மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்
பாடல் வரிகள்:- 292 - 344
மலை முழுதும் கமழும் மாதிரம்தோறும்
அருவி நுகரும் வான் அரமகளிர்
வரு விசை தவிராது வாங்குபு குடைதொறும் . . . .[295]
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை
மலைமுழுதுங் கமழு மாதிரந் தோறும்
அருவிய நுகரும் வானர மகளிர்
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் . . . .[295]
தெரியிமிழ் கொண்டநும் இயம்போ லின்னிசை
பொருளுரை:
குரங்குகள் பலாப்பழங்களைத் தோண்டுவதால் பலாப்பழத்தின் புண் மலை முழுவதும் மணம் வீசிக் கமழும். கொட்டும் அருவியைத் துய்க்கும் வான்-அரமகளிர் நீர் கொட்டும் விசையையெல்லாம் வா1ங்கிக்கொண்டு நீராடும் ஒலியானது பாணர்கள் தம் இசைக்கருவிகளை முழக்குவது போல் கேட்கும். அரம்பை என்பது வாழைமரம். வாழைமரம் போல் அழகிய தோற்றம் கொண்டவர் அரம்பையர். அரம்பையர் என்போர் அரமகளிர். அரம்பையர் கற்பனைத் தெய்வம். பெண்தெய்வம். இது தமிழ்ச்சொல்.
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் . . . .[300]
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
சேயளைப் பள்ளி எஃகுறு முள்ளின் . . . .[300]
எய்தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென
அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்
பொருளுரை:
யானை ஒலி - தன் கூட்டத்திலிருந்து பிரிந்த யானை கானவனின் விளைவயலில் புகுந்து உண்ணும்போது பரண்மீது இருந்துகொண்டு கானவன் ஓட்டுவதைப் பொருட்படுத்தாது தன் இனத்தை அழைக்க எழுப்பும் சங்கூதுவது போன்ற யானையின் ஒலி. கானவன் அழுகை - கானவன் குகையில் படுத்திருந்தான். அவன் பாறைமேல் வைத்திருந்த அம்பு நழுவி அவன்மேல் விழுந்துவிட்டது. அப்போது அவன் அழும் ஒலி கொடிச்சியர் பாடல் - புலி பாய்ந்ததால் தன் கணவன் மார்பில் உண்டான புண்ணை ஊசிநரம்பால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடிச்சியர்கள் பாடும் காப்புப் பாடலின் ஒலி.
மலைமார் இடூஉம் ஏம பூசல்
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண் கேழ் வய புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் . . . .[310]
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல்
மலைமா ரிடூஉம் ஏமப் பூசல்
கன்றரைப் பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்குவரம் பாகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை இயம்பும் இடியுமிழ் தழங்குகுரல் . . . .[310]
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல்
பொருளுரை:
பூச்சூடும் பாட்டொலி - மலைநில மக்கள் வேங்கைப் பூவை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்ளும்போது பாடும் பாட்டொலி. யானையின் தழங்கு குரல் - பெண்யானை தன் கன்றைத் தன் உடல் நிழலில் மறைத்து அழைத்துச் சென்றது. அக் கன்றின் தந்தை தன் வலிமையை யெல்லாம் காட்டி யானைக் குட்டியைத் தாக்க வரும் புலியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தது. ஆனாலும் புலி யானைக் கன்றைப் பிடித்துவிட்டது. கண்ட யானையின் சுற்றம் முழுமையுமாக ஒன்று சேர்ந்து முழங்கி எழுப்பிய தழங்குகின்ற குரல். மந்தி பூசல் - தாய்க்குரங்கு தன் குட்டியைப் பிடிக்க மறந்து தாவியபோது குட்டி பெரிய பள்ளத்தில் விழுந்து துன்புற்றுக் கத்தியது. மரத்திலிருந்த தளிர்களைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்த குரங்குகள் அதன் துன்பத்தைப் போக்க முடியாமல் பூசலிடும் ஒலி. கட்டிப்போட்டிருக்கும் ஒன்று எழுப்பும் ஒலி
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என
நறவு நாள்செய்த குறவர் தம் பெண்டிரொடு . . . .[320]
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென
வான் தோய் மீமிசை அயரும் குரவை
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை
அருங்குறும் பெறிந்த கானவர் உவகை
திருந்துவேல் அண்ணற்கு விருந்திறை சான்மென
நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு . . . .[320]
மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென
வான்றோய் மீமிசை அயருங் குரவை
நல்லெழி னெடுந்தேர் இயவுவந் தன்ன
கல்யா றொலிக்கும் விடர்முழங் கிரங்கிசை
பொருளுரை:
தேன் எடுக்கும் கொள்ளை ஒலி - ஆண்குரங்கு கூடச் செல்ல முடியாத மலைப்பாறை இடுக்கில் தேனீக்கள் கூடு கட்டி வைத்திருக்கும். கயிற்றின் வழியாக இறங்கி அந்தத் தேனைக் கொள்ளையிடும் கொள்ளையொலி (மால்பு = கயிறு). கானவர் உவகை ஒலி - அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூறையாடும் கானவர்களின் மகிழ்ச்சி ஆரவார ஒலி. குரவரின் குரவை ஒலி - சூரையாடிக் கொண்டுவந்த பொருள்-விருந்து அரசனுக்குப் போதும் என்று கருதி, போருக்கு எழுந்த நாளில் காலையில் நறவுக்கள்ளை ஊற்றித் தந்த குறப்பெண்களுக்கும் அதனை ஊற்றித் தந்து அவர்களோடு சேர்ந்து மான்தோல் பறையை முழக்கிக் கொண்டு கானவர் குரவை ஆடும் ஒலி. கல்லிலே மோதி ஓடும் ஆற்றின் இரங்கல் ஒலி - சிறு பருக்கைக்கல் பாதையில் தேர் செல்லும்போது கேட்கும் ஓசைபோல் ஆற்று வெள்ளம் பிளவுப் பாதைகளில் மோதிக்கொண்டு இறங்கும்போது கேட்கும் இரங்கல் ஒலி.
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல்
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு . . . .[330]
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை . . . .[335]
உரவுச்சினந் தணித்துப் பெருவெளிற் பிணிமார்
விரவுமொழி பயிற்றும் பாக ரோதை
ஒலிகழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளிகடி மகளிர் விளிபடு பூசல்
இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு . . . .[330]
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை . . . .[335]
பொருளுரை:
யானை பயிற்றும் ஒலி - யானையை நீண்ட பொய்க்குழிக்குள் விழச்செய்து, அதன் சினத்தைத் தணித்துப் பெரிய கயிற்றுச் சங்கிலியில் பிணித்துக் கட்டுவதற்காகப் பாகர் தமிழோடு கலந்த சில பயிற்று மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கும் மொழியொலி. கிளி கடி பூசல் - மூங்கிலில் பாதியைப் பிளந்து செய்த தட்டையை முழக்கிக் கொண்டு தினைப் புனங்களில் மகளிர் கிளிகளை ஓட்டச் சோ …சோ … என்று பாடும் பூசல் ஒலி. நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை - வரையாட்டுக் கடாய் ஒன்று தன் இனத்திலிருந்து பிரிந்து சென்று மற்றோர் இனத்தை வளைத்துப் போட்டு அந்த இனத்திற்குத் தலைவன் ஆவதற்காக அதன் தலைமைக் கடாவோடு மோதிப் போரிட்டுக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த முல்லைநிலக் கோவலர், குறிஞ்சிநிலக் குறவர் ஆகிய இருநில ஆண்களும் ஒன்று கூடி ஆரவாரம் செய்துகொண்டு இரு காளைகளோடும் போரிடும் கம்பலை-ஒலி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை
மழை கண்டு அன்ன ஆலைதொறும் ஞெரேரென . . . .[340]
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறு மகளிர் இசை படு வள்ளையும்
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப்பறையும் குன்றகம் சிலம்பும் . . . .[292 - 344]
வன்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டுபடு மிச்சிற் காழ்பயன் கொண்மார்
கன்று கடாஅ வுறுக்கு மகாஅ ரோதை
மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் . . . .[340]
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்
சேம்பு மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையுங் குன்றகச் சிலம்பும்
பொருளுரை:
பிணையல் ஓட்டும் ஓசை - உண்டதுபோக மீதமுள்ள பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணையலாகக் கட்டி, அக் கன்றுகளைப் பூத்திருக்கும் காந்தள் கொடிகளால் மெதுவாக அடித்து ஓட்டும்போது சிறுவர்கள் எழுப்பும் ஆரவார ஓசை. கரும்பாலை ஓசை - மழைபோல் கரும்புச்சாறு ஓடும்படிகரும்பாலையில் கரும்பின் கண்ணை உடைக்கும் ஆலை ஓசை. வள்ளைப் பாட்டு - மகளிர் பாடிக்கொண்டு தினை குற்றும் வளையல் தாளப் பாட்டோசை. பன்றிப் பறை - நிலத்தைக் கிண்டி சேம்பினையும், மஞ்சளையும் வீணாக்கும் பன்றியை ஓட்ட அந் நிலம் காப்போர் அடிக்கும் பன்றிப் பறையின் ஓசை. குன்றகச் சிலம்பு - இந்த எல்லா ஓசைகளையும் எதிரொலிக்கும் மலைக்காட்டின் எதிரொலி முழக்கம். இப்படிப் பல கடாம் ஓசைகளைக் கேட்கலாம்.