ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

ஐங்குறுநூறு: 20

நெய்தல் - வளைப் பத்து (அம்மூவனார்)


நெய்தல் - வளைப் பத்து (அம்மூவனார்)

வளை என்னும் சங்கும், சங்கு அறுத்துச் செய்த அவளது வளையலும் பற்றிச் சொல்லும் பாடல்கள் இவை.

பாடல் : 191
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. . . . .[191]

பொருளுரை:

கடல் சங்கினை அறுத்துச் செய்த வளையலை முன்னங்கையில் அணிந்திருப்பவள். உப்பங்கழியில் பூத்த மலர்களைக் கூந்தலில் அணிந்திருப்பவள். கானல் நிலத்தில் தழைத்திருக்கும் ஞாழல் மரத் தழையால் செய்த ஆடையை மேலாடையாக உடுத்திகொண்டிருப்பவள். அவள்தான் என்னுடனேயே நிறுத்தி வைத்திருந்த என் நெஞ்சத்தை எடுத்துச் சென்று ஒளித்துக்கொண்டவள். வரையில் விளையாடும் அரமகளிர் போல அவள் எனக்குக் கிடைத்தற்கு அரியவள். – தலைவன் கூற்று.

பாடல் : 192
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தொழிஎன் வளையே. . . . .[192]

பொருளுரை:

சங்குச் சிப்பிகள் நிலத்துக்கு ஏறித் திரும்புமாறு கடலலை எழுந்து முழங்கும்படிப் பனிக்கடல் துறையில் ஓடும் மரக்கலங்களைச் செலுத்தும் துறையை உடையவன் அந்தத் துறைவன். அவன் பிரிந்திருக்கிறான் என்று கழன்றோடிய என் வளையல், வந்திருக்கிறான் என அறிந்து, வீங்கும் என் தோளில் செறிந்து கிடக்கின்றன. – தலைவி கூற்று.

பாடல் : 193
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துரைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. . . . .[193]

பொருளுரை:

கடலலை கொண்டுவந்த வலம்புரிச் சங்கம் நீண்ட மணல்வெளியை உழும். அங்கே இலை மண்டிக் கிடக்கும் கரையில் அந்தச் சங்குகள் ஈன்ற முத்துக்கள் இருள் போகும்படி இமைக்கும். இப்படிப்பட்ட துறையை உடையவன் என்னைக் கொண்ட என் கொண்கனே! அணிந்துகொள் என்று நீ தந்த வளையல்கள் நல்லவைதானா? (கழன்று போகும்படி நீ பிரியாமல் இருப்பாயா – என்பது பொருள்) – தோழி கூற்று.

பாடல் : 194
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க
நன்னுதல் இன்றுமால் செய்தெனக்
கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. . . . .[194]

பொருளுரை:

கடல் சங்கை அரத்தால் அறுத்துச் செய்த வளையலை நீ கொடுத்தாயே அது என் தோழியின் கையில் இருக்கிறது. அவள் நெற்றியில் நீ செய்த ஒப்பனை இருக்கிறது. இவற்றைப் பார்த்த தாய் வீணாக அவள்மீது சினம் கொள்கிறாள். (திருமணம் செய்துகொண்டு இவளை நீ பெறலாம்).

பாடல் : 195
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ. . . . .[195]

பொருளுரை:

சங்காகிய வளையில் பிறக்கும் முத்துக்களை விலைகூறி விற்கும் கடல்நிலக் கொண்கனின் அன்பு மகள் அவள். காதல் அறியாத மடமை கொண்டவள். அவள் போக்கமுடியாத துன்பத்தை எனக்குத் தந்திருக்கிறாள். பாயில் படுத்து நான் உறங்கும் இன்பத்தை அவள் பிடுங்கிக்கொண்டாள். (அவள் உறங்குகிறாள். நான் உறங்காமல் கிடக்கிறேன்) – தலைவன் கூறுகிறான்.

பாடல் : 196
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி சேயிறாப் படூஉம்
தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. . . . .[196]

பொருளுரை:

சங்கில் அறுத்த ஒளி வீசும் வளையல், கொழுமையான செறிந்த கூந்தல், நுட்பமான தோளணி தொடி ஆகியவற்றை உடையவள் என் தலைவி. நீ தெளிந்த உப்பங்கழியில் நல்ல இறா மீன்கள் மேயும் கடல்சேர் நேர்ப்பு நிலத்தவன். உனக்கு என் தலைவி வேண்டடுமாயின் திருமணம் செய்துகொண்டு அழைத்துச் செல். – தோழி கூற்று.

பாடல் : 197
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. . . . .[197]

பொருளுரை:

வளையல் ஒலிக்கும்படி நண்டோடு விளையாடியவள் இப்போது தன் கூந்தலால் முகத்தை மறைத்துக்கொண்டு நாணத்தோடு தலை வணங்கி நிற்கிறாள். தனிமையை விரும்பாத மாலை வேளை இது. அவள் தன் மார்பை எனக்குத் தருவாள். – தலைவன் கூறுகிறான்.

பாடல் : 198
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. . . . .[198]

பொருளுரை:

வளையல் அணிந்த முன்னங்கை. பல்லைக் காட்டும் சிரிப்பு. இவற்றை உடைய மகளிர் விளையாடும் துறையைக் கேட்டுத் திரிந்தவன் இப்போது தேரில் இங்கு வருவதைப் பார்த்தேன். – தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

பாடல் : 199
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே. . . . .[199]

பொருளுரை:

கானல் துறையில் பொங்கும் கடலலை விளையாடும். அங்கு வானளாவ உயர்ந்திருக்கும் மணல் மேட்டில் ஏறி, உன் வளையல்களைக் கழலச் செய்தவன் நாட்டைத் தேடிப் பார்க்கலாம், வா, தோழி. – தோழி சொல்கிறாள்.

பாடல் : 200
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே. . . . .[200]

பொருளுரை:

இனி, உன் வளையல் தோளில் செறிந்திருக்கும். நெற்றி பசலை நீங்கி அழகு பெறும். பொன் தேரில் உன் கொண்கன் வந்துள்ளான். உன் கண்கள் விரியட்டும். மகிழ்ச்சியில் திளைத்து நெகிழட்டும். உன் மேனியிலிருந்த பசலை ஓடுவதைப் பார்த்து நாம் ஏளனம் செய்யலாம். – தோழி சொல்கிறாள்.