கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

கார் நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.

கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.

பாடல் - 01

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து? . . . . [01]

விளக்கம்:

கரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ? என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 02

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து. . . . . [02]

விளக்கம்:

வளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

பாடல் - 03

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே
நெருநல், ஒருத்தி திறத்து. . . . . [03]

விளக்கம்:

வரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.

பாடல் - 04

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!
வாடும் பசலை மருந்து. . . . . [04]

விளக்கம்:

கூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே! இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.

பாடல் - 05

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-
பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு. . . . . [05]

விளக்கம்:

அம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய்! பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.

பாடல் - 06

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. . . . . [06]

விளக்கம்:

மாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய்! கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.

பாடல் - 07

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை. . . . . [07]

விளக்கம்:

தளர்ந்த இயல்பினையுடையாய்! தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.

பாடல் - 08

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு. . . . . [08]

விளக்கம்:

பெண் தகைமையையுடைய நல்லாய்! மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.

பாடல் - 09

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து. . . . . [09]

விளக்கம்:

கார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.

பாடல் - 10

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!
மேனி தளிர்ப்ப, வரும். . . . . [10]

விளக்கம்:

என் தோழியே! வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.

பாடல் - 11

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்
பூங் குலை ஈன்ற புறவு. . . . . [11]

விளக்கம்:

குழற்சியையுடைய தழைத்த கூந்தலையுடையவளே! மேனோக்கி எழும் பாம்பு எடுக்கும் படம் போல பொருந்திய வெண்காந்தள்கள் பூங்கொத்துகளை ஈன்ற இம்மை மறுமையின்பங்கள் பொருந்துதலையுடைய காடுகள். பொருளை கொண்டுவர உன்னை பிரிந்து சென்ற தலைவர் இரைந்து திரும்புவதை கூறாமல் கூறி நிற்கின்றன.

(ஐம்பால் என கூந்தலைக் கூறுவது... கூந்தல் ஐந்து பகுப்பினை உடையதைக் கூறுகிறது. அவை, கொண்டை, சுருள், பனிச்சை, குழல், முடி)

பாடல் - 12

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். . . . . [12]

விளக்கம்:

கருமையும் அழகும் பொருந்திய, மையுண்ட கண்களையுடைய, மயில் போலும் சாயலினியுடையாய், எண்ணெய் பூசப்பட்ட யானைகளைப்போல கரிய மேகங்கள், நாடோறும் வலமாக எழா நின்றன. (ஆகவே) ஐயந்தீர்ந்த அறிவினையுடைய நம் தலைவன் மீளவருதல் உண்மை.

பாடல் - 13

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போலக் கண் வெளவி,
ஒளிறுபு மின்னும், மழை. . . . . [13]

விளக்கம்:

பருவமிகு அழகினையுடையாய்...தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினிது அழகுபோல மழை பெய்ய அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியினையுடைய வாளினைப்போல கண்களைக் கவர்ந்து ஒளிவிட்டு மின்னா நின்றது.

பாடல் - 14

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; - வயங்கிழாய்!
முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும். . . . . [14]

விளக்கம்:

விளங்காநின்ற அணிகளையுடையாய், முல்லைக்கொடிகள் விளங்குகின்ற, மகளிரின் பற்களைப் போல அரும்பு ஈனும்வகை. நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனியவாக மின்னா நின்றன (ஆதலால்) பொருள் தேடிக் கொள்ள சென்ற நமது தலைவர் விரைந்து வருதலை தெளிய அறிந்ததாம்.

பாடல் - 15

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்
குருந்தின் குவி இணர் உள் உறை ஆகத்
திருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது. . . . . [15]

விளக்கம்:

திருந்திய அணிகளையுடையாய்! குருந்த மரத்தின் குவிந்த பூக்களின் உள்ளிடமே தமக்கு உறைவிடமாக இருந்து, திருந்திய இனிய இளியென்னும் பண்ணை வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில் நம் தலவர் நீங்கியிருப்பார் அல்லர்.

பாடல் - 16

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள. . . . . [16]

விளக்கம்:

பெரிய தோளினையுடையாய்! அசோகினது இளந்தளிர் போன்ற இன் உடம்பினது பசலையானது, மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் செயலற்று துன்பமுறவும், பெரிய மயில்கள் களித்து ஆடவும்... பெரிய ஒலியையுடைய மேகங்கள் முழங்காமல் நிற்கும். (தலைவன் வருகைக் கண்டு தலைவி மகிழ்ச்சியை அடைய)

பாடல் - 17

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பெளவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை
கொண்டன்று, - பேதை! - நுதல். . . . . [17]

விளக்கம்:

பேதையே! மேகமானது கடல் நீரைக் குடித்து, பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புகளை வருத்தி பாறை கற்களையுடைய பக்க மலையின் மேல் நீரைச் சொரிந்து இருளை மிக்கது. (ஆதாலினால்) உனது நெற்றி பிறை மதியின் அழகை கொண்டதே!

பாடல் - 18

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு. . . . . [18]

விளக்கம்:

மலைநெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர், வந்த பொழுதே மேகங்கள் மிக்க ஒலியையுடைய உருமேற்றுடனே நடுவு நின்று எங்கும் பெய்தலால் வறுமையுற்றார் உடம்புபோல முன்பு பொலிவிழந்த காடுகள் பொருளுடையார் மனம் போல அழகைத் தந்தன.

பாடல் - 19

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. . . . . [19]

விளக்கம்:

கலப்பைப்படை வெற்றியையுடையவனது வெண்ணிறம் போல பூங்கொம்பினையும், செவ்விய தாளினையுமுடைய வெண்கடம்புகள் மலர்ந்தன. ஆதலால்... என் மனம், பசுமையாகிய திரண்ட வளைகள் விளங்குகின்ற முன்னங்கையை உடையவளின் தோள்கள் துணையாக வேண்டி நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது. (கலப்பப்படை வென்றவன் - பலராமன்)

பாடல் - 20

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை. . . . . [20]

விளக்கம்:

சிறப்பமைந்த அரசனுடைய போர்த்தொழில்களும் முற்றுப் பெற்றன. செவ்வியினியவாயின மேகங்கள். அரிய மணியையுடைய பாம்புகள் வருந்தும் வகை உருமேற்றுடனே போர்புரியும் வேந்தரின்சேனை போல் செல்லா நிற்கும் (ஆதலால் நாமே செல்லக்கடவேம்)

பாடல் - 21

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து. . . . . [21]

விளக்கம்:

எந்திரச் செய்கைகளான மாட்சிமைப் பட்ட, அலங்கரிக்கப் பட்ட திண்ணிய தேர் வந்த வழியிதே! சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம் கூர்மையுற்று செவ்விய அழகிய நெற்றியையும், வளப்பான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும். சிலவாகிய மொழியினையுமுடைய மடவாளது வாயின்கண் உள்ள கூறிய பற்களை ஒவ்வா நிற்கும்.

பாடல் - 22

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. . . . . [22]

விளக்கம்:

சேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, தலையாட்டம் அணிந்து. புல்லினை உண்ட மனஞ்செருக்கிய குதிரையையும், தேருடன் பூட்டுதலைச் செய்ய.காடுகள் நற்குணமுடைய மகளிரின் இளமைச் செவ்விபோல அழகுற்று வருவாயுடையாரது செல்வம் போல பொலிவுற்றன.

பாடல் - 23

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ,
ஒண்டொடி! ஊடும் நிலை?. . . . . [23]

விளக்கம்:

ஒள்ளிய வளையல்களை அணிந்தவளே! காடெங்கும் இடந்திரண்ட மேனி திரண்டமுத்தத்தை யொப்ப குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் மேகம் மழைபொழிந்து கொண்டு, அழகினையுடைய வானத்திடத்தையெல்லாம் கொண்டது.

பாடல் - 24

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது.

எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். . . . . [24]

விளக்கம்:

மலைகள் உயர்ந்த காடுகள் யானையின் மதம் நாறா நிற்கும், கரிய வானத்திங்கண் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும். (ஆதலால்) பலவாகிய கரிய கூந்தலையுடையவள் ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள். மனமே! எல்லா தொழில்களும் ஒழிந்து நிற்க. நீ போதற்கு ஒருப்படு.

பாடல் - 25

பருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. . . . . [25]

விளக்கம்:

குளிர்ச்சி மிக்க காட்டில், கரிய தாளினையுடைய வரகினது பொரியைப்போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன. (தலைவன்) செய்த குறிகள் வந்து விட்டன. ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்கு பசலை அதிகரித்தது.

பாடல் - 26

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது.

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி!
தூதொடு வந்த, மழை. . . . . [26]

விளக்கம்:

சிலவாகிய மொழியினையுடையாய்... தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி இடமெல்லாம் பூத்தன. மழையும் தூதுடனே வந்தது.

(கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது)

பாடல் - 27

ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூற வற்புறுத்தது.

முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. . . . . [27]

விளக்கம்:

மேகம் குறிஞ்சிப் பறைபோல முழங்குதலைச் செய்ய, காட்டில் குருக்கத்தியிலை விரிந்தன. (நம் காதலர்கள்) பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, நாம் ஊடுதலைப் பாராட்டுவதால் பசலை நோய் படுக்கையிடத்தில் பரவும்.

பாடல் - 28

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது.

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செல்வி உடைய, சுரம் - நெஞ்சே! - காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு. . . . . [28]

விளக்கம்:

ஒலிக்கும் இசையினையுடைய வானம் முழங்குதலைச் செய்ய குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப்பட்ட குழை போல கொத்துக்களாய் தொங்க, மனமே, நம் காதலியின் ஊருக்கு அலர்கெடும் வகை நாம் செல்வதற்கு காடுகள் குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின. (அலர்_ஊரார் கூறும் பழிசொல்)

பாடல் - 29

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது.

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,
செவ்வி உடைய சுரம். . . . . [29]

விளக்கம்:

சோலைகளெல்லாம் பக்கங்களில் பூத்தன. காட்டின் கண்ணே தங்குதலின்றித் திரியும் அழகையுடைய வண்டுகள் இசைப்பாட்டைப் பாடா நின்றன. பகைத்தெழுந்த மேகம் எல்லாத் திசைகளிலும் வந்தது. காடுகளும் தட்பமுடையவாயின. (ஆதலால்) நாம் செல்லக் கடவேம்.

பாடல் - 30

வினைமுற்றிய தலைமகள் நெஞ்சொடு சொல்லியது.

வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,
ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து. . . . . [30]

விளக்கம்:

மலைகள் வளம் நிறைய வானம் சிறப்பெய்த பெரிய பூமியைய் துளிகளால் ஊடறுத்து இனிய மழை விழாமல் நிற்க, நறுமணம் கமழா நிற்க உதைக் காற்றனாது காதலியின் தலைவன் வரமாட்டான் என கருதி வருந்தியிருக்கும் அறியாமையை நமக்குத் தெரிவித்து, நறிய குளிர்ந்த சோலையில் அசையாமல் நிற்கும். (ஆதலால்) நீ விரைவில் செல்வாயாக.

பாடல் - 31

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

கார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து,
எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி,
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி,
திருநுதற்கு யாம் செய் குறி. . . . . [31]

விளக்கம்:

எருமையினது எழுச்சியையுடைய ஆண் மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு போரின்கண் மறமிக்க வீரரைப்போல இறுமாந்திருக்கும் காலமே அழகிய நெற்றியுடையாளுக்கு நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும். (ஆகவே விரைந்து தேரைச் செலுத்துவாய்)

பாடல் - 32

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

கடாஅவுக, பாக! தேர் கார் ஓடக் கண்டே;
கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு. . . . . [32]

விளக்கம்:

அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனதைப்போல, கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள் காட்டின்கண் பிடவமாகிய பெருந்தகையாளிடத்து நன்றாக இசைப்பாட்டினை பாடா நிற்கும். பாகனே... மேகம் ஓடுதலைக் கண்டு தேரை விரைவாகச் செலுத்துவாயாக.

பாடல் - 33

வினைமுற்றிய தலைமகள் பாகற்குச் சொல்லியது.

கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி
குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும்
இடம்' என ஆங்கே குறி செய்தேம், பேதை
மடமொழி எவ்வம் கெட. . . . . [33]

விளக்கம்:

கடலினிது நீரை முகர்ந்த, நிறைந்த சூலினையுடைய மேகம், மேற்கு மலையிடத்து தான் கொண்ட நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினையுடைய மொழியை உடையவளது வருத்தம் நீங்க குறி செய்தேம் (ஆதலால் தேரினை விரந்து செலுத்துக)

பாடல் - 34

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி,
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த
ஒள் நுதல் மாதர்திறத்து. . . . . [34]

விளக்கம்:

மிக்க பெருமையையுடைய மேகம் விரித்த அலையையுடைய கடலினிது நீரை நிறைய உண்டு பெரிய மலையை அடையா நிற்கும். மழை சூழ்ந்து கொள்ளும் கார் காலத்தை தெய்வ உத்தியென்னும் தலைக்கோலத்தை(ஒருவித தலையணி) அணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய காதலியினிடத்து (தான் மீண்டும் வரும் காலமாக) தலைவன் குறிப்பிட்டான்.

பாடல் - 35

பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல்வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது.

சென்ற நம் காதலர் சேண் இகந்தார்!' என்று எண்ணி
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர,
வென்றி முரசின் இரங்கி, எழில் வானம்
நின்றும் இரங்கும், இவட்கு. . . . . [35]

விளக்கம்:

விதியினால் பிரிந்து சென்ற தலைவன் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென நினைத்து பசலை நோயுடனே, பலதுன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியினையுடைய மேகம் வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப்போல வானில் இருந்தும் இரங்கா நிற்கும்.

பாடல் - 36

வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது.

சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப
ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க
செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்கு. . . . . [36]

விளக்கம்:

குளிர்ச்சிமிக்க செம்முல்லைப் பூக்கள் மீன் குத்திக் குருவியின் வாய் போலும் அழகுடையவனாகி வரிசை பொருந்த அரும்பின. (ஆதலினால் இப்போது)செல்வத்தையுடைய மழைபோல குளிர்ந்த மதர்த்த கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய காதலியது ஊரானது நமக்கு நல்ல விருந்தாகுமிடமாகட்டும்.

பாடல் - 37

தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது.

கருங் கடல் மேய்ந்த கமஞ் சூழ் எழிலி
இருங் கல் இறு வரை ஏறி, உயிர்க்கும்
பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந் தொழில் வாய்த்த நமர்?. . . . . [37]

விளக்கம்:

கரிய கடலின் நீரைக் குடித்த, நிறைந்த சூலினையுடைய மேகம் இரு பெரிய கற்களையுடைய பக்க மலையின் மேல் ஏறியிருந்து நீரைச் சொரியும் மிக்க செவ்வியையுடைய காலத்தும் அரசனது போர்த்தொழில் வாய்க்கப்பெற்ற நம் தலைவர் வாராதிருப்பாரோ!.

பாடல் - 38

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது.

புகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய
வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,
ஒண்டொடி! - ஊடும் நிலை?. . . . . [38]

விளக்கம்:

உயர்ந்த நிலையினையுடைய கடுங்கோபம் கொண்ட ஆண் யானைகள் புள்ளிமையுடைய முகம் புழுதியில் புரளும் வகையில் பெண் யானைகளுடன் கூடி விளையாடும் குளிர்ந்த செவ்வியையுடைய காலத்திலும் தலைவர் வரவில்லை (ஆதலால்) ஒள்ளிய தொடியினையுடையாளே அவருக்காக ஊடல் கொள்வதில் பயன் என்ன?

பாடல் - 39

தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது.

அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி,
இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு. . . . . [39]

விளக்கம்:

வண்டின் கண்ணினை ஒப்ப அரும்பினை ஈன்று, பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியினது பழைய தழையைச் சூடிக் கொண்டு, பெரிய புனங்களை உழவர் புதிதாக ஏர் விழுக்கத் தொடங்கினார்கள் (ஆதலால்) நம் ஊரின் கண் நம் தலைவர்க்கு பெரிய அலராயிற்று.

பாடல் - 40

பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

'வந்தன செய் குறி; வாரார் அவர்' என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
ஈந்தும், - மென் பேதை! - நுதல். . . . . [40]

விளக்கம்:

மெல்லிய பேதையே! தலைவர் செய்த குறிகள் வந்து விட்டன. அவர் வரமாட்டார் என வருத்தப்பட்ட ஒருத்தியாகிய உனக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி, அழகிய முகில் ஈந்தின் கனியின் நிறம் போல கொண்டது உன் நுதல் இனி ஒளி வரப் பெறும். (என தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறினாள்)

சிறப்புப் பாயிரம்
முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.

முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.