நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


14. நட்பின் இயல்பு

பாடல் : 124
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,
கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,
நட்டாரை ஒட்டியுழி. . . . .[124]

பொருளுரை:

பொருந்திய அன்பினை உடைய உமையை ஒரு கூறாக தண்டினையும் வெல்லுகின்ற ஏற்றுக் கொடியினையும் உடைய சிவபிரான் ஏற்றுக் கொண்டான் தம்மொடு நட்புச் செய்தாரைத் தாம் அடைந்தவிடத்து அங்கே விட்டு நீங்காத தம் உடம்புமுழுதும் கொள்வார்கள்.

கருத்து:

நல்லோர் தம் நட்பினரிடத்துத் தாம் வேறு, அவர் வேறு என்னும் வேறுபாடின்றி ஒழுகுவர்.

பாடல் : 125
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. . . . .[125]

பொருளுரை:

வளைந்த உப்பங்கழிகளை உடைய குளிர்ந்த கடல் நாடனே! குற்றம் இன்றி நட்புப் பூண்டவர்களுக்கு அவரின் நட்பினர் கூறிய சொல்லும் அதன் பொருளும் வேறுபடாது ஒன்றேயாம் பொருள் வேறாக மனத்தில் நினைத்துக் கொண்டு வஞ்சனையால் விளக்கிக் கூறுதல் ஒருவனது பா ஒன்றினைச் செலுத்தி வெண்பாவாக செய்து கொள்ளுகின்ற ஒன்றை ஒக்கும்.

கருத்து:

மனம் வேறு, சொல் வேறாக, நட்பினரிடத்தில் கூறுதல் மிக்க வஞ்சனை பொருந்தியதாகக் கருதப்படும்.

பாடல் : 126
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா; - இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட! - இன்னாதே,
பேஎயோ டானும் பிரிவு. . . . .[126]

பொருளுரை:

விளங்குகின்ற அருவிகள் பாய்ந்து இழியாநின்ற மலைநாடனே! விலங்கேயாயினும் தன்னோடுகூடி வசித்து மனத்தாற் கலந்தாரை விட்டு நீங்குதல் செய்யாது. (ஆதலால்) தம்மோடு நட்புச்செய்து துன்பத்தை விளைவிக்கும் பேயேயானாலும் விட்டுப் பிரிதல் துன்பத்தைத் தருவதாம்.

கருத்து:

தம்மோடு கலந்து பழகி மனம் ஒன்றுபட்ட நண்பினரைப் பிரிதல் துன்பந்தருவதாம்.

பாடல் : 127
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும், மொழியால் முடியா;
துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!
பனியால் குளம் நிறைதல் இல். . . . .[127]

பொருளுரை:

அலைகள் சினங்கொண்டு வீசுதலால் அலைகின்ற கடலை உடைய நாடனே! பனிநீரால் குளம் நிறைதல் இல்லை. (அதுபோல) தம்முடைய நட்டாரைப் பற்றிய வருத்தம் தீர்தற்கான முயற்சிகளை வெறுப்பின்றியே செய்தாராயினும் அவர் கூறும் முகமனால் அவர் உற்ற துன்பம் நீங்குவதில்லை.

கருத்து:

தம் நண்பினர் துன்புறுவரேயானால் அதற்கான முயற்சிகளைச் செயலிற்றாமே செய்து நீக்க வேண்டும்.

பாடல் : 128
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா;
யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;
கானாட்டு நாறும் கதுப்பினாய்! - தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல். . . . .[128]

பொருளுரை:

நறு நாற்றத்தால் பிறவற்றை வென்று இயற்கை மணம் வீசுகின்ற கூந்தலை உடையாய்! நாயோடு நட்புச் செய்தால் சிறந்த உணவாகிய முயல் தசையை உண்பிக்கச் செய்யாதோ? (உண்ணச் செய்யும் அதுபோல) செல்வத்தால் மிகுந்த தாம் நண்பு பூண்டு ஒழுகுவதற்கு (நம்மைஒப்ப) இவரும் செல்வத்தால் தகுதியுடையவரா என்றாராய்தல் வேண்டா வறுமையால் மிக்கவர் நட்பேயானாலும் அவர் நட்பைப் பெறவேண்டும்.

கருத்து:

செல்வந்தர் வறுமையுடையாரோடும் நட்புச் செய்தல் வேண்டும்.

பாடல் : 129
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;
முழ நட்பின், சாண் உட்கு நன்று. . . . .[129]

பொருளுரை:

இவரிடத்து வேற்றுமையின்றிப் பூண்ட நட்பினை உடையோம் என்று கருதி ஆராயாது தீயனவற்றைச் செய்து தாம் ஊர்ந்த பரிவும் இலராகி சேர்ந்தார் தம்மிடத்து இயல்பாக இருந்த சிறிய அன்பும் இல்லாதவர்களாகி ஒழுகுபவர்களது பழைமையையே பற்றுக் கோடாகக் கொண்டு புதிய நட்பினை நீக்கார் அறிவுடையோர் தீயன செய்யும் நட்பு முழம் இருத்தலைவிட அஞ்சத்தகும் நட்பு சாண்இருத்தலே நல்லது.

கருத்து:

தீயன செய்யும் பழைய நட்பைவிட அஞ்சத்தகும் புதியநட்பே நல்லது.

பாடல் : 130
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?
விழித்து அலரும் நெய்தல் துறைவ! - உரையார்,
இழித்தக்க காணின், கனா. . . . .[130]

பொருளுரை:

கண்கள் விழித்தலை ஒத்து மலரும் நெய்தற் பூக்களை உடைய கடல் நாடனே! ஆராய்ந்து தூயதாகக் கொள்ளப்பட்ட நட்பினை உடையாரை பலர் இடையே இகழ்ந்து கூறமாட்டார்கள் அறிவுடையோர் என்ன காரணமெனில் (பிறரிடம் கூறினால்) தமக்கு இழிவைத் தருவனவற்றை கனவின்கண் கண்டாராயின் (தமக்கு இழிவு வரும் என்று கருதி) பிறரிடம் கூறார் (அதுபோல).

கருத்து:

அறிவுடையோர் தம் நட்பாரிடத்துள்ள குற்றங்களை தூற்றமாட்டார்கள்.

பாடல் : 131
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்! - யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார். . . . .[131]

பொருளுரை:

பண்ணினது இயல்பைக் கொண்ட இனிமையான சொற்களையும் மூங்கில்போன்ற தோள்களையும் உடையாய்! நண்பு செய்து தம்மால் நிலை நிறுத்தப்பட்டவர்களை தாம் கண்கூடாகக் கண்ட குற்றம் அவர் மாட்டு இருக்கின்றன என்றறிந்தாலும் அறிவுடையோர் கோபிக்கமாட்டார்கள் தம்முடைய கன்றிற்குப் பால் விடாமல் அஃது இறக்கும்படி பசுவினைக் கறப்பவர் யாருமிலர் (அதுபோல).

கருத்து:

அறிவுடையோர் தம் நட்டார் குற்றம் செய்யினும் அதுகருதிச் சினத்தல் இலர்.

பாடல் : 132
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும்,
'எம் தீமை' என்றே உணர்ப, தாம்; - அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!
ஒருவர் பொறை, இருவர் நட்பு. . . . .[132]

பொருளுரை:

அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே! ஒருவர்பொறுக்கும் பொறுமையால் இருவரது நட்பும் நிலைபெறுமாதலால் நட்டார்க்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமையில்லாதார் தம் நட்டார் தமக்குச் செய்த தீமையையும் எம்மால் செய்யப்பட்ட தீமையேஎன்று நினைத்துப் பொறுப்பார்கள்.

கருத்து:

நட்புப் பூண்டொழுகு மிருவருள் ஒருவராவது பொறுமை மேற்கொண்டொழுகுதல் அவர்கள் நட்பு நீடித்து நிற்பதற்கு ஏதுவாகும்.

பாடல் : 133
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப, தாம்; - தெற்ற
அறை ஆர் அணி வளையாய்! - தீர்தல் உறுவார்
மறையார், மருத்துவர்க்கு நோய். . . . .[133]

பொருளுரை:

தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்! பிணி நீங்க விரும்புவோர் வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல) மிகவும் மனம் இரங்கி தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு தாம் அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.

கருத்து:

அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக் கூறுவார்கள்.

பாடல் : 134
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;
கட்டு அலர் தார் மார்ப! - கலி ஊழிக் காலத்து,
கெட்டார்க்கு நட்டாரோ இல்!. . . . .[134]

பொருளுரை:

மொட்டுக்கள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே! குறைவின்றி ஒருவர் செல்வமுடையராய பொழுதின்கண் சமைத்த உணவினை உண்ணவருவோர் ஆயிரம் பேர் உளராவர் கலியுகமாகிய காலத்தில் செல்வம் இல்லாதவர்க்கு நட்பினர் ஒருவரும் இலர்.

கருத்து:

ஒருவன் செல்வமுடையனாய காலத்து அவனைச் சூழ்ந்து நிற்பதும், அஃதிலனாய காலத்துப் பிரிந்து நிற்பதும் கீழ்மக்களது இயற்கையாகும்.