மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மதுரைக்காஞ்சி


மன்னனை வாழ்த்துதல்

பாடல் வரிகள்:- 753 - 782

களந் தோறும் கள் ளரிப்ப
மரந் தோறு மை வீழ்ப்ப
நிண வூன்சுட் டுருக் கமைய . . . .[755]

நெய் கனிந்து வறை யார்ப்பக்
குரூஉக் குய்ப்புகை மழை மங்குலிற்
பரந்து தோன்றா விய னகராற்

பொருளுரை:

பாராட்டு, விருது, பரிசு - இவையெல்லாம் அரண்மனையில் வழங்கப்பட்டன. பரிசு பசியாற்றுமா? இதோ! மதுரை நகரத்துக்குள் ஆங்காங்கே உணவு விருந்து. களம் கண்ட இடங்களிலெல்லாம் கள் விருந்து. மரம் கண்ட இடங்களிலெல்லாம் மை என்னும் வெள்ளாட்டுக் கடாக்கறி சமைத்த விருந்து. பாறை கண்ட இடங்களிலெல்லாம் நெய் வழிய வழியச் சுட்டுத் தரும் நிணவூன் விருந்து. கட்டிய வீடு இருக்கும் இடங்களிலெல்லாம் மழை மேகம் போலப் புகை எழும்பச் சமைத்துத் தரும் உணவு விருந்து. இப்படித்தான் மதுரை நகரம் விளங்கியது.

பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய . . . .[760]

தொல் லாணை நல் லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி . . . .[765]

பொருளுரை:

இவர்களை ஒன்றுதிரட்டித் தமிழாய்ந்து, தமிழ் வளர நல்வேள்வி செய்தவன் நிலந்தரு திருவின் நெடியோன். தமிழ் வளர்க்கும் நல்வேள்விக்கு இவன் நிலக்கொடை வழங்கினான். இந்த நிலக்கொடையால் இவன் ‘நிலந்தரு திருவின் நெடியோன்’ என்று சிறப்பிக்கப்பட்டான். இந்தத் தமிழ்க்கொடை வியக்கத் தக்க பெருமை கொண்டது. சான்றாண்மை மிக்கது. செம்மையானது. பலர் வாயாலும் புகழப்படுவது. புகர் என்னும் குற்றம் கரும்புள்ளிக் குற்றம் இல்லாத்து. நிலந்தரு திருவின் நெடியோன் போல நீ (நெடுஞ்செழியன்) நல்வேள்வி செய்து சிறப்புடன் திகழ வேண்டும் இது மாங்குடி மருதனாரின் வாழ்த்து

அரிய தந்து குடி யகற்றிப்
பெரிய கற் றிசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் . . . .[770]

பொருளுரை:

இதுவும் மாங்குடி மருதனாரின் வாழ்த்து தருபவை அரிய பொருள்களாக இருக்க வேண்டும் குடிமக்களின் வளத்தை விரிவு படுத்துவதாக இருக்க வேண்டும் அரிய பெரிய செய்திகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் புகழ் ஒளி உன்மீது வீச வேண்டும் கடலில் தோன்றும் ஞாயிறு போல் இளவெயில் வீசவேண்டும் பல மீன்களிடையே விளங்கும் திங்கள் போல் தண்ணொளி தரவேண்டும் நீ திங்கள் போலவும் உன் சுற்றம் விண்மீன்கள் போலவும் திகழ வேண்டும்.

பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்

பொருளுரை:

நெடுஞ்செழியனின் படைத்தலைவன் மாறன். இவனை மாங்குடி மருதனார் ‘பெரும்பெயர்’ பெற்றவன் என்று குறிப்பிடுகிறார். பொதுவாக மார்பில் மாலையுடன் தோற்றமளிக்கும் இவன் நெடுஞ்செழியனுக்கு, முன்பே இருந்த புகழை நிலைநாட்டியவன். இந்த மாறன் நெடுஞ்செழியனின் படைத்தலைவன். இவன் தலைமையில் கோசர் படை ஒடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட கோசர் நெடுஞ்செழியன் சொன்னபடியெல்லாம் நடந்துகொண்டனர். ‘இளம்பல் கோசர்’ என்று பெயர் பெற்றிருந்த இவர்கள் நெடுஞ்செழியனின் வாய்மொழிக்கிணங்க நடந்துகொண்டதால் ‘வாய்மொழிக் கோசர்’ என்றும் சிறப்பிக்கப்படலாயினர்.

பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த . . . .[775]

மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறகும் துவன்றிப்
பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த

பொருளுரை:

ஐவரும், குறுநில மன்னரும் கூடியிருந்து பாண்டியன் நெடுஞ்செழியனைப் புகழ்ந்து வாழ்த்தினர். பொலம்பூண் ஐவர் - விளக்கம் செழியன், கூடற்கோமான், தென்னவன், வேம்பின் தாரோன், வழுதி, குமரிச் சேர்ப்பன், வைகையந் துறைவன், மாறன், பொதிய வெற்பன், மீனவன், கைதவன், பஞ்சவன், கௌரியன் - என்பன பாண்டியனைக் குறிக்கும் என்று சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. இவற்றில் பஞ்சவன் என்பது நெடுஞ்செழியனைப் புகழ்ந்த பொலம்பூண் ஐவரோடு தொடர்புடையது. ஐவர் என்னும் சொல் சங்கப் பாடல்களில் பஞ்ச பாண்டவரைக் குறிப்பதாகவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் பஞ்சவரைத் துன்புறுத்திய கௌரியர் பெயரும் பாண்டியனைக் குறிப்பதாகவே அமைந்திருப்பதுதான். பாண்டியனோடும், முருகனோடும், திருமாலோடும் தொடர்பு படுத்திக் காட்டப்பட்டுள்ள ‘ஐவர்’ என்னும் சொல் பஞ்ச பாண்டவரைக் குறிக்கவில்லை. ‘பொலம்பூண் ஐவர்’ என்று மதுரைக்காஞ்சியில் வரும் தொடரிலுள்ள ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியைத் தொகுத்துப் பார்க்கும்போது தெரியவரும் செய்திகளையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. எழினி, சென்னி, திரையன், நன்னன், எவ்வி, வளவன், முருகன், திருமால் - ஆகியோர் ‘பொலம்பூண்’ என்னும் அடைமொழியுடன் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் பொலம்பூண் மன்னர் பலர் என்று குறிப்பிடும் பாடலும் உள்ளது. இவற்றில் கடவுளர் பெயரையும், சோழரைக் குறிக்கும் இரண்டு பெயர்களில் ஒன்றையும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், 1. தகடூர் அதியமான் மகன் எழினி, 2. பாழி அரசன் நன்னன், 3. காஞ்சி அரசன் திரையன், 4, நாகை அரசன் எவ்வி, 5, சோழர்களில் ஒருவன் -ஆகியோர் பாண்டியனைப் புகழ்ந்த ஐவர் என்று தெரியவரும்.

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் . . . .[780]

மகிழ்ந்தினி துறைமதி பெரும்
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே. . . .[753 - 782]

பொருளுரை:

மகளிர் பொற்கிண்ணத்தில் தரும் தேறலை உண்டுகொண்டு நீ உன் வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழவேண்டும் மணமகளிருடன் வாழ்க வென்ற புகழையும் வழங்கிய புகழையும் சொல்லிச் சொல்லி வாழ்த்திய புலவர் இங்கு மனைவி மக்களுடன் மகிழ்ந்து வாழ்க என்று வாழ்த்துகிறார். தேறல் என்பது தெம்பு தரும் கள். மயக்கம் தரும் கள் வேறு. மகளிர் தேறல் ஊட்ட மகிழ்ந்து இனிது அருந்துக. மணம் கமழ் தேறல் அருந்துக. பொன் கிண்ணத்தில் ஊட்ட அருந்துக. அணி விளங்கும் அழகியர் ஊட்ட அருந்துக. உன் வாழ்நாள் வரையறுக்கப்பட்டது. அந்த வாழ்நாள் முழுவதும் மகிழ்வோடு இனிது வாழ்க.