மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
பாடல் வரிகள்:- 728 - 747
மாதாங் கெறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய இட்டுவாய்க் கிடங்கின் . . . .[730]
நல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவில கறங்க
எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத் தொழிய . . . .[735]
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யார் என்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து . . . .[740]
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கணநிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் . . . .[745]
பெருற்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோருந் தம்மென . . . .[728 - 747]
மாதாங் கெறுழ்த்தோண் மறவர்த் தம்மின்
கல்லிடித் தியற்றிய விட்டுவாய்க் கிடங்கி . . . .[730]
னல்லெயி லுழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரச மோவில கறங்க
வெரிநிமிர்ந் தன்ன தானை நாப்பட்
பெருநல் யானை போர்க்களத் தொழிய . . . .[735]
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை
நீர்யா ரென்னாது முறைகருதுபு சூட்டிக்
காழ்மண் டெஃகமொடு கணையலைக் கலங்கிப்
பிரிபிணை யரிந்த நிறஞ்சிதை கவயத்து . . . .[740]
வானத் தன்ன வளநகர் பொற்ப
நோன்குறட் டன்ன வூன்சாய் மார்பி
னுயர்ந்த வுதவி யூக்கலர்த் தம்மி
னிவந்த யானைக் கணநிறை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியற் . . . .[745]
பெருஞ்செ யாடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக வேனோருந் தம்மென
பொருளுரை:
அம்பு ஏந்திய மார்பினர்- கோட்டை வெற்றியில் புண் பட்ட செல்வர் தன் யானை வீழ்ந்த பின்னரும் தாக்கி வென்ற குரிசிலர் பேருதவி புரிந்த ஊக்கத்தார் யானை கவர்ந்துவந்த பெருஞ்செய் ஆடவர் மற்றும் பிறர் ஆகியோருக்கெல்லாம் அவைக்கு வந்ததும் முதல் பணியாக விருது வழங்கிச் சிறப்பு செய்தான். யாவரும் வருக. அழைக்கப்படாத ஏனோரும் வருக. யான் அழைக்காவிட்டாலும் தாமே வருக. - என்று வரவேற்றுச் சிறப்புச் செய்தான். மறவர்- பகைவரின் வில்லைக் கவர்ந்து, அவர்கள் முன்பு எய்த அம்புகளை மார்பிலே தாங்கி ‘மா’ என்னும் வெற்றித் திருமகளைத் தோளிலே சுமந்துகொண்டிருப்பவர்கள். எயில் உழந்த செல்வர் ‘இட்டுவாய்’ என்பது கிட்டம் ஆகும்படி சுட்ட செங்கல். அகழியானது, மேட்டு நிலத்தில் கல்லை உடைத்தும், பள்ள நிலங்களில் கிட்டமாக்கிய செங்கலை இட்டும் அமைக்கப் பட்டிருந்தது. அகழியை அடுத்து மதில். அகழியைத் தாண்டி மதிலில் ஏறும்போது துன்புற்ற வீரர் செல்வர். போர்முரசு - ‘கொல் ஏறு’ என்றது சிங்கத்தை. சிங்கத்தின் தோலை உரித்துச் சீவிப் பதப்படுத்தாமல் அப்படியே போர்த்திச் செய்யப்பட்டது. விழுமிய வீழ்ந்த குரிசிலர் - போர்முரசு முழங்கும்போது, பகைவரின் படைக்கு நடுவில் சென்று போரிடுகையில் தான் ஏறிவந்த யானை போரில் சாய்ந்தபோதும் அஞ்சாமல் போராடி விழுமிய வெற்றியைத் தேடித் தந்த அரச பரம்பரையைச் சேர்ந்த குரிசிலர். பொலம்பூந் தும்பை - பிறரது நாட்டை வெல்லச் செல்வோர் தும்பைப் பூ மாலையைத் தலையில் சூடிக்கொண்டு செல்வர். வெற்றிக்குப் பின் அரசன் அவர்களுக்குப் பொன்னால் செய்த தும்பைப்பூவை அணிவிப்பான். முறை கருதுபு சூட்டி - பொற்பூ அணிவிக்கும்போது விருது பெறுவோர் யார் என்று பார்க்காமல் போர்ச்சாதனையைத் தரவரிசை செய்து விருது வழங்குவான். உயர்ந்த உதவி ஊக்கலர் - இந்த உயர்ந்த பணியைச் செய்க என்று பிறருக்கு ஊக்கம் தந்துகொண்டு இருக்காமல், தாமே அதனை உதவியாகக் கருதிச் செய்து முடிப்பவர். நிறம் சிதை கவயம் - (ய=ச போலி) கவசத்தைத் துளைத்து நெஞ்சைச் சிதைத்த காயம். கணையலை - அலைபோல் வந்துகொண்டே இருக்கும் அம்பு அலை. காழ்மண்டு எஃகம் - ஆணி போடப்பட்ட கேடயம். பிரிபிணை அரிந்த நிறம் - பிரிந்து பிணைந்திருக்கும் எலும்புகள் அரிந்து காயம் பட்ட மார்பு. வளநகர் - வானம்போல் பரந்துகிடக்கும் அரண்மனை. இதனைப் பொலியச் செய்தவர் மார்பில் போர்த்தழும்பு பட்ட மறவர். ஊன்சாய் மார்பு - மார்புக் கூடு வலிமை மிக்க குறடு போல் கோக்கப்பட்டது. இதில் காயம் பட்டு ஊன்தசை தொங்கும் மார்பு. பெருஞ்செய் ஆடவர் - செய் என்றால் வயல். பெருஞ்செய் என்றால் போர்க்களம். போர்க்களத்து ஆடவர் படைவீரர்கள். இவர்கள் ஓங்கி உயர்ந்த யானைக் கணத்தைப் போர்க்களத்திலிருந்து கவர்ந்து வந்தவர்கள். சந்தனம் பூசிய மார்பில் பூமாலை அணிந்தவர்கள்.