சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல்
பாடல் வரிகள்:- 221 - 235
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, . . . .[225]
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு, தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி ஆனாது . . . .[221 - 230]
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் . . . .[225]
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொள் ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது . . . .[230]
பொருளுரை:
நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் மீட்டுங்கள். பல இசைக்கருவிகளும் ஒத்தியங்க மீட்டுங்கள். ஏழு பண்களில் முதல் பண்ணாகிய குரல் பண்ணில் தொடங்கி வாயிலிருந்து பாடிவரும் குரலிசைக்கு ஏற்ப யாழ் மீட்டிப் பண் பாடுங்கள்.
பாடிப்பாடிப் பண்ணின் துறைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள் நீங்கள். இசைநூல்களில் கூறப்படும் மரபுப்படி பாடுபவர்கள் நீங்கள். உங்களிடம் உள்ளது பண்ணின் பயன் தெரிந்த கேள்வி. (யாழ்) கேள்வியாழ் ஊகக் குரங்கு போலவும், யாழில் கட்டப்பட்டுள்ள நரம்பு அக்குரங்கு பிடித்திருக்கும் பாம்பு போலவும் காணப்படும்.
பாம்பின் தலையும் வாலும் வெளியில் நீட்டுக் கொண்டிருக்கும்படி குரங்கு யாழைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, யாழில் கட்டியிருக்கும் நரம்பு மேலும் கீழும் அவிழ்ந்திருக்கும். யாழ் வளைவின் உள்பகுதி யாழுக்கு வயிறு.
அதன் அகலப் பகுதியில் குமிழம் பழம் போல் நரம்பைக் கட்டியிருக்கும் திருகாணிகள் இருக்கும். அந்த ஆணிகள் யாழில் திருகப்பட்டிருக்கும் துளைப்பகுதியில் நீலநிற மணிகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது போன்ற துளைவட்டங்கள் இருக்கும்.
இத்தகைய வனப்புள்ள யாழைப் போர்த்தியிருக்கும் பச்சை நிறப் போர்வையில் புகழத்தக்க கைவினை வேலைப்பாடுகள் பொதிந்திருக்கும். தாயின் முலைநரம்புகளில் அமிழ்தம் பொதிந்திருக்கும். குழந்தைக்கு இலிற்றும் அமிழ்தம் ஒருவகை.
கணவனுக்கு இலிற்றும் அமிழ்தம் ( தேன் ) மற்றொரு வகை. அதுபோல அடங்கிச் சுருண்ட யாழின் நரம்புகளிலிருந்து அமிழ்தம் இலிற்றும். மேலும் இந்த அமிழ்தத்தில் தேனும் கலக்கப்பட்டிருக்கும். குரலிசைக்கு ஏற்பக் குரல் பண்ணிசையில் தொடங்கிப் பாடுங்கள்.
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை மாசில் . . . .[231 - 235]
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசிற் . . . .[235]
பொருளுரை:
அவன் முன் நீங்கள் பாடும்போது இயல்பாகவே உள்ள அவனது பண்புகளைப் பாராட்டிச் சில சொற்களைக் கூறுவீர்கள். முதியோரை வணங்க மொட்டுப்போல் மூடிக் கும்பிடும் கையையுடையவனே! இளையோரைத் தழுவுவதற்காக மலர்ந்து விரியும் மார்பினை உடையவனே! உழவர்களுக்கு நிழல் தரும் செங்கோலை உடையவனே! தேர்ப்படை எதிரிகள் முன் அழல் கக்கும் வேலினை உடையவனே! இப்படி ஒருசில சொல்லத் தொடங்கும் போதே அவன் கொடை நல்கத் தொடங்கிவிடுவான்.








