பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

பொருநராற்றுப்படை


பாடினியின் கேசாதிபாத வருணனை

பாடல் வரிகள்:- 025 - 047

யறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க
ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை யூசற் பொறைசால் காதி . . . .(30)

நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி
னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி
ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத் . . . .(35)

தீர்க்கிடை போகா வேரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூ
ழுண்டென வுணரா வுயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்கு
லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் . . . .(40)

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
யரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு . . . .(45)

ணன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி . . . .(25 - 47)

பொருளுரை:

பொருநன் என்பவன் யாழை மீட்டிக்கொண்டும், பாடும் பாடலின் கருத்து புலப்படுமாறு நடித்துக் கொண்டும், யாழின் பண்ணிசைத் தாளத்திற்கேற்பக் காலடித் தாளம் போட்டுக்கொண்டும் ஆடுபவன் எனபதைப் பாடலால் உணர முடிகிறது, அன்றியும் பறை முழக்கும் கூட்டத்தவனாகவும் காணப்படுகிறான். பாடினி பொருநனின் மனைவி. அவளும் அவனோடு சேர்ந்து ஆடுவாள். இங்குள்ள பாடலடிகள் வழிநடை மேற்கொண்டிருந்த பாடினியின் பொலிவைப் புலப்படுத்துகின்றன.

அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு (சுணங்கு) இருந்தது. (இலை தைக்க உதவும் சோளத் தட்டையின் ஈர்க்கை நாம் அறிவோம்) ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. (இந்தக் காழ் இரண்டு கால்களின் தொடைகளுக்கு இடையே ஆடைக்கு மேல் தொங்கும்) யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் (குறங்கு) காலில் பொருந்தி ஒழுகும் மயிர். (ஒப்பு நோக்குக - கையில் அரிமயிர்) இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.