நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


27. மன்னரைச் சேர்ந்தொழுகல்

பாடல் : 266
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்? - மாணிழாய்! - கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல். . . . .[266]

பொருளுரை:

மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடையாய்! மயக்கந்தரும் கள்ளினைக் குடித்து சோம்பி அடங்கியிருப்பார் ஒருவருமிலர் (ஆதலால்) கொடி அசைகின்ற வலிய தேரினை உடைய அரசர்களது பொருளை உண்டு உயிர் வாழ்பவர்கள் ஒரு செயலை மனத்தின்கண் நினைத்தலை மேற்கொண்டு அவ்வரசர் ஏவிய ஆணையை சோம்பல் கொண்டு விரைந்து செய்யா தொழிதலால் என்ன பயன் உண்டாம்?

கருத்து:

அரசன் ஆணையை உடனேயே அவன்கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும்.

பாடல் : 267
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும்
பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம் இலர் ஆகிச் செய்க! - அது அன்றோ,
'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. . . . .[267]

பொருளுரை:

வெற்றி பொருந்திய வேலேந்திய அரசன் ஏவல் கொண்டால் யாம் செயத்தகும் ஆற்றல் ஒரு சிறிதும் அடைந்தோமில்லையே என்று கூறுவது அறியாமையேயாம் அவர் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதை ஒக்குமன்றோ?

கருத்து:

அரசன் ஏவியதைத் தட்டாது செய்யத் தொடங்குக.

பாடல் : 268
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும், வீழார்; மறுத்து உரைப்பின்,
'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. . . . .[268]

பொருளுரை:

எம்மவராதலான் எமக்கு இச்செயலை முடித்துத் தருக என்று அரசன் தன்கீழ் வாழ்வாரை ஒரு செயல் செய்யும்பொருட்டு நம்பி நியமித்த இடத்து. தமர் - அவன் கீழ் வாழ்வார் அவர் பொருட்டாக வேலிடத்தாயினும் வீழாதவர்களாகி இயலாது என்று மறுத்துக் கூறலின் (அஃது) அதோ தோன்றுவது (பெரிய) ஆலமரமென்று ஒருவன் கூறலுறின் (அதற்கு மாறாக) மற்றொருவன் அது சிறிய பூலாச் செடியே என்று கூறுதலை ஒக்கும்.

கருத்து:

அரசன் ஏவலை மேற்கொண்டார் உயிர் கொடுத்தாயினும் அதனை முடித்தல் வெண்டும்.

பாடல் : 269
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,
மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!
கடல் படா எல்லாம் படும். . . . .[269]

பொருளுரை:

மடல்களையுடைய பனைமரங்கள் மலிந்த கடல் நாடனே! பிறரால் வெல்லுதற்கரிய வலிமையுடைய அரசர்கள் தம்மைவிட்டு நீங்குமாறு நெருங்கி நின்று ஆகாதன செய்தும் அஞ்சி அகன்று நில்லாதும் அவர் மனமகிழ ஒழுகுவராயின் கடலில் உண்டாகாத வளமெல்லாம் அவர்க்கு உளவாம்.

கருத்து:

மன்னரைச் சேர்ந்தொழுகுவார் அகலாது அணுகாது வாழக்கடவர்.

பாடல் : 270
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்; - பனை முதிரின்,
தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். . . . .[270]

பொருளுரை:

பனையினது பழம் முற்றின் தாய்ப்பனையினது தாளின் மேலேயே வீழும்; (அதுபோல) அரசன் தான் உவக்கும் படி செய்து முடித்தற்கு ஏவிய செயல்கள். அவற்று அவற்று ஆம் துணைய பயத்தால் ஆகி - அவ்வச் செயல்களின் அளவாகிய பயனோடு அச்செயல் முடியின் அஃது ஏவியவனையன்றிச் செய்தவனையே சேரும்.

கருத்து:

அரசன் ஏவிய கருமங்கள் பயன்பட முடிந்தால் அப்புகழ் செய்தவனையே சேரும்.

பாடல் : 271
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார்,
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ?
உருத்த சுணங்கின் ஒளியிழாய்! - கூரிது,
எருத்து வலியநன் கொம்பு. . . . .[271]

பொருளுரை:

தோன்றுகின்ற தேமலையும் ஒளிபொருந்திய அணிகலன்களையுமுடையாய்! வலிமிக்க எருதினுடைய கொம்பு கூரானது; (ஆதலான்) போரையுடைய அரசர்களாகிய எல்லாத் திறனுமுடையாரை அடைந்தவர்கள் பிறர் ஒருவருக்குப் பயந்து மனந்தளர்தலும் உண்டோ? (இல்லை.)

கருத்து:

அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கஞ்சார்.

பாடல் : 272
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப; - ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்! - நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும். . . . .[272]

பொருளுரை:

ஆராய்ந்த நல்ல மெல்லிய கூந்தலை யுடையாய்! அரசனால் நன்குமதிக்கப்பட்டு அவனது மகிழ்ச்சிக்கு இடமானவரை அவன் மதிக்கின்ற தன்மை ஒன்று கொண்டே ஏனை மக்களும் அவனைப்போன்றே மிக மதித்து உணர்வர் நெய் இருந்த ஏனமேநெய் பெய்தற்கு அமையுமாறுபோல.

கருத்து:

அரசனால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர்.

பாடல் : 273
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!
பூண்டாங்கு மார்ப! - பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும். . . . .[273]

பொருளுரை:

அணிகலன்களை அணிந்திருக்கின்ற மார்பை உடையவனே! ஆண்டகைமையை உடைய அரசர்களைச் சேர்ந்து ஒழுகுபவர்கள் தாம் வறுமையால் மிக்க துன்பத்தை அடைந்தாலும் அவரிடத்தில் ஒன்றனை விரும்புகின்றோம் என்பதனை கூறாதொழிக பிறரால் மிக மதிக்கப்பட்டார் ஒரு பொருளையும் விரும்பிக் கேளாமையே அவர் விரும்பிய யாவற்றையும் தரும் ஆதலால்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார் தமக்கு ஒரு பொருள் வேண்டுமென்று அரசனைக் கேளா தொழிக என்பதாம்.

பாடல் : 274
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்
ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,
தாய் அணல் தான் சுவைத்தற்று. . . . .[274]

பொருளுரை:

அரசனைத் தனக்குத் துணையாகக் கொண்டு அவனைச் சார்ந்தொழுகினார் அவனால் ஏவப்பட்ட வேலையைச் செய்பவர்க்கு உதவிசெய்து அவரால் காரியம் பெறலாமென்று நினைத்தல் பசுவினை அணைந்து நின்ற பசுவின் கன்று தாயினது மடி யிருக்கவும தாயினது அணலைச் சுவைத்தாற் போலும்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார் கீழாயினாரிடம் கூறித் தங்குறையை முடித்துக்கோடற்க என்பதாம்.

பாடல் : 275
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். . . . .[275]

பொருளுரை:

மிகுந்த புகழினையுடைய அரசர்க்கு உயிரை ஒப்பாரேயாயினும் புறத்தே உள்ள அமைச்சர்களைவிட அரண்மனையிலுள்ள கூனர்க்குச் செவ்வி வாய்த்தல் எளிது (ஆதலால்) எல்லாச் சிறப்புமுடைய அரசர்களை காண்டற்குரிய காலத்தை அறிந்துகண்டு திறம்படக் கூறுவார்க்கு முடியாதது ஒன்றுமில்லை.

கருத்து:

அரசனை சார்ந்தொழுகுவார் அரசனுடைய குறிப்பறிந்து கூறிக் காரியங் கொள்க என்பதாம்.

பாடல் : 276
இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,
முடிதல் எனைத்தும் உணரா முயறல்,
கடிய கனைத்துவிடல். . . . .[276]

பொருளுரை:

நிழலிடுகின்ற குடையினை உடைய தேர்மன்னர் எமக்கு இது பொருந்தும் என்று மிகவும் அவர்கள் விரும்புவனவற்றை அவர்களைச் சார்ந்தொழுகுவார் விரும்பி முடியும்படி ஒன்றனையும் ஆராயாது முயற்சி செய்தல் கொடிய புலி முதலாயினவற்றைத் தன்மாட்டு அழைத்ததனோ டொக்கும்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார் அரசன் விரும்புவனவற்றை விரும்பாதொழிதல் வேண்டும்.

பாடல் : 277
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி; - சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,
இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். . . . .[277]

பொருளுரை:

பாம்பானது மிக்க சுற்றத்தினின்றும் நீங்கிப் போய்த் தனிப்பட்ட இடத்தும் இளையது என்று கருதிச் சோம்பியிருப்பார் இலர்; (அதுபோல) சீர்மை தக்க அரசர்களுடைய சிறப்பெல்லாம் கெட்டவிடத்தும் அவர் நிலைமையை நோக்கி மாறுபட்டுக் கூறி இகழாராகுக.

கருத்து:

அரசன் சீர்கெட்டவிடத்தும் அவனை இகழ்வார் தீமையையே அடைவர்.

பாடல் : 278
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீதரம்; - அதுவே
எருத்திடை வைக்கோல் தினல். . . . .[278]

பொருளுரை:

தருக்குடைய அரசர்களது இடையே புகுந்து அவர்களுள் ஒருவருக்கும் பயன்படாதவற்றை ஒருவன் சொல்லின் தன் சொல்லால் வேறுபட்ட அவர்களைத் திருத்தவும் முடியாது தீதாக விளையும் அங்ஙனங் கூறல் இரண்டு எருதுகளின் இடையேயுள்ள வைக்கோலை ஓர் எருது இடைப்புக்குத் தின்னலுறுதலை யொக்கும்.

கருத்து:

அரசர்களிடை ஒன்றனைக் கூறவிரும்புவார் ஒருவரைச் சார்ந்து நின்று கூறுக.

பாடல் : 279
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல், - குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல். . . . .[279]

பொருளுரை:

பல நாட்கள் ஊழியஞ்செய்து அரசனுடைய பொருள்களைப் பற்றி உண்டு மகிழ்ந்தவர்கள் பின்னர் ஒருகாலத்தும் துன்பம் செய்யாதிருத்தலை விரும்பி அரசனுக்குத் தம்மிடத்துள்ள பொன்னைக் கொடுத்து அன்பால் ஒழுகுதல் குவளைமலரை அவற்றின் தண்டினாலேயே கட்டுதலோ டொக்கும்.

கருத்து:

அறிவுடையோர் அரசனிடத்துத் கொண்ட பொருளையே அவனிடத்துக் கொடுத்துத் தம்வயப்படுத்துவர்.

பாடல் : 280
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,
பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார் - குறைப்பர்,
தம் மேலே வீழப் பனை. . . . .[280]

பொருளுரை:

மெய்யான நெறியின் கண்ணே நின்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர்கள் தமக்கு ஒரு காரியம் முடியும்பொருட்டு அவராணை கடந்துநின்று அவர் வெகுடற் கேற்பனவற்றை இயற்றி வஞ்சனையை ஏறிட்டுக்கொண்டு அந்த அரசனைக் கொன்றவர்கள் பனை தம்மேலே வீழும்படி வெட்டுகின்றவர் களோடொப்பர்.

கருத்து:

அரசனைக் கொன்றவர்கள் இறுதி எய்துவர்.

பாடல் : 281
வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;
என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்?. . . . .[281]

பொருளுரை:

எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்து தம்மிடத்து அகப்பட்டவிடத்தும் உறங்குகின்ற புலியை அவ்வுறக் கத்தினின்றும் எழுப்புவார்களோ? (இல்லை). (அதுபோல) கொடிய சினத்தையுடைய அரசன் தங்கீழ் வாழ்வார்க்குத் தீமையே செய்யினும் அவன் மனத்தில் கறுவுகொள்ளத் தக்கனவற்றை அவன்கீழ் வாழ்வார் ஒருசிறிதும் இயற்றுதல் வேண்டா.

கருத்து:

அரசன் தமக்குத் தீமை செய்யினும் அவற்குத் தீமைசெய்யா தொழிக.

பாடல் : 282
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?
ஆமா உகளும் அணி வரை வெற்ப! - கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார். . . . .[282]

பொருளுரை:

காட்டுப்பசுக்கள் துள்ளி மகிழ்ந்துலாவுகின்ற அழகிய மலைநாடனே! உற்றுக் கேட்பாயாக கோங்கமரத்தின் மீது ஏறினவர்கள் ஏமம் ஆரார் - பாதுகாவலை யடையார் (அதுபோல) தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாதார் தாவிச்செல்லுகின்ற குதிரை பூட்டப்பெற்ற தேரினையுடைய அரசரைச் சினத்தல் என் கருதி?

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார் தாமுந்தூயராயிருந்து அரசனைத் திருத்துதல் நல்லது.

பாடல் : 283
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,
பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல், - அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு. . . . .[283]

பொருளுரை:

செய்யத் தகாதனவற்றைச் செய்தவர்களை அரசன் புறத்தே பொறுக்காதவன் போன்றிருந்து உழையார் என்பது கருதி அகத்தே பொறுமை உடை யனாயின் அவன் (மீண்டும்) மனம் பொறா தமைவனவற்றை இடையீடின்றிச் செய்தல் கூனின்மேல் பெருத்து எழுந்த கட்டியை அதுஒக்குமன்றோ.

கருத்து:

அரசன் பொறுமை உடையன் என்பது கருதித் தீமை செய்யற்க.

பாடல் : 284
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்
ஆடு பணைப் பொய்க் காலே போன்று. . . . .[284]

பொருளுரை:

இயற்கை நுண்ணறிவு உடையார் ஒரு பொருளாகவும் மதிக்கப்படாதார் கூறிய பொய்யாகிய குறளையை அரசன் தெளியும் வகையினை ஆராய்ந்து கூறுவதல்லாமல் குறளை கூறினார் வெருளுமாறு எழுந்து அசைகின்ற மூங்கிலால் செய்யப்பட்ட பொய்யாகிய கால்கள் போன்று குறளை கூறுவாரோடு ஆடுதலிலர்.

கருத்து:

அரசனைச் சார்ந்தொழுகுவார், அவன் உண்மையினைத் தெளிய அறியுமாறு கூறுதல் வேண்டும்.