ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக்

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும்

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் இயற்றியது இனியவை நாற்பது. 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன

இன்னா நாற்பது

இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு

திரிகடுகம்

திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது

ஆசாரக் கோவை

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். அவையாவன சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர்

முதுமொழிக்காஞ்சி

முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள்

ஏலாதி

'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்படுவது ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு,

திருக்குறள்

திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம்

கார் நாற்பது

கார் நாற்பது அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும்,

ஐந்திணை ஐம்பது

'ஐந்திணை ஐம்பது' முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது.

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பது குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல்

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல்.

கைந்நிலை

'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன.

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது.

ஐந்திணை எழுபது
பதினெண் கீழ்க்கணக்கு

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது.

ஐந்திணை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

ஐந்திணை எழுபது ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று உள்ளது. இக் கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் இல்லாமையும் சிந்திக்கத் தக்கது. இந் நூலில் உள்ள 70 பாடலகளில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26), நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன. இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர்.

கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.

கண்ணை நெற்றியிலுடைய தலையினையுடையவனும். இவ்வுலகமாகிய அண்டத்தினைத் தனது வடிவமாகக் கொண்டவனும் எல்லாவற்றிற்கும் முதற் காரணனாய் உள்ளவனும் ஆலகால விஷமாகிய நஞ்சு பொருந்தியிருக்கும்படியான கழுத்தையுடையவனுமான சிவபெருமான் பெற்றெடுத்த யானைமுகக் கடவுள் யாம் விரும்பும் பொருள்கள் எல்லாவற்றையும் நன்றாக முடிவுபெறச் செய்து எங்களுக்கு (இவ்வுலகத்தே) பொருந்தியுள்ள கல்விப்பொருள்கள் எல்லாவற்றையும் கொடுக்கும்.

1. குறிஞ்சி
பாடல் - 01
அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி கடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)
யானிடை நின்ற புணை. . . . . [01]

விளக்கம்:

(பழைய வுரை) அவரை பொருந்திய கதிரையுடைய பசுந்தினையைக் கவரிமடமா கதுவாநின்ற படர்ந்த சாரலினையுடைய கானகநாடனே! மறவாது நினைப்பாயாக; வயங்கா நின்ற அணியினையுடையாட்கு யான் நடுவுநின்ற புணையினை.

பாடல் - 02
மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்
குன்றன நாடன் தெளித்த தெளிவினை
நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி
ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. . . . . [02]

விளக்கம்:

(பழைய வுரை) மன்றங்களிலே நெருங்கிய கல்லின்கண் கருங்கண் முசுக்கள் குதிபாயுங் குன்றகநாடன் என் மனத்தைத் தெளிவித்த தெளிவினைப் பிழையாதென்று தேறினேற்கு அவன் செய்த தலையளி யொன்று; அவ் வொன்றும் அப்பெற்றித்தாய்ப் பழுதாகாது.

பாடல் - 03
மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்
உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப் பிரிவ(து) இலம். . . . . [03]

விளக்கம்:

(பழைய வுரை) மன்றின்கண் நின்ற பலவின் சுளைமுதிர்ந்த இனிய பழத்தைத் தின்றின்புற்று வந்து ஆமாவின் முலையை மந்தி வருட அவ்வாமாத் தன் கன்றிற்குப்போல அன்பு பட்டுப் பாலைச்சுரக்கும் அணிமலைநாடனை யாமுளேமாகப் பிரிவதிலம்.

பாடல் - 04
சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்
கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை
நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. . . . . [04]

விளக்கம்:

(பழைய வுரை) அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலைபெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின்கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற்றிகழாநின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னாநின்றது என்னெஞ்சு.

பாடல் - 05
பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை
நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)
இன்னுயிர் தாங்கும் மருந்து. . . . . [05]

விளக்கம்:

(பழைய வுரை) பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையாதலால், நின்கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கு மருந்து நல்காயோ?

பாடல் - 06
காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்
ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்
தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்
தாம்சிவப் புற்றன கண். . . . . [06]

விளக்கம்:

(பழைய வுரை) வெகுள வேண்டா அன்னாய்! குற்றமிலள் இவள்; மிக்க சிவந்தநீர் தாழ்ந்தோடுங் கான்யாற்றுள் தேனோடுங் கலந்து வந்த அருவிநீரைக் குடைந்தாடுதலான் இவள் கண்கள்தாஞ் சிவப்புற்றன : ஆதலான்.

பாடல் - 07
வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்
கறிவளர் தேமா நறுங்கணி வீழும்
வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோ
அறிவின்கண் நின்ற மடம். . . . . [07]

விளக்கம்:

(பழைய வுரை) விரை கமழாநின்ற குளிர்ந்த சுனையின்கண் தெளிந்த நீர் துளும்ப மிளகு படர்ந்து வளராநின்ற இனியமாவினது நறுவிய கனிவீழும் வெறிகமழ் தண்சோலை நாடனே! நின் அறிவின்கண் நின்றதொரு பேதமையுண்டோ?

பாடல் - 08
கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்
வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்
தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி
நேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். . . . . [08]

விளக்கம்:

(பழைய வுரை) பன்றிகள் கொம்பினால் உழுத சுட்டுக்கரிந்த புனக்கொல்லையுள் வாழையின் முதிர்ந்தகாயைக் குரங்கினுட் கடுவன்கள் அப்புழுதியிற் புதைத்தயருந் தாழ்ந்த அருவிகளையுடைய நாடன் என்றொழியாகிய நேர்வளைக்கு அக்காலத்து நெஞ்சூன்று கோலாகத் தெள்ளிய வஞ்சினங் கூறினான்.

பாடல் - 09
பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்
கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்
சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மை
பொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. . . . . [09]

விளக்கம்:

(பழைய வுரை) பெருங்கையையுடைய இருங்களிறு ஐவன நெல்லைத் தின்று, கருங்காலையுடைய மராம்பொழிலிற் பச்சிலைநிழலிற் றுயிலும் வண்டுகள் ஒலிக்கும் சோலைமலை நாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்புடைத்து.

பாடல் - 10
குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா
மன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னே
அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்
இராவாரல் என்ப(து) உரை. . . . . [10]

விளக்கம்:

(பழைய வுரை) நின்னான் ஒரு காரியமுடையேன், தோழி! நிலையில்லாத என் மன்னுயிர்க்கு அரணஞ் செய்யவேண்டும்; இப்பொழுதே பாம்புகளான் வழங்கப்படுகின்ற நீண்ட சோலையையுடைய நாடனை நம்மனையின்கண் இரா வரவேண்டா என்பதனைச் சொல்.

பாடல் - 11
பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பில் துகைக்கும்
வரையக நாட! வரையால் வரின்எம்
நிரைதொடி வாழ்தல் இவள். . . . . [11]

விளக்கம்:

(பழைய வுரை) தேறலைப் பிறர்கொள்ள வீழ்ந்த தீந்தேன் இறால்களை மரையான்கன்று குளம்பால் உழக்கும் வரையக நாடனே! நீ வரையாது வருவாயாயின், எங்கள் நிரைதொடி உயிர்வாழாள்.

பாடல் - 12
வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்
நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்
ஈர வலித்தான் மறி. . . . . [12]

விளக்கம்:

(பழைய வுரை) நீண்ட கதிரினையுடைய பசுந்தினையை வளைவாய்க் கிளியினம் கவரும் நீரானே தெளிந்து திகழாநின்ற சோலைகளையுடைய மலைநாடன் கேண்மையைக் காதலினாலே நிரம்ப மேவினேன்; பிரிதலாற்றேனாயினேன்; அவ்வாற்றாமை தெய்வத்தினாயது என்று முருகற்கு மறியையறுக்கத் துணிந்தான் வேலோன்; தோழி! இதனை விலக்குவாயாக.

பாடல் - 13
இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்
குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்
வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை
அலையும் அலைபோயிற்(று) இன்று. . . . . [13]

விளக்கம்:

(பழைய வுரை) இலை பயின்ற தண்குளவிக் கொடிகள் படர்ந்து மூடிய பொதும்பின்கட் பூங்கொத்தையுடைய காந்தளில் இனவண்டுகள் ஒலிக்கும் வரையகநாடனும் வரைவொடு வந்தான்; ஆதலான், இன்று நமக்கு அன்னை யலைக்கும் அலையும் போயிற்று.

பாடல் - 14
கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து
வானின் அருவி ததும்பக் கவினிய
நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்
வாடல் மறந்தன தோள். . . . . [14]

விளக்கம்:

(பழைய வுரை) கொல்லைப்புனத்த அகிலைச் சுமந்து கற்களைப் பாய்ந்து மழையானுளதாய அருவி முழங்குதலான் அழகு பெற்ற நாடன் தன்னை யடைந்தார்க்கு ஈரமுடையன் என்பதனான் அவன் பிரிந்தானாயினும் வாடுதலை மறந்தன என்றோள்கள்.

2. முல்லை
பாடல் - 15
செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்
பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்
காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோ(டு) அலமரும் கண். . . . . [15]

விளக்கம்:

(பழைய வுரை) செய்ய கதிரினையுடைய செல்வன் சீற்றமடங்கிய காலத்தின்கண் பசுங்கொடியையுடைய முல்லைகள் பூத்து மணங்கமழ்தலான் வண்டுகள் ஒலிக்கக் கார்ப்பருவத்தோடு தடுமாறுகின்ற முகில்களையுடைய வானங் காணுந்தோறும் நீரோடுங்கூடத் தடுமாறாநின்றன கண்கள்.

பாடல் - 16
தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்
மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்து
மின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னை
என்னாதி என்பாரும் இல். . . . . [16]

விளக்கம்:

(பழைய வுரை) பெரியவாய் மெல்லியவாகிய மூங்கில்போன்றிருந்த தோளினையுடையாய்! நம்மைத் துறந்தார் இக்காலத்து வருகின்றிலர்; மெல்லிய நடையினையுடைய மயில்கள் அழைக்கக் கடன் முகந்து மின்னுடனே வந்தது, எழிலினையுடைய வானம்; ஆதலால், பின்னையும் என்னை வந்து, “நீ என் செய்யக் கடவாய்!” என்றிரங்கி ஒன்றைச் சொல்லுவாருமில்லை.

பாடல் - 17
தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி
விண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுநர் போல வரும். . . . . [17]

விளக்கம்:

(பழைய வுரை) குளிர்ந்த நறுங்கோடல் துடுப்புப்போலப் பூங்குலைகளை யேந்த, கார்காலத்தை ஏன்றுகொண்டு முகில்கள் மிக்க வானத்தின்கண் உருமேறு ஒலிப்ப, திண்ணிதாக முயங்குவாரை யில்லாதார் நடுங்கும் வகை துன்பத்தைச் செய்யுமாலை கொல்வாரைப் போல வாராநின்றது.

பாடல் - 18
கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்
தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅ
இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்
துடிப்பது போலும் உயிர். . . . . [18]

விளக்கம்:

(பழைய வுரை) விரைந்து துளிகளை முகில்கள் இதழகத்தே சிதற, தாதினையுடைய பூங்கொத்துக்களையுடைய கொன்றைகள் எரிநிறத்தை மிகுப்ப, பரந்து கழறுவது போலும் எழில் விசும்பைக் காணுந்தோறும் வருந்தித் துடிப்பது போலாநின்றது என் உடலம்.

பாடல் - 19
ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்
பீவி பரப்பி மயில்ஆலச் - சூலி
விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி
உருகுவது போலும் எனக்கு. . . . . [19]

விளக்கம்:

(பழைய வுரை) மழைத்துளிகளைக் காதலித்தழைத்துக் காடெலாந் தோகைகளைப் பரப்பி மயிலினங்கள் ஆட, கருக்கொண்டு விரிகுவது போலும் இக்கார் முழங்க எனக்கு என் உயிர் உருகுவது போலாநின்றது.

பாடல் - 20
இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும். . . . . [20]

விளக்கம்:

(பழைய வுரை) இனங்களையுடைய கலைகள் களித்து மிக, புனங்களிலுள்ள கொடிமிடைந்த முல்லை தளிர்ப்ப, இடியோடே கூட மிடைந்து, யானும் என் காதலரும் வருந்த, துன்பத்தைச் செய்யும்மாலை தானும் மழைப்பெயலும் எம்மேல் வாராநின்றன.

பாடல் - 21
காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்
கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)
உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்
மடம்பட்டு வாழ்கிற்பார் இல். . . . . [21]

விளக்கம்:

(பழைய வுரை) எம்மழகு சுருங்க எம்மை நீங்கினாரும் வருவதற்கு முன்னே கருங்கொடியையுடையமுல்லைகள் நல்லார் எயிறு போல அரும்பக் காரோடு உடனே யுளதாய் வந்து எம்மை நலிகின்ற மாலைக்கு எம்மைப்போல வலியிழந்து மெலிவாற்றி யிருந்து உயிர்வாழ்வார் இல்லை.

பாடல் - 22
கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்
கன்றமர் ஆயம் புகுதா - இன்று
வழங்கிய வந்தன்று மாலையாம் காண
முழங்கிவில் கோலிற்று வான். . . . . [22]

விளக்கம்:

(பழைய வுரை) கொன்றை யென்னாநின்ற குழலூதிக் கோவலர் பின்னே நிரைத்து நிற்க, கன்றை விரும்பிய நிரையாயங்கள் ஊர்தோறும் புக, இவ்விடத்தின்கண் வழங்கவேண்டி வந்தது மாலை; யாம் இறந்துபடாதிருந்து காணும்படி முழங்கி வில்லைக் கோலிற்று மழை.

பாடல் - 23
தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப
ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொள
இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்
ஒன்றாலும் நில்லா வளை. . . . . [23]

விளக்கம்:

(பழைய வுரை) ஒசையையுடைய முகில்கள் பெயலைத் தொடங்கிக் கார்ப்பருவத்தைக் கொள்ள, நம் காதலர் தேரை போன்ற தழங்கு குரலையுடைய குதிரைத் தார்மணிகள் வாயதிர்ப்ப, இன்று நாம் ஆற்றியுளமாம் வகை வாராது விடுவார்கொல்லோ? தோழி! நம் வளை யாதும் நிற்கின்றது இல்லையால்.

பாடல் - 24
கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை
முல்லை தளவொடு போதவிழ - எல்லி
அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்
முலைவற்று விட்டன்று நீர். . . . . [24]

விளக்கம்:

(பழைய வுரை) கல்லெழுந்து கிடந்த கானத்தின்கண் அழகு பெற்றுப் புதல்கண்மிசை முல்லைகளும் செம்முல்லைகளும் பூக்கண்மலர, இரவின்கண் முகிலும் அலைவற்று விட்டன நீரினை; மையுண் கண்களும் முலைகண்மிசை வடித்தன நீரினை.

25, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவை

இருபத்தைந்தாவது, இருபத்தாறாவது செய்யுள் பழம் பிரதிகளில் காணப்பெறாவாய் மறைந்தன.

பாடல் - 27
கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்
ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றி
ஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்து
நின்றாக நின்றது நீர். . . . . [27]

விளக்கம்:

மழையினை உடைய வாகைமரங்கள் பூத்து மணக்கவும் முல்லை நிலங்களின் எல்லாப் பாகங்களிலும் வண்டுக் கூட்டங்கள் ஆரவாரிப்புடனே ஒலித்துக் கொண்டு திரியவும் பெருந்தன்மை முதலிய நற்குணங்களில்லாமல் பகைத்து என்னை வருத்தும் சிறு பொழுதாகிய மாலைக்காலம் (எனக்கு) மாறாக முயன்று நிற்க (அதனாலே) கண்ணீரானது கண்களில் நிலையாகத் தங்கலாயிற்று. (என் செய்வேன்! என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 28
குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப
ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!
பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல
என்னொடு பட்ட வகை. . . . . [28]

விளக்கம்:

ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே! ஆயன் - இடையன் மிகச் சிறந்த பெரிய பூமாலையினை அணிந்து வண்டினங்கள் (சூழ்ந்து) ஆரவாரிக்க (ஆனிரையோடு மனைக்கண்ணே) சேருகின்ற வேளையாகிய மாலைக்காலத்திலே என் பால் தோன்றிய (வருத்தமிக்க) இப்போக்கானது அவ்வாயன் பின்னாக (தோன்றி) நிலைபெற்று ஊர்ந்து வரும்படியான பெய்யும் மழையினாலே தோன்றியதோ? (என்று தலைமகள் தோழியினிடம் வினவினள்.)

3. பாலை
பாடல் - 29
பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த
நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)
அலர்மொழி சென்ற கொடியக நாட்ட
வலனுயர்ந்து தோன்றும் மலை. . . . . [29]

விளக்கம்:

தலைச் சூட்டான் விளங்காநின்ற காட்டுக் கோழியானது வரிகளையுடைய மருள் செடியினை கொத்துதலினாலே வழியானது தூர்ந்து போகும்படியான அரிய பாலைநில வழியின் கொடுமையினை நாம் உன்னி - நாம் நினைத்து வருந்துதலால் (ஏதிலார் நம்களவினை) அறிந்து கூறும்படியான பழிச்சொற்கள் மலையினிடத்தே நாட்டப் பெற்ற அக்கொடிச்சீலையினைப் போன்று பரவி வலமாகச் சுழன்று எழுந்து தோன்றாநிற்கும். (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 30
ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ
கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்
கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என்பேதை
மெல்விரல் சேப்ப நடந்து. . . . . [30]

விளக்கம்:

என்மகள் கொல்கின்ற ஆண்யானையை யொத்தவனாகிய தலைமகனின் பின்னாக சிறுகற்கள் பெய்யப் பெற்றுள்ள காற்சிலம்புகள் ஓசையிடவும் மெல்லிய கால்விரல்கள் சிவக்கும்படியாகவும் கற்கள் மேலெழுந்து நிற்கும்படியான பாலை நிலவழியே நடத்தலைச் செய்து செல்வாளோ? (அன்றி (இப்பாலை நிலவழியே) செல்லுதல் நம்மால் முடியாத காரியமென்று நினைத்து வருந்தி வாடி துன்புற்றுத் தங்குவளோ? (யாதோ அறியேன் என்று நற்றாய் தனக்குட்டானே கூறிவருந்தினள்.)

பாடல் - 31
பொரிபுற ஓமைப் புகர்படு நீழல்
வரிநுகல் யானை பிடியோ(டு) உறங்கும்
எரிமயங்கு கானம் செலவுரைப்ப நில்லா
அரிமயங்கு உண்கண்ணுள் நீர். . . . . [31]

விளக்கம்:

(எம்பெருமானே!) பொரிந்த மேற் பாகத்தைக் கொண்ட மாமரத்தினது அழகு பொருந்திய நிழலினிடத்தே நீளமான நெற்றியினையுடைய களிறானது பெண்யானையுடனே தூங்குதற்கு இடமாயதும் காட்டுத் தீயானது கலந்து காண்பதற்கு இடமாயதுமாகிய காட்டினிடத்தே (நீர் பொருள்வயிற் பிரிந்து) செல்லுதலை (தலைமகண்மாட்டு யான்) சொல்லுதலான் கரிய ரேகைகள் கலக்கப்பெற்று மைதீட்டப்பெற்ற (தலைமகளின்) கண்களில் கண்ணீரானது தங்காது வடியா நிற்கும். (என்று தலைமகனிடத்தில் தோழி கூறினாள்.)

பாடல் - 32
எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை
அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா
பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள்
ஆகும்அவர் காதல் அவா. . . . . [32]

விளக்கம்:

பெருமையினையும் தகுதியினையுமுடைய ஊக்கத்தினுக்கு பொருத்தமாக அருமையான பொருளாக (விருப்பமிகுதியால்) மாறிடுந் தலைவரின் மிக்க விருப்பமானது பெயர்கள் முதலிய குறிக்கப்பெற்ற நடு கற்கள் வரிசையாக நடுவதற்கு காரணமாகிய சிறப்பாக அம்பு தொடுக்குந்தொடையாலே பழைமையாகிய தம் பகைவர்களை (மறவர்கள்) வருத்தற்கு இடமாகிய பாலை நிலவழியிலே ஒழுங்காகச் செல்லுதலையுடையது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

பாடல் - 33
வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும்
கல்சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார்கொல்
மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்(கு)இவர்ந்து
நில்லாத வுள்ளத் தவர். . . . . [33]

விளக்கம்:

மெல்லிய தன்மையாகிய இரக்கமாகிய பண்பு இல்லாமல் பொருள் தேடுதற்கண் விருப்புற்று நம்மிடத்திலே நிலை பெறாத நெஞ்சினைக்கொண்ட தலைவர் வில்லினாலே முயன்று போர் புரிந்து (அதனால் வரும் பொருளைக் கொண்டு) உண்டு பிழைக்கும் மறவர்கள் விரைந்து வழிச் செல்வாரை வருத்திக் கொள்ளையடிக்கும் படியான கற்கள் சூழ்ந்துள்ள சிறு தூறுகள் நிறைந்த பாலை நிலவழியின் கொடுமையினை நினைத்துப் பார்க்க மாட்டாரா? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 34
நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும்
ஆரிடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்!
நாணினை நீக்கி உயிரோ(டு) உடன்சென்று
காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு. . . . . [34]

விளக்கம்:

ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே! என் மனமானது வெட்கத்தினை துறந்து (சாதலில்லா) உயிரினோடு கூடிப்போய் தலைவரினைப் பார்க்க. புணர்ப்பது - விரும்புவதாயுளது உண்ணுதற்கும் நீர் கிடைக்காத அரிய பாலை நிலத்தின்கண்ணே காட்டுப் பசுக்களின் கூட்டமானது (நீரின்றித் தியங்கித்) திரியும் அரிய இடத்தையுடைய வழியின்கண்ணே கடந்து செல்வாரோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 35
பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக்
கூருகிர் எண்கின் இருங்கினை கண்படுக்கும்
நீரில் அருஞ்சுரம் உன்னி அறியார்கொல்
ஈரமில் நெஞ்சில் அவர். . . . . [35]

விளக்கம்:

நம்மீது இரக்கமென்பதைக் கொள்ளாத மனத்தைக் கொண்டவராகிய நந்தலைவர் பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்துள்ள மேற்பாகத்தினுடைய பாழ் வீடுகளில் கூர்மையான நகங்களையுடைய கரடியினது பெரிய கூட்டம் கூடி ஒருங்கி உறங்கும்படியான வறண்ட அரிய பாலை நிலத்தின் கொடுமையினை நினைத்துப் பார்த்து (தன் செலவு வேண்டா வொன்றென) தெரியமாட்டாரா? (என்று தலைமகள் தோழியிடம் வினவினாள்.)

பாடல் - 36
சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை
ஊர்கெழு சேவல் இதலொடு - போர்தினைக்கும்
தேரொடு கானம் தெருளிலார் செல்வார்கொல்
ஊரிடு கவ்வை ஒழித்து. . . . . [36]

விளக்கம்:

(பொருளினும் அருளே போற்றும் பண்பினது என்னுந்) தெளிவினை மேற்கொண்டிராத நங்காதலர் பிரப்பம்புதர்கள் மிகுந்த காட்டினிடத்தே அணிற்பிள்ளைகள் ஒலிக்கும்படியான கொல்லைகளாற் சூழப்பெற்ற பாலைநிலத்தூர்களில் பொருந்தியுள்ள ஆண் கோழியானது காடைப்பறவையுடனே சண்டை செய்யும்படியான பாலைநிலவழியே தேரின் மீதே இவ்வூரில் நமக்கு இட்டுச் செய்யவேண்டிய காரியத்தை விட்டுவிட்டு நம்மைப் பிரிந்து போவாரோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 37
கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி
கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு
நெடுவரை அத்தம் இறப்பர்கொல் கோண்மாப்
படுபகை பார்க்குஞ் சுரம். . . . . [37]

விளக்கம்:

புலியானது பாய்தலினாலே தனது துணையாகிய பிடியினைப் பறிகொடுத்து அச்சமிகுந்து மாவிலங்குமரம் வாடி நிற்கும் பாறைகளுக்கு இடையேயுள்ள வழியினிடத்தே நிறைத்து நிற்கும்படியான களிறானது (தனது துணையினைப்) படுத்த புலியாகிய பகையின் வரவினை எதிர்பார்த்திருக்கும் படியான பாலை நிலத்தின்கண்ணுள்ள நீண்ட மலைத்தொடர்களுடைய அருநெறிக்கண்ணே (காதலர்) நடந்து செல்வரோ? (என்று தலைமகள் ஐயுற்றுத் தோழியிடம் கூறினாள்.)

பாடல் - 38
கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும்
தாள்வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்றுணரா
மீளிகொள் மொய்ம்பி னவர். . . . . [38]

விளக்கம்:

(மான் முதலியவற்றைக்) கொள்ளுதலில் வல்ல வளைந்த வரிகளையும் நல்ல வெற்றியினையுமுடைய விலங்காகிய புலிகள் கூடித் திரியும் பூக்கள் நிறைந்த அடிப்பாகத்தினையுடைய புதரினியுடைய காடாகிய பாலை நிலவழியின்கண்ணே வீரத்தினைக் கொண்ட வலிமை மிக்க காதலர் முயற்சியினிடத்தே மிகுதியுங் கொண்ட விருப்பத்தினாலே (இங்குத் தங்குதலாலேற்படும்) நன்மையினை அறியாமல் (நம்மைப்) பிரிந்து சென்றனரோ? (எனத் தலைமகள் ஐயுற்றுத் தோழியை வினவினள்.)

பாடல் - 39
பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்
பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்
சூழாப் பொருள்நசைக்கண் சென்றோர் அருள்நினைந்
வாழ்தியோ மற்றோ உயிர். . . . . [39]

விளக்கம்:

எனது ஆருயிரே! பிளந்த வாயினையுடைய பெரிய புலியானது யானையினை கொள்ளுதலினின்றும் தவறிப்போய் (மறவர்தம் கொள்ளையாற்) பாழ்ப்பட்ட ஊரினது மன்றத்தின்கண் புகுந்து (உணவினை) நாடி நிற்கும்படியான அரிய பாலைநில வழியே நெருங்கி பொருள் தேடவேண்டுதலினாலே பிரிந்து சென்ற தலைவரது தண்ணளியினை இன்னும் எதிர் பார்த்து (மடியாது) வாழ விரும்புகின்றனையோ? (என்று தலைமகள் தன்னுயிருடன் வினவினள்.)

பாடல் - 40
முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை
புள்ளி வெருகுதன் குட்டிக்(கு) இரைபார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. . . . . [40]

விளக்கம்:

நந்தலைவரின் மனமானது (பொருள் தேடுதலை மேற்கொண்டு) சென்ற வழியானது முட்களையுடைய மூங்கிற் புதர்கள் சூழ்ந்து பின்னிக்கொண்டு கிடக்கும்படியான தோட்டத்தினிடத்தே புள்ளிகளையுடைய காட்டுப்பூனையானது தனது குட்டிக்கு உணவினைத் தேடித் திரிதலோடு ஆறலைப்போர் சஞ்சரிக்கும் கொடிய பாலைவனம் என்று சொல்லுவர் பலர். (என்று தலைமகள் தோழியிடங் கூறினள்.)

பாடல் - 41
மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக்
குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து - சென்றவர்
கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்(து)
ஒள்ளிய தும்மல் வரும். . . . . [41]

விளக்கம்:

மலையிடத்தினை நெருங்கிச் சென்று பாலைநிலத்தூர் பலவற்றைக் கடந்து (பொருள்வயிற்) பிரிந்த நந்தலைவர் மன்றின் கண்ணுள்ள ஆலமரத்தில் வாழும் ஆந்தையானது ஒலிக்க அடிக்கடி நலமிகுந்த தும்மலானது (நம்மிடத்துத்) தோன்றாநின்றதாதலின் களவின் கண் நம்மாட்டு அவர் கொண்ட கடுங்காதல் போன்று இஞ்ஞான்றுங் கொண்டு மீள்வர்போற் காண்கின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

பாடல் - 42
பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம்நினைப்ப
வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப்
பாங்கத்துப் பல்லி படும். . . . . [42]

விளக்கம்:

வானளாவிய குன்றுகளாகிய பாலை நில வழியே கடந்து சென்ற நங்காதலரை நாம் நினைத்த வளவிலே நம் அழகிய கண்களிலே இடக்கண்ணானது துடித்தாடாநின்றது நாம் காண்கின்ற கனவுகளும் நற்பொருளுடையனவாயுள்ளன அவற்றால் பூரித்த நம் மெல்லிய தோள்கள் அழகுற்று நோய் நீங்கும் வண்ணம் பல்லியானது இணக்கமாக நிமித்தஞ் சொல்லாநின்றது. (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

4. மருதம்
பாடல் - 43
பேதையர் என்று தமரைச் செறுபவோர்
போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி
வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்!
நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று. . . . . [43]

விளக்கம்:

அழகிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை யணிந்த தோழியே! தமரை - தம்மவராகிய தலைமகனாரைக் (காணாவிடத்து அவராற் காதலிக்கப்படும் பரத்தையர் அறிவிலாரென்று திட்டி சினத்தை மேற்கொள்வர் ஒப்பற்ற தாமரைப் பூக்கள் இடையிட்டுக் கிடக்கும்படியான இடத்தினையுடைய மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகனை எதிரே பார்த்தவளவில் அடங்கியும் இருப்பார்கள் (அங்ஙனம் வஞ்சகர்களாகிய அவர்களை நாடித் தலைமகனார் பிரிந்து சென்றது) இப்பொழுது மிகுதியும் மன நோயினைச் செய்யா நின்றது (அந்நோயின் கொடுமை வாய் விட்டுக் கூறுந்தரத்ததன்று) என்னெஞ்சமே (அதனைத்) தெரியுந் தரத்தது. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 44
ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை
உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று) யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய்
அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்
பொய்ச்சூள் எனஅறியா தேன். . . . . [44]

விளக்கம்:

ஒளியினையுடைய அணிகலன்களையணிந்த தோழியே! (களவுப்புணர்ச்சி நிகழ்ந்த) அக்காலத்திலே (கூறிய உறுதி மொழிகள்) பலரும் நினைவிலிருத்தக் கூடிய வஞ்சக மொழிகள் என்று தெரிந்து கொள்ள முடியாத யான் அக்காலத்தே (தலைமகன்) பணிவுடன் கூறிய அவ்வுறுதி மொழிகளை எழுத்துவடிவமாக (எழுதித்தரப்பெற்றுக்) கொண்டேனுமில்லை நிறமிக்க இதழ்களையுடைய தாமரைப் பூக்கள் இடையிட்டுக் கிடக்கும் ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனைப்பற்றி மனமுழுவதையு மொன்று சேர்த்து (என்னை) எண்ணுவதில்லை என்பதாக எவரிடத்தில் (குறை) கூறிக்கொள்ளட்டும்? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 45
ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்
பட்டஞ் சிதைப்ப வரும். . . . . [45]

விளக்கம்:

போர்வன்மையினை கொண்டவனாகிய அரியசெல்வத்தினையுடைய நல்ல மருதநிலத்தூர்த்தலைவன் மேற்பாகத்தினிடத்தே சிறிய காயானது பொருந்தியுள்ள வஞ்சிச் செடியினைப் போன்று கணுக்கள் சிதறுதலால் (தோன்றும்படியான முத்தினைப் போன்ற தன் மகனை மார்பின் மீதே நெருக்கித் தழுவிப் பிடித்து மேலாடை சிதையும்படியாக (செய்பெருஞ் சிறப்பின்கண்ணே) காணப்பெறுகின்றனன். (என்று தோழி கூறி மகிழ்ந்தாள்.)

பாடல் - 46
அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து)
இகன்மை கருதி யிருப்பன் - முகன்அமரா
ஏதின் மகளிரை நோவ தெவன்கொலோ
பேதமை கண்டொழுகு வார். . . . . [46]

விளக்கம்:

பரந்த மருதநிலத்துள்ள ஊர்க்குத் தலைவனான என் காதலனை மலர்மாலையினாலே (பரத்தையர்) கட்டிக் கொண்டு போயதனால் (அவர் மாட்டு) மாறுபாட்டினை எண்ணி இருத்தலைச் செய்கின்றனன் அறியாமையினை செய்து நடப்பவராகிய பிறமகளிராகிய பரத்தையரை மனம் பொருந்தி (தலைமகன் பிரிவுக்காக) நொந்து கொள்வது எற்றுக்கு? (அன்பும் உறவுமுடைய தலைமகனை நோவதே நெறியாம் என்று தலைமகள் கூறிக் கொண்டனள்.)

பாடல் - 47
போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான்
மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி உண்ணினும் உண். . . . . [47]

விளக்கம்:

பாணனே! (தலைமகன் முன்பு தழுவியமைந்த) எமது கழுத்தினிடத்தே இனித் தழுவதற்கு நேரமின்றி என் மகன் முலையுண்ணும்படி அமைந்துளான் மேலும் நாம் தலைமகற்குத் தகுதியின்றி மூப்பினையடைந்தோம் (ஆதலின்) நீ இவ்விடத்தினின்று நீங்கி முன்னோக்கி வளருகின்ற முலைகளையுடைய பரத்தையரது சேரியினிடத்தே சென்று (அங்குள்ள தலைமகனுக்கு எமது மூப்பு முதலிய செய்திகளை) இயம்புவாயாக கள் முதலிய குடிநீர்வகைகளையும் இறைச்சிகளையும் விரும்பி பரத்தையர் முன்பாக நாடக முதலியனவற்றை நடத்தி உண்ணுதலைச் செய்யினும் செய். (என்று தலைமகள் பாணனிடம் கூறினாள்.)

பாடல் - 48
யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை
பாண! இருக்க வதுகளை - நாணுடையான்
தன்னுற்ற எல்லாம் இருக்க இரும்பாண!
நின்உற்ற(து) உண்டேல் உரை. . . . . [48]

விளக்கம்:

என்னருமைப் பாணனே! இவ்விடத்தே இருப்பாயாக புது வருவாயினையுடைய நல்ல மருதநிலத்தூர்த் தலைவனது மேன்மையினை (பலபடியாகஎடுத்துச்) சொல்லுதலாகிய அப்போக்கினை ஒழித்து விடுவாயாக பெருமைமிக்கபாணனே! நாண் உடையான் - (பிறபெண்டிரைக் காணுதலில்) வெட்கமுற்றுப் பின்வாங்கும் பெருமையினையுடைய தலைமகனுக்கு நேர்ந்த குறைகளெல்லாம் இருக்கட்டும் உனது வாழ்க்கையில் பொருந்திய குறை யாதேனும் உளதாயின் எடுத்துச் செல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 49
உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை
பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும்
தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப்
பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து. . . . . [49]

விளக்கம்:

பாணனே! உழலை மரத்தினை நாசப்படுத்திய சிவந்த கண்களையுடைய எருமையானது மருத நிலத்தூடே தவழ்ந்து சென்று கழனியிலே மேய்ந்து (மருதமர) நிழலின் கண்ணே தங்கியிருக்கும்படியான குளிர்ந்த இடத்தினையுடைய ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது (வண்டுகள் பல படியும் வண்ணம் மலர்ந்து கிடக்கும்) மலர்போன்ற காதலினை கொண்டு சேர்த்து ஊர்க்குப் புறத்தேயுள்ள சேரியில் வாழும் பரத்தையர்க்கு சொல்வாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 50
பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன்
ஓதை மலிமகிழ்நற்(கு) யாஅம் எவன்செய்தும்
பூவார் குழற்கூந்தல் பொன்னன்னார் சேரியுள்
ஓவாது செல்பாண! நீ. . . . . [50]

விளக்கம்:

பாணனே! பல்வகை யொலிகள் மிகுந்த மருதநிலத் தலைவனாகிய தலைமகனுக்கு மகனையே (பிரிவின் கண்) துணைவனாகிய சான்றோனெனும் அடைக்கலமாகக் கொண்ட பெண்பாலாகிய நாம் என் செய்து பயன்படப் போகின்றோம்? (அவற்கு எம்மால் ஆவது யாதுமின்று பூக்கள் நிறைந்த சுருட்டி முடித்த மயிரினையுடைய திருமகளை யொத்தவராகிய (அவற்கு வேண்டிய) பரத்தையரின் சேரியினிடத்தே ஒழியாது நீபோவாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 51
பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுந்தீக - வைகல்
மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும்
சிறுவன் உடையேன் துணை. . . . . [51]

விளக்கம்:

(பாணனே!) நாடோறும் குற்றமில்லாத பொன்னாற் செய்த வளையணிந்த கைகளை வீசியும் விரித்தும் விளையாடும் என் புதல்வனாகிய சிறுவனை பாது காவலாக கொண்டுளேன் (ஆகலின்) பொய்கை - நல்ல நீர் நிலைகளையுடைய நல்ல மருத நிலத்தலைவனாகிய தலைமகனின் ஒழுக்க முறைகளை எடுத்தியம்ப வேண்டா (தலைமகன் பிரிய நேரிட்டது) எனது தவறேயாயினும் (ஆகட்டும்) (இவ்விடத்தை விட்டு) எழுந்து நடப்பாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)

பாடல் - 52
உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும்
தண்டுறை யூர! தருவதோ? - ஒண்டொடியைப்
பாராய் மனைதுறந்(து) அச்சேரிச் செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல். . . . . [52]

விளக்கம்:

தடாகத்தினிடத்தே மேய்ந்து வாழும் வரால்மீன் கூட்டம் திரியும்படியான குளிர்ந்த இடத்தினையுடைய மருதநிலத்திற்குரிய தலைவனே! ஒண் தொடியை - ஒள்ளிய வளையினையணிந்த தலைமகளை கடைக்கணிக்காதவனாய் எமது மனையினைவிட்டு நீங்கி அப்பரத்தையர் சேர்ந்து வசிக்கும் சிற்றூர்க்கு போகின்ற போக்கினை பெரிய காரியமாக ஏற்படுத்திக் கொள்வது (பெருந்தன்மை மிக்க நினக்குத்) தக்கதாமோ? (என்று தோழி தலைமகனை வினவினள்.)

பாடல் - 53
வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர்
வளைகிய சக்கரத்(து) ஆழி - கொளைபிழையா
வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன். . . . . [53]

விளக்கம்:

(எம் பெருமாட்டீ!) பல்விதவளத்தாற் சிறந்த வயல்களாற் சூழப்பட்ட மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகன் மாயமொழிகளைக் கூறி மயக்கும் பரத்தையரது வளைந்த சக்கரம் போன்ற மோதிரமணிந்த கைகளால் கொள்ளப்படுதலினின்றும் தப்பி என்றைக்காவது நடுவிலே தோன்றி நம்மிடத்து வருவானாயின் உன்னுடைய வாழுங் காலத்திலே அவனைச் சாருவித்து வேண்டியவெல்லாம் பெற்றவள்போல மகிழ்வேன். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

பாடல் - 54
உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று)
எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்என்(று) - எண்ணி
வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன்
பழிபாடு நின்மே லது. . . . . [54]

விளக்கம்:

ஆழ்ந்த ஆராய்ச்சிமுறைகள் நிறைந்த பெரியோர்கள் ஏற்படுத்தியது (இல்லறம் அன்போடு கூடியது என நினையாது கலவியொன்றினையே கருதும் பரத்தையரிடத்தில் (காட்டிய) அருளினை இனி விட்டொழிப்போம் எனக் கருதி நின்பால் வணக்கத்தினை மேற்கொண்டுள்ள வளப்ப மிக்க கழனிகள் சூழ்ந்துள்ள ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது (நீ அவனை ஏற்றுக் கொள்ளாமையாலுண்டாங்) குற்றப்பாடு நின்னையே சாரும். (ஆகலின், அவனை ஏற்றுக் கொள்வாயாக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

பாடல் - 55
காதலில் தீரக் கழிய முயங்கல்மின்
ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப்
பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும் எண்ணிலா
ஆசை ஒழிய வுரைத்து. . . . . [55]

விளக்கம்:

யானே யன்றி நீங்களும் வெள்ளமானது நெருங்கி மிகுதலானுண்டாகிய ஒலிக்கின்ற நீர்வளமிக்க மருதநிலத் தலைவனாகிய நம் தலைமகனை உள்ளன்பின் மிகுதியினின்று முழுவதும் நீங்கும்படியாக இனித் தழுவாதிருப்பீர்களாக அறியாமையிலே அகப்பட்டு அளவில்லாத தலைமகனது விருப்பம் நீங்கும்படி (காதன் மொழிகள் பல) கூறி (தலைமகன்மாட்டுக்) குறையிரக்கா திருப்பீர்களாக. (இங்ஙனம் சில காலம் நாம் ஒற்றுமையாக இருப்போமாயின், தலைமகன் முன்போல் நம்மாட்டுக் காதல் கொண்டு ஒழுகுவன், என்று தலைமகள் தன் மாட்டு வந்து, தலைமகனின் அன்பின்மையினை எடுத்துச் சொன்ன பரத்தையரிடத்தும், ஏனைத் தலைவியரிடத்தும் கூறினாள்.)

பாடல் - 56
தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப்
பூங்கண் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத்
தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை
வளர்முலைக் கண்ஞமுக்கு வார். . . . . [56]

விளக்கம்:

நறு மணமிக்க மலர்த் தடங்களையுடைய மருத நிலத்தேயுள்ள கழனி சூழ்ந்த ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனை அழகிய கண்களையுடைய மகன் கால்களால் துவைத்து சிதைத்துக் கொண்டிருக்க (தலைமகனார்) இந் நிலையிலே என் பாவை போல்பவளாகிய தலைமகளின் (மகப் பெற்றமையால்) நெகிழ்ந்துள்ள முலைகளை விரும்பி முன்னோக்கி வளர்ந்து காணும்படியான அம் முலைகளின் நுனியினை கைகளால் நெருடி மகிழ்ச்சி யுறுவார். (என்று செவிலி நற்றாயிடங் கூறினாள்.)

5. நெய்தல்
பாடல் - 57
ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்
பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனி(து)உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு. . . . . [57]

விளக்கம்:

(தோழியே!) (ஏறிவந்து பாய்ந்து) இறங்கிச் செல்லும்படியான அலைகளையுடைய கடற்கரையினிடத்தே (வாழும்படியான) பெரிய கடற் பறவைகளின் இறகுகளினின்றும் சுழன்று வெளிபடும் காற்றானது எடுப்பாக வீசும்படியான துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனை (வஞ்சகமின்றி) அறியாமை யொன்றினையே யுடையான் என தெரியும்படியான மனத்தையும் நன்றாக நாம் கொண்டிருத்தல் நம் வாழ்க்கைக்கு நன்மையையுண்டாக்கும் நற்போக்கன்றோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 58
என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை
அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்
புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ
நின்னல்ல(து) இல்லென்(று) உரை. . . . . [58]

விளக்கம்:

தோழியே! என்னை கொல் - யாது காரணம்? அவர்கண்ணும் - நம்தலைமகனார் மாட்டும் விரைந்து வரைதலை மேற்கொள்ளுமாறு காணப்பட்டிலது செவிலி நம்மாட்டு நடந்து கொள்ளும் மனப்போக்கும் (களவு வெளிப்பட்டமையினாலே அம்முறையிற் கொடுமையினைக் கொண்டுள்ளது அழகிய மலர்களையுடைய புன்னை மரங்கள் நிரம்பிய துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனுக்கு (இம்முறையாக வரைவு நீட்டித்தல்) பொருத்தமாகுமோ? (பொருந்தாது ஆதலின்) நின்னையல்லாமல் வேறு துணை (எனக்கு) இல்லையென்று (தலைமகனுக்குச்) சொல்வாயாக. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)

பாடல் - 59
இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்
உள்ளரவம் நாணுவர் என்று. . . . . [59]

விளக்கம்:

வளைந்த காதணிகளையுடைய தலைமகள் பறவைகளின் ஒலிகளை அறிந்து (அலைகளாலும் காற்றினாலும்) இடப்பட்ட மணல் மேடுகளையுடைய இருப்பிடமாகிய கடற்கரைச் சோலைகளையுடைய துறைமுகத்திற்குரிய தலைமகனது விரைந்து செல்லுங் குதிரையின் (கழுத்திலணியப்பெற்ற மணிகளின் ஒலியென்று (நினைத்து தன் சுற்றத்தாராகிய பரதவர்கள் தனது மனத்தினடத்தே உண்டாகுகின்ற மனக்கலக்கத்திற்கு (இவ்வொலி காரணமாகுமோ என மதித்தறிவர் என நினைத்து இரவுக்குறி யிடம்வரை சென்று தலைமகனாகிய நின்னைக் காணாது திரும்பினாள். (என்று தோழி தலைமகற்குக் கூறினாள்.)

பாடல் - 60
மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல்
திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத்
துணிமுந்நீர் துஞ்சா தது. . . . . [60]

விளக்கம்:

(தலைமகனை இரவுக்குறிக்கண் சார்ந்து திரும்பிவந்து உறக்கங் கொள்ளாத) எம்மைப்போல செறிந்த மணன்மேடுகளின் மீது அலைகள் மோதி நடக்கும்படி (பெரியோர்களால்) துணிந்து வரையறுக்கப்பட்ட மூன்று தன்மைகளையுடைய கடல் உறங்காமையை மேற்கொண்டது நீலமணிபோன்ற நிறத்தையுடைய நெய்தற்பூக்கள் (மலர்ந்த பெரிய உப்பங்கழிகளையுடைய கடற்கரைத்தலைவன் தனது அழகிய நலமாகிய இன்பத்தை மேற்கொண்டு நீங்கிவிட்டான் என்று நினைத்துதானோ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)

பாடல் - 61
கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்
தண்ணந் துறைவனோ தன்இலன் ஆயிழாய்!
வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்
பண்ணமைத் தேர்மேல் வரும். . . . . [61]

விளக்கம்:

ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை யணிந்த தலைவியே! கண்களின் தன்மையினைக் கொண்ட நெய்தற் பூக்கள் மணக்கும்படியான வளைந்து செல்லும்படியான கடற் கால்வாய்களையுடைய குளிர்ந்த அழகிய துறை முகத்துக்குரிய தலைமகனோ தனது பழைய போக்கினை மேற்கொண்டிராதவனாய் அழகினையுடைய அவன் கைகளில் நாம் அகப்பட்டுக் கொண்டதனை தனது ஆண்மையின்பாற்பட்ட செய்தி என்று எண்ணிஇறுமாப்புற்று ஒழுங்காக அமைக்கப்பட்ட தேரின்கண்ணே அமர்ந்து (வரைதலை எண்ணாது) வாராநின்றனன். (என்று தோழி தலைமகனிடங் கூறினாள்.)

பாடல் - 62
எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும்
ஏறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல்
கானகம் நண்ணி அருள்அற் றிடக்கண்டும்
கானலுள் வாழும் குருகு. . . . . [62]

விளக்கம்:

(யாங் களவுப் புணர்ச்சியிற் கண்டு கூடிய) கடற்கரைச் சோலையினிடத்தே தங்கியிருக்கும் நாரைகள் துள்ளி விளையாடும் சுறாமீன் தொகுதியாகிய கூட்டமானது கலந்து சிதறும்படியாக மோதும்படியான வீசுகின்ற அலைகளையுடைய கடற்கரைத் தலைமகனின் (பிரியேன் என்று கூறிப் பிரிந்த) தீமையினை காட்டு வழியிடத்தே பொருள் வேண்டிச் சென்று (என் மேலுள்ள மிகுந்த) அன்பானது இல்லாமல் காலநீட்டித்திட தெரிந்தும் தெரிந்துகொள்ளமாட்டாவோ? (என்று தலைமகள் தனக்குட்டானே வினவி வருந்தினாள்.)

பாடல் - 63
நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த
பன்மீன் உணங்கல் கவரும் துறைவனைக்
கண்ணினாற் காண அமையுங்கொல் என்தோழி!
வண்ணந்தா என்கம் தொடுத்து. . . . . [63]

விளக்கம்:

என்னுடைய தோழியாகிய தலைமகளே ! நுட்பமாகிய கயிறுகளாலே பின்னப்பட்ட வலையினாலே நெய்தல் நிலமக்கள் பிடித்துக் கொண்டுவந்த பலவித மீன்களாகிய கருவாட்டினை (புட்கள் சென்று) பற்றிச் செல்லுதற் கிடமாகிய கடற்றுறைமுகத்துக்குரிய தலைமகனை நம் கண்களால் காணும்படியாக நேருமோ? (அங்ஙனங் காண நேருமாயின் (அவனை விடாது) பின்தொடர்ந்து (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை கொடுப்பாய் என்று நாம் கேட்போம். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)

பாடல் - 64
சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்
இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி
நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறியறிதி மீன்தபு நீ. . . . . [64]

விளக்கம்:

சிறிய மீன்களே அலகிடையே வைத்துள்ள சிவந்த இறகுகளையுடைய நாரையே! இறும் - வருந்துதலையுடைய மெல்லிய ஒலியினையுடைய உன்னுடைய குஞ்சுகளையே கருதி மீன்களைக் கொல்கின்ற (களவுக்காலத்திருந்து எம்மைக் கண்டு கொண்டுள்ள) நீ அலைந்து செல்லும் நீரினையுடைய பெரிய கடற்கால்வாய்களையுடைய கடற்கரைத்தலைவன் என்னைவிட்டுப் பிரிந்த முறையினை நன்கு தெரிவாய். (ஆகலின், நீயே எனக்குற்ற சான்றாகுவை, என்று தலைமகள் நாரையினை நோக்கி நலிந்து கூறினாள்.)

பாடல் - 65
தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப்
பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில்!
தண்ணந் துறைவற்(கு) உரையாய் மடமொழி
வண்ணம்தா என்று தொடுத்து. . . . . [65]

விளக்கம்:

தெளிந்த நீரினைக் கொண்ட பெரிய கடற் கால்வாயிடத்திலே விரும்பிய வளவு மீன் முதலிய உணவுகளை உண்டு அருகிலுள்ள பனைமரத்தின்மீதே தங்கும்படியான வளைந்த வாயினையுடைய இணை பிரியாது அன்றிற் பறவையே! மடமொழி - இளமையான மழலைச்சொற்களையுடைய தலைமகளின் (களவுப் புணர்ச்சியிற் கைக்கொண்ட) கன்னித் தன்மையாகிய அழகினை திருப்பிக் கொடுத்துவிடுவாய் என்று வேண்டிய மொழிகளையடுக்கி குளிர்ந்த அழகிய துறைமுகத்திற்குரிய தலைமகற்கு (சென்று) சொல்வாயாக. (என்று தோழி அன்றிற்பறவையிடம் கூறினாள்.)

பாடல் - 66
அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து
கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல்
நல்வளை சோர நடந்து. . . . . [66]

விளக்கம்:

அடப்பங்கொடிகள் மேலேறிப் படரும்படியான மணன் மேடுகளில் நண்டுகள் நடமாடும்படியான வளைந்து செல்லும் உப்பங் கழிகள் (சூழ்ந்த கடற்கரைத் தலைவன் (வரைவு நீடுதலின்) அன்புள்ளவனாகான் என்று அறிதலால் நல்ல வளையல்களையணிந்த நந்தலைமகள் துன்புறும்படியாக வஞ்சகனாகி மற்றொரு குலமகளையடையும் வழியிலே ஒழுகி தலைமகன் செல்வானோ? (ஒருகாலுஞ் செல்லான்

பாடல் - 67
கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்
பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்
நின்ற உணர்விலா தேன். . . . . [67]

விளக்கம்:

கண்களிலுள்ள விழிகளைப்போல் திரட்சியுற்றிருக்கும்படியான முத்துக்களை கொடுக்கும்படியான பெரிய கடலினிடத்தே பொருள்களை ஏற்றுமதி செய்யும்படியான மரக்கலங்கள் வந்து போகும்படியான துறைமுகத் தலைவனை தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலையினிடத்தே (இன்று அரிதாகக்) காணப்பெற்றேன் (இவனைக் காணுதல் முன்பு இன்பந்தருமென உணர்ந்து) நிலைபெற்றிருந்த உணர்ச்சியானது (இப்பொழுது) இல்லாத யான் (புணர்ச்சி துன்பம் தரும்) என்று தெரியலானேன். (என்று தலைமகள் கூறினாள்.)

பாடல் - 68
இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல்
கவர்கால் அலவன் தனபெடை யோடு
நிகரில் இருங்கழிச் சேர்ப்ப! என்தோழி
படர்பசலை ஆயின்று தோள். . . . . [68]

விளக்கம்:

கரைமேலேறி வருகின்ற அலைகளினாலே கடலினின்றுங் கொண்டுவந்து போடப்பட்ட மேடாகிய மணலிடத்தே இருபிரிவாக அமைந்துள்ள கால்களையுடைய ஆண் நண்டானது தன்னுடைய பெட்டை நண்டுகளுடனே ஓடிவிளையாடும்படியான ஒப்பற்ற பெரிய கடற்கால்வாய்களையுடைய கடற்கரைத் தலைவனே! என் தோழி தோள் - என் தோழியாகிய தலைமகளின் தோள் (நின் பிரிவாலே) படரப்பெற்ற பசலைபூக்கப்பெற்று வருந்தாநின்றது. (நீ வந்து அப்பசலை நோயை நீக்குவாயாக

69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன.

அறுபத்தொன்பதாவது, எழுபதாவது செய்யுள் பழைய ஏட்டுப் பிரதிகளின் சிதைவாற் காணப் பெறவில்லை.

ஐந்திணை எழுபது முற்றிற்று.