மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மதுரைக்காஞ்சி

மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
பாடல் வரிகள்:- 062 - 074
நரை யுருமின் ஏற னையை
அருங் குழுமிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந் தோங்கிய நிரைப் புதவின் . . . .[65]
நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயி லருப்பந்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
நரையுருமி னேறனையை
யருங்குழுமிளைக் குண்டுகிடங்கி
னுயர்ந்தோங்கிய நிரைப்புதவி . . . .[65]
னெடுமதி னிரைஞாயி
லம்புமி ழயிலருப்பந்
தண்டாது தலைச்சென்று
கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற்
பொருளுரை:
இடியானது, பச்சை மரங்களை எரித்துத் தின்று பட்ட மரங்களாக்கும். பாறையாக உள்ள மலைகளையும் உதிரச் செய்யும். அதுபோல நெடுஞ்செழியன் பகைவர் பலரது கோட்டைகளைத் தகர்த்தான். பகைவரின் கோட்டை கடத்தற்கரிய காவற்காடுகளுக்கு இடையே இருந்தது. ஆழமான அகழிகள், மிக உயரத்தில் வீரர்கள் பதுங்கிக் கொள்ளும் புதவு, நீண்ட மதில், படைக்கருவிகளைப் பாதுகாக்கும் ஞாயில், மறைந்திருந்து அம்பெய்யவும் வேல் வீசவும் உதவும் அருப்பம் முதலானவற்றைக் கொண்டிருந்தது, பகைவரின் கோட்டை. இப்படிப்பட்ட இடங்களிலெல்லாம் நெடுஞ்செழியனின் படை தடையின்றி உள்ளே சென்று கோட்டையைத் தனதாக்கிக் கொண்டது. இது அவனது விழுமிய சிறப்புகளுள் ஒன்று.
குண குட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்ற மொடு வெறுத் தொழுகிய
கொற்ற வர்தங் கோனா குவை . . . .[62 - 74]
குணகுடகட லாவெல்லைத்
தொன்றுமொழிந்து தொழில்கேட்ப
வேற்றமொடு வெறுத்தொழுகிய
கொற்றவர்தங் கோனாகுவை
பொருளுரை:
தெற்கில் குமரிமுனை, வடக்கில் வேங்கடமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல், இந்த எல்லைப் பகுதிக்குள் ஆண்ட மன்னர்கள் அனைவரும் வழிவழியாகத் தனது ஆணைக்குட்பட்டு நடக்கும்படி செய்த அரசர்க்கரசன் நெடுஞ்செழியன். வெற்றம் = வெறுப்பு, வேறு வழி இல்லையே என்னும் வெறுப்போடு இவனுக்கு அடிபணிந்து ஒழுகினர். கொற்றம் = பிறர் பணியும் வெற்றி.