நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


25. அரசியல்பு

பாடல் : 241
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு. . . . .[241]

பொருளுரை:

அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நட்டார் பகைவர்) இத்தன்மையை அது செங்கோன்மைக்குக் குற்றமாம் தமது கண்போல் வாராயினும் தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது வன் கண்மையை உடையவனாகி அவர்களைத் தண்டிக்க தண்டஞ் செய்யாத கண்ணோட்ட முடையான் அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான்.

கருத்து:

அரசன் நடுநிலையிலிருந்து நீதி கூறவேண்டும்.

பாடல் : 242
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;
முறைமைக்கு மூப்பு இளமை இல். . . . .[242]

பொருளுரை:

அறிவு நிரம்பிய அமைச்சர்கள். மிகுதியானவைகளைக் கூறி இது பெருங் குற்றமல்லவென்று மறைத்து அன்றிரவு கழிந்த பின்னர் முன்னாள் பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்) செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

கருத்து:

முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம்.

பாடல் : 243
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம், - ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. . . . .[243]

பொருளுரை:

கூறும் முறைமையை யறிந்து செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும் அரசன் செல்வம்வறுமை நோக்கி நடுநிலை யினின்றும் திரியாதவனாய் இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும் கூறும் முறையினின்றும் வழுவி நடுவுநிலையாக ஒழுகா தொழிவானாயின் அங்ஙனம் ஒழுகாத தன்மை தாயின் தனங்களை உண்ணுங் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீரொழுகி; பால் ஒழுகும் ஆறு - மற்றொரு பக்கம் பாலும் ஒழுகு மாற்றை ஒக்கும்.

கருத்து:

அரசன் செல்வம், நல்குரவு நோக்காது முறையறிந்து நீதி கூறுதல் வேண்டும்.

பாடல் : 244
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்
அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,
கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,
வண்டு தாது உண்டுவிடல். . . . .[244]

பொருளுரை:

அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள் இறைப் பொருளுக்காக தன்னடியின் கீழ் வாழும் குடிகளை (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச் செய்யாமலும் பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய காலமறிந்து கொள்ளுதல் வண்டுகள் (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத்தேனை எளிதாக உண்ணுமாற்றை (ஒக்கும்).

கருத்து:

அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குக.

பாடல் : 245
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம்
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல். . . . .[245]

பொருளுரை:

(அரசன்) தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றவர்களே யாயினும் குடிகளிடத்து தமக்குச் சேரவேண்டிய மிகுந்த இறைப் பொருள்கள் அவர்களிடத்தில் நீண்ட நாட்கள் நிற்றலைச் செய்யவேண்டா; அரிந்த தாளின் தலையிலுள்ள நெல்லேயாயினும் கொள்ளுங் காலமறிந்து உடனே கொள்க; ஆராயுமிடத்து, (சேரக்கறக்கலா மென்று சிலநாள் விட்டுவைத்தால்) பாலுள்ள இடத்தில் (மடியில்) பின்னர்ப் பால் சுரத்தலில்லை யாதலால்.

கருத்து:

அரசன் இறைப் பொருளைச் சிறிது சிறிதாகக் காலமறிந்து கொள்க என்பதாம்.

பாடல் : 246
அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல். . . . .[246]

பொருளுரை:

தன்னை நெருங்க அடைந்த குடிகளை துன்புறுத்தி கொடையினையுடைய அரசன் கொடுங்கோலை உடையவனாகி குடிகளிடத்தில் தாங்கொள்ளும் இறைப்பொருளை மிகுதியாகக் கொண்டு பின்னர் அவருக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தலான் அன்பு செய்யின் அச்செயல் மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்குணவாக அதன் வாயில் இடுதலை ஒக்கும்.

கருத்து:

அரசன் இறைப்பொருளைத் துன்புறுத்தி மிகுதியாகக் கொண்டு பின்னர் எத்துணை செய்யினும் குடிகள் மகிழ்ச்சியடையார்.

பாடல் : 247
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்? - பொங்கு
படு திரைச் சேர்ப்ப! - மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம். . . . .[247]

பொருளுரை:

மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே! தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்கட்கு அரசன் செம்மையான கோலை யுடையவன் அல்லாதவிடத்து அவர்கள் செய்வது யாது? யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனை மூடுங்கலம் வேறொன்றும் இல்லை யாதல்போல.

கருத்து:

கொடுங்கோலரசனின் கீழுள்ள குடிகள் இறந்து படுதலே செய்யத்தக்க செயலாம்.

பாடல் : 248
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்;
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதார் இல். . . . .[248]

பொருளுரை:

நீர்த்துளியையே உண்ணுகின்ற வானம்பாடியைப்போல செம்மையான ஒன்றினையே நோக்கித் தவம் செய்கின்றவர்களுள்ளும் எளியவர்களைச் சினந்திகழாதார் யாரும் இல்லை (அதுபோல) செருக்குப் பொருந்திய யானைப்படையை உடைய அரசர்களுக்கு தம்மோடு மாறுபட்டு ஒழுகும் எளிய அரசர்களை மேற்பட்டுச் சென்று போரிட்டு வென்று ஒழுகுவதேயல்லாமல் அது செய்யாது இகழ்ச்சியான் நீக்குதல் துன்பந்தருவதாம்.

கருத்து:

தன்னோடு மாறுபட்டொழுகும் எளிய அரசர்களை அரசன் உடனே சென்று வெல்க.

பாடல் : 249
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தன் ஆகி ஒழுகின், - செறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். . . . .[249]

பொருளுரை:

குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும் சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய அரசன் யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின் வெல்லும் மனதுடைய அரசர்கள் வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால் அப்படைகள் என்ன செய்யும்? ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றிய துணையானே பறந்து செல்வர்.

கருத்து:

அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டு மறத்தை வெல்லலாம்.

பாடல் : 250
அம் கோல் அவிர்தொடி! - ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய். . . . .[250]

பொருளுரை:

அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்! அரசன் பகையரசர்மாட்டு கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும் தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாதவிடத்து ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும் தன்னைச் சேர்ந்தவர்களும் இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே உண்மையாக வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.

கருத்து:

அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலே காரணமாம்.

பாடல் : 251
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப? - புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!
மரத்தின் கீழ் ஆகா, மரம். . . . .[251]

பொருளுரை:

புன்னைப் பரப்பின்கண்ணே நீர் பாய்கின்ற மிக்க நீர் பொருந்திய கடலை உடைய குளிர்ந்தநாடனே! ஒரு மரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள மரம் ஓங்கி வளர்தல் இல்லை (அதுபோல) அரசனது ஆணை செல்கின்ற விடத்து ஏனையோர் தம்மை மிகுத்துக் கூறும் தமது ஆணையை எப்பெற்றியால் செலுத்துவார்கள் (செலுத்தக் கூடாதாம்.)

கருத்து:

அரசன் ஆணையின்கீழ், பிறர், தமது, ஆணையைச் செலுத்துதல் இயலாதாம்.

பாடல் : 252
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்; - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத் தோளாய்! - பாத்து அறிவு என்,
மெல்ல கவுள் கொண்ட நீர். . . . .[252]

பொருளுரை:

சிறப்பினை உடைய மேன்மை பொருந்திய மாலையை அணிந்த பெருத்த தோளினை உடையாய்! கன்னத்திலடக்கிய நீரைக் குடிக்கவும் செயலாம் உமிழவுஞ் செய்யலாம்; (அதுபோல) தம்மை வழிபாடு செய்தொழுகிய குடிமக்களை வலியராகச் செய்யவல்ல அரசர்கள் அக்குடி மக்களை அழிக்கினும் அன்றி ஆக்கினும் அவை அவராலியலும்; இதற்கு மெல்லப் பகுத்து அறிதல் என்னை?

கருத்து:

குடிமக்களை ஆக்கலும், அழித்தலும் அரசர்களால் செய்ய இயலாது.

பாடல் : 253
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல், - மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்! - அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு. . . . .[253]

பொருளுரை:

மலைமீதுள்ள மூங்கிலை வருத்தும் மென்மையான தோள்களைஉடையாய்! தலைமை நிலையைப் பெறவேண்டும் என்று கருதும் தன்மை உடையவர்களை அரசன் அவர் அஃதிலராகப் புறத்தே நடிக்கும் வஞ்சக நிலையால் அவரைத் தம்மையொப்பத் தலைமை செய்து தான் சோர்ந்திருத்தல் அங்ஙனமிருத்தல் ஓர் அறையினுள்ளேயே ஒருவன் பாம்போடுகூடத் தங்கியிருத்தலை ஒக்கும்.

கருத்து:

வஞ்சனை உடையாரைத் தலைமை செய்து அரசன் சோம்பி இருத்தல் ஆகாது.

பாடல் : 254
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,
முல்லை புரையும் முறுவலாய்! - செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்?. . . . .[254]

பொருளுரை:

முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்! இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில் அவர்தங் குறிப்பினையும் தன்னால் உயிர்கொள்ளப் படுதலுடையார் கூறும் மாற்றத்தினையும் ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல) அரசன் குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின் செய்வது என்ன இருக்கின்றது?

கருத்து:

குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.

பாடல் : 255
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் - குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்துவிடல். . . . .[255]

பொருளுரை:

உடைமையாகிய மிக்க செல்வத்தினை உடைய உயர்ந்த பெருமை தரத்தக்க முதன்மையை அடக்கமில்லாத உள்ள முடையனாகி ஒழுக்கத்தினும் தூய்மையுடையவன் அல்லாதவனிடத்து அரசன் கொடுத்தல் குரங்கினது கையில் கொள்ளியைக் கொடுத்து விடுதலை ஒக்கும்.

கருத்து:

அரசன் அற்பர்களுக்கு முதன்மையை அளிப்பது தீமையை அளிக்கும்.

பாடல் : 256
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்;
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையுள் கூழ் - மரமே போன்று. . . . .[256]

பொருளுரை:

உலகினை ஆளக்கடவேம் எனக் கருதும் அரசர்கள் வரையறையென்ப தொன்று இல்லாமல் தீமை செய்தவர்களையும் விரைந்து சினத்தலிலர்; கொல்லையுள் கூழ்மரமே போன்று - மனைப்படப்பையின்கண் ஒருவன் தனக்கு உணவாகப் பயன்படுமாறு வைத்து வளர்க்கப்பெறும் மரமே போல சொற்களால் வளைத்து தமது அடி நிழலின்கீழ் இருக்கச் செய்து பாதுகாத்துக்கொள்வர்.

கருத்து:

பகைவரையும் நட்பாகக் கொண்டு ஒழுகுதலே அரசனது ஆக்கத்திற்கு ஏதுவாம்.

பாடல் : 257
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
போந்து இறை ஆயதூஉம் பெற்றான்; - பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். . . . .[257]

பொருளுரை:

இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன் பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக தான் சென்று (அவனது சார்பைப் பெற்று) இலங்கைக்கே தலைவனாய அரசபதவியை அடைந்தான் பெரியோர்களைச் சார்பாகப் பெற்று (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்) பயன் அடையாதார் இல்லை.

கருத்து:

பெரியோரைச் சார்ந்தொழுகுவார் பயன்பெறுவர் என்பதாம்.