சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

ஆமூர் வளமும் உழத்தியரின் உபசரிப்பும்
பாடல் வரிகள்:- 178 - 195
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து, . . . .[180]
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல்,
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாட் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்,
மதி சேர் அரவின் மானத் தோன்றும், . . . .[185]
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து . . . .[180]
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்றும் . . . .[185]
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
பொருளுரை:
நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போலப் பூக்களைக் கொண்ட கிளைகளையும் குறிய தாளினையுமுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறி, எல்லாக் காலத்திலும் நிலையாக இருத்தல் அரிதாகிய உள்ள குளத்தின்கண் கூர்ந்து நோக்கி, புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த நீலமணியைப் போன்ற வாயை உடைய கிச்சிலியின் (kingfisher bird) பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலையையும், முள்ளுடைய தண்டினையுடைய தாமரையின் அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில், தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு நிலாவைச் சேர்கின்ற கரும்பாம்பை ஒக்கும், மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல்களையும் அந்தணர்கள் குறைதல் இல்லாத அரிய காவலையுடைய பெரிய ஊர்களையும் அழகிய குளிர்ச்சியான அகழியுடைய அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்,
குறிப்பு:
மருதம் சான்ற: மருதம் சான்ற - மதுரைக்காஞ்சி 270, சிறுபாணாற்றுப்படை 186. மருதம் சான்ற மருதத் தண் பணை (186) நச்சினார்க்கினியர் உரை - ஊடியும் கூடியும் போக நுகரும் தன்மையமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயலிடத்து. அரவு நுங்கு மதி: குறுந்தொகை 395 - அரவு நுங்கு மதியினுக்கு, அகநானூறு 114 - அரவு நுங்கு மதியின், அகநானூறு 313 - அரவு நுங்கு மதியின், நற்றிணை 377 - அரவுக் குறைபடுத்த பசுங் கதிர் மதியத்து, புறநானூறு 260 - பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், கலித்தொகை 15 - பாம்பு சேர் மதி போல, கலித்தொகை 104 - பால் மதி சேர்ந்த அரவினை, பரிபாடல் 10-76 - அரவு செறி உவவு மதியென, சிறுபாணாற்றுப்படை 84 - மதி சேர் அரவின்.
சொற்பொருள்:
நறும் பூங்கோதை தொடுத்த நாட் சினைக் குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி - நறுமணமான மலர்களை மாலையாகத் தொடுத்தது போல மலர்ந்துள்ள கிளைகளையும் குறிய தாளினையுடைய காஞ்சி மரத்தின் கிளையில் ஏறி (கொம்பர் - மொழி இறுதிப் போலி), நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து - நிலையாக இருத்தல் அரிதாகிய குளத்தின்கண் கூர்ந்து நோக்கி, புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல் - புலவு நாற்றமுடைய கயல் மீனை மூழ்கி எடுத்த நீலமணியைப் போன்ற வாயை உடைய கிச்சிலி, வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை - பெரிய நகம் கிழித்த வடு அழுந்திய பச்சை இலை, முள் அரைத் தாமரை - முள்ளை உடைய தண்டினை உடைய தாமரை, முகிழ் விரி நாட்போது - அரும்பு மலர்ந்த அதிகாலை மலரில், கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல் - தேனை நுகரும் நீல நிறத்தையும் சிவந்த கண்ணையுமுடைய ஆண் வண்டு, மதி சேர் அரவின் மானத் தோன்றும் - நிலாவைச் சேர்கின்ற பாம்பை ஒக்கும், மருதம் சான்ற மருதத் தண் பணை - மருத ஒழுக்கம் நிலைபெறுதற்கு அமைந்த மருத நிலத்தின் குளிர்ந்த வயல், அந்தணர் அருகா - அந்தணர்கள் குறைதல் இல்லாத, அருங்கடி வியன் நகர் - அரிய காவலையுடைய பெரிய ஊர், அம் தண் கிடங்கின் - அழகிய குளிர்ச்சியான அகழி, அவன் ஆமூர் எய்தின் - அவனுடைய ஆமூரை நீவீர் அடைந்தால்
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, . . . .[190]
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ, மகமுறை தடுப்ப,
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர். . . .[178 - 195]
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை . . . .[190]
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
யிருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி . . . .[195]
பொருளுரை:
வெற்றி உண்டாகும்படி நடக்கும், வலிமையான கழுத்தினைக் கொண்ட, உடல் வலிமையுடைய எருதினை உடைய, உழவரின் தங்கை, பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்து கிடக்கின்ற சிறிய முதுகையும் வளையல்கள் அணிந்த கையையுடைய பெண், தன்னுடைய மக்களைக் கொண்டு, நும்மைப் போகாது தடுக்க, கரிய வைரம் பாய்ந்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த குற்றுதல் அமைந்த மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை, பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் உங்களுக்குத் தருவாள்.
குறிப்பு:
மகமுறை தடுப்ப (192) - நச்சினார்க்கினியர் உரை - உழவர் தங்கையாகிய மகடூ தான் உள்ளே இருந்து தன் பிள்ளைகளைக் கொண்டு நும்மை அடைவே எல்லாரையும் போகாது விலக்குகையினாலே. இனிப் பிள்ளைகளை உபசரிக்குமாறு போல உபசரித்து விலக்கவென்றுமாம். கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (195) - நச்சினார்க்கினியர் உரை - கவைத்த காலினுடைய ஞெண்டும் பீர்க்கங்காயுங் கலந்த கலப்புடனே பெறுவிர். பெரும்பாணாற்றுப்படை 275 - அவையா அரிசி, அகநானூறு 394 - அவைப்பு மாண் அரிசியொடு, சிறுபாணாற்றுப்படை 193 - உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி.
சொற்பொருள்:
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு - வெற்றி உண்டாகும்படி நடக்கும் வலிமையுடைய கழுத்தையுடைய உடல் வலிமையுடைய எருதினையுடைய, உழவர் தங்கை - உழவருடைய தங்கை, பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து - பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற பின்னின மயிர் வீழ்ந்துகிடக்கின்ற சிறிய முதுகையும், தொடிக் கை மகடூஉ - வளையல்கள் அணிந்த கையையுடைய மகள் (மகடூஉ - இன்னிசை அளபெடை), மகமுறை தடுப்ப - மக்களைக் கொண்டு நும்மைப் போகாது தடுக்க, இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த - கரிய வைரம் பாய்ந்த உலக்கையின் பூணின் முகத்தைத் தேயச் செய்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு - குற்றுதல் மாட்சிமைப்பட்ட அரிசியினால் செய்த கட்டியாகிய வெள்ளைச் சோற்றை, கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் - பிளந்த காலையுடைய நண்டின் கலவையுடன் பெறுவீர்கள்