பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
பொருநராற்றுப்படை
பாடியவர்:- முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன்:- சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை:- பாடாண்திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 248
சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்
சங்கத்தமிழ்
பொருநராற்றுப்படை
பாடியவர்:- முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன்:- சோழன் கரிகால் பெருவளத்தான்
திணை:- பாடாண்திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 248
பொ. வே. சோமசுந்தரனார் உரை - பத்துப்பாட்டில் இரண்டாம் பாட்டாகத் திகழும் இப்பொருநராற்றுப்படையை யாத்தவர் முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப் புலவராவார். இவரைப் பெண்பாற் புலவர் என்று கூறுவரும் உளர். தொல்காப்பிய உரையின்கண் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், இடையியல் 22 - இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே, சேனாவரையர் உரை) ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப் பட்டிருப்பதால் இவர் பெயர் முடத்தாமக் கண்ணி என்பதாம் என்பர்.
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந
பொருளுரை:
புதுப்புது வருவாய் வளம் பொலிந்தோங்கும் பேரூரில் விழா நடந்து முடிந்த மறுநாள் சோறு கிடைக்காமல், விழாவில் பங்கு கொண்ட கலைஞர்கள் விழா நடைபெறும் வேறு ஊரை நாடிச் செல்வது வழக்கம். இந்தப் பாட்டில் ஆற்றுப்படுத்தப்படும் பொருநன் அப்படிச் செல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் ஆற்றுப்படுத்தும் புலவர் கூறுகிறார். பொருந கேள்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை . . . .(5)
யெய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
யளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி . . . .(10)
யெண்ணாட் டிங்கள் வடிவி்ற் றாகி
யண்ணா வில்லா வமைவரு வறுவாய்ப்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோண் முன்கை யாய்தொடி கடுக்குங்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவி . . . .(15)
னாய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பிற்
கேள்வி போகிய நீள்விசைத் தொடையன்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
வணங்குமெய்ந் நின்ற வமைவரு காட்சி . . . .(20)
பொருளுரை:
பந்தல், பச்சை, வயிறு, போர்வை, ஆணி, வறுவாய், திவவு, வேய்வை, நரம்பு, தொடையல் முதலான உறுப்புகளுடன் யாழ் எவ்வாறு கவர்ச்சியாக அமைந்திருந்தது என்பது முதலில் கூறப்படுகிறது. பந்தல் - பிளவுபட்ட குளம்பு போல் இருந்தது. பச்சை - எரியும் விளக்கின் சுடர் போல் இருந்தது. வயிறு - நிறைமாதத் தாயின் வயிறு போல் இருந்தது. போர்வை - யாழின் வயிற்றில் போர்த்தப்பட்டிருந்தது. அது சூலுற்ற திருமகளின் வயிற்றில் மென்மயிர் ஒழுகியது போன்ற பொன்னிற வெல்வெட்டுத் துணியாலான போர்வை.. ஆணி - வலையிலுள்ள நண்டுக்கண் போல் இருந்தது. அது அடிக்கப்பட்ட துளைவாயை மூடி தூர்த்துக் கிடந்தது. வறுவாய் - எட்டாம் நாள் தோன்றும் குறைவட்ட நிலாவைப் போல் இருந்தது. திவவு - பாம்பில் படுத்திருக்கும் மாயோன் கைவளையல் போல் இருந்தது. வேய்வை - இது நரம்பில் உளரும்போது விரலில் அணியும் கவசம். அது தினையரிசி அவியல் போன்றது. நரம்பை நெருடும் நுனியை உடையது. தொடையல் - நரம்பானது யாழில் தொடுக்கப்பட்டிருக்கும் பகுதி. இதன் இடத்தைப் பொறுத்துத்தான் யாழின் கேள்வியிசை பிறக்கும். மொத்தத்தில் யாழானது பூப்பு மணம் கமழும் பெண்ணை நீராட்டி அணங்கு (அழகு) செய்து வைத்திருப்பது போல் பொலிவுற்றிருந்தது.
மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை . . . .(4 - 22)
சீருடை நன்மொழி நீரொடு சிதறி . . . .(23 - 24)
பொருளுரை:
வழியில் செல்லும்போது பொருநன் இத்தகைய யாழை மீட்டிப் பாடிக்கொண்டு செல்வான். அப்போது பாலைப்பண் பாடுவது வழக்கம். வழியில் ஆறலை கள்வர் படைகொண்டு தாக்குவதிலிருந்து விடுபடுவதற்காகத் தான் பொருநன் அதாவது பறைக்கலைஞன் எனக் காட்டிக் கொள்ளும் வகையில் இவ்வாறு யாழில் பாலைப்பண் பாடிக்கொண்டு பொருநர் கூட்டம் செல்லும் எனப் பாடல் தெரிவிக்கிறது) இதனால் ஆறலைக் கள்வர் அருள் காட்டுவர். வழிப்பறி செய்வதிலிருந்து மாறுபடுவர். இன்னலின்றிப் பொருநர் பெயர்ந்து செல்ல விட்டுவிடுவர். மேலும் இவர்களது பாலைப்பண் கள்வர்களையும் மருவச் செய்யும். இதனால் பொருநர்க்கு உதவும் நண்பராகிவிடுவர். வாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும் யாழிசை கூட்டுதல் மரபு. அத்துடன் ஈர நன்மொழிகளை (அன்பு கலந்த சொற்களை) நீர்மை கலந்து பண் கூட்டி வாயால் பாடிக்கொண்டும் செல்வர்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்க
ணிலவிதழ் புரையு மின்மொழித் துவர்வாய்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை யூசற் பொறைசால் காதி . . . .(30)
நாணடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தி
னாடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தண் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகி
ரணங்கென வுருத்த சுணங்கணி யாகத் . . . .(35)
தீர்க்கிடை போகா வேரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூ
ழுண்டென வுணரா வுயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்கு
லிரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற் . . . .(40)
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
யரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்கு . . . .(45)
ணன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி . . . .(25 - 47)
பொருளுரை:
பொருநன் என்பவன் யாழை மீட்டிக்கொண்டும், பாடும் பாடலின் கருத்து புலப்படுமாறு நடித்துக் கொண்டும், யாழின் பண்ணிசைத் தாளத்திற்கேற்பக் காலடித் தாளம் போட்டுக்கொண்டும் ஆடுபவன் எனபதைப் பாடலால் உணர முடிகிறது, அன்றியும் பறை முழக்கும் கூட்டத்தவனாகவும் காணப்படுகிறான். பாடினி பொருநனின் மனைவி. அவளும் அவனோடு சேர்ந்து ஆடுவாள். இங்குள்ள பாடலடிகள் வழிநடை மேற்கொண்டிருந்த பாடினியின் பொலிவைப் புலப்படுத்துகின்றன.
அவள் கூந்தல் ஆற்றுமணல் படிவுபோல் நெளிநெளியாக இருந்தது நெற்றி பிறைபோல் இருந்தது. புருவம் கொல்லும் வில்லைப்போல் வளைந்திருந்தது எனினும் கடைக்கண்ணில் மழைபோல் உதவும் கொழுமை இருந்தது. வாய் இலவம் பூவின் இதழ்போல் சிவந்திருந்தது. அதிலிருந்து இனிய சொற்கள் மலர்ந்தன. வெண்பற்கள் முத்துக் கோத்தாற்போல் இருந்தன. பல்வரிசை பழிக்க முடியாதவாறு ஒழுங்காக இருந்தது. காதுக்குப் பாரமாகக் குழை ஊசலாடிக் கொண்டிருந்தது. குழை மயிர் வெட்டும் கத்தரிக்கோல் போலக் காதில் தொங்கியது. அவளது நாணம் காண்போரை அழித்துக் கொண்டிருந்தது. அதற்காகவோ, அதனாலோ அவளது கழுத்து ( எருத்து ) குனிந்திருந்தது. பருத்த தோள் வளைந்தாடும் மூங்கிலைப் போல் இருந்தது. முன்கையில் பொசுங்கு மயிர்கள் முடங்கிக் கிடந்தன. மென்மையான விரல்கள் மலையில் மலர்ந்த காந்தள் மலர் போன்றவை. விரலில் ஒளிரும் நகம் கிளியின் வாயைப் போல் குழிவளைவு கொண்டது. கிளியின் வாயைப் போல் சிவந்தும் இருந்தது. நெஞ்சிலே பொன்னிறப் பொலிவு (சுணங்கு) இருந்தது. (இலை தைக்க உதவும் சோளத் தட்டையின் ஈர்க்கை நாம் அறிவோம்) ஈர்க்கும் இடை நுழைய முடியாதபடி மார்பகங்கள் இணைந்திருந்தன. அவை எடுப்பான மார்பகங்கள். வயிற்றிலிருந்து கொப்பூழ் தண்ணீர் சுழலும் சுழிபோல் இருந்தது. அசைந்தாடும் இடை உண்டோ என்று எண்ணும்படி இருந்தது. அல்குல் துணியின் மேல் வைரமணிக் கோவை (காழ்) இருந்தது. (இந்தக் காழ் இரண்டு கால்களின் தொடைகளுக்கு இடையே ஆடைக்கு மேல் தொங்கும்) யானைக்கு இரண்டு துதிக்கை இருப்பதுபோல் கால் தொடைகள் (குறங்கு) காலில் பொருந்தி ஒழுகும் மயிர். (ஒப்பு நோக்குக - கையில் அரிமயிர்) இளைப்பு வாங்கும் நாயின் நாக்கைப்போல் மென்மையான காலடிகள். அரக்கை உருக்கி வைத்திருப்பது போன்று பொடிசுடும் செந்நிலத்தில் அவள் ஒதுங்கி ஒதுங்கி நடந்து செல்கிறாள். அப்போது பருக்கைக் கற்கள் தன்னை மிதிக்கிறாளே என்று அவளுக்குப் பகையாகிக் காலில் உருத்துகின்றன. அந்தத் துன்பத்தோடு சேர்ந்து அவளது காலடியில் நீர்க்கொப்புளங்கள் போட்டுவிடுகின்றன. அவை கானல் நீரின் பழங்கள் போல் உள்ளன. அதனால் அவளுக்காக அவர்களின் குழு நண்பகல், அந்தி வேளைகளில் நடந்து செல்வதில்லை. காலை வேளைகளில் பெண்மயில் போல் ஆடாமலும், அலுங்காமலும் பதனமாக நடந்து சென்றனர்.
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
யிலையின் மராத்த வெவ்வந் தாங்கி . . . .(50)
வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப் . . . .(48 - 52)
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
யரசவை யிருந்த தோற்றம் போலப் . . . .(55)
பாடல் பற்றிய பயனுடை யெழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
பொருளுரை:
எழாஅல் தலைவ, கோடியல் தலைவ, புகழ் மேம்படுந, ஏழின் கிழவ என்றெல்லாம் பொருநனை விளித்து அவனை ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். வழியில் கடவுட் கடன் புலவரும் பொருநர் கூட்டமும் நிழலைத் தேடிச் சென்றனர். நாள்தோறும் யானைகள் நடமாடும் காடு அது. பாடினி பாட்டுப் பாடினாள். அப் பாட்டிசைக்கு ஏற்பவும், யாழிசைக்கு ஏற்பவும் காட்டு வழியில் யானைகள் நடைபோட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டே வந்தன. யானையின் நிழலில் அல்கி அவர்கள் இளைப்பாறுவதும் உண்டு. கானத்தில் இலை உதிர்ந்த மராம் மரங்கள் இருந்தன. அம் மரங்களால் கிடைத்த நிழல் வலைவிரிப்பின்கீழ்க் கிடைக்கும் நிழல்போல் இருந்தது. வெயிலின் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சென்ற அவர்கள் அந்த அருநிழலில் தங்கி இளைப்பாறினர். அங்கே கடவுளுக்கு அமைத்த கற்கோயில் இருந்தது. (மராமர நிழல் என்பதால் அது மலைக்கடவுள் முருகன் கோயிலாக இருக்கலாம்) அங்கே தம் இசையை எழுப்பி அந்தக் கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து முடித்தனர். கோடியர் தலைவ, கேள் மூவேந்தர் தம் பெருமை மிக்க செல்வத்தால் பெரும்பெயர் பெற்று, எதையும் தாங்கும் இதயத்தோடு முயற்சி மேற்கொண்டு ஒழுகுபவர்கள் அத்தகைய மூவேந்தரும் ஒன்று கூடியிருக்கும்போது அவர்களது படையானது முரசை முழக்கும்போது எழுச்சி மிக்க இசை எழும்புவது போல, பொருநர் தம் எழால் முரசை முழக்கியும், யாழை மீட்டியும் பாடிக்கொண்டு கோடியல் தலைவனோடு பொருநர் கூட்டம் அக் கடவுள் கோட்டத்தில் தங்கியிருந்தது. புலவர் அந்தக் கோடியர் தலைவனை (யாழோர் கூட்டத்துத் தலைவனை), (பொருநனை) விளித்துச் சொல்லத் தொடங்கினார்.
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந . . . .(53 - 60)
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி யேழின் கிழவ
பொருளுரை:
கோடியல் தலைவ நீ நின் குறிக்கோளை அறிந்தவனாயினும் எங்கு யாரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துப் பார்க்காமல் கால் போன வழியில் சென்று கொண்டிருப்பது நீ முன்பு நோற்ற நோன்பின் பயனாகும். என்றாலும் நான் சொல்வதைப் போற்றிக் கேட்பாயாக ! உன் சுற்றத்தார் அடித்துத் தின்னும் பசியால் வருந்துகின்றனர். அந்த நீண்ட நாள் பசியைப் போக்க விரும்பினால் காலம் தாழ்த்தாமல் நான் சொல்லும் இடத்திற்குச் செல்ல எழுக ! வாழ்க!
னிழுமென் சும்மை யிடனுடை வரைப்பி . . . .(65)
னசையுநர்த் தடையா நன்பெரு வாயி
லிசையேன் புக்கெ னிடும்பை தீர
வெய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் றுத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி . . . .(70)
யிருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
பொருளுரை:
யானும் அன்று ஒருநாள் ( கரிகாற் பெருவளத்தான் ) அரணமனை வாயிலுக்குள் நுழைந்து சென்று வெள்ளி முளைக்கும் விடியல் வேளையில் என் தடாரிப் பறையை முழக்கி ஒன்றே ஒன்று சொல்லத் தொடங்கிய போதே அவன் என்னைப் பேணத் தொடங்கி விட்டான். அன்று நான் பழுத்த மரத்தை நினைத்துக் கொண்டு பறந்து செல்லும் பறவை அவனது அரண்மனையில் இழும் என்னும் சும்மை. அதாவது அமைதி ஒலி. . அவனது அரண்மனையின் பெருவாயிலில் அவனை விரும்பிப் பார்க்கச் செல்வோரைத் தடுக்கும் வழக்கம் இல்லை. உள்ளே நுழையும் போது நான் எந்த இசையையும் எழுப்பவில்லை. என் உடம்பு இளைத்திருந்தது. உள்ளம் சோர்ந்து போயிருந்தது. எனினும் என் இடும்பை தீர வேண்டுமே! தடாரி என்னும் குடுகுடுப்பையை அடித்தேன். படமெடுத்தாடும் பாம்பைப் பிடித்திருப்பது போல் தடாரியைப் பிடித்துக் கொண்டு ஆட்டினேன். பாம்பு நாக்கைப்போல் அதில் இருந்த அரக்குமுடித் துத்தியானது தடாரியை அடிக்க அது ஒலித்தது. அதன் இருபுறக் கண்ணிலும் மோதி அது பாணி இசையைத் தந்தது.
லொன்றியான் பெட்டா வளவையி னொன்றிய . . . .(61-73)
வேளாண் வாயில் வேட்பக் கூறிக் . . . .(75)
கண்ணிற் காண நண்ணுவழி யிரீஇப்
பருகு வன்ன வருகா நோக்கமோ
டுருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
யீரும் பேனு மிருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை . . . .(80)
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
பொருளுரை:
அவன் எனக்கு உறவினன் அல்லன். என்றாலும் என்னை உறவு கொள்வதற்காக விரும்பி வந்தான். கொடை நல்கி உதவி செய்வதற்கென்று அரண்மனையில் தனி இடம் இருக்கும். அதற்கு வேளாண் வாயில் என்று பெயர். அந்த வேளாண் வாயிலுக்கு வந்து எங்களை வரவேற்றுப் பலர் முன்னிலையில் பலரும் விரும்புமாறு எங்களைத் தன் நண்பர்கள் என்று கூறிக்கொண்டான். பலரும் காணுமாறு தான் விரும்பிய இடத்தில் எங்களை இருக்கச் செய்தான். சற்றும் குறையாத ஆசையோடு எங்களை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். எங்களது துணிமணிகளில் ஈரும் பேனும் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்தன. வியர்வையால் நனைந்ததைத் துவைத்து உடுத்தாமையால் விளைந்த பலன் இது. கிழிந்துபோயிருந்த அதனையும் வேறு நூல்கொண்டு தைத்து உடுத்தியிருந்தோம். புத்தாடை நல்கிப் பழைய ஆடைகளை முற்றிலுமாகக் களையச்செய்தான்.
தரவுரி யன்ன வறுவை நல்கி
மழையென மருளு மகிழ்செய் மாடத்
திழையணி வனப்பி னின்னகை மகளிர் . . . .(85)
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
வார வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை மற்றவன் . . . .(74-89)
பொருளுரை:
அவன் தந்தது பூப்போட்ட புத்தாடை. அது பாம்புத்தோல் போல் மெல்லியது. என்றாலும் பிறரது நோக்கம் நுழைய முடியாதது. பிறரால் உள்ளுறுப்புகளைப் பார்க்க முடியாத்து. மழைக்காலம் போல இருக்கும் குளுகுளு மாடத்தில் எங்களை இருக்கச் செய்து மகிழ்வித்தான். போக்கு என்பது வருத்தத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று. போக்கில் என்பது வருத்தம் போக்கிக் களைப்புத் தீர்க்கும் ஒருவகை உணவு. இக்காலத்தில் விருந்துணவுக்கு முன்னர் தரப்படும் பழச்சாறு போன்றது எனலாம். இந்தப் போக்கில் என்னும் சுவையுணவைப் பொற் கிண்ணங்களில் மகளிர் தந்தனர். அவர்கள் நகைகளைப் போட்டுக் கொண்டிருந்த அழகுடன் முகம் புன்னகை பூக்க வந்தனர். மீண்டும் மீண்டும் பொற்கலம் நிறையும்படி போக்கில் உணவை வார்த்தனர். அவர்கள் தரத்தர வாங்கி எங்களது வருத்தம் போகும்படி உண்டோம்.எங்களது துன்பத்தை யெல்லாம் போக்கிக் கொண்டு பெருமிதச் செருக்கோடு நின்றோம். அப்போது…
தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
வாறுசெல் வருத்த மகல நீக்கி
யனந்தர் நடுக்க மல்ல தியாவது
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து . . . .(90-95)
பொருளுரை:
செல்வச் செருக்கும் செம்மாந்த அழகும் சேர்ந்து கிளர்ச்சி யூட்டிய அவனது அரண்மனையின் ஓர் அறையில் தங்கியிருந்தோம். தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர். அது போல நாங்களும் எங்களது இளைத்த உடம்பிலேயே இன்பம் கண்டோம். அவர்கள் தவம் செய்த வருத்தம் நீங்கிப் பயன் கண்டது போல நாங்கள் வழிநடந்த களைப்பெல்லாம் நீங்கிச் சுகம் கண்டோம். தூக்க நடுக்கத்தைத் தவிர வேறு மனக் கவலையே இல்லாமல் மயங்கிக் கிடந்தோம். பின்னர் எழுந்து பார்க்கும் போது…
கண்டோர் மருளும் வண்டுசூழ் நிலையுங்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனமகிழ் சிறப்பக்
கல்லா விளைஞர் சொல்லிக் காட்டக் . . . .(100)
யதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து
பொருளுரை:
பகலெல்லாம் உழைத்தவர் மாலை நேரம் வந்ததும் காணும் மனச்சுமை குறைந்த புன்மைநிலை போல எங்கள் நெஞ்சம் பாதுகாப்புச் சுகத்தில் மிதந்து கொண்டிருந்தது. காலை நேரத்தில் பூவைச் சூழ்ந்து வண்டுகள் மொய்ப்பது போல் கனவு கண்டு கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் கல்லா இளையர் சிலர் வந்து அரசன் வருகையைச் சொல்லிக் காட்டினர். நாங்கள் எழுந்து அவனை வணங்குவதற்கு முன்னர் அவன் முந்திக் கொண்டான். வருக என்று கூவி அழைத்துக் கொண்டே வந்தான். இது அவன் நடந்து கொள்ளும் முறைமை வழக்கம். அவனது இந்த வழக்கமான செயலுக்குப் பின்னர்…
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை . . . .(105)
யூழி னூழின் வாய்வெய் தொற்றி
யவையவை முனிகுவ மெனினே
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
பொருளுரை:
பதத்தோடு சுட்டுச் சமைத்த செம்மறியாட்டுக் கறியும் சோறும் கூடிய உணவை அருகிருந்து ஊட்டலானான். அருகம்புல் மேய்ந்த துருவை என்னும் செம்மறியாடு. பராரை எனப்படும் அதன் பருத்த கால்தொடை. அதனைப் புழுக்கிய வேவை. வேவையை இக்காலத்தில் சூப் என்பர். அரசனாயிற்றே என்று அவனிடம் நெருங்கத் தயங்கினோம். அவன் விடவில்லை. தண்டினான். பருகுக என்று சொல்லித் தடுத்தான். (தண்டித்தான்) காழ் என்பது வைரம் பாய்ந்த கட்டையில் செய்த உண்கலம். கை சுடாமல் இருக்க மரக் கிண்ணத்தில் தந்தான். அதில் கொழுத்த கறித் துண்டுகளும் இருந்தன. சூடு வாயில் சுட்டதால் வாயால் ஊதி ஊதிச் சுவைத்துப் பருகினோம். ஊழின் ஊழின் ஒற்றினோம். அவ்வப்போது வாயில் ஒற்றடம் போட்டுக் கொண்டோம். அவை சலிக்கும்போது முனிவந்தோம். அதாவது முகம் சுளித்தோம். உடனே அவன் வேறு பல மாதிரிகளில் சமைத்த உணவை வரவழைத்தான். தந்திரமாக வரவழைத்துக் கொடுத்தான்.
ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க . . . .(110)
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப . . . .(115)
வயின்ற காலைப் பயின்றினி திருந்து
பொருளுரை:
மண்ணல்.என்பது குளித்தல். மண்ணுமங்கலம் என்னும்போது இப்பொருள் தருவது காண்க. அடித்தாலும் மண்ணும் முழவை முழக்கினோம். சீறியாழ் என்பது ஏழு நரம்புகள் கொண்டது. நரம்பு எண்ணிக்கையில் சிறிய யாழில் பண்ணமைத்துப் பாடினோம். முகவெட்டுள்ள விறலியர் பாடலின் பாணிக்கேற்ப ஆடினர். இப்படி மயங்கிய பதத்தில் பலநாள் கழித்தோம். ஒருநாள் மடைமாற்று நாளாக அமைந்தது. அன்று புலால் உணவை மாற்றிக் காய்கறி உணவைத் தரலானான். முரியா அரிசியில் புழுக்கிய பதமான சோறு அவிழ்ந்நிருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவன் கெஞ்சினான். புலாலைப் பிடிக்கக் கைவிரல் மூடும். சோற்றை அள்ள இப்போது கைவிரல்கள் நிமிர்ந்து அவிழ்ந்தன. கருனைக் கிழங்குப் புளிக்குழம்பு மிதக்குமாறு ஊற்றப்பட்டிருந்தது. சோறும் குழம்பும் அயின்றோம். பின் பலரோடும் பயின்று அளவளாவிக் கொண்டு இனிதிருந்தோம்.
யெல்லையு மிரவு மூன்றின்று மழுங்கி
யுயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந் தொருநாட் . . . .(103 - 119)
செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக வல்லே . . . .(120 - 122)
சிரறியவன் போற் செயிர்த்த நோக்கமொடு
பொருளுரை:
கொல்லை என்னும் புன்செய் நிலத்தை உழும் கொழுவைப் போல எங்களின் பல்லானது இரவும் பகலும் புலால் உணவைத் தின்று தின்று மழுங்கிப் போயிற்று. மூச்சு முட்ட முட்ட உணவைத் தின்று விட்டோம். அதனால் உணவைக் கண்டாலே வெறுப்பால் கோவம் வந்தது. எனவே ஒருநாள் வாய் திறந்து சொல்லி விட்டோம் “உன்மீது சினந்தெழுந்த பகைவரின் திறைப்பொருள் உனது துறையெல்லாம் பரந்து கிடக்க வைத்திருக்கும் செல்வத் திருமகனே. நாங்கள் எங்களது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கிறோம்” - என்று மெதுவாகச் சொன்னோமாக… “எம் தோழமையை விட்டுச் செல்கிறீர்களா” என்று சொல்லிச் சினங்கொண்டவன் போலப் பார்த்தான்.
பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையிற் றரத்தர யானு
மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்
டின்மை தீர வந்தனென் வென்வே . . . .(123 - 129)
பொருளுரை:
உடுக்கு போல் அடி வைக்கும் குட்டியானையோடும், பெண்யானையோடும் சேர்ந்து நிற்கும் ஆண்யானை என்று பலவற்றையும் கொண்டுவந்து நிறுத்தினான். வேண்டியவற்றைக் கொண்டு செல்லுங்கள் என்றான். அவனுக்குத் தெரிந்த எண்ணிக்கை அளவில் அவன் மேலும் மேலும் கொண்டு வந்து நிறுத்தினான். எங்களது தகுதியை நாங்கள் அளந்து பார்த்துக் கொண்ட நிலையில் வேண்டுவனவற்றை மட்டும் கொண்டுவந்து விட்டோம். எங்களது வறுமை தீரும் அளவுக்குக் கொண்டுவந்து விட்டோம்.
முருகற் சீற்றத் துருகெழு குருசி
றாய்வயிற் றிருந்து தாய மெய்தி
யெய்யாத் தெவ்வ ரேவல் கேட்பச்
செய்யார் தேஎந் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி . . . .(135)
வெவ்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறுஞ் வளர்ப்ப . . . .(130 - 138)
பொருளுரை:
சோழர் அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த நலங்கிள்ளியின் கால்வழிக்கூட காணமுடியும். இதனால் தாய்வயிற்றில் இருக்கும்போதே கரிகாலன் அரசுரிமை பெற்றவனாக விளங்கினான். இவன் முருகனைப் போன்ற அழகும் பகைவரை அழிக்கும் சினமும் கொண்டவன். அதனால் இவன் தாக்காமலேயே இவனது பகைமன்னர் பலர் இவனுக்கு அடிபணிந்து இவன் சொன்னதை யெல்லாம் கேட்டனர்.இவன் அருள் செய்யாத நாடுகள் குழப்பத்துக்கு உள்ளாயின. கடலில் தோன்றி ஒளி வீசிக்கொண்டு வானத்தில் உலாவும் கதிரவனைப்போல இவன் பிறந்து தவழக் கற்றது முதலே தன் நாட்டைத் தன் தோளில் சுமக்க வேண்டியதாயிற்று.இப்படிச் சுமக்கும் குழந்தை யாகவே இவன் வளர்க்கப் பட்டான்.
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி . . . .(140)
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்
கிரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
யரவாய் வேம்பி னங்குழைத் தெரியலு
மோங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த . . . .(145)
விருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
றாணிழன் மருங்கி லணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற் பழுதின் . . . .(139 - 150)
பொருளுரை:
இந்த நூலின் தலவன் பெயர் கரிகால்வளவன் என்று இங்குக் குறிப்பிடப்படுகிறான். ஆளும் விலங்கு ஆளி. ஆளியின்வழி வந்தது அரிமான் என்று போற்றப்படும் சிங்கம். ஆளியை நன்மான் என்று பாடல் குறிப்பிடுகிறது. அதன் குட்டிகூட விலங்குகளை வருத்தும். பால் குடிக்கும் ஆளிக்குட்டி ஞெரேர் எனப் பாய்ந்து முதன் முதலாக வேட்டைக்குச் செல்லும் போதே யானையை அழிப்பது போலக் கரிகாலன் வெண்ணி என்னுமிடத்தில் நடந்த போரில் இருபெரு வேந்தரையும் வென்றான். பனந்தோட்டு மாலை அணிந்த சேரனையும், வேப்பந்தழை மாலை அணிந்த பாண்டியனையும் ஆத்தி மாலையைச் சூடிய கரிகாலன் வென்றான். அப்போர்க்களத்திலேயே சேரனும் பாண்டியனும் மாண்டனர். வெற்றிகண்ட கரிகால்வளவனைத் தொழுது அவன்முன் நிற்பீர் ஆயின்,
கையது கேளா வளவை யொய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப் . . . .(155)
பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேற லாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
பொருளுரை:
பொருந! கரிகாலன் காலடி நிழற்பகுதிக்குச் செல்வீராயின்… பசு அப்போது போட்ட கன்றை நாவால் நக்கித் தெம்பு ஊட்டுவது போல, அவன் உங்களை விரும்பிப் போற்ற முனைவான். நீங்கள் கைதொழுவதற்கு முன்பாகவே புத்தாடை தந்து மாற்றிக் கொள்ளச் செய்வான். உங்களது பழைய ஆடை கிழிந்து குறைந்து போயிருக்கும். வேர்வை அழுக்கு ஏறி பாசி படிந்திருக்கும். கிழிசல் ஊசியால் தைக்கப்பட்டிருக்கும், புதிதாக அவன் தந்த பட்டுடையில் கொட்டைக்கரை போட்டிருக்கும். நீங்கள் புத்தாடை புனைந்த பின் கிண்ணத்தில் தேறல் ஊற்றி வேண்டிய அளவு பருகத் தருவான். காலை வேளையில் கையைக் குடையாக்கியும் அத் தேறலைப் பருகலாம்.
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி . . . .(160)
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
பொருளுரை:
பின்னர் விருதாக உன் (பொருநன்) தலையில் பொன்னாலான தாமரை சூட்டுவான். இவன் சூட்டிவிடும் தாமரை தழல் விட்டும் பிளவு பட்டும் எரியும் தீப்போல் இருக்கும். குளத்தில் இருக்கும் தாமரைக்கு மடங்கும் இதழ் உண்டு. இதில் உள்ளது மடங்காத பொன்னிதழ். பித்தை என்பது ஆணின் உச்சிக் கொண்டை. அது அழகு பெறும்படி உனக்குக் கரிகாலன் தன் கையால் சூட்டிவிட்டுப் பெருமைப் படுத்துவான். பாடினி அரில் மாலை - இது நூலில் கோக்கப்படாத முத்துமாலை.அதாவது முத்துக்களைத் தங்கத்தில் பதித்திருக்கும் மாலை. முத்தாரம் - இது நூலில் கோத்த முத்துமாலை. அரில்மாலையையும், முத்துமாலையையும் பாடினி அணியத் தருவான்.
ரூட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் . . . .(165)
காலி னேழடிப் பின்சென்று கோலின்
றாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல் . . . .(170)
வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழந்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பொருளுரை:
வெண்குதிரைகள் நான்கு பூட்டிய தேர்மேல் அனுப்பி வைப்பான். ஏழடி பின் சென்று நின்று ஏறுங்கள் எனபான். ஏறியபின் பேரியாழை மீட்டச் சொல்லிக் கேட்பான். அதற்குப் பரிசிலாக வளம் மிக்க ஊர் கொண்ட நாட்டுப் பகுதியைத் தருவான். யானைப் பரிசும் உண்டு. தேர் - அமரும் இடமான கொடிஞ்சி தந்தத்தால் செய்யப்பட்டது. குதிரை - குதிரையின் உச்சந் தலையில் வண்ணம் பூசிய குஞ்சம் தொங்கும். அதன் பிடரிமயிர் மடிந்து தொங்கும். குதிரைகள் பால்போல் நிறம் கொண்டவை. குதிரையை ஓட்டும் கோலின் நுனியில் முள் பொருத்தப்பட்டிருக்கும் முள் பொருத்தப் பட்டிருந்தால் அது தாற்றுக்கோல். சாட்டைப் பொருத்தப் பட்டிருந்தால் அது சாட்டைக் குச்சி. கரிகாலன் தேரோட்டியின் கையில் தாற்றுக் கோல் இல்லாமல் செய்வான். (இது அவன் விலங்குகள் மாட்டும் கொண்டிருந்த கருணையைப் புலப்படுத்துகிறது) பரிசிலாகத் தரும் நாட்டுப் பகுதியிலுள்ள ஊர்கள் விளைச்சல் குறையாத நன்செய்ப் பண்ணைகள் நிறைந்தவை. வேழம் - வெருவும் பறை போன்ற காதுகளும் பருத்துப் பெருத்த நீண்ட துதிக்கைகளும் கொண்டவை. சிறந்தவை. எனினும் பகை கண்டால் வெகுள்பவை.
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து . . . .(175)
நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் . . . .(177)
பொருளுரை:
நீங்கள் பெற்றவற்றை இவை இவை கரிகால் வளவன் தந்த பரிசில் என்று பிறர் பிறர்க்குச் சொல்லிக்காட்டிவிட்டுச் செல்லத் தொடங்குவீராயின் பிறர்க்குச் சொன்னமைக்காகக் கடிந்துகொள்வான் (புலப்பான்). இந்த உலகம் நிலையில்லாத்து என்னும் உண்மை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்துச் ‘செல்லுங்கள்’ என அனுப்பிவைக்கவும் மாட்டான். (அவனிடமே இருக்கக்கூடாதா என ஏங்குவான்)
கரைசூழ்ந்த வகன்கிடக்கை
மாமாவின் வயின்வயினெற் . . . .(180)
றாழ்தாழைத் தண்டண்டலைக்
கூடுகெழீஇய குடிவயினாற்
செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவுமுனையின்
மனைநொச்சி நிழலாங்க . . . .(185)
ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு
பொருளுரை:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானில வளங்களும் காவிரி புரக்கும் கரிகாலன் நாட்டில் மயங்கிக் கிடந்தன. பாலை நிலத்தின் பாங்கும் பாவிக் கிடந்தது. கடற்கரையில் மாமரங்கள். அவற்றை அடுத்துத் தாழை மரங்கள். தாழைமரக் கழிகளை அடுத்து வளவயற் சோலை (தண்டலை) குடில்களில் கூலம் சேமிக்கும் குதிர்க் கூடுகள். கருங்காக்கைகள் அக்குடியில் வாழும் மக்கள் வைத்த நெல்லஞ் சோற்றைத் தின்று சலித்தபோது வீட்டு நொச்சிக்குக் கீழே பொறித்திருக்கும் ஆமைக் குஞ்சுகளைக் கவர்ந்துண்ணப் பார்க்கும். தாய்-ஆமை அதன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு
பொருளுரை:
இளைய மகளிர் வண்டல் விளையாடுவர். இளைய காளையர் முதியோரின் மேற்பார்வையில் அவையில் பகைமுரணிய விளையாட்டுகளில் ஈடுபட்டுத் தம் திணவை வெளிப்படுத்துவர்.
மடக்கண்ண மயிலாலப் . . . .(190)
பைம்பாகற் பழந்துணரிய
செஞ்சுளைய கனிமாந்தி
யறைக்கரும்பி னரிநெல்லி
னினக்களம ரிசைபெருக
வறளடும்பி னிவர்பகன்றைத் . . . .(195)
தளிர்ப்புன்கின் றாழ்காவி
னனைஞாழலொடு மரங்குழீஇய
வவண்முனையி னகன்றுமாறி
யவிழதளவி னகன்றோன்றி
னகுமுல்லை யுகுதேறுவீப் . . . .(200)
பொற்கொன்றை மணிக்காயா
நற்புறவி னடைமுனையிற்
பொருளுரை:
முடம் பட்டுக் கிளை தாழ்ந்திருக்கும் காஞ்சிமரம். செம்மாந்து ஓங்கியிருக்கும் மருதமரம் இரண்டிலும் மயில் ஏறி ஆட்டம் காட்டும். பசிக்கும் போது பறந்தோடிப் பாகல் பழத்தைத் தின்னும். அடுத்திருக்கும் பலாச்சுளைகளையும் தின்னும். கரும்பு வெட்டும்போதும் நெல் அறுக்கும்போதும் களமர் (= உழவர்) இசைப் பாடல்கள் பாடுவர். இதனைக் கேட்டுக்கொண்டு மயில் ஆடும். அடும்பு பகன்றை முதலான கொடிகளும் புன்கு ஞாழல் முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் மருத நிலக் காவிலும் அந்த மயில் விளையாடும். இந்த இடங்கள் சலித்துப் போனால் தளவம், தோன்றி, முல்லை முதலான பூப்புதர்களும் கொன்றை, காயா முதலான மரங்களும் மண்டிக் கிடக்கும் முல்லை நிலப் புறவுத் தோட்டத்திற்குச் சென்று விளையாடும். இங்கும் சலிப்பு நேர்ந்தால் …
திறவருந்திய வினநாரை
பூம்புன்னைச் சினைச்சேப்பி . . . .(205)
னோங்குதிரை யொலிவெரீஇத்
தீம்பெண்ணை மடற்சேப்பவுங்
கோட்டெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தண் மலர்நாகத்துத்
துடிக்குடிஞைக் குடிப்பாக்கத் . . . .(210)
தியாழ்வண்டின் கொளைக்கேற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயரத் . . . .(178 - 213)
மீனெய்யொடு நறவுமறுகவுந் . . . .(215)
தீங்கரும்போ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவுந் 217
பொருளுரை:
மயிலானது முல்லை நிலத்துப் புறவு சலித்தால் நெய்தல் நிலத்தில் பூத்திருக்கும் புன்னை மரத்துக்குச் சென்றுவிடும். அருகில் சுறாமீன் வந்துபோகும் கடலலை மோதும். அதில் வாழும் இறால் மீனைத் தின்ற நாரை பூத்திருக்கும் அதே புன்னை மரத்தில் அமர்ந்திருக்கும். கடலோரப் புன்னை மரத்தில் இருக்கும்போது கடலலை ஓசையை வெறுத்து அந்த மரத்தை விட்டுவிட்டு நாரை பனைமர மடலுக்குப் பறந்து செல்லும். அதுவும் சலித்தால் தென்னை மடலுக்குச் செல்லும். அதிக உயரம் பறக்க முடியாத மயில் குலை தள்ளியிருக்கும் வாழை மரத்தில் அமரும். காந்தள் பூத்திருக்கும் இடத்திற்குச் செல்லும். அருகிலுள்ள மீனவர் பாக்கத்துக் குடிசைப் பகுதியில் இருக்கும் நாகமரத்தில் பாலைநில மக்கள் தம் உடுக்கு போன்ற குடுகுடுப்பைகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பர். அது காற்றில் ஆடும்போது ஓசை உண்டாகும். வண்டுகள் இசை பாடும். இந்த இசைக்கு ஏற்ப மயில் தோகை விரித்து ஆடும். இப்படிப் பல்வேறு நிலமேடுகளில் இடம் பெயர்ந்து மயில் ஆடும். தேன்நெய்க்குக் கிழங்கு, மீன்நெய்க்கு நறவு, மதுவுக்கு மான்கறி என்று பண்டமாற்று வாணிகம் பல்வேறு மணல்மேடுகளில் நடைபெறும்.
னறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட வகவர் . . . .(220)
நீனிற முல்லைப் பஃறினை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர
வரைமந்தி கழிமூழ்க
கழிநாரை வரையிறுப்பத் . . . .(225)
தண்வைப்பினா னாடுகுழீஇ
மண்மருங்கினான் மறுவின்றி
யொருகுடையா னொன்றுகூறப்
பெரிதாண்ட பெருங்கேண்மை
யறனொடு புணர்ந்த திறனறி செங்கோ . . . .(230)
லன்னோன் வாழி வென்வேற் குரிசில் . . . .(214 - 231)
பொருளுரை:
பண் பாடுவதிலும் மயக்கம் நேரும். நெய்தல் நிலத்துப் பரதவர் குறிஞ்சிப்பண் பாடுவர். குறிஞ்சி நிலத்துக் குறவர் நெய்தல் பூவைச் சூடுவர். முல்லை நிலத்துக் கானவர் மருதப்பண் பாடுவர். பாலை நிலத்து அகவர் முல்லைத்திணைப் பண்ணைப் பாடுவர். கானக்கோழி மருத நிலத்து நெற்கதிர்களைக் குத்தித் தின்னும். மருத நிலத்து மனைக்கோழி முல்லை நிலத்துத் தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும். மலையில் வாழும் மந்தி கடலோர உப்பங்கழிகளில் குளிக்கும். உப்பங்கழி நாரை மலைமரங்களில் இருக்கும். இப்படி எங்கும் நீரின் தண்மை-வளம் மிக்க நாடு காவிரி நாடு. மண்ணின் தண்மையால் மறு இல்லாதது. காவிரி நாடு என்னும் பெயரோடு அது ஒன்றுபட்டிருந்தது. இதனை நட்பும் அறனும் பூண்டு ஒருகுடைக்கீழ்ச் செங்கோல் செலுத்திக் கரிகாலன் ஆண்டு வந்தான். அவன் வாழ்க.
ணெல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவு
மருவி மாமலை நிழத்தவு மற்றக் . . . .(235)
கருவி வானங் கடற்கோண் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையு
நறையு நரந்தமு மகிலு மாரமுந்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குறைப்புனல் வரைப்பகம் புகுதொறும் . . . .(240)
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக் . . . .241
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ் . . . .(245)
சாலி் நெல்லின் சிறைகொள் வேலி
யாயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.
பொருளுரை:
கரிகாலன் வெற்றிவேல் வேந்தனாகப் பகைமன்னர் நடுங்க ஆட்சி புரிந்துவந்தான். பகல் தரும் சூரியன் போல் அறத்தையும் தோழமையையும் பரப்பிக்கொண்டு ஆண்டுவந்தான். முல்லை நிலத்தில் குல்லைப் பூக்கள் கரிந்து போகவும், மலைகள் தீப்பற்றி எரியவும், மலையருவிகள் வறண்டுபோகவும், மேகத் தொகுதி கடல்நீர் மொண்டுசெல்வதை மறந்துபோகவும் பெரியதோர் வறட்சி எய்திய காலத்திலும் காவிரியில் வெள்ளம் வரும். நறை, நரந்தம், அகில், ஆரம் முதலான மரங்களைக் கருவாகக் கொண்டு சுமந்துவந்து காவிரித்தாய் துறைகண்ட இடங்களிலெல்லாம் கருவுயிர்த்துச் செல்வாள். நுரை பொங்க ஓசையுடன் காவிரி பாயும்போது மகளிரின் புனலாட்டு நிகழும். உழவர் கூனியிருக்கும் அரிவாளால் வயலில் நெல் அறுக்கவும் கட்டுக் கட்டிக் களத்தில் மலைபோல் குவிக்கவும், குறைவில்லாத நெற்குப்பையை மூட்டைகளாகக் கட்டி ஆங்காங்குள்ள பாதுகாக்கும் இடமெல்லாம் கிடத்தி வைக்கவும், சாலி என்னும் நெல் சிறை வைக்கப்பட்டுக் கிடக்கும் பாதுகாப்பு மிக்க வேலிதான் காவிரி புரக்கும் நாடு. வேலி என்பது நில அளவை. ஒருவேலி நிலத்தில் ஆயிரம் மூட்டை நெல் விளைச்சல் காணும் வளமுள்ளதாகக் காவிரியாறு அந்தாட்டைப் புரந்துவந்தது. அந்த நாட்டை ஆளும் உரிமை பூண்டவன்தான் சோழன் கரிகாற் பெருவளத்தான்.
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு . . . .[1]
வாரி சுரக்கும் வளனெல்லாந்- தேரின்
அரிகாலின் கீழுகூஉமந்நெல்லே சாலுங்
கரிகாலன் காவிரிசூழ் நாடு . . . .[1]
பொருளுரை:
ஏரிநீர் பாய்வதாலும், ஏற்றம் இறைக்கும் கிணற்றுநீர் பாய்வதாலும் பிறர் நாடுகளில் நீர்வளம் பெருகி நெல் விளையும். நினைத்துப் பார்த்தால் இந்த நெல்வளம் எல்லாமே கரிகாலனின் காவிரி பாயும் நாட்டில் நெல் அறுவடை செய்த பின்னர் அந்த நிலத்தில் உதிர்ந்து முளைத்து விளைந்த அரிகால்-நெல்லே ஈடாக அமையும்.
திருமாவளவன் எனத் தேறேன்; - திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை! . . . .[2]
திருமா வளவனெனத் தேறேன்- திருமார்பின்
மானமா லென்றே தொழுதேன் றொழுதகைப்
போனவா பெய்த வளை . . . .[2]
பொருளுரை:
இந்தப் பாடலானது பாடலில் கரிகால்வளவன் என்று கூறப்படும் இந்த மன்னனைத் திருமாவளவன் என்று குறிப்பிடுகிறது. அரியணையில் திருமாவளவன் அமர்ந்துகொண்டு ஆட்சிசெய்தான். அவனைத் தொழுதவள் நிலை என்னவாயிற்று எனக் கூறும் அகப்பொருள் பாடலாக இது அமைந்துள்ளது. இந்தப் பாடலின் முன்பகுதி கரிகாலனையும் திருமாலையும் ‘திருமாவளவன்’ என்னும் பெயரால் பொதுமைப்படுத்திச் சிலேடையாகப் பேசுகிறது. திருமால் அரிமா வடிவெடுத்து (நரசிம்ம அவதாரம்) போர் (அமளி) மேற்கொண்டான். கரிகாலன் அரிமா உருவம் தாங்கிய அமளி(இருக்கை)மேல் அமர்ந்திருப்பவன். திருமகளாகிய மா என்று போற்றப்படும் பெண்ணால் வளம் பெற்றுத் திகழ்பவன் திருமால். கரிகாலன் திரு என்னும் செல்வம் மிகுதியாகப் பெற்று மாவளவனாக, திருமாவளவனாகத் திகழ்பவன். இதனால் இருவரும் திருமாவளவன். அதனால் கரிகாலனைத் திருமகளை மார்பிலே கொண்ட ‘மானமால்’ என்று என்றுதான் எண்ணிக்கொண்டு தொழுதேன். கடவுளைத் தொழுதால் கைவளையல் கழலுமா? என் உடல் மெலிந்து என் கையிலுள்ள வளையல்கள் கழறுகின்றனவே! இது ஏன்? கரிகாலன் மேல் எழுந்த காதல்!
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று . . . .[3]
இச்சக் கரமே யளந்ததாற்- செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று . . . .[03]
பொருளுரை:
மூன்று ஆணைச் சக்கரங்களாகத் திகழும் மூவுலகையும் அளப்பதற்குத் திருமால் தன் இரண்டு கால்களையும் பயன்படுத்தினான். அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் சக்கரங்களைக் கரிகாலன் தன் கரிந்துபோன ஒரே காலால் அளந்துவிட்டான். அதனால் கரிகாலன் திருமாலைக் காட்டிலும் மேம்பட்டவன். கரிகாலன் புனல்நீர் நாடன். (திருமால் மாபலி மன்னனிடம் புனல்நீர் பெற்றான்). கரிகாலனின் புனல்நீர்நாடு அறுவடை செய்த நெல்வயலில் உதிர்ந்த நெல் முளைத்து வளரும் அரிகால் நெல்லானது தேன் கூடு கட்டும் அளவுக்குச் சிறப்புற்று வளரும். கரிகாலன் இளம்பிள்ளையாக இருந்த காலத்தில் அவனது தாயாதியர் (அரசுத்தாயம் பெறுவதற்குரிய பங்காளிகள்) அவனது மனைக்குத் தீயிட்டனர். அப்போது அவனது கால் கருகிப்போயிற்று. கரிகாலனானவன் இரும்பிடர்த்தலையார் என்னும் தன் தாய்மாமனால் காப்பாற்றப்பட்டுக் கருவூரில் வாழ்ந்துவந்தான். சோழநாட்டுப் பட்டத்து யானை அவனுக்கு மாலை சூட்டி அழைத்துவர உறையூரில் அரியணை ஏறினான். - இப்படி ஒரு கதை. இந்தக் கதையின் அடிப்படையில் இந்தப் பாடல் புனையப்பட்டுள்ளது.