ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 37

பாலை - முன்னிலைப் பத்து (ஓதலாந்தையார்)


பாலை - முன்னிலைப் பத்து (ஓதலாந்தையார்)

தலைவன், தலைவி, தோழி முதலானோர் மற்றவர்களோடு உரையாடுதல்

பாடல் : 361
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை
வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்
தொடலை தை இய மடவரல் மகளே
கண்ணினும் கதவநின் முலையே
முலையினும் கதவநின் தடமென் தோளே. . . . .[361]

பொருளுரை:

மடமைத் தன்மை கொண்ட மகளே உயர்ந்த கரை கொண்ட காட்டாற்று மணலில் வேனில் காலத்தில் பூத்து உதிர்ந்து கிடக்கும் பாதிரி மலரைக் குவித்து தொடலை மாலை கட்டி விள்ளையாடும் மகளே, உன் கண்ணைக் காட்டடிலும் உன் முலை கதகதப்பாகச் சிவந்திருக்கிறது. உன் முலையைக் காட்டிலும் உன் தோள் கதகதப்பாகச் சிவந்திருக்கிறது.

பாடல் : 362
பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை உறுபகை நினையாது
யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப
அருள்புரி நெஞ்சம் உய்த்தர
இருள்பொர நின்ற இரவி னானே. . . . .[362]

பொருளுரை:

ஒதுங்கிப் பதுங்குமிடம் இல்லாத பாதைகள். சிறிய கண்ணை உடைய யானை பகை கொண்டு தாக்க வரும் வழி. இத்தகைய பகையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படி வந்தாய்? பூமாலை அணிந்த மார்பனே! இவளுக்கு அருள் புரியவேண்டும் என்ற எண்ணம் உன்னை உந்திக்கொண்டு வந்திருக்கிறது. இருள் நிறைந்த இந்த இரவில் வந்திருக்கிறாய். - தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

பாடல் : 363
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக்
கொலைவல் எயினர் தங்கைநின் முலைய
சுணங்கென நினைதி நீயே
அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே. . . . .[363]

பொருளுரை:

சிவந்த காவி ஆடை உடுத்திக்கொண்டு வளைந்த வில்லுடன் திரிபவர் கொலைத்தொழிலில் வல்ல எயினர். அந்த எயினரின் தங்கை நீ. உன் முலையில் உள்ள அழகைச் சுணங்கு என நீ நினைக்கிறாய். அது சுணங்கு அன்று. என்னைக் கொல்லும் அணங்கு. - தன்னுடன் வரும் காதலியைக் காதலன் பாராட்டுகிறான்.

பாடல் : 364
முளமா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்
சொல்லினேன் இரக்கும் அளவை
வெள்வேல் விடலை விரையா தீமே. . . . .[364]

பொருளுரை:

முள்ளம்பன்றியை உணவாக்கிக் கொள்ளும் எயினரின் தங்கை இவள். இளமையும் மாமை நிறமும் கொண்டவள். அவளுக்குத் தெரியும்படி உன்னிடம் ஒன்று சொல்கிறேன். கெஞ்சிக் கேட்டுச் சொல்கிறேன். வெற்றி வேலைக் கையில் கொண்டுள்ள காளையே! விரைந்து நடந்து செல்லாதே. மெதுவாக அழைத்துச் செல்.-- உடன்போக்கின்போது தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.

பாடல் : 365
கணமா தொலைச்சித் தன்னையர் தந்த
நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும்
நலமாண் எயிற்றி போலப் பலமிகு
நல்நலம் நயவர உடையை
என்நோற் றனையோ மாஇன் தளிரே. . . . .[365]

பொருளுரை:

மான் கூட்டத்தைக் கொன்று தன் ஐயன்மார் கொண்டுவந்து தந்த இறைச்சியைக் காயவைத்துக்கொண்டு அதனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிகுகொண்டிருக்கும் எயிற்றி என் காதலி. மாந்தளிரே! நீ அவளைப் போல நிறம் கொண்டிருக்கிறாய். இதற்கு நீ எத்தனைத் தவம் செய்தாய்?-- பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் வழியில் உள்ள மாந்தளிரைப் பார்த்துச் சொல்கிறான்.

பாடல் : 366
அன்னாய் வாழிவேண் டன்னை தோழி
பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை
கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம்
அறிய ஆகுமோ மற்றே
முறியிணர்க் கோங்கM பயந்த மாறே. . . . .[366]

பொருளுரை:

அன்னையே கேள், உன்னை வேண்டிக்கொள்கொள்கிறேன். என் தோழி ஏன்ஃ பசப்புற்றாள் என்று வீணாக வினவுகிறாய்.யாருக்குத் தெரியும்? கோங்கம் பூவுடன் இருக்கும் இலை ஏன் பச்சையாய் இருக்கிறது என்றால் எனக்கு எப்படித் தெரியும்?-- தோழி செவிலிக்குச் சொல்கிறாள்.

பாடல் : 367
பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ
விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி
விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே. . . . .[367]

பொருளுரை:

பொரிந்த அடிமரம் கொண்டது கோங்க மரம். அதன் பூவையும், பொன்னிறம் கொண்ட வேங்கைப் பூவையும் தனித்தனியே தெரியுமாறு சூடிக்கொண்டு ஒருவன் வந்தான். வேனில் காலத்தில் காட்டாற்றுப் பக்கம் வந்தான். தேரில் வந்தான். இவள், உன் மகள், அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு உயிர் வாழ்கிறாள்.-- தோழி செவிலியிடம் கூறுகிறாள்.

பாடல் : 368
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர்
பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும்
தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெருமநின்
எம்மெல் ஓதி அழிவிலள் எனினே. . . . .[368]

பொருளுரை:

நீ பிரிந்து சென்றால் இவள் இறந்துவிடுவாள். நீ பிரிந்து சென்று திரும்பி வந்தால், பெருமானே தீ பற்றி எரிவது போல் தோன்றும் இலவம் பூக்கள் புன்கம் மர நிழலில் கொட்டிக் கிடக்கும். அந்த நிழலில் உன் இன்ப நுகர்ச்சி என்னோடுதான் நிகழவேண்டியிருக்கும்.

பாடல் : 369
வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில்
முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல்
குறிநீ செய்தனை என்ப அலரே
குரவ நீள்சினை உறையும்
பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே. . . . .[369]

பொருளுரை:

வளம் மிக்க மலர்கள் பூத்து வண்டுகள் மொய்க்கும் பூங்காவில் காதல் விளையாட்டு நடத்த நீ ஒருத்திக்குக் குறி காட்டினாய். அவளும் புன்னகை பூத்துச் சென்றாள், என்கின்றனர். இந்தச் செய்தி ஊர் முழுவதும் அலராகத் தூற்றப்படுகிறது. குரவ மரக் கிளையில் இருந்துண்டு கருங்குயில் கூவுவதைக் காட்டிலும் பெரிதாக அலர் தூற்றப்படுகிறது. - தோழி தலைவனிடம் சொல்கிறாள்.

பாடல் : 370
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை
இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப
நீநயந்து உறையப் பட்டோள்
யாவ ளோஎம் மறையா தீமே. . . . .[370]

பொருளுரை:

வளமான கிளையில் பூத்திருக்கும் கோங்கம்பூ மாலை மணக்கும்படி அணிந்துகொண்டு வண்டுக் கூட்டம் அந்த மாலையை மொய்க்க நீ ஆசையுடன் சென்று ஒருத்தியுடன் வாழ்ந்தாயே அவள் யார்? மறைக்காமல் என்னிடம் சொல்.-- மனைவி கணவனை வினவுகிறாள்.