நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


10. சான்றோர் இயல்பு

பாடல் : 069
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர். . . . .[069]

பொருளுரை:

சிறப்புப்படத் தோன்றும் ஒளியை யுடைத்தாய் நீரிலே படிந்தாலும் ஒட்டாத ஒப்பற்ற இரத்தினத்தைப்போல் தாற்றப்பட்டதாயினும் தலைமகனுடைய பெருமை நூறு ஆயிரவர்கட்கு ஒப்பாகும்.

கருத்து:

அறிவுடையார் பெருமைமறைக்க மறைபடாது.

பாடல் : 070
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்; - வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி. . . . .[070]

பொருளுரை:

பஞ்சத்தால் புலியானது தன்னிடத்து வருத்தும் பசி மிக்கு வருந்தியதானாலும் புல்லினை மேயா தொழியும் அறிஞர்கள் ஒற்கம் தாம் உற்ற இடத்தும் - வறுமையைத் தாம் அடைந்த இடத்தும் தாம் முன்பு இருந்த நிலையிலேயே நிற்பார்கள்.

கருத்து:

பெரியோர் வறியராயினும் தம் நிலையினின்றும் திறம்பார்.

பாடல் : 071
மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்; - அஃதேபோல்,
பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;
ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. . . . .[071]

பொருளுரை:

அதிலுள்ள மரங்கள் பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அஃதேபோல் - அதுபோலவே அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்) வலியில்லாததற்குப் பெருமையில்லை.

கருத்து:

தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர்.

பாடல் : 072
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப; - உணர்வார்க்கு
அணி மலை நாட! - அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும். . . . .[072]

பொருளுரை:

பத்தியாக இருக்கின்ற மலைகளையுடைய நாடனே! இரத்தினத்தின் தன்மை அறியும் ஆற்றலுடையார்க்கு மணி அளறு ஆடிக்கண்ணும் இரத்தினம் சேற்றிலே கிடந்து மாசுண்ட இடத்தும் இரத்தினமாகவே தோன்றும். (அதுபோல) கொத்துக்களைப் போன்று சூழலுடையராய் உயர்ந்த குடியின்கண் விளக்கமுற்று வந்தவர்களை எத்தகைய துன்பம் அவர்களைப் பீடித்த இடத்தும் ஆராயும் அறிவினர் உயர்ந்த குடியிலுள்ளார்களாகவே மதிப்பர்.

கருத்து:

அறிவுடையோர் உயர்குடிப் பிறந்தார் வறுமை முதலிய எய்தியக்கண்ணும் அவை நோக்காது உயர்வாகவே மதிப்பர்.

பாடல் : 073
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,
மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்;
பொற்ப உரைப்பான் புக வேண்டா, - கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். . . . .[073]

பொருளுரை:

கற்றது ஒன்றில்லையாயினும் நற்குடிப்பிறந்தார் ஒன்றைமட்டும் அறிந்தாரைவிட நற்குணங்களில் மாட்சிமைப்பட மிகச் சிறந்தோர்களே யாவார்கள். கற்றோர் அவர்களிடம் நற்குணங்களை அழகுபட விரித்துரைக்கப் புகவேண்டுவதில்லை. கருமாருடைய சேரியில் தையல் ஊசியை விற்கப் புகுவார் இல்லையாதலால்.

கருத்து:

உயர்குடிப் பிறப்பின்றிக் கல்வி ஒன்றே உடையாரைவிட உயர்குடிப்பிறந்தார் சாலச் சிறந்தவர்களே யாவார்கள்.

பாடல் : 074
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்; - சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
அறி மடமும் சான்றோர்க்கு அணி. . . . .[074]

பொருளுரை:

செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே! காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும் ஆராய்ந்து சொல்லுமிடத்து அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.

கருத்து:

அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.

பாடல் : 075
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,
உரைத்தால், உரை பெறுதல் உண்டு. . . . .[075]

பொருளுரை:

பலவாகிய பசுக்கூட்டங்களைக் காத்த நீண்ட வடிவெடுத்த திருமாலேயாயினும் அவையில் ஒருவனை இகழ்ந்துரைத்தால் (தாமும் அவனால்) இகழ்ச்சியுரையை அடைதல் உண்டு. (ஆகையால்) நல்லோர் பலரும் கூடியிருக்கும் அவையின் இடையே நன்னெறிப்பட்டு ஒழுகும் சான்றோர் எவரையும் மனம் உளையும்படி இகழ்ந்து கூறார்.

கருத்து:

சான்றோர் அவை நடுவே, யாரையும் இகழ்ந்து கூறார்.

பாடல் : 076
'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்யார், மாணா வினை. . . . .[076]

பொருளுரை:

பாண்டியனும் எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று கதவையிடித்த குற்றத்தை நினைத்து தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.

கருத்து:

அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.

பாடல் : 077
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை, - ஏய்ப்பார் முன்
சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே
வில்லொடு காக்கையே போன்று. . . . .[077]

பொருளுரை:

கொடிய செயல்களின்பாற்பட்ட வினைகளுக்கு மிகவும் அஞ்சாதவர்களாய் தம்மைக் காப்பாற்று கின்றவர்களைப்போல் கூறிய பொய்யாலும் குறளையாலும் தம்மை ஏமாற்றுகின்றவர்கள் முன்பு அவர் கூறிய இனிய சொற்களுக்கு இணங்காதவர்களாய் வில்லைவிட்டு நீங்கும் காக்கையைப்போல தளர்ச்சியின்றி விட்டுநீங்குவார்கள்.

கருத்து:

தீயார் சொற்களைக் கேட்டவுடனேயே அவர்களை விட்டுநீங்குவர் நல்லோர்.

பாடல் : 078
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார் - குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!
கடலொடு காட்டு ஒட்டல் இல். . . . .[078]

பொருளுரை:

கூடு பொருந்திய மடல்களோடு பறவைகள் விரவா நின்ற பெரிய கடலையுடைய நெய்தல்நிலத் தலைவனே! கடலோடு துரும்பு பொருந்துதல் இல்லை (அதுபோல) (தமது உடம்பு) ஒடுங்கும்படி பசித்தாராயினும் மாட்சிமை உடையார் பிறர் பொருளைத் தாம் கொள்ளத் தொடங்க விரும்பார்.

கருத்து:

பெரியோர் பிறர் பொருளை விரும்பார்.

பாடல் : 079
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,
மரையா கன்று ஊட்டும் மலை நாட! - மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு. . . . .[079]

பொருளுரை:

பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. (ஆதலால்) எல்லாவகையினு முயர்ந்தாரிடத்துள்ள குற்றம் வெண்மையாகிய மாட்டின்மேல் இட்ட சூடுபோல் ஒருநாளும் மறையா.

கருத்து:

பெரியோர் செய்த குற்றம் மறையாது.

பாடல் : 080
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. . . . .[080]

பொருளுரை:

வெகுண்டு அளவுகடந்த தீயசெயல்களை மிகப்பல நாட்கள் செய்தாராயினும் அவற்றுள் ஒரு குற்றமும் சிறியாரிடத்து எப்பொழுதாயினும் தோன்றுதல் இல்லை உயர்ந்தோரிடத் துளதாகிய குற்றம் ஒன்றாக இருப்பினும் மலையின்மீது வைத்த விளக்கினைப்போல் என்றும் விளங்கித்தோன்றும்.

கருத்து:

பெரியோர்கள் செய்த குற்றம் நன்றாக விளங்கித் தோன்றும்.