சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
வேலூர் வளமும் எயினர் விருந்தும்
பாடல் வரிகள்:- 164 - 177
கரு நனைக் காயா கண மயில் அவிழவும், . . . .[165]
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் . . . .[170]
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் . . . .[165]
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரற் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவும்
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் . . . .[170]
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
பொருளுரை:
எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி.
கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.
வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும்.
கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும்.
பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு.
அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது.
(உத்தராயணம்) திறல் வேலால் கேணி தோண்டியும், விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்..................
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு, . . . .[175]
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் . . . .[164 - 177]
யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு . . . .[175]
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
பொருளுரை:
வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும்.
வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.








