நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பழமொழி நானூறு
பதினெண் கீழ்க்கணக்கு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.

பழமொழி நானூறு


12. கீழ்மக்கள் இயல்பு

பாடல் : 090
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க
இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,
மன நல ஆகாவாம் கீழ். . . . .[090]

பொருளுரை:

மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும் தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல் கீழ்மக்கள் மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும் எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர்.

கருத்து:

கீழ்மக்கள் பெரியார்இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார்.

பாடல் : 091
'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;
கொக்கு ஆர் வள வயல் ஊர! - தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல். . . . .[091]

பொருளுரை:

மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே! சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ; (அதுபோல்) தகுதி உடையாரோடு பொருந்தி அவர் உறவினரைப்போல் நெருங்கி ஒழுகினார் (ஆதலால்) குணத்தினால் மிக்கவர் என்று அறிவிற் சிறியாரை பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார்.

கருத்து:

சிறியார் பெரியாரோடு இணங்கியிருப்பினும் அவரோ டிணங்கார் அறிவுடையோர்.

பாடல் : 092
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
மைந்து இறைகொண்ட மலை மார்ப! - ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு. . . . .[092]

பொருளுரை:

வலிமை தங்கிய மலைபோன்ற மார்பையுடையாய்! நத்தையாற் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? (ஆகா) (அதுபோல) தம்முடைய தொழில் திறமையுற நடாத்தும் தன்மையுடையார் செய்கின்ற செயல்கள் கொடுஞ்செயலை உடையாராகிய சினமுடையவர்களுக்குச் செய்தல் இயலுமோ? (இயலாது).

கருத்து:

மேன்மக்கள் செய்யும் காரியங்கள் கீழ்மக்களுக்குச் செய்ய இயலா.

பாடல் : 093
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. . . . .[093]

பொருளுரை:

பூத்தவிடத்தும் காய்க்கப்பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்கள் தாம் மிகுதியும் உளர் எருவிட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள. (அவைபோல) அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.

கருத்து:

பேதைக்கு அறிவு ஊட்டுதல் இயலாது.

பாடல் : 094
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க! - மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்; - ஆகாதே,
உண்டது நீலம் பிறிது. . . . .[094]

பொருளுரை:

ஆராய்ந்துவைத்த கருத்தும் உண்மையை அறியும் அறிவும் அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாதொழிக. நீலம் உண்டது பிறிது ஆகாது - நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல) மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான்.

கருத்து:

மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத்திருந்தார்.

பாடல் : 095
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்; - கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு. . . . .[095]

பொருளுரை:

தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால் நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி அவரை நம்பாதொழிக உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல) நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர்.

கருத்து:

தீயவரை நட்பாகக்கொண்டு ஒழுகுதல் கூடாது.

பாடல் : 096
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்; - நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம். . . . .[096]

பொருளுரை:

தினந்தோறும் கையின்கண் இருந்து வளர்ந்தாலும் காடைக்கு மனம் காட்டில் வசிப்பதிலேயே பொருந்தியிருக்கும். (அதுபோல) காட்டின்கண் வசிக்கும் வாழ்க்கையால் கொடிய தொழில்களைச் செய்கின்ற விலங்கொப்பாரை நாட்டின்கண்ணே தங்கவிடினும் நன்னெறியில் ஒழுகார்.

கருத்து:

கீழ்மக்கள் என்ன செய்யினும் திருந்தப்பெறார்.

பாடல் : 097
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்; - இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ! - மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன் கண். . . . .[097]

பொருளுரை:

பெரிய புன்னையது பூக்கள் புல்லிய புலால் நாற்றத்தைப் போக்கும் கடற்றுறையை உடையவனே! உண்ண விரும்புவது உண்ணப்படும் பொருளின் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதில்லை (அதுபோல) கொடிய தொழில்களைப் புரிவோராகிய கீழ்மக்கள் தம்மீது மிக்கபழிசேறலைப் பொருட்படுத்தார்.

கருத்து:

கீழ்மக்கள் பழிக்கு அஞ்சார்.

பாடல் : 098
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல், - எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப! - அகலுள் நீராலே
துடும்பல் எறிந்து விடல். . . . .[098]

பொருளுரை:

மணல் மேடுகளில் அடும்பின் பூக்கள் மலரும் கடல் நாடனே!' மிகுதியான பழிச்செயல்களை மிகவும் செய்தால் அது தீர்த்தற்குத் தக்கதனை அறியாராய் மீண்டும் பழிக்குரிய அச்செயல்களிலே சிறந்து விளங்குதல் ஊரினரால் அழிக்கப்பட்ட நீரில் ததும்புமாறு நீரை வாரி எறிந்து அதனால் மூழ்கிவிடுதலை ஒக்கும்.

கருத்து:

செய்த பழியை நீக்க அறியாது பின்னும் அது செய்தல் ஊர்வாரி நீரிலேபடிந்ததை ஒக்கும்.

பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி.

பாடல் : 099
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்
காணாக் களிக்கும், களி. . . . .[099]

பொருளுரை:

மாட்சிமையில்லாத பகைவர்களை எதிர்த்து நின்று தண்டிக்க முடியாதவர்கள் தம் பகைவரைப் பொருட்படுத்தாது பிறர் இகழ்ந்து கூறும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தவர்களைப் போன்று உணவாக உண்டு அதனால் அடையும் பயன் ஒரு சிறிதும் இல்லை யெனினும் கள்ளினைக்கண்ட அளவில் மகிழும் கீழ்மகன்.

கருத்து:

கீழ்மகன் கள்ளினைக் கண்ட அளவிலேயே மகிழ்வு எய்துவான்.

பாடல் : 100
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்,
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!
முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. . . . .[100]

பொருளுரை:

ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே! தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும் அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல் சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க அது முழம் நீளமாக நீளுவது போலும்.

கருத்து:

தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.

பாடல் : 101
அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;
கல்லாக் கயவர் இயல்போல்; - நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல். . . . .[101]

பொருளுரை:

(கீழ்மக்கள் வறுமையுற்ற இடத்து அது காரணமாகத் தீமையைச் செய்துண்பார்கள் செல்வம் உற்ற இடத்து செல்லும் நன்னெறியை அறியாதவர்களாகி அறத்தைக் கெடுத்து ஒழுகுவார் கல்லாத கீழ் மக்களுக்கு நன்மை என்பதில்லாததுபோல நரியினுக்கு உணவு பெறுகின்ற நல்லகாலமும் பெறாத பஞ்ச காலமும் இல்லை.

கருத்து:

கல்வியறிவில்லாத கயவர்கள் எக்காலமும் தீமையையே புரிந்தொழுகுவார்கள்.

பாடல் : 102
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?
ஊர் அறியா மூரியோ இல். . . . .[102]

பொருளுரை:

ஊரில் வாழ்பவர்களால் அறியப்படாத பொலி காளை இல்லை (அதுபோல) உண்மை ஞானம் உடையார் வாயால் சொல்லும் நற்குணம் உடைய சொற்களை மனத்துட் கொள்ளாது. கார் அறிவு கந்து ஆ(க) - அஞ்ஞானத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு தீய செயல்களைச் செய்தொழுகுவோரை அவரது பேரினை அறியாதவர்களாகிய அறிவிலிகள் யாவர் உலகத்துளர். (இல்லை.)

கருத்து:

கயவர் எல்லோராலும் அறியப்படுவர்.

பாடல் : 103
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;
மரம் பயில் சோலை மலை நாட! - என்றும்
குரங்கினுள் நன் முகத்த இல். . . . .[103]

பொருளுரை:

மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை; (அதுபோல) நிரந்து வழிவந்த - பெருகி வழிவழியாகவந்த தீயகுணமுடையாரெல்லாருள்ளும் பெருக ஆராய்ந்து ஒருவரைத் தேறும்பொழுது நல்ல குணமுடையார் காணப்படார்.

கருத்து:

கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார்.

பாடல் : 104
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல், - யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்! - தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டு விடல். . . . .[104]

பொருளுரை:

யாழிசையைப் போன்ற இனிமையான மழலைச் சொல்லை உடையாய்! முறைப்படியே தமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டு பயன்படாத கீழ்மக்களைத் தம்மோடு மிகுதியும் சேர்த்தல் தேன் நிறைந்த பலாமரத்தை வெட்டி அவ்விடத்தில் எட்டி மரத்தை வைத்து நீர் முதலியன கொண்டு வளர்த்து விடுதலோடொக்கும்.

கருத்து:

கீழ்மக்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுதல் துன்பத்திற் கேதுவாம்.

பாடல் : 105
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல், - பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர்! - அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு. . . . .[105]

பொருளுரை:

பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே! அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை விரும்பி அறிவிற் சிறியார்க்குச் செய்தல் அச்செயலன்றோ யானைமேல் இடவேண்டிய கல்லணையை இழிந்த நாயின்மீது இட்டதை ஒக்கும்.

கருத்து:

பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச் செய்தலாகாது.

பாடல் : 106
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி. . . . .[106]

பொருளுரை:

துன்பம் நீங்குமாறு மிகவும் அன்பு செய்து குற்றம் அற்றவைகளைச் செய்யாதவராய் செல்வத்தால் மிகப்பெருகி வாழ்ந்தாலும்; மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத கூதறைகள் - குற்றம் அற மாட்சிமைப்பட்ட மனமுடையராகாத கூளங்கள் நற்குடியிற் பிறந்தவராகார்.

கருத்து:

கீழ்மக்கள் செல்வம் பெறினும் மனத்தூய்மையிலராகலின் உயர்குடியிற் பிறந்தாரை ஒவ்வார்.