சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம்.

சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம். இது போன்றே வில்வம், பெருங் குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை, இவற்றின் வேர்களைப் பெரும் பஞ்சமூலம் என்பர். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறித்த ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.

இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். காரி என்பதுவே இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழில் பற்றி வந்த பெயராகலாம். இவரை மாக் காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடை மொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இவர் சைன சமயத்தார் என்பது இந் நூலின் காப்புச் செய்யுளால் அறியலாகும். பாயிரச் செய்யுளிலிருந்து இவர் மாக்காயனாரின் மாணாக்கர் என்பது தெரிய வருகிறது. இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றோருள் மற்றொருவர் ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது என்னும் நூல்களின் ஆசிரியராகிய கணிமேதாவியார். இவரும் மாக்காயனாரின் ஊராகிய மதுரையைச் சார்ந்தவராதல் கூடும். இவர் பஞ்ச தந்திரக் கதையுள் வரும், மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத் தீர்த்த கங்கைக் கரையில் உள்ள பூனைக் கதையை, 'உறுதவ மேல் கங்கை கரைப் பூசை போறல் கடை' (100) என்று சுட்டியுள்ளார். இதனால் பஞ்ச தந்திரம் தமிழில் பெருக வழங்கிய காலத்தை ஒட்டி இந்நூலாசிரியர் வாழ்ந்தனர் என்று எண்ணவும் இடமுண்டு.

இந் நூலில் நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் திறம் நோக்கத்தக்கது. இந்நூற் செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் திரிகடுகத்தில் உள்ளது போலத் தெளிவுபட விளக்கமாக அமையவில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைக் குறிப்பு பதினைந்து இடங்களிலேதான் உள்ளது (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83, 92, 92) இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன. 85 முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை. ஆனால் புறத்திரட்டில் இந்நூலைச் சார்ந்த மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. அவை விடுபட்ட இந்தப் பாடல்களாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆதாரமின்மையால் அவை மிகைப் பாடல்களாக தனியே தரப்பட்டுள்ளன.

கடவுள் வாழ்த்து
முழுது உணர்ந்து, மூன்று ஒழித்து, மூவாதான் பாதம்,
பழுது இன்றி, ஆற்றப் பணிந்து, முழுது ஏத்தி,
மண் பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா,
வெண்பா உரைப்பன், சில.

பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள்மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின்கட் செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான்.

கருத்துரை:

பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலைஞ் செய்யான்.

பாடல் - 01
பொருள் உடையான் கண்ணதே, போகம்; அறனும்,
அருள் உடையான் கண்ணதே ஆகும்; அருள் உடையான்
செய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்
உய்யான், பிறன் செவிக்கு உய்த்து. . . . .[01]

பொருளுடையான் கண்ணதே யாகும் இன்பம்; அறவினையும் உயிர்கள்மேல் அருளுடையான் மாட்டேயாகும்; அவ்வருளுடையான் பழியைச் செய்யான், பாவத்தை யடையான், பிறர் செவியின்கட் செலுத்திப் பிறரைப் பழிபடக் கூறும் புறமொழிகளையும் நடத்தான்.

கருத்துரை:

பொருளுள்ளவனுக்கு இன்பம் பெருகும்; அருளுள்ளவனுக்கு அறம் விளையும்; அருளுள்ளவன் பழியையும், தீவினையையும் புறங்கூறுதலைஞ் செய்யான்.

பாடல் - 02
கற்புடைய பெண் அமிர்து; கற்று அடங்கினான் அமிர்து;
நற்பு உடைய நாடு அமிர்து; நாட்டுக்கு நற்பு உடைய
மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும்
ஆகவே செய்யின், அமிர்து. . . . .[02]

கற்புடைய பெண் தனது கொழுநற்கு அமிர்தோ டொக்கும், கற்றுவைத்துப் பொறிகளைந்தையும் அடக்கினான் உலகத்தார்க்கு அமிர்தோ டொக்கும், நற்செயல்களையுடைய நாடுகள் அந்நாடாளும் அரசரக்கு அமிர்தோ டொக்கும், அந்நாட்டிற்கு மழைபோல நன்மையைச் செய்யும் மேகத்தைச் சேர்ந்த கொடி வேந்தனமிர்தோ டொக்கும், அவன் சேவகனும் அவ்வரசற்கு நன்மையாகவே செய்யின் அமிர்தோ டொக்கும்.

கருத்துரை:

கற்புடைப் பெண், கற்றடங்கினான், நாடு வேந்து, சேவகன் இவர்கள் முறையே கணவன் முதலியவர்களுக்கு அமிர்தம் போல் நின்று உதவுவார்கள்.

பாடல் - 03
கல்லாதான் தான் காணும் நுட்பமும், காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை. . . . .[03]

கல்லாதா னொருவன் தான் ஆராய்ந்து காணும் நுண்மைப்பொருளும், காதிரண்டும் இல்லாதாள் அழகுடையேன் என்றெடுத்த முகத்தினளா யொழுகலும், பொருளில்லாதவன் இல்லாதார்க் கீய்த்தளியா னென்றாலும், ஒருவன் தான் தனக்கியன்ற பொருளன்றி யியலாத பொருளை ஈயாதா னென்றலும் அறிவுடைய நல்லோர் கேட்பின் நகையாம்.

கருத்துரை:

கல்லாதான் நுட்பம் முதலானவை அறிஞர்க்கு நகைப்பினையே விளைவிக்கும்.

பாடல் - 04
உடம்பு ஒழிய வேண்டின், உயர் தவம்; மற்று ஈண்டு
இடம் பொழிய வேண்டுமேல், ஈகை; மடம் பொழிய
வேண்டின், அறிமடம்; வேண்டேல், பிறர் மனை;
ஈண்டின், இயையும் திரு. . . . .[04]

பிறப்பான் வரும் உடம்பை நீக்க வேண்டினானாயின் உயர்தவத்தை செய்க, இவ்வுலகத்தினிடமெல்லாந் தன்புகழால் நிறைய வேண்டினானாயின் ஈகையைச் செய்க, மெல்லிய வீரம் தனக்கு நிறைய வேண்டினானாயின் அறிவின்கண் அடங்கி யொழுக, பிறர் மனையாளை விரும்பா தொழிக, சிறிதாயினும் வருவாய் நாடோறும் ஈண்டிற் செல்வம் ஒருவற்கே கூடும்.

கருத்துரை:

பிறவி யொழியத் தவமும், புகழ் நிறைய ஈகையும், உள்ளம் தூய்மையாய் நிரம்ப அறிந்தும் அறியாமையும், பிறர்மனை நயவாமையும், வருவாய் நாடோறும் சிறிதாகச் சேர உண்டாகும் செல்வமும் ஒருவற்கு வேண்டற்பாலனவாம். ‘ஈதலிசைபட வாழ்தலதுவல்ல தூதியமில்லை யுயிர்க்கு‘ என்ற மையால் ஈகை ஆற்று எனப்பட்டது. மடம் என்பது மென்மை. ஈண்டு மென்மையின் பயனாகிய இணக்கத்தை யுணர்த்துகின்றது. தான் கூறுவது அறியமாட்டாதாரிடத்து, அவரறியாமையைக் கூறின் அவரோடிணங்குவதற்குத் தடையுண்டாமாதலின், “மடம் பொழிய வேண்டி னறிமடம்,“ என்றார். அறிமடமாவது - தான் கூறுவது அறியும் அறிவில்லார் மாட்டு அவரறிய மாட்டாமையைத் தானறிந்தும் அறியாதான் போன்றிருத்தல். அவர் அறியாமையை அவருக்குத் தெரிவிப்பின் பயனில்லை என்றவாறாயிற்று. பாவங்களிற் கொடியது பிறர்மனை விரும்பல் ஆதலின், பிறர்மனை வேண்டேல் என்றார். வள்ளுவரும், “பகைபாவ மச்சம் பழியென நான்கும், இகவாவா மில்லிறப்பான் கண்,“ என்றனர் - ஆற்று என்பது தீபகமாக மூன்றிடங்களிலும் கூட்டப்பட்டது. மனை - மனையாள்; இடவாகு பெயர்.

பாடல் - 05
படைதனக்கு யானை வனப்பு ஆகும்; பெண்ணின்
இடை தனக்கு நுண்மை வனப்பு ஆம்; நடைதனக்குக்
கோடா மொழி வனப்பு; கோற்கு அதுவே; சேவகற்கு
வாடாத வன்கண் வனப்பு. . . . .[05]

படைக்கு வனப்பாவது யானை, பெண்ணிடைக்கு வனப்பாவது நுண்மை, ஒழுக்கத்துக்கு வனப்பாவது ஒருவற்காகப் பாங்குரையாமை, செங்கோலுக்கு வனப்பாவது ஒருவர்க்குப் பாங்குரையாமை, சேவகரக்கு வனப்பாவது கெடாத வன்கண்மை.

கருத்துரை:

சேனைக்கு யானைப்படையும், பெண்கள் இடைக்குச் சிறுமையும், ஒழுக்கத்துக்கு அரசன் செங்கோலுக்கும் நடுவு நிலை பிறழாத சொல்லும், படை வீரர்க்கு அஞ்சாமையும் அழகாகும்.

பாடல் - 06
பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும்
முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால்
பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன்
காத்து உண்பான் காணான், பிணி. . . . .[06]

பற்றற்றானாற் சொல்லப்பட்ட நூலைப் பற்றினான் தவசியாவான், எப்பொருளையுமுற்ற வறிந்தான் முதல்வனாவான், நூலின்கட் சொன்னபடியே பகுத்துண்பான் பார்ப்பானாவான், பழியை யுணர்வான் சான்றானாவான், தனக்கு நுகர்கலாகாதென்று சொல்லியவற்றை நுகராதே காத்து நுகர்வான் பிணிகாணான்.

கருத்துரை:

கடவுள் நூலுணர்ந்தொழுகுபவன் தவமுடையன், எல்லா முணர்ந்தவன் தலைவன், பிறர்க்குப் பகுத்துக்கொடுத்துண்பவன் அந்தணன், பழியை விலக்கி யொழுகுபவன் பெரியோன், நல்லன தெரிந்துண்பவன் நோயறியான்.

பாடல் - 07
கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை;
எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக்
கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு
வாட்டான், நன்று என்றல் வனப்பு. . . . .[07]

கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோடுதல், காலிற்கு வனப்பாவது பிறர் மாட்டிரந்து செல்லாமை, ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந் துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட்டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல்.

கருத்துரை:

கண்ணுக் கழகு கண்ணோட்டம், காலுக்கழகு இரந்து செல்லாமை, ஆராய்ச்சிக் கழகு பொருளைத் துணிந்து சொல்லுதல், இசைக் கழகு கேட்பவர் அவனைப் புகழ்தல், அரசனுக்கழகு குடிகற் அவனை நல்லவ னென்றல்.

பாடல் - 08
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்;
நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக்
கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான்
உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. . . . .[08]

உயிர்களைக் கொன்றுண்பானுடைய நாச்சாம், ஒருவர் பாங்கிலே நின்று பொய்ச்சான்று போவானுடைய நாவுஞ்சாம், மிகக் கற்றுணர்ந்தோர் முன்பொரு மறுமாற்றஞ் சொல்லமாட்டாது கல்லாதானுடைய நாவுஞ்சாம், தனிசு வேண்டிவந்தா னொருவனைக் கண்டால் தனிசு கொண்டவனுடைய நாவுஞ்சாம், குடிப்பிறந்தா னொருவ னுடைய நா ஒருவனுதவி பெற்ற விடத்து அவ்வுதவி செய்தான் திறந்து ஒரு தீமை சொல்லமாட்டாது மற்றவன் செய்த நன்றியை நினைத்துச்சாம்.

கருத்துரை:

புலாலுண்போன் முதலியவர்களின் நாக்கள் சாம். கொன்றுண்பவனது நாவைக் காலதூதுவர் அறுத்தெடுப்பாராதலின், “கொன்றுண்பான் நாச்சாம்“ என்றார்.

பாடல் - 09
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா
மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு;
நாவிற்கு நன்று அல் வசை. . . . .[09]

சிலம்பிக்குத் தன் முட்டை சாக்காட்டைக் கொடுக்குமாதலாற் கூற்றமாம், நீண்டதங்கொம்புகள் துன்பங் கொடுக்குமாதலால் விலங்கிற்கும் அவையே கூற்றமாம், வென்றியில்லாத கவரிமாவிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் அதற்குத் தன் மயிரே கூற்றமாம், ஞெண்டிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் ஆதற்குத் தன்பார்ப்பே கூற்றமாம், ஒருவனது நாவிற்குப் பழியைமக் கொடுக்குமாதலாற் பிறரை நன்றல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம்.

கருத்துரை:

சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு வசை மொழியும் எமனாகும்.

பாடல் - 10
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,
நாவகம் மேய் நாடின் நகை. . . . .[10]

நாணில்லாதவன் அமைதியும், சீலங்களைச் செய்யாதான் கொள்ளு நல்ல நோன்பும், தனக் குண்ணும் பொருளில்லாதான் செய்யும் வண்மையும், வலியில்லாதான் சொல்லும் வீரமும், செந்தமிழறியாதான் கவியைச் செய்தலுமென இவ்வைந்தும் நாவகத்தாலே மேவியாராயின் நகையாம்.

கருத்துரை:

நாணமில்லாதவன் அமைதி, நன்னடையில்லாதவன் நோண்பு, உண் பொருளில்லாதவன் ஈகை, வலியில்லாதவன் வீரம், செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவி பாடுதல் என்னும் இவ்வைந்தும் பயனிலை என்பதாம்.

பாடல் - 11
கோறலும் நஞ்சு; ஊனைத் துய்த்தல் கொடு நஞ்சு;
வேறலும் நஞ்சு, மாறு அல்லானை; தேறினால்,
நீடு ஆங்குச் செய்தலும் நஞ்சால்; இளங்கிளையை
நாடாதே, தீதுஉரையும் நஞ்சு. . . . .[11]

ஓருயிரை அருளின்றிக் கோறலும் தனக்கு நஞ்சு போலும், பிறிதொன்றினுடைய ஊனைத் தின்றலும் தனக்குக் கொடிய நஞ்சு போலும், தனக்கு எதிராகாதானை அடர்த்து வெல்லுதலும் தனக்கு நஞ்சு போலும், ஒருவனை ஒரு கருமத்துக்கு ஆமென்றாராய்ந்து தேறினால் அக்கருமத்தில் விடாதே நீட்டித்துக்கொண்டு செலுத்தலும் தனக்கு நஞ்சு போலும், தன்னிளைய சுற்றத்தாரை ஆராயாதே தீதுரைத்தலும் தனக்கு நஞ்சு போலும்.

கருத்துரை:

கொலை செயத்தலும், புலாலுண்டலும், நிகரில்லாதவனை எதிர்த்து வெல்லுதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனை வினை மேற் செலுத்தாது காலம் நீட்டித்தலும், இளங்கிளைஞரையாராயாது தீங்கு செல்லுதலும் அகிய ஐந்தும், ஒருவனை நஞ்சு போலத் துன்பஞ் செய்யும் என்பதாம்.

பாடல் - 12
இடர் இன்னா, நட்டார்கண்; ஈயாமை இன்னா;
தொடர் இன்னா, கள்ளர்கண்; தூயார்ப் படர்வு இன்னா;
கண்டல் அவிர் பூங் கதுப்பினாய்! - இன்னாதே,
கொண்ட விரதம் குறைவு. . . . .[12]

நட்டார் மாட்டுக்கண்ட இடரின்னா, அவர்மாட்டு, ஈயாமையின்னா, வஞ்சனையுடையர் மாட்டு நடக்கு நட்பின் மனந்தூயாரை நீங்குதலின்னா, கண்டல் விளங்குங் குழாய்! தாங்கொண்ட விரதங்கள் நிரம்ப முடியதே குறையாக ஒழுகுதல்இன்னா.

கருத்துரை:

யாரிடத்திலும் துண்பஞ்செயாதலும், அவர்கட் கிடருற்றகாலத்து யாமையும். பகைவரிடம் உறவுகொள்ளுதலும், தூயாரை நீங்குதலும் எடுத்த விரதத்தை முடிக்காமையும் ஆகிய இவ்வைந்தும் தீயபயன்களைத்தரும் என்பதாம்.

பாடல் - 13
கொண்டான் வழி ஒழுகல் பெண்; மகன் தந்தைக்குத்
தண்டான் வழி ஒழுகல்; தன் கிளை அஃது; அண்டாதே,
வேல் வழி வெம் முனை வீழாது, மண் நாடு;
கோல் வழி வாழ்தல் குணம். . . . .[13]

கொழுகன் வழியொழுதல் பெண் குணம், தந்தைக்கிடைவிடாதே நிரந்தரமா யொழுகஸ் மகன்குணம், அவனைப்போல் வழியொழுகுதல் கிளையின் குணம், பகைவரோடு செறியாதே வேல்வழியினிடை விடாது வாழ்தல், அரசன் வெம்முனையிற் போயிருந்தார் குணம், அவ்வரசன் கோல்வழியே வாழ்தல் நாட்டின் குணம்.

கருத்துரை:

பெண் கனவன் சொற்படி யொழுகுதலும், மகன் தந்தை சொல்வழி நடத்தலும், கிளை அவன்போலவே வழியொழுகுதலும், வெம்முனையின்கட் போயிருந்தார் பகைவரோடு செராதே அவரை செல்லும் வழியால் இடைவிடாமல் வாழ்தலும், நாடு அரசனது கோல்வழியே வாழ்தலும் அவரவர்கட்குரிய குணங்களாம்.

பாடல் - 14
பிழைத்த பொறுத்தல் பெருமை; சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்; பிழைத்த,
பகை, கெட வாழ்வதும், பல் பொருளால் பல்லார்
நகை கெட வாழ்வதும், நன்று. . . . .[14]

தனக்குப்பிற னொருவன் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமையாவது, பிற ரிழைத்த தீங்குகளை மறவாதிருத்தல் சிறுமையாவது, தான் செய்த பிழைகளைப் பின்பு கெட வாழ்தலும், பலபொருள்களையு முதவியோரும் நல்லோருமிகழ்ந்து நகுநடையினைக் கெட வாழ்தலும் நன்று.

கருத்துரை:

பிறர் தவற்றைப் பொறுத்தல் பெருமை, பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை, பிறர் பகை கெட வாழ்தலும் செல்வரும் நல்லோரும் ஏளனஞ்செய்து நகைக்காது வாழ்தலும் நன்மை யுடையனவாம்.

பாடல் - 15
கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய
மதம் நன்று, மாண்பு இலார் முன்னர்; விதம் நன்றால்,
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று, குரைத்து எழுந்த
நாய் வாயுள் நல்ல தசை. . . . .[15]

நன்மைக் குணமில்லாதார் முன்பு கோபம் நன்று, சான்றாண்மை தீது, மிக்கவலி செய்தல் நன்று; கள்ளினை முகக்குங் கோய்போலும் வாயையுடைய கீழ்மக்கட் கீயும் உணவும் குரைத்தெழுந்த நாய் வாய்க் கீயும் தசையின் றிறப்பாட்டினன்று.

கருத்துரை:

நற்குணமில்லாதவர் கெதிரில் கோபமே நன்று, சான்றாண்மை தீது, மிக்க வலி செய்தல் நன்று; கீழ்மக்கட்கு ஈயுமுணவு குரைத்துவரும் நாய்வாயிற் கொடுத்த தசைக்கு நிகராகும்.

பாடல் - 16
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் அணி அல்குலார்ப் படிந்து ஒட்டி,
துடங்கினார், இல்லகத்து, அன்பின் துறவாது;
உடம்பினான் ஆய பயன். . . . .[16]

தம்மோடு நட்புக் கொண்டாரைச் செல்வத்தின்கண் இணயாக்கி, பகையைக் குறைத்து, கூரிய எயிற்றுப்பட்டாரக்கலல்குலாரைச் சேரந்து முயங்கிப் பொருந்தி, அச்சுற்றமாய்த் தொடர்பு பட்டு, முறையாயினார் மாட்டும், தாம் பிறந்த குடியிற் பிறந்தார் மாட்டும் அன்பினானீங்காது இப்பேற்றிப்பட்ட ஐந்தும் உடம்பு பெற்ற தனானாய பயன்.

கருத்துரை:

நட்டாரையுயரத்தல், பகைவரைக் தாழ்த்தல், மாதரைச் சேர்தல், அவரிடத்தும் தங்குடியிர் பிறந்தாரிடத்தும் அன்போடிருத்தல் ஆகியவைந்தும், மக்கட் பிறப்பின் பயன்.

பாடல் - 17
பொய்யாமை பொன் பெறினும், கள்ளாமை, மெல்லியார்
வையாமை, வார் குழலார் நச்சினும் நையாமை,
ஓர்த்து உடம்பு பேரும் என்று, ஊன் அவாய் உண்ணானேல்,
பேர்த்து உடம்பு கோடல் அரிது. . . . .[17]

பொன்பெற்றானாயினும், பொய் சொல்லாதும், பிறர்பொருளைக் களவு கொள்ளாதும், எளியாரை வையாதும், வார்குழலார் தம்மைக் காதலிப்பினும் தன் மனந்தளராதும், தன்னுடம்பு தளருமென்றோர்ந்து பிறிதொன்றனூனைக் காதலித் தொருவ னுண்ணானாயின் மறித்துப் பிறிதுடம்பு கோடல் அரிது.

கருத்துரை:

பொய்யாமை கள்ளாமை முதலியவற்றையுடையவன் பிறப்படையான் என்பது.

பாடல் - 18
தேவரே, கற்றவர்; கல்லாதார் தேருங்கால்,
பூதரே; முன் பொருள் செய்யாதார் ஆதரே;
'துன்பம் இலேம், பண்டு, யாமே வனப்பு உடையேம்!'
என்பர், இரு கால் எருது. . . . .[18]

நூலைக்கற்றார் தேவரோ டொப்பர், கல்லாதார் ஆராயுங்காற் பூதபசாசுகளோடொப்பர், தமக்கு மூப்பு வருவதற்கு முன்பே பொருளைத்தேடித் தமக்கு வைப்பாக வையாதார் ஒன்று மறியாது ஒரு பற்றின்றித் திரியுமாந்தரோ டொப்பர், பண்டு செல்வமுடையேமாதலால் ஒரு துனபமும் இலோ மென்பாரும், பண்டியாமே யழகியோம் என்பாரும் இருகாலுடைய எருதுகளோ டொப்பர்.

கருத்துரை:

படித்தவர் தேவர், படியாதவர் பூதபசாசுகள், முதுமைக்கு இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார், முன்பு பொருளுடைமையால் துன்பமற்றோம், முன்பு அழகுடையவரா யிருந்தோம் என்பவர் இரண்டுகால் மாடுகள்.

பாடல் - 19
கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை
நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய்,
ஊன் மறுத்துக் கொள்ளானேல், ஊன் உடம்பு எஞ் ஞான்றும்
தான் மறுத்துக் கொள்ளான், தளர்ந்து. . . . .[19]

பிறர் பொருளைக் களவு காணாது, சூதினைப் பற்றி காதலியாது, கீழ்மக்களுடன் நட்புக் கொள்ளாது, பிறர் மனந் துன்புறும்படி வன்சொற் சொல்லாது கடைப்பிடியுடையனாய் ஊனுணவை மறுத்து விரும்பானாயின் எஞ்ஞான்று மொழுக்கத்திற் றளர்ந்து மாறிப்பிறந்து ஊனுடம்பினைக் கொள்ளான்.

கருத்துரை:

கள்ளாமலும் சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும் பிறர் வருந்தவன்சொற் கூறாமலும் ஊனுண்ணாமலும் ஒருவ னிருப்பானாயின் அவன் மீட்டும் பிறக்கமாட்டான் என்பதாம்.

பாடல் - 20
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமைச் செல்லும் உணர்வு. . . . .[20]

பூவாதே காயக்கும் பலா முதலாயின மரமுள, நன்மையை அறிவார். ஆண்டுகளால் மூத்திலராயினும் மூத்தாரோடொப்பர், நூல்கற்று வல்லரும் அப்பெற்றியர், நிலத்தில் விளையாது முளைக்கும் வித்து முள, மதியுடையவர்க்குப் பிறர் அறிவியாமலே செல்லும் உணர்வு.

கருத்துரை:

பூவாது காய்க்கு மரம்போல் ஆண்டுகளால் மூவாதாரும் அறிவினால் மூத்தாராவர். நூல்வல்லாரும் அங்ஙனமே பாத்திகட்டி விதைக்காமலே முளைக்கிற விதைபோல பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.

பாடல் - 21
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு. . . . .[21]

பூத்தாலுங் காயாத பாதிரி முதலாயின மரங்களுள, நன்மையை யறியாதார் ஆண்டுகளான் மூத்தாராயினும் மூவாதாரோ டொப்பர், நூறேற்றாதாருமப் பெற்றியர், பாத்தியின்கட் புதைத்தாலு முளையாதவித்துள, பேதையாயினார்க்குப் பிறருரைத்தாலு முணர்வு புகாது.

கருத்துரை:

பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு முதிர்ந்ததும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.

பாடல் - 22
வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக்
குடி, குலம், என்ற ஐந்தும் குறித்த முடியத்
துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால்,
இளங் கால் துறவாதவர். . . . .[22]

வடிவும் இளமையும் வாயத்த வனப்பும், தாழ்வில்லாத குடிப்பிறப்பும், நற்குலமும என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் தாங்குறித்த நுகர்ச்சி நுகர்ந்து முடியுமளவு நிற்குநிலைமை யாவருங் காணமாட்டார். ஆதலாற் கூடியொருபாரத்தை இழுக்கு மெருதோ டொப்பர்; இளங் காலத்திலே துறவாதார்.

கருத்துரை:

உருவு,இளம்பருவம், அழகு, உயர்குடி, உயர்குலம் இவ்வவைந்தும் முடிவுபோக நுகர்வது அருமையாதலால், இளம் பருவத்திலேயே துறவாதவர் பாரமிழுத்துச் செல் எருது என்றபடி.

பாடல் - 23
கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல்,
வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப்
பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,
திறவது, தீப் பெண் தொழில். . . . .[23]

கள்ளுண்டலும், ஆராயுங்காற் றங்கணவனைப் புணர்ச்சி வேண்டாதே பிரிந்துறைதலும், நாணிலளாய்ப் பிறருடைய மனைக்கட் சேறலும், பிறர் கருமத்தை நினைத்துப் பிறருடனாலாய்தலும், தீப்பெண்ணினோடிணங்குதலு மென இவ்வைந்துந் தனக்கே கூறாகத் தீப்பெண்ணின் தொழில்.

கருத்துரை:

கள்ளுண்டல் முதலிய ஐந்தும் தீப் பெண்ணின் தொழில் என்க. உண்டல், உறைதல், சேறல், ஆராய்தல் என்பன தொழிற் பெயர்கள்.

பாடல் - 24
பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்;
கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து,
தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;
வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. . . . .[24]

பெருங்குணத்தாரைச் சென்றடைமின், பிறன் பொருளைக் கொள்ளன்மின், தீக்குணத்தாரோடு நட்பை விடுமின், எல்லாமுணர்ந்து பிறரைச் சொல்லுந் தீச்சொற்களைச் சொல்லாது காமின், காலன் வருகையுண்மையே, யாஞ் சொல்லுகின்ற எம்முடைய சொல்மாத்திரையேயன்று உலகின்கண் வழங்கி வருகின்ற வழக்காகக் கொள்க.

கருத்துரை:

நற்குணமுடையாரைச் சேருங்கள், பிறன் பொருளைக் கவராதேயுங்கள், தீக்குணமுடையவரை ஒழியுங்கள், தீய சொற்களைப் பேசாதிருங்கள்; காலன் வருவன்; இஃது உண்மை.

பாடல் - 25
வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல்,
தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ,
வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது, ஓரொன்று படும். . . . .[25]

வாலிய தூக்கணாங்குருவி செய்யுங் கூடும், பேரெறும்புகளால் செய்யப்படுமரக்கும், வாலிய வுலண்டென்னும் புழுக்களால் நூற்ற நூலும், வேறொரு புழுவாற் செய்யப்பட்ட கோற்கூடும், தேனீயாற் றிரட்டப்பட்ட தேன் பொதியும் என இவ்வைந்தும் விரும்பியவர்க்குச் செய்ய முடியாவாதலால் எல்லாங்கற்று வல்லவர் நமக்கிவை வாய்ப்பச் செய்யலாமென்று கருதார்; ஒரோவொருவற்குச் செயலாற் குறைபடாதே யொரோவொரு செய்கையருமைகள் படுமாதலால்.

கருத்துரை:

வான் குருவிக்கூடு முதலியவன்றறைச் செய்தற்கருமை கருதி அவற்றை எல்லாங்கற்று வல்லவரும் செய்யலாமென்று மனத்தினுங் கருதார் என்றது.

பாடல் - 26
அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப்
புறம் நட்டான் புல்-நெறி போகாது! - புறம் நட்டான்
கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால்,
பண்டு எடுத்துக் காட்டும், பயின்று. . . . .[26]

அறத்திற்குப் புறமாகிய பாவவினைகளை யுலகத்தின்கண்ணே நட்டான் சொல்லியடங்காத புல்லிய நெறியிற் போகாதே குற்றமில்லாத அறத்தினைச் சொல்லு நூலினை யுலகத்துள்ளே நட்ட முழுதுணர்ந்த அறிவினாற் சொல்லப்பட்ட நன்னெறியின் கண்ணே நின்றொழுகுக; பாவநெறியினை நட்டவன் ஆராய்ந்தெடுத்துக் கள்ளினையும் களவினையும் சூதினையும் தன் கருத்தினாலே பயின்று பண்டு செய்தாரை எடுத்துக் காட்டுமாதலால்.

கருத்துரை:

அறவழி நடப்பவன் தீவழி புகான், தீவழிசெல்லோன் தீத்தொழிற் பழகி அதனாலாகும் பலன்களையெல்லாம் உலக்குக்குக் காட்டுவோன் ஆவன்.

பாடல் - 27
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான்; அவற்கு இயைந்த
மாணாக்கன், அன்பான், வழிபடுவான்; மாணாக்கன்
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான்; கடியாதான்
நிற்பு அனைத்தும், நெஞ்சிற்கு ஓர் நோய். . . . .[27]

ஒருவகை யாசிரியனாவான் பிரமசரியங்காப்பான், அவனுக்கு இயைந்த மாணாக்கன் அன்பு படுவோனும் வழிபட்டேவியது செய்வானும் என இவ்விரு வரன்றியும், மாணாக்கனாவான் கற்குமளவும் காமம் வெகுளி மயக்கங்களைக் கடிவான், இவையிற்றைக் கடியாதான் நிற்குமளவுந் தன்னாசிரியன் நெஞ்சிற்கு ஒரு நோயாம்.

கருத்துரை:

பிரமசரியங் காப்பவன் ஆசிரியனாவான். அவனை அன்பு செய்து வழிபடுவோர் முதலியோர் மாணாக்கராவர்.

பாடல் - 28
நெய்தல் முகிழ்த் துணை ஆம், குடுமி; நேர் மயிரும்
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும்; செய்தல்,
நுணங்கு நூல் ஓதுதல், கேட்டல், மாணாக்கர்,
வணங்கல், வலம் கொண்டு வந்து. . . . .[28]

நெய்தல் மொட்டினளவினதாம் மாணாக்கர்க்குக் குடுமி, தலையின்கண் நீண்டமயிரு மண்ணாதொழிவது ஒருதிங்கணாளாகும், இனி அவர்கள் செய்கை ஆசானை வலங்கொண்டுவந்து வணங்குதலும், நூல்களைப் பாடமோதலும், ஓதியவற்றின் பொருள் கேட்டலுமாக மூன்று.

கருத்துரை:

மாணாக்கன் குடுமி நெய்தல் மொட்டளவாக இருக்க வேண்டும், அவன் மாதம் ஒருமுறை தலை முழுகலாம்; ஆசிரியரை வணங்குதல் ஓதுதல் கேட்டல் அவனுக்குரிய கடமையாம்.

பாடல் - 29
ஒருவன் அறிவானும் எல்லாம், யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும், ஒருவன்
குணன் அடங்க, குற்றம் இலானும், ஒருவன்
கணன் அடங்கக் கற்றானும், இல். . . . .[29]

எல்லாவற்றையும் அறிவானொருவனும், யாதொன்று மறியாதானொருவனும், குணனடங்க வில்லாதானொருவனும், குற்ற மில்லாதானொருவனும், எல்லா நூற்றொகைகளும் ஒழியாமற் கற்றானொருவனும் உலகத்தின்கண் இல்லை.

கருத்துரை:

எல்லாவற்றையும், எதுமறியாதவனும் நல்லியல்பேயில்லாதவனும், குற்றமேயில்லாதவனும், எல்லாக் கல்விகளையுங் கற்றவனும் இவ்வுலகில் இல்லை.

பாடல் - 30
உயிர் நோய் செய்யாமை, உறு நோய் மறத்தல்,
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை, செயிர் நோய்
விழைவு, வெகுளி, இவை விடுவான் ஆயின்,-
இழவு அன்று, இனிது தவம். . . . .[30]

பிறிதோருயிர்க் கொரு நோயுஞ் செய்யாமை, தனக்குப் பிறரால் வந்துற்ற நோயை மறத்தல், கோபத்தால் தான் பிறர்மாட்டு இன்னாதன செய்யாமை, குற்றத்தைச் செய்யு நோயைப்பண்ணுங் காதலையும், மனத்தின்கட் பிறர்மேலுள்ள செற்றத்தையும் விடுவானாயின், அவன் செய்யுந்தவம் இழிவன்றி இன்பத்தைத் தரும்.

கருத்துரை:

பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாமை முதலியன மேற்கொண்டு விழைவு வெகுளி முதலியவற்றை விட்டுவிடுவானாயின், அவன் செய்யுந் தவம் இனிமையுடையதே யாகும்.

பாடல் - 31
வேட்டவன் பார்ப்பன்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை;
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்; - பாட்டு, அவன்
சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள்
தந்தையான் ஆகும், குலம். . . . .[31]

வேள்வியைச் செய்தவன் பார்ப்பானாவான், கற்புடையாள் விளங்கிழையாவாள், கேடில்லாத பெரும் புலவனாவான் பல நூல்களையும் பொருளுணரக் கேட்பவன், அப்புலவன் சிந்தையினழகாலே பாடும் பாட்டுச் சிறப்பது, உலகின்கண் ஒருவர்க்குக் குலமுடைமை தந்தையழகாலேயாம்.

கருத்துரை:

வேள்வி செய்பவன் அந்தணனும், கற்புடையவள் பெண்ணும், நூற் கேள்வியுடையவன் புலவனும், ஆராய்ச்சியினியல்லது பாட்டும் தந்தையான் ஏற்படுவது குலமுமாகும்.

பாடல் - 32
வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்;
உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான்,
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத்
தொடங்கானேல், சேறல் துணிவு. . . . .[32]

ஈட்டி வைப்பானை வள்ளலாகக்கொள்ளப்படும், தான் பயனது கொள்ளாது பிறர்க்குப் பொருள்களைக் கொடுப்பவன் வாணிகனோ டொக்கும், அக்கொடையினாய பயன்விளைவு மறுமைக்குத் தனக்கு விளைத்துக் கோடலால் ஒருவர்க்கு ஆசிரியனாவான், அவனை யுயர்ந்த பிறப்பின் கண்ணே செலுத்த வல்லானடாத்தும் ஒழுக்கத்தால் உடம்பாகிய வேலியையுடைய உயிர்களைக் கொன்று ஒருப்படுத்துப்போக்கி, அவற்றினூனை யுண்ணத் தொடங்கானாயின் உயர்கதிக்குச் சேறல் உண்மையாம்.

கருத்துரை:

பிறர்க்குப் பயன்படும்படி பொருளை யீட்டி வைப்பவன் வள்ளல், அவற்றைப் பயன் கருதி எவனேனும் வழங்குவானாயின் அவன் வாணிகனை யொப்பான், மாணாக்கனை உயர்கதிக்குச் செலுத்துபவனே ஆசிரியனாவான், மாணாக்கன் உயிர் கோறலும் ஊன் புசித்தலும் இல்லானானால் உயர்கதிக்குச் செல்லல் துணிவேயாம்.

பாடல் - 33
வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச்
செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்த
பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த
அருளினான் ஆகும் அறம். . . . .[33]

பிறனையொருவன் வைததனால் வசையாகும்; பிறர்க்கு வணக்கத்தையும், நன்மையையும் உளவாகச் செய்ததனால் வளமையுடைய குடிப்பிறப்பாம்; காலத்திலே முந்துறச்செய்த பொருளானின்பமாகும்; பிறர்க்குத் தன்மனம் நெகிழ்ந்த அருளினான் அறமாகும்.

கருத்துரை:

பிறரைத் திட்டுதலாற் பழியும், வணக்கமும் நன்மையும் மேற்கொண்டிருத்தலாற் குலமேன்மையும், பொருளாற் போகமும், அருளால் அறமும் உண்டாகும்.

பாடல் - 34
இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும்,
நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல்
தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்;
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு!. . . . .[34]

மனைவாழ்க்கை யியற்கையை யுடையார் செய்த நல்லறமும், மற்றைத் துறந்தார் செய்யு நல்லறமும், நல்லவியலினாலே யாராய்ந் துரைக்குங்கால் நல்ல இயல்புடைய கொடையாற் செல்வ நுகர்ச்சியும் தவத்தாற் சுவர்க்க நுகர்ச்சியைப் பெறுவதும் மெய்யுணர்ச்சியார் வீடும் என்று நாட்டுக.

கருத்துரை:

இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும் ஆராயின். கொடையாற் செல்வ நுகர்ச்சியும் தவத்தாற் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் பெறுவரென்பதாம்.

பாடல் - 35
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,
உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே, வனப்பு. . . . .[35]

தலைமயிரான் வருமழகும், கண்டார் கண்ணைக் கவரு மார்பினால் வருமழகும், உகிரான் வருமழகும், காதினான் வருமழகும், குற்றந்தீர்ந்த பல்லினான் வருமழகும் என இவ்வைந்தழகும் ஒருவற்கு அழகல்ல; நூல்கட்குப் பொருந்திய சொல்வன்மையால் வரும் அழகே அழகாவது.

கருத்துரை:

தலைமயிர், மார்பு, நகம், செவி, பல் இவற்றினழகினும் சொல்லழகே சிறந்தது.

பாடல் - 36
தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்;
வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக்
கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்!
புலந்தபின், போற்றார், புலை. . . . .[36]

தொழுத்தை யடவுண்ணார், தோழரில்லிற் றனியே புக்குறங்கார், பிறர்பொருளை மறந்தாலும் வௌவிக்கொள்ளார், மருவிச்சிலரோடு நட்டபின் கீழ்மைக்குணத்தை யாராயார், மடவாய்! ஆராய்ந்து பாராய்! சிலரோடு பகைத்தபின்பு கீழ்மைக் குணத்தைப் போற்றாது எதிர்த்துக் கெடுப்பார்.

கருத்துரை:

இழிவான வேலைக்காரிகள் சமைத்த உணவை யுண்ணல் முதலியவற்றை அறிஞர்கள் செய்யார்.

பாடல் - 37
பொய்யாமை நன்று; பொருள் நன்று; உயிர் நோவக்
கொல்லாமை நன்று; கொழிக்குங்கால், பல்லார் முன்
பேணாமை, பேணும் தகைய; சிறிய எனினும்,
மாணாமை, மாண்டார் மனை. . . . .[37]

பிறர்க்குப் பொய் சொல்லாமை நன்று, பொருளுண்டாக்குத னன்று, பிரிதோ ருயிரையுந் துன்புறுக் கொல்லாமை, நன்று ஆராயுங்கால் தாம், விரும்புவன் பலரறிய விரும்பாமை நன்று. மாட்சிமைப்பட்ட தவசிகள் சிறிதாயினும் மனைவாழ்க்கையின்கண் மீள்கைக்கு மாணா தொழிகை நன்று.

கருத்துரை:

பொய்யாமை, கொல்லாமை, பேணாமை முதலியன நன்மை என்பதாம்.

பாடல் - 38
பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார்,
உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா,
யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,
காக்கையைக் காப்பு அடுத்த சோறு. . . . .[38]

பண்டாரத்தினையும், பல் கணக்கினையும், கண்காணியையும், தன் கோயிலு ளுறையும் மங்கையரையும், தனகாக்கு முணவினையும் பகுத்து மக்கள் யாக்கைக்குத் தக்க அறிவில்லாதாரையும் தன் தோழரைப் போலக் கொண்டு தேறிக் காக்காவிடின் அக்காவல் காக்கையைச் சோறு காக்கவிட்டதனோ டொக்கும்.

கருத்துரை:

பண்டார முதலியவற்றை அறிவில்லார் காக்கவிடின் அக்காவல் சோறு காத்தற் றொழிலைக் காகத்ததிற் கிட்டாற்போலும்.

பாடல் - 39
உடை இட்டார், புல் மேய்ந்தார், ஓடு நீர்ப் புக்கார்,
படை இட்டார், பற்றேனும் இன்றி நடை விட்டார்,
இவ் வகை ஐவரையும் என்றும் அணுகாரே,
செவ் வகைச் சேவகர் சென்று. . . . .[39]

தமக்கஞ்சி யுடுத்த புடைவையைப் போகவிட்டார், புல்லினைப் பறித்து வாயிலிட்டார், ஓடு நீரின்கட் புக்கார், கைப்படை துறந்தார், மற்றோர்ரணின்றி ஓடமாட்டாது நிலைதளர்ந்திருந்தார் இப்பெற்றிப்பட்ட ஐவரையுமொருநாளும் தீங்கு செய்யச்சென்றணுகார் அறம்பொருள் செய்யுஞ்சேவகர்.

கருத்துரை:

உடுக்கை யிழந்தவர் முதலிய ஐவரையும் வருத்தா தொழிதல் வீரர்க்குரிய அறமாம்.

பாடல் - 40
பூவாதாள், பூப்புப் புறக்கொடுத்தாள், இலிங்கி,
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள்,
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு, - இவ் ஐவரையும்
சாரார், பகை போல் சலித்து. . . . .[40]

பூப்பில்லாத கன்னியும், பூப்புத் தவிர்ந்தாளும், தவத்திற்புக்க விலிங்கியும், கோலஞ் செய்கை யொருபொழுது மோவாளாகிக் கற்புக்காளாகாத கணிகையும் பிறர்யாவர்க்குரிய மனையாளு முள்ளிட்டிவ்வைவரையுஞ் சாரார் பகைபோல வேறுபட்டு.

கருத்துரை:

பூவாத கன்னியையும், பூப்பு நீங்கிய விருத்தமாதையும் தவப்பெண்ணையும் வேசியையும் பிறர் மனையாளையும் அறிஞர் சேரமாட்டார்.

பாடல் - 41
வருவாய்க்குத் தக்க, வழக்கு, அறிந்து, சுற்றம்
வெருவாமை, வீழ் விருந்து ஓம்பி, திரு ஆக்கும்
தெய்வத்தை எஞ் ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே - பெண்டிர் சிறப்பு. . . . .[41]

தமக்குள்ள பகுதியினளவறிந்து அதற்குத்தக்கபோக்கறிந்து, சுற்றத்தை வெருவாமைத் தழுவி, விருந்து புரந்து, திருவினையாக்குந் தெய்வத்தை வழிபாடு செய்க. இவ்வைந்து தொழிலும் பெண்டிர்க்குச் சிறப்பாவன.

கருத்துரை:

இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவினளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றந்தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பனவாம்.

பாடல் - 42
நாள் கூட்டம், மூழ்த்தம், இவற்றொடு நன்று ஆய
கோள் கூட்டம், யோகம், குணன், உணர்ந்து, - தோள் கூட்டல்
உற்றானும் அல்லானும், - ஐந்தும் உணர்வான் நாள்
பெற்றானேல், கொள்க, பெரிது!. . . . .[42]

நாள் பொருந்துதலும், மூர்த்தமும், நன்றாய்க் கோள் கூடுதலும், அமிர்தயோக முதலாயின யோகமும், இவற்றினான் வருநன்மையு மாராய்ந்துணர்வானாட் பெற்றாலந்நாளை நன்றென்று கொள்க; ஒருவனோடொருத்தியைக் கூட்டலுற்றவனு மற்றுஞ் சில நன்மைக் காரியஞ் செய்யலுற்றவனும்.

கருத்துரை:

திருமணம் முதலிய நற்செயல்களுக் கெல்லாம் நாட்பொருத்தம் நாழிகைப் பொருத்தம் முதலியன பார்த்து நல்ல நாள் கொள்ள வேண்டும்.

பாடல் - 43
பேண், அடக்கம், பேணாப் பெருந் தகைமை, பீடு உடைமை,
நாண் ஒடுக்கம், என்று ஐந்தும் நண்ணின்றா, பூண் ஒடுக்கும்
பொன் வரைக் கோங்கு ஏர் முலைப் பூந் திருவே ஆயினும்,
தன் வரைத் தாழ்த்தல் அரிது. . . . .[43]

சுற்றத்தாரைப் பேணலும், அடக்கமுடைமையும், பிறனொருவனைப் பேணாத பெருந்தகைமையும், ஒப்புரவு முதலாயுள்ள பீடுடைமையும் நாணால்வரும் ஒடுக்கமென்று சொல்லப்பட்ட ஐந்தனையும் பொருந்தாது தன் கொழுநனைத் தன்வரைத் தாழ்த்தலரிது, பொன்வரைக் கோங்கேர்முலைப் பூந்திருவேயாயினும்.

கருத்துரை:

திருமகளைப் போன்ற செல்வியே யெனினும் ஒரு பெண் சுற்றந்தழுவுதல் அடக்கம் முதலியன உடையளாய்க் கணவன் அளவில் அடங்கியிருத்தலே நன்றாம்.

பாடல் - 44
வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர, வைகலும்
நீர் சான்று உயரவே, நெல் உயரும்; சீர் சான்ற
தாவாக் குடி உயர, தாங்கு அருஞ் சீர்க் கோ உயர்தல்
ஓவாது உரைக்கும் உலகு. . . . .[44]

(ப.பொ-ரை.) வார்சான்ற கூந்தலையுடையாய்! வயலினது வரம்புயரவே, வைகலு நீருயர்ந்து, நாடோறு நெல்லுயரும், சீரமைந்த கெடாத குடியுயரவே, பகைவராற்றாங்குதற்கரிய சீர்மையையுடைய மன்னுயரு மென்றொழியாதே சொல்லாநிற்கு மிவ்வுலகம்.

கருத்துரை:

வரம்புயர நீருயரும், நீருயர நெல்உயரும், நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோனுயர்வான் என்பதாம்.

பாடல் - 45
அழியாமை எத் தவமும், சார்ந்தாரை ஆக்கல்,
பழியாமைப் பாத்தல் யார் மாட்டும் ஒழியாமை,
கன்று சாவப் பால் கறவாமை, செய்யாமை
மன்று சார்வு ஆக மனை. . . . .[45]

யாதானு மொருதவத்தை யழியாமையும், தம்மையடைந்தாரை யாக்குதலும், பிறர்தம்மைப் பழியாமை, யார்மாட்டு மொளியாமைப் பகுத்துண்டலும், கன்று சாவ பால்கறவாமையும் மன்றருகு மனையெடாமையுஞ் சேரும்.

கருத்துரை:

தவத்தை யழிக்காமையும் அடைந்தாரை யாக்குதலும், பிறர் தவத்தைப் பழியாமையும் கன்றறிந்த பசுவைப் பால் கறவாமையும் வேறு சார்வாக மனை யெடாமையும் நற்செயல்களாமென்பதாம்.

பாடல் - 46
நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர்
மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்;
பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார்
என் பெறினும் கொல்லார், இயைந்து. . . . .[46]

தம்மை நச்சியாருடைய நசையை யெஞ்ஞான்றுங் கொல்லார், தங்கிளைஞர் மிசையும் மிசையைக் கொல்லார், உபகாரத்தைக் கொல்லார், புகழைக் கொல்லார், பொன்போலும் பூஞ்சுணங்கின் மென் முலையாய்! மிகவுமுணர்ந்தா ரெல்லாவின்பமும் பெற்றாராயினும் பிறிதோருயிரை மேவிக்கொல்லார்.

கருத்துரை:

நன்குணர்ந்தார் நசை கொல்லார், கிளைஞர் மிசை கொல்லார், வேளாண்மை கொல்லார், இசை கொல்லார், ஓருயிரையுங் கொல்லார் என்பதாம்.

பாடல் - 47
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி. . . . .[47]

மிக்க நீரும் காதும் சேறும் கிளர்ந்து விண்டோயு மாண்டமலையும் மக்களுமகப்பட வாய்ந்து சொல்லப்பட்ட வைந்தானுந் தனக்கரணாக வுடையானை வேந்தனா நாட்டத்தகும்.

கருத்துரை:

நீராண் முதலிய ஐந்துவகை அரண் வலிமைகளையும் உடையான் ஒரு நாட்டுக்கு அரசனாக அமைதல் நன்மையாம்.

பாடல் - 48
பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு;
முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத்
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும்
உழுமகற்குக் கேடு என்ற உரை. . . . .[48]

கடைப்பிடி யில்லாமை கேடு, பொருள் மிகவுடைமையார் களிக்குங் களிப்புக் கேடு, தானறிவு முதிராமை கேடு, பிறரொடு பகைகோடல் கேடு, தெளியத் தனக்குத் தொழில் செய்யு மகனோடு மாறுபட்டுச் சீறுவனாயின் உழவினால் வாழுமகற்குக் கேடாய்விடும்.

கருத்துரை:

வேளாளனுக்குப் பொச்சாப்பு முதலியன கேடுதருவனவாம்.

பாடல் - 49
கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக்
கல்லாமை தீது; கதம் தீது; நல்லார்
மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி. . . . .[49]

ஓருயிரைக் கொல்லாமை நன்று, கொலை தீது, எழுத்தினைக் கல்லாமை தீது, பிறரை வெகுளல் தீது, அறிவுடையார் தமக்கு மொழிவதற்கு முன்னேயும் பழியாத வழியொழுகுவான் பலர்க்கு மிறைவனாவான்.

கருத்துரை:

பலர்க்குந் தலைவனாவானொருவன் சான்றோர் அறிவு சொல்லுக்கு முன்னமேயே தானேயுணர்ந்து கினைஞரைப் பழியாமை முதலியன அவற்கு நன்மையாம்.

பாடல் - 50
உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறு
எண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின்,
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார்,
பெரியர் ஆவார், பிறர் கைத்து. . . . .[50]

துறந்தவா நீக்கி யுண்ணாமை நோற்றனன்று, மனைவாழ்க்கையின்கண் அறிவாராயின் விருந்துனரைக் கண்மாறுத னினையாமை நன்று, தமக்கெளியாரை யிகழ்ந்துரைப்பா ராயிற் றீதாம், ஆராயிற் பெறுதற் கரியராவார் பிறர் மனையாளை விரும்பி யொழுகாதார், பெரியராவார் பிறரை யிரந்துண்ணாதார்.

கருத்துரை:

அவாவை யொழித்துத் துறந்து உண்ணாது நோற்றல் நன்மை, விருந்தினரைக் கண்ணோட்டஞ் செய்தல் நன்மை, எளியாரை யிகழ்தல்தீமை, பிறர் மனைநோக்காதவர் அரியர், பிறர் பொருளுண்ணாதவர் பெரியர் என்பதாம்.

பாடல் - 51
மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை,
ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க
அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும்
தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. . . . .[51]

தான் மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, அவனினைவிற் கொக்க உடனொழுகுதல், அவனுண்ணும் உணவுக்கு விரும்புதலென இத்தொக்க ஐந்து குணனும் பிறரையொத்தலே தனக்கொழுக்கமாகவுடையளல்லளாயிற் றங்கொழுநனைத் தம்பாற் பெண்டீர் வணங்கும் மருந்தாவாள்.

கருத்துரை:

மக்கட்பேறும், ஆடக்கமுடைமையும், அழகுடைமையும், கணவனுடைய கருத்துக்கிசைய அவனொடுடனுறைதலும், அவனுண்ணும் உணவை விரும்புதலும் ஆகிய இவ்வைந்து குணங்களும் பெண்டிர்க் கிருக்குமாயின் அவை அவர் கணவரை வணக்கு மருந்தாகும் என்பதாம்.

பாடல் - 52
கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன்,
வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்!
யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக்
காப்பர், கருதும் இடத்து. . . . .[52]

தன்னைக்கொண்ட கொழுநனும், உடன் பிறந்தானும், மாமனும், வண்டார் பூந்தொங்கல் மகனும், தந்தையுமெனு இவ்வைவரும் யாப்பார் பூங்கோதை யணியிழையை மிகவுஞ் செறியக் காப்பாளர்; வண்டாரய்.

கருத்துரை:

ஒரு பெண்ணின் கற்புக் கழிவுவராமல் காக்கத் தக்கவர் கணவன், கணவனுடன் பிறந்தவன், மாமன், மகன், தந்தை இவ்வைவரும் என்றபடி.

பாடல் - 53
ஆம் - பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஜந்தும்,
தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார்,
நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும்
கொடுங் குழை போல, கொளின். . . . .[53]

பல்லும் வாயும் கண்ணும் மனமும் புருவமுமாகிய உறுப்பைந்தையுங் கண்டு அரியவர்க் கன்பாய் தாம் பல இடங்களினாடித் தங்கள் நிறையைக் காக்க மாட்டாதார் குவளையையுந் தாமரையையு மசைவிக்கின்ற காதிற் கொடுங் குழையையுடைய அரிவையை நெடிதாய்த் திரண்ட நீள்மூங்கிலைப் போலக் கருதி யிகழ்வராயின் அவர்க்கு நிறைகாக்கலாம்.

கருத்துரை:

மனவுறுதியின்றிப் பெண்ணாசையால் ஓடித்திரிபவர், பெண்களின் பல்வாய் முதலிய ஐந்தையும் மூங்கிலின் தன்மையையுடையன எனக் கொண்டால், மூங்கில் என்று பெண் தன்மையை இகழந்து, பெண்விருப்பை நீக்கியவராய் விடுவர்.

பாடல் - 54
பொன் பெறும், கற்றான்; பொருள் பெறும், நற் கவி;
என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக்
கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே,
நல்லார் இனத்து நகை. . . . .[54]

கற்றுவல்லவன் பொன்னைப் பெறும், நற்கவி செய்யவல்லவன் அரசனாலே யெல்லாப் பொருளும் பெறும், வாதம் பண்ணி வெல்ல வல்லவன் யாது பெறும்மெனின் வென்றானென்னும் புகழைப்பெறும், முன்னே இளமைக்காலத்திலே கல்லாதாரும், கற்று வல்லாரினத் தல்லாதாரும் நல்லாரினத்தனடுவே இகழச்சி பெறுவர்.

கருத்துரை:

கற்றான் பொன் பெறுவான், கவி பொருள் பெறுவான், வாதி இசை பெறுவான், கல்லாரும், அவரைச் சாராதவரும் இகழப்பெறுவர் என்பதாம்.

பாடல் - 55
நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து,
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல்,
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான்
ஆயின், அழிதல் அறிவு. . . . .[55]

பிறர் செய்த நன்மைகளை வெளிப்படப்பண்ணி, பிறர் செய்த தீமைகளை நினையாது மறந்தொழிந்து, பிறவுயிர்கட் கிடையூறு வந்தால் அவ்வுயிர்கட்கு விரைந்து ஊற்றங்கோலாகி, தனக்கியலுமாகிற் பிறர் பொருட்கண் வஞ்சனையைத் தவிர்ந்து, பெரிய மானங்காத்தற் பொருட்டாகத் தான் சாதல் தனக்கு அறிவாவது ஆராயின்.

கருத்துரை:

நல்லன வெளிப்படுத்தல் முதலியவற்றை ஒருவன் செய்யக்கடவன். மறந்து என்னாது ‘மறந்தொழிந்து’ என்றமையால் மனத்து நினைத்தலுமாகாது என்றதாயிற்று.

பாடல் - 56
தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார்
இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி,
அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும்
பிளந்து அறியும் பேர் ஆற்றலான். . . . .[56]

தன்னுடைய நிலைமையினையும், தாழ்வின்றித் தான் செய்யும் வினையது, நிலைமையினையும், வலியினாற் றன்னுதனெதிர்ந்த மாற்றார் மாட்டுள்ள இனிய நிலைமையினையும், கேடில்லாத வுலக வழக்கு நிலைமையினையும், முன்புக் காராய்ந்தறிந்து செலுத்துவான் அரசனாவன், அந்நான்குமன்றி மற்றிமெல்லாம் வேறு பகுத்தறியும் பெரியவாற்றலையுடையான் அமைச்சனாவான்.

கருத்துரை:

தன்நிலை, தன்வினைநிலை, பகைவர்நிலை, உலகியனிலை என்பனவற்றை யாராய்ந்து செய்பவனே அரசனாவான். இவற்றையே யன்றி மற்றெல்லாக் காரியங்களையும் பகுத்தறிய வல்லவனே அமைச்சனாவான்.

பாடல் - 57
பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்த
அருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக்
கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால்
தேறப்படும் குணத்தினான். . . . .[57]

பொருளும், இன்பமும், இடுக்கண் வந்தாலஞ்சாமையும் பிறிதோருயிர் பொன்றவந்தவிடத்து மிக்க வருளும், நீங்காத வரியவறமுமென்று சொல்லப்பட்ட இவ்வைந்துங் குற்றந்தீரச் சொல்லப்படுங் குணத்தான் கூர்வேலை வல்ல வேந்தனாலொர் கருமத்தினின்றுய்த்துத் தேறப்படுங் குணத்தினான்.

கருத்துரை:

பொருளும், இன்பமும், இடுக்கண் வந்த காலத்து அதற்கஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய வந்தவிடத்து அதற்கிரங்கும் அருளுடைமையும், அருமையாகிய ஆறமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தனையு முடையவன் அரசனாவொரு கருமத்தின் மேற் செலுத்துதற்குரியனாவான்.

பாடல் - 58
நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி,
புன் புலத்ததைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண்
பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே
நுண் கலப்பை நூல் ஓதுவார். . . . .[58]

விளைபுலத்திலுள்ள வைக்கோலினைத் தன் பாலுள்ளதாகத் திரட்டி, நாடோறும் உழும் பகடுகளைப் பாதுகாத்து, புன்புலத்தை நன்புலமாகத் திருத்தி எருவினாலதனைப் போற்றிய பின்பு, பண்ணுங்கலப்பைகளை இன்புலத்தின்கட் பகுதிப்படுப்பானுழவனாவானென்று சொல்லுவார் நுண்ணிய உழவு நூலோதிய அறிவார்.

கருத்துரை:

வைக்கோலைச் சேர்த்து, அதனால் உழவெருதுகளைப் போற்றிப் புன்செய்யை எருவிட்டு நன்செய்யாகத் திருத்திப்பின், அந்த நன்செய்யைப் பண்படுத்தல் உழுதல் முதலியவற்றைச் செய்பவனே உழுதொழிலாளன் என்று சொல்லுவர் உழவு நூலோதியுணர்ந்தோர்.

பாடல் - 59
ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு;
சாலாமை நன்று, நூல்; சாயினும், 'சாலாமை
நன்று; தவம் நனி செய்தல் தீது' என்பாரை
இன்றுகாறு யாம் கண்டிலம். . . . .[59]

ஒருவர் மாட்டுச் சென்றிரந் தேலாமையுநன்று, குணமில்லாதார்க்கு ஒன்றையீதலுந் தீது, குணமில்லாதார்க்கு நூல் நிரம்ப அறிவியாமையும் நன்று, ஒருவன் சால்புடைனல்லாமை நன்று, மிகத் தவஞ் செய்தல் நன்றன்றென்று தாஞ்சாயினுஞ் சொல்லுவாரை இன்றளவும் யாங்கண்டிலேம்.

கருத்துரை:

ஈயாமை முதலியன நன்மையாம், ஈதல், முதலியன தீமையாம் என்பவர் எவருமிலர்.

பாடல் - 60
அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு,
மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக்
கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல்,
உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. . . . .[60]

அரம்போலத் தன்னைத் தேய்க்குங்கிளையும், தனக்கடங்காத மனைவியும், அடங்காதனவே செய்யுந் தொழும்பும், அறிவில்லாத தன்புதல்வனும், மாறாய்த் தமக்கிடமாய் நோயைச் செய்யுமயலிருப்பு மென இவ்வைந்தும் உளவாயினுயிருடையா ருள்ளத்திற்கு மற்றுநோய் வேண்டா.

கருத்துரை:

அரம்போலுஞ் சுற்ற முதலிய ஐந்துமே மக்கட்கு, உள்ளக் கவலையை விளைத்தற்குப் போதும்.

பாடல் - 61
நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள்
பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம்
நன்று, தளி, சாலை, நாட்டல்; - பெரும் போகம்
ஒன்றுமாம், சால உடன். . . . .[61]

நீரறஞ் செய்தன்ன்று, நிழலறஞ் செய்தன்ன்று, தன்மனையுட் பிறருறைய விடங்கொடுத்தன்ன்று, பகுத்துண்பானாயிற் பேரற நன்று, தளியுஞ்சாலையும் நிலைபெறச் செய்தல் நன்று, இவ்வைந்துஞ் செய்தார்க்குப் பெரும் போகம் பொருந்தும்.

கருத்துரை:

தண்ணீர் அறம் முதலியன செய்தார்க்குப் போகப் பேறுகள் உண்டாகும்.

பாடல் - 62
பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு
எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்த
சிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார்
பெறு பயன், பின் சாலப் பெரிது. . . . .[62]

ஒரு பிடியுளடங்கும் பிச்சை, விரலிறையுளதங்கும் பிச்சை, உண்டோ இல்லையோ என்றையப்படும் பிச்சை, கூழ்வார்த்தல், ஒருவன் சொல்லோட்டுத் திரந்த உப்பு இத்துணையும் பொருந்திய பயன் சிறியவென்று கருதாராய்ச் சிதவலிப்பினை யீவார் பின்பு பெறும்பயன் மிகப் பெரிது.

கருத்துரை:

பிடிப்பிச்சை முதலியவை சிறியவை இவைதரும் பயனும் சிறியனவென்று நினையாது கொடுப்பவர் பின்பு பெறும் பயன் மிகப்பெரிது என்பதாம்.

பாடல் - 63
வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு,
அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஜந்தினுள்,
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும்,
குன்றுபோல் கூடும், பயன். . . . .[63]

வெவ்விய தீயைக்கண்ட வெண்ணெயும் மெழுகும், தீர்சேர்ந்த மண்ணும், உப்பும், தன்னழகிய குளிர்ந்த மகனைத் தழுவிய தந்தையுமென்று சொல்லப்பட்ட ஐந்தினுளொன்று போலே இரவலரைக் கண்டால் உள் நெகிழ்ந்து ஈதலியைந்த பொருளி சிறிதாயினு மதனால் வரும் பயன் குன்றுபோலப் பெரிதாய்க் கூடும்.

கருத்துரை:

நெருப்பைக் கண்ட வெண்ணெய் முதலிய பொருள்களிலொன்றைப் போல மன முருகி இரவலர்க்கு வேண்டும் பொருள் சிறிதாய் இயைந்தவளவிற் கொடுத்த வொருவனுக்கு அச்சிறு கொடையாலுண்டாகும் பயன் மலைபோல மிகப் பெரிதாம

பாடல் - 64
குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து,
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது. . . . .[64]

குளத்தைக் கல்லி, மரக்காவை நட்டு, வழி சீத்துத் திருத்தி, மேடாயின நிலங்களை யுட்டோண்டி, யுழு வயலாக்கி வளம் படத்தோண்டி, வகுப்புப் படக் கிணற்றொடு சொல்லப்பட்ட இவ்வைந்தும் மிகுதிபடச் செய்தான் சுவர்க்கத்திற்குச் செல்லு மோரிடையூறின்றி.

கருத்துரை:

குளம் வெட்டுதல் முதலிய அறங்களைந்தினையும், செய்தவன் புறக்கம் புகுவன் என்பதாம்.

பாடல் - 65
போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும்,
ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்த
அறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண்
துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். . . . .[65]

முழுமெய்யுந் தோன்றாமற் போர்த்தும், உடம்படைய நீறு பூசியும், சடையை நீட்டியும், உடம்பிலொரு கூற்றினை மறைத்தும் உண்டற்கு மேவியாராய்ந்து கொண்டன இவ்வேடங்களைந்தும் பண்டுள்ள நல்லார் சொல்லிய துறவறமே. துறவறமாயிற் பிறர் சொல்லிய கடுஞ்சொற்களைப் பொறுக்கப்பொறாராயிற் கலிகாலத்தின் கண் நிகழும் துறவறம் பொய்யாம், இல்லறம் மெய்யாவது.

கருத்துரை:

உலகவர் பழியைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வதாயின், துறவறம் கொள்க, அன்றேல் இல்லறமே கொள்க என்பது.

பாடல் - 66
தான் பிறந்த இல் நினைந்து, தன்னைக் கடைப்பிடித்து,
தான் பிறரால் கருதற்பாடு உணர்ந்து, தான் பிறரால்,
'சாவ' என வாழான், சான்றோரால், 'பல் யாண்டும்
வாழ்க!' என வாழ்தல் நன்று. . . . .[66]

தான்பிறந்த குடியை நினைத்து, தன்னையொழுக்கத்தின் வழுவாதவகைக் கடைப்பிடித்து, தான் பிறரால் மதிக்கப்படுஞ் செய்கையை யுணர்ந்து, தான் பிறராற் சாகவென்று சொல்லும்படி யொழுகாது சான்றோராலே பல்யாண்டும் வாழ்வானாக என்று சொல்லும்படி யொழுகுதனன்று.

கருத்துரை:

ஒருவன் தான்பிறந்த குடியின் பெருமையை நினைத்தல் முதலியவற்றை யுடையவனாய் உயிர்வாழ்தல் நன்மையாமென்பதாம்.

பாடல் - 67
நெடுக்கல், குறுக்கல், துறை நீர் நீடு ஆடல்,
வடுத் தீர் பகல்வாய் உறையே, வடுத் தீரா
ஆகும் அந் நான்கு ஒழித்து, ஐந்து அடக்குவான் ஆகில்,
வே கும்பம் வேண்டான் விடும். . . . .[67]

மயிரைச் சடையாக நீட்டுதலும், மயிரைக் குறைத்தலும், தீர்த்தங்கள் நெடிதாகப் போயாடுதலும், வடுத்தீர்ந்த பகலின்கண் உண்ணுதலென்கின்ற குற்றமுந் தீராவாகின்ற அந்நான்கினையு மொழித்தலும், ஐந்து புலன்களையு மடக்குவானாகிற் சுடலைத் தீயுள் வேகக்கடவ கும்பமாகிய உடம்பினை வேண்டான் விடும்.

கருத்துரை:

சடையை வளர்த்தல் முதலியவற்றால் இப்பிறவி யொழியாது; ஐம்புலன்கள் அடக்கு மாற்றால் நீங்கும். புலன்களை யொடுப்பாதவர்களுக்குச் சடைவளர்த்தல் முதலியன பயன்தரா.

பாடல் - 68
கொன்றான், கொலையை உடன் பட்டான், கோடாது
கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால், கொன்றதனை
அட்டான், இட உண்டான், ஐவரினும் ஆகும் என,
கட்டு எறிந்த பாவம் கருது. . . . .[68]

உயிரைக் கொன்றவன், கொலைக்குக் கோடாதே யுடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைக்கொண்டவன், ஆராயுங்காற் கொல்லப்பட்டதனுடைய ஊனை அட்டான், அதனை யிடவுண்டான் என இவ்வைவர் மாட்டு முளவாய் நிகழுமென்று வரம்பழித்துச் செய்த பாவத்தைக் கருது.

கருத்துரை:

கொலை செய்தவன்முதல் உண்டவன் ஈறாக எல்லார்க்குமே கொலைக்குற்றமுண்டு.

பாடல் - 69
சிறைக் கிடந்தார், செத்தார்க்கு நோற்பார், பல நாள்
உறைக் கிடந்தார், ஒன்றுஇடையிட்டு உண்பார், பிறைக் கிடந்து
முற்றனைத்தும் உண்ணாத் தவர்க்கு, ஈந்தார், - மன்னராய்,
கற்று அனைத்தும் வாழ்வார், கலந்து. . . . .[69]

சிறையின்கட் கிடந்தார், செத்தவர்க்கு நன்மை வேண்டி யுண்ணாது நோற்பார், பலநாளுந் தான் கொண்டபிணிக்கு மருந்தாயுண்ணாது கிடந்தார், ஒருநாளிடையிட்டுண்பார், பிறைக்கிடந்து நிறம்புமளவும் உண்ணாத தவசிகளென இவ்வைவர்க்கும் உணவு கொடுத்தவர்கள் அனைத்து நூல்களுங் கலந்து கற்ற மன்னராய் வாழ்வார்.

கருத்துரை:

சிறை கிடந்தார் முதலிய ஐவருக்கும் உணவு கொடுத்தவர்கள் கல்வி அறிவுள்ள அரசராய் நீடு வாழ்வார்.

பாடல் - 70
ஈன்று எடுத்தல்; சூல் புறஞ்செய்தல்; குழவியை
ஏன்று எடுத்தல்; சூல் ஏற்ற கன்னியை, ஆன்ற
அழிந்தாளை, இல் வைத்தல்; - பேர் அறமா ஆற்ற
மொழிந்தார், முது நூலார், முன்பு. . . . .[70]

ஈன்ற தாய் குழவியைத் துறவாதோம்பி வளர்த்தல், தான்கொண்ட சூலைத் தானழியாது புறஞ்செய்தல், வளப்பாரில்லாத குழவியைக் கண்டாலேன்று வளர்த்தல், சூலேற்ற கன்னியையும் அழிந்த மனையாளையும் நீக்காது தன்னில் தே்துப் புறந்தருதல் என இவ்வைந்தும் பெரிய அறமாக மிகவுமொழிந்தார் முதிய நூலையுடையவர் பண்டு.

கருத்துரை:

ஈன்றெடுத்தல் முதலிய ஐந்தும் பெரிய அறமாக முற்காலத்தில் நூலறிவையுடைய பெரியோர் சொன்னார்கள்.

பாடல் - 71
வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால்
நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய,
இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று
மன்னவராச் செய்யும் மதித்து. . . . .[71]

வலிகெட்டவர், மூத்தவர், வழிபட்டுண்ணாது வடக்கிருந்தார், பிணியானலியப்பட்டழிந்தார், தமது நாடுவிட்டுப் போய்த் தளர்ந்தாரென இவ்வைவரும் தளர்வொழியும்படி உற்றாரயலாரென்றாராயாதே ஈயப்பட்டதோ ருணவு மன்னவராகச் செய்யுமதித்து.

கருத்துரை:

வலியழிந்தார் முதலிய ஐவருக்கும் ஒரு துற்றுணவு கொடுத்தவர் அவ்வறப்பயனால் அரசராய்ப் பிறப்பார் என்பது.

பாடல் - 72
கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால்
இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக்
கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,
நாடின், அறம் பெருமை நாட்டு. . . . .[72]

வயிற்றுட் கருவழியாமை காத்தலும், கருப்பஞ் சிதைந்தாற் பிறர்க்கு வெளிப்படாமை மறையப் பெயர்த்து வாங்குதலும், குழவியை இடைவிலங்காதபடி இயற்றிக் கோடலும், குழவி பிறந்து பிணிகொண்டால் அதற்கு மருந்தும், அக்குழவியை அச்சுறுத்தாமையும் என்னுமிவ்வைந்தினையும் பெரிதாய அறமாக நாட்டிவாயாக.

கருத்துரை:

கருப்பங் கலங்காமை காத்தல் முதலிய ஐந்தும் பேரறமாக நாட்டுவாயாக என்பதாம்.

பாடல் - 73
சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின்
ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவை
வல்லாமை, - வாய்ப்ப அறிபவர் உண்ணாமை,
கொல்லாமை, நன்றால், கொழித்து. . . . .[73]

சூற் கொல்லாமையால் வருந்துன்பம், சூற் கொண்டால் வருவதொரு மெய் வருத்தம், பிள்ளை பெற்று வைத்தும் பிள்ளையைக் கொள்ளாமை, பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் வளர்க்குமருமை, வளர்ந்த பிள்ளை சால்பு குணங்கள் மாட்டாமை, இவ்வைந்தினையும் வாய்ப்ப அறிந்தவர் ஆராய்ந்து ஓருயிரைக் கொல்லாமையும் அவ்வூனை யுண்ணாமையும் நன்று.

கருத்துரை:

பிறப்பினாலுண்டாகும் ஐவகைத் துன்பங்களையும் ஆராய்ந்துணர்வோர் உயிர் கொல்லாமையும் புலாலுண்ணாமையும் நன்று என்பதாம்.

பாடல் - 74
சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார்,
துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்கு
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - இந் நாள்
ஒரு நோயும் இன்றி, வாழ்வார். . . . .[74]

தலைநோயுடையாரையும், பித்துற்றாரையும், வாய்ப்புற்றுடையரையும், கயநோய் கொண்டாரையும், மூலநோய் கொண்டாரையும், அடைந்து வருந்துன்பங்களை முற்பிறப்பிற் றீர்த்தவர்க ளிப்பிறப்பினுகண் ஒரு நோயுமின்றி வாழ்வார்.

கருத்துரை:

தலை நோயுடையார் முதலிய ஐவரையும் அவர் பதுந்துன்பங்களினின்று முற்காலத்தில் ஒழித்தவரே இக்காலத்தில் ஒரு நோயுமில்லாமல் வாழ்ந்திருப்பர் என்பது.

பாடல் - 75
பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல்,
தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார்,
இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல்,
கழி சினம் காத்தல், கடன். . . . .[75]

எல்லா வுயிர்க்கும் ஒத்தலும், படுந்துன்பம் ஆற்றுதலும், ஒரு பொருளின் கண்ணும் பற்றுப் படாமையும். இம்மூன்றும், தவஞ்செய்வார் குணமாவன. அவர்களல்லா இல்வாழ்வார்க்குக் குணமாவன; கிழ்க்குலத்தார்க்கே யாயினும் பசித்தவர்க்கு உண்டி கொடுத்தலும் மிக்க வெகுளிகாத்தலும்.

கருத்துரை:

நடுவுநிலைமை முதலிய மூன்றும் துறவறத்தார்க்கும், பசித்தவர்க் குணவளித்தல் கோபம் காத்தல் ஆகிய இரண்டும் இல்லறத்தார்க்கு முரிய குணங்கள்.

பாடல் - 76
புண் பட்டார், போற்றுவார் இல்லாதார், போகு உயிரார்,
கண் கெட்டார், கால் இரண்டும் இல்லாதார், கண் கண்பட்டு
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈத்தார்,-கடை போக
வாழ்ந்து கழிவார், மகிழ்ந்து. . . . .[76]

போரின்கண் புகுந்து புண்பட்டார், பாதுகாக்குங் களைகணில்லாதார், உயிர்போந் தன்மையையடைந்தோர், குருடர், முதவர் என்று சொல்லப்பட்டாருடைய கண்ணிலே தங்கள் கண்கள் பட்டிரங்கி மனநெகிழ்ந்து வேண்டுவன கொடுத்தார் இடையூறு பட்டொழியாதே கடைபோக மகிழ்ந்து வாழ்ந்து போவார்.

கருத்துரை:

புண்பட்டவர் முதலிய ஐவருக்கும் மனமிரங்கி அவர் வேண்டுவன கொடுத்துப் போற்றீயவர் இடையூறின்றி மகிழ்ந்து வாழ்ந்து கழிவார் என்பது.

பாடல் - 77
பஞ்சப் பொழுது பாத்து உண்பான்; கரவாதான்;
அஞ்சாது, உடை படையுள், போந்து எறிவான்; எஞ்சாதே
உண்பது முன் ஈவான்; குழவி பலி கொடுப்பான்;
எண்பதின் மேலும் வாழ்வான். . . . .[77]

சிறுவிலைக் காலத்து, பலர்க்கும் பகுத்துண்பான், தனுமாட்டுள்ள பொருளி காவாது பிறருக்கே ஈவான், படையுடைந்த விடத்துத் தானஞ்சாதே வருகின்ற படையை யெறிந்து மீட்டுப் பலரையு முய்யக் கொளிவான், ஒரு நாளு மொழியாதே தானுண்பதனை முன்னே பிறர்க்கீத்துண்பான், பசித்த குழவிகட்குப் பலிகொடுப்பான் எண்பதிற்றாண்டின் மேலுந் துன்புறாது வாழ்வான்.

கருத்துரை:

சிறிவிலை காலத்திற் பகுட்டுண்ணுதல் முதலியன செய்பவன் எண்பது ஆண்டுகட்கு மேலும் நீண்ட வாழ்நாளுடம் வாழ்வான்.

பாடல் - 78
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; வழங்கார்;
கொடும் புலி கொட்கும் வழி. . . . .[78]

பொது மகளைத் தமக்கு மனையாளாக மனையின்கண் வையார், பழையதாய்த் தலைமழுங்கியிருந்த புற்றின்மே லேறார், தம்மோடு நிகரில்லாதாரோடு நட்புக் கொள்ளார், போர்வேந்தனுடைய வரைபோலுங் கடுங்களிறு விட்டுழிச் செல்லார், பொடும்புலி சுழலும் வழியின்கண் நடவார்.

கருத்துரை:

அறிஞர்கள் வேசையரை வீட்டில் வைத்துக் கொள்ளுதல் முதலியன செய்யமாட்டார்கள்.

பாடல் - 79
தக்கார் வழி கெடாதாகும்; தகாதவர்
உக்க வழியராய் ஒல்குவார்; தக்க
இனத்தினான் ஆகும், பழி, புகழ்; தம் தம்
மனத்தினான் ஆகும், மதி. . . . .[79]

தகுதியுடையார் வழிமரபுகெடாதாகும், தகுதியில்லாதார் கெட்டவழி மரபையுடையராயே தளர்வார், பழிக்கத்தக்க இனத்தினா னாகும் பழியும், புகழுக்குத் தக்க இனத்தினானாகும் புகழும், தனது மனத்தினளவே யுண்டாகும் அறிவும்.

கருத்துரை:

நல்லவர்கள் கால்வழி கெடாது, நல்லவர்களல்லாதவர் கால்வழியே கெடும், தீய சேர்க்கையால் பழியும், நற்செய்கையால் புகழும், தத்தம் மனவியற்கைக்கு ஏற்ப அறிவும் மக்கட் குண்டாகும்.

பாடல் - 80
கழிந்தவை தான் இரங்கான், கைவாரா நச்சான்,
இகழ்ந்தவை இன்புறான், இல்லார் மொழிந்தவை
மென் மொழியால், உள் நெகிழ்ந்து, ஈவானேல், - விண்ணோரால்
இன் மொழியால் ஏத்தப்படும். . . . .[80]

இறந்த பொருட்டுத் தானிரங்கான், தனக்குக் கைவாராதனவற்றை நச்சி வருங்கான், நல்லாரா னிகழப்பட்டவற்றை யின்புறான், வறியாரிரந்து வேண்டியவற்றை மென்மொழி சொல்லி யுண்ணெகிழ்ந்தீவானாயிற் றேவர்களானினிய மொழிகளாலே புகழப்படும்.

கருத்துரை:

கழிந்தவற்றிற்கு இரங்கான் முதலியன உடையான் தேவர்களாற் புகழ்தற்குரியனாவான்.

பாடல் - 81
காடுபோல் கட்கு இனிய இல்லம், பிறர் பொருள்
ஓடுபோல், தாரம் பிறந்த தாய், ஊடு போய்க்
கோத்து இன்னா சொல்லானாய், கொல்லானேல், - பல்லவர்
ஓத்தினால் என்ன குறை?. . . . .[81]

பிறருடைய கண்ணுக் கினிய வில்லத்தைக் காடுபோலக் கொண்டு விரும்பாது, பிறருடைய பொருளை ஓதுபோலக் கொண்டு விரும்பாது, பிறர் மனையாளைத் தான் பிறந்த தாயாக்ககொண்டு விரும்பாது, பிறரூடு போய்க் கோத்தின்னாதனவற்றைச் சொல்லாது, ஓருயிரையுங் கொல்லானாயினல்லார் பலருஞ் சல்லிய நூல்களாற் காரிய மென்னை யவற்கு?

கருத்துரை:

ஒருவன் பிறரதி அழகிய இல்லத்தைக் காதுபோலவும், பிறர் பொருளை ஓடுபோலவும், பிறன் மனையாளைத் தன் தாயாகவும் கருதி விரும்பாமல், பிறரைப் பழித்துரையாமல், ஓருயிரையுங் கொல்லாதிருப்பானாயின், அவனுக்குப் பெரியோர் சொல்லிய நூல்களால் அறிய வேண்டிய குறை என்ன உண்டு என்பது.

பாடல் - 82
தோற் கன்று காட்டிக் கறவார்; கறந்த பால்
பாற்பட்டார் உண்ணார்; பழி, பாவம், பாற்பட்டார்,
ஏற்று அயரா, இன்புற்று வாழ்வன, ஈடு அழியக்
கூற்று அயரச் செய்யார், கொணர்ந்து. . . . .[82]

தோற்கன்று காட்டிப் பசுவைக் கறவார், அப்பெற்றியாப் கறந்த பாலை நெறிப்பட்டா ருண்ணார், பழியையும் பாவத்தையும் தம்மே மேலேற்றுக்கொண்டு விரும்பாதே தன் கிளையோடின்புற்று வாழுமுயிர்களைக் கூற்று விரும்பக்கொணர்ந்து கொலை செய்யார்.

கருத்துரை:

நன்னெறிப் பட்டவர் தோற்கன்று காட்டிப் பசுவினுபாலைக் கறத்தல் முதலிய தீச்செயல்களைச் செய்யார் என்பதாம்.

பாடல் - 83
நகையொடு, மந்திரம், நட்டார்க்கு வாரம்,
பகையொடு, பாட்டு உரை, என்று ஐந்தும் தொகையொடு
மூத்தார் இருந்துழி வேண்டார், முது நூலுள்
யாத்தார், அறிவினர் ஆய்ந்து. . . . .[83]

சிரித்தலும், ஒருவனோடு செவிச்சொல்லும், தம்முற்றார்க்காக வாரம் சொல்லுதலும், பகையாடுதலும், பாட்டுக்குப் பொருட் சொல்லுதலும் இவ்வைந்துங் கூட்டத்தோ டறிவுடையரா யிருந்துழி வேண்டாராய்ப் பழைய நூல்களிலே யாத்து வைத்தார் அறிவுடையார் ஆய்ந்து.

கருத்துரை:

பெரியோர் கூடியிருக்கு மிடத்தில் சிரித்தல் இரகசியப் பேச்சுப் பேசுதல், நட்பினர்க்குப் பாரபக்கமாக நலம் பேசுதல், ஆகாதவர்க்குப் பகைமை பேசுதல், காட்டுக்கு உரை சொல்லுதல் ஆகிய ஐந்து செயல்களையும் அறிவுடையோர் செய்யமாட்டார்கள்.

பாடல் - 84
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது
எய்தா உரையை அறிவானேல், நொய்தா
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர்; வாயுள்
தறி எறியார், தக்காரேதாம். . . . .[83]

#####

கருத்துரை:

#####

85 முதல் 89 வரை

85 முதல் 89 வரை உள்ள ஐந்து பாடல்கள் பல பிரதிகளில் காணப்பெறவில்லை.

பாடல் - 90
[இரா-இருக்கை, ஏலாத வைகல், பனி மூழ்கல்,
குராக் கான் புகல்,] நெடிய மண், எறு உராய்த் தனது
எவ்வம் தணிப்பான், இவை என் ஆம்? பெற்றானைத்
தெய்வமாத் தேறுமால், தேர்ந்து. . . . .[90]

#####

கருத்துரை:

#####

பாடல் - 91
சத்தம், மெய்ஞ் ஞானம், தருக்கம், சமையமே,
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு, ஆங்கு, அத் தகத்
தந்த இவ் ஜந்தும் அறிவான், தலையாய,
சிந்திப்பின் சிட்டன் சிறந்து. . . . .[91]

வழக்கு நூலும், சொன்முடிபு நூலும், தருக்க நூலும் சமயநூலும், அறிவின் மிக்கார் கண்ட வீட்டு நெறியும் இவ்வைந்தும் அழகாக அறிவான் தலையாய சிட்டானாவான் சிறந்து.

கருத்துரை:

இலக்கண நூல் முதலானவற்றை நன்கறிந்தவனே மக்களுட் சிறந்தவனாவான்.

பாடல் - 92
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே, யாழினோடு,
எண்ணுங்கால் சாந்தே, எழுதல், இலை நறுக்கு,
இட்ட இவ் ஐந்தும் அறிவான்-இடையாய
சிட்டன் என்று எண்ணப்படும். . . . .[92]

கருதுங்காற் கருதப்படு மெண்ணும், யாழ்வல்லனாதலும் சந்தனமரைத்தலும் எண்ணலும் பொழில்பட இலை நறுக்கலும் என இவ்வைந்து காரியமும் அறிந்து வல்லனாவான் இடையாய சிட்டனென் றெண்ணப்படும்.

கருத்துரை:

கணித நூல் முதலிய ஐந்தனையும் கற்று வல்லவன் இடையாய சிட்டனென்று சொல்லப்படுவா னென்பதாம்.

பாடல் - 93
நாண் இலன் நாய்; நன்கு நள்ளாதான் நாய்; பெரியார்ப்
பேண் இலன் நாய்; பிறர் சேவகன் நாய்; ஏண் இல்
பொருந்திய பூண் முலையார் சேரி, கைத்து இல்லான்,
பருத்தி பகர்வுழி நாய். . . . .[93]

நாணமில்லாதானு நாயோடொக்கும், பிறரொடு நண்பு கொள்ளாதானு நாயோடொக்கும், பெரியாரைப் பேணாதானு நாயோடொக்கும். பிறர்க்குச் சேவகனாய்த் திரிவானு நாயோடொக்கும்; மனத்தின்க ணிலையில்லாத பூணையுடைய முலையார் சேரியின்கட் கைப்பொருளில்லாத காதலாற் சென்று திரிவானும் பருத்தி விற்குமிடத்துச் சென்று நிற்கு நாயோடொக்கும்.

கருத்துரை:

நாணமில்லாதவன் முதலியோர் நாய்க்கு ஒப்பாவார்கள்.

பாடல் - 94
நாண் எளிது, பெண்ணேல்; நகை எளிது, நட்டானேல்;
ஏண் எளிது, சேவகனேல்; பெரியார்ப் பேண் எளிது;
கொம்பு மறைக்கும் இடாஅய்!-அவிழின்மீது
அம்பு பறத்தல் அரிது. . . . .[94]

ஒருத்தி பெண்குணத்தையுடையளாயில் அவளுக்கு நாணெளிது, ஒருவனோடொருவன் நட்டானாயிர் அவற்கு மகிழ்ந்து நகுதல் எளிது, ஒருவன் சேவகனாயின் அவனுக்கு வலிசெய்தல் எளிது, குணத்தாறை பெரியராயின் அவர்க்குப் பிறரைப் பேணுதல் எளிது, வஞ்சிக்கொம்பை மறைக்கும் இடையினையுடையாய்! பலர்க்குஞ் சோறிடுவார்மேற் பிறர் அம்பு பறந்து சேறல் அரிது.

கருத்துரை:

பெண்டிற்கு நாணும், நட்டார்க்குச் சிரிப்பும் சேவகர்க்கு வலிமையும், பெரியார்க்குப் பிறரைப் பேணுதலும் எளிது, ஆனால் அன்புடையார்க்குச் சினம் தீது செய்தல் அருமையாகும்.

பாடல் - 95
இன் சொல்லான் ஆகும், கிளைமை; இயல்பு இல்லா
வன் சொல்லான் ஆகும், பகைமை மன்; மென் சொல்லான்
ஆய்வு இல்லா ஆர் அருளாம்; அவ் அருள் நல் மனத்தான்;
வீவு இல்லா வீடு ஆய் விடும். . . . .[95]

ஒருவன் சொல்லும் உறுதியாகிய சொல்லினாறை சுற்ற முளதாகும், குணமில்லாத கடுஞ்சொற்களாற் பகைகளுளவாம், பிறர்க்குச் சொல்லு மெல்லிய சொல்லினாற் றளல்வில்லாத அருள் உளதாம், அவ்வருளாவ தொருவன் மன நன்மையால் கேடில்லாத வீடாய் விடும்.

கருத்துரை:

இனசொல்லாற் கிளைமையும், வன் சொல்லாற் பன்மையும், மென்சொல்லாற் பெருமையும் இரக்கமும், அவ்விரக்க மனத்தால் வீடும் ஒருவனுக்கு உண்டாகும்.

பாடல் - 96
தக்கது, இளையான் தவம்; செல்வன் ஊண் மறுத்தல்
தக்கது; கற்புடையாள் வனப்புத் தக்கது;
அழல், தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்,
நிழற்கண் முயிறு, ஆய்விடும். . . . .[96]

இளையான் பிறந்து தவஞ்செய்தல் தக்கது, செல்வத்தையுடையான் இல்லறத்தின்கணின்று இடையீட்டை யூண் மறுத்து நோன்பு புரிதல் தக்கது, கற்புடையாக் வனப்பு தக்கது, ஒருவன் மனுயாக் அறிவிலளாழொழுகின் நிழலின்கண் முயிறோடழலை யொக்கும்.

கருத்துரை:

இளையான் தவமும், செல்வன் நோன்பும், அழகுடையாக் கற்பும் தக்கவை. அன்பும், இன்பும் உணர்தற்குரிய இல்லாள் அறிவிலளாயின் அழலையும் மரநிழற்கண்ணுள்ள செவ்வெறும்பையும் ஒப்பாவள்.

பாடல் - 97
'பொய்யான் சுவர்க்கம்; வாயான் நிரையம்; பொருள்தான்,
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது'-மெய் அன்றால்;
மைத் தக நீண்ட மலர்க் கண்ணாய்! - தீது அன்றே
எத் தவமானும் படல். . . . .[97]

பொய்ந்நெறி யொழுகினால் அவர்க்குச் சுவர்க்கமுளதாம், மெய்ந்நெறியி லொழுகினால் அவர்க்கு நிரயமுளதாம், பொருள் தேடுதலினிதாம், குற்ற மிக்க மடந்தையரோடு கூடி இல்வாழும் இல்வாழ்க்கையினிதா மென்றல் மெய்ம்மையுமன்றால், மைத்தக நீண்ட மலர்க்கண்ணாய்! யாதேனு மொரு தவம் படுதல் தீதன்று நன்மையேயாம்.

கருத்துரை:

பொய்யாற் சுவர்க்கம் பெறுதலும், மெய்யால் நரகமடைதலும், நிலையற்ற செல்வப் பொருளால் இனிது வாழ்தலும், குற்றம் பொருந்திய பெண் சேர்க்கையால் இனிது வாழ்தலும் மெய்யன்று, ஒருவரிடத்தே எந்தத் தவமேனும் உண்டாதல் தீதன்று என்பதாம்.

பாடல் - 98
புல் அறத்தின் நன்று, மனை வாழ்க்கை; போற்று உடைத்தேல்,
நல்லறத்தாரோடும் நட்கலாம்; நல்லறத்தார்க்கு
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்ந்தார்களே, இம்மையில்
அட்டு, இட்டு, உண்டு, ஆற்ற வாழ்வார். . . . .[98]

புல்லிய திறவறத்துன்ன்று மனைவாழக்கை, மனையறத்திற்குச் சொன்னபடியே யொழுகிற்றுறவறத்தாரோடு நடக்கலாம், ஆதலால் நல்ல துறவறத்தார்க்குத் தாம் ஆக்கியிட்டு, தாமும் இடப்படாதுணவர்கள் இப்பிறப்பின்கண் மிகவிட்டுண் டில்வாழ்க்கை வாழ்வார்.

கருத்துரை:

மக்கள் ஓல்லறவாழ்விலு நூன்று யாவர்க்கும் பயன்படுமாறு வாழ்தல் நன்றாம்.

பாடல் - 99
ஈவது நன்று; தீது, ஈயாமை; நல்லவர்
மேவது நன்று, மேவாதாரோடு; ஓவாது,
கேட்டுத் தலைநிற்க; கேடு இல் உயர் கதிக்கே
ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து. . . . .[99]

பிறர்க்கொன்றை யீவது நன்று; பிறர்க்கீயாமை தீது, மேவாதாரோடு நல்லராயிருப்பார் மேவியொழுகுவதுவே நன்று, நன்னெறிக்கு வழியாகிய நூலினையே கேட்டதன் கண்ணே நிற்க; கேடிலாத உயர்கதியாகிய வீட்டுநெறியின்கண்ணே செல்லும் செலவினு கண்நிற்க மேற்கொண்டு.

கருத்துரை:

ஈகை நன்று, ஈயாமை தீது, தம்மைச் சேராதவரோடும் நல்லவர்கள் ஒருவாறு சேர்ந்தாற்போலிருப்பது நன்று, நல்லனகேட்டு அவற்றுக்குத் தக ஒழுகுதல் அவ்வொழுக்கம் மேன்மேல் உயர்ந்து நற்பேற்றிப்கு மக்களைச் சேர்ப்பியாநிற்கும்.

பாடல் - 100
உண் இடத்தும், ஒன்னார் மெலிவு இடத்தும், மந்திரம் கொண்டு
எண் இடத்தும், செல்லாமைதான் தலையே; எண்ணி,
உரைப் பூசல் போற்றல், உறு தவமேல் கங்கைக்
கரைப் பூசை போறல், கடை. . . . .[100]

பிறருண்ணுமிடத்தும் பகைவராயினார் தளர்ந்தவிடத்தும் பிறர் சூழ்ச்சிகொள்ளுமிடத்துஞ் சொல்லாமையும், தாமொருவர்க்குத் தலைமையாகிய குணம் ஆராய்ந்து பிறரோடு மாறுபட்டுச் சொல்லுஞ் சொல்லின்றித் தமக்குளதாகப் பாதுகாத்தலைச் செய்தலும், மிக்க வறத்தை மேற்கொண்ட காலத்துப் பிறவுரைக் கொன்று தின்கையும், காரணமாய்ந்தாற் றவவேடங்கொண்ட பூசையொத்தலாகிய கீழ்மையாம்.

கருத்துரை:

பிறர் உண்ணுமிடத்திலும், பகைவர்கள் தளர்ச்சியுடையவரா யிருக்குமிடத்திலும், மறைமொழிகள் கூறி ஏதோ ஆழ்ந்து நினைத்துக் கொண்டிருக்கு மிடத்திலும் செல்லலாகாது. ஆன்றோர் அறிவுரைகளுக்கு மாறுபடுதலும், உயிர்க்கொலை புரிதலும், உள்ளொன்று னவத்து மேலே தவக்கோலம் பூண்டிருத்தலுந்தீதாம்.

பாடல் - 101
பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,
பொத்து இல் பொருள் - திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், - இவர் செம்மை
செத்தால் அறிக, சிறந்து!. . . . .[101]

பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடுந்தவசியும், பொருட்டிறத்தின்கட் பொத்தின்றிச் செவ்வியனாய்த் தேறப்படுவானும், முதன்மையாக அரசனாலே வைக்கப்பட்டார் பொத்தின்றி வழக்கும் சான்றவனுமென இவ்வைவர் செம்மையும் இவர் செத்தாலறிக மிகவும்.

கருத்துரை:

பத்தினி சேவகன் முதலியோருடைய செம்மமைக் குணங்கள், அவறிறந்தபின் மிகவும் உலகத்தாரால் அறியப்படும்.

பாடல் - 102
வழிப் படர், வாய்ப்ப வருந்தாமை, வாய் அல்
குழிப் படல், தீச் சொற்களோடு, மொழிப்பட்ட
காய்ந்து விடுதல், - களைந்து, உய்யக் கற்றவர்,
ஆய்ந்து விடுதல் அறம். . . . .[102]

பிறர்வழிச் செலவும், வாய்க்குங் காரியங்களை முயன்று வருந்தாமை, மெய்ம்மையல்லா நெறியின்கட் சேறல், பிறரைப் பழிகூறுஞ் சொற்கள், நல்லாராற் சொல்லப்பட்ட குணங் களைந்து நீக்குதலென இவ்வைந்தையுங் கற்றறிவர் களைந்து நீக்குதலறமாவது.

கருத்துரை:

நல்வாழ்வடைய விரும்புகின்றவர்கள் தீச்சொற்கள் கூறுதலும், வழிப்பறிக் கொள்ளை செய்தலும், பிறர் பொருள் கவரலும், மெய்ம்மை தவறுதலும், அறிவுரைகளைக் கடத்தலும் ஆகா.

புறத்திரட்டில் கண்ட பாடல்கள்
அச்சமே, ஆயுங்கால் நன்மை, அறத்தொடு,
கச்சம் இல் கைம்மாறு, அருள், ஐந்தால் - மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய்! - தூற்றுங்கால்
ஈகை வகையின் இயல்பு. . . . . [206]
கைம்மாறும், அச்சமும், காணின் பயம் இன்மை,
பொய்ம் மாறு நன்மை, சிறு பயம், மெய்ம் மாறு
அருள் கூடி ஆர் அறத்தோடு, ஐந்து இயைந்து, ஈயின்,
பொருள் கோடி எய்தல், புகன்று. . . . . [207]
இம்மை நலன் அழிக்கும்; எச்சம் குறைபடுக்கும்;
அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும்; மெய்ம்மை
அறம் தேயும்; பின்னும், அலர்மகளை நீக்கும்;
மறத்தேயும் பொய் உரைக்கும் வாய். . . . . [311]
சிறப்புப் பாயிரம்
மல் இவர் தோள் மாக்காயன் மாணாக்கன், மா நிலத்துப்
பல்லவர் நோய் நீக்கும் பாங்கினால், கல்லா,
மறு பஞ்சம் தீர் மழைக்கை மாக் காரியாசான்,
சிறுபஞ்சமூலம் செய்தான். . . . . [01]

மற்போர் விரும்பும் தோள் வலிமையையுடைய, மாக்காயன் என்பவர் மாணாக்கராகிய, வற்கடத்தைத் தீரக்கின்ற மழையைப் போலும் ஈகை யொழ்க்கமுடைய, சிறந்த, காரியாசான் என்பவர், இப்பேருலகத்தில், மக்கள் பலருடைய அறியாமை நோயை நீக்குந் தகைமையால், அறிவுநூல்களை (அவர்கள்) கல்லாத, குற்றந்தீரும்படி, சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை, இயற்றினாரென்க.

கருத்துரை:

மாக்காயனார் மாணாக்கராகிய காரியாசான் என்னுஞ் சான்றோர் மக்கள் அறியாமையுங் குற்றமும் நீங்கும்படி ‘சிறுபஞ்சமூலம்‘ என்னும் இந்நூலை யியற்றினார் என்பது.

ஒத்த ஒழுக்கம், கொலை, பொய், புலால், களவோடு.
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு, ஒத்த
உறு பஞ்ச மூலம் தீர் மாரிபோல் கூறீர்
சிறுபஞ்சமூலம் சிறந்து! . . . . [02]

கருத்துரை:

கொல்லாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, கள்ளாமை ஆகியவற்றை பஞ்சத்தை அகற்றும் மழை போல, சிறுபஞ்சமூலம் போன்று இந்நூலை மக்களின் தீய குணங்கள் போகுமாறு கூறுவாராக.

சிறுபஞ்சமூலம் முற்றிற்று.