நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


17. முயற்சி

பாடல் : 149
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;
தமக்கு மருத்துவர் தாம். . . . .[149]

பொருளுரை:

எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து தமக்கு உதவி செய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ? துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.

கருத்து:

நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல் வேண்டும்.

பாடல் : 150
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;
நீத்த நீர்ச் சேர்ப்ப! - இளையோனே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன். . . . .[150]

பொருளுரை:

பொருந்தி ஆரவாரிக்கும் பிரளய கால வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய கடல்நாடனே! படித்தறிந்தது ஒரு சிறிதும் இல்லையாயினும் தொடங்கிய செயலைச் சோம்பலின்றி முடிப்பவன் அறிவுடையானெனப்படுவான் அங்ஙனம் செயலை ஆற்றுவோன் ஆண்டில் இளையவனேயானாலும் அறிவில் முதிர்ந்தவன் எனப்படுவான்.

கருத்து:

நூலறி வில்லானேயாயினும் கருமச் சூழ்ச்சியறிதலின், எடுத்த செயலை முடிப்போன் அறிவுடையா னெனப்படுவான்.

பாடல் : 151
வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. . . . .[151]

பொருளுரை:

தம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து விருந்துஓம்பி தம்மோடு தொடர்புடையராய் வந்த விருந்தினரை உபசரித்து கொடிய போரிடத்து வாளால் செய்யும் ஆண்மையிலும் வலிமையுடையராய் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலைக் கொள்ளாதவராய் வருந்திச் செய்யாதவர்களது மனைவாழ்க்கை செப்பம் அடைதல் இல்லை.

கருத்து:

வேளாண்மை, விருந்தோம்பல், வாளாண்மை, தாளாண்மை முதலியன மனைவாழ்க்கை யுடையார்க்கு வேண்டு மென்பதாம்.

பாடல் : 152
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்'
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது,
சென்றது, பேரா தவர். . . . .[152]

பொருளுரை:

உள்ள பொருள் ஒன்றே யென்றும் அதுவும் சிறியதே என்றும் எடுத்த செயலை முடிப்பதற்குப் போதிய உதவி இல்லையே என்று நினைத்துச் சோம்பி இருப்பின் குற்றம் பெரிதாகும் தம்மிடத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்தும் பிறரிடத்துக் கொடுத்த பொருளைத் தாம் மீளக் கொண்டும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாதவர்கள் ஒருநாளின் உள்ளேயே அழிந்துவிடுவர்.

கருத்து:

ஒருவன் சோம்பலுடையவனா யிருப்பின், அதனால் மிகுந்தகுற்றங்கள் உளவாம்.

பாடல் : 153
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க! - முனிவில்லார்
முன்னியது எய்தாமை இல். . . . .[153]

பொருளுரை:

இப்பொழுது சார்வாக ஒருவரையு மில்லாதார் எம்மைவிட யாருளர் இவ்வுலகத்தில் தனிமையுடையவராக ஆயினோம் என்று கருதி ஒருவர் சோம்பியிருக்க வேண்டுவதில்லை எடுத்த காரியத்தின்கண் சோர்வு இல்லாதவராகி முயற்சி செய்க காரியத்தின்கண் வெறுப்பில்லாதவர்கள் தாம்நினைத்ததை அடையாமலிருத்தலில்லை யாதலால்.

கருத்து:

தொடங்கிய காரியத்தில் சோம்பலும் வெறுப்பும் இன்றி அதனைச் செய்தல் வேண்டும்.

பாடல் : 154
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும். . . . .[154]

பொருளுரை:

தன்னால் இக்காரியங்கள் முடியுமாவென்று முதலில் ஆராய்ந்து, தனக்குத் துணையாவாரையும் ஆராய்ந்து செய்தால் உளவாம் பயனையும் ஆராய்ந்து அறிவிற் சிறந்தோர் அவற்றை மேற்கொள்வர் அங்ஙனம் ஆராய்தல் இல்லாமல் இயலாத செயல்களுள் யாதானும் ஒன்றை மேற்கொண்டு செய்யும் முறை யறியாது ஏதாவது செய்தால் தான் தான் நினைத்ததின்றி அதற்கு மாறாகித் துன்பமே உண்டாகும்.

கருத்து:

எக்காரியத்தையும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும்.

பாடல் : 155
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்! - கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண். . . . .[155]

பொருளுரை:

பருத்த தோளை உடைய சோழனது சினம் மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால் எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் - கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின் அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால்.

கருத்து:

நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாதகாரியம் ஒன்றில்லையாம்.

பாடல் : 156
'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க! - எங்கானும்
நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள். . . . .[156]

பொருளுரை:

எம்மிடத்து ஒரு பொருளும் இல்லை எமக்கோ சுற்றத்தாருமில்லை என்று நினைத்து ஒருவர் தம்மிடத்துவரும் பெருமையை அழிக்கக் கூடியனவற்றைச் செய்யாதொழிக எங்கே பிறந்தவர்க்காயினும் மிகவும் முன்கை நீளமாக உடையவர்கட்கு தோள்கள் மிகவும் திரட்சியுற்றுப் பெரியனவா யிருக்கும்.

கருத்து:

பெருமையை அழித்தற் குரியனவற்றைத் தாம் செய்யாதிருக்க வேண்டும். அதனால் மிக்க புகழ் உண்டாகும்.

பாடல் : 157
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார். . . . .[157]

பொருளுரை:

நிலத்தின்கண் வாழ்வதற்கு மிகுதியாகிய பெரிய செல்வத்தை விரும்பி நன்மை மிகுந்த அரசர்களுள் நல்லோர் ஒருவரை அடைந்து (அங்குத் தங்கியிராமல்) நிலத்து நிலைகொள்ளா காலர் - ஓரிடத்தும் தங்குதலைக் கொள்ளாத கால்களை உடையவர்கள் ஆராயுமிடத்து உலக்கை மேலுள்ள காக்கை என்று கூறப்படுவார்கள்.

கருத்து:

அறிவிலார் ஒருவரிடத்திலும் ஒரு தொழிலிலும் நிலைபெறாது வருதலால் நன்மையைப் பெறமாட்டார்கள்.

பாடல் : 158
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும். . . . .[158]

பொருளுரை:

மேற்கொண்ட தமது செயலை தாம் சோம்பல் கொண்டு நடத்தி முடிக்கும் உறுதியைவிட்டு செருக்கில் மிகுந்து ஓடித்திரியின் தாம் மேற்கொண்ட அச்செயல் மிகவும் சிதைந்து தன்னைச் செய்வதாக மேற்கொண்டவனிடத்தில் தவ்வையை அறிமுகப்படுத்தும்.

கருத்து:

முயற்சி இல்லதானை மூதேவி அடைவாள்.

பாடல் : 159
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார்,
'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,
செல் நீர் அருவி மலை நாட! - பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ. . . . .[159]

பொருளுரை:

பரந்து செல்கின்ற அருவியை உடைய மலைநாடனே! தம்மால் முடிக்கலான தொரு செயலை தாம்செய்து முடிக்கமாட்டாதவராய் பிறகு வேறொருவரால் செய்வித்துக் கொள்வோம் என்று சோம்பியிருத்தல் வெந்நீரினும் குளியாதார் தீயின்கண் பாய்வார்களோ? (இல்லை. அதுபோல அதுவுமில்லையாம்.)

கருத்து:

தம்மால் முடியும் செயலைத் தாமே செய்தல் வேண்டும்.

பாடல் : 160
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று,
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது. . . . .[160]

பொருளுரை:

முழுதுலகத்தையும் முன்னே உண்டாக்கியவன் நமக்காக அல்லலையும் படைத்தான் என்று நினைத்து இஃது அவனாலேயே நீங்கும் போலுமென்று நினைத்து அவனையே தொழுதுகொண்டு முயற்சியின்றி யிருப்பின் துன்பம் நீங்குமோ? முன்னம் ஓலை பழுது எழுதினான் - முதலில் ஓலையைப் பழுதுபட எழுதியவன் தாம் குற்றம் செய்தவனாக அறிந்தபின் செய்த குற்றத்தைப் பாதுகாப்பதில்லை. (உடனே நீக்குவன் என்பதாம்.)

கருத்து:

துன்பம் தெய்வத்தால் வந்ததாயினும் அதனை நீக்க முயற்சி செய்க.

பாடல் : 161
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர். . . . .[161]

பொருளுரை:

முடிந்த செயலுக்கு முயற்சி செய்ய வேண்டுவதில்லை முடிவுறாது இடையே முறிந்த செயலுக்கு ஆக்கமில்லை (அவைபோல) குற்றமறச் செய்யவல்லதற்குச் செய்யும்பொழுது துன்பம் ஏற்படுதல் இல்லை உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயர்கள் இல்லையாதலால்.

கருத்து:

தம்மால் முடியுஞ் செயலை யாவருஞ் செய்க. அதனால் துன்பம் உண்டாகாது.