பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பொருநராற்றுப்படை


காவிரி நாட்டு வயல் வளம்

பாடல் வரிகள்:- 242 - 248

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ் . . . .(245)

சாலி் நெல்லின் சிறைகொள் வேலி
யாயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.

பொருளுரை:

கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான். முல்லை நிலத்தில் குல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும். நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள். நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும். உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு. வேலி என்பது நில அளவை. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.