சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை


பரிசில் பெற்ற பாணன் குடும்பத்துடன் வந்த பாணனைச் சந்திக்கிறான்

பாடல் வரிகள்:- 034 - 040

பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, . . . .[35]

நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன், கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனிகூர் எவ்வமொடு, துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த, முதுவாய் இரவல . . . .[34 - 40]

பொருளுரை:

பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழை இடது பக்கமாகத் தழுவி, நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த இனிமை தெரிகின்ற பாலை யாழை இயக்குதல் தெரிந்த முறைமையை அறிந்து, அசையாத உலகத்தில் பரிசில் தருவாரை விரும்பி, வள்ளல்கள் இல்லாததால் வெறுப்பு மிக்க வருத்தத்துடன் பாணன் இயங்க, வறுமைத் துயரம் உன்னைக் கொண்டு போவதால், வழி வருத்தம் தீர்ந்திருந்த, பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக!

குறிப்பு:

பாலை (36) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இஃது ஐந்து வகைப்படும். தக்கராகம், நோதிறம், காந்தார பஞ்சமம், சோமராகம், காந்தாரம் என்னும் ஐந்துமாம். இயங்கா வையத்து - இயங்காத வண்டியாகிய உலகத்தில், வெளிப்படை. இயங்கா வையத்து (38) - நச்சினார்க்கினியர் உரை - வள்ளியோர் இன்மையின் பரிசிலர் செல்லாத உலகத்தே. இனி இயங்கும் வையம் சகடமாகலின் உலகத்திற்கு இயங்கா வையமென வெளிப்படை கூறிற்றுமாம். வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - அசைதல் இல்லாத பூமியிலே. பொ. வே. சோமசுந்தரனார் உரை- விறலியரின் அசைஇய அடியினை இளைஞர் வருடவும், சீரியாழைப் பாண்மகன் இயக்கவும் முனிவு இகந்திருந்த இரவில என்பதாம். குறிஞ்சிப்பாட்டு 146 - நைவளம் பழுநிய பாலை வல்லோன், சிறுபாணாற்றுப்படை 36 - நைவளம் பழுநிய நயந்தெரி பாலை. புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 - பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்.

சொற்பொருள்:

பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரல் சீறியாழ் - பொற்கம்பிகளை நீட்டினாற்போல உள்ள முறுக்கின நரம்பின் இனிய ஓசையையுடைய சிறிய யாழ், இடவயின் தழீஇ - இடது பக்கமாகத் தழுவி, நைவளம் பழுநிய - நட்டப்பாடை என்னும் பண் நிறைந்த, நயந்தெரி பாலை - இனிமை தெரிகின்ற பாலை யாழ், கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க - இயக்குதல் தெரிந்த முறைமையை அறிந்து, இயங்கா வையத்து - அசையாத உலகத்தில், இயங்கும் உலகத்தில், (இயங்கா வையம் - இயங்காத வண்டியாகிய உலகம், பூவா வஞ்சி என்றும் சூடா வஞ்சி என்றும் வஞ்சி நகரைக் குறித்தல் போன்று), வள்ளியோர் நசைஇ - பரிசில் தருவாரை விரும்பி, துனி கூர் எவ்வமொடு - வெறுப்பு மிக்க வருத்தத்துடன், துயர் ஆற்றுப்படுப்ப - வறுமைத் துயரம் கொண்டு போவதால், முனிவு இகந்து இருந்த - வழி வருத்தம் தீர்ந்திருந்த, முதுவாய் இரவல - பேரறிவு உடைய பரிசில் நாடுபவனே