சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


வேலூர் செல்லும் வழியும் எயினர் தரும் விருந்தும்

பாடல் வரிகள்:- 164 - 177

பைந்நனை அவரை பவழம் கோப்பவும்,
கரு நனைக் காயா கண மயில் அவிழவும், . . . .[165]

கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் . . . .[170]

சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்

பொருளுரை:

பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும், கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும், தடித்த முசுண்டைக் கொடிகள் சிறிய பனை இலைப் பெட்டியைப் போலும் உள்ள மலர்களை மலரவும், பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும், கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய்) ஊர்ந்து இருக்கவும், முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில், மலை இடுக்குகளில் குதிக்கும் அருவிகளையுடைய பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, வலிமை மிக்க வேலின் நுனியைப் போல உள்ள மலர்கள் பூத்த குளங்களையுடைய வெற்றியுடைய வேலால் வெற்றி பொருந்திய , வேலூரை நீங்கள் அடைந்தால்,

குறிப்பு:

கொட்டம் (166) - நச்சினார்க்கினியர் உரை - பனங்குருத்தால் செய்விக்கப்படும் சிறிய பெட்டி, கொட்டை - நூற்கின்ற கொட்டையுமாம். முல்லை சான்ற கற்பு: முல்லை சான்ற முல்லை அம் புறவின் (169) - நச்சினார்க்கினியர் உரை - கணவன் கூறிய சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறம் செய்து ஆற்றி இருந்த தன்மை அமைந்த முல்லைக் கொடி படர்ந்த. அகநானூறு 274 - முல்லை சான்ற கற்பின், நற்றிணை 142 - முல்லை சான்ற கற்பின், பரிபாடல் 15 - முல்லை முறை, சிறுபாணாற்றுப்படை 30 - முல்லை சான்ற கற்பின், சிறுபாணாற்றுப்படை 169 - முல்லை சான்ற முல்லை அம் புறவின், மதுரைக்காஞ்சி 285 - முல்லை சான்ற புறவு.

சொற்பொருள்:

பைந்நனை அவரை பவழம் கோப்பவும் - பசிய அரும்புகளையுடைய அவரைக் கொடி பவளம் போன்ற பூக்களைத் தொடுப்பவும், கரு நனைக் காயா கண மயில் அவிழவும் - கருமையான காயா மலர்கள் கூட்டமாக இருக்கும் மயிலின் கழுத்தைப் போன்று மலரவும், கொழுங்கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் - தடித்த முசுண்டைக் கொடிகள் கொட்டம் போலும் உள்ள மலர்களை மலரவும், Rivea ornata, Leather-berried bindweed, செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும் - பெரிய காந்தள் மலர்க் குலைகள் கைகள் போன்று மலரவும், கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும் - கொல்லையில் உள்ள நீண்ட வழியில் இந்திரகோபம் (மூதாய் ) ஊர்ந்து இருக்கவும், முல்லை சான்ற முல்லை அம் புறவின் - முல்லை ஒழுக்கம் பொருந்திய முல்லைக் கொடிகள் உடைய முல்லைக் காட்டில், விடர்கால் அருவி - மலை இடுக்குகளில் குதிக்கும் அருவி, வியன் மலை மூழ்கிச் சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி - பெரிய மலையில் ஞாயிறு மூழ்கிய நேரத்தில் வானை நோக்கி, திறல் வேல் நுதியின் பூத்த - வலிமை மிக்க வேலின் நுனியைப் போல பூத்த, கேணி - குளம், நீர்நிலை, ஊற்று நீர்க் கூவல், விறல் வேல் வென்றி - வெற்றியுடைய வேலால் வெற்றி பொருந்திய, வேலூர் எய்தின் - வேலூரை அடைந்தால்

உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு, . . . .[175]
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் . . . .[164 - 177]

பொருளுரை:

மிகுந்த வெயிலுக்கு வருந்துகின்ற வெப்பம் விளங்குகின்ற குடிசைகளில் உள்ள எயினக் குலத்து மகளிர் இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோற்றை, இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனியையும் சில கை வளையல்களையும் அணிந்த நும் குடும்பத்தின் பெண்களோடு, நீவீர் ஆமான் சூட்டு இறைச்சியுடன் பெறுவீர்.

சொற்பொருள்:

உறு வெயிற்கு - மிகுந்த வெயிலுக்கு, உலைஇய உருப்பு - வருந்துகின்ற வெப்பம் (உலைஇய - சொல்லிசை அளபெடை), அவிர் விளங்கும் - வெப்ப விளங்குகின்ற, குரம்பை - குடிசை, எயிற்றியர் - எயினக் குலத்து மகளிர், அட்ட இன் புளி வெஞ்சோறு - ஆக்கிய இனிய புளியை இட்டுச் சமைத்த வெப்பமான சோறு, தேமா மேனி - இனிய மாமரத்தின் தளிர்போன்ற மேனி (தேமா - ஆகுபெயர் மாந்தளிர்க்கு), சில் வளை ஆயமொடு - சில வளையல்கள் அணிந்த நும் மகளிருடன், ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் - ஆமான் சூட்டு இறைச்சியுடன் பெறுவீர்