நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

பொருட்பால்

துறவறவியல்


பெரியாரைப் பிழையாமை

பாடல் : 011
பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; - வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது. 161

பொருளுரை:

ஒலிக்கும் அருவிகளை அணிகளாகக் கொண்ட மலைகள் மிக்க நாட்டையுடைய வேந்தனே! 'பொறுத்துக் கொள்வர்' என நினைத்து, மாசற்ற பெரியோரிடத்தும் அவர் வருந்தத்தக்க குற்றங்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் கோபித்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களை யாராலும் விலக்க இயலாது. ('சிறியோர் பெரும்பிழை செய்தனராயின், பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே' என்பது இங்குக் கருதத் தக்கது).

பாடல் : 012
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர். 162

பொருளுரை:

பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே! (அருமையான பெரியோர் தொடர்பு வாய்க்கப் பெற்றும் அவரைக் கொண்டு நன்மை பெறாமல் காலம் கழிப்பதும் பெரியாரைப் பிழைத்தலாம் என்பது கருத்து.)

பாடல் : 013
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார். 163

பொருளுரை:

அவமதிப்பும், மிக்க மதிப்பும் கிய இரண்டும் மேன்மக்களாகிய பெரியோர்களால் மதிக்கத்தக்கனவாகும். (கருதத்தக்கனவாகும்). ஒழுக்கமில்லாக் கீழ் மக்களின் பழிப்புரையையும், பாராட்டுரையையும் கற்றறிந்த பெரியோர்கள் ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். (உலகில் சான்றோர், ஏற்றமிகு செயல் கண்டு உள்ளத்தில் மதித்து மகிழ்வர். நிகழ்வன பொருத்த மற்றவையாயின் அவற்றை மதியாமல் விடுப்பர். எனவே பெரியோர் மதிக்க வாழ வேண்டும் என்பது கருத்து).

பாடல் : 014
விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின். 164

பொருளுரை:

படம் விரிக்கும் நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே இருந்தாலும், தொலைவில் எழும் இடியோசைக்கு அஞ்சும். அதுபோல மேன்மை மிக்க பெரியோர் சினம் கொள்வாரானால் தவறு செய்தவர் பாதுகாவலான இடத்தைச் சேர்ந்திருந்தாலும் தப்பிப் பிழைக்கமாட்டார்.

பாடல் : 015
எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று; - தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 165

பொருளுரை:

எம்மை நீர் அறியமாட்டீர்; எமக்கு நிகர் இவ்வுலகில் யாரும் இல்லை!' என்று நம்மை நாமே உயர்வாக மதிப்பது பெருமை ஆகாது! அறம் உணர்ந்த சான்றோர், நமது அருமையை உணர்ந்து 'பெரியோர்' என மதிப்பதே பெருமையாகும்.

பாடல் : 016
நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
விளியும் சிறியவர் கேண்மை; - விளிவின்றி
அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
தொல்புக ழாளர் தொடர்பு. 166

பொருளுரை:

பெரிய கடலின் குளிர்ந்த கரையையுடையவனே! சிறியோர் நட்பு, காலை நேரத்து நிழல்போல வர வரக் குறையும்; புகழ் மிக்க பெரியோர் நட்பு அவ்வாறு குறையாது மாலை நேரத்து நிழல்போல் மேலும் மேலும் வளரும்.

பாடல் : 017
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு. 167

பொருளுரை:

மன்னரின் செல்வத்தையும், மகளிரின் அழகையும் நெருங்கினவர்கள் துய்ப்பர்; அதற்குத் தகுதி ஒன்றும் வேண்டாம். எதுபோல் எனின், கிளைகள் நெருங்கித் தளிர் விட்டுத் தழைத்து இருக்கும் குளிர்ச்சியான மரங்களெல்லாம் தம்மிடம் வந்தடைந்தவர்களுக்கு நிழல் தருவது போல! (இங்கு மகளிர் என்பது பொது மகளிரைக் குறிக்கும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்ற வேறுபாடின்றி வந்தவரையெல்லாம் தம்மிடம் சேர்க்கும் மரங்கள் போலவும், பொது மகளிர் போலவும், மன்னர் - பெரியோரைச் சிறியாரோடு ஒருமிக்க சேர்த்தலும் பெரியாரைப் பிழைத்தலாகும் என்பது கருத்து).

பாடல் : 018
தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; - பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
கலவாமை கோடி யுறும். 168

பொருளுரை:

நீர் வளம் குன்றாத கழிக்கரையுடைய வேந்தனே! நன்மை தீமைகளை ஆராய்ந்து உணரும் தெளிவிலாரிடத்தும் நட்புக் கொண்டு பின் பிரிய நேர்ந்தால், அப்பிரிவு மிக்க துன்பத்தை உண்டாக்கும். ஆதலால் யாரிடத்தும் நட்புக் கொள்ளாமை கோடி பங்கு சிறந்ததாகும். (அற்பர் நட்பைப் பிரிதலே துன்பமானால் அறிவுடையோர் நட்பைப் பிரிதல் மிகத் துன்பமாகும். ஆதலால் யாரிடமும் நட்புக் கொள்ளாமையே நலம் என்பதாம். இதனால் பெரியாரைச் சேர்தலில் இருக்கும் நன்மையைச் சுட்டிக் காட்டி, அத்தகையோரிடம் பிழைத்தல் நல்லதன்று என்பது உணர்த்தப்பட்டது).

பாடல் : 019
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும்; - ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண். 169

பொருளுரை:

கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் வீணாகக் கழிந்த நாளும், கேள்வியின் காரணமாகப் பெரியோரிடத்தில் செல்லாமல் கழிந்த நாளும், இயன்ற அளவு பொருளை இரப்பார்க்குக் கொடாது கழிந்த நாளும் பண்புடையாரிடத்தில் உண்டாகாவாம். (இப்பாடலும் பெரியோர்பால் சேரும் நன்மையைக் காட்டி அவரிடம் பிழையாமை நன்று எனக் கூறுவதாகும்).

பாடல் : 020
பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின். 170

பொருளுரை:

பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். வீடு பேற்றை விரும்பும் மெய்ஞ்ஞானிகளுக்குரிய பண்பாவது மனம், மொழி, மெய்களின் அடக்கமுடையாம். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பெரியோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்).