மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்


நன்னனது மலை வழியில் செல்லும் வகை

பாடல் வரிகள்:- 345 - 360

என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி . . . .[345]

அவலவும் மிசையவும் துவன்றி பல உடன்
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர்
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் . . . .[350]

விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே

பொருளுரை:

இப்படி இந்த மலையோசைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து மலையின் மேல் பகுதியிலிருந்தும், கீழ்ப் பகுதியிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும். இப்படி அளக்க முடியாத பல ஒலிகளும் கேட்கும். நாலாத் திசைகளிலும் கேட்கும். எந்த ஒலியின் மீது கவனம் செலுத்துகிறார்களோ அந்த ஒலியைப் பல்வேறு ஒலிகளுக்கிடையே கேட்க முடியும். திருவிழாக் காலத்தில் தெருவெல்லாம் முழவோசை கேட்டுக் கொண்டேயிருப்பது போல நன்னன் மலைமீது மலைபடு கடாம் கேட்டுக்கொண்டேயிருக்கும். சிவந்த கண்களோடு பூத் தொடுக்கும் மகளிர் தூங்காமல் இருப்பது போல முழவோசை தெருக்களில் கேட்டுக் கேட்டுக்கொண்டேயிருக்கும். அதுபோல மலைபடு கடாமும் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்த ஓசைகள்தாம் மலைபடுகடாம்.

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும்
இன்னும் வருவதாக நமக்கு என
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் . . . .[355]

செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன்

பொருளுரை:

மலையின் காட்சிகளைக் கண் குளிரக் காணலாம். மலை ஒலிகளைக் காது குளிரக் கேட்கலாம். வாய் இனிக்கப் பழம் போன்றவற்றை உண்ணலாம். மற்றவற்றையும் இன்னும் கிடைக்க வேண்டு மென்று மரபு நெறி பிறழாமல் கேட்டுப் பெற்றுப் பாராட்டி மகிழலாம். நன்னன் திரு அமர் மார்பன். போர் என்றால் அவனுக்குக் கொள்ளை ஆசை. அவனைப் பலமுறைப் பாராட்டலாம்.

உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர்
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழிமின் . . . .[345 - 360]

பொருளுரை:

வியப்பூட்டும் இனிய குரலமைந்த விறலியர் மகிழ்ச்சிப் பெருக்கில் இனிய குரலோடு குறிஞ்சிப் பண்பாடுவதைக் கேட்டுக் கொண்டே செல்லுங்கள். இடி முழக்கத்துடன் மேகம் மேயும் மலையின் புதுமைப் பொலிவைப் பாராட்டிக் கொண்டும் மலைத்தெய்வத்தைக் (முருகனைக்) கைகூப்பித் தொழுதுகொண்டும் செல்லுங்கள்.