ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 44

முல்லை - புறவணிப் பத்து (பேயனார்)


முல்லை - புறவணிப் பத்து (பேயனார்)

முல்லை நிலத்தின் அழகைக் கூறும் பாடல்கள் இதில் உள்ளன.

பாடல் : 431
நன்றே காதலர் சென்ற ஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற உருவின தோகையும் உடைத்தே. . . . .[431]

பொருளுரை:

காதலர் சென்ற வழி நன்று. அழகிய நிறம் கொண்ட மலை. மணி போல் நிறம் கொண்ட மயில் அதில் ஆடும்.

பாடல் : 432
நன்றே காதலர் சென்ற ஆறே
சுடுபொன் அன்ன கொன்றை சூடிக்
கடிபுகு வனர்போல் மள்ளரும் உடைத்தே . . . .[432]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. சுட்ட பொன் போல் கொன்றை மலரைச் சூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்பவர் போல மள்ளர்கள் வாழும் இடங்களைக் கொண்டது.

பாடல் : 433
நன்றே காதலர் சென்ற ஆறே
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப்பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. . . . .[433]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. நீரைப் பொழிவதற்காக மேகங்கள் காற்றை வீசும். கார் கால மழையை ஏற்பதற்காக காடுகள் காத்திருக்கும்.

பாடல் : 434
நன்றே காதலர் சென்ற ஆறே
மறியுடை மாண்பிணை உகளத்
தண்பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. . . . .434

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. குட்டியுடன் பெண்மான் துள்ளி விளையாடும். ஈர மழை பொழியும் இன்பமும் அங்கு உண்டு.

பாடல் : 435
நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலரப்
பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. . . . .435

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. நிலத்துக்கு அழகு செய்ய நீரில் நெய்தல் மலரும். பொன் அணிகலன் போலக் கொன்றையும் பிடவமும் மலரும்.

பாடல் : 436
நன்றே காதலர் சென்ற ஆறே
நன்பொன் அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே. . . . .[436]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. பொன்னைப் போல் மலர்ந்த கொன்றையோடு குருந்தம் பூக்களும் மலர்ந்திருக்கும்.

பாடல் : 437
நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலித் தண்மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. . . . .[437]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. மழை பனிக்கட்டியுடன் பொழியும். அதைப் போல வெண்ணிறத்தில் பூத்திருக்கும் முல்லையும் அங்கு உண்டு.

பாடல் : 438
நன்றே காதலர் சென்ற ஆறே
பைம்புதல் பம்பூ மலர
இன்புறத் தருந பண்புமார் உடைத்தே. . . . .[438]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. புதர்களிலெல்லாம் பூக்கள் மலர இன்பமூட்டும் தகைமை உடையது.

பாடல் : 439
நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்தக் கண்ணிக் கோவலர்
பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே. . . . .[439]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. கோவலர் குருந்தம் பூக்களைச் சூடிக்கொள்வர். அவர்கள் வாழும் குளுமையான ஊர்ப் பாக்கங்களும் அங்கு உண்டு.

பாடல் : 440
நன்றே காதலர் சென்ற ஆறே
தன்பெயல் அளித்த பொழுதின்
ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. . . . .[440]

பொருளுரை:

அவர் சென்ற வழி நல்ல வழி. ஈர மழை பொழிந்துகொண்டிருக்கும். தோன்றி, தளவம் ஆகிய பூக்கள் சுடர் விட்டுப் பூத்திருக்கும்.