நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை


ஊரினது செழிப்பு

பாடல் வரிகள்:- 013 - 028

புன் கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப்
பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்
பைங்கால் கொக்கின் மென்பறைத் தொழுதி . . . .[15]

இருங்களி பரந்த ஈர வெண்மணல்
செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்
கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப, . . . .[20]

அங்கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க,
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு . . . .[25]

தெண் நீர் பசுங்காய் சேறு கொள முற்ற,
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க . . . .[013 - 028]

பொருளுரை:

முசுண்டைக் கொடியில் பொறிப்பொறியாக வெண்ணிறப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. அதனோடு புதர் வேலிலியில் பீர்க்கம் பூ பொன் நிறத்தில் பூத்துக் கிடக்கிறது. ஈர மணலில் இருக்கும் பசுமை நிறக் கால்களை உடைய கொக்கு, சிவந்த கால்களை உடைய நாரை ஆகியவை எளிமையாகக் கவர்ந்துண்ணும்படி கயல் மீன்களை ஆற்று வெள்ளம் அடித்துவந்தது. பெயல் நின்றதும் வெண்மேகம் படர்ந்துவரும் மூடுபனி. வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர் வளைந்து தொங்குகிறது. பாக்கு மரத்தில் காய்கள் சதைப் பிடிப்புடன் முற்றித் தொங்குகின்றன. காட்டில் பூத்திருக்கும் குளிர்கால மலர்களில் பனித்துளிகள் தூங்குகின்றன.