நாலடியார்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

அறத்துப்பால்

துறவறவியல்


சினம் இன்மை

பாடல் : 061
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.

பொருளுரை:

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

பாடல் : 062
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.

பொருளுரை:

ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த காரியத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர், சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தைப் பொறுத்துத் தாங்காமல், அழியாச் சிறப்புடைய இனிய உயிரை விடுவரோ? (மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். முந்திக்குரிய உயிர் ஆதலின் அழியா உயிர் என்றார்).

பாடல் : 063
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

பொருளுரை:

ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்).

பாடல் : 064
நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

பொருளுரை:

மேலோர், தமக்கு நிகரில்லாதவர் தம்மை எதிர்த்து நன்மையற்ற தீய சொற்களைச் சொன்னால், அதற்காக மனம் புழுங்கிச் சினம் கொள்ளார். ஆனால் கீழ்மக்களோ, பிறர் கூறும் இழி சொற்களையே மனத்தில் நினைத்து நினைத்து, பிறரிடம் சொல்லிச் சொல்லி, மேலும் மேலும் சினம் அடைந்து ஆற்றாது துள்ளிக் குதித்து தூணில் முட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வர்.

பாடல் : 065
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.

பொருளுரை:

வாலிபப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும். நிறைந்த பொருள் இல்லாதவனது கொடையே பயனுள்ள கொடையாம். அவை போல, எல்லா எதிர்ப்புகளையும், வெல்லத்தக்க உடல் வலிமையும், உள்ள உறுதியும் உடையவன், சினத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமையே சிறந்த பொறுமை ஆகும்.

பாடல் : 066
கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.

பொருளுரை:

மந்திரித்து இட்ட திருநீற்றினால் உடனே சீற்றம் தணிந்து படம் அடங்கும் பாம்பைப் போல, தங்கள் உயர்குலப் பெருமையால் தடைசெய்யப்பட்டு, கல்லால் எறிந்தது போல் கீழ் மக்கள் வாயிலிருந்து வரும் சொற்களை, யாவரும் காண, பெரியோர் சினம் கொள்ளாது பொறுத்துக் கொண்டு நல்லொழுக்க நெறியிலே தமது அறிவைச் செலுத்துவர்.

பாடல் : 067
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.

பொருளுரை:

பகைவராக நின்று அப்பகைமைப் பண்புக்கேற்பக் காரியங்களைச் செய்யும்போது, தாமும் எதிர்த்துப் பகைமை கொள்ளாதவருடைய பொறுமையை, 'இயலாமையாகிய பலவீனம்' என்று கூறமாட்டார்கள், அறிஞர்கள். அப்பகைவர், தம் தீமையை அடக்கிக் கொள்ளாது மேலும் கொடுமைகள் செய்தாலும் தாம் அவர்களுக்குத் திருப்பித் தீங்கு செய்யாதிருத்தல் நல்லது.

பாடல் : 068
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.

பொருளுரை:

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது மேன்மேல் வளரும். ஆனால் புகழ் பெற்ற மேன் மக்களின் சினமானது, சுட வைக்கும் போது தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானாகவே தணியும். (இயல்பில் குளிர்ச்சியும், பிறர் சுடவைத்தால் வெம்மையும் நீர்க்கு இருப்பது போல் பெரியோர் குணத்திற்கும் உண்டு. பிறர் துன்புறுத்தும் வரை உள்ளம் சினம் கொண்டாலும், பிறர்க்கு யாதொரு துன்பமும் செய்யாது அச்சினம் தானே தணியும் என்பது கருத்து).

பாடல் : 069
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

பொருளுரை:

தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை.

பாடல் : 070
கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

பொருளுரை:

சினம் கொண்டு நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், அதற்குப் பதிலாகத் தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்லை! அதுபோல, தகுதியின்றி, கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ? சொல்லமாட்டார்கள்.