ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 40

பாலை - மறுதரவுப் பத்து (ஓதலாந்தையார்)


பாலை - மறுதரவுப் பத்து (ஓதலாந்தையார்)

புகுந்த வீட்டில் சிலம்புகழி நோன்பு. பிறந்த வீட்டில் திருமணம். அக்கால வழக்கம்.

பாடல் : 391
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம்சின விறல்வேல் காளையொடு
அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே. . . . .[391]

பொருளுரை:

மாசு மறுவற்ற கரிய தூவி மயிர்களை உடைய காக்கையே நீ அன்பு கொண்ட மரபினை உடைய உன் சுற்றத்ததுடன் வயிறார உண்ணுவதற்கு பச்சை ஊன் கறிகளைக் கொண்டு சமைத்த அரிசிச் சோற்றைப் பொன் வட்டிலில் தருவேன். என் மகளின் காதலன் வீரம் மிக்க காளை அழகிய கூந்தலை உடைய என் மகளை அழைத்துக்கொண்டு வருவான் என்று கரைவாயாக - என்கிறாள் தாய். காக்கை கத்தினால் விருந்து வரும் என்பது நம்பிக்கை

பாடல் : 392
வேய்வனப்பு இழந்த தோளும் வெயில்தெற
வாய்கவின் தொந்த நுதலும் நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியின்
எல்லைஇல் இடும்பை தரூஉம்
நல்வரை நாடனொடு வந்த மாறே. . . . .[392]

பொருளுரை:

மூங்கில் போன்ற தோள் வனப்பை இழக்கவும் தேடித் தேடி வெயிலில் அலைந்ததால் அழகிழந்த முகமும் கொண்டவள்ளாய் இரக்கம் கொள்ள வேண்டாம் தோழி நீ வருந்தினால் எங்களுக்கு எல்லையில்லாத துன்பம் உண்டாகிறது. உன் தோழி நல்ல மலைநாடனுடன் வந்திருக்கிறாள்.-- தலைவியைப் பிரிந்து. வருந்தும் தோழியைத் தேற்றுகின்றனர்.

பாடல் : 393
துறந்ததன் கொண்டு துயரடச் சாஅய்
அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி
எவ்வ நெஞ்சிற்கு ஏம மாக
வந்தன ளோநின் மகளே
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே. . . . .[393]

பொருளுரை:

அளைகணாட்டி வருந்தும் கண்களை உடையவளே உன் மகள் உன்னை விட்டுப் போனது முதல் துன்பத்தால் வருந்தி அறக்கடவுளைப் பழிக்கும் அளைகணாட்டி துன்பப்படும் உன் நெஞ்சுக்கு இன்பக் காவலாக உன் மகள் வந்துவிட்டாள் போலிருக்கிறதே.-- அக்கம் பக்கத்தில் இருப்போர் கூறுகின்றனர்.

பாடல் : 394
மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த
அன்பில் அறானும் அருளிற்று மன்ற
வெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப்
பெருமட மான்பிணை அலைத்த
சிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே. . . . .[394]

பொருளுரை:

அறம் எனக்குத் துன்பம் செய்தது. மாண்பு இல்லாமல் மயக்கத்தால் துன்பம் செய்தது. அன்பு இல்லாமல் துன்பம் செய்தது. இப்போது அருள் புரிந்திருக்கிறது. என் மகள் அழகிய சில கூந்தலை உடையவள் பெரிதும் மடமை கொண்ட பெண்மான் போன்றவள் சிறு நுதல் குறுமகள் என்னைத் துன்புறுத்திய துன்பம் போகத் தன் முகத்தைக் காட்ட வந்துள்ளாள்.

பாடல் : 395
முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்விடு நெடுங்கொடி விடர்குகை முழங்கும்
இன்னா அருஞ்சுரம் தீர்ந்தனம் மென்மெல
ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து
கறங்கிசை அருவி வீழும்
பிறங்கிரும் சோலைநம் மலைகெழு நாட்டே. . . . .[395]

பொருளுரை:

காய்ந்த மூங்கில் உரசிப் பற்றிக்கொண்ட தீ காற்றடித்துப் பெருகிய தீ சுடர் விட்டு எரியும்போது மூங்கில் வெடிக்கும் ஓசை மலைக் குகையில் எதிரொலிக்கும் துன்பம் தரும் காட்டைத் தாண்டி வந்துவிட்டோம். இனி மெல்ல மெல்லச் செல்க. சின்ன பெண்ணே பூக்களுடன் சேர்ந்து ஒலி முழக்கத்துடன் அருவி பாய்வதைப் பார்.-- இது நம் நாட்டு மலை. தன்னுடன் வரும் காதலியிடம் காதலன் கூறுகிறான்.

பாடல் : 396
புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநிண்
கதுப்பயல் அணியும் அளவை பைபயச்
சுரத்திடை அயர்ச்சியை ஆறுக மடந்தை
கல்கெழு சிறப்பின் நம்மூர்
எவ்விருந் தாகிப் புகுக நாமே. . . . .[396]

பொருளுரை:

புலியின் புள்ளிகள் போல் பூத்துக் குலுங்கும் வேங்கை மரத்தில் உள்ள பூக்களைக் கொய்து கூந்தலில் சூடிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறு சூடிக்கொண்டு காட்டில் நடந்துவந்த களைப்பைப் போக்கிக்கொள்வோம். மடந்தாய்! இது மலை நலம் மிக்க நம் ஊர். இன்றைய பகல் பொழுதுக்கு நம் ஊரின் விருந்தாளியாக நாம் ஊருக்குள் நுழையலாம்.-- காதலன் காதலியிடம் கூறுகிறான்.

பாடல் : 397
கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரன்அணி வாரா நின்றனள் என்பது
முன்னுற விரந்தநீர் உரைமின்
இன்நகை முறுவல்என் ஆயத்தோர்க்கே. . . . .[397]

பொருளுரை:

செந்நாய் கழுத்தில் கவிழ்ந்து தொங்கும் மயிர் உடையது. அதன் ஆண்நாய் காட்டுப் பன்றியின் குட்டியை இரையாகப் பிடிக்காமல் செல்லும் காடு இது. இந்தக் காட்டு வழியில் உன் மகள் வருகிறாள் என்று என் உற்றார் உறவினர்களுக்கு நீங்கள் முன்னே சென்று சொல்லுங்கள்.-- காதலனுடன் சென்ற காதலி திருமணத்துக்ககுப் பின்னர் திரும்பித் தாய்வீட்டுக்கு வரும்போது வழியில் செல்வோரிடம் சொல்லியது.

பாடல் : 398
புள்ளும் அறியாப் பல்பழம் பழுனி
மடமான் அறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி இனிய வாகுக என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே. . . . .[398]

பொருளுரை:

இவள் செல்லும் வழியானது பறவைகளுக்கும் தெரியாத அளவுக்குப் பழங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். மான்களுக்கும் தெரியாத நீர்நிலைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும். என்று நினைத்து நினைத்து இந்த ஊரே அழுதது என்னைக் காட்டிலும் இவ்வாறு நினைத்து அழுதது.-- திருமணத்துக்குப் பின்னர் மீண்ட தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

பாடல் : 399
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே. . . . .[399]

பொருளுரை:

புகுந்த வீட்டில் சிலம்பு கழி நோன்பு நடந்திருந்தாலும் நான் பிறந்த வீட்டில் திருமணச் சடங்கு நடக்கட்டுமே என்று வெற்றி வேலும், குற்றமின்றி விளங்கும் வீரக் கழலும் அணிந்த காளையை – பொய் கூறி அழைத்துச் சென்ற காளையை – பெற்றெடுத்த தாய்க்கு எடுத்துச் சொன்னால் என்ன?-- மகளைப் பெற்ற தாய் கூறுகிறாள்.

பாடல் : 400
மள்ளர் அன்ன மரவந் தழீஇ
மகளிர் அன்ன ஆடுகொடி நுடக்கும்
அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில்
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்
வெஞ்சின விரல்வேல் காலையொடு
இன்றுபுகு தருமென வந்தன்று வந்தன்று தூதே. . . . .[400]

பொருளுரை:

மரவ மரம் மள்ளர் போல் நிற்கும். அதில் மகளிர் போல் ஏறிக் கொடி படரும். இப்படிப் படர்ந்து பூக்கும் வேனில் காலம் இது. என் மகள் தன் காதலனோடு சேர்ந்து போய்விட்டாள். காதலன் விரும்பத் தகுந்த சினம் கொண்டவன். வேலை ஏந்திய காளை. அவனோடு என் மகள் திரும்பி வருகிறாள் என்று தூது வந்துள்ளது.-- செவிலி மகளைப் பெற்ற தாயிடம் சொல்கிறாள்.