திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

திணைமொழி ஐம்பது
பதினெண் கீழ்க்கணக்கு

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன.

திணைமொழி ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டுப் பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக் கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று அறியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலால், சேந்தனாரும், கூத்தனாரும் ஒரு வேளை உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு.

1. குறிஞ்சி
பாடல் - 01
புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்
புகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்
வானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா
யானை யுடைய கரம். . . . . [01]

விளக்கம்:

புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான்.

பாடல் - 02
கணமுகை கையெனக் காந்தள் கவின
மணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்
விறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ
புனமும் அடங்கின காப்பு. . . . . [02]

விளக்கம்:

திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன.

பாடல் - 03
ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்
பாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்
பூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா
ஈங்கு நெகிழ்ந்த வளை. . . . . [03]

விளக்கம்:

மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள்.

பாடல் - 04
ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்
கானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்
வானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி
மேனி பசப்புக் கெட. . . . . [04]

விளக்கம்:

ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட.

பாடல் - 05
விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்
வரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்
வில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்
கல்லிடை வாழ்நர் எமர். . . . . [05]

விளக்கம்:

விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர்.

பாடல் - 06
யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர். . . . . [06]

விளக்கம்:

யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; எனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர்.

பாடல் - 07
யாழும் குழலும் முழவும் இயைந்தன
வீழும் அருவி விறன்மலை நன்னாட!
மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்
ஊரறி கெளவை தரும். . . . . [07]

விளக்கம்:

யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தியொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலைநாடனே! மதர்ப்பிணையுடைய மான் போன்ற நோக்கினையுடையாளும் ஆற்றமாட்டாள்; நீர் இரவின்கண் வருதிராயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும்.

பாடல் - 08
வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு. . . . . [08]

விளக்கம்:

வேங்கை மலர்தலான் வெறிகமழா நின்ற தண்சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழிக, இவ்விடத்தின்கண் போந்ததில்லை, ஐயனே! களிறு.

பாடல் - 09
பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழ!
கணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்
அணிநிற மாலைப் பொழுது. . . . . [09]

விளக்கம்:

நோயான் வந்த நிறத்தீர்ந்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப்போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப்பொழுதின்கண.

பாடல் - 10
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து. . . . . [10]

விளக்கம்:

பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், “ஏடி!” என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னையாதலால்.

2. பாலை
பாடல் - 11
கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்
பொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்
அழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி
வழிநீர் அறுத்த சுரம். . . . . [11]

விளக்கம்:

செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையையுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மையவாகிப் பசையறு தனக்குத் தோன்றிப்போம்வழியின்கண் நீரறுத்த சுரங்களின்கண்ணே.

பாடல் - 12
முரிபரல வாகி முரணழிந்து தோன்றி
எரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !
அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரும் இடத்து. . . . . [12]

விளக்கம்:

முரிபரந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றாளென்னுந் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயுமிடத்து?

பாடல் - 13
ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்
பொலந்தொடீஇ பொய்த்த குயில். . . . . [13]

விளக்கம்:

ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள் : பொலந்தொடீ!

பாடல் - 14
புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்
செங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்
பொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்
வருநசை பார்க்கும்என் நெஞ்சு. . . . . [14]

விளக்கம்:

புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்துகண்டும், முன்பு பொருணசையையுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு.

பாடல் - 15
சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!
முறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)
ஆர்பொருள் வேட்கை அவர். . . . . [15]

விளக்கம்:

சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ? தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர.

பாடல் - 16
கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்
விரும்புநாம் செல்லும் இடம். . . . . [16]

விளக்கம்:

கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய்.

பாடல் - 17
கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்
வில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்
எல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ
நல்கா துறந்த நமர். . . . . [17]

விளக்கம்:

கல்லையுடைய வழிமருங்கிலுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர்.

பாடல் - 18
கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்
வெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)
எதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே
உதிர்வன போல உள. . . . . [18]

விளக்கம்:

வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தனவில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன.

பாடல் - 19
கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்
நிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!
முலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ
வளையொடு சோரும்என் தோள். . . . . [19]

விளக்கம்:

கலையொடு மான்கள் துன்புற் றிரங்காநிற்கும் மலைவழிகளையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின்கட் டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள்.

பாடல் - 20
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்
கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்
ஆற்றுங்கொல் ஐய நடந்து. . . . . [20]

விளக்கம்:

நாணேற்றிய வில்வினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின்கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி, என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள்கொல்லோ மெல்லிதாக நடந்து.

3. முல்லை
பாடல் - 21
அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். . . . . [21]

விளக்கம்:

அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்; நின்னுடைய தோள்கள் விளங்குவனவாக.

பாடல் - 22
மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்
நன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்
பல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)
இன்னிறம் கொண்ட(து)இக் கார். . . . . [22]

விளக்கம்:

நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார்.

பாடல் - 23
சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ
வெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்
தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து
இன்றையில் நாளை மிகும். . . . . [23]

விளக்கம்:

நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறிதொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது; வெஞ்சின வேந்தர் முரசுபோ விடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண்.

பாடல் - 24
செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்
வெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்
தண்பெயல் கான்ற புறவு. . . . . [24]

விளக்கம்:

செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால். வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாதலால், காரிது.

பாடல் - 25
கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த
உருகு மடமான் பிணையோ(டு) உகளும்
உருவ முலையாய்! நம் காதலர் இன்னே
வருவர் வலிக்கும் போது. . . . . [25]

விளக்கம்:

கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதலர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்றுவியாநின்றது.

பாடல் - 26
இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி
சுருங்கொடி முல்லை கவின முழங்கிப்
பெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்
பொருந்த நமக்குரைத்த போழ்து. . . . . [26]

விளக்கம்:

பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது.

பாடல் - 27
ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்
பாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து
மாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை
செயவர் செய்த குறி. . . . . [27]

விளக்கம்:

ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர்வித்து ஆம்பற்குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி.

பாடல் - 28
அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி
முதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்
கதிர்மறை மாலை கனைபெயல் தாழப்
பிதிரும் முலைமேல் கணங்கு. . . . . [28]

விளக்கம்:

அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினையுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவள் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப்பாக்கும்.

பாடல் - 29
கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்
காடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன
ஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!
போதராய் காண்பாம் புறவு. . . . . [29]

விளக்கம்:

காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணியிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய்.

பாடல் - 30
அருளி அதிரக் குருகிலை பூப்பத்
தெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற
வரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்
பெரிய மலர்ந்த(து)இக் கார். . . . . [30]

விளக்கம்:

மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, தெரிந்த ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரியவாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான்.

4. மருதம்
பாடல் - 31
பழனம் படிந்த படுகோட்(டு) எருமை
கழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)
உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்
கிழமை யுடையன்என் தோட்டு. . . . . [31]

விளக்கம்:

பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை.

பாடல் - 32
கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)
இணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்
பணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்
இணைத்தான் எமக்குமோர் நோய். . . . . [32]

விளக்கம்:

திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான்.

பாடல் - 33
கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!
உடைய இளநலம் உண்டாய் - கடைய
கதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி
எதிர்நலம் ஏற்றுநின் றாய். . . . . [33]

விளக்கம்:

கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய்.

பாடல் - 34
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்
தன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்
வாரிக்குப் புக்குநின் றாய். . . . . [34]

விளக்கம்:

செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக.

பாடல் - 35
வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்
கூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்
மாணிழை நல்லார் இளநலம் உண்டவர்
மேனி ஒழிய விடும். . . . . [35]

விளக்கம்:

வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும்.

பாடல் - 36
செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!
நொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்
தந்தாயும் நீயே தரவந்த நன்னலம்
கொண்டாயும் நீஆயக் கால். . . . . [36]

விளக்கம்:

செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செய்யப்படுவ தென்னுள்ளதாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால்

பாடல் - 37
பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்
நெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்
எல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல
நல்லஅருள் நாட்டம்இ லேம். . . . . [37]

விளக்கம்:

பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின்கண்ணும் எல்வளையம் மென்றோளேம்; எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப்பட்டிலேம்.

பாடல் - 38
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!
சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ
எல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லுமவர் வண்ணம் சோர்வு. . . . . [38]

விளக்கம்:

நல்ல வயலூரனுடைய நன்மை யெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும்.

பாடல் - 39
கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்
பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்
விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்
கரும்பின்கோ(து) ஆயினேம் யாம். . . . . [39]

விளக்கம்:

பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும்புறத்தினையுடைய வாளைப்பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோதுபோலவாயினேம்.

பாடல் - 40
ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்
தீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்
தேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்
தாமரை தன்ஐயர் பூ. . . . . [40]

விளக்கம்:

ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின்கண்ணும், முலையின்கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின்கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக.

5. நெய்தல்
பாடல் - 41
நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்
கைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்
செய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!
ஐயகொல் ஆன்றார் தொடர்பு. . . . . [41]

விளக்கம்:

நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது.

பாடல் - 42
முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை
தத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!
சித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்
வித்தகப் பைம்பூணின் மார்பு. . . . . [42]

விளக்கம்:

முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தாநின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை.

பாடல் - 43
எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ
நெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்
அறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்
செறிவுஅறா செய்த குறி. . . . . [43]

விளக்கம்:

எறிசுறாவையுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக்கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின்மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முளவாகா நின்றன.

பாடல் - 44
இளமீன் இருங்கழி ஓதம் உலாவ
மணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ
குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்
நினைநீர்மை இல்லா ஒழிவு. . . . . [44]

விளக்கம்:

இனமீன்களையுடைய இருங்கழியின்கண்ணே வந்து ஓதங்களுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு?

பாடல் - 45
கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்
படமணி அல்குல் பரதர் மகளிர்
தொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!
உடலுள் உறுநோய் உரைத்து. . . . . [45]

விளக்கம்:

கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து.

பாடல் - 46
முருகியல் கானல் அகன்கரை யாங்கண்
குருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப
மருவி வரலுற வேண்டும்என் தோழி
உருவழி உன்நோய் கெட. . . . . [46]

விளக்கம்:

நறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின்கட் குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்; என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய.

பாடல் - 47
அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான
மணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்
துணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!
தணியும்எள் மென்தோள் வளை. . . . . [47]

விளக்கம்:

அணிந்த பூக்களையுடைய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன

பாடல் - 48
கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப
வறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க
நிறங்கூரும் மாலை வரும். . . . . [48]

விளக்கம்:

ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன்மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப்பொழுதின்கண் நங் காதலன் வரும்.

பாடல் - 49
மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு. . . . . [49]

விளக்கம்:

மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின்கண் பயின் றுறைவதோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிளஞாழற் பூம்பொழிலின்கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு.

பாடல் - 50
பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்
புகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்
தவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி
திகழும் திருஅமர் மார்பு. . . . . [50]

விளக்கம்:

பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையையணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலிவுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கு அறிவிக்கின்றது போலும்.

திணை மொழி ஐம்பது முற்றிற்று.