவளே தேன் போன்ற மொழி பேசுபவளே எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நீயும் தெளிவு பெறுவாயாக.

பாடல் : 467
புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது
நம்மினும் விரையும் என்ப
வெம்முரண் யானை விறல்போர் வேந்தே. . . . .[467]

பொருளுரை:

பூண்டிருக்கும் அணிகலன் நழுவி விழுகிறது. நொந்து நொந்து வருந்துகிறாய். தோழி வருந்தாதே நான் சொல்வதைக் கேள். அரசன் தன் செயலைத் தலைமேற் கொண்டு பெரிதும் காலம் தாழ்த்துகிறாரே என்று வருந்தாதே. அவரால் உன் பிரிவைத் தாங்க முடியாது. நாம் எண்ணுவதைக் காட்டிலும் விரைந்து வந்துவிடுவார் என்று கூறுகின்றனர். கடுமையான போர் யானை மீதல்லவா சென்றிருக்கிறார் உன் வெற்றி வேந்து.

பாடல் : 468
வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்
கார்தொடங் கின்றே காலை இனிநின்
நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக
வருவர் இன்றுநம் காத லோரே. . . . .[468]

பொருளுரை:

கார் காலம் தொடங்கும் பருவம் வந்துவிட்டது. மழைநீர் ஓட்டத்தில் நுண்ணிய மணல் படிகிறது. தவளைகள் கத்துகின்றன. இனி உன் தோளுக்கு விருந்துத்தான். மூங்கில் போல் வளைந்த தோள். மணி கட்டிய தோரில் அவர் வருவார். இன்றே வருவார் உன் காதலர்.

பாடல் : 469
பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு
அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு
பெயல்தொடங் கின்றே வானம்
காண்குவம் வம்மோ பூங்க ணோயே. . . . .[469]

பொருளுரை:

அவன் வன்புல நாடன். காயவைத்துக்கொண்டிருக்கும் தினையை செம்பூழ் என்னும் செம்போத்துப் பறவை கவரும் வன்புல நாடன். சென்ற அவனைத் திரும்ப அழைத்து வருவதற்காக வானம் இடி முழக்கத்துடன் மழை பொழிவதைப் பார். அவரை அழைத்துவரும் மழையை நாம் சென்று காணலாம் வா. தோழி தலைவியை அழைக்கிறாள்.

பாடல் : 470
இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும்பனி அளை இய அற்சிரக் காலை
உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோநின் மாமைக் கவினே. . . . .[470]

பொருளுரை:

அகன்ற நிலம் குளிரும்படி நாள்தோறும் பெரும் பனி காற்றோடு வீசிப் பொழிகிறது. இது பெரும்பனிக் காலம். உன் காதலர் உன்னை நினைக்காவிட்டால், நினைக்காமல் இருக்க இந்தப் பனிக்காலம் விட்டுவைக்குமா? உன் மாமை அழகு அவர் நினைவுக்கு வராதா?