முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு


மால் போலத் தோன்றும் மழை மேகம்

பாடல் வரிகள்:- 001 - 006

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி, . . . .[5]

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)

பொருளுரை:

முகிலானது, அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சங்கும் சக்கரமும் ஆகிய குறிகளை உடையவனும், திருமகளை அணைத்தனவுமாகிய வலிமையான கையை உடையவனும், மாபலிச் சக்கரவர்த்தி தன் கையிலே நீர் ஊற்றிய பொழுது விண்ணளவு உயர்ந்தவனுமாகிய திருமாலைப் போல், ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல் நீரைப் பருகி வலப் பக்கமாக எழுந்து, மலைகளை இடமாகக் கொண்டு, விரைந்து சென்று, பெரிய மழையைப் பெய்த சிறுபொழுதாகிய மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தருவதாக இருக்கின்றது.

குறிப்பு:

நனந்தலை (1) - அகன்ற இடம், ‘நனவே களனும் அகலமும் செய்யும்’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 78). வலன் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வலப் பக்கம். முல்லைத் திணைக்குரிய கடவுளான திருமாலும், பெரும்பொழுதாகிய கார்காலமும், சிறுபொழுதாகிய மாலைப் பொழுதும் இவ்வடிகளில் உள்ளன. நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (3) - வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - மாவலி ஓர் அசுரன். திருமால் வாமன அவதாரம் எடுத்துச் சென்று ‘மூன்றடி மண் தா’ என்று இரந்து அவன் தாரை வார்த்துக் கொடுக்க, திரிவிக்கிரமனாகி நெடிது வளர்ந்து, பூமியையும் வானுலகையும் இரண்டடியாக அளந்து, மூன்றாவது அடிக்கு அவன் தலையில் காலை வைத்து அவனைத் பாதலத்தில் அழுத்தினான் என்பது புராணகதை. நேமியொடு வலம்புரி பொறித்த (12) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இச் சங்கு சக்கர குறிகள் உத்தம விலக்கணங்கள் என்ப. இறைவனாகிய திருமாலின் கைகளிடத்தும் கால்களிடத்தும் இக்குறிகள் உள என்பர். நச்சினார்க்கினியர் உரை - ‘நேமியொடு வலம்புரி தாங்கு தடக்கை மா பொறித்த மால்’ எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, ‘சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளையுடைய மால்’ என்றும், ‘திருமார்பிடத்தே திருமகளை வாய்த்த மால்’ என்னும் உரை கூறுவார் நச்சினார்க்கினியர். வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. இலக்கணம்: நன - அகலம் என பொருள் குறிக்கும் உரிச்சொல். வளைஇ - வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது. தட - உரிச்சொல், பெருமைப்பண்பு குறித்து நின்றது. தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உறியியல் 22). மாஅல் - இசைநிறை அளபெடை. பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை - முரண்தொடை. சிறு புன்மாலை (6) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - சிறுபொழுதாகிய மாலை, நச்சினார்க்கினியர் உரை - சிறுபொழுதாகிய வருத்தஞ்செய்கின்ற மாலைக் காலம், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - சிறுபொழுதாகிய பிரிந்தோர்க்கு வருத்தஞ்செய்கின்ற மாலை. குறுந்தொகை 352 - சிறுபுன் மாலை.

சொற்பொருள்:

நனந்தலை உலகம் - அகன்ற இடத்தையுடைய உலகம், வளைஇ - வளைத்து, நேமியோடு - சக்கரத்துடன், வலம்புரி பொறித்த - வலம்புரிச் சங்கின் குறிகள் பொறிக்கப்பட்ட திருமால் (வலம்புரி - வலப்பக்கமாகச் சுற்றுக்கள் அமைந்த சங்கு), மா - திருமகள், தாங்கு தடக்கை - அணைத்த பெரிய கைகள், நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - மகாபலி சக்கரவர்த்தி நீரை ஊற்ற ஓரடியால் உலகத்தை அளப்பதற்காக நிமிர்ந்த திருமாலைப் போல, பாடு இமிழ் பனிக்கடல் - ஒலி முழங்குகின்ற குளிர்ச்சி உடைய கடல், பருகி - குடித்து, வலன் ஏர்பு - வலப் பக்கமாக எழுந்து, வலிமையுடன் எழுந்து, கோடு கொண்டு எழுந்த - மலைகளை இடமாகக் கொண்டு, கொடுஞ் செலவு எழிலி - விரைந்து செல்லும் முகில், பெரும் பெயல் பொழிந்த - பெரிய மழையைப் பெய்த, சிறு புன் மாலை - சிறிய புல்லிய மாலை நேரம், பிரிவுத் துன்பத்தைத் தரும் மாலை நேரம்