மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்


நன்னனது மலைநாட்டில் பெறும் பொருள்கள்

பாடல் வரிகள்:- 170 - 185

ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு . . . .[170]

வேய் பெயல் விளையுள் தேம் கள் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை . . . .[175]

முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ
வெண் புடை கொண்ட துய் தலை பழனின்
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து . . . .[180]

வழை அமை சாரல் கமழ துழைஇ
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர் . . . .[170 - 185]

பொருளுரை:

வீடுதோறும் பெறும் உணவு வகைகள். தேன் - மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் மலைத் தாரம். (தரும் பொருளைத் தாரம் என்பது பழந்தமிழ் வழக்கு) தேறல் - தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிப் பருகத் தருவது தேறல். நறவு - (உண்டார்கண் அல்லது அடுநறா …குறள்) காய்ச்சி வடித்த மணநீர். இது மகிழ்ச்சி தரும் குடிவகை. தேங்காய் - அருவி அடித்துக்கொண்டு வந்த பழம். இதைச் சிதைத்தால் உள்ளே இருப்பது வெள்ளை வித்துப் பொருள். கடம்புமான் கறி - வருவிசை அம்பால் பெற்றது. முள்ளம் பன்றிக் கறி - கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முளவுக் கறி - பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டுவந்த விலங்குக்கறி பழன் - இது நெருப்புக் கட்டி வெண்மையாகும் வரையில் புடையடுப்பின் மேல் புலாலை வைத்து வாட்டிப் பழுப்பாக்கிய பழன். மாங்காய் போட்ட மோர்க்குழம்பு - (இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய்) நெல்லரிசிச் சோறு - (மூங்கில் போல் வளர்ந்த நெல்) இதனைச் சமைத்த குறமகள் தன் கூந்தலை உச்சிக் கொண்டையாகப் போட்டு முடிந்திருந்தாள். இந்த முச்சியில் மணம் கமழும் பூவைச் சூடியிருந்தாள். அவள் சமையலின் மணம் வழைமரம் மிக்க மலைச்சாரல் எல்லாம் கமழ்ந்தது. சோறு வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்தது. தன் மக்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தடுத்து வட்டியில் போடுவது போல் படைத்தாள். இவ்வாறு படைப்பதை ஒவ்வொரு மனையிலும் பெறுவீர்கள்.