நாலடியார்
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன
இன்னா நாற்பது
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு
திரிகடுகம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது
ஆசாரக் கோவை
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்
சிறுபஞ்சமூலம்
சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்
முதுமொழிக்காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்
ஏலாதி
'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,
திருக்குறள்
திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்
கார் நாற்பது
கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,
ஐந்திணை ஐம்பது
'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.
திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்
ஐந்திணை எழுபது
ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்
திணைமாலை நூற்றைம்பது
திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.
கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.
களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.
பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
பழமொழி நானூறு
31. உறவினர்
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!
உமிக் குற்றுக் கை வருந்துமாறு. . . . .[348]
எமக்குற்ற தென்றுணரா விட்டாக்கால் என்னாம்
இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட!
'உமிக்குற்று கைவருந்து மாறு'. . . . .[348]
பொருளுரை:
அருவிகள் விட்டு விளங்கிப் பொன்னைக் கொழித்து இழியும் குளிர்ச்சி பொருந்திய மலைநாடனே! தம்மை ஒரு பொருளாகக் கொண்டு அடைந்தவர்களுக்குற்ற தீமை தம்மை அடைந்ததாகவே நினைத்து அதனான் வரும் துன்பமும் எம்மை யடைந்ததேயாம் என்று அறிதலின்றி அதனைக் களையாது விட்டவிடத்து அவர் என்ன ஆவர்? உமியைக் குற்றுதலான் கை வருந்து மாற்றை யொக்கும்.
கருத்து:
தம்மை யடைந்தாரைத் தாம் காத்தல் வேண்டும்.
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். . . . .[349]
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் - தேர்ந்தவர்க்குச்
செல்லாமைக் காணாக்கால் செல்லும்வாய் என்னுண்டாம்
'எல்லாம்பொய் அட்டூணே வாய்'. . . . .[349]
பொருளுரை:
தம்மை அடைந்தாராகிய ஒருவரை அவரா லடைந்து ஒழுகப்பட்டவர் தொடர்பு இல்லாதவராகக் கொண்டு தெளிய அறியினும் ஆராய்ந்து விட்டு நீங்குதலில்லா வறுமையை நீக்க அறியானாயின் அவனுக்குச் செல்லும் நெறி வேறு யாதுளது? எல்லாம் பொய் - (உணவு அளித்தலை நோக்க ஏனைய எல்லா அறங்களும் பொய்) சமைத்துச் செய்த உணவை இடுமறமே மெய்யாமாதலின்.
கருத்து:
எல்லா அறங்களுள்ளும் உணவளித்தலே சிறந்த அறமாகக் கருதப்படும்.
நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல
வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து. . . . .[350]
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
'மனைமர மாய மருந்து'. . . . .[350]
பொருளுரை:
ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால் அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் நல்ல செயல் முறையான் அத் துன்பத்தை நீக்க முற்படுக அச்செயல் இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினையொக்கும் அல்லலுற்றார்க்கு.
கருத்து:
அல்லலுற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.
மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி! - எக்காலும்
செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,
பெய்யாது எனினும், மழை. . . . .[351]
மையார் இருங்கூந்தல் பைந்தொடி ! எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் 'பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை'. . . . .[351]
பொருளுரை:
கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்! உண்மையாக ஆராயின் உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது? ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும் உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள் குறித்த ஒரு பருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான்.
கருத்து:
உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர் - புனல் ஊர!
துன்னினார் அல்லர், பிறர். . . . .[352]
பின்னின்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்
பொன்னாச் செயினும் புகாஅர் புனலூர!
'துன்னினார் அல்லார் பிறர்'. . . . .[352]
பொருளுரை:
நீர்நாடனே! ஒரு குடியிற் பிறந்தவர்கள் முன்னர் இனிமையுடையவ ரல்லராயிருப்பினும் மிக்க துன்பம் வந்துற்றவிடத்து பின்னரும் இனிமையுடையரல்லராகிப் பிரிந்திரார் ஒரு குடிப்பிறந்தவ ரல்லவராகிய பிறரை பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனைநீக்கப் புகுதலிலர்.
கருத்து:
ஒரு குடியிற் பிறந்தவர்கள் தம்முள் ஒருவர்க்குத் துன்பம் வந்துற்ற பொழுது மாறுபாடு நீங்கி உதவி செய்வர் என்பதாயிற்று.
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே; - விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!
தாய் மிதித்த ஆகா முடம். . . . .[353]
கிளைகள்வாய்க் கேட்பதே நன்றாம் - விளைவயலுள்
பூமிதித்துப் புட்கலாம் பொய்கைப் புனலூர!
'தாய்மிதித்து ஆகா முடம்'. . . . .[353]
பொருளுரை:
நெல் விளைகின்ற கழனியுள் பூக்களை மிதித்து பறவைகள் தம்மிற் கூடி மகிழும் குளங்களையுடைய நீர் நாடனே தாயால் மிதிக்கப்பட்ட கால் முடம்படுதல் இல்லை. (ஆதலால்) மனம் நோவுமாறு உரைப்பராயினும் உறுதியாயினவற்றை சுற்றத்தாரிடத்துக் கேட்டறிதலே நல்லது.
கருத்து:
சொற் கொடுமை நோக்காது உறுதியாயினவற்றை உறவினரிடத்துக் கேட்டறிக.
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;
இன் ஒலி வெற்ப! - இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை. . . . .[354]
என்ன படினும் அவர்செய்வ செய்வதே
இன்னொலி வெற்ப! இடரென்னை 'துன்னூசி
போம்வழி போகும் இழை'. . . . .[354]
பொருளுரை:
இனிய ஓசையை உடைய மலைநாடனே! ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும் சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே தைக்கின்ற ஊசி போகின்றவழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; வரும் குற்றம் யாதுளது?
கருத்து:
உறவாக மதித்தார்க்கு உறவாய் நின்று உறுதி செய்க.
ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;
பொரு கடல் தண் சேர்ப்ப! - பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு. . . . .[355]
ஒருவழி நீடும் உறைதலோ துன்பம்
பொருகடல் தண்சேர்ப்ப! பூந்தா மரைமேல்
'திருவோடும் இன்னாது துச்சு'. . . . .[355]
பொருளுரை:
கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம்; (அதுபோல) கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும் தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம்.
கருத்து:
உடன் பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்ட நாள் தங்கியிருத்தல் ஆகாது.
ஈர் - ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு
ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,
காதலரொடு ஆடார் கவறு. . . . .[356]
ஈரைம் பதின்மரும் போரெதிர்ந்(து) ஐவரோடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
'காதலோ(டு) ஆடார் கவறு'. . . . .[356]
பொருளுரை:
பாரதநூலுள்ளும் பந்தயப் பொருள் தம்முடைய தாயப்பொருளாகக் கொண்டு நூற்றுவரும் ஐவரோடும் சூதுப்போர் செய்து (அது காரணமாகப்) பகைவராகி இடைக்காலத்திலேயே தம்முயிரை நீக்கிக்கொண்டார்களென்றும் கேட்கப்படுதலால் அன்புடையவரோடு விளையாட்டாக வாயினும் சூதாடுதலிலர் அறிவுடையார்.
கருத்து:
சூதாடல் உயிர்க்கிறுதியைத் தருவதாம்.