பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

குறுந்தொகை நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

அகநானூறு அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் இதில் நானூறு பாடல்கள் அடங்கியுள்ளதால் இது அகநானூறு என வழங்கப்படுகிறது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும்.
எட்டுச் சேர மன்னர்களின் வரலாறு.

சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவருமே அந்த 8 பேர்.

வகை

இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.

காலம்

இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்கவாய்ப்பில்லை.

பதிற்றுப்பத்துப் பதிகங்கள்

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்கு கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரிய நடையில் உள்ளது. இந்த பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழமன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப்பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன. முதன் முதலாக கி.பி.989ல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.[2] பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்துப் பதிகங்களை கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும், மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துக்களின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும், அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி வரி அடுத்த பாட்டின் முதல் வரியாக வருவதே அந்தாதியாகும். ஏடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி வரி போர்மிகு குருசில்நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32 வது பாடல் முதல் வரி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்

1. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் (58 ஆண்டுகள்)
2. இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25 ஆண்டுகள்)
3. இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25 ஆண்டுகள்)
4. இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55 ஆண்டுகள்)
5. இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38 ஆண்டுகள்)

கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்

6. செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25 ஆண்டுகள்)
7. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17 ஆண்டுகள்)
8. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16 ஆண்டுகள்)

கடவுள் வாழ்த்து
எரி எள்ளு அன்ன நிறத்தன், விரி இணர்க்
கொன்றைஅம் பைந் தார் அகலத்தன், பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன், பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன், நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன், குறங்கு அறைந்து

வெண் மணி ஆர்க்கும் விழவினன், நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன், இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற் தகையன், ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன், களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன், தேறிய

சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்கமா, வலனே!
முதற்பத்து

கிடைக்கவில்லை


இரண்டாம் பத்து

பாடினோர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டோர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

பதிகம்

மன்னிய பெரும் உகழ், மறு இல் வாய்மொழி,
இன் இசை முரசின், உதியஞ்சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்-
அமைவரல் அருவி இமையம் விற் பொறித்து,
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத் . . . .[05]

தன்கோல் நிறீஇ, தகை சால் சிறப்பொடு
பேர் இசை மரபின் ஆரியர் வணக்கி,
நயன் இல் வன் சொல் யவனர்ப் பிணித்து,
நெய் தலைப் பெய்து, கை பிற் கொளீஇ,
அரு விலை நன்கலம் வயிரமொடு கொண்டு, . . . .[10]

பெரு விறல் மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்-
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க்கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

புண் உமிழ் குருதி, மறம் வீங்கு பல் புகழ், பூத்த நெய்தல், சான்றோர் மெய்ம்மறை, நிரைய வெள்ளம், துயில் இன் பாயல், வலம் படு வியன் பணை, கூந்தல் விறலியர், வளன் அறு பைதிரம், அட்டு மலர் மார்பன்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரம தாயம் கொடுத்து, முப்பத்து எட்டு யாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகம் கொடுத்தான் அக் கோ. இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்து எட்டு யாண்டு வீற்றிருந்தான்.

மூன்றாம் பத்து

பாடினோர்: பாலைக் கௌதமனார்
பாடப்பட்டோர்: பல் யானைச் செல்கெழு குட்டுவன்

பதிகம்

இமையவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தன் கோல் நிறீஇ,
அகப்பா எறிந்து, பகல் தீ வேட்டு,
மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇ,
கண் அகன் வைப்பின் மண் வகுத்து ஈத்து, . . . .[05]

கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி,
இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி,
அயிரை பரைஇ, ஆற்றல் சால் முன்போடு
ஒடுங்கா நல் இசை, உயர்ந்த கேள்வி,
நெடும்பாரதாயனார் முந்துற, காடு போந்த . . . .[10]

பல் யானைச் செல்கெழு குட்டுவனைப்
பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

அடு நெய் ஆவுதி, கயிறு குறு முகவை, ததைந்த காஞ்சி, சீர் சால் வெள்ளி, கான் உணங்கு கடு நெறி, காடு உறு கடு நெறி, தொடர்ந்த குவளை, உருத்து வரு மலிர் நிறை, வெண் கை மகளிர், புகன்ற ஆயம்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

'நீர் வேண்டியது கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினார். இமயவரம்பன் தம்பி பல் யானைச் செல் கெழு குட்டுவன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

நான்காம் பத்து

பாடினோர்: காப்பியாற்றுக் காப்பியனார்
பாடப்பட்டோர்: களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின் . . . .[05]

பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன் படு வாகை முழுமுதல் தடிந்து,
குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப, . . . .[10]

செருப் பல செய்து, செங்களம் வேட்டு,
துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

கமழ் குரற் துழாய், கழை அமல் கழனி, வரம்பு இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை, வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக் கோ. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

ஐந்தாம் பத்து

பாடினோர்: பரணர்
பாடப்பட்டோர்: கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்

பதிகம்

வடவர் உட்கும் வான் தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேரலாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி,
கான் நவில் கானம் கணையின் போகி, . . . .[05]

ஆரிய அண்ணலை வீட்டி, பேர் இசை
இன் பல் அருவிக் கங்கை மண்ணி;
இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு;
மாறா வல்வில் இடும்பிற் புறத்து இறுத்து;
உறு புலி அன்ன வயவர் வீழ, . . . .[10]

சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி;
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து;
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் . . . .[15]

பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி; வெந் திறல்
ஆராச் செருவின் சோழர் குடிக்கு உரியோர்
ஒன்பதின்மர் வீழ, வாயில் புறத்து இறுத்து;
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, . . . .[20]

கெடல் அருந் தானையொடு
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை,
கரணம் அமைந்த காசு அறு செய்யுட்
பரணம் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

சுடர் வீ வேங்கை, தசும்பு துளங்கு இருக்கை, ஏறா ஏணி, நோய் தபு நோன் தொடை, ஊன் துவை அடிசில், கரை வாய்ப் பருதி, நல் நுதல் விறலியர், பேர் எழில் வாழ்க்கை, செங்கை மறவர், வெருவரு புனல் தார்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

உம்பற் காட்டு வாரியையும், தன்மகன் குட்டுவன் சேரலையும், கொடுத்தான் அக் கோ. கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.

ஆறாம் பத்து

பாடினோர்: காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்
பாடப்பட்டோர்: ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்

பதிகம்

குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, . . . .[05]

வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,
மன்னரை ஓட்டி,
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் . . . .[10]

ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.

ஏழாம் பத்து

பாடினோர்: கபிலர்
பாடப்பட்டோர்: செல்வக் கடுங்கோ வாழியாதன்

பதிகம்

மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடு நுண் கேள்வி அந்துவற்கு ஒரு தந்தை
ஈன்ற மகள், பொறையன் பெருந்தேவி, ஈன்ற மகன்,
நாடு பதி படுத்து, நண்ணார் ஓட்டி,
வெருவரு தானை கொடு செருப் பல கடந்து, . . . .[05]

ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி,
மாய வண்ணனை மனன் உறப் பெற்று, அவற்கு
ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து,
புரோசு மயக்கி, . . . .[10]

மல்லல் உள்ளமோடு மாசு அற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

புலா அம் பாசறை, வரைபோல் இஞ்சி, அருவி ஆம்பல், உரைசால் வேள்வி, நாள் மகிழ் இருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண் கெழு ஞாலம், பறைக் குரல் அருவி; இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

சிறுபுறம் என நூறாயிரம் காணம் கொடுத்து, 'நன்றா' என்னும் குன்று ஏறி நின்று, தன் கண்ணிற் கண்ட நாடு எல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ. செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

எட்டாம் பத்து

பாடினோர்: அரிசில்கிழார்
பாடப்பட்டோர்: தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

பதிகம்

பொய் இல் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர் கூர் மீமிசை,
பல் வேல் தானை அதிகமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன்நிலை வென்று, . . . .[05]

முரசும் குடையும் கலனும் கொண்டு,
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு,
துகள் தீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய
அருந் திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை . . . .[10]

மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

குறுந் தாள் ஞாயில், உருத்து எழு வெள்ளம், நிறம் திகழ் பாசிழை, நலம் பெறு திருமணி, தீம் சேற்று யாணர், மா சிதறு இருக்கை, வென்று ஆடு துணங்கை, பிறழ நோக்கு இயவர், நிறம் படு குருதி, புண்ணுடை எறுழ்த் தோள், இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

தானும் கோயிலாளும் புறம் போந்து நின்று, 'கோயில் உள்ள எல்லாம் கொண்மின்' என்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிற் கொடுப்ப, அவர், 'யான் இரப்ப, இதனை ஆள்க!' என்று அமைச்சுப் பூண்டார். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை பதினேழ் யாண்டு வீற்றிருந்தான்.

ஒன்பதாம் பத்து

பாடினோர்: பெருங்குன்றூர் கிழார்
பாடப்பட்டோர்: குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை

பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, . . . .[05]

பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி, . . . .[10]

மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, . . . .[15]

மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்:

நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்:

'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.

பத்தாம்பத்து

கிடைக்கவில்லை


பதிற்றுப் பத்துத் திரட்டு

பதிற்றுப்பத்தில் விட்டுப்போனவைகள்

1
இருங் கண் யானையொடு அருங் கலம் தெறுத்து,
பணிந்து, வழிமொழிதல் அல்லது, பகைவர்
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே-
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்தாங்குக்
கண் அதிர்பு முழங்கும் கடுங் குரல் முரசமொடு, . . . .[05]

கால் கிளர்ந்தன்ன ஊர்தி, கால் முளை
எரி நிகழ்ந்தன்ன நிறை அருஞ் சீற்றத்து,
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
நீர்துனைந்தன்ன செலவின்,
நிலம் திரைப்பன்ன தானையோய்! நினக்கே? . . . .[10]

[புறத் திரட்டு, பகைவயிற் சேறல், 8. தொல். புறத்திணை. சூ. 6, இளம்பூரணர் மேற்கோள்; சூ. 8, நச்சினார்க்கினியர் மேற்கோள்]

2
இலங்கு தொடி மருப்பின், கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும், வலம் படு குஞ்சரம்;
எரி அவிழ்ந்தன்ன விரி உளை சூட்டி,
கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல் இவுளி;
கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு . . . .[05]

ஊன் வினை கடுக்கும் தோன்றல, பெரிது எழுந்து,
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடுந் தேர்-
கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக்
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப,
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப, . . . .[10]

நெடு மதில், நிரை ஞாயில்,
கடி மிளை, குண்டு கிடங்கின்,
மீப் புடை ஆர்அரண் காப்புடைத் தேஎம்
நெஞ்சு புகல் அழிந்து, நிலை தளர்பு ஒரீஇ,
ஒல்லா மன்னர் நடுங்க, . . . .[15]
நல்ல மன்ற-இவண் வீங்கிய செலவே!

[தொல். புறத்திணை. சூ. 12,25 நச்சினார்க்கினியர் மேற்கோள்]

3
வந்தனென், பெரும! கண்டனென் செலற்கே-
களிறு கலிமான் தேரொடு சுரந்து,
நன்கலன் ஈயும் நகைசால் இருக்கை,
மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை; . . . .[05]

வேறு புலத்து இறுத்த விறல் வெந் தானையொடு
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து,
கடாஅ யானை முழங்கும்,
இடாஅ ஏணி நின் பாசறையானே. . . . .[10]

[புறத்திரட்டு, பாசறை. 8]

4
பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்
என்னொடு புரையுநளல்லள்,
தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே.

[தொல். கற்பு. சூ. 39, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]

5
'விசையம் தப்பிய .... ....
என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று.'

[தொல். புறத்திணை சூ. 20, நச்சினார்க்கினியர் மேற்கோள்.]

பாடிப் பெற்ற பரிசில்:

'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ. குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.