திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
குமரவேளின் பெருமை
குமரவேளின் பெருமை

முருகனைக் கண்டு துதித்தல்
பாடல் வரிகள்:- 250 - 277
முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ! . . . .(255)
ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ! . . . .(260)
மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! . . . .(265)
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! . . . .(270)
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! . . . .(275)
போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது, . . . .(250 - 277)
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
யைவரு ளொருவ னங்கை யேற்ப
வறுவர் பயந்த வாறமர் செல்வ . . . .[255]
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவிற் றானைத் தலைவ . . . .[260]
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ . . . .[265]
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்து மிசைபே ராள . . . .[270]
வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள்
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி . . . .[275]
போர்மிகு பொருந குரிசி லெனப்பல
யானறி யளவையி னேத்தி யானாது
பொருளுரை:
ஆங்காங்கே அவன் முந்துறக் கண்டால் அவன் புகழைச் சொல்லி ஏத்தவேண்டும். கையால் தொழுது பரவ்வேண்டும். அவன் காலில் விழுந்து வணங்கவேண்டும். இமயமலையில் நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில், ஐவருள் ஒருவராகிய வருணன் (இந்திரன் ?) தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள, முருகன் பிறந்தான். வானத்து விண்மீன்களில் கார்த்திகை மீனாக இணைந்து இடம் பெற்றிருக்கும் ஆறு மீன்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்.இப்படி ஆறாக அமர்ந்த செல்வனே! ஆங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய சிவபெருமானின் புதல்வனே! மலைமகளின் மைந்தனே! பகைவர்களின் கூற்றுவனே! வெற்றி தரும் கொற்றவையின் சிறுவனே! அணிச் சிறப்பினைக் கொண்ட பழையோளின் குழவியே! வானோர் வணங்கும் விற்படையின் தலைவனே! மணமாலை பூண்ட மார்பினை உடையவனே! எல்லா நூல்களையும் அறிந்த புலவனே! போரில் ஒருவனாகவே போரிட்டு வெற்றி காணும் மள்ள! அந்தணர்களின் செல்வமே! அறிவறிந்தோர் சொல்லின் மாலையாகித் திகழ்பவனே! காதல் மங்கையர்களுக் கெல்லாம் கணவன் ஆனவனே! வீர மைந்தர்களுக்கு ஏறு ஆனவனே! வேலேந்திய தடக்கையில் சால்பேந்திய செல்வனே! விந்த மலையைக்கொன்ற வெற்றியோடு விண்ணைத் தொடும் மலைக்கெல்லாம் தலைமை யுரிமை பெற்ற குறிஞ்சிக் கிழவ! பலரும் புகழும் நன்மொழிப் புலவர்க்கெல்லாம் ஏறே! இப்படி அரிய பல பேறுகளைப் பெற்றதால் முருகன் என்னும் பெரும்பெயர் பெற்று விளங்கும் பெரும்பெயர் முருக! விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளனே! துன்புறுவோருக்கு அளிசெய்து துன்பம் போக்குவதற்கென்றே கையில் கங்கணப் பொலம்பூண் பூண்டுள்ள சேயோனே! மற்போரில் வென்று ஆடும்போது பரிசில் வேண்டுவோரை யெல்லாம் மார்பில் தாங்கும் உதவியுருவம் கொண்டு உயர்ந்து நிற்கும் வேளே! பெரியோரெல்லாம் போற்றிப் புகழும் பெரும்பெயர் இயவுளே! சூரபத்மா என்னும் அச்சக்காரனை அழித்த போர்வீரனே! அறிவுத் தலைவனாகிய குரிசிலே! என்றெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் போற்றிப் புகழ்ந்து நிறைவடையாதவனாய் இருக்கிறேன். உன்னை அளந்தறிதல் உயிரினமாகிய எங்களுக்கு இயலாத ஒன்று. எனவே உனது அடியை நினைத்து நாடி வந்திருக்கிறேன். உனக்கு ஒப்பானவர் யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டு என் மனத்தில் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்த முயன்ற போது…