பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பொருநராற்றுப்படை


கரிகாலனது கொடையின் சிறப்பு

பாடல் வரிகள்:- 151 - 177

றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநுங்
கையது கேளா வளவை யொய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் . . . .(155)

பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேற லாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி

பொருளுரை:

பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்… பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும். நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.

யெரியகைந் தன்ன வேடி றாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி . . . .(160)
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்

பொருளுரை:

பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான். இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான். பாடினி அரில் மாலை - இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை. முத்தாரம் - இது நூலில் கோத்த முத்துமாலை. அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.

கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தே
ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் . . . .(165)

காலி னேழடிப் பின்சென்று கோலின்
றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் . . . .(170)

வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்

பொருளுரை:

வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் எனபான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான். யானைப் பரிசும் உண்டு. தேர் - அமரும் இடமான கொடிஞ்சி தந்தத்தால் செய்யப்பட்டது. குதிரை - குதிரையின் உச்சந் தலையில் வண்ணம் பூசிய குஞ்சம் தொங்கும். அதன் பிடரிமயிர் மடிந்து தொங்கும். குதிரைகள் பால்போல் நிறம் கொண்டவை. குதிரையை ஓட்டும் கோலின் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் முள் பொருத்தப் பட்டிருந்தால் அது தாற்றுக்கோல். சாட்டைப் பொருத்தப் பட்டிருந்தால் அது சாட்டைக் குச்சி. கரிகாலன் தேரோட்டியின் கையில் தாற்றுக் கோல் இல்லாமல் செய்வான். (இது அவன் விலங்குகள் மாட்டும் கொண்டிருந்த கருணையைப் புலப்படுத்துகிறது) பரிசிலாகத் தரும் நாட்டுப் பகுதியிலுள்ள ஊர்கள் விளைச்சல் குறையாத நன்செய்ப் பண்ணைகள் நிறைந்தவை. வேழம் - வெருவும் பறை போன்ற காதுகளும் பருத்துப் பெருத்த நீண்ட துதிக்கைகளும் கொண்டவை. சிறந்தவை. எனினும் பகை கண்டால் வெகுள்பவை.

பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து . . . .(175)
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் . . . .(177)

பொருளுரை:

நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)