சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


நல்லியக்கோடனின் ஊர்ச்சிறப்பும் அதன் அண்மையும்

பாடல் வரிகள்:- 196 - 202

எரி மறிந்தன்ன நாவின், இலங்கு எயிற்றுக்
கரு மறிக் காதின், கவை அடிப் பேய் மகள்,
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, . . . .[200]

நீறு அடங்கு தெருவின், அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று, சிறிது நணியதுவே . . . .[196 - 202]

பொருளுரை:

நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும், வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும், பிளவுபட்ட கால்களையும் உடைய பேய் மகள், இறந்தவர்களின் கொழுப்பை உண்டு விட்டு ஒளியுடைய பற்களுடன் சிரித்த தோற்றம் போல இருந்தது, பிணங்களைப் பெரிய காலினால் உதைத்துச் சிவந்த நிறத்தைப் பெற்ற நகங்களையுடைய களிற்று யானைகளின் தோற்றம். தலைமையுடைய இந்த யானைகளின் வடியும் மதம், தூசியை அடக்க, புழுதி அடங்கின தெருக்களையுடைய நல்லியக்கோடனின் விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர், தொலைவில் இல்லை. சிறிது அண்மையில் தான் உள்ளது.

சொற்பொருள்:

எரி மறிந்தன்ன நாவின் - நெருப்பு சாய்ந்ததை ஒத்த நாக்கினையும், இலங்கு எயிற்று - ஒளியுடைய பற்களையும், கருமறிக் காதின் - வெள்ளாட்டுக் குட்டிகளை அணிந்த காதுகளையும், கவை அடிப் பேய் மகள் - பிளவுபட்ட கால்களையுடைய பேய் மகள், நிணன் உண்டு - இறந்தவர்களின் கொழுப்பை உண்டு (நிணன் - நிணம் என்பதன் போலி), சிரித்த தோற்றம் போல - சிரிக்கும் பொழுது தோன்றுவதைப் போல, பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள் - பிணங்களைக் காலால் உதைத்துச் சிவந்த பெரிய நகங்களையுடைய பெரிய கால்கள் (பிணன் - பிணம் என்பதன் போலி), அண்ணல் யானை - தலைமையுடைய யானை, அருவி - வடியும் மதம், துகள் அவிப்ப- தூசியை அடக்க, நீறு அடங்கு தெருவின் - புழுதி அடங்கின தெருக்களையுடைய, அவன் - நல்லியக்கோடன், சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று - விழாக்கள் கொண்டாடப்படும் பழமையான ஊர் தொலைவில் இல்லை, சிறிது நணியதுவே - சிறிது அண்மையில் உள்ளது