நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
32. அறம் செய்தல்
அறம் செய்து அருள் உடையர் ஆதல், - பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப! - அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. . . . .[357]
அறஞ்செய்து அருளுடையர் ஆதல் - பிறங்கல்
அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
'சுமையொடு மேல்வைப்ப மாறு'. . . . .[357]
பொருளுரை:
பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப மலையில் மூங்கிலுடனே வேய்கள் நெருங்கி இணங்கி நிற்கும் வெற்பனே! சிறந்தனவாகிய இன்பங்களை அடைந்து இன்புற்றொழுகும் பொருளுடையவர்கள் அறங்களைச் செய்து யாவர்மாட்டும் அருள் உடையவராகி ஒழுகுதலாகிய அச்செயலே ஒருவன் பொற்சுமையொடு அதன் மேலே மணிச் சுமையையும் வைத்துச் சுமந்து செல்லுதலை யொக்கும்.
கருத்து:
செல்வ முடையார் அறமும் அருளும் உடையவராகுக.
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்யின் - அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது. . . . .[358]
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
'எய்ப்பினில் வைப்பென் பது'. . . . .[358]
பொருளுரை:
தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும் இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத் தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின் தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ?
கருத்து:
அறமே எய்ப்பினில் வைப்பாம்.
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்; - மெல் இயல்,
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்! - பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல். . . . .[359]
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம் - மெல்லியல்
சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய்! - 'பைங்கரும்பு
மென்றிருந்து பாகு செயல்'. . . . .[359]
பொருளுரை:
மென்மையான சாயலையும் தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையாய் வளமையைத் தரும் மிக்க செல்வத்தை மாட்சிமையுடையார் பெற்றால் இனிச் செல்லுகின்ற மறுமையிலும் இன்புறுமாறு அதற்கான அறத்தைச் செய்துகொள்வது பசிய கரும்பினைச் சுவைத்தறிந்து மேலும் சுவைக்கப் பாகு செய்து கொள்ளுதலை யொக்கும்.
கருத்து:
பொருள் பெற்றால் இம்மைக்கும் மறுமைக்கும் - ஆவனவாகிய அறத்தை அதனைக் கொண்டு செய்து கொள்க.
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி. . . . .[360]
தேனுலகத் தாயின் இனிததூஉம் - தானொருவன்
நாள்வாயும் நல்லறம் செய்வார்க்கு இரண்டுலகும்
'வேள்வாய்க் கவட்டை நெறி'. . . . .[360]
பொருளுரை:
அறஞ் செய்கின்ற ஒருவன் ஈனுலகத்தாயின் இசை பெறும் இவ்வுலகின் திறத்து ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான் இவ்வுலகினின்றும் நீங்கி மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின் அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்) நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு இரண்டுலகி னின்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும்.
கருத்து:
இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனை நாள்தோறும் செய்க.
ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,
நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,
நாய் காணின் கல் காணாவாறு. . . . .[361]
யாய்வின்றிச் செய்யாதார் பின்னே வழிநினைந்து
நோய்காண் பொழுதின் அறஞ்செய்வார்க் காணாமை
'நாய்காணின் கற்காணா வாறு'. . . . .[361]
பொருளுரை:
உணர்வு அழிவதன் முன்னே பல திறத்த செயல்களான் வரும் அறங்களை ஆராய்தலின்றிச் செய்யாதவர்கள் பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல் நாயைக் கண்ட பொழுது கல் மறைதலை யொக்கும்.
கருத்து:
அறத்தைப் பொருள் பெற்றபொழுதே ஆராய்தலின்றி உடனே செய்க.
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,
அக்காரம் பால் செருக்குமாறு. . . . .[362]
தொக்க வகையும் முதலும் அதுவானால்
மிக்க வகையால் அறஞ்செய்க எனவெகுடல்
'அக்காரம் பால்செருக்கும் ஆறு'. . . . .[362]
பொருளுரை:
மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால் அச் செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக் காரணமாயிருப்பதும் அறமேயென் றறியப்படுமானால் பலதிறப்பட்ட நெறியால் அறம் செய் யென்று ஒருவன் சொல்ல அவனைச் சினத்தல் சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை யொக்கும்.
கருத்து:
அறத்தாற் பொருள் பெறலா மென்றறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறமியற்றக் கடவன்.
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல். . . . .[363]
குலைத்தடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்தழு(து) 'உண்ணாக் குழவியைத் தாயார்
அலைத்துப்பால் பெய்து விடல்'. . . . .[363]
பொருளுரை:
அழிவில்லாத உலகத்து அடையும் உறுதியாகிய நன்மையை நோக்கி நல்ல அறநெறியைக் கைக்கொள்ளாதாரை அந் நெறியினின்றும் நீக்கி அடக்கி அறநெறியைக் கொள்ளுமாறு அறிவு கொளுத்துதல் மாறுபட்டு அழுதுகொண்டு பாலுண்ணாத குழந்தைகளை தாய்மார்கள் வருத்திப் பால் உண்பித்தலை யொக்கும்.
கருத்து:
அறிவுடையோர் அஃதிலராகித் தீநெறியிற் செல்லும் மடவோரை அடக்கி அறிவு கொளுத்துக.
திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;
புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,
அல்லவை நீங்கி விடும். . . . .[364]
திறந்தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்றாம்
புறஞ்செய்யச் செல்வம் பெருகும் 'அறஞ்செய்ய
அல்லவை நீங்கி விடும்'. . . . .[364]
பொருளுரை:
செல்வத்திற்கு வேண்டும் புறச் செயல்களைச் செய்ய அதனால் செல்வம் வளரும் அறங்களைச் செய்ய அதனால் பாவங்கள் பற்றுதலைவிட்டு ஒழியும் (ஆதலால்) அறங்களைச் செய்கின்றவர்களுக்கும் அறஞ்செய்யு மிடத்தை ஆராய்ந்து செய்யும் கூறுபாட்டை அறிந்து செய்தால் செல்லுகின்ற மறுமையுலகின்கணின்பமுண்டாகும்.
கருத்து:
அறஞ்செய்வார் இடனும் செய்யும் கூறுபாடும் அறிந்து செய்க.
ஆற்றும் துணையும் அறம் செய்க! - மாற்று இன்றி,
அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,
துஞ்சு வருமே, துயக்கு!. . . . .[365]
ஆற்றும் துணையும் அறஞ்செய்க! - மாற்றின்றி
'அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
துஞ்ச வருமே துயக்கு'. . . . .[365]
பொருளுரை:
அறிவின் மயக்கம் அஞ்சத் தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோன்றுதற் கருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க.
கருத்து:
ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான் அறம் செய்க.
கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,
முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின்,
நட்டு அறான் ஆதலே நன்று. . . . .[366]
கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
முட்டுடைத் தாகி 'இடைதவிர்ந்து வீழ்தலின்
நட்டறான் ஆதலே நன்று'. . . . .[366]
பொருளுரை:
அறம் செய்வதற்குப் பொருந்திய நெறியால் பலரும் வருந்தாதவாறு தனக்கு உறுதி உடைத்தாகுமாறு கருதிச் செய்தொழுகிய நல்லறத்தை இடையூறுடைத்தாகி அதனான் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிட பயிரை நட்டுவைத்து அதனை அறுத்துப் பயன்பெறா தொழிந்தா னெனப்படுதலே நல்லது.
கருத்து:
அறஞ் செய்வார் இடர்ப்பாடு நோக்கி இடை நிறுத்தலாகாது.
சில நாள் சிறந்தவற்றால் செய்க! - கலை தாங்கி
நைவது போலும் நுசுப்பினாய்! - நல்லறம்
செய்வது செய்யாது, கேள். . . . .[367]
சிலநாள் சிறந்தவற்றாற் செய்க - கலைதாங்கி
நைவது போலும் நுசுப்பினாய்! 'நல்லறம்
செய்வது செய்யாது கேள்'. . . . .[367]
பொருளுரை:
மேகலையைத் தாங்கி இறுவது போலும் நுசுப்பினை உடையாய் நல்லறம் செய்யும் நன்மையைச் சுற்றத்தார் செய்யார் (ஆதலால்) பல நாட்களும் அறத்தைச் செய்யாராயினும் அறத்தைச் சில நாளாயினும் சிறந்த நெறிகளாற் செய்துய்வாயாக.
கருத்து:
அறத்தைச் சில நாளாயினும் செய்துய்க.
நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும்
காப்பாரின் பார்ப்பார் மிகும். . . . .[368]
நோக்கப் படினும் உணங்கலைப் புட்கவரும்
போற்றிப் புறந்தந்(து) அகப்பட்ட ஒண்பொருட்கும்
'காப்பாரில் பார்ப்பார் மிகும்'. . . . .[368]
பொருளுரை:
வெயிலில் காயும் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இமை கொட்டும் அளவிலே எங்ஙனம் காவல் செய்து கொள்ளப்படினும் அவ்வுணங்கலைப் புட்கள் திருடிச்செல்லும். (அதுபோல) அரண் செய்து பாதுகாத்துத் தமக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒள்ளிய பொருளுக்கும். காவல் செய்வாரைவிட அதனைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் மிகப் பலராவர்.
கருத்து:
பொருளைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனே அறஞ் செய்துவிடுதல் நல்லது.
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல். . . . .[369]
பொன்றினமை கண்டும் பொருள்பொருளாக் கொள்பவோ
ஒன்றும் வகையான் அறம்செய்க 'ஊர்ந்துருளின்
குன்று வழியடுப்ப தில்'. . . . .[369]
பொருளுரை:
தம்மையின்றி உயிர் வாழாத இருவராகிய முதிய தாயும் தந்தையும் தாந் தேடிய பொருளையும் தம்மையும் விட்டுவிட்டு இறந்தமையை அறிந்தும் செல்வத்தை ஒரு பொருளாக மனத்தில் கொள்வார்களோ? பொருந்தும் நெறியான் அறத்தைச் செய்துய்க மலை ஊர்ந்து உருண்டு செல்லுமாயின் அதனைவழி நின்று தடுப்பது ஒன்றுமில்லை யாதலின்.
கருத்து:
செல்வத்திற்கே யன்றி உனக்கும் நிலையாமை உண்மையால் உடனே அறம் செய்க.
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல் விட்டுக் காக்கை தினல். . . . .[370]
முற்ற அறிந்தார் முதலறிந்தார் - தெற்ற
முதல்விட் டஃதொழிந்தோர் ஓம்பா ஒழுக்கம்
'முயல்விட்டுக் காக்கை தினல்'. . . . .[370]
பொருளுரை:
அறத்தினுக்கு அருள் உடையரா யிருத்தல் பண்பாதலை ஆராய்ந்து அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார் தெளிவாக காரணமாகிய அருளைவிட்டு திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய பாதுகாவாத கொடை நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு ஆகாயத்தின் கண் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும்.
கருத்து:
அருளோடு கூடிய அறம் சிறந்தது என்றது இது.
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,
இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. . . . .[371]
தம்மை யுடையார் அவற்றைச் சலமொழுகல்
இம்மைப் பழியேயும் அன்றி மறுமையும்
'தம்மைத்தாம் ஆர்க்குங் கயிறு'. . . . .[371]
பொருளுரை:
தம்மை வீட்டின் கண் செலுத்தும் விருப்பம் உடையார் தாம் இப் பிறப்பின் கண்ணே செய்யும் தவமும் அறமும் ஆகிய இவ்விரண்டு நெறியின் கண்ணும் அவற்றை வஞ்ச மனத்தராய்ச் செய்தல் இம்மையின் கண் பழியை உண்டாக்குதலே யல்லாமல் மறுபிறப்பின் கண்ணும் நிரயத்தினின்றும் தாம் வெளியேறாதவாறு தம்மை இறுகக் கட்டி வீழ்த்தும் கயிறாகவும் ஆகும்.
கருத்து:
வஞ்ச மனத்தராய்த் தவமும் அறமும் புரிந்தொழுகுவார் பழியையும், நிரயத்தையும் அடைந்து துன்புறுவர்.