ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 30

குறிஞ்சி - மஞ்ஞைப் பத்து (கபிலர்)


குறிஞ்சி - மஞ்ஞைப் பத்து (கபிலர்)

மயில்கள் வாழும் நாட்டை உடையவன் தலைவன். தலைவி மயில் போன்றவள். உள்ளுறை உவமம் நிறைந்த இந்தப் பத்துப் பாடல்களிலும் மயில் பேசப்படுகிறது.

பாடல் : 291
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்
ஆய்தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனிநல் லூரே. . . . .[291]

பொருளுரை:

பொருளீட்டச் செல்லும்போது தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான்... மயில்கள் ஆடும். ஆந்தை மயில் ஆட்டத்துக்கு முழவு முழக்குவது போல ஒலி எழுப்பும். இப்படிப்பட்ட பெரும் பாறைகள் நிறைந்த மலையடுக்கம் தான் என் காதலி வாழும் நல்ல ஊர். என் காதலி பருத்த தோளினை உடையவள். தன் அல்குல் மறைய ஆய்ந்தெடுத்த தழைகளாலான ஆடை அணிந்தவள்.

பாடல் : 292
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நன்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே. . . . .[292]

பொருளுரை:

பெரும் பணக்காரியை இரண்டாம் தாரமாகக் கணவன் மணந்துகொண்டு வந்தபோது மனைவி கணவனிடம் சொல்கிறாள்... மயில்கள் ஆடும். அந்த ஆட்டத்திற்கு ஏற்ப மலைப் பாறைகளில் கூடு கட்டும் பெருந் தேனீக்கள் யாழிசை போல இசை கூட்டித் தரும். இப்படிப்பட்ட பெருமலை நாடன் நீ. என் நலம் சிறப்பதற்காக நீ மற்றொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு வந்திருக்கிறாய். அவள் உன்னைக் காட்டிலும் சிறந்தவள்.

பாடல் : 293
சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே
பாயல் இந்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. . . . .[293]

பொருளுரை:

காதலி பின்புறமாக வந்து காதலனின் கண்ணைக் கையால் மறைத்தபோது காதலன் சொல்கிறான்... மலையெல்லாம் மணம் கமழும் காந்தள் மலர் போன்ற நலம் மிக்க உன் கைகளால் என் கண்களைப் புதைத்தாய். படுப்பதற்குப் பாயாகிய பருத்த தோளை உடைய மயிலின் மாட்சிமை கொண்ட மடந்தை நீ. உன்னைத் தவிர என் நெஞ்சில் நிறைந்திருப்பவர் வேறு யாராக இருக்க முடியும்?

பாடல் : 294
எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயர இவள்
பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே. . . . .[294]

பொருளுரை:

திருமணத்துக்குப் பின்னர் தோழி தலைவனிடம் சொல்கிறாள்... தீ பற்றி எரிவது போல வேங்கை மரம் பூத்திருக்கிறது. அதில் ஏறியிருக்கும் மயில் ஒப்பனை செய்யப்பட்ட மயில் போல் காணப்படுகிறது. அப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் நீ. நீ இனியது செய்தாய். இவளை – என் தோழியை – உனக்குத் திருமணம் செய்துவைத்த உன் தந்தை வாழ்க. பின்னிய இவள் கூந்தலில் மலர் சூட்டினாயே, அந்தத் திருமணம் வாழிய.

பாடல் : 295
வருவது கொல்லோ தனே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வருந்துறப்
பந்தாடு மகளிரின் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே. . . . .[295]

பொருளுரை:

தலைவி தன் நெஞ்சைக் கேட்கிறாள்... மரத்தை வெட்டிக் கொளுத்திய நிலம் புனம். புனம் கொளுத்தும் தீப் பந்தம் போல் மயில் ஆங்காங்கே ஆடும். புனத்தில் கதிர் அறுத்த ‘இருவி’த் தட்டையில் இருந்துகொண்டு குருவி தவ்வித் தவ்விக் குதிக்கும். குருவி மகளிர் ஆடும் பந்து போல் தவ்வும். அவர் பொருளீட்டச் சென்றுள்ளார். என் நெஞ்சு அவர் பின்னேயே சென்றிவிட்டது. சென்ற என் நெஞ்சம் திரும்பி என்னிடம் வருமா வராதா? அங்கேயே இருக்க விரும்புமோ? பந்தாடுவது போலக் குருவி தவ்வுகிறதே, அப்படியல்லவா என் நெஞ்சம் தவ்வுகிறது.

பாடல் : 296
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரு நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே. . . . .[296]

பொருளுரை:

இரவில் வரவேண்டாம் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்... கொடிச்சி தினைப் புனம் காப்பாள். அந்தத் தினையை மயில் கவரும். அப்படிப்பட்ட நாட்டின் தலைவன் நீ. இரவில் நள்ளிருளில் இவளைத் தேடி வருகிறாய். கரு நிற யானை இருளில் உன் கண்ணுக்குத் தெரியாது. அப்போது உன்னை யானை தாக்கினால் என் தலைவி என்ன செய்வாள்?

பாடல் : 297
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவ தன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே. . . . .[297]

பொருளுரை:

திரும்பிவிடுவேன் என்னும் தலைவனிடம் தோழி கூறுகிறாள்... பூத்து விரிந்திருக்கும் வேங்கை மரத்தில் இருக்கும் மயில்கள் பூப் பறிக்கும் மகளிர் போல் தோன்றும். அப்படிப்பட்ட நாட்டை உடையவன் நீ. நீ பிரிந்தாலும் என் தலைவி நட்பை நீ பிரிக்க முடியாது.

பாடல் : 298
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தான்எம் அருளாள் ஆயினும்
யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே. . . . .[298]

பொருளுரை:

தலைவன் தோழியிடம் கூறுகிறான்... மழை வருவதை அறிந்துகொண்டு மயில் ஆடும். இப்படிப்பட்ட மலையடுக்கம் கொண்ட ஊரில் வாழ்பவள் கொடிச்சி. அவள் எனக்கு அருள் புரியாவிட்டாலும் நான் அவளை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். மறக்க முடியவில்லை.

பாடல் : 299
குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிதுஇவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. . . . .[299]

பொருளுரை:

தலைவனின் மகிழ்ச்சி... குன்ற நாடன் என் அரசன். அவன் குன்றுகளுக்கு இடையே உள்ள மலைப் பிளவில், சுனையில் குவளைப் பூக்கள் இவள் கண்களைப் போன்று இதழ்களை விரித்துப் பூக்க முடியாது. மலையிலுள்ள மயிலும் இவளைப் போல ஒசிய முடியாது.

பாடல் : 300
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே. . . . .[300]

பொருளுரை:

திருமணம் பற்றித் தோழி தலைவிக்குக் கூறுதல்... கொடிச்சியின் கூந்தலைப் போல மயில் தோகையை விரிக்கும். இப்படிப்பட்ட நாட்டை உடையவள் உன் காதலன் வெற்பன். அவன் பெண் கேட்டு வந்தான். உன் பெற்றோரும் உன்னைக் கொடையாகத் தர ஒப்பியுள்ளனர். நீ பொலிவு பெறுவாய்; சிறப்படைவாய்.