கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

கைந்நிலை
பதினெண் கீழ்க்கணக்கு

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

கைந்நிலை - பதினெண் கீழ்க்கணக்கு

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதும், இவர் தந்தையார் பெயர் காவிதியார் என்பதும் விளங்கும். இவர் தந்தையார் அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவராக இருத்தல் கூடும். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவார்.

1. குறிஞ்சி
துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல்
நிகரில் மடமான் எரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான் இவன் என்று
மேனி சிதையும் பசந்து. . . . . [01]

விளக்கம்:

தினைக்கதிரைத் தின்பதற்காகத் தினைத்தாளின் மேல் ஏறுங் கிளிகளை யோட்டுகின்ற தினைப்புனத்தின்கண் ஒப்பில்லாத இளமையான மான்கள் நெருங்கித் திரியும் விரும்புகின்ற மலைச்சாரலில் காட்டிற்கு உள்ளாகிய நாட்டையுடையவன் என்னைப் புணர்ந்தான் அவ்வாறு புணர்ந்த தலைவன் இஞ்ஞான்று அருகில் இல்லாது பிரிந்தான் என்பதையறிந்து என் உடல் பசலை நிறமாகி எழிலழிந்தது, (என்று தலைவி தோழிக்குக் கூறினாள்.)

துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்

வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச்
சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலைநாடன் வாரான்கொல் தோழிஎன்
நெஞ்சம் நடுங்கி வரும். . . . . [02]

விளக்கம்:

என்பாங்கியே! நெருப்பால் வெந்து கருகிய காட்டிற்கு மணம் உண்டாகும்படி மலையினின்று வரும் அருவியானது சந்தனக் கட்டைகளை ஏந்திக்கொண்டு வந்து போடுகின்ற வஞ்சகமுள்ள மலைநாட்டுத் தலைவன் இனிவாரானோ, வருவனோ யான் அறியேன் என் நெஞ்சம் நடுங்கிவரும். எனது மனம் அது குறித்து நடுங்கி வருகின்றது, (என்று கூறினள் தலைவி).

துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர்
காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும்
பாசம்பட் டோடும் படுகல் மலைநாடற்கு
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு. . . . . [03]

விளக்கம்:

பாசம் படர்ந்த பசுமையான நீர்ச் சுனையின் பக்கத்தில் வழியும் பழமையான நீரில் மிகுந்த சினமுடைய மந்திகள் பழகி அந்நீரில் வருங் கனிகளை யெடுத்துத் தின்று சுவைத்திருக்கும் இயல்புடைய பாசமுண்டாக நீரோடுகின்ற உயர்ந்த கற்களையுடைய மலைநாட்டுத் தலைவன் பொருட்டு, என் நெஞ்சு ஆசையில் தேம்பும் என் நெஞ்சமானது காதலால் வருந்துகின்றது, (என்று தோழியினிடம் கூறினள்).

துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய
தீங்கனி மாவின் முசுப்பாய் மலைநாடன்
தான்கலந்து உள்ளாத் தகையானோ நேரிழாய்
தேங்கலந்த சொல்லின் தெளித்து. . . . . [04]

விளக்கம்:

என்தோழீ! உயர்ந்த சிறந்த பலா மரத்திற் பழுத்த இன்பத்தைத் தருகின்ற இனிய கனியை மாமரத்திலிருந்து கருங் குரங்குகள் பாய்ந்து கவரும் மலைநாடன் ஆகிய தலைவன் இனிமை பொருந்திய சொற்களால் சூளுரை கூறித் தெளிவித்து முன் தானே வந்து கூடிப் புணர்ந்து பின்பு அதனை நினையாது மறக்குந் தன்மையுடையவனோ, (கூறுக என்றாள்).

துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்

இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும்பிடி பேணி வரூஉம்
முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்
நிரையம்எனக் கிடந்த வாறு. . . . . [05]

விளக்கம்:

கரிய பெண் யானைகளானவை இனிய வண்டுகள் இன்பத்தைக் கொண்டு பாடுகின்ற ஒலியைக் கேட்டு தேன் கூட்டினை விரும்பி வருகின்ற முரசு முழங்குவது போல அருவி யாரவாரஞ் செய்கின்ற மலை நாட்டையுடைய என் தலைவனுக்கு எனது தோளிற் கூடும் இன்பமானது நரகம்போல நினைக்குமாறு இருக்கும் இயல்பு, (என்ன காரணம் என்று கூறினள்).

துறை :-

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.

மரையா உகளும் மரம்பயில் சோலை
உரைசால் மடமந்தி ஓடி உகளும்
புரைதீர் மலைநாடன் பூண்ஏந்து அகலம்
உரையா வழங்குமென் நெஞ்சு. . . . . [06]

விளக்கம்:

காட்டுப் பசுக்கள் தாவித் திரிகின்ற மரங்கள் வளர்ந்திருக்கும் சோலையில் உயர்த்துச் சொல்லப் படுதலமைந்த இளமையான குரங்குகள் விரைந்து தாவித் திரிகின்ற குற்றம் நீங்கிய மலை நாடனாகிய தலைவனது ஆர முதலிய அணிகலம் தாங்கிய மார்பானது, என் நெஞ்சு உரையா வழங்கும். என் மனத்தைத் தேய்த்து அதனுள் நடக்கின்றது, (என் செய்வேன் தோழி என்றாள்).

துறை :-

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.

கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை
எல்உறு போழ்தின் இனிய பழங்கவுள்கொண்டு
ஒல்என ஓடு மலைநாடன் தன்கேண்மை
சொல்லச் சொரியும் வளை. . . . . [07]

விளக்கம்:

ஆண்குரங்குகள் பல கற்களையுடைய மலையில் ஏறி சூரியன் பொருந்திய பகற்காலத்தில் அங்குள்ள, வாழை மரத்திற் கனிந்த பழத்தைப் பறித்து உரித்துக் கன்னத்தில் ஒதுக்கிக் கொண்டு விரைவாக ஓடுகின்ற வளம் பொருந்திய மலைநாடனாகிய நம் தலைவனது நட்பின் இயல்பினைப் பற்றி கூறத் தொடங்கினால் அப்போதே என் கைவளையல்கள் கழன்று விழும், (என்று கூறினள்).

துறை :-

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.

கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்
கி...க்...கொண்...கரும்
பெருங்கல் மலைநாடன் பேணி வரினே
சுருங்கும் இவள்உற்ற நோய். . . . . [08]

விளக்கம்:

வலிய கைகளையுடைய சினம் பொருந்திய யானைகள் கரிய மலைப் பாம்புகளின் பக்கத்தில் பெரியகைகளால் தேனீக்களை யோட்டித் தேன் கூட்டினை யெடுத்து அதன் கண்ணுள்ள இனிய தேனையுண்ணும் பெரிய கற்களையுடைய மலை நாடனாகிய தலைவன் இவளை விரும்பி நாடோறும் வந்தால் இவள் கொண்ட காமநோயானது தணியும், (என்று தோழி செவிலியிடம் கூறினள்).

துறை :-

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்.

காந்தள ரும்புகை என்று கதவேழம்
ஏந்தல் மருப்பிடைக் கைவைத்து இனனோக்கிப்
பாய்ந்தெழுந்து ஓடும் பயமலை நன்னாடன்
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு. . . . . [09]

விளக்கம்:

சினம் பொருந்திய யானையானது செங்காந்தள் மலரைக் கொடிய தீ யென்று கருதி உயர்ந்த தன் கொம்புகளினிடையே துதிக்கை உயர்த்தி நீட்டிக்கொண்டு தன் இனமாகிய யானைக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்து ஓடுகின்ற அச்சத்தைத்தரும் மலைகளை யுடைய நல்ல நாடனாகிய நந்தலைவன் நம்மிடத்தில் வந்து கூடிக்கலந்து செல்லும் இன்பத்தை வெறுத்தானோ? வெறுத்திலனோ? யானறியேன். (என்று தலைவி தோழியிடங் கூறினள்.)

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன்
மின்னின் அனையவேல் ஏந்தி இரவினுள்
இன்னே வரும்கண்டாய் தோழி இடையாமத்து
என்னை இமைபொரு மாறு. . . . . [10]

விளக்கம்:

என்னுயிர்ப் பாங்கியே! பொன் போன்ற மலர்கள் பொருந்திய வேங்கை மரங்களையுடைய புனம் சூழ்ந்திருக்கும் மலைநாட்டை யுடையவனாகிய தலைவன் மின்னலைப்போல ஒளிவீசும் வேற்படையைக் கையில் ஏந்தி இரவின் நடுச்சாமத்தில் இப்போதே வருவான், இமை பொரும் ஆறு என்னை - என் கண்ணிமை யொன்றோடொன்று பொருந்தியான் உறங்குமாறு எங்ஙனம் (அவன் வருவதை நினைந்து கவலையுறுகின்றேன் என்றாள்)

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி
பொறிகிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறிகிளர் நன்மலை நாடன் வருமே
அரிதுரைத்திவ் இல்லில் நமக்கு. . . . . [11]

விளக்கம்:

பன்றிகளானவை கொம்புகளாற் குத்தியெழுப்பிய நிறைந்த புழுதியில் புள்ளிகள் விளங்கிய மயில்கள் விரும்பிப் படிந்து விளையாடும் இயல்புடைய இலைமரங்கள் விளங்கும் நல்ல மலை நாட்டையுடையவனாகிய தலைவன் இம்மனையின்கண் நமக்கு அருமையாகச் சில சொற்கள் பேசி வருவான். (அவ்வரவு எனக்கு மிகவும் அச்சத்தை விளைக்கின்றது என்றாள்.)

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக்
கேசம் அணிந்த கிளர்எழிலோன் ஆகம்
முடியுங் கொல் என்றுமுனிவான் ஒருவன்
வடிவேல்கை ஏந்தி வரும். . . . . [12]

விளக்கம்:

புன்னையின் நல்ல மலரையும் அன்றலர்ந்த வேங்கைப் பூவினையும் கலந்து கூந்தலிற் புனைந்து விளங்கிய வனப்புடையோளாகிய நம் தலைவியின் உடலானது அழிந்து விடுமோ என்று ஐயங்கொண்டு நம் தலைவனாகிய ஒப்பற்றவன் தன் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூர்மையான வேலைக் கையிற்றாங்கி இரவில் வருவான். (ஆதலால் இவ்வரவையானஞ்சுகின்றேன் விலக்கு என்றாள்).

2. பாலை
துறை :-

வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.

கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை
விடுவில் எயினர்தம் வீளைஓர்த் தோடும்
நெடுவிடை அத்தம் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண். . . . . [13]

விளக்கம்:

விரைந்து வழியில் வருவோரை அடித்துப் பொருள் பறிக்கின்ற பரற்கற்கள் சூழ்ந்த கரும்பாறைகளில் இருந்து ஓடும் அத்தம் - அம்பேவுகின்ற விற் பிடித்த வேடர்களுடைய சீழ்க்கையடிக்குங் குரலைக் கேட்டு நீண்ட மரையான் ஏறுகள் அஞ்சியோடு கின்ற பாலை வனத்தின் வழி நீ செல்லக்கருது கின்றாய் என்பது நான் சொல்லக் கேட்டவுடனே மாவடுப்போன்ற கண்களிடையே கண்ணீர் மெதுவாக வழிந்தன. (ஆதலால் நீ பிரிந்து செல்லல் தகவன்று என்று குறிப்பிற் கூறினள்.)

துறை :-

வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்.

கதநாய் துரப்ப...........................
............................................அவிழும்
புதல்மாறு வெங்கானம் போக்குரைப்ப நில்லா
முதன் .................................... . . . . [14]

விளக்கம்:

சினம் பொருந்திய நாய்கள் தொடர்ந்து செலுத்த விரிகின்ற புதர்கள் மாறுபடுகின்ற கொடிய சுரத்தின் வழியாக நீ பிரிந்து செல்வதை நான் கூற நில்லாமற் கழல்கின்றன. (வளை)

துறை :-

சென்ற செய்யுளில் கூறப்பட்டதாக இருக்கலாம்.

...........................................
...........................................
கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார்
கொடுங்கல் மலை...................... . . . . [15]

விளக்கம்:

கடுங்கதிர் வெங்கானம் கொடிய சூரியன் கிரணங்களால் மிகவும் வெப்பமடையும் காட்டின் வழியாக மிகுதியாகப் பொருளீட்டி வருதற் பொருட்டுப் பிரிந்து சென்ற நங்காதலர் வளைந்த கற்பாறைகளையுடைய மலை.

துறை :-

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

............. வுறையு மெல்லென் கடத்துக்
கடுஞ்சின வேங்கை கதழ்வேழம் சாய்க்கு
...........................................
........................................... நமர். . . . . [16]

விளக்கம்:

தங்கியிருக்கும் மெல்லிய காட்டுவழியில் மிகுந்த கோபத்தையுடைய புலிகள் வேகம் பொருந்திய யானையை யடித்துக் கொல்லும் நம்தலைவர்.

துறை :-

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம்
மடமா இரும்பிடி வேழ மரு.............
....................ண்ட உண்கண் ணுள்நீர்
............................................ . . . . [17]

விளக்கம்:

கடமான் என்ற விலங்குகள் முரிந்து விரைந்து செல்கின்ற பரற்கற்களையுடைய வழிகள் பொருந்திய பாலைவனத்தில் இளமையான கரிய பெரிய பெண்யானைகளோடு ஆண்யானைகள் கூடும் நீண்ட மையுண்ட கண்களில் உள்ளிருந்து வரும் கண்ணீர்.

துறை :-

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை
ஏமாண் சிலையார்க்கும் இனமா இரிந்துஓடும்
தாமாண்பில் வெஞ்சுரம் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட பல்லி படும். . . . . [18]

விளக்கம்:

காட்டுப் பசுக்கள் (மரையா) கதறுகின்ற (ஒலிக்கின்ற) அழகிய மலையையடுத்த அருமையான வழியில் அம்பும் மாட்சிமைப்பட்ட வில்லும் உடைய வேடர்களைக்கண்டு கூட்டமாகிய விலங்குகள் முறித்தோடுகின்ற பெருமையில்லாத கொடிய பாலை நிலத்துப் பிரிந்து சென்ற நம் தலைவர் வரவினை யறிந்து குறி கூறுவதால் பெருமை பொருந்திய வாயையுடைய பல்லியொலிக்கின்றது. (ஆதலால் நம் தலைவர் இன்னேவருவர், வருந்தாதே எனத்தோழி கூறினள்)

துறை :-

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல்
செருக்கில் கடுங்களிறு சென்றுறங்கி நிற்கும்
பரற்கானம் பல்பொருட்குச் சென்றார் வருவர்
நுதற்கு இவர்ந் தேறும் ஒளி. . . . . [19]

விளக்கம்:

அரக்கினது நிறம் போன்ற செந்நிறம் பொருந்திய ஓமை மரத்தின் புள்ளிபட்ட நிழலில் களிப்பில்லாத கொடிய யானைகள் போய் உறங்கிக்கொண்டு நிற்கும் இயல்பு பொருந்திய பருக்கைக்கற்களையுடைய காட்டு வழியாக மிகுந்த பொருளீட்டுவது கருதிச்சென்ற நம் தலைவர் நினது நெற்றியில் பசலை நீங்கி ஒளிபடர்ந்து ஏறுகின்றது ஆதலால் இப்போதே வந்து சேர்வர் (அது குறித்து வருந்தாதே என்று வற்புறுத்தினள் தோழி)

துறை :-

பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.

..............................................................
........................................... வீழ்க்கும்
ஓவாத வெங்கானம் சென்றார்........
..............வார் வருவார் நமர். . . . . [20]

விளக்கம்:

ஒழியாத வெப்பத்தை யுடைய காட்டின் வழியாகப் பிரிந்து சென்ற நம் தலைவர் நம் தலைவர் இனி வருவார் (ஆதலால் வருந்தாதே என்றனள்.)

துறை :-

பிரிவாற்றாத தலைவி தன் தோழிக்குக் கூறியது.

ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர்
காய்ந்து கதிர்தெறூஉம் கானம் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈர்எயிற்றாய் என்நெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று. . . . . [21]

விளக்கம்:

நமது தலைவர் ஆந்தை யென்ற பறவைகள் மரப்பொந்துகளிலிருந்து சிறிய ஒலி செய்யும்படி சூரியன் வெயில் சுட்டு வருத்துகின்ற காட்டின் வழியாக பிரிந்து சென்றவர்க்குப் பின்னே என் மனமானது நீண்ட வழிகளிற் சென்று நீந்துகின்றது பருத்த இளமுலையையும் குளிர்ந்த பற்களையுமுடைய பாங்கியே! (நான் என்ன செய்வேன் என்றாள்)

துறை :-

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது.

கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீஅறிதி - ஒள்இழாய்
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்தவர்
வல்லைநாம் காணும் வரவு. . . . . [22]

விளக்கம்:

ஒளிபொருந்திய நகைகளையணிந்த தலைவியே! ஆறலை கள்வர் நீங்காது திரியும் காட்டு வழியாகப் பிரிந்து சென்றவருடைய மனமும் பிரிந்ததற்குரிய காரணமும் நீயறிவாய் (யான் கூற வேண்டுவதின்று) பழமையான மலைகளைக் கடந்து மீண்டு வரும் அவர் வரவினை விரைவில் நாம் காண்போம்

துறை :-

ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.

சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில்
கொலைபுரி வில்லொடு கூற்றுபோல் ஓடும்
இலையொலி வெங்கானத்து இப்பருவம் சென்றார்
தொலைவிலர்கொல் தோழி நமர். . . . . [23]

விளக்கம்:

வில்லின் நாணொலியும், கொடிய கணைகளையும் உடைய வேடர்கள் அறம் பாவம் என்ற ஆராய்ச்சியில்லாத மனத்துடன் கொல்லத்தகுந்த வில்லுடன் இயமனைப்போல வழிச்செல்வோரைத் தொடர்ந்து விரைந்து செல்லும் இயல்புடைய இலைகள் உலர்ந்து கலகலவென்று ஒலிசெய்யும் கொடிய கானகத்து வழியாக இவ்வேனிற் காலத்தே பிரிந்து சென்றவராகிய நம் தலைவர் தளர் வில்லாதவரா யிருப்பரோ? பாங்கியே (நீ கூறுக என்றாள்)

துறை :-

ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது.

வெஞ்சுரம் தேரோட வெகிநின்று அத்தமாச்
சிந்தையான் நீர்என்று செத்துத் தவாஓடும்
பண்பில் அருஞ்சுரம் என்பவால் ஆய்தொடி
நண்பிலார் சென்ற நெறி. . . . . [24]

விளக்கம்:

ஆராய்ந்த வளையலையணிந்த பாங்கியே! கொடிய பாலைவனங்களில் பேய்த்தேர் தோன்ற அச்சுரத்தில் உள்ள மான்கள் விரும்பி நோக்கி நின்று மனத்தால் நீர் என்று கருதி நீங்காமல் ஓடித் திரியும் பயனில்லாத கொடிய வனமே நம் மேல் நண்பு இல்லாத தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற வழியாகும் என்று பலரும் சொல்வர். (அது குறித்து தான் வருந்துகின்றேன் பிரிவாற்றாமையா லன்று என்றாள்.)

3. முல்லை
துறை :-

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.

கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லை
கூர்எயிறு ஈனக் குருத்தரும்ப - ஓரும்
வருவர்நம் காதலர் வாள்தடங் கண்ணாய்
பருவரல் பைதல்நோய் கொண்டு. . . . . [25]

விளக்கம்:

வாளாயுதம் போன்ற கூநிய அகன்ற விழிகளையுடையாய்! மேகம் மழை பெய்த முல்லை நிலங்களில் முல்லைக் கொடி செழித்து அழகு பெற்று குருந்த மரங்களும் அரும்பைத் தோற்றுவிக்கவும் நம்முடைய காதலர் வருவார் பசலைநோய் கொண்டு வருந்தாதே (வருவர் என்று தேற்றினாள்).

துறை :-

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது.

குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன
........... சேவல் எனப்பிடவாம் ஏறி
பொருதீ எனவெருளும் பொன்நேர் நிறத்தாய்
அரிதவர் வாரா விடல். . . . . [26]

விளக்கம்:

பொன்போன்ற உருவத்தை யுடைய தலைவியே! செங்காந்தட் செடிகளின் கூர்மையான அரும்புகள் குருதி போன்ற பூக்களைக் காட்ட ... ...சேவல் என (அப்பூக்களின் தோற்றத்தை) தன்னோடு போர் செய்யவரும் மாறுபட்ட சேவலென்று கருதி பிடவஞ்செடியின் மேலேறி நின்று (உற்று நோக்கி) சுடுகின்ற நெருப்பு என்று எண்ணி அஞ்சியோடுகின்ற (இயல்புடையது கானம்) நம் தலைவர் வாராமலிருப்பது அருமையானது (வருவர் என்றாள்)

துறை :-

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

......................................................
.............. ................ ஒல்கப் புகுதரு
கார்தரு மாலை கலந்தார் வரவுள்ளி
ஊர்தரு மேனி பசப்பு. . . . . [27]

விளக்கம்:

தளர்ச்சியாக நுழைகின்ற மழைபெய்யுமாலைக்காலத்தில், கலந்தார் வரவு உள்ளி - என்னை யணைந்த காதலர் வருவர் என்பதை நினைந்து என் மேனியிற் பசலை பரவுகின்றது.

துறை :-

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

.......................................................................
................. பெய்த புறவில் கடுமான்தேர்
ஒல்லைக் கடவாவார் இவர்காணின் காதலர்
சில்............................................................ . . . . [28]

விளக்கம்:

மழை பெய்த முல்லை நிலத்தில் வேகமாகிய பரிகள் பூட்டப்பட்ட தேரினை விரைவிற் செலுத்துவார் உனது காதலர் இவரே அறிவாயாக.

துறை :-

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

.............. .............. ............... குருந்தலரப்
பீடார் இரலை பிணைதழுவக் காடாரக்
கார்வானம் வந்து முழங்................
......... ............ ........................ . . . . [29]

விளக்கம்:

குருந்த மலங்களின் மலர்கள் மலர பெருமை பெற்ற ஆண்மான்கள் பெண்மான்களைக் கூடியின்பமுற காடுகள் நீர் நிறைந்து செழிக்கும்படி கரிய மேகங்கள் வந்து இடித்து மழை பொழிய.

துறை :-

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

.............. ............... ................ ................
.............. .................. ............. ...............
கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து. . . . . [30]

விளக்கம்:

கொன்றைக் காயைத் துளைத்துக் குழலாகப்பண்ணி வாய்வைத்து ஊதி வருகின்ற ஆயர்கள் தம்பசுக்கள் நிற்கும் மன்றத்திற் புகுகின்ற காலமாகிய மாலையில்.

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

.............. .............. .................. ..............
................ ............. ................. ..............
.............. .............. ................ வானம்
வந்து துளிவழங்கக் கண்டு. . . . . [31]

விளக்கம்:

மேகங்கள் விண்ணின் மேல் வந்து மழைத்துளிகள் பெய்வதை நோக்கி.

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

காரெதிர் வானம் கதழ்எரி சி.........
............... ................. .............. ..............
.................. ...........லக மெழுநெஞ்சே சொல்லாயால்
கூர்எரி மாலைக் குறி. . . . . [32]

விளக்கம்:

மேகங்கள் கூடிய வானத்தின் நின்று நெருங்கிய தீப்பொறிகள் சிந்த எழுகின்ற மனமே மிகுந்த தீப்போல வரும் மாலையைக் குறிப்பாய் ஆசை.

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

தளையவிழ்தே .......... ............. ...............
............... .............. ................... ..............
உளையார் கலிநன் மாப்பூட்டி வருவார்
களையாரோ நீயுற்ற நோய். . . . . [33]

விளக்கம்:

கட்ட விழ்ந்த பிடரிமயிர் தழைத்த நல்ல பரிகளைப் பூட்டித் தேரில் வரும் தலைவர் நீ யடைந்த காதல் நோயை நீக்காரோ? நீக்குவர் (வருந்தாதே என்றாள்)

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

முல்லை எயிறுஈன ............ ............
............. ............. ...........ன மல்கிக்
கடல்முகந்து கார்பொழியக் காதலர் வந்தார்
உடனியைந்த கெ............. .......................... . . . . [34]

விளக்கம்:

முல்லைக்கொடிகள் மாதர் பற்களைப் போன்ற அரும்புகள் காட்ட நிறைந்து மேகங்கள் கடலின் நீரை முகந்து பொழிய நம் காதலர் வந்தனர் நம் முடன் இசைந்த.

துறை :-

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்.

.............. ............... ................ ..............
............... .............. ரடைப் பால்வாய் இடையர்
தெரிவிலர் தீங்குழல் ஊதும் பொழுதால்
அரித ............ ................ . . . . [35]

விளக்கம்:

பால் மணம் நீங்காத வாயையுடைய ஆயச்சிறார் பண்ணும் திறமும் அறியாராய் இனிமையான வேய்ங் குழலூதும் மாலைக்காலம். அருமையானது.

துறை :-

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்.

பிடவங் குருந்தொடு பிண்டி மலர
மடவமயில் கூவ மந்திமா கூரத்
தடமலர்க் கோதையாய் தங்கார் வருவர்
இடபமெனக் கொண்டு தாம். . . . . [36]

விளக்கம்:

வளைந்த மலராற்றொடுக்கப்பட்ட மாலை புனைந்தோய்! பிடவஞ் செடியும் குருந்த மரமும், அசோக மரமும் பூத்து நிற்க இளமையான மயில்கள் ஆடிக் கூவிமகிழ மந்திகளும், விலங்கினங்களும் குளிரால் நடுங்க, இத்தகையகார் காலத்தில் நம்காதலர் தம்மை ஒரு காளை என்று மனத்தின் மதித்துக் கொண்டு (மகிழ்ச்சியுடன்) வருவார் இனி யொருகணமேனும் ஆங்குத் தங்கியிரார். (என்று தோழி கூறினள்.)

4. மருதம்
துறை :-

பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது.

கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித்
தழென மதஎருமை தண்கயம் பாயும்
பழன வயலூரன் பாணஎம் முன்னர்ப்
பொழெனப் பொய்கூறா தொழி. . . . . [37]

விளக்கம்:

வயலின் கண் உழுகின்ற உழவர்கள் ஆரவாரத்தைக் கேட்டுப் பயந்து விரைந்து சென்று செருக்ககுடைய எருமை தழென ஒலியெழும் படி குளிர்ந்த தடாகத்தில் வீழும் இயல்புடைய மருத நிலங்களையும் வயல்களையும் உடைய தலைவன் விடுத்த பாணனே! எங்கள் முன்னிலையில் நீ பொழென்ற ஒலியுடன் பொய்ம்மொழி கூறா திருப்பாய் (உண்மையே கூறு என்றாள்)

துறை :-

பரத்தையர் சேரியில் பயின்று வந்த தலைவனைப் பிரிந்து தலைவி கூறியது.

கயலினம் பாயும் கழனி நல்லூர
நயமிலேன் எம்மனை இன்றொடு வாரல்
துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்கின்
குயி...... .............. ........... கொண்டு. . . . . [38]

விளக்கம்:

கெண்டை மீனினங்கள் துள்ளிக்குதிக்கும் வயல்களை யுடைய நல்ல மருத நிலத்தலைவனே! ஆடல் பாடல் அழகு முதலிய நலங்கள் இல்லோம் நாம் எமது மனைக்கு இந்நாள் நின்று வாரற்க, இளமையான கொங்கையுடையார் தோளிலணையும் இன்பத்தை நுகர்ந்து துயின்று வாழ்வாய் (என்று புலந்து கூறினள் தலைவி)

துறை :-

தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது.

முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து
தொட்ட வரிவரால் பாயும் புனல்ஊரன்
கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டுஎம்மில்
சுட்டி அலைய வரும். . . . . [39]

விளக்கம்:

பதித்தனபோன்ற வரிகளையுடைய வரால் மீன்கள் பழமையான நீர் மோதுகின்ற கரைகள் முழுவதும் திரிந்து இரைகளையுண்டுபின் எழுந்து நீர்க்குட்பாய்கின்ற நீர்வளம் பொருந்திய மருத நிலத்தலைவன் தொடுத்த மலர் மாலையை யணிந்த புதல்வனை ஏந்திக்கொண்டு அவன் நெற்றிச்சுட்டி யசையும்படி எம்மனைக்கு இப்போதுதான் வருகிறான் (இது மிகவும் வியப்பான செயல் எனத் தோழி தலைமகள் கேட்பக் கூறினள்)

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தோழி தலைவியின் பண்பு கூறி வாயில் மறுத்தது.

தாரா இரியும் தகைவயல் ஊரனை
வாரான் எனினும் வரும்என்று - சேரி
புலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்
கலப்படும் கூடுங்கொல் மற்று. . . . . [40]

விளக்கம்:

தாரா என்ற பறவைகள் பறந்து செல்லும் அழகுபொருந்திய வயல் சூழ்ந்த மருதநிலத் தலைவனைக் குறித்து சேரியிலுள்ள பரத்தையர் வாயினின்று வாராமல் இருப்பினும் வருகின்றான் என்று வெளிப்படுகின்ற சொல்லும் இப்பூங் கொடியைப் போன்ற எம் தலைவியின் கூட்டத்தைக் குலைக்கும் அவள் தலைவனுடன் கூடுவாளோ? எவ்வாறு கூடுவாள். (இனி எம் தலைவி புலவி நீங்கிக் கூடாள் எனத்தோழி மறுத்தாள்.)

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை?
அதன்று எனினும் அறிந்தோம்யாம் - செய்தி
நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன் எனக்குடைமை யால். . . . . [41]

விளக்கம்:

எச்சிலொழுகும் வாயுடன் திருந்தாத குதலையாகிய இனிய சொற்களைப்பேசும் எமது புதல்வன் எமக்குத் துணையாக இருப்பதனால் (வேறு வாழ்க்கைத்துணை வேண்டுவதின்று) வாவிகள் சூழ்ந்த நல்ல மருத நிலத்தலைவனது நற்பண்புகளை எமக்குக் கூறுவதற்கு நீ என்ன உரிமை உடையாய் அவன் பிழைசெய்தது பிழையன்று என்றாலும் முறையாக அவன் செய்தி முழுவதும் நாம் அறிந்தனம் (நீ கூறல் வேண்டுவதின்று என்றாள்.)

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்கு ரைத்திபாண? அதனால்யாம் என்செய்தும்?
கூத்தனாக் கொண்டு குறைநீர் உடையையேல்
ஆட்டுவித்து உண்ணினும் உண். . . . . [42]

விளக்கம்:

பாணனே! பெருக்கமான நீரையுடைய மருத நிலத்தலைவனுடைய நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நீ யார்க்கு எடுத்துக் கூறுகின்றாய் (அவன் இயல்பு நாங்கள் அறியாதவர்களா? அறிந்தவர்களே புறத்தொழுக்கம் உடையவன் என்பதை நாங்கள் அறிந்ததனால் என்ன செய்வோம். (ஒன்றும் செய்ய வழியறியோம்) நீ உணவு உடை முதலிய குறைபாடுகளை உடையாய் என்றால் எம் தலைவனை ஆடுவோனாக அமைத்துப் பலவிடங்களில் ஆடும்படி செய்து நீ பொருள் வாங்கியுண்டாலும் உண்க. (அது குறித்து நாம் வருந்தோம் என்றாள்.)

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ் கோதைத் தகையிலார் தாம்புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதமை தம்மேலே கொண்டு. . . . . [43]

விளக்கம்:

அரும்புகள் மலரும் தாமரைப் பூக்கள் நிறையும் நீர்த்துறையையுடைய மருத நிலத்தலைவனை (எம் காதலனை) மகரந்தம் பரவிய பூமாலை புனைந்த எழில் காட்டும் இயற்கையுடையார் (பரத்தையர்) அயலார் பெற்ற மங்கையருடைய அறியாமையைத் தம்பா லிருப்பதாக ஏற்றிக் கூறி, ஏதின்மை சொல்லி இருப்பர் பகைமை கூறி இருந்து தாம் பிணங்குகின்றனர் (என்று பலர் வாயிலாகக் கேட்கின்றேன் நான் என்றாள்)

துறை :-

வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது.

தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்துச்
சாலவும் தூற்றும் அலர். . . . . [44]

விளக்கம்:

அகன்ற மெல்லிய மூங்கில் போன்ற தோளுடைய பாங்கியே!, குளிர்ந்த நீர்த்துறைகளையுடைய மருத நிலத்தலைவன் (ஆகிய நம் தலைவன்) வண்டுகள் மொய்த்திசை பாடுகின்ற கூந்தலையுடைய பரத்தையின் திறத்தினை ஆராய்ந்து கொண்டு பரத்தையர் சேரியில் இருந்து சந்தனக்கோலமெழுதிய அழகிய கொங்கையுடையாளொருத்தியையும் மணந்தான் என்று அலர் தூற்றும் மிகவும் உயர்த்திப் பழிச்சொற் கூறுகின்றது (பரத்தையர்சேரி) (எவ்வாறு வர வேற்பேன் தலைவரை எனவாயில் மறுத்தாள்).

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்
கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்
பாத்தில் பயமொழி பண்பு பலகூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று. . . . . [45]

விளக்கம்:

பாணனே! நம் தலைவனுக்கு முன்னாளில் இளமைப் பருவமுடையோமாய் நாமிருந்தோம் ஆதலால் வாழ்க்கைத் துணையாயினோம் இஞ்ஞான்று மூப்புப் பருவமடைந்தோம் (ஆதலால் வெறுத்தனன்) நீர்நிறைந்த குளிர்ந்த தழைத்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவன் (எம் தலைவன்) எமக்குப் பிரிவில்லாத பயன்தரத்தக்க சொற்களையும் அவன் நற்பண்புகளையும் எடுத்துக்கூறிக் கூடிக்கலந்து விரைவில் இந்நாளில் எம்மை விட்டுப் பிரிந்துவிடுவான் என்பதை அந்நாள் அறியாமல் இருந்தோம். (அறிந்தாற் கூடிவாழ்வேமா என்று கூறினள்).

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்
நயமே பலசொல்லி நாணினன் போன்றான்
பயமில் யாழ்ப்பாண பழுதாய கூறாது
எழுநீபோ நீடாது மற்று. . . . . [46]

விளக்கம்:

ஒருபயனும் இல்லாத யாழைக் கையில் தாங்கிய பாணனே! பொய்கை நீர்பரந்து விரைந்து ஓடுகின்ற காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல மருதநிலத் தலைவன் (எம் தலைவன்) அந்நாளில் இனிமையான பல சொற்களைக் கூறி என்னை மணந்து இந்நாளில் எம்மனைக்கு வருவதற்கு நாணியவன் போல மறைந்திருக்கின்றான் வீணான சொற்களை எம்பாற் கூறாமல் நீ நீடித்திராது எழுந்து விரைவிற் போவாய் (என்றாள்).

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர்
ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்துஞ்
செருக்கார் வளவயல்ஊரன் பொய்ப் பாண
இருக்கஎம் இல்லுள் வாரல். . . . . [47]

விளக்கம்:

செங்குமுதமும் செந்தாமரை வெண்டாமரையும் அழகிய செங்கழுநீரும் ஒன்றாக நிறைந்த அல்லியும் (ஆகிய இவைகளெல்லாம்) ஒலித்து ஆர குத்தும் - தழைத்து நெருங்கி ஒன்றோடொன்று குத்திக்கொள்ளும் இயல்புடைய களிப்புத்தரும் வளம் நிறைந்த வயல் சூழ்ந்த மருத நிலத்தலைவனுடைய பொய்யுரை கூறும் பாணனே! நின் தலைவன் பரத்தையர் சேரியின் கண்ணே தங்குக எம்மனைக்கு வாரற்க (என்றாள்).

துறை :-

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.

கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தா
தக்கயாழ்ப் பாணதளர் முலையாய் மூத்தமைந்தார்
உத்தரம் வேண்டா வரல். . . . . [48]

விளக்கம்:

தலைவனுக்குத் தகுதியான யாழைக் கையிற்பற்றிய பாணனே! கொக்கு என்ற பறவைகள் மீன் பிடித்துத் தின்பது கருதி வந்து நிறைந்திருக்கும் வளம் பொருந்திய வயல் சூழ்ந்த ஊரன் (எம் தலைவன்) குளிர்ந்த சந்தனக்குழம்பு பூசிய எழில் மிகுந்த பரத்தையர் கொங்கைகளை தன்னுடல் விளக்கமுறும்படி தழுவாமல் சரிந்த கொங்கையாகி மூப்புப் பொருந்திய மகளிர் ஆகிய எச்சில் வேண்டா. இங்கு வாரற்க (என்றாள்).

5.பாலை
துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள்
ஓவா கலந்தார்க்கு ஒல்லென் இறாக்குப்பைப்
பாவாரம் சேர்ப்பதற்கு உரையாய் பரியாது
நோயான் நுணுகிய வாறு. . . . . [49]

விளக்கம்:

மரக்கலம் செல்லும் செறிந்த திரைகளையுடைய குளிர்ந்த கடலினுள் நீங்காமல் சேர்ந்து ஒல்லென ஒலித்துத்திரியும் இறவு மீன்களின் குவியல் பரவிய கடற்கரையையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு காமநோயால் பொறுக்கலாற்றாது நான் உடல் மெலிந்த வாற்றினை (தோழி நீ) கூறுவாய் (என்றாள்).

துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன்
ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடுஞ்சூளில் தான்கண்டு கானலுள் மேயும்
தடந்தாள் மடநாராய் கேள். . . . . [50]

விளக்கம்:

நீண்ட கடற்கரையாம் ஆடவனே. நின்னோடு உரையேன் - உன்னோடு நான் ஒன்றுங்கூறேன். ஒடுங்கிய மடல் பொருந்திய பனையில் வாழும் அன்றிற்பறவைகட்கும் உரையேன். எம் தலைவன் கடுமையான சூளுரைக்கும்போது நோக்கிக் கானலுள் மேய்ந்திருந்த பெரிய கால்களையும் இளமைப் பருவத்தையுமுடைய நாரையே நான் உன்னிடமே கூறுகின்றேன் நீயே கேட்பாய். (என்று தலைவி புலம்பினாள்).

துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய்
அணிநல முண்டிறந்து ...ம்மருளோ விட்ட
துணிமுந் நீர்ச் சேர்ப்பற்குத் தூதொடு வந்த
பணிமொழிப் புள்ளே பற. . . . . [51]

விளக்கம்:

நில நிறம்பொருந்திய நெய்தற் பூப்போன்ற என் கண்போன்றவனாய்க்கூடி அழகும் உடல்நலமும் கவர்ந்து பிரிந்து நமக்கு அருள் புரியாது மறந்து விட்ட மனத்துணிவுடைய கடற்கரைத் தலைவனுக்கு (இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அக்காலத்தில்) தூதாக வந்ததுபோலக் கானலுள் வந்திருந்த தாழ்ந்த குரலுடைய நாரையே இப்போது பறந்து செல்

துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம்
புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னை
நினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ பட்ட பழி. . . . . [52]

விளக்கம்:

(நாரையே) என் தாயும் மனையினின்று நீக்கத் தக்க சொற்கள் பேசுகின்றாள் இனிமேல் எவ்விடம் சென்று நாம் என்ன செய்வோம் புன்னை மரங்களையுடைய அழகிய கழிக்கரையிற் புகுந்து மீனுண்டு நோக்கியிருந்த உன்னையும் நினையாமல் பிரிந்து சென்ற நீண்ட கழிக்கரையையுடைய நெய்தனிலத் தலைவனுக்கு: யான் அடைந்த பழிச்சொல்லுடன் கூடிய துன்பத்தைக்கூறுவேனோ (கூறாதேயிறந்து படுவேனோ யானறியேன் என்றாள்).

துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர்
நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார்
புலவுமீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு. . . . . [53]

விளக்கம்:

நண்டுகள் போக்கும் வரவுமாகப் பயில்கின்ற அடம்பங் கொடிகள் நிறைந்த மணல் மேட்டில் உள்ள நிலாப் போன்ற நீண்ட மணற்பரந்த கானலில் நீண்டகாலத்தங்கியிராது அக்கானலை விடுத்து நீங்கிச்சென்ற பரதவர் எல்லாரும் புலால் நாற்றத்தையுடைய பல மீன் குவியலைக் கவர்ந்து வரும் நெய்த னிலத்தலைவன் (நந்தலைவன்) நம்பால் இனிக் கூடானோ (கூடுவனோ கூறுக என்றாள்.)

துறை :-

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து
புன்னையங் கானல் இருந்தேமாப் பொய்த்தெம்மைச்
சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம்காணு மாறு. . . . . [54]

விளக்கம்:

(தோழீ) என் தந்தையர், உடன் பிறந்தார் வலைவீசிக் கொணர்ந்து தந்த இறால் மீனைக்கவரவரும். புள்ளினங்களையோட்டி புன்னைமரங்களை யுடைய அழகிய கானலில் நாம் இருந்தோம் ஆக, எமக்குப் பொய்யாக நல்லுரை கூறியின்பம் நுகர்ந்த நெய்தனிலத்தலைவனை (நம் தலைவனை) யாம் காணும் ஆறு என்னைகொல் - நாம் இனிக்காணும் வழியாது (அதனை யாய்ந்து கூறுக என்றாள்).

துறை :-

பாங்கி தலைவன் இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது.

கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்
நக்காங்கு அசதி தனியாடித் - தக்க
பொருகயல் கண்ணினாய் புல்லான் விடினே
இருகையும் நில்லா வளை. . . . . [55]

விளக்கம்:

கொக்கு என்ற பறவைகள் நிறைந்த வளைந்த கழி நிலங்கள் கூடிய குளிர்ந்த நீர்க்கரையையுடைய தலைவன் என்னை நோக்கிச் சிரித்து விளையாட்டாகப் பேசித் தழுவிப் புணராதிருப்பானாயின் என் இரண்டு கைகளிலும் உள்ள வளையல்கள் ஒன்றும் நில்லாமல் கழன்று விழும் எனக்குத் தகுதியான பிறழுங்கொண்டை மீன் போன்ற கண்களையுடைய பாங்கியே! (என்றாள் தலைவி).

துறை :-

வரைபொருள் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது.

நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த
கருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின்
புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்
நுகர்வனன் உண்டான் நலம். . . . . [56]

விளக்கம்:

தோழீ! நுரையோடு வரும் கடல் அலைகளைக் கடந்து சென்று நம்மவர் பெரிய கரைக்குக் கொண்டுவந்து தந்த வலியமீன் உணங்கலைக் கவரும் பறவை யினங்களையோட்டுஞ் செயலில் ஒரு குற்றமும் இல்லாதவர்களாய் நாம் ஆங்கிருந்த போது பொலிவாகிய கழிக்கரையுடைய நெய்தனிலத் தலைவன் (நம் தலைவன்) வந்து நம் இன்பத்தை நுகர்ந்து அடைந்தான்

துறை :-

தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது.

கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத்
தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங்கழி நீந்திடும் முன்றில்
புலவுத் திரைபொருத போழ்து. . . . . [57]

விளக்கம்:

குளிர்ந்த கடற்கரையுடைய தலைவன் (நம் தலைவன்) மணல்களையும் வளைந்த கழிக்கரையும் கடந்து நம் முற்றத்தில் புலானாற்றத்தையுடைய நீரில் அலையடிக்கும்படி குறிகாட்டிய போழ்தில் வெட்டப்படு மடல்களையுடைய பனை மரத்தில் வளைந்த வாயையுடைய சேவலும் பேடுமாகப் புணர்ந்திருக்கும் அன்றிற் பறவைகள் பெருகிய தம் பேடு குஞ்சுகள் ஆகிய சுற்றத்தை யழைக்கும் (அது கண்டு நாம் இரவுக் குறிவயிற் செல்லவேண்டும் என்றாள் தோழி.)

துறை :-

தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்.

சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்
இறாஎறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறாஅஎன் முன்கை வளை. . . . . [58]

விளக்கம்:

தோழி! மகர மீனால் மோதி யடிக்கப்பட்ட மீன்குவியல் சுழல்கின்ற கழிநிலத்தில் இறவு மீன்களை வீசியெறியும் அலையானது அலறி யொலிக்கின்ற என்னுடன் வந்து கூடாத நீர்மையையுடைய தலைவனை (நம் தலைவனை) தனியே அவன் பிரிவை நினைத்திருந்தால் என் முன்கை வளை பொறாஅ எனது முன்னங்கை வளையல்களைப் பொறுக்காமல் கீழே வீழ்விக்கின்றன. (நான் என் செய்வேன் என்றாள்.)

துறை :-

இரவு குறிக்கண் சிறைப்புறத்தானாக நிற்கத் தோழி தலைவிக்குக் கூறுவாளாகப் படைத்து மொழிந்தது.

தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை
மாழை மானோக்கின் மடமொழி - நூழை
நுழையும் மடமகன் யார்கொல் என்றுஅன்னை
புழையும் அடைத்தாள் கதவு. . . . . [59]

விளக்கம்:

மாவடுகையும் மான் பார்வையையும் போன்ற விழிகளையுடைய மடமை மொழியுடையாய் தாழைமரம் கொக்குப்போல வெள்ளியமலர் பூக்கும் குளிர்ந்த அழகிய நீர்த்துறையையுடைய நம் தலைவனை இன்னான் என அறியாது நம் தாயானவள் புறக்கடை வாயில் வழிவந்து நாளும் மனைப்புகுந்து செல்லும் அறிவிலி யாரோ யான் அறியேன் என்று கூறி கதவிலுள்ள சிறிய துளையையும் அடைத்துப் பூட்டிவிட்டாள் அல்லவா? (இனி நாம் என் செய்வது என்று தோழி கூறினள்).

துறை :-

வினை முடித்து மீண்ட தலைமகன் வரவு கண்ட தோழி தலைவிக்குக் கூறியது.

பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
தென்னவன் கொற்கைக் குருகுஇரிய - மன்னரை
ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ
கூடல் அணைய வரவு. . . . . [60]

விளக்கம்:

மலர்மலர்ந்த கொடிபோன்ற தலைவியே! பகை மன்னர் அஞ்சியோடுமாறு வென்று புறங்கண்ட ஒளி பொருந்திய பூமாலை புனைந்தவன் தேரானது பாண்டிய மன்னன் கொற்கைத் துறைமேயும் குருகினங்களெல்லாம் இரிந்தோடும்படி, மதுரையை நெருங்க வந்தது தேர் இதோ காண் பொன் போன்ற அழகிய பசலை நோயும் இனி நீங்கிவிடும். (வருந்தாதே என்றாள்).

கைந்நிலை முற்றிற்று.