நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


01. கல்வி

பாடல் : 001
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே? - ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார். . . . .[001]

பொருளுரை:

மிகவும் வழியைக் கடக்கவிட்டு தீர்வைப் பொருள் அடைபவர்கள் இல்லை ஓடத்தைச் செலுத்தி நிறுத்தியபின் கூலியைப் பெறுபவர்கள் இல்லை. (அவைபோல) கல்வியைக் கற்றற்குரிய இளமையில் கல்லாதவன் முதுமையின்கண் கற்று வல்லவனாவான் எனவும் புணருமோ என்று சொல்லுதலும் கூடுமோ?இல்லை.

கருத்து:

கற்றற்குரிய இளமைப் பருவங் கழிவதற்கு முன்னேகல்வி கற்கவேண்டும்.

பாடல் : 002
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாத வாறு. . . . .[002]

பொருளுரை:

(கற்றார் முன்பு) ஒன்றைச் சொல்லுந்தோறும் குற்றம் உண்டாதலால் மனத்தளர்வின்றி கற்குந்தோறும் நான் கல்லாதவன் என்று கருதி கல்லா தொழிந்த நாட்களுக்கு வருந்தி மனம் பொருந்தி ஒருமைப்பட மீண்டும் மீண்டும் நினைத்து; உழன்று ஒன்று அறியுமேல் - வருந்தி அறிந்திராத ஒரு பொருளை அறிவானாயின் பின்னும் நூல்களைக் கற்குந்தோறும் தான்கல்லாதவனாகவே நினைத்துக் கற்கக் கடவன்.

கருத்து:

படிக்குந்தோறும்அறியாதவனாக நினைத்து ஒவ்வொருவனும் படிக்கவேண்டும்.

பாடல் : 003
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின், - மலை நாட! - என்னை
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். . . . .[003]

பொருளுரை:

மலைநாட்டையுடையவனே விளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலைப்பணம் கொடுத்துக் கொள்வது விளக்கினால் பொருள் வேறுபாடு இல்லை என்று விளக்கின் தன்மை முழுமையும் ஆராய்ந்தேயாகும் விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்யின் பொருள்கொடுத்துப் பெற்ற அதனால் அவர்க்கு வரும் பயன் யாது? (ஆதலால்) பொருளைக்கொடுத்து இருளைக் கொள்ளார்.

கருத்து:

ஞானநூல்களைக் கற்றல் வேண்டும்.

பாடல் : 004
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு
வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல். . . . .[004]

பொருளுரை:

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை அறிந்தவர்களே அறிவுடையார் எனப்படுவார் அவ்வறிவு படைத்தவர்களது (புகழ்) நான்கு திசையின் கண்ணும் பரவாத நாடுக ளில்லை அந்த நாடுகள் அயல் நாடுக ளாகா அவ்வறிவுடையோர் நாடுகளேயாம் அங்ஙனமானால் வழியில் உண்பதற்கு உணவு (கட்டமுது) கொண்டுசெல்ல வேண்டியதில்லை.

கருத்து:

கற்றாருக்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு.

பாடல் : 005
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று. . . . .[005]

பொருளுரை:

குடித்தற்கு இனிய உவர்ப்பில்லாத நன்னீர் வேறு இடங்களில் இல்லையென்று நினைக்கும் கிணற்றினுள்ளே வாழும் தவளையைப்போல் தாமுங் கருதாமல் நூல்களை நாள் முழுமையும் வெறுப்பின்றி இனிதாகப் படித்து அறிதலைக் காட்டினும் (அறிஞர்களிடம்) விரும்பிக் கேட்டலே நன்று. (கற்றலிற் கேட்டலே இனிது.)

கருத்து:

தேரைபோ லாதலாவது தாம் விரும்பிச் செய்யும் கற்றதனாலன்றிக் கேட்டறிதலினாற் பயனில்லை என்று கருதுதல்.

பாடல் : 006
"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்ற
நரை முது மக்கள் உவப்ப - நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்; - குல விச்சை
கல்லாமல் பாகம் படும். . . . .[006]

பொருளுரை:

வழக்கினது முடிவான உண்மையை ஆராயும் அறிவு நிரம்பப் பெறாதவன் சிறுவயதினன் என்றிகழ்ந்த நரைமயிருள்ள முதியோர் இருவரும் மகிழும்படி நரைமயிரை முடியின்கண் முடித்து வந்து (அவர்கள் கூறிய) சொற்களைக் கொண்டே நீதி கூறினான் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன் தத்தம் குலத்திற்குரிய அறிவு அந்நூல்களைக் கல்லாமலே இனிதுஅமையும்.

கருத்து:

குலவித்தைகல்லாமலே அமையும்.

பாடல் : 007
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்; - நலம் மிக்க
பூம் புனல் ஊர்! - பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால். . . . .[007]

பொருளுரை:

நன்மை மிகுந்த அழகிய நீர்வளம் நிரம்பிய ஊரனே! பாம்பினுடைய கால்களைத் தமக்கு இனமாகிய பாம்புகளே அறியுந் தன்மையுடையன. அதுபோல் அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் தெரிந்துகொள்ளும் திறம் (அவர்கள் போன்ற) அறிவிற் சிறந்தவர்களுக்கே விளங்கும் கல்வியறிவில்லாதவர்களுக்கு விளங்காது.

கருத்து:

கற்றோர் பெருமையைக்கற்றோர் அறிவார்.

பாடல் : 008
நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்; - நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப! - மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில். . . . .[008]

பொருளுரை:

கண்களுக்கினிய மயில்கள் (தோகையை விரித்து ஓகையொடு) நடமாடும் சிறந்த மலைநாட்டை யுடையவனே! எக்காலத்தும். அயில் அயிலாலே போழ்ப - இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பர் - (அதுபோல) கற்றவாறமைந்த நற்குணமுடையோர்களது அறிவின் நன்மையை அறிவதாயின் அவர்களைவிடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள் கல்வி ஒன்றே உடையஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

கருத்து:

நல்லார்அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்.

பாடல் : 009
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர் - தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட!
நிறை குடம் நீர் தளும்பல் இல். . . . .[009]

பொருளுரை:

பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை யுடையவனே! நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார் மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

கருத்து:

கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்துபேசமாட்டார்கள்.

பாடல் : 010
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,
கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,
மதிப்புறத்துப் பட்ட மறு. . . . .[010]

பொருளுரை:

நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்விற்கும் வேறுபாடு இல்லாதவர்கள் மாறுபட்டு எழுந்தோர்களுடைய நூலின் கொள்கைகளைத் தம் வன்மையால் வென்று தலைமைப் பேறுற வாழ்கின்ற அறிஞர்கள் இகழ்தற்குரிய செயல்களைச் செய்தல் திங்களின்கண் இலங்கும் களங்கம் போல் விளங்கித்தோன்றும்.

கருத்து:

அறிவுடையோர் மாசுற்ற செயல்களைச் செய்வாராயின் அதுதேசுற்றுத் தோன்றும்.