திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பாடியவர்:- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்:- முருகப்பெருமான்
திணை:- பாடாண்திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- ஆசிரியப்பா
மொத்த அடிகள்:- 317

சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்

திருமுருகாற்றுப்படை

பாடியவர்:- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்:- முருகப்பெருமான்
திணை:- பாடாண்திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- ஆசிரியப்பா
மொத்த அடிகள்:- 317

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இதுகடைச்சங்கநூல்களில் ஒன்று என்பது மரபுவழிச்செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்த நூல் என்று கருதுவதுமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. "ஆற்றுப்படுத்தல்" என்னும் சொல் வழிப்படுத்தல் என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.

திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்சீரலைவாயும் (திருச்செந்தூர்), மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணிகை), பழமுதிர்ச் சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.

பாடல்கள்
1. திருப்பரங்குன்றம்
குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன் (1-6)
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை . . . .(5)

மறுவில் கற்பின் வாணுதற் கணவன் . . . .(1 - 6)

பொருளுரை:

உலகம் விரும்பி மகிழ்ந்து வாழ்த்துமாறு வெயிலும் வெளிச்சமும் தரும் பொழுது உலகை வலம்வருகிறது. காலைக் கதிரவன் கடலை உழுவது கண்கொள்ளாக் காட்சி. அதன் கவின் பேர் அழகைப் பலரும் புகழ்கின்றனர். அதைப்போலத்தான் முருகன் இமைக்கிறான். மனன் ஏர்பு திரிதருகிறான். அருட்பார்வை வழங்குகிறான். அவனது அருள்ஒளி கட்டவிழ்ந்து பாய்கிறது. தடை இல்லாமல் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாத தொலைவிடத்திலும் காலவெள்ளத்திலும் பாய்கிறது.துன்புறுவோரைத் தாங்குவதே முருகனது மதக்கொள்கை. அவனது திருவடிகளின் நோன்பும் அதுதான். துன்பத்தைப் போக்கும் அவன் செயலை எதிர்த்தவர்களை அத்திருவடிகள் மிதித்துத் தேய்க்கும். மழைபோன்று உதவுவது அவனது கைகள். களங்கமில்லாத கற்புநெறியினளாகிய தெய்வானைக்கு அவன் கணவன்.

குறிப்பு:

வலன் ஏர்பு - அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1

கடப்பமாலை புரளும் மார்பினன் (7-11)
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .(10)

உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் . . . .(7 - 11)

பொருளுரை:

சூலுற்ற மழைமேகங்கள் வானத்தில் வாள்போல் மின்னி வளம்தரும் மழைத்துளிகளைப் பொழியும். கோடைக்குப் பிறகு பெய்யும் அந்த முதன்மழையால் கானம் இருண்டு பசுமையாகும். வெண்கடம்பு மரங்கள் தழைத்துப் பூத்துக் குலுங்கும். அப்பூக்களே முருகன் மார்பில் புரளும் தார்மாலைகள்.

குறிப்பு:

கமம் - நிறைவு. கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57). கார்கோள் (7) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - காராலே கொள்ளப்படுவது எனும் பொருட்டு, கார் = முகில், கோள் - கொள்ளப்படுவது.

சூரர மகளிரின் இயல்பு (12-41)
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி,
கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள்,
கோபத் தன்ன தோயாப் பூந்துகில், . . . .(15)

பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்,

பொருளுரை:

பசுமையால் ஆசைமூட்டி மலையுச்சி இருண்டு கிடக்கும். அங்கே சூரர மகளிர் ஆடுவர். அவர்களுக்குக் கிண்கிணி (கொலுசு) கௌவிக் கிடக்கும் சிறிய அடிகள். கணையமரம்போல் உறுதியான கால்கள். வளைந்த இடுப்பு. பெருமை கொண்ட தோள். தொய்வு இல்லாமல் ஆடுவதற்கு வசதியாக அவர்கள் இடையில் உடுத்தியிருந்த வெல்வெட்டுப் பூந்துணி கோபம் என்னும் தம்பலப் பூச்சிபோல் சிவந்திருக்கும். அதன்மேல் காசுவரிசை தொங்கும் சில்காழ் என்னும் சிறிய நடன-இடுப்பணி இருக்கும். இது அவர்களது அல்குலை மறைத்துத் தொங்கிக்கொண்டு ஆடும்.

கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை,

பொருளுரை:

அவர்களின் மேனி கைபுனைந்து இயற்றாக் கவின்பேர் அழகினை யுடையது. எனினும் அந்த இநற்கை அழகுக்குமேல் மணிநாவல் என்னும் பொன்னணி அணிந்திருந்தனர். நாவல்பழ நிறத்தில் மணிக்கற்கள் பொன்னில் பதிக்கப்பட்டிருந்ததால் அது மணிநாவல் எனப்பட்டது. அதன் ஒளி தொலைதூரத்திலும் மின்னியது.

சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி,
துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .(20)

செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்

பொருளுரை:

சூரர மகளிரின் மாசில்லா மேனியானது தொலைவினைக் கடந்து ஒளி வீசிக்கொண்டிருந்தது. நெருக்கமான ஈர மினுமினுப்புக் கொண்ட அவர்களது கூந்தலை அவர்களுக்குத் துணையிருக்கும் தோழிமார் ஆய்ந்து ஒப்பனை செய்திருந்தனர். வெட்சிச் செடியில் பூத்த சிவந்த காம்பையுடைய மலர்களையும் நீரில் பசுமையான கொடித் தாளினையுடைய குவளைப் பூக்களில் கிள்ளிய இதழ்களையும் தெய்வ உந்தியையும் வலம்புரியையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் இருக்கும்படிக் கூந்தலின்மேல் அணிவித்திருந்தனர்.

மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் . . . .(25)

துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்டு
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்

பொருளுரை:

உலர்ந்த மயிரில் உச்சிக் கொண்டை என்னும்படி மகரப் பகுவாய் என்னும் பொன்னணித் தலைப்பூவைக் காதுகளுக்கு மேல் பின்புறம் தாழும்படி தலைமுடியில் திருகிப் பொருத்தி யிருந்தனர். மேலும் குளுமைதரும் சண்பகப்பூவைச் செருகியிருந்தனர். மருதம்பூக் கொத்தை மாட்டியிருந்தனர்.

கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு . . .
இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக . . . .(30)

வண்காது நிறைந்த பிண்டி ஒண்டளிர்

பொருளுரை:

கிளைத்துப் பூக்கும் கீழ்நீர் அரும்புகளை இணைத்த பிணையலையும் அசோகந் தளிரினையும் காதுகளுக்குத் துணை என்னும்படி அவர்கள் அணிந்திருந்தனர்

நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் . . . .(35)

வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர

பொருளுரை:

நெஞ்சில் சந்தனம். அது வயிரம் பாய்ந்த சந்தனக் கட்டையைப் பூப்போல் தேய்த்து உருவாக்கப்பட்டது. அங்கே கோங்கம்பூப் போன்ற இளமுலை. அதில் மருதம்பூவின் நுண்தாது கொட்டிக்கிடப்பது போல் சந்தனம் அப்பிக் கிடந்தது. அதன் மேல் வேங்கைப் பூவின் நுண்ணிய தாதுகளும் அப்பப்பட்டிருந்தன. அது கண்ணுக்கினிய கவர்ச்சியைத் தந்தது.

வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
'கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென்று ஏத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி . . . .(40)

சூரர மகளிர் ஆடும் சோலை . . . .(12 - 41)

பொருளுரை:

விளாமரத் தளிர்களை (அல்லது வில்வத் தளிர்களை)ப் பறித்துப் போட்டுப் பூசை செய்துகொண்டு அவர்கள் ஆடினர். கோழி ஓங்கிய வெற்றிக்கொடி வாழிய.. என்று பலவாறாகப் பலரும் கூடிப் புகழ்ந்து பாடிக்கொண்டே ஆடினர். சூரர மகளிரின் இந்த ஆட்டமும் பாட்டும் மலையெல்லாம் எதிரொலித்தது.

குறிப்பு:

கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 - மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 - கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 - முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 - முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 - கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 - கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 - தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 - யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. நாவலொடு பெயரிய பொலம்புனை (18) - போ. வே சோமசுந்தரனார் உரை - சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர் (வடமொழி). நாவற் கனிச்சாறு பாயும் சம்பு நதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கைப் பற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சம்பூநதம் என்ப. பொலம் (18) - பொன். பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 355). மண்ணுறுத்து (25) - போ. வே சோமசுந்தரனார் உரை - தங்கச் செய்து, நச்சினார்க்கினியர் உரை - ‘ஆவுதி மண்ணி’ என்றாற்போல கொள்க. இனி ‘கழுவி’ என்றுமாம். நறுங்குறடு (33) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கட்டை. ஈண்டுக் குறிப்பாற் சந்தனக் கட்டையை உணர்த்திற்று. தெறியா - தெறித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

காந்தளின் கண்ணி சூடிய சென்னியன் (42-44)
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன். . . .(42 - 44)

பொருளுரை:

முருகன் காந்தள் மலர் மாலையைத் தலையில் அணிந்திருப்பான். அந்தப் பூக்கள் மந்தியும் அறியாத மரமடர்ந்த மலையடுக்குப் பகுதியில் வண்டுகளும் மொய்க்க முடியாமல் மிகுதியாகப் பூத்துக் கிடப்பவை. (முருகனைக் காந்தளங் கண்ணிச் சென்னியன் என்று சொல்லிப் பாராட்டினர்)

குறிப்பு:

அகநானூறு 92 - மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின், நற்றிணை 194 - மந்தியும் அறியா மரம் பயில், திருமுருகாற்றுப்படை 42 - மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து.

முருகன் சூரனைத் தடிந்த வகை (45-46)
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச். . . .(45)

சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல். . . .(45 - 46)

பொருளுரை:

கடலின் உள்ளே சென்று சுடர்வீசும் இலைபோன்ற தன்வேலை வீசிச் சூரபனமனின் குல முதலையே கொன்றழித்த கொற்றவன் என்று போற்றினர்.

பேய்மகளின் துணங்கைக் கூத்து (47-56)
உலறிய கதுப்பின் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு. . . .(50)

உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்

பொருளுரை:

அஞ்சுவரு பேய்மகளின் அலங்கோலம் பரட்டையாய்க் கிடக்கும் தலைமயிர்.வரிசை மாறிப் பிறழ்ந்திருக்கும் பல்.பிளந்த வாய்.சுழலும் விழிகள்.பசுமை நிறக் கண்ணில் சுட்டெரிக்கும் பார்வை.கோட்டானும் பாம்பும் தொங்கும் முலை முகடுகள்.நீண்ட காதுகளும் முலை முகடுகளில் தொங்கின. அச்சம் தரும் நடையும் தோற்றமும் கொண்டவள்.

குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா. . . .(55)

நிணம்தின் வாயள் துணங்கை தூங்க. . . .(47 - 56)

பொருளுரை:

போரில் வீழ்ந்தவர்களின் கணகளைத் தோண்டி உண்டதால் குருதி படிந்திருக்கும் விரல் நகங்களைக் கொண்டவள். கண்ணைத் தோண்டிய பின்னர் கழிமுடை நாற்றமடிக்கும் தலையைக் கையில் ஏந்திக்கொண்டு அவள் ஆடுகிறாள். அவளது கைகளிலே வளையல்கள் அந்தக் கைகள் தலையை ஏந்திக் கொண்டிருப்பதால் தோளைப் புடைத்துக் கொண்டு அவர்கள் துணங்கை ஆடுகின்றனர். சூரபதுமனை வென்றழித்த போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடிக்கொண்டே பேய்மகளிர் துணங்கை ஆடுகின்றனர்.

குறிப்பு:

கழி (53) - மிகுதிப் பொருள் குறித்து நின்ற உரிச்சொல். கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும் (தொல்காப்பியம், உரியியல் 16). பெயரா - பெயர்த்து (நகர்த்தி) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

மாமரத்தை வெட்டிய வெற்றி (57-61)
இருபே ருருவின் ஒருபே ரியாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக் கவிழிணர்
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து . . . .(60)

எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் . . . .(57 - 61)

பொருளுரை:

முருகன் தன் ஒரே ஒரு பேருடம்பில் இருபேர் உருவங்களில் காட்சி தருபவன். ஒன்று ஆண்டிக் கோலம். மற்றொன்று ஆறுமுகக் கோலம். கவிழ்ந்த இலைகளையுடைய மாமரமாகி நின்ற அவுணர் கொட்டம் அடங்க அம்மாமரத்தை முருகன் வேரோடு வெட்டிச் சாய்த்தான். செவ்வேலை வீசிப் பெற்ற இக்கொற்றம் குறையாத புகழைக் கொண்டது. அவன் சேய்.

ஆற்றுப்படுத்தல் (62-66)
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின், பலவுடன்
நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப . . . .(65)

இன்னே பெறுதிநீ முன்னிய வினையே . . . .(62 - 66)

பொருளுரை:

அவனது திருவடிகளாகிய கொழுகொம்புகளைப் பற்றிக்கொண்டு படரும் உள்ளம் இருந்தால் அது நல்லதை விரும்பும் கொள்கையாகும். அதற்கு நீ உனது புல அறிவைப் பிரிந்து அவன் நினைவாகவே வாழ வேண்டியிருக்கும். அவன் குடிகொண்டுள்ள இடங்களுக்கு நீ செல்ல விரும்பினால் உன்னுடைய நெஞ்சத்தில் அந்த ஆசை நன்றாக வலுக்கட்டும். நினைத்ததை உடனே செயல் படுத்துவாயாக.

திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல் (67-77)
செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து . . . .(70)

மாடமலி மறுகின் கூடற் குடவயின்

பொருளுரை:

போரை விரும்பி ஆடவர் உயர்த்திய கொடிகள் மதுரையில் எப்போதும் பறந்துகொண்டேயிருக்கும். மகளிர் பந்தும் பாவையும் விளையாடிக் கொண்டிருப்பர். போரிட்டோரைத் தேய்த்துத் தேய்த்துப் போரிடுவர் இல்லாமல் போனதால் செல்வத் திருமகள் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருப்பாள். இப்படிப்பட்ட கடைத்தெருக்களும் மாடமறுகுகளும் கூடியிருப்பதுதான் கூடல் எனப்படும் மதுரை

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் . . . .(75)

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று . . . .(67 - 77)

பொருளுரை:

மதுரைக்கு மேற்கில் வளமான வயற்பகுதி. அந்த அகன்ற வயலின் சேற்றில் அவிழ்ந்து கிடப்பவை தாமரை மலர்கள். (முருகனை வழிபடும் ஆடவர் கண்களைப் போல அந்தத் தாமரை மலர்கள்.) ஆங்காங்கே சுனைகள். சுனைகளில் நெய்தல் பூக்கள். (முருகனை வழிபடும் மகளிர் கண்களைப் போல நெய்தல் பூக்கள்.) வண்டுகள் தாமரைப் பூவிலும் நெய்தல் பூவிலும் மாறி மாறி அமர்ந்து காமம் மருவிக் கனத்துக் கிடக்கும். வைகறை விடியலில் தாமரையிலும், பொழுது போன மாலை வேளையில் நெய்தலிலும் கள் அருந்தும். அவ் வயலை அடுத்த குன்றில் குடியிருத்தலும் அம் முருகனுக்கு உரியது. அதுவன்றி…

குறிப்பு:

வரிப் பந்து - நற்றிணை 12 - வரி புனை பந்தொடு - பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை, ஒளவை துரைசாமி உரை - வரிந்து புனையப்பட்ட பந்தொடு, திருமுருகாற்றுப்படை 68 - வரிப் புனை பந்தொடு - பொ. வே. சோமசுந்தரனார் உரை - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், நச்சினார்க்கினியர் உரை - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தோடு, கலித்தொகை 51 - வரிப் பந்து - நச்சினார்க்கினியர் உரை - வரியினையுடைய பந்து, பரிபாடல் 9 - வரிப் பந்து - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வரியினையுடைய பந்து, பெரும்பாணாற்றுப்படை 333 - வரிப்பந்து - பொ. வே. சோமசுந்தரனார் உரை - நூலால் வரியப்பட்ட பந்து.

2. திருச்சீர் அலைவாய் (திருச்செந்தூர்)
குமரவேளின் பெருமை
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல் (78-82)
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்...... . . . .[80]

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு . . . .[78 - 82]

பொருளுரை:

கூற்றம் போல் முருகனின் யானை விரைந்து நடக்கும். அப்போது இருமருங்கிலும் தொங்கும் மணி ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த வேழம் வலிமையில் புயல் காற்று கிளர்ந்து வீசுவது போன்றது. அம்பின் நுனி குத்தி ஆறிய வடுக்களைப் புள்ளிகளாகக் கொண்ட நெற்றியை உடையது. நெற்றியில் வாடா மாலையும், ஓடை என்னும் அணிகலனும் அதற்கு உண்டு. இத்தகைய யானைமேல் முருகன் காட்சி தந்தான்.

ஆறு முகங்களின் இயல்புகள் (83-103)
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப . . . .(85)

பொருளுரை:

முருகன் தன் தலையில் முடி சூடிக்கொண்டிருந்தான். அந்த முடியில் ஐந்து முகப் பட்டை தீட்டிய திருமணி பதிக்கப்பட்டிருந்தது. பொன்முடியில் நீலநிற மணியின் ஒளி முரணியிருந்தது. (பொன்னிறத்தில் நீலநிறம் முரண்) இது அவன் தலைக்குப் பொலிவைத் தந்தது. (அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். என்று இப்பாடலின் இறுதியில் வரும் வெண்பாவுக்குப் பொருள் கொள்ளும்போது அஞ்சுமுகம் என்பதற்கு இந்த ஐந்து பட்டை மணியையும் கொள்ளலாம்.)

நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்

பொருளுரை:

வகைப்படுத்திப் பொன்னால் செய்த குழைகளை அவன் தன் காதுகளில் அணிந்திருந்தான். அவை சிரித்த வண்ணம் தொங்கி ஆடிக் கொண்டிருந்தன. அவனது முக வான மதியத்தைச் சூழ்ந்து அகலாதிருக்கும் விண்மீன் கூட்டம் போல் குழைமணிகளும் முடிமணிகளும் ஒளியுடன் விளங்கின.

தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே . . . .(90)

பொருளுரை:

ஒளி பொருந்திய அவன் முகம் நம் மனவயலை உழுது தன் அழகைக் காட்டி எழுச்சி ஊட்டிக்கொண்டிருக்கிறது. யாருக்கும் துன்பம் தரக்கூடாது என்னும் தன் கொள்கைக்கு ஏற்பத் தொழிற்பட்டு நம் எண்ணத்தை முடித்துத் தர அவன் முகம் மலர்ந்துகொண்டிருக்கிறது.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்; ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே; ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ . . . .(95)

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே; ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே; ஒருமுகம் . . . .(100)

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின் . . . .(83 - 103)

பொருளுரை:

பேருலகம் களங்கம் இல்லாமல் விளங்குவதற்காக ஒருமுகம் கதிரொளிகள் பலவற்றைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. (வெப்பொளி) ஆர்வம் கொண்டவர்கள் புகழ்வதால் விருப்பத்தோடு மழைபோல் ஒஉகி அவர்களுக்குத் தன்மீது உள்ள காதலாலும் மகிழ்ந்து அவர்களுக்கு ஒருமுகம் வரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. (வரம்) மரபிலிருந்து வழுவாத அந்தணர் மந்திரம் சொல்லிச் செய்யும் வேள்வியை ஒருமுகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. (உதவி) இருளில் ஒளிதரும் திங்களைப் போல ஒருமுகம் பிறவற்றை யெல்லாம் விளங்கும்படி செய்து கொண்டிருக்கிறது. (தண்ணொளி) எதிர்ப்போரைப் போரிட்டு வென்று ஒருமுகம் களவேள்வி செய்து கொண்டிருக்கிறது. (வீரம்) களவு மனைவி வள்ளியைப் பார்த்து ஒருமுகம் சிரித்துப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறது. (காதல்) இது முருகனின் அறுகோணப் பார்வை

குறிப்பு:

களவேள்வி-திருமுருகாற்றுப்படை 100 - கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே - ஒளவை துரைசாமி உரை - இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம். புறநானூறு 26 - அடு போர் வேட்ட வடுபோர்ச் செழிய, புறநானூறு 372 - புலவுக் களம் பொலிய வேட்டோய், அகநானூறு 36-22, கொன்று களம் வேட்ட ஞான்றை, மதுரைக்காஞ்சி 128-130 - களம்வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே, திருமுருகாற்றுப்படை 100 - களம் வேட்டன்றே ஒரு முகம். களம் வேட்டன்றே (100) - ஒளவை துரைசாமி உரை புறநானூறு பாடல் 372 - இவ்வாறு முருகன் களவேள்வி செய்து காட்டியது கொண்டு பின் வந்த வெற்றி வேந்தர் பலரும் இக்களவேள்வி செய்தொழுகினர் என அறியலாம்.

பன்னிரு கைகளின் தொழில்கள் (104-118)
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு . . . .(105)

வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

பொருளுரை:

சந்தனப் பூச்சோடு முத்தாரம் தொங்கும் அவன் மேனியில் செம்புள்ளிகள் காணப்பட்டன. அவை அவன் வாங்கிக் கொண்ட தழும்புகள். வளம் மிக்க அவனது இரண்டு தோள்களில் பன்னிரண்டு கைகள்.

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .(110)

ஐயிரு வட்டமொடு எஃகுவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை . . . .(115)

நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற . . . .(104 - 118)

பொருளுரை:

மாம்பழத்திற்காக விண்ணில் சென்று வந்தபின் ஒருகை தன் அண்ணனிடம் ஏந்தியது. ஒருகை தன் தலையின்மேல் வைத்துக் கொண்டிருக்கிறது. ஒருகை தன் தொடை ஆடையின்மேல் உள்ளது. ஒருகை தன் யானைமேல் அங்குசத்தை வீசிக்கொண்டிருக்கிறது. ஒருகையில் வேல். ஒருகையில் பதின்மடி விசிறி. மார்பில் ஒருகை. ஒருகையில் மாலை. ஒருகையில் வளையல். ஒருகையில் மணி. ஒருகை மழை பொழிகிறது. ஒருகை தன்முன் நடனமாடும் வானர மகளிர்க்கு மணமாலை சூட்டிக் கொண்டிருக்கிறது.

குறிப்பு:

ஒரு கை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட (117): நச்சினார்க்கினியர் உரை - வள்ளியோடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்தலாகலின், அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துவதற்கு மழையை பெய்வித்தது ஒருகை; ஒருகை தெய்வ மகளிர்க்கு மணமாலையைச் சூட்ட, பொ. வே. சோமசுந்தரனார் உரை - இத் திருக்கையின் செயல் உலகின்கண் இல்லறம் நிகழ வேண்டி குறவர் மடமகளோடு நகையமர்ந்த திருமுகத்தின் செயலுக்குப் பொருந்துமாறு உணர்க.

அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி (119-125)
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல . . . .(120)

உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று . . . .(119 - 125)

பொருளுரை:

இப்படிப் பன்னிரண்டு கைகளும் பல்வேறு செயல்களைச் செய்து கொண்டிருக்கும்போது அவனைச் சுற்றிப் பல முழக்கங்கள் எழுகின்றன. கொம்பு சங்கு முரசம் முதலான பல்வேறு இசைக் கருவிகள் முழங்குகின்றன. அவனது கொடியிலிருக்கும் மயில் அகவுகிறது. இவற்றிற்கு இடையே திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரிலிருந்து விசும்பு வழியாக விரைந்து செல்ல அவன் திட்டம் தீட்டுகிறான். அவன் செல்வதற்கு முன் நீ அவனிடம் சென்றால் அவனது அருளைப் பெற்று விடலாம். அதுவன்றி…

3. திருவாவினன்குடி (பழநி)
குமரவேளின் பெருமை
முன் செல்லும் முனிவரது இயல்புகள் (126-137)
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல். . . . .(130)

பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை . . . .(135)

யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புக . . . .(126 - 137)

பொருளுரை:

முனிவர்கள் காவியில் தோய்த்த மரநிற ஆடையை உடுத்திருந்தனர். அவர்களின் தலைமுடி வலம்புரி நிறம்போல சீராக வெளுத்திருந்தது. யாரையும் குற்றம் காணாத பார்வையும் யாரும் குற்றம் காண முடியாத உருவமும் கொண்டிருந்தனர். தைத்த மான்தோலை அணிந்திருந்த அவர்கள் ஊன் வற்றி எலும்பு தெரியும் மார்புடன் காணப்பட்டனர். நண்பகல் உணவும் பலநாள் இல்லாமல் சிலநாட்களில் மட்டுமே உண்டனர். அவர்கள் பிறரோடு மாறுபாடு இல்லாத பிறர்மீது சினம் கொள்ளாத மனத்தினர். கற்றோரும் இவர்களைப்பற்றி எதனையும் அறிய முடியாத பேரறிவினர். கற்றவர்களுக்கு எல்லை கட்டிய தலைவர்கள். காமத்தையும் கடுஞ்சினத்தையும் விலக்கிக் கட்டிவைத்த பண்புடன் காட்சி தருபவர். துன்பம் எதையுமே அறியாது இன்பமாகக் காணும் இயல்புடையவர். இவர்கள் எல்லாரையும் விரும்புவதால் பிணக்கின்றிக் காட்சி தருபவர். இவர்கள் முருகன் உலாவரும்போது முன்னே சென்றனர்.

மேவலர் இயல்பு (138-142)
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் . . . .(140)

நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்பு உளர . . . .(138 - 142)

பொருளுரை:

வெண்புகையை முகந்து வைத்தது போல் தூய ஆடையை மகளிர் உடுத்தியிருந்தனர். அவர்களின் நெஞ்சு முகடுகள் மொட்டுகள் போல் இல்லை. வாய் விரிந்த மொட்டைப் போல அவிழ்ந்து கிடந்தன. யாழின் திவவு காதைப்போல் வளைந்திருக்கும். அந்த யாழ்த்திவவு போல் அவர்களின் நெஞ்சு கூனியிருந்தது. அவர்கள் மென்சொல் நவில விரும்பினர். முடியவில்லை. யாழின் நரம்பு போல் ஒலிதான் வந்தது.

பாடும் மகளிர் இயல்பு (143-147)
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் . . . .(145)

பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்க . . . .(143 - 147)

பொருளுரை:

நோயில்லாத உடலிலேயே இந்த நிலை. மேனி மாந்தளிர் போல் இருந்தது. அதில் பொன்னை உரைத்த கல்லைப் போலத் திதலைநிறம் பூத்திருந்தது. வாயிலே இனிய புன்சிரிப்பு. பணிந்து உயர்ந்த பெண்ணுறுப்பைப் பருமம் என்னும் ஆடை மூடியிருந்தது. இத்தகைய மாசு மறுவற்ற மகளிர் முருகனைச் சூழ்ந்து வந்தனர்.

குறிப்பு:

பணிந்தேந்து அல்குல் (146) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தாழ வேண்டியவிடம் தாழ்ந்து உயர வேண்டியவிடம் உயர்ந்த அல்குல்.

திருமால், சிவன், இந்திரன், ஆகியோரின் இயல்புகள் (148-159)
கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . . .(150)

புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு

பொருளுரை:

பாம்புப் பல்லின் துளையில் நஞ்சு ஒடுங்கியிருக்கும். பாம்பு தீயைப் போல் பெருமூச்சு விடும். கண்டவுடன் மக்கள் அஞ்சி ஒதுங்கும் திறம் கொண்டது பாம்பு. இத்தகைய பாம்பை உணவுக்காகக் கொல்லும் திறம் படைத்ததாய்க் கழுத்தும் வயிறும் வெளுத்திருப்பது கருடப் பறவை. இதனைக் கொடியாகக் கொண்டவன் திருமால்.

வலைவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்

பொருளுரை:

வெள்ளைக் காளைமாட்டுக் கொடியை வெற்றிச் சின்னமாக உயர்த்திப் பிடித்துக் கொண்டிருப்பவன் சிவபெருமான். பலரும் புகழும் அவனது வலிமை மிக்க தோள்களில் ஒன்றை அவன் மனைவி விரும்பிப் பெற்று விளையாடுகிறாள். அவன் மூன்று கண் கொண்டவன். விண்ணில் பறக்கும் மூன்று கோட்டைகளை அரசோடு அழித்தவன்.

நூற்றுப்பத்துஅடுக்கியநாட்டத்துநூறுபல் . . . .(155)

வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், . . . .(148 - 159)

பொருளுரை:

இந்திரன் ஆயிரம் கண்ணை உடையவன். நூற்றூக் கணக்கான வேள்விகளில் வெற்றி கண்டு நான்கு தந்தம் கொண்ட யானையைப் பெற்று அதன்மீது ஏறி அழகொளி வீசிக்கொண்டு செல்பவன். அவனது யானையின் துதிக்கை மிகவும் நீளமாகத் தாழ்ந்திருக்கும்.

பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள் (160-168)
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய . . . .(160)

உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவ ராக

பொருளுரை:

திருமால், சிவன், இந்திரன், பிரமன் என்போர் நான்கு பெருந்தெய்வங்கள். திருவாவினன்குடியில் இவர்களுக்குக் கோயில்கள் இருந்தன. பலராலும் புகழப்படும் மேலே சொன்ன நால்வரும் ஒத்த கருத்துடையராய் உலகினைக் காப்பாற்றி வருகின்றனர். இவர்கள் தலைவர்கள்.

ஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வர . . . .(165)

பொருளுரை:

நான்முகன் என்னும் பிரமன் உலகில் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றியவன். காலத்தைப் படைத்தவன். ஆதலால் அவன் ஊழிமுதல்வன். இவனைச் சுட்டிப் பெயர் சொல்லி அழைத்தனர். இவன் வந்தான். இவனது மேற்பார்வையில் பழனியில் முருக வழிபாடு நடை பெற்றது.

பகலிற் றோன்றும் இகலில் காட்சி
நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் . . . .(160 - 168)
தேவர்கள் வருகின்ற காட்சி (169-174)
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் . . . .(170)

தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிந்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் . . . .(169 - 174)
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல் (175-176)
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் . . . .(175)
ஆவினன்குடி அசைதலும் உரியன், அதான்று, . . . .(175 - 176)

பொருளுரை:

அவனைக் காண வருவோர் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் ஒன்றாகக் கூடிக் கண்டு களித்தனர். முருகனும் பாகுபாடோ வேறுபாடோ இல்லாமல் காட்சி தந்து கொண்டிருந்தான். மக்களிடம் நால்வேறு இயற்கைப் பாங்குகள் உண்டு. (மனம், மொழி, செயல், இயல்பு - என்பன அவை.) 11 வகைத் தேவர் (மருத்துவர்), 18 வகைத் தேவர் என்னும் பாகுபாடுகளும் உண்டு. எல்லாருமே உயர்நிலை உலகம் பெறுவதற்காக வானத்தில் மீன் பூத்திருப்பது போல் தோன்றி மருகனை வழிபட்டனர். இவர்கள் காற்றைப்போல் விரைந்து செல்லக் கூடியவர்கள். தீயைப்போல் அழிக்கும் திறம் பெற்றவர்கள். முருகன் பெயரை மின்னலில் தோன்றும் இடியைப்போல் முழங்கினர். வரிசை முறையில் காத்திருந்து தம் குறையைச் சொல்லி வரம் பெற வேண்டி அந்தரத்திலும் சுழன்று வந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கெல்லாம் தன் மனைவியோடு காட்சி தந்தவண்ணம் மருகன் ஆவினன்குடியில் சிலநாள் அசைந்தாடும் உரிமையும் உடையவன். அதுவன்றி…

4. திரு ஏரகம் (சுவாமிமலை)
குமரவேளின் பெருமை
இரு பிறப்பாளரின் இயல்பு (177-182)
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . . .(180)

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல, . . . .(177 - 182)
அந்தணர் வழிபடும் முறை (183-189)
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து . . . .(185)

ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று, . . . .(183 - 189)

பொருளுரை:

இருபிறப்பாளர் வழிபாடு இங்குச் சிறப்பு மிக்கது. இவர்கள் அறுவகைப்பட்ட சமய நெறிகளிலிருந்து வழுவாதவர்கள். சிவன் பெருமாள் என்று இருவரை வழிபடும் பல்வேறு தொல்குடியைச் சேர்ந்தவர்கள். 48 ஆண்டு இளமையை இல்லறத்தில் கழித்த பின்னர் அவர்கள் அறம் சொல்லி முத்தீ வளர்க்கும் கொள்கையில் மூன்று வகைக் குறிக்கோள் உண்டு. இறந்தோருக்கும் இறைவனுக்கும் உணவு சமைப்பதே முத்தீ. பூணூலுக்குமுன் பூணூலுக்குப்பின் என்று அவர்களுக்கு இரண்டு பிறப்புக்கள் உண்டு. முப்புரிநூல் ஒன்பது கொண்டது அவர்களின் பூணூல். இவர்கள் நல்லநேரம் பார்ப்பவர்கள். ஈர ஆடையை உடுத்திக்கொண்டு புலரவிடுபவர்கள். உச்சியில் கைகளைக் கூப்பித் தாம் வழிவழியாகச் சொல்லக் கேட்ட ஆறெழுத்து மந்திரத்தைத் தாமும் சொல்லி முருகனைப் புகழ்ந்து வாய்விட்டுப் பாடுவர். மணம் மிக்க மலர்களைத் தூவிப் பூசை செய்வர். இதனை விரும்பி முருகன் ஏரகத்தில் வாழ்தலும் உண்டு. அதுவன்றி…

5. குன்றுதோறு ஆடல் (திருத்தணி)
குமரவேளின் பெருமை
குரவைக் கூத்து (190-197)
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் . . . .(190)

அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கள் தேறல் . . . .(195)

குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர . . . .(190 - 197)

பொருளுரை:

வேலன் (அடி 190) என்பவன் சாமியாடி அவன் பூக்கண்ணியைத் தலையில் அணிந்திருந்தான். பூக்கூடையில் கொண்டுவந்த குளவி வெண்கூதாளம் ஆகிய பூக்களுக்கிடையே நறைக்காயை இடையிலே வைத்துத் தொடுத்த கண்ணி அது. மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். இனிப்புக் கள்ளாகிய தேறலைத் தன் குன்றகச் சிறுகுடியிலுள்ள சுற்றத்தாருடன் சேர்ந்து உண்ட களிப்போடு தொண்டகச் சிறுபறை முழக்கத்துடன் குரவை ஆடினான். தேறல் கானவரின் மூங்கில் குழாயில் விளைந்தது. விலங்குகளை வேட்டையாடும்போது செய்யும் கொடுந்தொழிலை மறக்கக் கானவர் குடிக்கப் பயன்படுத்தும் தேறல் அது

குறிப்பு:

மூங்கிலில் விளைந்த கள்: நற்றிணை 276 - வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு, அகநானூறு 348 - ஆடு அமைப் பழுநிக் கடுந்திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி, அகநானூறு 368 - அம் பணை விளைந்த தேன் கண் தேறல், பதிற்றுப்பத்து 81 - தூம்பு அகம் பழுனிய தீம் பிழி, திருமுருகாற்றுப்படை 195 - நீடு அமை விளைந்த தேக்கண் தேறல், மலைபடுகடாம் 171 - வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், மலைபடுகடாம் 522 - திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல். வேலன் - நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 - பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை (198-217)
விரலுளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் . . . .(200)

முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு . . . .(205)

பொருளுரை:

வேலனுடன் சேர்ந்து மகளிரும் குரவை ஆடினர். அவர்கள் தம் கூந்தலை விரல்களால் கோதி உலர்த்திக் கொண்டனர். காட்டிலும் சுனையிலும் பூத்த பூமாலைக் கண்ணியைத் தலையில் சூடிக் கொண்டிருந்தனர். அணைத்துப் பின்னிய அவர்களின் கூந்தலானது பூங்கோதை இணைத்துப் பின்னப்பட்டிருந்தது. குல்லாத்தழை பூத்திருக்கும் வெண்கடம்பு, மரத்தளிர், மாந்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டிய தழையாடையை அவர்கள் தம் அல்குல் மறைய உடுத்தியிருந்தனர். வண்டு மொய்க்கும் நிலையில் அந்தத் தழையாடை புத்தம் புதிதாக இருந்தது. மயில் போன்ற அவர்களின் மடநடையோடு சேர்ந்து வேலன் குரவை ஆடினான்.

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் . . . .(210)

கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி . . . .(215)

மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று, . . . .(198 - 217)

பொருளுரை:

சிவந்த மேனி சிவந்த ஆடை செயலையந்தளிர் ஆடும்காது இடுப்பில் கச்சு காலில் கழல் தலையிலே வெட்சிப்பூக் கண்ணி குழைந்திருக்கும் தலைமயிர் கொம்பு முதலான பல சிறு இசைக்கருவிகளைக் கொண்ட தோள் செம்மறியாட்டுக் கடாமீதும் மயில்மீதும் ஏறிய ஆட்டம் சேவல்கொடி உயர்ந்த உருவம் தொடி அணிந்த தோள் யாழ் போன்ற குரலால் பலரும் பாடும் பாட்டு உடம்பெல்லாம் புள்ளி போட்டுக் கொண்டிருக்கும் மேனி குதிபுரள இடுப்பில் கட்டிய ஆடை கை அடிக்கும் முழவோசைக் கேற்ப அடியெடுக்கும் நடை இப்படிப்பட்ட நிலையில் வேலனோடு சேர்ந்து கொண்டும் மகளிரின் தோளைத் தழுவிக் கொண்டும் தலைமையேற்று முன்னே நின்றுகொண்டும் குன்றிருக்கும் இடமெல்லாம் கூடியாடி நிற்றலும் அவன் பண்பாகும்.

6. பழமுதிர்ச் சோலை
குமரவேளின் பெருமை
முருகன் இருப்பிடங்கள் (218-226)
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும், . . . .(220)

ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்,
வேலன் தைஇய வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும், . . . .(225)

மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும் . . . .(218 - 226)

பொருளுரை:

பழமையான முதிர்ந்த மலைசார் சோலைகள் தினையையும் மலரையும் கலந்து தூவி கடா அறுத்து சேவல்கொடி கட்டி ஆங்காங்கே ஊருக்குஊர் கொண்டாடும் சிறப்புமிக்க விழா. ஆர்வம் கொண்டோர் புகழ்வதை விரும்பி அவர்களுக்குக் காட்சிதரும் நிலை வேலன் வெறியாட்டம் நிகழும் களங்கள் இயற்கையான காடுகள் நட்டு வளர்த்த காடுகள்(கா) ஆறு வளைவதால் துருத்தித் கொண்டிருக்கும் துருத்தி நிலம் ஆறு குளம் வளைநிலம் ஊர்மேடை தெரு முட்டுமிடம் பூத்திருக்கும் கடம்ப மரத்தடி பொதுமக்கள் விளையாடும் மன்றம் பொதுமக்கள் கூடிப்பேசும் பொதியில் நிழலுக்காக அமைத்த தூண் மண்டபங்கள் ஆண்டலை என்னும் போர்ச்சேவல் கொடிநட்ட இடம் முதலான இடங்களில் முருகன் ஆண்டாண்டு ஆங்காங்கு குடிகொண்டிருப்பான்.

குறிப்பு:

கந்துடை நிலையினும் (226) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கந்துடை நிலை என்றது, இறைவன் அருட்குறியாகக் கல் தறி நட்டியிருக்கும் இடத்தை, பண்டைக் காலத்தே இறைவணக்கம் செய்தற்பொருட்டுக் கல்தறி நட்டு அதனை வணங்கி வந்தனர். அக்கல்தறியே பிற்றை நாள் சிவலிங்க உருவமாகக் கொள்ளப்பட்டதென்று அறிக. வேலன் - நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 - பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேல் என்றார்.

குறமகளின் வெறியாட்டு (227-244)
மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர
நெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் . . . .(230)

செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் . . . .(235)

பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க . . . .(240)

உருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் . . . .(227 - 244)

பொருளுரை:

இந்த விழாவின்போது செய்யும் சடங்குகள் வெண்சிறு கடுகை நெய்யில் கலந்து முருகேறிய பெண்ணின்மேல் அப்பி மெனமையாகத் தேய்ப்பர்.(மசாஜ்) குடந்தம் என்னும் சொல் உடலை நன்றாக வளைத்துக் கூப்பிய கைகளால் வணங்குதலையும் மேருதண்ட முத்திரையையும் குறிக்கும். கைகளில் நான்கு விரல்களையும் மடக்கிப் பெருவிரலை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது தண்ட முத்திரை. இந்த முத்திரையில் கிடைப்பது ஆறு அங்குல உயரம். முருகனுக்கு ஆறுமுகம். முருகேறிய பெண்ணை இந்த இருவேறு நிலைகளில் மாறி இருக்கச் செய்தும் ஒப்பனையாடை உடுத்தச் செய்தும் முருகாற்றுப் படுத்துவர். முருகாற்றுப் படுத்தும் இடம் சிவப்பு நூலால் எல்லை கோலப் பட்டிருக்கும். வெண்பொறி சிதறப் பட்டிருக்கும். யானை இரத்தம் கலந்த அரிசி பலியாகத் தூவப்பட்டிருக்கும். முருகேறிய பெண்ணைப் பிரம்பால் தட்டுவார்கள். மஞ்சள் நீரையும் மணநீரையும் அவள்மீது தெளிப்பார்கள். எருக்கம் பூவை மாலையாகக் கட்டப் போடுவார்கள்.

குறிப்பு:

நச்சினார்க்கினியர் உரை - ஆண்தலைக் கொடி என்பது பாடமாயின் தலை ஆண்மகனின் தலையாகவும் உடல் புள்ளின் உடலாகவும் எழுதின கொடி என்க. உரு (244) - அச்சம். உரு உட்காகும் புரை உயர்வாகும். (தொல்காப்பியம், உரியியல் 4).

முருகனை வழிபடுதல் (245-249)
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் . . . .(245)

கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தனர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே . . . .(245 - 249)

பொருளுரை:

எதிரொலி கேட்கும் மலைப்பகுதியில் அமைக்கப்பட்ட அந்த முருகன் வீட்டை(குன்றுதோறாடல் என்னும் படைவீட்டை)வாழ்த்திப் பாடுவார்கள். மணப்புகை காட்டிக் குறிஞ்சிப்பண் பாடுவார்கள். அங்கே அருவி ஒலியுடன் இசைக்கருவி முழக்கமும் கேட்கும். அச்சம் தரும் பூக்களைத் தூவுவார்கள். செந்தினையில் குருதி கலந்து நடுக்கம் தரும் வகையில் பரப்புவார்கள். குறமகளின்மேல் முருகன் ஏறியிருப்பதாகக் கூறுவார்கள். இது மாறுபட்ட எண்ணத்தால் தோன்றிய அச்சம். இதனை ஆற்றுப்படுத்துவார்கள்.இது ஒருவகை முருகாற்றுப் படை. அச்சம் தரும்படி அமைக்கப்பட்ட களவீட்டில் இது நிகழும். இந்த வெறிக்களத்தில் சிலம்பை ஆட்டிக்கொண்டு பாடுவர். கொம்பு ஊதுவர். மணி அடிப்பர். போரில் புறமுதுகிடாத யானையை வாழ்த்திப் பாடுவர். அவரவர் விருப்பம் நிறைவேற வழிபாடு செய்வர். இத்தகைய வழிபாடு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கங் கெல்லாம் முருகன் வாழ்வது எல்லாரும் அறிந்த நெறியாகும்.

குறிப்பு:

பலவுடன் கோடு வாய் வைத்து (245-246) - கோடு பலவுடன் வாய் வைத்து என்று படிக்கவும். பிணிமுகம் (247) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பிணிமுகம் என்ற பட்டதையுடைய யானை. பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர். பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.

முருகனைக் கண்டு துதித்தல் (250-277)
ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக . . . .(250)

முந்துநீ கண்டுழி முகனமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி,
'நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ! . . . .(255)

ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ! . . . .(260)

மாலை மார்ப! நூலறி புலவி!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ! . . . .(265)

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபே ராள! . . . .(270)

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! . . . .(275)

போர்மிகு பொருந! குரிசில்!' எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது, . . . .(250 - 277)

பொருளுரை:

ஆங்காங்கே அவன் முந்துறக் கண்டால் அவன் புகழைச் சொல்லி ஏத்தவேண்டும். கையால் தொழுது பரவ்வேண்டும். அவன் காலில் விழுந்து வணங்கவேண்டும். இமயமலையில் நீலம் பூத்திருக்கும் சுனையாகிய சரவண பொய்கையில், ஐவருள் ஒருவராகிய வருணன் (இந்திரன் ?) தன் உள்ளங்கையில் ஏற்றுக்கொள்ள, முருகன் பிறந்தான். வானத்து விண்மீன்களில் கார்த்திகை மீனாக இணைந்து இடம் பெற்றிருக்கும் ஆறு மீன்களும் அவனைப் பெற்ற ஆறு தாய்மார் ஆயினர்.இப்படி ஆறாக அமர்ந்த செல்வனே! ஆங்கு எழுந்தருளியுள்ள கடவுளாகிய சிவபெருமானின் புதல்வனே! மலைமகளின் மைந்தனே! பகைவர்களின் கூற்றுவனே! வெற்றி தரும் கொற்றவையின் சிறுவனே! அணிச் சிறப்பினைக் கொண்ட பழையோளின் குழவியே! வானோர் வணங்கும் விற்படையின் தலைவனே! மணமாலை பூண்ட மார்பினை உடையவனே! எல்லா நூல்களையும் அறிந்த புலவனே! போரில் ஒருவனாகவே போரிட்டு வெற்றி காணும் மள்ள! அந்தணர்களின் செல்வமே! அறிவறிந்தோர் சொல்லின் மாலையாகித் திகழ்பவனே! காதல் மங்கையர்களுக் கெல்லாம் கணவன் ஆனவனே! வீர மைந்தர்களுக்கு ஏறு ஆனவனே! வேலேந்திய தடக்கையில் சால்பேந்திய செல்வனே! விந்த மலையைக்கொன்ற வெற்றியோடு விண்ணைத் தொடும் மலைக்கெல்லாம் தலைமை யுரிமை பெற்ற குறிஞ்சிக் கிழவ! பலரும் புகழும் நன்மொழிப் புலவர்க்கெல்லாம் ஏறே! இப்படி அரிய பல பேறுகளைப் பெற்றதால் முருகன் என்னும் பெரும்பெயர் பெற்று விளங்கும் பெரும்பெயர் முருக! விரும்பியவர்களுக்கு விரும்பியது தரும் புகழிசையின் பேராளனே! துன்புறுவோருக்கு அளிசெய்து துன்பம் போக்குவதற்கென்றே கையில் கங்கணப் பொலம்பூண் பூண்டுள்ள சேயோனே! மற்போரில் வென்று ஆடும்போது பரிசில் வேண்டுவோரை யெல்லாம் மார்பில் தாங்கும் உதவியுருவம் கொண்டு உயர்ந்து நிற்கும் வேளே! பெரியோரெல்லாம் போற்றிப் புகழும் பெரும்பெயர் இயவுளே! சூரபத்மா என்னும் அச்சக்காரனை அழித்த போர்வீரனே! அறிவுத் தலைவனாகிய குரிசிலே! என்றெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் போற்றிப் புகழ்ந்து நிறைவடையாதவனாய் இருக்கிறேன். உன்னை அளந்தறிதல் உயிரினமாகிய எங்களுக்கு இயலாத ஒன்று. எனவே உனது அடியை நினைத்து நாடி வந்திருக்கிறேன். உனக்கு ஒப்பானவர் யாரும் இல்லை என்றெல்லாம் சொல்லி விட்டு என் மனத்தில் இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்த முயன்ற போது…

கருதி வந்ததை மொழிதல் (278-281)
'நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!'எனக் . . . .(280)

குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் . . . .(278 - 281)

பொருளுரை:

முருகனுக்கு விழாவெடுக்கும் வெறிக்களத்தில் கூளியர் தமது தலைவனுக்கு விழா என்னும் பெருமிதத்தோடு தோன்றினர். அவர்கள் முருகனிடம் பரிந்துரை செய்தனர். முருகா ! உன்னிடம் வேண்டும் இவன் இரங்கத் தக்கவன். மழைபோல் அருள் பொழியத் தக்கவன். முதிர்ச்சி பெற்ற வாயால் ஏதோ சொல்லி இரக்கிறான். இரந்தாலும் இரக்காவிட்டாலும் உன் புகழைக் கேட்டு நயந்து உன்னை நாடி வந்திருப்பவன். என்றெல்லாம் இனியனவும் நல்லனவுமான சொற்களால் எடுத்துச் சொல்லி முருகனைப் புகழ்ந்தனர்.

குறிப்பு:

மொழியா - மொழியும் (கூறும்) என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

சேவிப்போர் கூற்று (282-286)
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி,
'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன்
பெரும!நின் வண்புகழ் நயந்'தென . . . .(285)

இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் . . . .(282 - 286)
முருகன் அருள்புரிதல் (287-295)
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, . . . .(290)

'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென
அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் . . . .(287 - 295)

பொருளுரை:

தெய்வத்து இளநலத்துடன் காட்சி தரும்படி வேண்டல் முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குபவன். இந்தத் தன்மையையெல்லாம் அவன் என்னிடம் வெளிப்படுத்த வேண்டும். அஞ்சாதே என்று சொல்லிப் பாதுகாக்க வேண்டும். நின் வரவை அறிவேன் என்று ஆறுதல் கூற வேண்டும். அன்பு மொழி கலந்து பேச வேண்டும். இருண்ட கடலால் சூழப்பட்ட உலகில் காத்தளிக்கும் கடவுளாக நீ மட்டுமே விளங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டும் பரிசில்.

குறிப்பு:

மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

அருவியின் காட்சியும் இயற்கைவளமும் (296-317)
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல. . . . .(300)

ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று. . . . .(305)

நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக். . . . .(310)

கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று. . . . .(315)

இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. . . . .(296 - 317)

பொருளுரை:

பழமையால் முதிர்ச்சி பெற்ற சோலை அருவிப்பழம் முதிர்ந்த சோலை அருவி அடித்துக்கொண்டு வரும் பல்வேறு பழப் பொருள்களாவன. அருவி துணிக்கொடியைப் போல் அசைந்தாடிக் கொண்டு வருகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக் கொண்டு வருகிறது. உயர்ந்த மலை முகடுகளில் பாறைப்பொந்துகளில் சூரியனைப்போல் தேன் கூடுகள் இருக்கும்.அவை சிதையப் பாய்ந்து வருகிறது. ஆசினிப் பலாவின் பழுத்த சுளைகள் கலந்துவரப் பாய்ந்து வருகிறது. மணம் மிக்க நாகமரப் பூக்கள் (புன்னை மலர்கள்) உதிரும்படி மோதித் தாக்கிக் கொண்டு வருகிறது. பருத்த முகமுடைய முசுக் குரங்குகள் நடுங்கும்படி பாய்கிறது. பெண்யானை மகிழும்படி அலை வீசுகிறது. ஆண்யானைகளின் தந்தங்களின் மீது அலை தத்துகிறது. மழைவெள்ளம் பொன்னிறத்திலும் ஊற்றுநீர் மணிநிறத்திலும் அமைந்து பொன்போன்ற விலைமதிப்புள்ள போருளகளை ஈர்த்துக் கொண்டு பாய்கிறது. வாழைமரத்தை அடியோடு சாய்த்து உருட்டிக் கொண்டு வருகிறது. தென்னை மரத்தைத் தாக்கும்போது உதிர்ந்த இளநீர்க்குலைகளைப் புரட்டிக்கொண்டு வருகிறது. மிளகுக்கொடி மிளகுகுகுலையோடு சாய மோதுகிறது. புள்ளிமயில் மருண்டு தன் கூட்டத்தோடு ஓடப் பாய்கிறது. காட்டுக்கோழிகளும் அவ்வாறே ஓடும்படி பாயந்து வருகிறது. காட்டுப்பன்றியும் அதனை அடித்துத் தின்னும் புலியும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி ஒரே கல்லுக் குகையில் அடைந்து கொள்ளும்படி பாய்கிறது. ஆமா என்னும் காட்டாட்டுக் கடாக்கள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சித்தம் பெண் ஆமாக்களை அழைக்கும் வகையில் அழைப்பொலியை எழுப்பும்படி வெள்ளம் சாய்கிறது. இழும் என்னும் ஓசையுடன் இறங்கிப் பாயும் இத்தகைய அருவிகளைக் கொண்டதுதான் பழமுதிர் சோலைமலை. இத்தகைய சோலைமலைக்கெல்லாம் உரிமை பூண்ட கடவுள் முருகன்.

குறிப்பு:

யானையின் தந்தத்தில் முத்து: அகநானூறு 282 - வால் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, நற்றிணை 202 - புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு ஒலி பல் முத்தம், புறநானூறு 161 - முத்துப்படு முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, புறநானூறு 170 - வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம், பதிற்றுப்பத்து 32 - முத்துடை மருப்பின், கலித்தொகை 40 - முத்து ஆர் மருப்பின், திருமுருகாற்றுப்படை 304 - பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇ, குறிஞ்சிப்பாட்டு 36 - முத்து ஆர் மருப்பின், மலைபடுகடாம் 518 - முத்துடை மருப்பின். n குரூஉ (313) - நிறம், ‘குருவும் கெழுவும் நிறமாகும்மே’ (தொல்காப்பியம், உரியியல் 5). முசுக்கலை (303) - ஆண் குரங்கு. ‘கலையென் காட்சி உழைக்கும் உரித்தே’, நிலையிற்றப் பெயர் முசுவின் கண்ணும்’ (தொல்காப்பியம். மரபியல் 45, 47). கொழியா - கொழித்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.

முற்றிற்று
தனிப் பாடல்

திருமுருகாற்றுப்படை பாட்டின் இறுதியில் முருகப்பெருமானின் சிறப்பினை உணர்த்தும் பாடல்களாக 10 வெண்பாக்கள் தனிப்பாடல்கள் என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடியவர் யார் என்று தெரியவில்லை.

குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்!
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே!
உளையாய்! என் உள்ளத்து உறை. . . . .[01]

பொருளுரை:

வேல் வீசி மலையை (கிரவுஞ்ச மலை) அழித்தவனே!, அலைகடலில் (திருச்சீரலைவாய்) சூரபன்மன் என்பவனை வேலால் வீழ்த்தியவனே!, பரட்டைத்தலைப் பூதப்படை கொண்டவனே!, என்றும் இளமைக் கோலத்துடன் இருப்பவனே!, என்றும் அழகின் திருவுருவமாகத் திகழ்பவனே!, காளை ஊர்தி சிவபெருமான் மகனாகிய காளையே!, என்றும் என் அருகில் இருப்பவனே!, என் நினைவிலும் நிலைகொள்வாயாக!.

குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும்,
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,
மெய் விடா வீரன் கை வேல்! . . . .[02]

பொருளுரை:

குன்றம் எறிந்தது எது?, பகை அழியப் போரிட்டது எது?, தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தது எது?, இன்று என்னைக் கைவிடாமல் நின்றது எது?, கல்லுக் குகையில் அடைக்கப்பட்டிருந்த என்னைக் காப்பாற்றியது எது?, என் உடலைப் பற்றிநிற்கும் வேலனின் கைவேல் அன்றோ?.

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை . . . .[03]

பொருளுரை:

செவ்வேளின் கையிலுள்ள வேல், வீரம் மிக்க வேல், மழைத்தாரை போல் பொழியும் வேல், தேவர்களைச் சிறையிலிருந்து மீட்ட தீரம் மிக்க வேல், கடலில் குளித்துத் தன் கறையைப் போக்கிக்கொண்ட வேல், சூரன் மார்பையும், கிரவுஞ்சமலைக் குன்றையும் துளைத்த வேல், அது நமக்குத் துணையாக இருக்கும்போது அச்சம் இல்லை.

இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும் . . . .[04]

பொருளுரை:

வேலால் சூரபனமனை வீழ்த்திய கொற்றவனே, முன்பு பனிபடர்ந்த கிரவுஞ்சமலைக் குன்றத்தில் ஊடுருவிச் செல்ல வேல் வீசினாய், அந்தத் தனிவேலை என் துன்பமாகிய குன்றை அழிக்க இன்னும் ஒருமுறை வீச ஓங்கினால் அது தகுதி மிக்க செயலாகும்.

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே! . . . .[05]

பொருளுரை:

உன்னைத் தவிர வேறு யாரையும் நம்பமாட்டேன். பிற்காலத்திலும் உன்னை விட்டுவிட்டு வேறொருவர் பின்னே செல்லமாட்டேன். பன்னிருகைக் கோல அழகினைக் கொண்டவனே, வானோர்க்குச் செய்த கொடுமையைத் தீர்க்கும் வேலை உடையவனே, செந்தில் (திருச்செந்தூர்) வாழ்வே, நீயே துணை

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன் . . . .[06]

பொருளுரை:

முருகா என்னும் பெயரை ஓதுவார் முன், அஞ்சுதலாகிய முகம் தோன்றினால் ஆறுதல் தரும் முகமாக ஆறுமுகம் (முருகன்) தோன்றும். துனபத்தோடு போராடும்போது ‘அஞ்சாதே’ என்று சொல்லி அதனைக் கொல்லும் வேல் தோன்றும். நெஞ்சில் ஒருமுறை நினைத்தால், அவனது இரண்டு அடிகளும் (காவடி = காப்பாற்றும் அடி) தோன்றும். கவலை வேண்டா.

முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான் . . . .[07]

பொருளுரை:

முருகனே, செந்தில் முதல்வனே, மாயோனின் மருமகனே, ஈசனின் மகனே, ஒரு கை ஆனைமுகனின் தம்பியே, உன் தண்டை (கழல்) அணிந்த கால்களைஐ நம்பிநே எப்பொழுதும் தொழுகின்றேன்.

காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால்,
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல
இடம்காண்; இரங்காய், இனி! . . . .[08]

பொருளுரை:

காக்கக் கடமைப்பட்ட நீ காப்பாற்றாமல் இருந்தால் நான் யாரைப் பரம்பொருளாகக் கொள்வேன். ஆறுமுகவா, பூக்கும் கடம்பை அணிந்தவனே, முருகா, கதிர்வேலா, நல்ல இடம் கண்டு இனிமேலாவது இரக்கம் காட்டு.

பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம்
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல்,
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல் . . . .[09]

பொருளுரை:

நெஞ்சே, பரங்குன்றில் இருக்கும் பன்னிருகைக் கோமானின் திருவடிகளைக் கண் குளிரக் கண்டதனோடு விட்டுவிடாமல் திருமுருகாற்றுப்படையை பூசைப் பாடலாகக் கொண்டு சொல்லிக்கொண்டே இரு.

நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி,
தான் நினைத்த எல்லாம் தரும் . . . .[10]

பொருளுரை:

நக்கீரர் உரைத்த திருமுருகாற்றுப்படையை தன் கோலம் எனக் கொண்டு நாள்தோறும் சொல்லிவந்தால், முருகன் முன்னே வந்து, மனக்கவலையைத் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவன் நினைத்த எல்லா நன்மைகளையும் தருவான்.