திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

திணைமாலை நூற்றைம்பது
பதினெண் கீழ்க்கணக்கு

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார்.

திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டுள்ளது. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லைத் திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. அதனால், இந்நூலில் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.

1. குறிஞ்சி

நிலம் :- மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

பாடல் - 001
நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்! - காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. . . . . [001]

விளக்கம்:

(பழையவுரை) நறைக் கொடி படர்ந்துயர்ந்தசந்தனங்களை அற வெட்டி நல்ல நாளால் மழை பெய்யுங்காலத்தையேற்றுக்கொண்டு வித்தி முதிர்ந்த ஏனலின் கண்,பிறையை யேற்றுக்கொண்டதொரு தாமரை மலரைப்போலும் வாண்முகத்தையும், தாழ்ந்த குழலையு முடையீர்! கண்டிலீரோ? ஏவுண்ட மறை போந்தனவற்றை இவ்விடத்து.

பாடல் - 002
சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். . . . . [002]

விளக்கம்:

நறவ மலரையுஞ் சுனை நீலமலரையும் அசோக மலரையும் கொய்துமுடித்து நின்மகள்குழலின் மேலே ஆராய்ந்து புனைவதுஞ் செய்து பின்னொருநாட்டுணிந்துபரணாற் காவலமையாத ஈர்ங்கடா யானையை மொட்டம்பாற்கடிந்து காத்தும் இப்பெற்றி யுதவி செய்தான் ஒருவனுளன்.

பாடல் - 003
சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியொழா ஆர்த்து. . . . . [003]

விளக்கம்:

சந்தனங்களை வெட்டியுழுத சாரலின்கண், வித்திய ஏனலின்கட் படிந்த கிளிகளை, சந்தனங்களைக்காலாக எறிந்து செய்த, பரண்மிசை யிருந்து, பூசியசாந்தம் எங்கும் பரந்து கமழ உலாவி, கடிகின்றகார்மயி லன்னாள் தான் வாய்திறந்து 'ஆயோ' என்றியம்புதலாற் றம்மின மென்று கிளிகள் ஆர்த்துப்போகா.

பாடல் - 004
கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். . . . . [004]

விளக்கம்:

கோடாத புகழையுடைய மாறன்மதுரை யனையாளை அடாத பண்ணையுளுங் காண்கின்றிலேன்; போரின்கண் வாடாத கருங்கொற் றொழிலையுடைய வேல்மன்னர் அணிகலமாகிய முடிகூடின கொல்லோ! இடை யாற்கொம்பையனையாள் மயிர்கள்.

பாடல் - 005
வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்!. . . . . [005]

விளக்கம்:

கெடாத பனை யென்னுமளவு போன்ற அளவினையுடைய இன்ப விளைவினை நாமெண்ணியிருப்ப அதற்கிடையூறாக, நல்வினை விளையச் செல்வம்விளைவது போலப், பாத்தியின்கட் டினைவிளைதலான், மையார் தடங்கண் மயிலன்னாய்! தினைகொய்ய நாட்சொல்லிவேங்கையார் நம்மை இங்குநின்றும் பிரிவித்தலைப்பாராய்.

பாடல் - 006
மானீல மாண்ட துகில்உமிழ்வது ஒத்தருவி
மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய். . . . . [006]

விளக்கம்:

மிக்க நீலமணிவரைமாட்சிமைப்பட்ட வெண்டுகிலை யுமிழ்வதுபோல, அருவிகள் மயங்காநின்ற நீல மால்வரை நாடனே! கேளாய்; கரிய நீல மலர்களை வெகுளா நின்ற வேல்போன்ற கண்ணாள், செறிந்த இருளின்கண் நீவர, நினக் கிடையூறில்லாமைஆராய வல்லளோ? உண்மையாகப் பாராய்.

பாடல் - 007
கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். . . . . [007]

விளக்கம்:

மிளகு படர்கின்ற பூஞ்சாரலின்கட் கையையுடைய நாகங்களைப் பார்த்துவழயின்கண் வளர்கின்ற பெரும்புலிகள் திரிதரும் இரவின்கண் நீ வரின், தளிர் வளர்கின்ற நன்மலைநாட! நன்மலைநாடன் மகள் வாழாள்.

பாடல் - 008
அவட்காயின் ஐவனம் காவல் அமைந்தது
இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண்டு ஈத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை. . . . . [008]

விளக்கம்:

அவ்விடத்து வருவேனாயின்நினக்கு ஐவனங்காவ லமைந்தது; இவ்விடத்தின்கண் வருவேனாயிற் செந்தினையுஞ் செறிந்த பசுந்தினையும் காத்தலே அமைந்தது; ஆதலான் எனக்கொரு மறுமாற்றந் தருகின்றிலை; நின்றோழியாகிய இவட்காயில், காமன்அம்பு ஐந்தெண்ணுளவால்; அவற்றுள் இரண்டம்பினைக் கண்ணாகக் கொடுத்தான் கொல்லோ! நின்றோழிக்குக் கண்கள் காமன்கணை யுளவால்; என்னுயிர்க்கு என்னாங் கொல்லோ?

பாடல் - 009
வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்து அன்றுஎன்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம். . . . . [009]

விளக்கம்:

மாயமே யென்று சொல்லப்படுந் தன்மைத்தால்! ஒரு மாவினை வினாவி யான் நினைவினைநீங்கித் தனியே எளியேனாய்ச் சென்றேன்: சென்றவிடத்து நலங்கொண்டு நிறைந்த பூங்குழலை யுடையாள் மிகவுந் தன்னாயத்தின்கண் அன்று என் வென்றியை யெல்லாங்கொண்டு என்னேஞ்சத்தைத் தனக்கிடமாய்க் கொண்டாள்.

பாடல் - 010
கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி
பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்
தேன்வார்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி. . . . . [010]

விளக்கம்:

கருவிரலினையுஞ் செம்முகத்தினையும் வெண்பல்லினையுமுடைய சூன்மந்திதன் பெரிய விரலானே பைஞ்சுனையினீரைத் தூவி, பெருவரையின் மேலே வைத்த தேன்பொதிகளைத் தேவர்கட்குக்கொடுக்கும் மலைநாடனே! வாரா தொழிவாயாக; தேவர்கள்திரிதரும் வழியாம்.

பாடல் - 011
கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா ஒரு நீ - இரவின்
வழிகள்தாம் சால வரஅரிய வாரல்
இழிகடா யானை எதிர். . . . . [011]

விளக்கம்:

பழுதில்லாத வளங்களையுடைய கல்லருவி நாடனே! வலிய வில்லே நினக்கு வலியாய்ஒருநீ இரவின் கண்ணாகத் துணையின்றி வழிகள் தாம்மிகவும் வரவரிய; இழியாநின்ற கடாத்தையுடைய யானைகளின் எதிர்வாரல்.

பாடல் - 012
வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்கு ஈக பழியிலாள் - பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்கு அல்லால்
நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. . . . . [012]

விளக்கம்:

வெறியைவிட்டு வேலனார்போக; மறியையும் விடுக்க; கள்ளையும் அக்கள்ளினை நுகர்வார்க் கீக; இப்பழியிலாதாள் ஊழ்வலியாற் கடும்புனலுட் பாய்ந்து நீந்தித் தன்னை யெடுத்துக் கரையின்கண் வைத்தாற் கல்லது நெடிய வேய் போன்றதோளை நல்காள் இறந்து நின்று.

பாடல் - 013
ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள்
ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாதும்சேர் காடு. . . . . [013]

விளக்கம்:

ஒரு மலைபோல எல்லாமலையும் தம்முள் அளவொக்க உயர்ந்து சூழ்ந்த அரியஎல்லையுள் உள்ள தாம் எங்கள் சீறூர்; நீ வரும் அவ்வெல்லையுள் உள்ளகத்தின்கண் உள்ளன ஐந்துவாயையுடைய நாகங்கள்; புறத்துள்ளன ஆராயுங்காற் கையொடுசேர்ந்த வாயையுடைய யானைகள் சேர்ந்த காடுகள்.

பாடல் - 014
வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக்
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள். . . . . [014]

விளக்கம்:

வருக்கைப் பலாவினையுடைய வளமலையின் கண் மாதரும் யானும் எமக்கிருக்கையாகிய பரண்மேலேயிருந்தேமாக, பெரிய கையினையுங் கடாத்தையும் பெருமையையும் உடைய யானையைத் துரந்து கடிந்தானை யன்றித்தீண்டாவால், என்றோழியுடைய தோள்கள்.

பாடல் - 015
வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து. . . . . [015]

விளக்கம்:

(பழையவுரை) தள்ளாத சான்றாண்மையை யுடையார் வரவை எதிர்கொண்டிராய்க் கோடாது உடம்பட்டுநீர் கொடுப்பினன்றித் தளராத அழகும் முலையும் என்னும் இரண்டிற்கும் முந்நீராற் சூழப்பட்ட வுலகும் விலையாமோநிரம்பி.

பாடல் - 016
நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம்
என்றேன் இரண்டாவது உண்டோ மடல் மாமேல்
நின்றேண் மறுகிடையே நேர்ந்து. . . . . [016]

விளக்கம்:

நாக நாண்மலர் நாறும்தேனால் நனையப்பட்ட குழலாள் எனக்கு நல்கித் தன்னுடைய பூண்மார்பினை நேருமளவும் என் மார்பினின்றும் அவ்வெலும்பாற்செய்த பூண் போகா தென்று நினக்குச் சொல்லினேன்; இனி இரண்டாவது வேறொரு சொல்லுண்டோ? பனை மடலாற்செய்யப்பட்ட மாவினை யூரத் துணிந்து நின்றேன், தெருவினடுவே யுடன்பட்டு.

பாடல் - 017
அறிகுஅவளை ஐய இடைம்மடவாய் ஆயச்
சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். . . . . [017]

விளக்கம்:

அறிவேன் யான்அவளை; தன்னுடைய மெல்லிய இடை வருந்த, மடவாய்! சிறிது மவள் நடவாளாக இறும் இறும் என்றஞ்சி அவள்எனக்குச் சிறிதும் அருளு நெறி காணாது தளர்ந்துருகி என்னெஞ்சம் அவளொல்கி நடக்குந்தோறும் பின்சென்று தளர்தலுறும்.

பாடல் - 018
என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. . . . . [018]

விளக்கம்:

தகுதியில்லாத இளவேங்கை நாட்சொல்ல, இனிக் குரலொழிந்து இருவியாய்க் கழியுந்திணையெல்லாம்; எந்தையும் என்னையன் மாருமாகியபோர் வேலவர் இவட்குப் பரிசமாக மிகவிரும்புகின்றது பொன்னாம்; ஆதலாற் பயிலப் பழகிவருந்தன்மையையுடைய மலைநாடன் கேண்மை யினி யென்னாய்விளையுங் கொல்லோ! என்னே!

பாடல் - 019
பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்துஎன்
நெஞ்சம்வாய்ப் புக்குஒழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான். . . . . [019]

விளக்கம்:

பால போன்ற வெள்ளருவியைப் பாய்ந்தாடி, பல பூக்களையும் பெய்து பரப்பினாற்போலப் பூங்கொடிகள் பரந்து ஐவனப்புனத்தைக் காப்பாள் கண்கள், வேல் போன்று எனது நெஞ்சத்தின்கண் வாவிப்புக்குஎன்னுயிரை ஒழிவு காண வேண்டியோ புறம் போகாது உள்ளே அடங்கின; இத்துணை வேண்டுமோ? அவளுடைய அழகிய மேனிக்கேநோவாநின்றேன் யான்.

பாடல் - 020
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது. . . . . [020]

விளக்கம்:

வேங்கை நாண்மலர் பொன்விளைக்கும் நன் மலை நாடனே! கோள் வேங்கை போற்கொடியார் என் ஐயன்மார்; நீயுங் கோள் வேங்கையனையை யாதலான் இன்று நீயும் இங்கே நிற்கின் மிகப்போர் விளையும; நீ கொணர்ந்த தழையை யாங்கொள்ளாமைக்குவேறு காரண மென்னை? நாளை நீ கொண்டு வந்தால் எளிது.

பாடல் - 021
பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்கு
அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்றுஆற்றான்
உண்கண்ணி வாடாள் உடன்று. . . . . [021]

விளக்கம்:

பொன்றளரும் மேனியாள்வேங்கைப் பூப் போன்ற சுணங்கினையுடைய மென்முலைகள் எற்றுக்கு யான் மெலியப் புடைத்து வீங்கின, என்னேபாவமென்று சொல்லி நீ மெலிதற்குக் காரணமென்னை? நீ கொணர்ந்த குறுங் கண்ணிகள் வாடாத வகை யான்கொண்டு சென்று இவை நல்ல வென்று காட்டினால், அவ்வுண்கண்ணிதான் மாறுபட்டுத் துன்புறாள் வாங்கும்.

பாடல் - 022
கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம்
ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பி னால்எய்தாய் இன்று. . . . . [022]

விளக்கம்:

கொல் யானைகளினுடைய வெண்மருப்பையுங் கொலைவல்ல புலித் தோல்களையும் நல்யானை போன்ற நின் ஐயர் திறைகொண் டொழுகுவார், இப்புனத்தின்கட் பிறர் வருவாரை ஓரம்பினா லெய்துபோக்குவர்; யான் பிழைத்துப் போகாதவகை நின் கண்ணென்னு மிரண்டம்பினால் எய்தாய் இன்று.

பாடல் - 023
பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணாது
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏண்அழிதற்கு யாமே இனம். . . . . [023]

விளக்கம்:

பெருமாலை யெங்கும்தாம் புக்கு நாடித் தேன் வாங்கி நுகர்ந்து மனத்தின் கண்நுடங்கிப் பாதுகாவாது அருமலை போன்றிருந்த யானைகளைப் பிணித்துக் கொள்வாருடைய தங்கையுடைய திருமுலைக்குத் தோற்று நாணழிந்து மிக்க அறிவு முதலாயின குணங்கள் நான்கு மழிந்து தளர்ந்துருகி வலியழிதற்கு யாமமைந்தேம்.

பாடல் - 024
நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்துஉழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு. . . . . [024]

விளக்கம்:

நறுவிய குளிர்ந்ததகரம், வகுளம் என்னு மிவற்றைப் பயன்படாத வெறும்புதல் போல விரும்பாது வெட்டியுழுது, விரும்பிச் செந்தினையை வித்துவார் தங்கை பிறர் கொண்ட நோய்க்கு நொந்திரங்கவல்லளோ? ஆராய்ந்து பாராய் தோழி!

பாடல் - 025
கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்திஇரா. . . . . [025]

விளக்கம்:

கொல்லும் இயல்பினையுடையயானைகள் புலியினாற் கொல்லப்படுதலைத் தப்பிமிக்க இயல்பினையுடைய தங்கூட்டத்தைத் தேடுவதுபோலும்; ஆதலான் மிக்க வியல்பினையுடைய அச்சத்தைச்செய்யா நின்ற வேல்போன்ற கண்ணாள் நடுநடுங்கும் வகைவராதொழி வாயாக, அரணாகிய நின் வேலை யேந்தி இரவின்கண்.

பாடல் - 026
கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி. . . . . [026]

விளக்கம்:

கருங்காலினையுடைய இனவேங்கை கன்மேலுகுத்த பூக்கள் பெரியதாளினையுடைய வயப்புலியை யொக்குகின்ற மருங்கான் மழைவளருஞ் சாரலானே இரவின்கண் நீவரின், உயிர்வாழ மாட்டாள்; இழை வளருஞ்சாயலாள்.

பாடல் - 027
பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்பு ஈயும் உடன்று. . . . . [027]

விளக்கம்:

குளிர்ந்த குவடுகளையும் நீண்ட வேங்கை மரங்களையும் உடைய பயமலை நாடனே! இதற்கு முன்பு வரைந்திலையாயினும் இனி வரைந்து புகுதாய் என்று நினக்கு ஆராய்ந்து சொல்வேன்; வெறுக்கத்தக்க மலையின் கண் நின்தாளாண்மையே வலியாக இரவின்கண் நீ வர எம் அன்னை கண்டாள்; இனி எங்களோடு பகைத்து வெகுண்டு மிக்க காவலை எமக்குத் தரும்.

பாடல் - 028
மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில்
நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக
எறிந்துஉழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
அறிந்துழல்வான் ஓ!இம் மலை?. . . . . [028]

விளக்கம்:

முகிலைத் தோயாநின்ற சந்தனமும், விசை மரமும், திமிசும், காழகிலும், துறக்கத்தைச் சென்று தோயாநின்ற நாகமரமும் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் போக வெட்டிப் புனமுழுவார் தங்கையாகிய இவளுடைய இருந்தடங்கண் கண்டுவைத்தும், இங்கு நின்றும் மீண்டு அங்குவரவல்ல எம்பெருமான் இத்தோன்றுகின்ற மலைபோல் நிலையுடையன்.

பாடல் - 029
பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர்
நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தான்நாறத் தாழ்ந்த இடம். . . . . [029]

விளக்கம்:

பலா வெழுந்த மருங்கின்கண் வருக்கைப் பலாக்களாற் பாக்கப்பட்டத னடுவே நிலாவொளி மிக்க ஒழுகிய மணலுயர்ந்து வளைந்து தோன்றி, கான்யாறுகள் இடங்களெல்லாஞ் சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தான் விரை கமழ்ந்து தழைத்தவிடம், யாங்கள்பகலின் கண் விளையாடுமிடம்.

பாடல் - 030
திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு. . . . . [030]

விளக்கம்:

ஒரு நிறைமதியின் கண்ணே இரண்டுவில்லை எழுதிப் பிறருயிரை யுண்ணுமென்று ஆராயாது இரண்டு வேலினையழுத்தி, தங்கள் குலத்துள்ளா ளொருத்தி யென்று தாங்கள் கருதப்படுந் தாழ்வு காரணத்தால் இவ்விடத்தின்கட் டினைப்புனத்தைக் காக்க வைத்தார் போலப் பூங்குழலை என் மனத்தைப் போந்து காக்கவைத்தார் அறிவின்றி.

பாடல் - 031
தன்குறையிது என்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு. . . . . [031]

விளக்கம்:

தன் காரியம் இது என்று எனக்கு விளங்கச் சொல்லான், தழையைக் கொண்டு வந்தான், தண் சிலம்பை யுடையான் நின்னான் முடியுங் கருமம் இது என்னுங் கருத்தினனாய்ப் பொன்னிறந் தளரும் நாண்மலர்களையுடைய வேங்கை நிழலின் கண்ணுஞ் சிறிது பொழுதுஞ் சார்ந்திரான், என்னை கொல்லோ! கோள் வேங்கை யன்னானது கருத்து.

2. நெய்தல்

நிலம் :- கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.

பாடல் - 032
பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு. . . . . [032]

விளக்கம்:

நெய்தற் பூக்களையுடைய தண் கழியின் கண் மீன் பாட்டை யறிந்து தன்னைமார் நூலாற் செய்யப்பட்ட நல்ல நுண்ணிய வலையான் முகந்து எடுத்த படு புலாலைக் கானலின்கணிருந்து காப்பாள் படை நெடுங்கண்ணோக்கம் படு புலாலைக் காக்க மாட்டா, என்னையே காக்கும்அத்துணை.

பாடல் - 033
பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணாது
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம். . . . . [033]

விளக்கம்:

பெருங் கடலுள் வெண் சங்கு பெறுதலே காரணமாகத் தங்களுயிரைப் பாதுகாவாது பெருங் கடலினுள்ளே குளிப்பார் தங்கையுடைய இருங் கடலின் முத்தன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே பொருந்தி யாம்மேவியுளம்.

பாடல் - 034
தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம்
காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து. . . . . [034]

விளக்கம்:

தாமரை மலர்கள் தாமே முகமாகக் குளிர்ந்த இலையையுடைய ஈரத்தையுடைய மாநீலமலர்கள் காதலிக்கப்படுங் கண்ணாக, அக்கண்களைக் கழிக்கட்டுயில் வியாநின்ற காமருசீர்த் தண் பரப்பை யுடையானே! பெரிய இருளின் கண் நீ வரிற் றாழ்ந்த கோதையை யுடையாள் இரங்கி அவள் கண்கள் நீர் பரப்பக் காணாய்.

பாடல் - 035
புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப!
நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக்
கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம்
மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. . . . . [035]

விளக்கம்:

புலானாற்றத்தை நீக்கும் பூக்களையுடைய புன்னைப் பொங்குநீர்ச் சேர்ப்பனே! நிலாவினதொளியை வென்று நீக்கும் வெண்மணற் றண் கானலின்கட் கங்குலின் கண்ணே வருதலின், இவளாவி வருந்தலைப் பெருக்கி நீ வாராதொழிக; பகல் வருவையாயிற் பிறரால் அலர் தூற்றப் படுங் கவ்வை பெருகும், மங்குல் போன்ற நீரையும் வெண்டிரையையு முடைய கடன் மருங்கின்.

பாடல் - 036
முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்துஇரை கொள்ளாது - உருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற!. . . . . [036]

விளக்கம்:

விரை வாய்த்த முட்டாழையினது நீண் முகையைக் குஞ்சு என்று கருதிக் குருவிகள் அம்முகை வாயிலே இரையைப் பெய்து தாம் அவ்விரையைக் கொள்ளாது உருகி மிக வின்னாத வெயிலைத் தஞ் சிறகால் மறைக்குஞ் சேர்ப்பை யுடையானே! நீ இங்கு வரும்நிலையாத வரவினை மறந்து நிலைக்கும் வரவினைச் செய்வாயாக.

பாடல் - 037
ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாராது அலர்ஒழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து. . . . . [037]

விளக்கம்:

ஓத நீர் வேலியை யுடைய பாக்கத்தார் உரையாற் கடியாது உம்மேலுள்ள காதலாற் றுன்புற்று இவள் கண்கள் நீர் வாராத வகை இவண்மாட்டு வேறுபாட்டைப் பார்த்து முன்பு நீரி்வட்குச் சொல்லிய வஞ்சினத்தை ஓத நீர் அறியுமாதலான், இவ்வாறு வாராது அலரொழியும் வகைமன்றத்தாரறிய வரைந்து கொள்ளீர்.

பாடல் - 038
மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்புஅணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய்
என்போலும் துன்பம் நினக்கு. . . . . [038]

விளக்கம்:

பெருங்கடலினானே வந்து சேர்ந்த வெண் மணற் றண் கானலின்கண் வந்து பரவாநின்ற திரை சேர்ந்த மாக்கடலைச் சேர்ந்த தண்பரப்பினை யுடையான் மார்பினான் வருத்தப்படாத பெருங்கடலே! என்னைப் போலக் கண்டுஞ்சுகின்றிலை; இக் கண்டுஞ்சாமையைச் செய்கின்ற என்போலுந் துன்பத்தை நினக்குச் செய்தார் யாவர்சொல்லாய்?

பாடல் - 039
தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. . . . . [039]

விளக்கம்:

வந்து சேர்ந்தார்க்கு ஏமமாம் இளமணற் றண்கழிக் கானலிடத்து வந்து, முன்பு பூவாதே பூத்த இள ஞாழற் பூவினை இவட்குத் தந்தவர்க்கே யாமால், இவள் தடமென்றோள்; இந்நாள் வதுவை வரையப் புகுந்தார்க்கா மென்பாருடைய மெய்யுரையைக் காண்போம்.

பாடல் - 040
தன்துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன்துணையோடு ஆட இயையுமோ? - இன்துணையோடு
ஆடினாய் நீயாயின் அந்நோய்க்குஎன் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து. . . . . [040]

விளக்கம்:

தன் பெடை ஞெண்டொடு இன்புற்று விளையாடும் அலவனையும் என்னையும் பார்த்து, 'என்னுடைய இனிய துணையோடு இப்பெற்றி போல ஆட எனக்குக் கூடுமோ? நின்னுடைய இன்றுணையாகிய பெடை ஞெண்டுடனே விளையாடினாய் நீயாயிற் பிரிவுத் துன்பம் அறியா யாதலான், அப்பெற்றிப்பட்ட நினக்கு என் பிரிவுத் துன்பத்தைச் சொல்லி நொந்து என்னை,' என்று சொல்லிப் போயினவன் பின்னை வந்து மேவித் தோன்றுகின்றிலன், என் செய்தானோ!

பாடல் - 041
உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோடு உருமுடைத்தாய் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து. . . . . [041]

விளக்கம்:

ஒருங்கு பெருகி வாலிய மின்னோடு உருமுடைத்தாகிப் பெய்யவேண்டி நெருங்குகின்ற மழை போலப் பெருகாநின்றது, ஏதிலார் விரும்பும்படி நம் அலரானது; ஆதலான் நம்முள்ளம் ஒருநாளுமன்றியே பலநாளும் நெகிழ்ந்து உருகாநின்றது.

பாடல் - 042
கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு. . . . . [042]

விளக்கம்:

கவளத்தையுடைய களிப்பியன்ற மால் யானை, அரிமாவின் குருளைதான் நடைகற்கும் பருவத்தும் அஞ்சி யெதிர் நில்லாதது போல, இவளுடைய அதரமாகிய பவழத் துண்டத்தினிடை யரும்பும் முறுவலாகிய முத்தங்களைக் காணுந்தொறுந் தோற்று நில்லா, இவள் கையிடைத் தொடியின்கண் அழுத்திய முத்தங்கள் திரண்டு.

பாடல் - 043
கடற்கோடு இருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா!. . . . . [043]

விளக்கம்:

கடலின்கட் சங்குகளே பெரிய மருப்பாக, காற்றே பாகனாக, திரையே அடற் கோட்டி யானையாக வருத்திக் கரையைக் குத்துகின்ற நீண்ட சேர்ப்பையுடையானே! செறிந்த இருளின்கண் வாராதொழிக; வருதலை வேண்டின், நீ வரைவா யாகவே வா.

பாடல் - 044
கடும்புலால் புன்னை கடியும் துறைவ!
படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம்
தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில்
எழைமான் நோக்கி இடம். . . . . [044]

விளக்கம்:

மிக்க புலானாற்றத்தைப் புன்னைப் பூக்கள் நீக்குந் துறைவனே! புலாலிற் பட்ட புள்ளைக் கடிய வேண்டிப் புக்க ஏழை மானோக்கி விளையாடுமிடம், பெரிய புல்லாகிய தாழையும் ஞாழலும் நெருங்கி யுயர்ந்ததாழ்பொழில்.

பாடல் - 045
தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் - ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்!. . . . . [045]

விளக்கம்:

தாழைகள் படர்ந்து பரக்கும் வெண்மணலையுடைய தண்கானலின்கண் வாழும் மாழைமையையுடைய நுளையர் மடமகளாகிய இவ்வேழையுடைய ஒப்புமை நாடிலில்லாத இருந்தடங்கண் கண்டுந் துணையை நாடிய எம்பெருமான் ஒருகுற்றமு மிலன்.

பாடல் - 046
தந்துஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற்று - எந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா. . . . . [046]

விளக்கம்:

சிலரைக் கொணர்ந்து ஆராயவேண்டுவதில்லை; நல்லதொரு நாட்கேட்டு நீட்டியாதே நீ வரைதற்கு வந்தால் இவளை எய்துதல் மெய்ம்மையால்: எம்மிறைவனே! எறிசுறாக்கள் கழியெங்குஞ் சுழலு மிராவின்கண் வாரல்; வரின், மறிமகர வார்குழையாள் உயிர் வாழாள்.

பாடல் - 047
பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார். . . . . [047]

விளக்கம்:

யாழினைப் பண்ணாது பண்மேற் சேரத் தேன்கள் பாடுங் கழிக்கானலின்கண் ஆராயாதே வந்து கண்டார்க்கே அழகிய தெய்வங்களாம்; ஆதலான், அறிவினா னாராயாது இறந்துபடுவார் சான்றாண்மையின் கண் வேறுபட்டிலா மற்றிவளைக் காவாது கயிறுரீஇ விட்டார் சான்றாண்மையின் வேறுபட்டார்.

பாடல் - 048
திரை மேற்போந்து எஞ்சிய தெள்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து. . . . . [048]

விளக்கம்:

திரைமேற் போந்து கரைமே லொழிந்த விடு வாயையும் பசும்புறத்தை யுமுடைய இப்பி கான்ற முத்தம், தெண்கழிக்கானலின் விரைமேவும் பாக்கம் ஒளியுண்டாம் வகைஇருள்படுமிட மெல்லாம் அவ்விருளைப் பகுத்தகற்றும்.

பாடல் - 049
எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!
பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு
நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. . . . . [049]

விளக்கம்:

எவ்விடத்தானே வருவாய் இருங்கழித் தண் சேர்ப்பனே! பொங்கு திரைகளானே யுதைக்கப்பட்டுப் போந்து கரையின்கட்டங்கிய சங்குகள் கதறிப் பொறையுயிர்த்த முத்தங்கள் செறிந்த இருளை இடங்களினின்றுஞ் சீயாநிற்கும்; திரைகொணர்ந்து போதவிட்டன வற்றைக் கண்டார் வரன்றாநின்ற பாக்கத்தின்கண்.

பாடல் - 050
திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியால்நீ கொள்வது நேர். . . . . [050]

விளக்கம்:

திமிலே களிறாகத் திரையே பறையாகத் துயில் கெடத்தோன்றும் படை புட்களாக, கனாக் கண்டாற்போலத் தேறமுடியாத களவின்கட் டனியே வரும் வரவினை யொழிந்து, கோலநீர்ச் சேர்ப்பனே! நெறியானே வரைந்து இவளைக் கொள்வது நினக்குத் தகுதி.

பாடல் - 051
கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று. . . . . [051]

விளக்கம்:

கடும்புலாலையுடைய வெண்மணற் றண்கழிக் கானலின்கண் இருந்து, யாங்கள் ஆங்கடுத்த மீனாகிய படு புலாலின்கட் புட்டிரியாமற் பார்ப்பேம்; அவற்றை விற்பதுஞ் செய்வேம; அக்கானலின்கண் அடும்பெல்லாம் பாலிகை போலப் பூக்கும்; சாலிகை விரிந்தாற்போல வலைகளும உணங்கும்.

பாடல் - 052
திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். . . . . [052]

விளக்கம்:

திரையே பாகனாகத் திமிலே களிறாகக் கரை சேர்ந்த கானலின் கண்ணுள்ள பல புட்களே படையாக வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்பனே! விரையாதே நல்லநா ளாராய்ந்துஅறிந்து வரைந் திவளைக் கோடல் நினக் கறமாவது.

பாடல் - 053
பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத்
தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர்
முன்கிளர்ந்|து எய்தல் முடி!. . . . . [053]

விளக்கம்:

பாறே குதிரையாக நீண்ட திமிலே பல களிறுகளாகத் தெளிந்த திரையே பறையாகப் புட்களே படையாகத் தேறாத வேந்துகள் படை யெழுந்து கிளர்ந்தன போலுங் கடற் சேர்ப்பனே! எமருடைய முன்னே சென்று இவளை நீயேபுணர்தலை முடிப்பாயாக.

பாடல் - 054
வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர்
கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர்
நாள் நாடி நல்குதல் நன்று. . . . . [054]

விளக்கம்:

வாராதொழிவாயாக; வருவையாயின், நீர்க்கழிக்கானல்தான் நுண்மணன்மேல் நின்றேர் பூண்ட குதிரை காலாழுந் தீமையுடைத்து; ஆதலான், ஒத்த குலத்தார்க்குத் தொடர்ச்சி கோடலை ஐயுற் றாராய்தல் வேண்டா; நிமித்த மறிவாரை யழைத்து நல்லதொரு நாளை நாடிஇவட்கு நல்குதல் நன்று.

பாடல் - 055
கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும்
ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள்
ஏறுநீர் வேலை எதிர். . . . . [055]

விளக்கம்:

இவளுடைய கண்களும் மிக்க நீர் பரப்பக் காணாய்; கால்வலிய தேரில் மண்ணெல்லாம் பரக்கும் பெரிய இருண் மேற்கொண்டு உலகமெல்லாம் நிவந்த அலர் பரக்குமாறு, நீருண்ட வேலையையுடையாய்! வாரல்; வருவையாயின், இவளுயிர் வாழாள்: ஒதமேறாநின்ற நீர்வேலையினெதிரே.

பாடல் - 056
கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட
அடற்கானல் புன்னைதாழ்ந்து ஆற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்துஎம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து. . . . . [056]

விளக்கம்:

கடற்கானற் சேர்ப்பனே! கழிகள் சூழ்ந்து நீண்ட மீன் கொலைகளையுடைய கானலின்கண் மிகவும் புன்னை தழைக்கப்பட்டு, பூவிதழையுடைய இக்கானலின் கண் உள்ள அன்றில்கள் அழையாநின்ற அழகிய நெடும் பெண்ணையை யுடைத்து; எம் மில்லத்தின்முன் இளமணல்களும் மொய்த்து.

பாடல் - 057
வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா வளமை - இருதிரை
முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!
என்வீழல் வேண்டா இனி. . . . . [057]

விளக்கம்:

வருதிரைதான் வந்து உலவாநின்ற ஒழுகிய மணற்கானலின்கண் ஒருதிரை வந்து பெயர்வதற்கு முன்னே இரண்டு திரை வந்து வீழாநின்ற கானலின்கண் வந்து முழங்கு கடற்சேர்ப்பனே! என்னால் வந்து இப் புணர்ச்சியை விரும்பல் வேண்டா; இனி வரைந்து கொள்வாய்.

பாடல் - 058
மாயவனும் தம்முனும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று?. . . . . [058]

விளக்கம்:

மாயவனும் அவன் முன்னோனும் போல, மறிகடலும் கடற்சோலையும் அச்சோலையைச் சேர்ந்த வெண்மணலும் பாராயோ! அக்கடற் சோலையின் நடுவெல்லாம் ஞாழலுந் தாழையுமாய் இருக்கும்; நிறைந்த மருங்கெல்லாம் புன்னையாயிருக்கும்; இவற்றையும் விரும்பிப் பாராய்.

பாடல் - 059
பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். . . . . [059]

விளக்கம்:

பகல் வருவாயாயின், அலர்பலவு முளவாம்; அவ்வலர்க்கு இரங்காதே இரவு வருவையாயின், ஊறு வரும் ஏதமும் பலவுளவாம்; உள் புகுதற்கரிய தாழையடர்ந்த திரைநீர்ச் சேர்ப்பையுடைத்து, எங்கள் ஏழை நுளையர் வாழுமிடம்.

பாடல் - 060
திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்
கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள். . . . . [060]

விளக்கம்:

திரைகள் அலறிப் பெயரும் வகை தெழித்துத் திரிந்து கரையின்கண் அலவன்களைத் தன் காலினாலாராய்ந்து, கரையருகே நின்ற நெய்தன் மலர்களைக் கொய்யாநிற்கும் நீளிய நெடுங் கண்ணினாள் நுளையருடையமையன் மகள்.

பாடல் - 061
அறிகுஅரிது யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து. . . . . [061]

விளக்கம்:

யார்க்கும் அறிதலரிது; ஓசையையுடைய நீர்ச் சேர்ப்பனே! எங்குந் திரிவா ரில்லாமல் வழியில்லை; தளிர் சுருண்டிருந்த கண்டலும், அழகிய தண் டில்லைகளும். தம்முண் மிடைந்து கழியைச் சூழ்ந்த மிண்டன் மரங்களும், தாழைகளும் இடைப்பட்டு.

பாடல் - 062
வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்!
உவர்கத்து ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச்
சுவர்கத்து உளராயின் சூழ். . . . . [062]

விளக்கம்:

வில்லுழவர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும், நல்லாராகிய வனிதையர் காரணமாகத் தொடங்கிய விழவகத்தும் எல்லா மாந்தருந் திரள் வராதலால், நாங்கள் அங்குக் கண்டறியேம்; எமக்கு ஓரு தவி பண்டொருநாட் செய்த சேர்ப்பனோ டொப்பாரை: மற்றவனே இவட்குத் தக்கான்; அவனைப் போலும் ஆடவர் சுவர்க்கத் துளராயின்ஆராய்வாய்.

3. பாலை

நிலம் :- குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் :- பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.

பாடல் - 063
எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு?. . . . . [063]

விளக்கம்:

எரிநிறத்தையுடையன அசோக்கின் பூங்கொத்தினமெல்லாம்; வரிநிறத்தையுடைய வண்டுகள் இளியென்னும் பண்ணைப்பாட விரும்பப்படுகின்ற நீண்ட மிக்க பொன் போன்ற மலர்களை யணிந்தன, கோங்கமெல்லாம்; ஆதலாற் பொருந்திய முலையினை யுடையாய்! நின்னுடைய பூந்தொடித் தோள்கள் யாதின் பொருட்டு அணிந்தன தமக்குத் தகுதியில்லாத பசப்பினை?

பாடல் - 064
பேணாய் இதன்திறத்து என்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்கு ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு. . . . . [064]

விளக்கம்:

'நீ உறுகின்ற துன்பத்தைப் பாதுகாவாய்,' என்று யான் சொன்னாலும் பாதுகாவாதே நாணத்தகும் ஆற்றாமை செய்த நல்வளையாய்! நீயும் முன்பு நாணின்மை செய்தா யென்பதனை இனி யறிந்து கொள்ளாய்; எரியைச் சிதறிவிட்டாற் போலவிருந்த. ஈர்முருக்குக்கள்; கனமில்லாத பொரி சிதறிவிட்டாற் போலப் பூத்தன, புன்குகள்; ஆதலான் அவர் சொல்லிய பருவம் இதுகாண்.

பாடல் - 065
தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து. . . . . [065]

விளக்கம்:

கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இதுஎன்று.

பாடல் - 066
வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து!. . . . . [066]

விளக்கம்:

நங் காதலர் விரைந்து வருவர்: விளங்கி முருக்குக்களெல்லாம், செல்வமுடையார் புதல்வர்க்குப் பொற்கொல்லர் ஐம்படைத்தாலி செய்தாற்போல, மிக்க பவளக் கொழுந்தின் அடியிலே பொற்றாலியைப் பதித்து வைத்தாற்போல் விளங்கக் கான்றன; ஆதலாற் றேர்ந்து பாராய்.

பாடல் - 067
வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது!. . . . . [067]

விளக்கம்:

மிக்க பொருட் பொருட்டுச் சென்றார், விளங்கிழையாய்! வந்து தோன்றுகின்றிலர்; இப் பருவத்தின் கண் நீ என்னை ஆற்று என்றால் எனக்கு ஆற்றலாமோ? என்னை ஒறுப்பனபோலப் பொன்னின் உள்ளுற வைத்த பவளம் போன்ற, பொருத்திய முருக்கம் பூக்கள்; ஆதலால் என்னுள்ளத்துற்ற நோய்பெரிது.

பாடல் - 068
சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற
இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு!. . . . . [068]

விளக்கம்:

பொருளின் பொருட்டு நாமிவளை நீங்கிப் போயக்காற் போம்வகை யெங்ஙனேயோ? நெஞ்சே! மன்னிய அணிகட்குத் தக்க அழகையுடைய இளமுலையாளுடைய ஒப்பில்லாத குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்புக்கள் நம் முன்னே வந்து நீடி யொளிவிட்டு இருஞ்சுரத்திடையே தோன்றி நின்றக்கால்.

பாடல் - 069
அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தான்இவ் அணியிழையோடு - ஒத்த
தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. . . . . [069]

விளக்கம்:

வழிகளும் நெடிய; அத்த மலையின் கண்ணே அழற் கதிரோனுஞ் செம்பாகம் மறைந்தான்; இவ்வணியிழையோடு நீரும் எம்மோ டொத்த தகையினால் எஞ்சீறூரிலே இன்று தங்கினீராய் நாளை எங்களினீங்கிப் போதலழகு.

பாடல் - 070
நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்டல் அயர்மணல்மேல் வந்து!. . . . . [070]

விளக்கம்:

நின்னுடைய நோக்கின் றன்மையைக் கொண்ட மான்களைப் பாராய்; குளிர்ந்த குரவ நீழலைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட பூங்கோங்குகளைப் பாராய்; பொன்னினது காட்சியைக் கொண்ட சுணங் கணிந்த மென்முலையையுடைய கொம்பன்னாய்! மணன்மேல் வந்து விளையாட்டை விரும்பாய்.

பாடல் - 071
அஞ்சுடர்நள் வாண்முகத்து ஆயிழையும் மாநிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். . . . . [071]

விளக்கம்:

அழகிய மதிபோன்ற நீண்ட ஒளியையுடைய முகத்தாயிழையும் எதிரில்லாத வெஞ்சுடர்நீள் வேலானும் இச்சுரத்தின் கண்ணே போதரக்கண்டு அஞ்சி, இரு சுடருள் ஒருசுடருமின்றியே உதயம் பழாம் வகை இரு சுடரும் அச்சுரத்தே போந்தன என்று கண்டார் சிலர்சொன்னார்.

பாடல் - 072
முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது. . . . . [072]

விளக்கம்:

இவள் முகம் தாமரை மலர், இவள் முறுவலையுடைய வாய் ஆம்பல் மலர், இவள் கண் நீல மலர், ஒன்றை யொன்றொவ்வாது கடந் தார்ந்த விரல்கள் காந்தளரும்பு என்று கருதிக் காதலித்துப் பொருந்திய மாழைமா வண்டிற்குத் தக்க நீழலிலே வருத்தமின்றி நின்னுடைய ஏழைசெல்லாநின்றாள் இனிதாக.

பாடல் - 073
செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம்
தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. . . . . [073]

விளக்கம்:

செவ்வாயின்கட் டார்த்தத்தை வாய் மொழியைக் கேளாதும், கரிய கண்ணின்கட் டண்கயத்து நீலங்களின் றன்மைகளைக் காணாதும், அவ்வாயம் ஆற்றாதொழிவதனை யோர்த்துப் பின்பு உடன்போக்கை யொழிந்தாள்; என் பேதை அலர் காரணத்தான் முன்பு உடன்போக்கை மேற்கொண்டு.

பாடல் - 074
புன்புறவே! சேவலோடு ஊடல் பொருளன்றால்
அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று
அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து
இதுகாண்என் வண்ணம் இனி!. . . . . [074]

விளக்கம்:

புல்லிய நிறத்தையுடைய பேடைப்புறாவே! நின்சேவலோடூடல் நினக்குக் காரிய மன்றால்; எங்காதலர் எமக் கன்பு மிகவுடையாராயினும், அவர் மனநெகிழாது வலியரான தன்மையைப் பாராய்; அவர் தேரோடும் வந்து நீங்கிய வழிச் சுவடு நோக்கிப் பொன்னிறம் போர்க்க வந்த வண்ணமிதனைப் பாராய் இப்பொழுது.

பாடல் - 075
எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெகாப் - புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின் சென்ற ஆறு. . . . . [075]

விளக்கம்:

அழன்று சுடாநின்ற பகலோனது ஒப்பில்லாக் கதிரான் மாசுணங்கள் முறுக்கிவிட்ட கயிறுபோலப் புரண்டழியும் அத்தம், விரிந்துவிட்ட கூந்தலையுடையாள் அடுதிறலான் பின் விரும்பிச்சென்ற வழி.

பாடல் - 076
நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம்
அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப்
புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி. . . . . [076]

விளக்கம்:

என்னெஞ்சமே! இவளை ஆற்றுவிக்குஞ் சில சொற்களைச் சொல்ல நினைக்கின்றாயாயின், இவணோ தான் நெற்பொரியும் நீளத்தத்தைச் சொல்ல நினைப்பதற்கு முன்னே பிரிவினை யஞ்சிற்றால்; புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படை நெடுங்கண்களும் பிரிவினை யஞ்சிப் பனி கொண்டன: ஆதலான் நமக் கிவளைப் பிரியமுடியாது.

பாடல் - 077
வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால்
வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு?. . . . . [077]

விளக்கம்:

கொண்டணிந்து நிறையப்பட்ட தகரத்தையுடைய குழல்கள் அசையத் தாழ்ந்து துகிலைக் கையானே ஏந்தி மகரக்குழை மறித்த நோக்குடனே நீ வந்தால் யாம் போகோமோ? அரிய இடையினை யுடையாய்! நீஇரங்க வேண்டா.

பாடல் - 078
ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையில் காணாது - அருகல்
வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்!. . . . . [078]

விளக்கம்:

ஒரு கையினையும் இருகோட்டினையும் மூன்று மதத்தினையும் உடைய மால் யானைகள் பருகு நீரைப் பைஞ்சுனையின்கட் காணாவாய் மருங்கே வழிவிலங்கித் தளர்ந்துவீழும் வரைகளையுடைய அத்தத்தைச் சென்ற அவர் அவ்வழிஇடையூறின்றி அழிவிலராக.

பாடல் - 079
சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால்
நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்!. . . . . [079]

விளக்கம்:

நம்மைப் பிரிந்து போயினார் வருதல் செறி தொடி! சேய்த்தன்றால்; நின்மாட்டு நின்றொழுகுகின்றாருடைய சொற்களைத் தெரியாதாய்! போரின்கண் வென்றாரெடுத்த கொடிகள் போலத் தெளிந்திலங்கருவி தோன்றா நின்றது மிக்க மலை நாடு; ஆதலால், நீடின்றி இன்றே இரவின்கட் காண்பாயாக.

பாடல் - 080
உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். . . . . [080]

விளக்கம்:

அஞ்சத் தக்கவேல் போன்ற கண்களை யுடையாய்! ஒரு காலையுடைய தேர்ச் செல்வனாற் பிறர் கண்டார் வெருவும் வகை வீந்தவிந்த கானத்தானே முயற்சியாற் சிறந்து பொருடருவான் வேண்டிச் சென்றவர் இன்றே வருவர்; மிக்குக் கண் இடமாடா நின்றது.

பாடல் - 081
கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்கு
என்னுரைத்தீர்க்கு என்னுரைத்தாட்கு என்னுரைத்தீர்க்கு என்னுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு?. . . . . [081]

விளக்கம்:

கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! நீர் வாடிநின்றீர்; இதற்குக் காரணம் யானறிந்தேன்; நெடுங் கண்ணாள் இங்கு நின்று போகின்றாட்கு நீர் என்னுரைத்தீர்? நுமக்கு அவள் என்னுரைத்தாள்? அவட்கு நீர் பின்னை என்னுரைத்தீர்? அவள் உமக்குப் பின்னை என்னுரைத்தாள், மின்னிரைத்த பூண் விட்டு மிளிராநின்று?

பாடல் - 082
ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று. . . . . [082]

விளக்கம்:

ஆள்வினைக் கடனாகிய நெறியை ஆராயுங்கால், ஆடவர்க்குப் பூணுங் கடனாகப் பாதுகாத்து நல்லார் சொல்லி மேவினமையாற் றமக்கு அவ் வாள்வினை பூணுங் கடனாகத் தேடும் பொருட்டுச் செல்வர் நங் காதலர்; ஆதலாற் சின்மொழியை யுடையாய்! நீயதற்கு மனனழியுந் திறத்தின்கட் செல்லாமை நன்று.

பாடல் - 083
செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச்
சிதடி கரையும் திரிந்து. . . . . [083]

விளக்கம்:

இப்பெற்றித்தாகிய சுரத்தின்கட் செல்வாருளரே? நினைத்தலு மாகாதால்; நினைத்த நெஞ்சும் எரியும்; மாறிச் சுரத்தின்கட் சென்றார் சுரத்தை வெல்ல வல்லவரோ? தாமெடுத்துக் கொண்டவினை முடியும்படி; நல்லாய்! காட்டெருமைப் போத்துக்களைப் பிரிந்த பெண் எருமைகள் கதறா நிற்கும்; அங்குப் பலவாய்க் கிடந்த கற்களும் மா பரந்தாற்போலத் தோன்றும்; சிள் வீடுகளும் திரிந்து கதறா நிற்கும் ஆதலான்.

பாடல் - 084
கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப்போந்து எய்யும்
அருளில் மறவர் அதர். . . . . [084]

விளக்கம்:

கள்ளியங் காட்டின்கட் கடமாக்கள் இரிந் தோடும் வகை மறந்துஞ் செல்வரோ தம் மறிவை யுடையார்? வழிபோம் வம்பலராற் கொள்ளும் பொருளிலராயினும் கதுமெனப் போந்தெய்கின்ற அருளில்லாத மறவர் வாழும்வழியை.

பாடல் - 085
பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை யாக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை. . . . . [085]

விளக்கம்:

பொருள் பொருளாவதென்று சொன்னார் சொல்லைப் பொன்போல விரும்பித் தெளிதலான், அருளுடைமை பொருளாகாமை ஆவதாயினும் ஆக; பொருளைக் கொணரும் வகைமைபோல நின்னருளினாலே வேறோரிளமை கொணர்தற்கு எமக் குடன்படுவாயாக.

பாடல் - 086
ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது
அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து
மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. . . . . [086]

விளக்கம்:

ஆற்றுவர் ருளராயின், அவர் பிரிவினை அவர்கட்கு உரையாய்; தவிராதே நங்காதலர் செல்வா ரென்றாய்; ஆதலால், நீ எனக்கு மெய்யாகச் சிறந்தாயே யன்றோ? போகமாட்டாதே வருந்தி யிறந்து வீழ்ந்த யானைகளை அங்குள்ளவர்கள் தம் பசியானே எங்கும் பார்த்துத் தின்று போம்அத்தத்தினை விரைந்து.

பாடல் - 087
ஒன்றானும் நாம்மொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்கு அரிதாச் சேய சுரம். . . . . [087]

விளக்கம்:

பிறழாத வெலற்கரிதாகிய வில்லினை வல்லானாகிய வேல்விடலை தான் துணையாகச் சுரத்தைச் செலற்கரிதாக யாதானுஞ் சொல்லலாமோ? அப் பேணும் புகழான் பின்சேறல் ஒழுக்கத்திற் பிறழாது காண்.

பாடல் - 088
அல்லாத என்னையும் தீரமற்று ஐயன்மார்
பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து. . . . . [088]

விளக்கம்:

எம்பெருமானோடு பொருந்தி இங்கு நின்றும் ஒழிந்து போவதற்கு முன்பு வேறுபட்டு மற்றதன்கண் அல்லாத வென்னை நீ இங்கே யிருந்து நம் மையன்மார் பொல்லாத தென்று கொள்ளும் மனத்தின் கண்ணுள்ள கோளினையுந் திருத்தி நீ பொருந்தாய்; எல்லார்க்குந் தத்த மனத்தின்கணுள்ள வேறுபா டொழியுமாயின், வல்லி போன்றிருவாட்கண்ணாய்! அல்லதூஉம், உடன்போகின்ற என்னைப் புல்லிக் கொண்டொழிவான் வேண்டி மனத்தின்கட் புலந்து நீங்குதற்கு வல்லையாயொழியின், வகைமையையுடைய நீண்ட வாட்கண்ணாய்! ஆண்மையல்லாத வுரைகளை என்னை நீக்கி, நம்மையன்மார் பொல்லாத தென்னுங் கருத்தினையும் நீக்கி எல்லார்க்கும் பொருந்துவாயாக என்றுமாம்.

பாடல் - 089
நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான். . . . . [089]

விளக்கம்:

பொருந்தி நீர் சென்மின்; அவரும் நமக்குச் சுற்றத்தாராயின், நீர் அவரைச் சென்றெய்த வேண்டுமென்று எண்ணிய எண்ணம் எளிது; நீர் கருதிய வெய்ய பகலோனன்னானை யான்கண்டேன், கண்டாளாம் தண்மதியனையாளை இவள்தான்.

பாடல் - 090
வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக்கு ஏறக்கொணருமோ வெல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான். . . . . [090]

விளக்கம்:

நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு வினவாநின்றேன்: உன்னுடைய தெய்வத்தன்மையுடைய கழங்காற் பார்த்துக் கூறாய்; உலகத்தார் கூறும் நற்குணத்தினை யுடையனாய் எல்வளையை உடன் - கொண்டுபோனவன் என்மனைக்கே மணஞ் செய்வதாகக் கொண்டு வருமோ? அஃதன்றி, யாம் வெறாகத் தன் மனைக்கே மணஞ்செய்யக் கொண்டு போமோதான்?

பாடல் - 091
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்டு
இருந்துறங்க வீயும் இடம். . . . . [091]

விளக்கம்:

புள்ளிப் பருந்துகள் கழுகுடனே வழி போவாரைப் பார்த்து அங்கிருந்து உறங்கப்பட்டுக் கள்ளியுஞ் சாருங் காரோமையும் நாரில் பூ நீண்முருங்கையும் வேயும்பொருந்தி யமர்ந்து வீயுமிடத்தை உயிர் வாழ்பவர் நண்ணுவரோ?

பாடல் - 092
செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக்
கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு. . . . . [092]

விளக்கம்:

தம்மை யடைந்தார் சீர்மையழிய நல்லார் செல்வரோ? சிள்வீடுகள் நெருங்கிக் கடிய வோசையாற் பிறரைக் கொல்வனபோலக் கூப்பிடாநிற்கும் வெய்ய வெயிலோன் மிக்குப் பொடிகள் வெந்து பொங்கி மேலேவிசும்பினைச் சுடாநிற்கும், கீழின்கண் வழிபோவார் அடி வேவ அவர் கண்களைச் சுடாநிற்கும் இப்பெற்றிப்பட்ட அவ்வழியினை.

4. முல்லை

நிலம் :- காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.

பாடல் - 093
கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. . . . . [093]

விளக்கம்:

கருங்கடலைப் பருகிய வெண்டலை முகில்கள் இருங்கடலின்கண்ணே புக்கு மாவினைக்கொன்ற முருகன் வேல்போல மின்னிப் பெருங்கட றன்னைப்போல முழங்குதலால் முல்லைக் கொடிகளெல்லாம் குருந்தமரத்தின்மேற் சென்றணையக் கண்டு யான்ஆற்றுந் திறம் என்னை கொல்லோ?

பாடல் - 094
பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. . . . . [094]

விளக்கம்:

பகற் பொழுதைப் பருகிப் பல்கதிர்ஞாயிறு மலையின்கட் சேர, திங்ளானது இருளைப் பகையென்று கருதிப் பகலின்றன்மை வர வெண்ணிலாவை யுகாநின்ற மருண்மாலையின்கண், வேய்த்தோளாய்! என்னிடத்து நிலைகின்றதில்லை; என்னுயிர் சென்று.

பாடல் - 095
மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. . . . . [095]

விளக்கம்:

வெங்கதிரோன் மேனோக்கிப் பருகிய நீர் கீழ் நோக்குதலால் காடெல்லாம் ஒக்கங்கொண்டு அழகாகப் போதுதோறும் அரிவண்டுகள் நெட்டெழுத் தோசைமேல் மேவிச் சாதாரி என்னும் பண்ணினைச் சார்ந்தொலியா நின்றன; மானோக்கி! இதனைக் காணாய். அல்லதூஉம், 'போதாரி வண்டெலாம்,' என்பது போதினைப் பரந்து இவ்வண்டெல்லாம் எனலுமாம்.

பாடல் - 096
இருள்பரந்து ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. . . . . [096]

விளக்கம்:

சக்கரத்தையுடைய மாயவனிறம் போல எங்கும் இருள்பரந்து, அம்மாயவன் முன்னோனுடைய நிறம் போன்று வியப்புமிக்க பானிறமும் போன்ற வெண்ணிலாவும், பையவரல்குலாய்! இவை விரும்பப்படுந் துணையில்லாதார்க்கு வேல் போலும்.

பாடல் - 097
பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. . . . . [097]

விளக்கம்:

தனக்கு வலிபோலக் கருதி மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம்போல ஞாயிறு குட மலையைச் சேரத் தோழி! மருண்மாலையின்கண் அம்மாயவன் முன்னோன் நிறம்போல மதி தோன்றுதலான் யான் கொண்ட மயலை ஆற்றமாட்டுகில்லேன் வருந்தி.

பாடல் - 098
வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. . . . . [098]

விளக்கம்:

ஆயப்படுங் கழல்போல அரும்பி, பொன் வட்டுப்போல முதிர்ந்து, பின்னைப் பூமாலையாய், இதழாய் விரிந்து, மடவார் குழல்போலக் காய்த்து, பின்னைத் துளையையுடைய கோலாய் மிக்கு அழியாநின்றன; வியன் புறவின்கண்ணே வீழ்துளியானே பெருங் கொன்றைகள்: இதனைப் பிறரோடே நீ போய் நீயுங் காணாய்நீடியாதே.

பாடல் - 099
பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. . . . . [099]

விளக்கம்:

பொன்போன்ற வெயிலொளியால் வெந்து காடின்றியிருந்த கருவரைகள் கார்ப்பருவஞ் செய்து மலரிதழ்களான் மூடப்பட்டாலும், அதனாற் பயனென்? பருவ மன்று என்று சொல்லி வாளாநின்றி; இலங்கெயிற்றை யுடையாய்! என்மேனியின் கண்ணுள்ள ஒளிபோல ஒளியிழந்தன என் கண்களும்: போயிழந்த நாள்களின்எண் மிகுதலான் எணணி என்விரல்களுந் தேய என்தோள்களும்வனப்பிழந்தன.

பாடல் - 100
பண்டுஇயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்டுஇயைய மாந்திக்கால் வீழ்த்து இருண்டு - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். . . . . [100]

விளக்கம்:

தாமுன்பு நம்மைப் பிரிகின்றநாட் குறிப்படச் சொல்லிய சொற்பழுதாயிற்றால்; பெருங்கடற் சென்று கண்டு நிரம்பப் பருகிக் கால்வீழ்த்தே யிருண்டு திசை யெட்டு மழை தோன்றக் காதலர் தேர் தோன்றுகின்றதில்லை: ஆதலால் என் கண்கள் பீர் தோன்ற நீர் தோன்றாநின்றன.

பாடல் - 101
வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். . . . . [101]

விளக்கம்:

வண்டினங்கள் விரும்பாத ஆம்பலென்னும் பெயரையுடைய குழலும், ஒழுகிய மலர்களிற் புக்கு வண்டினங்கள் வாய்வீழாத அந்தியாகிய மாலையும், வண்டினங்கள் புக்கொலியாத பூச்செயல்களையு முடைய புரவி பூண்ட தார் மணிகளையுடைய புரவிகளாலே ஒப்பிக்கப்பட்ட தேரினையுமுடையான் வாராத நாளேவந்து என்னை நலியும்.

பாடல் - 102
மான்எங்கும் தம்பிணையோடு ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. . . . . [102]

விளக்கம்:

மான்கள் தம்பிணைகளைக் கூடி எங்கும் விளையாட, அவற்றின் மறிகளு முகள, மழை யெங்கும் பெய்து வாய்த்து வளங் கொடுப்ப, காடெங்கும் தேன்களும் தம்மொடு சார்ந்த வண்டுகளோடு தீதாவென் றொலித்தலான், ஆராயாதே மயங்கிப் பருவத்துக்கென்னா வியைக் கடனாகக் கொடுத்தேன்.

பாடல் - 103
ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. . . . . [103]

விளக்கம்:

ஒருவந்த மன்றால் என்பது இது பருவமென்பது மெய்ம்மை யன்றா லென்றவாறு. உறை முதிரா நீரால் என்பது மழை பெயல் நிரம்பாத நீராலென்றவாறு; வம்ப மழை யென்றவாறாம், கருமந்தான் கண்டழிவு கொல்லோ என்பது கருமமாவது பருவமல்லாத பருவத்தைக் கண்டழிவதோ என்றவாறு. பருவந்தான் பட்டின்றே யென்பது பருவம் வந்து பட்டதில்லை என்றவாறு, என்றி என்பது இவையெல்லாஞ் சொல்லி என்னைத் தேற்றா நின்றாய் என்றவாறு பணைத்தோளாய் கண்ணீரா லட்டினே னாவி யதற்கு என்பது கண்ணீரே நீராக வார்த்து என்னுயிரைப் பருவத்துக்குக் கொடுத்தேன், பணைத்தோளாய் என்றவாறு.

பாடல் - 104
ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. . . . . [104]

விளக்கம்:

ஐந்து நிறத்தினையுமுடைய வில்லை யெழுதினாற்போலக் கோலி, முந்நீரைப் பருகி, ஈந்தின் கனிபோன்றருந்துகின்ற வுருவோடு இருங்கொண்மூ நாற்றிசைக் கண்ணும் ஒன்றா யுருமுடைத்தாய்ப் பெய்யப்படுகின்ற வானம் என்னைக் கொல்கின்றாற்போலத் தழைத்துப் பூப் பேனென்று என்னைக் கொன்றாய்; கொன்றை மரமே!

பாடல் - 105
எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்துஅங்கு ஒடுங்கழுத்தம் கொண்டு. . . . . [105]

விளக்கம்:

பகலினைத் தருங் கதிரோனுடைய கதிர்கள் நீரை நிலத்தின்கட் பருகி யீன்ற காரானே கொல்லைகள் தருகின்ற வாலிய கொடிகண் மரந்தோறுஞ் சென்றேறு வனவற்றைக் காணாய்! அன்றியேயும், முல்லைகள் பெருந்தண்டளவுடனே குருந்து அங்கு ஒடுங்கு அழுத்தங் கொண்டு தங்கேளிரைப்போ லேறுவன காணாய்!

பாடல் - 106
என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்துஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. . . . . [106]

விளக்கம்:

என்னரே யேற்ற துணைப்பிரிந்தார் என்பது எப்பெற்றியர் அவர் தமக் கன்புபட்ட காதலரைப்பிரிந்தார் என்றவாறு, ஆற்றென்பா ரன்னரே யாவ ரவரவர்க்கு என்பது அக்காதலித்தாரைப் பிரிந்தாரோடொப்பர், பிரியப்பட்டார்க் காற்றி இறந்துபடாதிருக்கச் சொல்லுவார் என்றவாறு, முன்னரே வந்து ஆரந் தேங்கா வரு முல்லை சேர்தீந்தேன் கந்தாரம் பாடுங் களித்து என்பது எனக்கு முன்னே வந்து சந்தனப் பொழிலையும், தேங்காவின்கண் வளர் முல்லையுஞ் சேர்ந்த தீந்தேன்கள் கந்தாரமென்னும் பண்ணினைக் களித்துப் பாடாநின்றன, என்றவாறு.

பாடல் - 107
கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்தது இனி. . . . . [107]

விளக்கம்:

கருதிக்கொண்டு பூத்த காயாம் பூவினைத் தொகுதியையுடைய மயிலென்றஞ்சி உருமுற்ற ஐந்தலை நாகங்கள் உருமுற்ற பூங்கோடல்களை யொவ்வாநின்ற அழகிய இக் கார்ப்பருவந்தான், எம்முடைய மாட்டேநலிய வந்தது இப்பொழுது

பாடல் - 108
கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகாது உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. . . . . [108]

விளக்கம்:

உருமுடை வான் ஒன்றொழிய நோய் செய்தவாறு கண்ணுளவாயின் முல்லையல்லை காணலாம் என்பது உருமுடைய வான் இறந்து பாடொன்றையும் ஒழிய மற்றைக் குறிப்புக்கள் ஒன்பதும் எனக்குளவாம் படி என்னை நோய் செய்தவாற்றை நினக்குங் கண்ணுள வாயின் முல்லையல்லை யாதலின் நக்குக் காண் என்றவாறு,எண்ணுளவாயின் இறவாவால் என்பது அவர் குறித்த இத்துணை நாளுள் வருகின்றேன் என்ற எண் பழுது படாவாயின், அவர் சொன்ன நாளைக் கடவா அன்றோ என்றவாறு. எண்ணுளவா வன்றொழிய நோய் மொழிச் சார்வாகாது என்பது என்னை ஆற்றுவிக்க வேண்டி நின் மனத்தின்கண் எண்ணின எண்ணிண் கண்ணுள்ளவா வன்றி என்னோ யொழிதற்கு நீ யாற்றுவிக்கின்ற நின்மொழி எனக்குச் சார்வாகாது என்றவாறு.

பாடல் - 109
என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,
இணைபிரிந்து வாழ்வர் இனி. . . . . [109]

விளக்கம்:

என்னைப் போன்ற தோழி! பொன் போன்ற தார்களைக் கொன்றைகள் ஈனும் வகை இருங்கடலைப் பருகின முகில்களாதலால், பொன் போலப் பெறுதற்கரிய தந்துணைகளைப் பிரிந்து போய் வாழ்கின்றார் அத்துணைக்கண் அவர்மாட்டுத் தோன்றுவர்; நம்மோடிணைதலைப் பிரிந்து வாழ்கின்றார் இப்பருவத்தின் கண்ணுந் தோன்றுகின்றிலர்.

பாடல் - 110
பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்று ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்டு ஆற்றா
மலையழுத சால மருண்டு. . . . . [110]

விளக்கம்:

பெரியாராயிருப்பார் பெருமைக்குணம் மெய்ம்மையாகப் பெரிதே: காண முன்னரியரா யுள்ளார் இடர் வந்த இப்பொழுது எளியராயினா ரென்றிரங்கி யழுங்கி ஆற்றாவாய் மலைகள் மிகவும் அழுதன; தலை சாய்க்கும் வகை பரிவாய்த் தண்டளவங்கள் தஞ்சிறுமையால் நகக் கண்டு,

பாடல் - 111
கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார்
வானம் விளிப்பவண்டு யாழாக - வேனல்
வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய்
உளராகி உய்யும் வகை. . . . . [111]

விளக்கம்:

கானங் கடியரங்காகக் கோடலார் வியந்து கைம்மறிப்ப, முகில் பாட, வண்டுகள் யாழாக, வேனற் காலத்துக் களியாத மயில் களித்தாடாநிற்க, வாட்கண்ணாய்! சொல்லாய்; காதலரைப் பிரிந்தார் இறந்துபடாது உளராகியுய்யுந் திறத்தை.

பாடல் - 112
தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக
வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி. . . . . [112]

விளக்கம்:

பகலோன் மலையின்கண் மறைய இனிய குழல் இன்னாதாய் வெய்தாக இக்காலத்தின்கண் வாராதே விடுவானோ? வாட்கண்ணாய்! பசுமையார்ந்த குருந்துடனே முல்லைகள் பூங்கொத்தை ஈன்றான காண்; இனி நாமும் அவர்க்கு விருந்துசெய்து ஒழுகிநிற்றல் நெறி.

பாடல் - 113
பறியோலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப
நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!
விரியுளைமான் தேர்மேல்கொண் டார். . . . . [113]

விளக்கம்:

படுத்துக் துயிலும் பறி கீழாக ஓலைப்படன் மழைத்துளியைக் காத்தற்கு மேலாக இடையர்கள் கிடந்து யாடுகளைப் பிறித்தற்குக் கருவியாகிய பிறியோலையைப் புடை பெயர்வித்து அழைத்துரப்ப, நரிகள் அஞ்சிக் கதறும் யாமத்தின் கண்ணும் தோன்றாராற் றோழி! விரிந்த உளையையுடைய மாவாற் பூட்டப்பட்ட தேரை மேற்கொண்டு போயினார்.

பாடல் - 114
பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக்
காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக்
குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து
வருந்தேயென் றாய்நீ வரைந்து. . . . . [114]

விளக்கம்:

ஒலிக்கின்ற கடலைப் பருகி அந்நீரைக் காத்துக் கருமுற்றிப் பகுத்துச் செறிந்த துளிகளைச் சிதறுவதற்கு முன்பே பூத்துக் குருந்தே! பருவத்தைக் குறித்துக் காட்டி இவளையே வரைந்து வருந்துவாய் என்றாய் நீ.

பாடல் - 115
படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும்
கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண்
நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்குத்
தேர் நின்றது என்னாய் திரிந்து. . . . . [115]

விளக்கம்:

ஒலியா நின்ற தடங்கண்ணையுடைய பலமுரசு போல் முகில்கள் முழங்குவதன் மேலும், மின்னே கொடிய தடங் கண்ணினையுடைய கூற்றமாக, அழுகின்ற நீர் விடாது நின்ற நெடுந்தடங்கண் ணோக்கினையுடைய நெடும்பணை மென்றோளாட்கு நீ, மறித்துவந்து நின் மனை வாயிலின் கண்ணே அவன்றேர் நின்றதென்று சொல்லுவாய்; எமக்கு முன்னே சென்று தூதாக.

பாடல் - 116
குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே,
அரும்புஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள்
பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. . . . . [116]

விளக்கம்:

குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! பீலி முருந்தினையொக்கும் இவளெயிற்றுடனே பூமாலையையும் பூப்பித் திருந்து கோங்கரும்பு முதலாயினவற்றை வென்று சிதைக்கும் முலையினை யுடையாளுடைய குழறாழ்ந்த நிறைந்த வேய்த்தோள்களைப் பெரும்பீர் நிறம் போலப் பசப்பித்தீர்மீட்டும்

பாடல் - 117
கதநாகம் புற்றிடையக் காரேறு சீற
மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம்
பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்!
என்பசந்த மென்தோள் இனி. . . . . [117]

விளக்கம்:

சினத்தினையுடைய பாம்புகளும் புற்றினையடையும் வகை உருமேறு வெகுண்டிடிப்ப, மதத்தையுடைய யானைகள் அவ்வுரு மேற்றுக்கு எதிரே முழங்க, புதலால் சூழப்பட்ட நாகமரங்கள் வெள்ளிபோலும் இதழ்கள் புறஞ்சுற்றப் பொன்போலுந் தாதுக்களை உள்ளே பயந்தனவாதலாற் பூங்கோதாய்! நின் மென்றோள்கள் யாதுகாரணத்தாற் பசந்தன இப்பருவத்து?

பாடல் - 118
கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப்
பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித்
தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்!
என்பருவம் அன்றுஎன்றி இன்று. . . . . [118]

விளக்கம்:

விளக்கு மழுங்கிப் பீர்நிறம் கோடலான் அவ்விளக்கினைத் தூண்டுவாள் மெல் விரலினைத் தோன்றிப் பூவின் மேற் சென்றன காந்தண் முகைகள் போலும் வகை கார் நீர் தோன்றுதலாற் காரின் பருவத்தைச் செய்தன கானங்கள்; இத்தைக் கண்டும், தடங்கண்ணாய்! எனக்குக் காதலர் சொல்லிய பருவம் அன்றென்னா நின்றி.

பாடல் - 119
உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத்
தகவு தகவனென்று ஓரேன் - தகவேகொல்
வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல் வீந்து. . . . . [119]

விளக்கம்:

மழைத்துளிகள் உகவுங் கார்ப்பருவம் அன்றென்று சொல்லாநின்றார் இவ்வூரார்; அச் சொலவு தான் அவர்க்குக் குணமோ குற்றமோ என்பதறியேன்; அதுதான் அவர்க்குக் குணமே கொல்லோ! வளவிய துடுப்பாய்ப் பாம்பாய்விரலாய் வளைமுறியாய் வெண்குடையாகாநின்றது தண்கோடலழிந்து.

பாடல் - 120
பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
துத்தம் அறையும் தொடர்ந்து. . . . . [120]

விளக்கம்:

நம்மைப் பெருமையிலரென்று சொல்லுவார் காணாதாராகாரே! வளவிய கொன்றைகள் கொம்பெல்லாம் பொன்னாகப் பூக்க. வண்டொடு தேன்கள் துத்தம் என்னும் பண்ணினைத் தம்முட் பொருந்தி ஒலியா நின்றன காடெல்லாம்; வெய்ய கதிரோடு கூடி வெங்கதிரோன் அத்த மலையை அடைதற்கு முன்னே.

பாடல் - 121
ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து. . . . . [121]

விளக்கம்:

யானொருத்தி; எனக்கு ஒன்றல்ல பல பகைகள் என்னை மலைத்தலே தமக்கு ஒழுக்கமாகக் கொண்டன: வேறாகத் துணையைப் பிரிந்து பொருந்தில் மடற்பனை மேலிருந்த அன்றில், மாலைப்பொழுது, மழை பெயல், ஆம்பற்குழல். கடல் அன்றியே முகில்கள் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் மேல் வெகுண்டு.

பாடல் - 122
கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற,
ஏனம் இடந்த மணிஎதிரே - வானம்
நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி
புகுவது போலும் உடைந்து. . . . . [122]

விளக்கம்:

காடுகள் தழைத்துத் தலையெடுக்க, ஆயர் ஊதுங் குழலோசை தோன்ற, ஏனங்கள் இடந்த மணிகளினெதிரே முகில்கள் சிரிப்பதுபோல மின்கள் ஒளிவிட இக்காலத்தும் இறந்து படாமையான் நாணில்லாத என்னுயிர் ஒழுகுவது போலவுளது.

பாடல் - 123
இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை
எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளியச் சுடப்பட்ட வாறு. . . . . [123]

விளக்கம்:

இப்பிறப்பின்கட் செய்த தீவினை இப்பிறப்பின்கண்ணே விளையும் போலும்! மறுபிறப்பின்கண் ஆம் என்பார் அறியாதார் காண்; முன்பு நம்மை எளியரெனக் கொண்டு துயர்செய்த ஈர்ங்குழலார், தோழி! எல்லாரும் அறியச் சுடப்பட்டவாற்றைப் பாராய். குழல் நலிவது நெருப்பாற் சுடப்பட்டுத் துளை பட்ட பின்: சூடுண்டது பிறரை நலிந்ததாற் பயனென்று குழலைச் சொல்லுமாறென்னையெனிற் பிறரை நலியுந் தன்மை முன்பே அதற்குளதாதலாற்பட்ட தெனக் கொள்க.

5. மருதம்

நிலம் :- வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் :- ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.

பாடல் - 124
செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்
இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வய லூரன்மற்று எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து. . . . . [124]

விளக்கம்:

செவ்வழி யாழையுடைய பாண்மகனே! சீரார்ந்த விளையாட்டுத் தேரினைத் தன்கையால் இம்மனையின்கண் ஈர்த்து நடத்துகின்ற என்மகன் பிறப்பதற்கு முன் இம்மனையின்கட் பிரியாது ஆய்வயலூரன் ஒழுகினான்; பின்னை யெல்லாம் எங்கையர் தோளே மிக விரும்பி முயங்கினான்; ஆதலான் இப்பருவம் யாம் அவர்க்குத் தக்கேம் அல்லேம்.

பாடல் - 125
மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து. . . . . [125]

விளக்கம்:

அழகிய காம்பையுடைய யாழ்ப்பாணனே! மண்ணாற் செய்யப்பட்ட யானைப்பாகராகிய என்மகனார் தாங் கொட்டுகின்ற தூக்கோற் றுடியோடு இங்குத் தோன்றி யொழுகுவதற்கு முன்பு தூய புரிப்புச் செயல் களையுடைய தொடியுடையார் மனையின்கட் சென்று தோன்றி யொழுகுமோ சொல்லாய் இப்பொழுது; அவனால் வரையப்பட்ட வாழ்வினையுடையேன் வாயில்கடந்து.

பாடல் - 126
விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல்
முளரி மொழியாது உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை. . . . . [126]

விளக்கம்:

விளரியென்னும் பண்னைச் செய்கின்ற யாழையுடைய பாண்மகனே! யாங்கள் விரும்பாதன அழையா தொழிக; எங்கண்மாட்டு நினக்கு ஈரமல்லாத முளரி போன்ற மொழிகளைச் சொல்லாது இங்கு நின்றும் புடை பெயர்ந்து கிளர்ந்து நீ போய்த் தாமரைப் பூப் போன்ற கண்களையுடைய வயலூரன் இன்று புதுமனையின் கண்ணே புகுவதன்முன் அப்புதுமனைக்கண் நீ சென்று வாராநின்றான் என்று அவனாற் காதலிக்கப்பட்ட பரத்தையர்க்கு உரை.

பாடல் - 127
மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்கு உரையாது எழுந்துபோய் - இங்கண்
குலம்காரம் என்றுஅணுகான் கூடும்கூர்த்து அன்றே
அலங்கார நல்லார்க்கு அறை. . . . . [127]

விளக்கம்:

மெல்லிய இடத்தையுடைய மிக்க வயலூரனுடைய மெய்யுரைகளை எங்கட்குச் சொல்லாதே இங்கு நின்று மெழுந்து போய் இவ்வுலகத்தின்கட் குலமுடைய மனையாளைப் புணர்தல் புண்ணிற்கு இடுங் காரம் போன்று வெய்யதென்று தலைவன் கருதி யவர்களை நெருங்கானாய், பரத்தையரைப் புணர்தல் பால்போன் றினிக்கும் பண்புடையதெனக் கருதி அவர்களை விரும்பிக் கூடுமென்று, தம்மை யழகுபடுத்திக் கொள்வதா நன்மை யொன்றினையே கொண்ட பரத்தையரக்குப் பகர்வாயாக.

பாடல் - 128
செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்து ஆடுவாள் - அந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்று ஆற்றாமை நன்று. . . . . [128]

விளக்கம்:

செவ்விய தாமரை மலரோடு ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற செந்நெற் பயிரினது பசிய கதிர்க்குலைகளையுடைய யாற்று நீரினிடத்திலே குதித்து விளையாடுகின்ற பரத்தையினது அழகிய மார்மீதணிந்துள்ள மலர் மாலையின் வயப்பட்டு, அவளது மனம்போல வெளிப்பட்டு நடக்கும் மருத நிலத்துார்த்தலைவனது நட்பினின்றும் பகையின்றியே, விலகி துன்புற்று வாழ்தல் நல்லதாகும். (என்று தலைவி தனக்குட்டானே கூறினாள்.)

பாடல் - 129
வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய
புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று. . . . . [129]

விளக்கம்:

அப்பொழுது அலர்ந்த தாமரைப் பூவினிடத்தே செவ்விய நெற் கதிர்கள் வணங்கித் தங்கும்படியாக கூத்தியர் ஆடுதலில்லாத புனலிடமாகிய யாற்று நீரிலே நீர்குடைபவளாகிய பரத்தையினது சிறந்த பலரும் தழுவுதற்குரிய மார்பினை தழுவும் நலமிக்க மருத நிலத்துார்த் தலைவனது நல்ல மார்பினை தழுவாமை நல்லதாகும். (என்று தலைவி தனக்குட்டானே கூறினாள்)

பாடல் - 130
இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை
மெய்ம்மருட்டு ஒல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. . . . . [130]

விளக்கம்:

அன்பு காரணமாக மேற்கொள்ளப்பட்ட உண்மையான போக்கினை கொண்டிராத மிக்க நீர்வளமிக்க மருத நிலத்துார்த்தலைவனது பொய்மையான மாய மொழிகளை கேட்டபோது என்பால் தலைவன் செய்யும் நிலையுடைக்காதற் செயல்களே அவனது புகழினை எடுத்துக் காட்டுவனவாகும் கூடல் கருதி நிற்பவராகிய தலைவரை (உங்களுடைய புகழ் மொழிகளே அவர்தம்) இகழினை எடுத்துக் காட்டும்படி மிகுதியும் போற்றிக் கூறாது நடவுங்கள். (என்று தலைவி வாயிலாக வந்தார்க்குக் கூறினாள்.)

பாடல் - 131
மடங்குஇறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண!
தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. . . . . [131]

விளக்கம்:

மடக்கப்பெற்ற இறால் மீனினைப்போன்ற யாழினையுடைய நற் பண்புகளை மேற்கொண் டிராத பாணனே! வளைவுற்ற இறால் மீன்கள் நாணினாலே தொடுக்கட்பபட்ட வில்லினை ஒத்திருக்கும் மலர்கள் நிரம்பிய பொய்கைகள் மிகுந்த மருத நிலத்துார்த் தலைவன் பொய்மையான மொழிகளை தெரிந்து பெற்ற, கீழ்நாள் சென்ற நாட் செய்திகளை கிளர்தலாக எடுத்துச் சொல்லி எமக்குள் தொடங்கப் பெற்றுள்ள உறவின் தன்மையினை நின்சொற்களினாலே துணிந்து கொள்ளுமாறு கூறவேண்டுவதின்று. (யாம் நன்கு அறிவேம், என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 132
எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர்
மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னாது இறவாது இவணின் இகந்தேகல்
பின்னாரில் அந்தி முடிவு. . . . . [132]

விளக்கம்:

என் பின்னவர்களாகிய பரத்தையர்தம் மனையகத்தே உள்ளவனாகிய பாண்மகனே! நீ (எனக்குப்) பிறராயுள்ள பரத்தையரினது மனை யென்று (என் மனையைப்) பிறழ வுணர்ந்து வந்து விட்டாய் என் பின்னவர்களாகிய பரத்தையரின் மனையகத்தே (இப்பொழுது) மாலை வேளையின் இறுதியாகிய மணவிழாத் தொடக்க வேளையாகும், (ஆகலின்) மீண்டும் எம் மனையினை அப்பரத்தையர் மனையெனக் கருதாது (வேறு எவர் மனையினையும் இம் முறையிலே) தவறாகக் காணாது இவ்விடத்திருந்து நீங்கி. (மணவிழாத் தொடக்க வேளையினையுடைய பரத்தையர் மனைக்குச்) செல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 133
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. . . . . [133]

விளக்கம்:

பாலையென்னும் பண்ணினாற் சிறந்த யாழினையுடைய பாணனே! முன்பு நின் தலைவனுக்கு மாலைக் காலத்தே பாடவேண்டிய பண்ணினை பாடி ஊழியஞ் செய்த தில்லையோ; காலைவேளையிற் பாடவேண்டிய பண்ணினை பாடும்படியான நிலையினை தெரியாதவனாய் சாம்புதலில்லாத உன்னுடைய பொய்மையான சொற்களுக்கு உளநெகிழும்படியான இடத்தினை தெரிந்து விரும்பிச் செல்வாயாக. (என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 134
கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா
அடியேன் பெற்றா அருள். . . . . [134]

விளக்கம்:

பெருந்தன்மை முதலிய நற்பண்புகள் மிகுந்த மக்கட்கு யாவரையும் தமக்குரியரெனக் கொண்டாடுந் தன்மை நீங்காதுறையும் போக்காலோ பழமையானவைகள் மக்கட்குப் பல்லாற்றானும் பயனுறுதலை நினைந்து பார்த்தமையாலோ உரிமைகள் (பல வாய்ந்த) பல குடிமக்கள் தக்க தலைவர்களை பெற்றார்களைப் போல (மிகவும் தாழ்மையுள்ள யான் சுற்றம் போன்று (வாயில் நேர்தற்குக் காரணமாக) அடைந்த (தலைவி காட்டிய) இவ்வருளானது. (எனக்கு வாய்த்தது? என்று விறலி தோழியினிடங் கூறினாள்.)

பாடல் - 135
என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணியிகவான் சாலப் பணிந்து. . . . . [135]

விளக்கம்:

பெண்ணே! நான் சொல்வதைக் கேட்பாயாக (அன்று நம்மைப் பிரிந்து சென்ற) அத்தலைவன் தெய்வம் போல்பவளாகிய தலைவியின் பின்னே (சென்று) அவள் ஏவுவன செய்து மார்பிலணிந்துள்ள அணிகலன்கள் மார்பினை விட்டு முன் செல்லும்படியாக மிகுதியும் அவளை வணங்கி அவள் கூறுங் கட்டளைகளை விலக்க விருப்பமில்லாதவனாய் நடக்கின்றான் என்னே! பெரிய பூவுலகத்திலும் துறக்கத்திலும் இதற்குமுன் இம்முறையினைக் கேட்டாவது கண்டாவது முடிந்த நிலையினை தெரியேன். (என்று காமக்கிழத்தி தன் தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 136
எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே!
தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை. . . . . [136]

விளக்கம்:

யாழையுடைய பாணனே! இவ்விடத்தே (எனக்கு வாய்த்த உவ்விடத்தே திரிபவனாகிய என் மகன் தன் சிறிய கை (சாடை) களாலும் செவ்வாயின் மழலை மொழிகளாலும் பொருள் புலப்படாத நிலையில் பன்முறை குழறிக் கொண்டு விரைந்து சென்று மிகவும் நாளடைவில் வளர்ந்த முறையான் நான் எனக்குப் பின்னவளாகிய பரத்தை (தலைவனோடு கூடிச் சிறப்புற்றிருக்குந்) தன்மையினைப் போன்று கிளர்ச்சியுற்று வாழ்கின்றனன். (ஆகலின் எனக்கொரு குறையுமின்று. என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 137
கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்து அழகாத்
தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. . . . . [137]

விளக்கம்:

பெரிய கொம்பினையும் சிவந்த கண்களையுங் கொண்ட எருமையானது வயல்களில் (விளைந்துள்ள) பெரிய (கொம்பு) கழிகளாகிய மெதுவான கரும்புகளை மோதி அரிய கொம்புகளாலே குமுத மலர்களை கலக்கி அழகிய குவளை மலர்களை தின்று வாயினைத் தாழவைத்து அழகாக பற்கள் அசை போடுவனவாகக் காணப்படும். (பாராய் தோழீ! என்று தலைவி கூறினாள்.)

பாடல் - 138
கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்துஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர்த் தகை. . . . . [138]

விளக்கம்:

இம்மைந்தனின் தகப்பனாராகிய தலைவரின் மருத நிலத்தூரின் தன்மையானது கன்றினை (எருமைகள்) நினைந்து (மடிவழியாகச்) சோரவிடப்பட்ட பாலானது தாமரைப் பூவினிடத்தே பெரிய (வெண்மையான) துளியினைப் போன்று அமர்ந்திருக்கும் அன்னப் பறவையினை உண்பிக்க வேண்டி வாய்க்காலாகப் புறப்பட்டு (தாமரைத் தடாகத்தைச்) சேர்ந்து உள்ளிருந்து மேலேறி (கண்டார் இஃதென்?) அழகிய காட்சித்து என்று வியக்கும் மேன்மையினை யுடைத்து. (என்று தலைவி தோழியிடங் கூறினாள்)

பாடல் - 139
மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு
தாராத்தோறு ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர். . . . . [139]

விளக்கம்:

(மேலமர்ந்து) ஊர்தற் கியலாத சிறு தேரினையுடையானாகிய என் மகனின் தகப்பனது மருத நிலத்தூரானது மருதமரங்களுடன் காஞ்சி மரங்களும் பொருந்தி வானளாவிய தாலுண்டான நிழலின்கண்ணே காளைகளுடனே உழைப்பவர்களாகிய உழவர்களின் ஒலியானது நாரைகளுடன் வாத்துக்களின் ஒலிகள் தோறும் சென்று கலந்து மிகுந்து காணும்படியான குளிர்ந்த அழகிய வயல்களோடு கூடியதாம் (என்று தலைவி தோழியிடங் கூறினாள்).

பாடல் - 140
மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்று
உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார்
வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊ ரரவர் மகள். . . . . [140]

விளக்கம்:

மண்ணிடத்தே படிந்த குலையினையுடைய வாழை மரத்தினிடத்தே வைக்கப்பெற்ற தேனினை நம்முடைய தென்று நினைத்து உண்டு மயக்க (முற்ற) (மருத நிலத்துார்த்) தலைவரின் மகளாகிய தலைவி அழகிய தமாரைப் பூவினிடத்திலும் தன் கண்ணிடத்தே நிறைந்து நின்றுள்ள மருத நிலைத்துார்த் தலைவனின் நிறவழகினை கண்டு (மாலை) தொடுத்தலைச் செய்வாள். (என்று செவிலிக்குத் தோழி கூறினாள்.)

பாடல் - 141
அணிக்குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன
மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை இருந்துறையும் ஊர். . . . . [141]

விளக்கம்:

(பாணனே!) மணியொலி போன்ற பேச்சினையுடைய மேன்மையுள்ள தலைவி அழகிய குரலினானே மேன்மைபெற்ற பெண்களாகிய பரத்தையருடன் (புணர்ந்து) விளையாடினேன் என்று நினைத்து பிணக்கினை மேற்கொண்டு ஆண்டுக்காலம்வரை மனத்தை யடக்கி தங்கும் ஊரானது அழகிய சிச்சிலிப்பறவை தங்கி பாட்டினை பாடுகின்ற பாய்ந்து செல்லும்படியான நீர் வளப்பத்தினுடைய வயல்களோடு கூடியது. (என்று தலைவன் பாணனிடங் கூறினான்.)

பாடல் - 142
தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர! - வண்கயம்
போலும்நின் மார்பு புளிவேட்கைத்து ஒன்றுஇவள்
மாலும்மா றாநோய் மருந்து. . . . . [142]

விளக்கம்:

குளிர்ந்த குளத்தினிடத்திலே (மலர்ந்துள்ள) தாமரைப்பூவிலேயுள்ள பெரிய ஆண் அன்னப் பறவையினை கீழ்ப்படிதலுள்ள பெண் அன்னப்பறவையானது நீரிலிருந்து நினைக்கும்படியான கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்தூர்த் தலைவனே! வளப்பம் பொருந்திய குளத்தினை போன்ற உனது மார்பானது (நின்னோடு) கூடி வாழும் இவளது மயக்கத்தைத் தரும் நீங்காத காமநோய்க்கு. மருந்து - மருந்தாகி புளியம்பழத்தின்கண் மக்கள் கொள்ளும் விருப்பம்போல் மேலும் மேலும் விரும்பும் மேன்மையினைக் கொண்டதாகும். (என்று தோழி தலைவனிடங் கூறினாள்.)

பாடல் - 143
நல்வயல் ஊரன் நறுஞ்சாந்து அணிஅகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார்
கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப
பாட்டு முரலுமாம் பண். . . . . [143]

விளக்கம்:

(அன்னாய்!) வளப்பமிக்க மருத நிலத்துார்த் தலைவனின் மணமிக்க சந்தனக் குழம்பு அணியப் பெற்ற மார்பின் கண்ணே (நம் செல்வி அன்புடன்) கூடியிருந்து விட்டு விலகாத வேளையிலேயே (வீட்டருகே) நெருங்கி பொருந்தியுள்ள நெற் கூடுகளின் உச்சியிலே தங்கியிருக்கும் சேவலானது (கூவித்) துாக்கத்தினின்றும் எழுப்ப இசையோடு கூடிய பாடல்களை பாடத் தொடங்கிவிடும். (என்று தோழி செவிலித்தாயினிடம் கூறினாள்.)

பாடல் - 144
அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும். . . . . [144]

விளக்கம்:

(தலைவனே!) செம்பட்டினை (தலைவியின் சேடிகளிலொருத்திக்குத் தோழி) உடுத்து வித்து (அணிந்துள்ள) செவ்வணிகளெல்லாம் நிறமாறும்படியாக (செஞ்சாந்து) அணிந்து மிகுந்த கருத்தோடு கூடி சிவந்தகுவளை மலர்களை சூட்டி (தலைவன் விருப்பத்தினைப் பெற்றுள்ள) பரத்தையானவள் உன்னைப் பார்த்து (வசை மொழிகள்) சொல்வாளாயினும் (அவளுக்கு எதிராக) நீ ஒன்றும் சொல்லாது திரும்புவாயாக என்ற அறிவுரையினை அச் சேடிக்குச் சொல்லி (நீ வாழும்) (இப் பரத்தையின்) வீட்டை நோக்கி (மகப்பேற்றால் நின் குலம் விளங்கி) மேன்மை யுறும்படியாக அனுப்பியுளாள். (நீ இதனைக் காண்பாயாக)

பாடல் - 145
பாட்டார வம்பண் அரவம் பணியாத
கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம்
மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து
இந்திரன்போல் வந்தான் இடத்து. . . . . [145]

விளக்கம்:

பாட்டுக்களாகிய ஒலியும் இன்னிசையாகிய ஒலியும் கோடுதலில்லாத கொம்பாகிய குழலினது ஒலியும் இம்முறையான பல வொலிகளும் கூடி ஒலிக்க. (செய்யும் சிறப்பின்கண்ணே தலைமகன்) வளைவாகிய நச்சுப்பற்களையுடைய (வாசுகி யென்னும்) பாம்பினை (பாற்கடலைக் கடைந்த) மந்திரமலையானது மேற் கொண்டு சிறப்புற்றதைப் போல தன் மகனை மேற்கொண்டு (மருத நிலத் தெய்வமாகிய) வேந்தனைப் போல (தலைமகளின்) இடப்பக்கத்தே வந்து சேர்ந்தனன். (என்று தோழி கூறி மகிழ்ந்தாள்.)

பாடல் - 146
மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யொழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக. . . . . [146]

விளக்கம்:

(எம்பெருமானே!) மண்வடிவமாகக் காணப்படும் பூமியில் வாழும் மக்கள் (பலர்) சான்றோராயிருந்தும் வறிதே எண்ணிக்கையளவிலேற்பட்ட வாழ்நாளிலே (தமது வாழ்க்கையின் சிறுமையினத் தலைமகளின் பெருந்தன்மைப் போக்கோடுஒப்பிட்டு நோக்கி அவளுக்குக்) கீழ்படிந்து நடக்கும் வண்ணம் பெண்ணின் மேன்மையானது தங்கியுள்ளதா லுண்டான மேட்டிமை நிலையானது தன்னைவிட்டு நீங்கும்படி முத்துமாலைகளை யணிந்துள்ள முலைகளையுடைய தலைமகள் மிக மிகுதியும் எளிமையும் இனிமையுமாகிய அன்பினை இல்லற வாழ்க்ககையிலே கைக்கொண்டு ஒழுகுவாளாயினள். (என்று தலைமகனிடத்தே வாயிலோன் கூறினான்.)

பாடல் - 147
செங்கண் கருங்கோட்டு எருமை சிறுகனையால்
அங்கண் கழனிப் பழனம்பாய்ந்து - அங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி
தவளையும்மேற் கொண்டு வரும். . . . . [147]

விளக்கம்:

(தோழியே!) சிவந்த கண்களையும் கரிய கொம்புகளையும் எருமையானது சிறிய கனைப்புடனே அழகிய இடத்தையுடைய வயல்கள் மிகுந்த மருத நிலத்தூடே விரைந்து சென்று அழகிய கண்களைப் போன்ற நீலோற்பலமாகிய அழகிய பூக்களுடனே சிவந்த கயல் மீன்களையும் அணிந்து கொண்டு தவளையினையும் முதுகின்பேரிலே யுட்கர்ந்திருக்கும்படியாக வைத்துக் கொண்டு வருதலைச் செய்யும். (இஃதென்னே! என்று தலைவி தோழியினை நோக்கிக் கூறினாள்.)

பாடல் - 148
இருள்நடந்தது அன்ன இருங் கோட்டு எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த
கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும். . . . . [148]

விளக்கம்:

(தோழியே!) இருளானது நடக்கலாயிற்றுப் போலும் என்று சொல்லும் படியான இரும் கோடு பெரிய கொம்புகளையுடைய எருமைகள் (கண்டார்க்கு வியப்பான்) மன மயக்கத்தைத் தரும்படியான சிறந்த மருதநில விளைபொருள்களாகிய குவளை முதலியவற்றை உண்டு சாரமாகிய உறுதித் தன்மை நிறைந்த கல்லினை பெயர்த்தற்குரிய கொம்புகளோடுகூடி தம்முடைய கன்றுகளை நினைத்து ஒலித்துக் கொண்டு நெற்கதிர்ப் போர்களை மேற் கொண்டு வாரா நிற்கும். (இஃதென்னே! என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 149
புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறிதுஅரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான்நாணும் ஆறு. . . . . [149]

விளக்கம்:

(தலைவனே!) போர்ப்புண்கள் மிகப்பெற்ற நிமித்திகன் போன்று மக்கட்கு எதிர்கால வேற்பாடாகச் செய்திகளைக் கூறிச் சென்ற மனு வென்னும் பேரரசனது அற நெறியானது உன்னை நீங்கப் பெற்று (தீய வொழுக்கத்தை நீ) மேற்கொண்டு வாழதலைச் செய்தாலும் நின்னிசைப்பாக்கள் பொருந்தப் பெற்று பாணர்கள் பாடத் தொடங்குதற்கு முன்னரே. (தொடங்கிய வளவிலே) செவ்விய கயல் மீனினை போன்ற கண்களையுடைய தலைமகள் (ஊடலை மேற்கொண்டு) வருந்தாமல் வெட்க முறுகின்ற விதத்தாலே பெண்மையாகிய பேரரசுக் குணம் அவளிடம் பொருந்திக் கிடக்கும் போக்கு (இவ்வுலகெங்குங் காணவொண்ணாப்) புதிய காட்சியினைக் கொண்டதாகும். (என்று அறிவர் தலைவனை நோக்கிக்கூறினார்.)

பாடல் - 150
கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கால் மற்றுஇன்று இவளொடுநேர் - எண்ணின்
கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்து ஆர்உளரேல் ஆம். . . . . [150]

விளக்கம்:

பலபண்களையுங் கலந்து பாடும் யாழினையுடைய பாணணே! கருதுமிடத்து யாதாம் (ஒன்று மின்று) நீள நினைந்து பார்க்குமிடத்து இப்பொழுது (எனக்கின்பத்தைத் தரும்) இத் தலைமகளொடு ஒப்பானவரை கருதிப் பார்த்தால் கடலாற் சூழப்பட்ட மண்ணுலகத்தில் காண்பதற்கில்லையாம் நடுகல்லினிடத்தே பெயர் சேரப் பெறாதவளாய் வெற்றி மிக்க மேலுகத்திடத்தே (பொருந்தியுள்ள பெண் பாலருள்) யாரேனும் இருப்பாராயின் இவட்கு நேராவர். (என்று தலைமகன் பாணனிடங் கூறினான்.)

பாடல் - 151
சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து
நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய
மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரின் ஆடலாம் இன்று. . . . . [151]

விளக்கம்:

சிறந்த மூங்கிற் கோலையும் யாழினையுமுடைய பாணணே! (எனக்குப்பின்வந்த) தங்கைமாராகிய பரத்தைய ரோடு கூடி விளையாடுதற்குரிய இப்பொழுது சேறுகள் நிரம்பியிருக்கும் சிறு சதங்கையணியப் பெற்ற கால்களிலும் சிவந்த பொன்னாலே செய்யப்பட்ட நெற்றிச் சுட்டியிலும் புழுதி படியும் (தன்மை) பொருந்திய தனையுடைய இம்மகனோடு இல்லின் முகப்பிலே இவனினும் நயத்தால் வேறுபட்டு மேம்பட்ட பரத்தையரிடம் விளையாடுமாறு போல (தலைவன்) விளையாட விரும்புவானோ? விரும்பான். ஆகலின் நீ வீணே வாயில் கூறி வருந்த வேண்டாம்

பாடல் - 152
முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த
இலையாலும் இட்ட குறியை - உலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால்
தார்சிதைக்கும் வேண்டா தழூம். . . . . [152]

விளக்கம்:

(தலைவனே!) பரத்தையர்கள் தம் முலைகளாலும் அணிகளாலும் முன்னே கலவிக்காலத்தே கைக் கொண்ட இளந்தளிர் களாலும் (நின் மார்பிற்) பொருத்திவைத்த குறியானது கெடாதவண்ணம் (என் எதிரே வந்து) தோன்றும் உனது மாலையினை உமிழ் நீரினைச் சிந்துகின்ற வாயினையுடைய என் மகன் (உண்ணும்) எனது மார்பின் கணுள்ள பாலானது (நீ என்னைத் தழுவினால்) வெளிப் பட்டுக் கெடுத்து விடும் (ஆகலின்) (என்னைத்) தழுவிக் கொள்ளுதல் வேண்டுவதின்று. (என்று தலைமகள் தலைவனை நோக்கிக் கூறினாள்.)

பாடல் - 153
துனிபுலவி ஊடலின் நோக்குஎன் தொடர்ந்த
கனிகலவி காதலினும் காணேன் - முனிஅகலின்
நாணா நடுங்கும் நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண். . . . . [153]

விளக்கம்:

(தோழியே!) தொடர்புடையதான இன்பமாகிய கனியினை (தலைமகனுடன்) கலத்தலோடு கூடிய அன்புமிக்க காலத்திலும் காணப் பெற்றேனில்லை (ஆகலின்) எனது வெறுப்பு நீங்குமாயின் (அப் பொழுது) வெட்கமுற்று (அதனால்) நடுங்கச் செய்யும் குளிர்ந்த மருத நிலத்தூர்த் தலைவனை என் கண்கள் எப்பொழுதும் காண விரும்ப வில்லை (அப்படியிருக்க) வருத்த மிக்க மனப் பிணக்கினை பொதுவான ஊடுதலினைப்போல எண்ணிப் பேசுதல் எதற்காக? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனிவு ஒழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.

கணிந்தார் என்னும் கணி மேதாவியார் அகப் பொருளாகிய களவியற் போக்கினை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியாக அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றும்படி தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்ற சொன்னடை பொருணடைகளாலே (ஒப்புமை கூறுதற் கொரு மொழியு) மிணையாகாத இனிய தமிழ் மொழியினாலே இயற்றிய முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை ஆராய்ந்து கனிவுடன் கூறினார்.