சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
சிறுபாணாற்றுப்படை
பாடியவர்:- இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன்:- ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 269
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்
சிறுபாணாற்றுப்படை
பாடியவர்:- இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன்:- ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 269
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
- 01. வேனிற்காலம் (1-12)
- 02. அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் (13-40)
- 03. வஞ்சி மாநகரின் சிறப்பு (41-50)
- 04. தமிழ் நிலை பெற்ற மதுரையின் மாண்பு (51-67)
- 05. உறந்தையின் சிறப்பு (68-83)
- 06. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - பேகன் (84-87)
- 07. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - பாரி (87-91)
- 08. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - காரி (91-95)
- 09. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - ஆய் அண்டிரன் (95-99)
- 10. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - அதிகன் (99-103)
- 11. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - நள்ளி (103-107)
- 12. கடையெழு வள்ளல்களின் சிறப்பு - ஓரி (107-113)
- 13. நல்லியக்கோடனின் தலைமைச் சிறப்பு (114-115)
- 14. புரவலனிடம் பரிசுபெறச் சென்ற விதம் (116-129)
- 15. வருத்தம் போக்கிய வண்மைச் சிறப்பு (130-145)
- 16. எயிற்பட்டினத்தில் கிடைக்கும் பொருள்கள் (146-163)
- 17. வேலூர் வளமும் எயினர் விருந்தும் (164-177)
- 18. ஆமூர் வளமும் உழவர் விருந்தும் (178-195)
- 19. நல்லியக் கோடனின் மூதூர் அண்மையது என்று அறிவித்தல் (196-202)
- 20. வாயிலின் சிறப்பு (203-206)
- 21. நல்லியக்கோடன் அவையில் வீற்றிருக்கும் காட்சி அவன் குணங்களும் அவற்றை ஏத்துவோரும் (207-220)
- 22. யாழ் வாசித்து, அரசனைப் புகழ்ந்து பாடுதல் (221-235)
- 23. பாணர் முதலியோர்க்கு அவன் உண்டி முதலியன கொடுத்தல் (236-245)
- 24. நல்லியக்கோடன் அளிக்கும் பரிசில் (246-261)
- 25. நல்லியக்கோடனது புகழும் பண்பும் (262-269)
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல,
செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று.
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, . . . .[05]
கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல்
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து
வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப,
வேனில் நின்ற வெம்பத வழி நாள்,
காலை ஞாயிற்றுக் கதிர் கடா உறுப்ப, . . . .[10]
பாலை நின்ற பாலை நெடு வழி,
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ, . . . .[01 - 12]
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான் யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக் . . . .[05]
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் . . . .[10]
பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
பொருளுரை:
வேனில் காலத்தில் காலை நேரத்தில் இளவெயில் காயும்போது பாலை நிலத்தில் சிறுபாணன் தன் சுற்றத்தாருடன் சென்றான். மாநில மடந்தைக்கு முலை மலை. ஆறு அவளது மார்பில் தொங்கும் ஆரம். ஆற்றங்கரையை உடைத்துக்கொண்டு நெடுந்தொலைவிலிருந்து வரும் காட்டாறு துன்புற்றுக் கொண்டிருந்தது. அதாவது நீர் இல்லாமல் வறண்டு போயிருந்தது.
அந்த ஆற்றின் மணல் படிவுகள் நிலமடந்தைக்குக் கூந்தல். ஆற்றங்கரை மலர்ச் சோலைகளில் பூத்திருக்கும் மலர்களைக் குயில்கள் குடைந்து உண்ணும்போது உதிர்க்கும் பூக்கள் ஆற்றின் அறல் மணலைப் போர்த்திக் கிடந்தன.
அந்தப் போர்வை மகளிர் இடுப்பில் அணியும் காழகம் (= பாவாடை) போல் சுருக்கம் சுருக்கமாகக் காணப்பட்டது. (காற்றால் அறுபட்டுப் படிந்திருக்கும் மணல் படிவில் உதிர்ந்த பூக்கள் பாவாடை சுருக்கத்திற்கு உவமை).
ஆற்றில் கிடக்கும் பருக்கைக் கற்கள் நடந்து செல்லும் பாணன் பாடினியரின் கால்களை உருத்தின, கிழித்தன. அவர்கள் மெல்ல மெல்ல நடந்து சென்றனர். அவர்களது நடை பார்ப்பவர்களுக்குச் சுவையாக இருந்தது. அது வேனில் காலம் வெயிலின் சூடுதான் வேனிலுக்குப் பதம். காலை ஞாயிறு தன் கதிர்ச்சுடரை வீசி வாட்டத் தொடங்கியது. பாலைநில வழியில் அவர்கள் சென்றனர்.
நெய் கனிந்து இருளிய கதுப்பின், கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன் . . . .[15]
மயில் மயில் குளிக்கும் சாயல், சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ,
வயங்கு இழை உலறிய அடியின் அடி, தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என . . . .[20]
மால் வரை ஒழுகிய வாழை, வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி
நளிச்சினை வேங்கை நாள் மலர் நச்சி
களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின், சுணங்கு பிதிர்ந்து
யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் . . . .[25]
பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின், எயிறு என
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த,
முல்லை சான்ற கற்பின், மெல் இயல், . . . .[30]
மட மான் நோக்கின், வாணுதல் விறலியர்
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன் . . . .[15]
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய வடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . . . .[20]
மால்வரை யொழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த வோதி யோதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப் . . . .[25]
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியன். . . .[30]
மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
பொருளுரை:
பாலை நெடுவழியில் முல்லை சான்ற கற்பினளாகிய பாணனின் மனைவியும் செல்கிறாள். பாலை நிலத்து மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன. அவற்றின் அடியில் வரி வரியாகக் கிடக்கும் அருநிழலில் ஆங்காங்கே உட்கார்ந்து இளைப்பாறிய பின் செல்கிறாள்.
அவளது கூந்தல், மேனியின் சாயல், உள்ளங்கால், காலின் தொடை, தலையில் போட்டிருக்கும் ஓதிக் கொண்டை, மேனியின் பொலிவைக் காட்டும் பொன்னிறத் தேமல், மார்பகப் பெண்பாலுறுப்பு, பல் ஆகிய உறுப்புக்கள் பொலிவுடன் பூத்துக் குலுங்குவதால் அவள் மாரிக் காலத்து மழைத்துளி பட்டவுடன் பூத்துக் குலுங்கி மணக்கும் குல்லை என்னும் குட்டிப் பிலாத்திப் புதர்ச்செடி போல் பொலிவு பெற்றிருக்கிறாள்.
கதுப்பு – அவளது கூந்தலில் எண்ணெய் கனிந்துள்ளது. அதுபோலத் தூறல் மழையில் நனைந்தாடும் மயிலின் தோற்றத்தைத் தருகிறது.
சாயல் – மயில் தன் நீல நிறத் தோகையை விரித்துக்கொண்டு ஆடுவது போல் அவளது மேனியின் பொலிவழகு துவண்டு ஆடுகிறது. இவள் பெண்மயில். அது ஆண்மயில். எந்தச் சாயலழகு எந்தச் சாயலழகில் குளிக்கிறது என்று தெரியாத வியப்புநிலை அது.
அடி – சாயல் நிழலில் இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப் போல் அவளது உள்ளங்கால், அழகு, அமைப்பு, மென்மை போன்றவற்றால் அவளது அடியானது நாயின் நாக்கைப் போல் இருந்தாலும், அவளது காலில் மருதாணி பூசி மலர்ந்து போய் இழைக்கோடுகள் இருப்பதால் இவளது அடியின் பொலிவுக்கு நாயின் நாக்கு ஈடாகாது.
குறங்கு – அவளது அடியிலிருந்து உயர்ந்து, பெண்யானையின் நிலத்தைத் தொடும் துதிக்கை போன்று அவளது தொடை இருக்கிறது. யானைக்குத் துதிக்கை ஒன்றுதான். இவளுக்கோ நெருக்கமான இரண்டு தொடைகள்.
ஓதி – அவளது தொடையைப் போல் மலைவாழைத் தண்டு இருக்கிறது. அந்த வாழையின் பூவைப்போல அவளது கொண்டை இருக்கிறது.
சுணங்கு – அவள் கொண்டை பூத்திருக்கும் கொத்துக் கொத்தாக வேங்கை பூத்திருக்கிறது. வேங்கை பூத்திருப்பது போல் அவள் முலைமுகத்தில் சுணங்குத் தேமல் பூத்திருக்கிறது. தேன் உண்ட வண்டுகள் களிப்பினால் தேமலையும் பூ என்று மயங்கி மொய்த்துத் தேன் இல்லாத்தால் அரற்றி ஓலமிடுகின்றன.
முலை – அவளது தேமல் போல் கோங்கமரம் புதிய பூவை அவிழ்த்து வைத்திருக்கிறது. கோங்கம் பூ மொட்டுப் போல் அவளுக்கு முலை.
பல் – அவளது முலையைப் போன்ற தேங்காயுடன் தென்னை நிமிர்ந்துள்ளது (அவளது முலையைப் போன்ற காயுடன் பனை பருவம் கொண்டுள்ளது). தேங்காய்க்குள்ளே இருக்கும் தேங்காயைப் போல் அவளுக்குப் பல். (பனை நுங்கு போல் பல்) இனிமையாலும் ஈரத்தாலும் இளந் தேங்காயும், பனை நுங்கும் அவளது பல்லை ஒத்திருந்தன.
குல்லை - அவளது பல்லைப் போல் குல்லை (குட்டிப் பிலாத்தி) பூத்திருக்கிறது.
முல்லை = கற்பு – மாரியின் மழைத்துளிக்கு மட்டுமே பூக்கும் குல்லை போல் முல்லை பூத்திருக்கிறது. முல்லை என்னும் காத்திருக்கும் கற்புநெறி கொண்டவள் பாணன் மனைவியாகிய விறலி.
கல்லா இளையர் மெல்லத் தைவரப்
பொன் வார்ந்தன்ன புரியடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, . . . .[35]
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன், கடன் அறிந்து இயக்க,
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ,
துனிகூர் எவ்வமொடு, துயர் ஆற்றுப்படுப்ப,
முனிவு இகந்து இருந்த, முதுவாய் இரவல . . . .[13 - 40]
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ . . . .[35]
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல . . . .[40]
பொருளுரை:
விறலியருக்கு மானைப்போல் மருண்டு பார்க்கும் கண் நடந்து நடந்து சோர்ந்து போயிருந்த அவர்களது சிறிய காலடிகளை இளைஞர்கள் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பாண்மகன் தனது சீறியாழை மீட்டிப் பாடியும் விறலியரை மகிழ்வித்துக் கொண்டிருந்தான்.
அந்த யாழை அவன் தன் இடப்பக்கத் தோளில் மாட்டிக் கொண்டு மீட்டி இசைத்தான். பாலைப் பண்ணில் நைவளத் திற இசையைக் கூட்டிப் பாடினான். அப் பண்ணை மீட்டுவதில் அவன் கைத்திறம் பெற்றவன்.
வையம் என்னும் உலக வண்டி நாம் இயக்க இயங்காத வண்டி. இந்த வையத்தில் வள்ளல்களைப் பார்க்கும் ஆசையில் பாணன் சென்று கொண்டிருந்தான். உள்ளத்தில் இருக்கும் சலிப்பும், உடலை வாட்டும் எவ்வமும் (துன்பமும்) துயரமாக மாறிப் பிறர் கொடுப்பதை ஏற்கும்படி அவனை ஆளாக்கி வழி நடத்திக் கொண்டிருந்தன.
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை,
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர,
விளையா இளங்கள் நாற, மெல்குபு, பெயரா, . . . .[45]
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான், ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த,
எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்,
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, அதாஅன்று . . . .[41 - 50]
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழன்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக் . . . .[45]
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
வெழுவுறு திணிதோ ளியறேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே, யதாஅன்று . . . .[50]
பொருளுரை:
கொழுத்த மீன்கள் காயப்படும்படி எருமை சேற்றில் நடக்கும் அங்குள்ள வளமான இதழ்களைக் கொண்ட கழுநீர்ப் பூக்களைத் தன் வலிமை மிக்க வாயால் மேயும். பின் படுத்துக் கொள்ள பலாமர நிழலுக்குச் செல்லும். பலா மரத்தில் மிளகுக் கொடி ஏறியிருக்கும்.
பின் அசை போட்டுக்கொண்டே மஞ்சள் இலை தன் உடலைத் தடவிக் கொடுக்கும்படி மஞ்சள் வயலில் படுத்திருக்கும். அப்போது அசை போனும். அதன் வாயில் கழுநீர்ப் பூவிலிருக்கும் விளையாத இளங்கள் நறுமணம் வீசும்.
அதன் பின்னர் எழுந்து போய் மீண்டும் அசை போட்டுக்கொண்டே குளவிப் பூப் படுக்கையில் படுத்துக் கொள்ளும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தது இது குடபுலத்தின் வளம். அதனைக் காக்கும் மரபில் வந்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.
அவன் தன் பகைவர்களை அடக்கி அவர்களது வடநாட்டு எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். அந்தக் குட்டுவனின் தோள் கோட்டைக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்றது.
அவன் பெரும்பாலும் தேரில் செல்லும் பழக்கம் உடையவன். இவனது சேரநாட்டு வஞ்சி வளம் மிக்க ஊர். அந்த வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான்.
அறைவாய்க் குறுந்துணி அயில் உளி பொருத,
கை புனை செப்பம் கடைந்த மார்பின்,
செய்பூங் கண்ணி செவி முதல் திருத்தி,
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த . . . .[55]
மகாஅர் அன்ன மந்தி, மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்,
வாள் வாய் எருந்தின் வயிற்றகத்து அடக்கி,
தோள் புற மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற . . . .[60]
கிளர் பூண் புதல்வரொடு, கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்,
தென் புலம் காவலர் மருமான், ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன், . . . .[65]
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்,
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, அதாஅன்று . . . .[51 - 67]
தறைவாய்க் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த . . . .[55]
மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புறம் மறைக்கு நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற . . . .[60]
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்
றென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் . . . .[65]
றமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே, யதாஅன்று
பொருளுரை:
உமணர் உப்பு விற்கச் செல்லும் வரிசையோடு அவர்களின் உமட்டியரும் குழந்தைகளும் செல்வர். வழியில் மந்தி குழந்தைகளுடன் சேர்ந்து கிலிகிலுப்பை விளையாடும்.
உமணர் - தாங்கி இழுக்கும் காளை மாடுகள் பூட்டிய வண்டியை உமணர்கள் ஓட்டிச் செல்வர். தலையில் அணியும் மாலை கண்ணி எனப்படும். நுணாக் கட்டையைக் கடைந்து செய்த கண்ணியை அவர்கள் தம் காதுகளைத் தொடும் வகையில் தலையின் மேல் அணிந்திருப்பர். மார்பிலும் அணிந்திருப்பர்.
முதிர்ந்த நுணாமரப் பொந்துகளில் தேன் கூடு கட்டும். நிறைமதி நாளிலும், மறைமதி நாளிலும் தேனீக்கள் தாம் சேர்த்த தேனைப் பருகிவிடும். அவ்வாறு பருகியபின் கடையப் பயன் படுத்தப்படும் நுணா மரக்கிளை வெட்டப்படும் அது இளமையும் முதுமையும் கொண்ட பதமான நுணாமரத் துண்டு. அதில்தான் நுணாக்கட்டை - மாலைக்கு வேண்டிய துண்டுகளைக் கடைந்தெடுப்பார்கள்.
உமணர் மக்கள் - அவர்களது மக்களை ஒத்த மந்திகள் சிறுவர்கள் விளையாடும் கிலுகிலுப்பையை எடுத்துத் தாமும் அவர்களைப் போலவே ஆட்டி விளையாடும்.
உமட்டியர் - உமட்டியர் முத்துப் போன்ற பற்களுடன் நகைமுகம் காட்டுவர். தம் குழந்தைகளைத் தம் தோளில் கட்டியிருக்கும் தூக்குத் துணியில் தம் வயிற்றுப் பகுதியில் உட்கார வைத்துக் கொள்வர். மந்தி ஆட்டும் தனது கிலுகிலுப்பையை வாங்கித் தரும்படி குழந்தை அழுதால் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து கிலுகிலுப்பையை மறைத்து மறக்கும்படி செய்வர்.
குழந்தையைத் தோளில் மறைக்கும்போது அவர்களின் தலையிலுள்ள ஐம்பால் ஒப்பனைதான் கண்ணைக் கவரும். குழந்தை பிறந்து சில நாள்களேயான புனிற்றிளம் பெண்களேயாயினும் அவர்களது வயிறு வற்றி இடை சிறுத்துப் போய்தான் இருக்கும்.
இவர்கள் வாழுமிடம் கடலலை மோதும் கொற்கை நகரம். - (உமணர் – ஒப்புநோக்குக – பெரும்பாணாற்றுப்படை அடி 46 – 65) கொற்கை - கொற்கையைத் துறைமுகமாகவும், மதுரையைத் தலைநகரமாகவும் கொண்டு ஆள்பவன் செழியன்.
தமிழகத்தின் தென்பகுதியில் இருப்பதாலோ, இனிய புலமாக இருப்பதாலோ அவனுடைய நாடு தென்புலம் என்று பெயர் பெற்றிருந்தது. அந்தத் தென்புலத்தைக் காப்பாற்றும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன்.
தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது.
மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.
துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை,
ஓவத்து அன்ன உண் துறை மருங்கில், . . . .[70]
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின்
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,
ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன,
சேயிதழ் பொதிந்த செம் பொற்கொட்டை, . . . .[75]
ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து
காமரு தும்பி காமரம் செப்பும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை,
குணபுலம் காவலர் மருமான், ஒன்னார்
ஓங்கு எயில் கதவம் உருமுச்சுவல் சொறியும் . . . .[80]
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்,
ஓடாப் புட்கை உறந்தையும் வறிதே, அதாஅன்று . . . .[68 - 83]
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
யோவத் தன்ன யுண்டுறை மருங்கிற் . . . .[70]
கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை . . . .[75]
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா விருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந் . . . .[80]
தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே, யதாஅன்று
பொருளுரை:
உறையூரில் உண்ணத்தக்க நல்ல நீரைக் கொண்ட பொய்கை. அதன் கரையில் நீர்ப்பக்கமாக விரிந்த கடம்பு மரம். அம் மரத்தில் நிறைந்த மாலைகள் தொங்குவது போன்று பூத்திருக்கும் பூக்கள். அந்தப் பூக்கள் நீரில் உதிர்ந்தன. உண்ணும் நீரில் அவை மிதப்பதால் குளமே ஓவியம் போலக் காட்சி அள்ளித்தது.
தரையில் மேயும் தம்பலப்பூச்சிகள் (கோவம்) போல நீரில் மிதக்கும் கடப்பம்பூக்கள் காற்றலையில் நகர்ந்துகொண்டிருந்தன. அதில் மகளிரின் முலை போலத் தாமரை மொட்டுகள் வெளிவந்து பூத்தன. அவை தெய்வ வழிபாட்டுக்கு மட்டும் பயன்படும் தெய்வத்தாமரைப் பூக்கள். அவற்றில் பூவின் நடுவில் இருக்கும் கொட்டைகள்.
மகளிர் தம் மாசுமருவற்ற கைகளில் மருதாணி வைத்துச் செந்நிறம் ஆக்கிக்கொண்டது போல தாமரை இதழ்களுக்கு இடையே பொதிந்திருக்கும் செம்பொன் நிறம் கொண்ட கொட்டை. அந்தக் கொட்டையில் உறங்கும் ஆண் பெண் வண்டுகள் காம இன்பத்தில் காமரப்பண் பாடின. இப்படிப்பட்ட குளநீர் பாயும் வளவயல்களைக் (பணை) கொண்டதுதான் உறையூர்.
இந்த நாடு குணபுலம் எனப்பட்டது. இதனை மரபுரிமையில் ஆண்டுவந்தவன் செம்பியன். தேரில் செல்லும் பழக்கமுடைய இவன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். இவன் தூங்கெயில் கோட்டையை வென்று அதன் அடையாளமாகத் தன் கையில் காப்புத்தொடி அணிந்துகொண்டான். அந்தத் தூங்கெயில் ஓங்கி உயர்ந்த கதவினைக் கொண்டது.
மேகம் அந்தத் தொங்கும் கோட்டையில் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும் அளவுக்கு அந்தக் வானளாவ உயர்ந்து தொங்கியது. அதனைக் கைப்பற்றிக்கொண்ட செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய . . . .[85]
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் . . . .[84 - 87]
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய . . . .[85]
வருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
பொருளுரை:
இது முதல் ஏழு வள்ளல்களின் கொடைத்திறன் போற்றப்படுகிறது. (இவர்களை நாம் கடையெழு வள்ளல்கள் என்று வழங்குகிறோம்). இந்த ஏழு பேர் இழுத்துச் சென்ற ஈகை என்னும் தேரை இழுக்கும் நுகத்தை நல்லியக்கோடன் தனி ஒருவனாகவே இழுத்துச் சென்றான் என்று பாடல் வளர்கிறது. அதாவது, அந்த ஏழு வள்ளல்களுக்குப் பின்னர் இருந்த ஒரே ஒரு வள்ளல் இவன் மட்டுமே எனப் போற்றப்படுகிறான்.
அரிய உடல்திறனும், கண்டவரை வருத்தும் கட்டழகும் கொண்டவர்கள் ஆவியர்-குடி மக்கள். தலைவன் பேகன். பெருங்கல் நாடு எனப் போற்றப்படும் பழனிமலைப் பகுதியில் வாழ்பவர்கள் அந்த ஆவியர் குடி மக்கள்.
பேகன் ஒருநாள் மழை பொழியும் மலைச்சாரல் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது மயில் ஒன்று ஆடுவதைப் பார்த்து, அது குளிரில் நடுங்குவதாக எண்ணித் தன் போர்வையை அதன்மீது போர்த்தி விட்டவன்.
நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச்
சிறு வீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல் . . . .[90]
பறம்பின் கோமான் பாரியும் . . . .[87 - 91]
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற் . . . .[90]
பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
பொருளுரை:
அருவி விழும் காட்சி தொலைதூரம் தெரியும் மலை பறம்புமலை இவன் அந்தப் பறம்புமலைத் தலைவன். ஒருநாள் நாகமலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த சுரும்புத் தேனீக்கள் தேன் உண்ணும் முல்லைக்கொடி படர்வதற்குப் படர்வதற்குக் கொழுகொம்பு இல்லாமல் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்து, அது படர்வதற்காகத் தன் மிகப் பெரிய தேரையே நிறுத்தி விட்டுச் சென்றவன்.
வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல்
கழல் தொடித் தடக் கை காரியும் . . . .[91 - 95]
வாலுளைப் புரவியொடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ் . . . .[95]
பொருளுரை:
இவனது கையில் உள்ள வாள் பகைவர்களை வீசிச் செந்நிறம் கொண்டு ஒளிரும். ஆனால் இவனோ தன்னைத் தேடிவந்து கேட்டவர்களுக்கு ஒலிக்கும் மணி கட்டியிருக்கும் வெண்மயிர்ப் பிடரிக் குதிரைகளைப் பரிசாக வழங்கினான். அப்போது அவன் பேசும் அன்பு மொழிகள் விதை முளைக்க உதவும் ஈரநிலம் போன்றவை. அந்த உரை உலகத்தையே வியப்பில் ஆழ்த்துபவை.
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல் அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் . . . .[95 - 99]
நீல நாகம் நல்கிய கலிங்க
மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயும் மால்வரைக்
பொருளுரை:
இவன் மகிழ்ந்திருக்கும்போது சந்தனம் பூசிய கோலத்தோடு காட்சி தருபவன். சினந்திருக்கும்போது வில்லும் கையுமாகத் திரிபவன். ஆலமரத்தடியில் குடிகொண்டிருந்த சிவபெருமானின் சிலை ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட இவன் நச்சு (நீலம்) கொண்ட நாகப்பாம்பு ஒன்று இவனுக்குத் தந்த மேலாடையை அச்சிலைக்குப் போர்த்தி மகிழ்ந்தான்.
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி . . . .[100]
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும் . . . .[99 - 103]
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி . . . .[100]
யமிழ்துவிளை தீங்கனி யௌவைக் கீந்த
வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
பொருளுரை:
அதிகன் = அதியன் = அதியமான். = அதியமான் நெடுமான் அஞ்சி = அஞ்சி. (இவன் தன் ஆட்சியின் பெரும்பகுதி போரிலேயே கழித்துள்ளதை இவனது வரலாற்றிலிருந்து அறிவோம்). வேல் வீச்சில் இவன் வல்லவன். பொதுவாகப் பிறரை உரசிப் பார்க்கும் சினம் இவனுக்கு உண்டு. ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் கடல் போல் போர் வேண்டும் என ஆரவாரம் செய்யும் படையும் இவனிடம் இருந்தது.
பூஞ்சாரலில் பழுத்திருந்த அரிய நெல்லிக்கனி ஒன்று இவனுக்குத் தரப்பட்டது. அது சாவாமையைத் தரும் அமிழ்தம் போன்றது. அதனைத் தான் உண்ணாமல் புலவர் ஔவையாருக்குக் கொடுத்து அவரை நீண்ட நாள் வாழச் செய்தவன் இவன்.
நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை, . . . .[105]
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளியும் . . . .[103 - 107]
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் . . . .[105]
துளிமழைபொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
பொருளுரை:
நள்ளி. இவன் மலைநாட்டுத் தலைவன். பாடலில் தரப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது இவனது மலை உதகை மலையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. வளி துஞ்சு நெடுங்கோடு என்று பாடலில் கூறப்படுவது தொட்டபெட்டா மலைமுகடு எனலாம்.
துளிமழை என்பது மேகமூட்டம். நளிமலை என்பது குளிர் மிகுதியாக உடைய மலை. முனைமுகத்தில் புகழுடன் விளங்கும் இவனது கைகள் நண்பர்களிடம் அவர்களின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் நல்குவதில் புகழ்பெற்று விளங்கியது. நடைப்பரிகாரம் என்பது வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய வாழ்க்கை வசதிப் பொருள்கள்.
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த . . . .[110]
ஓரிக் குதிரை ஓரியும்............
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த . . . .[110]
வோரிக் குதிரை வோரியு............
பொருளுரை:
ஓரி. ஓரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் ஏறிச்சென்று ஓரி தாக்கினான். காரி என்னும் பெயர் கொண்ட குதிரையில் வந்து காரி எதிர்த்துப் போரிட்டான். முடிவில் காரியின் குறும்பறை நன்னாடு ஓரிக்குக் கிடைத்தது.
போர் வெற்றியில் கிடைத்த அந்த நாட்டைத் தனது போர் வெற்றியைப் புகழ்ந்து யாழ் மீட்டிப் பாடிய பாணர்களுக்குக் கொடுத்தவன் ஓரி. நாகு முதிர் நாகம் குறும்பொறை நன்னாடு – நாகு என்னும் நாகமரங்கள் மிகுதியாக இருந்ததால் ‘நாகம்’ என்னும் பெயரைப் பெற்றிருந்த நாகமலையை உடைய ‘குறும்பொறை நாடு’
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம், . . . .[107 - 113]
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
பொருளுரை:
என அந்த ஏழு பேர், எழுந்த போர்களில் வெற்றி அடைந்தவர்கள், கணைய மரம் போன்ற திண்மையான தோள்களை உடையவர்கள்.
ஒரு தான் தாங்கிய உரனுடை நோன் தாள் . . . .[115]
வொருதான் றாங்கிய வுரனுடை நோன்றா . . . .[115]
பொருளுரை:
நல்லியக்கோடன் காலத்துக்கு முன்பு மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல் பெருமக்கள் ஈகை என்னும் தேரை ஏழு நுகங்கள் கட்டி ஆங்காங்கே இழுத்துச் சென்றனர். அவர்களது காலத்திற்குப் பிறகு நல்லியக்கோடன் தனியொருவனாக ஈகைத் தேரின் நுகத்தைத் தாங்கி இழுத்துச் செல்கிறான், என்கிறார் ஆற்றுப்படுத்தும் புலவர். நல்லியக்கோடன் ‘எழுசமம் கடந்தவன்.
அதாவது சொல்லப்பட்ட எழுவரின் சமநிலையைக் கடந்து மேம்பட்டவன். மேலும் எழு உறழ் திணிதோள் கொண்டவன், அதாவது கணையமரம் போன்ற தோளை உடையவன், இது இவனுடைய மாபெரும் கொடைத் தன்மையைக் காட்டுகிறது.
துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய,
பொரு புனல் தரூஉம் போக்கறு மரபின்,
தொல் மா இலங்கைக் கருவொடு பெயரிய,
நல் மா இலங்கை மன்னருள்ளும், . . . .[120]
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய்வாள்
உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன்,
களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி
பிடிக்கணம் சிதறும் பெயல் மழைத் தடக்கை
பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை . . . .[125]
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு,
தாங்கரு மரபின், தன்னும், தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி,
முன் நாள் சென்றனம் ஆக இந்நாள் . . . .[125 - 129]
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும் . . . .[120]
மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்அடி
பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை . . . .[125]
நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு
தாங்கரு மரபின் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்னாட் சென்றன மாக விந்நா
பொருளுரை:
தொன்மாவிலங்கை என்பது இலங்கைத் தீவு. நன்மாவிலங்கை என்பது தமிழ் நாட்டிலுள்ள ஓர் ஊர். இலங்கைத் தீவில் கருவுற்ற ஒருவன் தமிழ் நாட்டிலுள்ள ஊருக்குக் குடிபெயர்ந்து வந்து தலைமை ஏற்றபோது தன் தலைநகருக்கு மாவிலங்கை என்னும் பெயரைச் சூட்டினான்.
நல்லியக்கோடன் காலத்தில் இப்பகுதியில் ஓவியர் குடியின மக்கள் வாழ்ந்து வந்தனர். ஓ என்னும் சொல் ஏரியின் மதகுகளை அடைக்கும் பலகையைக் குறிக்கும். ஏரியை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் ஓவியர் எனப்பட்டனர். (ஓ – ஓவம் – ஓவியம் – ஓவியர் என்றும் எண்ணிப் பார்க்கலாம். )
நல்லிநக்கோடனின் மாவிலங்கை நாட்டில் ஓடிய ஆற்றில் நாகம், அகில், சந்தனம் முதலான மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அம் மரங்கள் நீராடுவோருக்கு மிதவைப் புணைகளாகப் பயன்பட்டன.
காதலன் தோளைத் தருவிக்கொண்டு விளையாடுவது போல மகளிர் அம் மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு விளையாடினர். பொருபுனல் ஓடிற்று என்று பாடல் கூறுவதால் அது காட்டாறாக இருக்க வேண்டும்.
ஓவியர் குடி குற்றவடு நேராதபடி அரசாண்ட குடி. வாய்மை காத்துப் புகழோடு விளங்கிய குடி. பகைவர்கள் அஞ்சும்படி புலிபோல் வலிமை பெற்று விளங்கிய குடி. நல்லியக்கோடனின் கால்களில் யானையைக் குதிக்காலால் தட்டி ஓட்டிய கால் தழும்பு இருந்தது. அதில் அவன் வீரக் கழலை அணிந்திருந்தான். காலிலோ களிற்றுத் தழும்பு. கைகள் தந்ததோ பிடிக்கணம்.
பெய்யும் மழை நீரைச் சிதறுவது போல இவனது கைகள் தாரை வார்த்துத் தரும் நீரில் பிடிக்கணங்கள் (பெண்யானைகள்) கொடைப் பொருள்களாகக் கொட்டித் தரப்பட்டன. கூத்தாடுவோருக்கு அந்தக் கொடை யானைகள் வழங்கப்பட்டன.
நல்லியக்கோடனை விரும்பி அவனிடம் முன்பொரு காலத்தில் நானும் எனது சுற்றத்தாரும் சென்றோம். அவனைப் புகழ்ந்து பாடினோம். அவன் எங்களது தகுதியை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாகத் தன்னுடைய தகுதியை எண்ணிப் பார்த்தான். தன் தந்தை தனக்கு வைத்துவிட்டுச் சென்ற வானளாவிய மலைபோன்ற செல்வத்தை அளவிட்டுக் கொண்டான். வழங்கினான்.
கறவாப் பால் முலை கவர்தல் நோனாது,
புனிற்று நாய் குரைக்கும், புல்லென் அட்டில்
காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி,
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல், . . . .[135]
வளைக் கை கிணைமகள், வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை,
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து,
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்,
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் . . . .[140]
தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின்
சிறுகண் யானையொடு, பெருந்தேர் எய்தி,
யாம் அவண் நின்றும் வருதும் நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும்பேர் ஒக்கல்
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் . . . .[130 - 145]
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டிற்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யொல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல் . . . .[135]
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் . . . .[140]
டறுகண் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருது நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லுள்ளமொடு செல்குவி ராயி . . . .[145]
பொருளுரை:
எங்களது வீட்டுநாய் எங்கள் வீட்டுச் சமையலறையில் குட்டி போட்டிருந்தது. கண்ணைக்கூடத் திறவாத அந்த நாய்க்குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கக் கவ்விச் சுவைத்தன. தாய்நாயின் மடியில் பால் இல்லாத்தால் வலி பொறுக்க முடியாமல் அது தன் குட்டிகளையை பார்த்துக் குரைத்தது.
வைரம் பாய்ந்தது போன்ற எங்களது வீட்டுச் சுவர் கட்டுடைந்து கறையான் அரித்த புழுதியோடு காளான் பூத்திருந்தது. உடுக்கை அடித்துக்கொண்டு ஆடும் என் மனைவியின் வயிறு பசியால் ஒடுங்கி இளைத்த இடையோடு ஒட்டிப்போயிருந்தது.
அவள் குப்பையில் முளைத்திருந்த வேளைக் கீரையைத் தன் வளைந்த நகத்தால் கிள்ளி வந்தாள். உப்புக்கூட இல்லாமல் அதனை வேகவைத்தாள். இதைப்போய் சாப்பிடுகிறார்களே என்று அறிவுக் குறைந்த மடவோர் ஏளனம் செய்வார்களே என்று எண்ணி வாயில் கதவைச் சாத்தி வைத்துவிட்டுப் பெருஞ் சுற்றத்தாரோடு கூடியிருந்து உண்ணக்கூட முடியாமல் ஏதோ பிசைந்து கவளமாக்கிக் கன்னத்தில் கண்ணீர் வழிய விழுங்கிக் கொண்டிருந்தோம். இதுதான் எங்கள் குடும்பத்தின் அந்நாளைய அழிபசி வருத்தம். (இந்த விளக்கத்தின் மூலமாகக் குடும்பத்தின் வறுமைநிலை விளக்கப்படுகிறது)
அன்று எங்கள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அதை மாற்றுவானாய் நல்லியக்கோடன் கன்னத்தில் கண்ணின் மதம் வழியும் யானையைப் பரிசாகத் தந்தான். அஞ்சாமைக் குணம் பூண்டிருக்கும் யானையைத் தந்தான். யானையோடு தேரும் தந்தான்.
இப்போது நாங்கள் செம்மாப்போடு யானைமீதும் தேர்மீதும் வந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் இங்கு வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு உங்களது சுற்றத்தாரோடு செம்மாந்த உள்ளம் கொண்டு அவனிடம் செல்லுங்கள்.
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்,
கடுஞ்சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும்,
நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்,
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர, . . . .[150]
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் . . . .[146 - 153]
தலைநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூல் முண்டகங் கதிர்மணி கலாஅலவு
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவுங்
கானல் வெண்மணற் கடலுலாய் நிமிர்தரப் . . . .[150]
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி
பொருளுரை:
நீங்கள் நல்லியக்கோடன் ஊருக்குச் செல்லும் வழியில் எயிற்பட்டினத்தின் வழியாகச் செல்ல வேண்டி இருக்கும். அதனை அடைய நெய்தல்நிலப் பெருவழியில் செல்ல வேண்டி வரும். அங்கே அலைமோதும் நீரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்திருக்கும்.
அன்று பூத்த செருந்திப் பூக்கள் பொன் கொட்டிக் கிடப்பதுபோல் கிடந்து மருட்சியூட்டும்.
முண்டகப் ப்பூக்களைக் கதிர்மணிகள் என்று எண்ணிக் கடல் அலைகள் கழுவிக்கொண்டிருக்கும். புன்னைமரம் பூத்து முத்துக்களைத் தலையில் வைத்திருக்கும். கடற் கானல் வெண்மணலில் கடல்லை வந்து உலாவிக் கொண்டிருக்கும்.
அந்த நெய்தல் நிலப் பொருவழியில் சென்றால் கடலின் மணிநீர் சார்ந்த நிலத்தில், பனிநீர்ப் (நன்னீர்) பள்ளத்தில் இருக்கும் பட்டினம் ஒன்றை அடையலாம். அது மதிலொடு பெயரிய பட்டினம். (மதில் = எயில் | மதிலின் பெயர் இணைந்துள்ள பட்டினம் | எயிற்பட்டினம்). அங்குச் சென்றால்,
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின், . . . .[155]
கரும் புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திருமுகத்து
நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர் மடுப்ப,
கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான், . . . .[160]
தளை அவிழ் தெரியல் தகையோற் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர் . . . .[146 - 163]
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற் . . . .[155]
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉ மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கினு ளைமக ளரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் . . . .[160]
றளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பொருளுரை:
நுளைமகள் என்பவள் மீனவப் பெண். அவள் ஒட்டகம் தூங்கி எழுந்தது போல் வரும் அலைகள் கொண்டு வந்த மணம் கமழும் விறகுகளைக் கொண்டு சமைப்பாள். கரும்புகையும் செந்தீயும் கமகமக்கச் சமைப்பாள். அவள் பருத்த தோளழகு உடையவள்.
வானத்து நிலா இவள் முகத்தைப் பார்த்துத் தனக்கு இப்படிப்பட்ட அழகு இல்லையே என ஏங்கும் முக அழகினைக் கொண்டவள். அதில் வேலின் கூர்மை போல் நோக்கும் கண்பார்வை கொண்டவள்.
சமைக்கும்போது பருத்த தோள்களைக் கொண்ட அவள் முகத்தைக் கரும்புகை கவ்வும். என்றாலும் கொழுந்து விட்டு எரியும் செந்தீ அவளது முகத்துக்கு ஒளி உண்டாக்கும். இந்த முக அழகைப் பார்க்க வானத்திலுள்ள மதியம் ஏங்கிக் கிடக்கும்.
காரணம் அவள் முகத்தில் கூர்மையான வேல் போன்ற கண்கள் இருந்தன. (வானத்து மதிக்கு மேகம் புகை. விண்மீன் நெருப்புக் கட்டிகள் நிலாவுக்கு வெளிச்சம் தரும் நெருப்புத் தணலின் கட்டிகள்).
அவள் பழமைப்பட்டு நுரைத்து வரும் தேறலைப் பரதவர்களுக்குத் தருவாள். அப்போது நீங்கள் கிடங்கில் கோமானைப் பாடவேண்டும். ஒருவர் குழல் ஊதுகையில் மற்றவர் அவன் புகழைப் பாடவேண்டும். தன் அரசனின் புகழ் கேட்டு உங்களுக்கும் அரியல் தேறல் தருவாள்.
பரதவர்களோடு சேர்ந்து உங்களையும் உண்ணுமாறு செய்வாள். அத்துடன் கருவாட்டையும் சுட்டுத் தருவாள். இந்த விருந்தினை நீங்கள் ஆங்காங்கே பெறுவீர்கள். கிடங்கில் என்பது இப்போதுள்ள திண்டிவனம். கிடங்கில் கோமான் என்பவன் நல்லியக்கோடன்.
எயில்பட்டினம் அவன் நாட்டுத் துறைமுகம். உண்டபின் அவர்களோடு சேர்ந்து நீங்களும் கிடங்கின் கோமகனாகிய நல்லியக் காடனைப் பாடுங்கள். குழல் ஊதுங்கள். அவன் கட்டவிழும் பூமாலை அணிந்திருப்பதைப் பாடுங்கள்.
கரு நனைக் காயா கண மயில் அவிழவும், . . . .[165]
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவும்,
செழுங்குலைக் காந்தள் கை விரல் பூப்பவும்,
கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும்,
முல்லை சான்ற முல்லை அம் புறவின்
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச் . . . .[170]
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்
திறல் வேல் நுதியின் பூத்த கேணி,
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங் . . . .[165]
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரற் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவும்
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் . . . .[170]
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
பொருளுரை:
எயிற்பட்டினத்துக்குப் பின்னர் முல்லை நிலத்தைக் கடந்து வேலூர் செல்லவேண்டி வரும். இந்த வேலூர் நல்லியக்கோடனால் வேல் வீசி வெல்லப்பட்டது. இந்த வேல் வெற்றிவேல். மற்றொரு வேல் திறல்வேலாகிய கல்லுளி.
கல்லுளியைக் கொண்டு கேணி வெட்டி வேலூர் மக்கள் தண்ணீர் பூக்கும்படி செய்தனர். கேணி தோண்டிய திறல்வேல், நல்லியக்கோடன் வெற்றி கொண்ட விறல்வேல் ஆகிய இரண்டு காரணங்களால் கடலூர் மாவட்டத்து வேலூர் (இக்காலத்தில் சிற்றூர்) வேலூர் என்னும் பெயரைப் பெற்றிருந்தது. வேலூர்ப் பகுதியை முல்லைநிலம் என்றும் பாடல் காட்டுகிறது.
வேலூரைச் சார்ந்த முல்லைநிலம் எப்படி யிருந்தது? அவரையில் பவளப்பூக்கள் பூத்தன. இளங்கொழுந்துள்ள அவரைக் கொடியில் செம்பவழம் பூத்துக் கிடப்பது போல் செந்நிற அவரைப்பூ பூத்துக்கிடக்கும்.
கருநீலக் காயாம்பூச்செடி ஆங்காங்கே மயில்கள் ஆடுவதுபோல் புதர்புதராகப் பூத்துக் கிடக்கும். முசுண்டைக் கீரை கொழுத்துச் சுருண்டு கிடக்கும். காந்தள் பூவின் குலை கைவிரல் போலப் பூத்துக் கிடக்கும்.
பயன்படுத்தப் படாத கொல்லைப்புறத்து வழிகளில் கோபம் என்று சொல்லப்படும் தம்பலப் பூச்சிகள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும். அதுதான் முல்லைப் பூத்துக் கிடக்கும் முல்லைப் புறவு.
அகன்ற மலைப்பிளவுகளில் காலூன்றி நடந்த அருவியின் நீர் முல்லை நிலத்துக்கு வந்து சேராமல் மலையிலேயே மூழ்கிப் போகும். தெற்குப் பக்கம் இறங்கிச் சென்று கொண்டிருந்த சூரியன் தன் வழித்தடத்தை வடக்குப் பக்கமாகத் திருப்பி வந்துகொண்டிருந்த காலம் அது.
(உத்தராயணம்) திறல் வேலால் கேணி தோண்டியும், விறல் வேலால் வெற்றி கண்டும் நல்லியக்கோடன் பெற்ற ஊர் வேலூர். அந்த வேலூரை அடைந்தால்..................
எயிற்றியர் அட்ட இன் புளி வெஞ்சோறு, . . . .[175]
தேமா மேனி சில் வளை ஆயமொடு,
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் . . . .[164 - 177]
யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்சோறு . . . .[175]
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
பொருளுரை:
வேலூர்ப் பகுதியானது முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டிருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத்திலேயே முடங்கிக் கிடக்கும்.
வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம்.
குறுங்கால் காஞ்சிக் கொம்பர் ஏறி,
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து, . . . .[180]
புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல்,
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை,
முள் அரைத் தாமரை முகிழ் விரி நாட் போது
கொங்கு கவர் நீலச் செங்கண் சேவல்,
மதி சேர் அரவின் மானத் தோன்றும், . . . .[185]
மருதம் சான்ற மருதத் தண் பணை,
அந்தணர் அருகா அருங்கடி வியன் நகர்,
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து . . . .[180]
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்றும் . . . .[185]
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
பொருளுரை:
நல்லியக்கோடனின் ஆமூர் மருத நிலவளம் மிக்க ஊர். அங்கு உயரமில்லாமல் வளர்ந்திருந்த காஞ்சி மரத்தில் ஆழமான நீர்நிலையின் பக்கமாகச் சாய்ந்திருந்த கிளையில் அமர்ந்திருந்த சிரல் என்று சொல்லப்படும் மீன்கொத்திக் குருவி அம் மரத்தடிப் பொய்கையிலிருந்த மீனைக் கொத்தப் பாய்ந்தது.
அதன் கால் நகம் தாமரை இலையைக் கிழித்தது. மீனைக் கொத்திக் கொண்டு அங்கே அன்று மலர்ந்த தாமரைப் பூவின்மேல் அமர்ந்தது. அதன் குருவி-நீல நிறம். நிலாவைப் போல் மலர்ந்திருந்த தாமரையை அது மறைத்தது. இச்செயல் கிரகண நாளில் நிலாவைப் பாம்பு மறைத்துவிட்டு விலகுவது போல இருந்தது.
இத்தகைய நீர்வளம் மிக்க ஊர்தான் ஆமூர். அவ்வூருக்கு அகழியும் உண்டு. அங்கு அந்தணர்கள் வருவதில்லை. உழவர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அங்குச் சென்றால்….
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, . . . .[190]
பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்
தொடிக் கை மகடூஉ, மகமுறை தடுப்ப,
இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர். . . .[178 - 195]
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை . . . .[190]
பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
யிருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
வவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையொடு பெறுகுவி . . . .[195]
பொருளுரை:
அவர்களின் எருதுகள் பாரம் தாங்கி இழுக்கும் வல்லமை பெற்றவை. இத்தகைய எருதுகளைப் பூட்டி ஆமூர் உழவர்கள் நிலத்தை உழுவார்கள். அவர்களின் தங்கைமார் தம் தலைமுடியைப் பின்னிப் பின்புறம் தொங்கவிட்டிருப்பர்.
அச்சடை யானையின் துதிக்கை போலத் தொங்கும். அவர்கள் உங்களைத் நீங்கள் பெற்ற மக்கள் போல எண்ணித் தடுத்து நிறுத்தி உணவளிப்பர். உலக்கைப் பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றிப் போடுவதைப் பெறுவீர்கள்.
கரு மறிக் காதின், கவை அடிப் பேய் மகள்,
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல,
பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர் பணைத்தாள்
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப, . . . .[200]
நீறு அடங்கு தெருவின், அவன் சாறு அயர் மூதூர்
சேய்த்தும் அன்று, சிறிது நணியதுவே . . . .[196 - 202]
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ண லியானை யருவிதுக ளவிப்ப . . . .[200]
நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
பொருளுரை:
நல்லியக்கோடனின் மாவிலங்கை அந்த ஆமூரிலிருந்து அதிக தொலைவிலுள்ளது அன்று. பக்கத்தில்தான் உள்ளது. மாவிலங்கைப் பேரூரில் எப்போதும் நல்லியக்கோடனின் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நிகழும். விழாக் காலங்களில் தெருவில் புழுதி அடங்குவதற்காக நீர் தெளிப்பர்.
அதன் மீது யானைகள் நடப்பதால் புழுதிகள் மேலும் அடங்கும். அத்தெருவில் நடக்கும் யானைகள் எப்படிப் பட்டவை தெரியுமா! பேய்மகள் போன்றவை. பேயின் நாக்கு எரியும் தீயை இழுத்து வைத்திருப்பது போல இருக்கும். பல் பளிச்சென்று வெளியே தெரியும்.
காது கருமைநிற வெள்ளாட்டுக் காது போல் இருக்கும். காலடி கவட்டை போல் பிளவுபட்டிருக்கும். காலில் இருக்கும் பெரிய நகங்களால் பிணத்தைக் கிளறி அது உண்ணும். இந்தப் பேய் பிணத்தின் கறியை உண்டு சிரிப்பது போல யானை பிளிறிக்கொண்டு தெருவில் நடக்கும்.
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன, . . . .[205]
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, . . . .[203 - 206]
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன . . . .[205]
வடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
பொருளுரை:
நல்லியக்கோடனின் அரணமனை வாயில் எப்போதும் இமயமலை பிளவு பட்டிருபது போல் திறந்தே இருக்கும். என்றாலும் எல்லாரும் எளிதில் உள்ளே சென்றுவிட முடியாது. பொருநர். புலவர் அந்தணர் ஆகியோர் மட்டும் தடையின்றி உள்ளே செல்லலாம்.
இன்முகம் உடைமையும், இனியன் ஆதலும்,
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த,
அஞ்சினர்க்கு அளித்தலும், வெஞ்சினம் இன்மையும், . . . .[210]
ஆண் அணி புகுதலும், அழிபடை தாங்கலும்,
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
கருதியது முடித்தலும், காமுறப்படுதலும்,
ஒருவழிப் படாமையும், ஓடியது உணர்தலும்,
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த . . . .[215]
அறிவு மடம் படுதலும், அறிவு நன்கு உடைமையும்,
வரிசை அறிதலும், வரையாது கொடுத்தலும்,
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த
பன் மீன் நடுவண் பால்மதி போல
இன்நகை ஆயமொடு இருந்தோற் குறுகி . . . .[207-220]
மின்முக முடைமையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
வஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு . . . .[210]
மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
மரியே ருண்க ணரிவைய ரேத்த . . . .[215]
வறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவண் பான்மதி போல
வின்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் . . . .[220]
பொருளுரை:
பாணர்களே! கோட்டை வாயிலில் நுழைவதற்கு உங்களுக்குத் தடை இல்லை. எனவே உள்ளே சென்றால் நல்லியக்கோடனைக் காணலாம். விண்மீன்களுக்கு இடையே வெண்ணிலா விளங்குவது போல அவள் தன் சுற்றத்தாருக்கு இடையேயும், அவனிடம் பரிசில் பெற்று அவனை வாழ்த்தும் பரிசிலர்களிடையேயும் இருப்பதைக் காணலாம்.
அவன் எத்தகைய பண்புகளைப் பெற்றவன் தெரியுமா!, செய்ந்நன்றி மறவாதவன். சிற்றினத் தொடர்பு இல்லாதவன். இன்முகம் காட்டுபவன். இனியனாக நடந்து கொள்பவன். சிறப்புகள் குவிந்தாலும் செறிவோடு விளங்குபவன். அறிந்தவர்களின் போற்றுதல்களைப் பெற்றவன்.
அஞ்சியவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவன். அவனிடம் சினம் இருக்கும். அதில் கொடுமை செய்யும் வெஞ்சினம் இருக்காது. அணி செய்து தன்னை அழகுபடுத்திக் கொள்வான். அழிக்க வரும் படையைத் தானே முன்னின்று தாங்குவான்.
வாளால் புகழ் பெற்ற வயவர்கள் இவனைப் பாராட்டிப் புகழ்வர். எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவன். எல்லாரும் ஆசை கொள்ளும் பாங்கு உள்ளவன். நடுவு நிலைமையிலிருந்து பிறழாதவன். நிகழ்ந்ததை உணர்ந்து தீர்ப்பறம் கூறவல்லவன்.
பெண்கள் புகழும்போது இவன் ஒன்றும் அறியாதவனாக மாறிவிடுவான். பிறரிடம் தன் அறிவாற்றலைப் புலப்படுத்துவான். வரிசை அறிந்து கொடை வழங்குவான். இவ்வளவு தான் தரவேண்டும் என்று வரையறை செய்யாமல் வழங்குவான். அவன் அருகில் சென்று...............
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, . . . .[225]
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு, தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி ஆனாது . . . .[221 - 230]
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் . . . .[225]
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொள் ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது . . . .[230]
பொருளுரை:
நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் மீட்டுங்கள். பல இசைக்கருவிகளும் ஒத்தியங்க மீட்டுங்கள். ஏழு பண்களில் முதல் பண்ணாகிய குரல் பண்ணில் தொடங்கி வாயிலிருந்து பாடிவரும் குரலிசைக்கு ஏற்ப யாழ் மீட்டிப் பண் பாடுங்கள்.
பாடிப்பாடிப் பண்ணின் துறைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள் நீங்கள். இசைநூல்களில் கூறப்படும் மரபுப்படி பாடுபவர்கள் நீங்கள். உங்களிடம் உள்ளது பண்ணின் பயன் தெரிந்த கேள்வி. (யாழ்) கேள்வியாழ் ஊகக் குரங்கு போலவும், யாழில் கட்டப்பட்டுள்ள நரம்பு அக்குரங்கு பிடித்திருக்கும் பாம்பு போலவும் காணப்படும்.
பாம்பின் தலையும் வாலும் வெளியில் நீட்டுக் கொண்டிருக்கும்படி குரங்கு யாழைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, யாழில் கட்டியிருக்கும் நரம்பு மேலும் கீழும் அவிழ்ந்திருக்கும். யாழ் வளைவின் உள்பகுதி யாழுக்கு வயிறு.
அதன் அகலப் பகுதியில் குமிழம் பழம் போல் நரம்பைக் கட்டியிருக்கும் திருகாணிகள் இருக்கும். அந்த ஆணிகள் யாழில் திருகப்பட்டிருக்கும் துளைப்பகுதியில் நீலநிற மணிகளை வரிசைப்படுத்தி வைத்திருப்பது போன்ற துளைவட்டங்கள் இருக்கும்.
இத்தகைய வனப்புள்ள யாழைப் போர்த்தியிருக்கும் பச்சை நிறப் போர்வையில் புகழத்தக்க கைவினை வேலைப்பாடுகள் பொதிந்திருக்கும். தாயின் முலைநரம்புகளில் அமிழ்தம் பொதிந்திருக்கும். குழந்தைக்கு இலிற்றும் அமிழ்தம் ஒருவகை.
கணவனுக்கு இலிற்றும் அமிழ்தம் ( தேன் ) மற்றொரு வகை. அதுபோல அடங்கிச் சுருண்ட யாழின் நரம்புகளிலிருந்து அமிழ்தம் இலிற்றும். மேலும் இந்த அமிழ்தத்தில் தேனும் கலக்கப்பட்டிருக்கும். குரலிசைக்கு ஏற்பக் குரல் பண்ணிசையில் தொடங்கிப் பாடுங்கள்.
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்,
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்,
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்,
நீ சில மொழியா அளவை மாசில் . . . .[231 - 235]
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசிற் . . . .[235]
பொருளுரை:
அவன் முன் நீங்கள் பாடும்போது இயல்பாகவே உள்ள அவனது பண்புகளைப் பாராட்டிச் சில சொற்களைக் கூறுவீர்கள். முதியோரை வணங்க மொட்டுப்போல் மூடிக் கும்பிடும் கையையுடையவனே! இளையோரைத் தழுவுவதற்காக மலர்ந்து விரியும் மார்பினை உடையவனே! உழவர்களுக்கு நிழல் தரும் செங்கோலை உடையவனே! தேர்ப்படை எதிரிகள் முன் அழல் கக்கும் வேலினை உடையவனே! இப்படி ஒருசில சொல்லத் தொடங்கும் போதே அவன் கொடை நல்கத் தொடங்கிவிடுவான்.
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் . . . .[240]
பனுவலின், வழாஅப் பல் வேறு அடிசில்
வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து,
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி . . . .[236 - 245]
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் . . . .[240]
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றானின் றூட்டித் . . . .[245]
பொருளுரை:
முதலில் புத்தாடை உடுத்திக்கொள்ளச் செய்வான். அது மூங்கிலில் உரியும் தோல் போல் இருக்கும். பாம்பு வெகுண்டால் கடிக்கும். கடிபட்டவர் வாயில் நுரை தள்ளும். அந்த நுரையைப் போல நுதிக்கும் அரிசிச் சோற்றுக் கஞ்சித் தேறலை நல்குவான். (இது இக்காலத்தில் உணவிடுவதற்கு முன்பு வழங்கப்படும் சூப் போன்றது).
பின்னர் பொன் வட்டிலில் அடிசில் படைக்கப்படும். ஒளி மிக்க வானத்தில் கோளும் மீனும் சூழ்ந்து விளங்குவது போல பொன்வட்டில்களைப் பரப்பி அதில் உணவு அளிக்கப்படும். கறிகாய்க்கூட்டுப் பொறியலுடன் கூடிய உணவுக்கு அடிசில் என்று பெயர். அந்த அடிசில் முன்னோன் ஒருவன் எழுதிய சமையல் நூலில் கூறப்பட்டுள்ள முறைமையிலிருந்து சற்றும் வழுவாமல் சமைக்கப்பட்டது.
அந்த ஒருவன் தனது அம்பை எய்து காட்டை எரியூட்டியவன். அவன் எய்த அம்பு பிளவுபட்ட கவட்டை முனை கொண்டது. அவன் தன் தோளின் பின்புறம் அம்பறாத் தூணியை அணிந்திருந்தான். மலர்ந்த பூமாலைக் கச்சத்தைத் தன் இடுப்பில் கட்டியிருந்தான்.
இவனது அண்ணன்தான் அடிசில் நூலின் படைப்பாளி. இவன் பனிவரை மார்பன் என்று சிறப்பித்துக் கூறப்படுபவன். அவன் தன் நூலில் சமையல் கலையின் நுட்பங்களைக் குறிப்பிட்டிருந்தான். (சமையல் நூலின் ஆசிரியன் யார் என்பது விளங்கவில்லை, கா எரியூட்டியவன் அருச்சுனன் அவன் அண்ணன் வீமன் சமையல் கலையில் வல்லவன் என்றும் கூறப்படிகிறது).
கா எரியூட்டியவன் நளன் என்றால் அவனது அண்ணன் சமையல் நூலை எழுதியவன் என முனியும். இந்த சமையல்நூல் குறிப்புகளில் பழகிச் சமைத்த உணவை நல்லியக்கோடன் தானே முன்னின்று உங்களுக்கு ஊட்டுவான். ஊட்டுவதில் அவனுக்கிருந்த ஆசை நிறைவடைவதே யில்லை. இன்னும் ஊட்டியிருக்கலாம் , இப்படி இப்படியெல்லாம் ஊட்டியிருக்கலாம் என்று தனக்குத்தானே குறைபட்டுக் கொள்ளும் ஆசை கொண்டவன்.
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்,
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
பொருளுரை:
நயவர்கள் எனப்படுவோர் பகைவர்களை அகன்றோடச் செய்தும், வேல் வலிமை மிக்க மன்னர்களின் கோட்டையைத் தாக்கியும் தன் திறமை மிகுதியால் வெற்றி கண்டவர்கள். இப்படித் தன்னை நயந்து தனக்குத் துணையாக இருக்கும் நயவர்களுக்கும், பாணர்களுக்கும் ஊட்டுவான். பரிசும் வழங்குவான்.
பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி . . . .[250]
உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, . . . .[255]
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழி நடைப் பாகரொடு
மா செலவு ஒழிக்கும் மதனுடை நோன் தாள்
வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ . . . .[260]
அன்றே விடுக்குமவன் பரிசில் மென் தோள் . . . .[246 - 261]
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி . . . .[250]
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல . . . .[255]
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ . . . .[260]
யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட்
பொருளுரை:
பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்க வைக்காமல் அன்றே பரிசில் நல்கி அனுப்பி வைப்பான். பரிசுப் பொருள்களையும் உங்களையும் பாண்டில்-வண்டியில் ஏற்றி அனுப்பி வைப்பான். அவன் தரும் பரிசுப் பொருள்கள், வீரர்களின் திறத்தால் பெற்றவை.
இது மாடு பூட்டிய பாண்டில் நல்லியக்கோடன் பரிசிலுடன் ஏற்றி அனுப்பிவைப்பது குதிரை பூட்டிய பாண்டில் பாண்டில் (கூட்டுவண்டி) அவற்றைப் பரிசில் பொருள்களாக ஏற்றி அனுப்பிவைக்கும் வண்டி கார்மேகம் கவிந்த வானத்தில் பால்கதிர் பரப்பிக்கொண்டு உலாவரும் மதியம் போலச் செல்லும்.
வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் குடத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் குடம் கூர் உளிக் குறடு கொண்டு செதுக்கிய வேலைப்பாடு கொண்டது. இப்படிச் செதுக்கியவர் கருந்தொழில் வினைஞர். இது கைத்திறத் தொழில் (கைவினை).
முருக்கம் பூ பூத்திருப்பது போன்ற வேலைப்பாடுகள் சக்கரக் குடத்திலும், பாண்டில் வண்டி மூடாக்கிலும் உண்டு. பாண்டில்-வண்டிப் போர்வைத் துணியிலும் சிவப்புத் துணிக் கலைத்தொழில் நிறைந்திருக்கும்.
குதிரை பூட்டிய அந்தப் பாண்டில்-வண்டியை ஓட்டிச் செல்ல ஓட்டிப் பழக்கப்பட்ட பாகனையும் அவனே அனுப்பி வைப்பான். பாண்டிலானது வாள் போன்ற முகப்புத் தோற்றம் கொண்டிருக்கும். போகும்போது நடந்து செல்கிறீர்கள். வரும்போது தேரில் வருவீர்கள்.
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடைப் பரப்பி,
துணி மழை தவழும் துயல் கழை நெடுங்கோட்டு, . . . .[265]
எறிந்து உரும் இறந்து ஏற்று அருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான், கொய் தளிர்க் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின்
நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே. . . .[262 - 269]
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாபம் மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழும் துயல்கழை நெடுங்கோட் . . . .[265]
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி்
னல்லியக் கோடனை நயந்தனிர் செலினே.
பொருளுரை:
குறிஞ்சிக் கோமான் - குறிஞ்சிக் கோமான் என்று சிறப்பிக்கப்படுவதால் நல்லியக்கோடன் மலைநாட்டுத் தலைவன் என்பது புலனைகிறது. மனிதப் பெண் - மகளிர் இடுப்புறுப்பு துளங்கும். அது துளங்கும் நொடிப்பிற்கு ஏற்ப அதன்மேல் துகிலாடை.
அம்மகளிர் குளித்தபின் தம் கூந்தலை அகில் கட்டை புகையும் நறுமணப் புகையில் உலர்த்துவர். மயில் பெண் - மயிலானது மகளிரின் துகிலாடை உடுத்திய இடையைப்போலத் தன் தோகையை விரித்து ஆடும்.
அவர்களின் கூந்தலுக்குள் அகில் புகை நுழைவது போல் மஞ்சு எனப்படும் வெண்மேகக் குருட்டு மாசிகள் மயில் விரித்தாடும் தோகைக்குள் நுழையும். மலைப்பெண் - அவனது மலையாகிய பெண் மூங்கில் காட்டைத் தன் இடைத்துகிலாக உடுத்தியிருப்பாள்.
அம் மூங்கில் காடு காற்றில் அசைந்தாடும்போது மழை பொழியும் மேகத்துணி அதில் அசைந்தாடும். இந்த மூன்று ஆட்டங்களும் ஒத்திசைக் கூட்டித் தருவது போல் இடியிசை முழக்கம் இருக்கும். அது அவனது மலைமுகட்டில் மோதி எதிரொலித்து இறந்துபோகும்.
குறிஞ்சிக் கோமானாகிய நல்லியக்கோடன் கொய்துக் கொண்டுவந்த தளிர்மாலையைத் தன் அடையாளப் பூவாகத் தலையில் அணிந்திருப்பான். (அந்தத் தளிர்மாலையை மருக்கொழுந்து மாலை என்றோ, மாந்தளிர் மாலை என்றோ கருதிப் பார்க்கலாம்).
ஒருவருக்கு அவர் வாழும் காலத்தில் செல்லுபடியாகும் புகழிசை நாளடைவில் மறைந்து போகும். நல்லியக்கோடனின் புகழிசை\யோ என்றும் நிலைபெற்றிருக்கும். காரணம், அது அவனது பண்பினால் வந்தது. கொடை நல்கி வாங்கியது அன்று.
அவனிடம் நீங்கள் விரும்பிச் சென்றால் உங்களது வாழ்க்கையானது வளம் பெறத்தக்க வகையில் பரிசில் பெறுவீர்கள். போகும்போது நடந்து செல்லும் நீங்கள் வரும்போது தேரில் வருவீர்கள்.
சிறுபாணாற்றுப்படை நூலின் முடிலில் இரண்டு வெண்பாப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை பத்துப்பாட்டு என்னும் தொகுப்பினைச் செய்தவர் காலத்தவை. சுமார் 200 ஆண்டுகள் பிற்பட்டவை. இரண்டும் அகப்பொருள் சார்ந்த பாடல்கள். பெண் ஒருத்தி நல்லியக்கோடன் மீது காதல் கொண்டு சொல்வதாக அமைந்துள்ளன.
தணி மருந்தும் தாமே ஆம் என்ப-மணி மிடை பூண்
இம்மென் முழவின் எயிற்பட்டின நாடன்
செம்மல் சிலை பொருத தோள். . . .[1]
தணிமருந்துந் தாமேயா மென்ப- மணிமிடைபூ
ணிம்மென் முழவி னெயிற்பட் டினநாடன்
செம்மல் சிலைபொருத தோள் . . . .[1]
பொருளுரை:
நேர்த்தியான அணிகலன்களைப் பூண்ட பெண்மணிகளை வருத்தும் அழகு கொண்டு காமநோய் உண்டாக்கும் ஆண்தெய்வமாக எயிற்பட்டின நாடன் திகழ்கிறான். மற்று, அவனே அந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் விளங்குகிறான். அவர்களை வருத்தியவை அவனது செம்மாந்த தோள். சிலை (வில்) மாட்டிக்கொண்டிருக்கும் தோள். மணி பதித்த பூண் அணிந்த தோள். ‘இம்’ என்று அருவி முழங்கும் நாடன் அவன்.
படும், அடும் பாம்பு ஏர் மருங்குல்-இடு கொடி
ஓடிய மார்பன் உயர் நல்லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும் . . . .[2]
படுமடும் பாம்பேர் மருங்கு- லிடுகொடி
யோடிய மார்ப னுயர்நல் லியக்கோடன்
சூடிய கண்ணி சுடும் . . . .[2]
பொருளுரை:
சந்தனம் பூசிய அவனது மார்பு அவளது நெஞ்சத்தைக் குளிரவைத்தது. படமெடுத்தாடும் பாம்பு போன்ற அவளது அல்குல் இடையை மறைத்துக்கொண்டிருக்கும் கொடியாடையை நழுவும்படிச் செய்கிறான். அவன் தலையில் சூடிய கண்ணிமாலை அவளைச் சுட்டெரிக்கிறது. அவன்மீது அவளுக்குக் காமம்.








