முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு

முது பெண்டிர் ஆய்மகளின் நற்சொல் கேட்டலும் தலைவியை ஆற்றுவித்தலும்
பாடல் வரிகள்:- 012 - 023
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர, . . . .[15]
இன்னே வருகுவர் தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம், அதனால்,
நல்ல நல்லோர் வாய்ப்புள், தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது, நீ நின் . . . .[20]
பருவரல் எவ்வம் களை மாயோய், எனக்
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக், . . . .[12 - 23]
னுறுதுய ரலமர னோக்கி யாய்மக
ணடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர . . . .[15]
வின்னே வருகுவர் தாய ரென்போள்
நன்னர் நன்மொழி கேட்டன மதனா
னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து
வருத றலைவர் வாய்வது நீநின் . . . .[20]
பருவர லெவ்வங் களைமா யோயெனக்
காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
பொருளுரை:
சிறிய கயிற்றால் கட்டப்பட்ட இளம் கன்றின் வருந்தி சுழல்கின்ற தன்மையைப் பார்த்த ஆயர் பெண், குளிரால் நடுங்கும் தன் தோளின் மேல் கையைக் கட்டி , அங்கு இருக்கும் கன்றுகளிடம் “கோவலர்கள் கொடிய கோலால் பின்னின்று செலுத்த, இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள்” என்றாள். அதைக் கேட்ட பெண் ஒருத்தி கூறினாள், “மிகவும் நல்ல சொற்களை நாங்கள் கேட்டோம். பகைவர்களின் நிலத்தைக் கவர்ந்துக் கொண்டு, அவர்களின் திறையைப் பெற்று, போர்த்தொழிலை முடித்து வருவான் உன் தலைவன். இது உண்மை. உன் மனத்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்குவாயாக, கருமை நிறமுடையவளே!”. இவ்வாறு எடுத்துக் காட்டியும் அரசி ஆறுதல் அடையவில்லை. மிகவும் கலங்கி, தன் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைக் கொட்டினாள்.
குறிப்பு:
கொடுங்கோல் (15) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகநானூறு 17, அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், நெடுநல்வாடை 3, முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல், வேங்கடசாமி நாட்டார் உரை - அகநானூறு 74, அகநானூறு 195 - வளைந்த கோல், அகநானூறு 17 - கொடிய கோல், நச்சினார்க்கினியர் உரை - முல்லைப்பாட்டு 15 - கொடிய கோல். கொடுங்கோல் - பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 - ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். கோவலன் நிரைகட்கு உணவாகிய தழைகளை வளைத்து முறித்தல் பொருட்டு தலை வளைந்த கோல். தாயர் (16) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தாயர் என்று உயர்திணைப் பலர் பால் விகுதியேற்ற சொல்லிற்கேற்ப வருகுவர் எனப் பலர் பால் வினைமுற்றால் கூறப்பட்டது. தாயர் என்னும் பன்மைக்கு ஏற்பவே கன்றுகளும் பலவென்க. வாய்ப்புள் (18) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வாய்ப்புள்ளாவது ஒருவன் ஒரு வினைமேற் புறப்படும் பொழுது அயலிலுள்ளார் பிறரொடு பேசும் பேச்சின்கண் தனக்கு நலம் விளைதற்குக் குறிப்பாகவாதல், வெளிப்படையானாதல் கூறினாற் போன்ற பொருளுடைய சொற்றொடர் அமைதல். இலக்கணம்: நன்னர் நன்மொழி - ஒருபொருட் பன்மொழி. ‘நர்’ விகுதிபெற்ற பண்புப்பெயர். அலமரல் - தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி (தொல்காப்பியம், சொல் 310). முல்லைத் திணைக்குரிய கருப்பொருளாகிய ஆநிரைகளும், அந்நிலத்தில் வாழும் மக்களாகிய ஆயர், ஆய்ச்சியர், அவர்களுடைய தொழில் ஆகியற்றை இவ்வடிகளில் காணலாம்.
சொற்பொருள்:
சிறு தாம்பு தொடுத்த - சிறிய கயிற்றால் கட்டப்பட்ட, பசலைக் கன்றின் - இளங்கன்றினுடைய (நச்சினார்க்கினியர் உரை - வருத்தத்தையுடைத்தாகிய கன்றினுடைய), உறு துயர் நோக்கி - உற்ற துன்பத்தை நோக்கி, ஆய் மகள் - ஆயர் பெண், நடுங்கு சுவல் - நடுங்கும் தோள், அசைத்த கையள் - கட்டிய கைகளையுடையவள், கைய - கையிலே, கொடுங்கோல் - கொடிய கோல்கள், கையில் வளைந்த கோல்கள், கோவலர் - இடையர்கள், பின் நின்று உய்த்தர - பின்னால் நின்று செலுத்த, இன்னே வருகுவர் தாயர் - இப்பொழுதே வருவார்கள் உங்களுடைய தாய்மார்கள், என்போள் - என்றவள், நன்னர் நன்மொழி - மிகவும் நல்ல சொற்கள், கேட்டனம் - கேட்டோம், அதனால் - அதனால், நல்ல - நல்லது, நல்லோர் - நல்லவர்கள், வாய்ப்புள் - நல்லது நடக்கும் என்ற செய்தி, தெவ்வர் முனை கவர்ந்து - பகைவர்களின் நிலத்தைக் கொண்டு, கொண்ட திறையர் - பெற்றுக் கொண்ட திறையை உடையவராய், வினை முடித்து - போர்த்தொழிலை முடித்து, வருதல் - வருவது, தலைவர் - மன்னர், வாய்வது - உண்மை, நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் - நீ உன் மனத்தடுமாற்றத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை நீக்குவாயாக கருமை நிறமுடையவளே, என காட்டவும் காட்டவும் காணாள் - இவ்வாறு எடுத்துக் காட்டியும் அவள் ஆறுதல் அடையவில்லை, கலுழ் சிறந்து - மிகவும் கலங்கி, பூப்போல் - பூப்போல், உண்கண் - மையுண்ட கண்கள், புலம்பு முத்து உறைப்ப - தனித்து வீழ்கின்ற முத்துப் போலும் கண்ணீர்த் துளிகள் கொட்ட, முத்துப் போலும் கண்ணீர்த் துளிகளைத் துளிர்ப்ப