பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

பெரும்பாணாற்றுப்படை

பாடியவர்:- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்:- தொண்டைமான் இளந்திரையன்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 500

சங்கத்தமிழ்ச் செயலியைத் தரவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

சங்கத்தமிழ்

பெரும்பாணாற்றுப்படை

பாடியவர்:- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்:- தொண்டைமான் இளந்திரையன்
திணை:- பாடாண் திணை
துறை:- ஆற்றுப்படை
பாவகை:- அகவல்பா (ஆசிரியப்பா)
மொத்த அடிகள்:- 500
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
இசைவாணனை அக்காலத்தில் பாணன் என்றனர். பாணனது குடும்பத்திலுள்ள அனைவரும் இசைத்தமிழை வளர்ப்பதில் இன்பம் கண்டனர். வறுமைக் காலத்தில் அவர்களது பிழைப்பே இசையால்தான் நடந்துவந்தது. பேரியாழ் மீட்டுபவன் பெரும்பாண். பொரும்பாணன் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறான். அவன் தன் யாழை இடப்பக்கத் தோளில் மாட்டிக்கொண்டு செல்கிறான். அவனது யாழின் உறுப்புக்கேஃ எப்படி இருந்தன என்பதை இந்தப் பகுதி காட்டுகிறது.

பாணனது யாழின் வருணனை (1-16)
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று இடை வகுத்ததன் . . . .[5]

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் . . . .[10]

பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் . . . .[15]

தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ . . . .[1 - 16]

பொருளுரை:

கேள்வி (யாழ்) - நாம் எடுத்துக்கொண்ட பாடலில் கூறப்படும் பாணன் தனது யாழை இடப்பக்கம் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பாடல்களைப் பாடும்போது இசையைத் தொடுத்தமைத்துக் கேட்கச் செய்வதால் யாழைத் தொடையமை கேள்வி என்றனர். வயிறு - பாதிரிமரம் வேனில் காலத்தில் தன் பசுமையான இலைகள் உதிர்ந்து போய் பூத்துக் குலுங்கும் காட்சி யாழின் வயிற்றுப் பகுதியில் வரையப்பட்டிருந்தது. வேனில் காலத்தின் மலர்ச்சியைக் காட்டிக் கொண்டு தொடங்கும் இந்தப் பாடல் பாணன் வாழ்வும் மலரப் போவதைக் குறிப்பால் உணர்த்துகின்றது. அகன்ற பெரிய விசும்பு. அதில் பாய்ந்து கொண்டிருந்த இருளை யெல்லாம் குடித்துவிட்டுப் பகலை வீசிக்கொண்டு பல்கதிர் பருதி எழுந்து கொண்டிருந்த வேனில் காலம் அது. கதிரவனின் வாயில் சினம். அது பாதிரியின் இலைகளை உதிர்த்தது. ஆனால் அதில் மலர்ந்த பூக்கள் வெயிலின் சின வலிமையைத் திருகி வீசி எறிந்து கொண்டிருந்தன. பாதிரிப்பூ பெரியது. வளமான இதழ்களைக் கொண்டது. கண்கூடு செறிதுளை - பாக்குப் பாளையின் இளம்பூக்கள் கருவிலிருந்து வெளிவருவதுபோல் யாழின் நரம்புக்கண் கூடும் துளைகள் நரம்புகளால் முடுக்கப்பட்டிருந்தன. அடி - பருத்திருக்கும் பச்சைப் பாக்குமரம் போல மீட்டும்போது யாழ் குந்தும் அடிப்பகுதி இருக்கும் போலும். போர்வை - உருகிய நீர்மம் பொருளோடு பொருந்தி வழிவது போல் யாழின்மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை யாழின் உருவத்தைப் புலப்படுத்துவது போல் அதன்மீது படிந்து கிடந்தது. வறுவாய் - அதன் திறந்த வாயானது நீர் இல்லாமல் வறண்டுபோன சுனைபோல இருண்டு காணப்பட்டது. சவைக்கடை - காய்ந்து போயிருந்த அதன் வளைவுத் தண்டு பிறந்த நாளில் தெரியும் பிறை நிலாவைப் போல வளைந்திருந்தது. திவவு - நீண்ட மூங்கில்போல் திரண்டிருக்கும் தோளையுடைய பருவப் பெண்ணின் முன்கையில் இருக்கும் வளையல்களைப் போல யாழின் திவவுப் பூண்கள் அமைந்திருந்தன. நரம்பு - மணியை நீட்டி வைத்தாற் போல நரம்பைக் கட்டும் அதன் சிற்றாணிக் குச்சிகள் யாழில் செருகப்பட்டிருந்தன. முறுக்கு இல்லாமல் பொன்னில் நீட்டிய கம்பி போன்ற நரம்புகள் யாழில் தொய்வு இல்லாமல் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. விளக்கம் விபுலானந்த அடிகள் எழுதியுள்ள யாழ்நூலில் காணலாம்.

பாணனது வறுமை (17-22)
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து
பழு மரம் தேரும் பறவை போல . . . .[20]

கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கை புலவு வாய் பாண . . . .[17 - 22]

பொருளுரை:

ஆற்றுப்படுத்தும் புலவர் பாணனே கேள் என்று கூறத்தொடங்குகிறார். உன் உடம்பு புல்லின் துரும்பு போல இளைத்துள்ளது. இந்த நிலையில் உன் சுற்றத்தாரோடு கால்போன பக்கமெல்லாம் திரிகிறாய். உன் வாயிலிருந்து புலவு வாடை வருகிறது. உண்ண உணவு இல்லையே என்று பல்லைக்கூடத் துளக்க மறந்துவிட்டாய் போலும். ஞாயிறும் திங்களும் வலம் வந்து கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உன்னையும். உன் குடும்பத்தையும் தாங்கிப் பாதுகாக்கக்கூடியவர் யார் என்று தெரியாமல் திரிந்து கொண்டிருக்கிறாய். பழுத்திருக்கும் மரத்தைத் தேடும் பறவைகள் போல் அலைகிறாய். மழை பெய்யாமல் மழையைப் போலப் புகைமூட்டம் போட்டிருக்கும் மலைகளில் உள்ள மரங்கள் பழம் தருமா? திரிய வேண்டா. இதோ நான் சொல்வதைக் கேள்.

பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல் (23-28)
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு . . . .[25]

வழங்க தவாஅ பெரு வளன் எய்தி
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும் நீயிரும் . . . .[23 - 28]

பொருளுரை:

ஆற்றுப்படுத்தும் புலவர் தான் பெற்றுவந்த செல்வ வளம் பற்றிக் கூறுகிறார். நான் காஞ்சி நகரிலிருந்து வருகிறேன். அந்நகர்த் தலைவன் (தொண்டைமான் இளந்திரையன் ) நல்கிய பெருஞ்செல்வத்தோடு வருகிறேன். நிலம் வறண்டு கிடக்கும் காலத்தில் கருமேகத் தொகுதி இடியுடன் கூடிய பெருமழை பொழிந்தது போல அவன் எங்களுக்குப் பல செல்வ வளங்களை நல்கியுள்ளான். அவற்றைக் குதிரைகள்மீதும், யானைகள்மீதும் ஏற்றிக்கொண்டு வருகிறேன். நான் மட்டும் அன்று. எனது சுற்றத்தாரின் பெருங்கூட்டமும் யானைமீதும், குதிரைமீதும் வந்துகொண்டிருப்பதைப் பார்.

இளந்திரையனது சிறப்பை அறிவித்தல் (29-37)
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் . . . .[30]

திரை தரு மரபின் உரவோன் உம்பல்
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் . . . .[35]

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் . . . .[29 - 37]

பொருளுரை:

திரையன் திருமாலின் வலம்புரிச் சங்கம் போன்றவன். அவன் திரையர் குடியில் தோன்றிய திரையன். பலவகையான வேல்களைப் பல்வேறு விசைப் பாங்குகளில் வீசக்கூடியவன். அவன் திருமாலின் பிறங்கடை (வாரிசு). திருமால் நிலத்தைக் கடந்தவர். செல்வத் திருமகள் அமர்ந்து மணம் வீசும் மார்பினை உடையவர். கடல் நிறத்தில் காட்சி தருபவர். கடலின் திரையில் (அலையில்) மிதந்து வந்து அரசுக்கட்டில் ஏறிய அரச மரபினரின் கால்வழியினர் திரையர் எனப்பட்டனர். அம்மரபில் வந்தவர்களில் உயர்ந்தோங்கிய யானை போன்றவன், இந்தத் தொண்டைமான் இளந்திரையன். (தொண்டைமான் இளந்திரையன் கடலில் தொண்டைக் கொடியுடன் மிதந்து வந்தான் என்னும் கதைக்குத் தளப்பகுதி இது) உலகிலுள்ள உயிரினங்களைக் காக்கும் மூவேந்தர்களைச் சங்கு என்றால் இந்த இளந்திரையன் அச் சங்குகளிலே சிறந்து விளங்கும் வலம்புரிச் சங்கு போன்றவன். மறப்போரை விலக்கிவிட்டு அறத்தை மட்டுமே செய்யும் செங்கோல்தான் அவன் ஆட்சி. நீங்களும் அவனை நினைத்துக்கொண்டு செல்லுங்கள். (வறுமை தீரும் வளங்களைப் பெறலாம்).

இளந்திரையனது ஆணை (38-45)
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை . . . .[40]

கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம்
உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு
அசைவுழி அசைஇ நசைவுழி தங்கி
சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் . . . .[38 - 45]

பொருளுரை:

அவனது நல்லாட்சியைப் பற்றிச் சொல்கிறேன் கேள். உன் உள்ளம் (ஊக்கம்) சிறக்கட்டும். அவல நிலை அழிந்து ஒழியட்டும். அவனது காவல் நிலத்தில் வழிப்போக்கர்களை அலரும்படி தாக்கி அவர்களிடமுள்ள பொருள்களை வழிப்பறி செய்யும் திருட்டு-உழவு இல்லை. காரணம் அவனது காவலர்கள் வழிப்போக்கர்களுக்குத் துணைவருவர். இடி தாக்காது. பாம்புப் பயம் இல்லை. காட்டு விலங்குகளாலும் துன்பம் இல்லை. எங்கும் தங்கலாம். எங்கும் பாதுகாப்பு. களைப்புத் தோன்றும்போதெல்லாம் விரும்பிய இடங்களில் தங்கலாம். பின்னர்த் தொடரலாம்.

உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி (46-65)
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் . . . .[50]

வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த . . . .[55]

விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் . . . .[60]

முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி . . . .[46 - 65]

பொருளுரை:

உமணர்களின் உப்பு வண்டியை வழித்துணையாகக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து செல்லலாம். வண்டியின் ஆரைக்கால்கள் (ஆரம்) வரால்மீனின் வற்றல் போல் இருக்கும். ஆரைக்கால் பொருந்தியிருக்கும் குடம் முழவு (= மத்தளம்) போல் இருக்கும். மாட்டு வண்டிக்கு மேல் அமைக்கப்படும் வண்டிக் கூட்டை அக்காலத்தில் ஆரை என்றனர். (ஆரை = அரைவட்டம்) வண்டியின் பார்மரம் கோட்டைக்கதவை மூடும் குறுக்குத் தாழ்ப்பாள் [எழூஉ மரம்] போல் இருந்தது. கூடு குன்றின்மேல் படிந்திருக்கும் மழைமேகம் போலக் காணப்பட்டது. அந்த வண்டி மண்ணை அறுத்துக்கொண்டு சென்றது. வண்டிக்கூட்டின் புதவு (=உட்காரும் நிழலிடம்) யானைக்கு அதன் காவலர் வேய்ந்திருந்த கூரைபோல் இருந்தது. வண்டிக் கூட்டின்மேல் கோழிக்குடும்பம் அமர்ந்திருந்தது (சேவல் அதிகாலையில் கூவி எழுப்புவதற்காகப் பயன்பட்டது போலும்.) வண்டியின் பின்புறம் சிறிய மர உரல் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. (வண்டி பின்புறம் கவியாமல் இருக்க இது உதவும்.) அந்த உரல் பெண்யானையின் முழங்கால் போன்று உருவமும் உயரமும் கொண்டதாக இருந்தது. பல வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக (=ஒழுகையாக)ப் பிணிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வண்டியையும் இரண்டிரண்டு எருதுகள் இழுத்துச் சென்றன. எல்லா வண்டிகளும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்த வண்டி ஒழுகையைப் பல யானைகள் இழுத்துச் சென்றன. உமணப் பெண்கள் வண்டியின்மேல் உட்கார்ந்துகொண்டு காளைகளை முடுக்கி வண்டியை ஓட்டினர். அவர்கள் தம் குழந்தைகளைக் காடித்துணித் தூக்குக் கயிற்று ஏணையில் தாங்கிக் கொண்டிருந்தனர். வண்டியின் நுக மையம் கயிற்றால் கட்டப்பட்டுப் பல ஆண்யானை ஒழுகையுடன் பிணிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மீது ஏறி அமர்ந்துகொண்டும் பக்கத்தில் நடந்துகொண்டும் உமணர்கள் யானைகளை ஓட்டினர். உமணர்கள் வேப்பந் தழைகளைக் கோத்துக் கட்டிய மாலைகளைத் தோள்களில் அணிந்திருந்தனர். அவர்களது தோள்கள் பருமனும் அழகும் கொண்ட விட்டம் (=எறுழ்) போன்றவை. உணவைப் பதமாக்குவதால் உப்பு சில்பத உணவு என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இப்படிப்பட்ட உமணர் ஒழுக்கையொடு நீங்களும் செல்லலாம்.

வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி (66-82)
எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் . . . .[70]

விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடு வேள் அன்ன மீளி . . . .[75]

உடம்பிடி தட கை ஓடா வம்பலர்
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் . . . .[80]

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் . . . .[66 - 82]

பொருளுரை:

மீளி, சாத்து, உல்குவரி வாங்குவோர் முதலானோர் உங்களுக்கு உதவுவர். மீளி - மீளி என்பவன் அரசனின் ஆணைப்படி வழிப்போக்கர்களுக்கு உதவி செய்யும் காவல்காரன் (= போலீஸ்காரன் ). கடப்பம்பூவைச் சூடிய முருகனைப் போல உதவுபவன். அவன் காலில் செருப்பு (அடிபுதை அரணம்) ஆணிந்திருப்பான். கால்சட்டை அணிந்திருப்பான். அவனது மார்பிலே அம்புகள் துளைத்து ஆறிப்போன புண்கள் இருக்கும். அதில் பெருக்கல் குறிபோல வரிந்து கட்டிய கச்சு. அவனுக்கு அகன்ற கணையமரம் போன்ற தோள். அதன் ஒருபக்கம் கருமைநிற வில். மற்றொரு பக்கம் பளபளக்கும் வெண்மை ஒளியுடன் கூடிய வாள். (திருடர்களைப் பயமுறுத்தும் கருவி). வில்லும் வாளும் அவனது மார்புப்பாறை மேல் கறுப்பும் வெள்ளையுமாக ஊர்ந்து செல்லும் இரண்டு பாம்புகள் போலக் காணப்படும். முதுகுப்பக்கம் அம்பு வைத்திருக்கும் சுரிகை. பகைவரைக் கையால் குத்தித் தாக்கும் உடம்பு இடித் தடக்கை. இப்படிப்பட்ட மீளி இரவுக் காலத்தில் புதிதாகச் செல்லும் வழிப் போக்கர்களுக்கு (வம்பலர்களுக்கு)ப் பாதுகாவலாக வந்து உதவி செய்வான். சாத்து - நிலவழி வாணிகம் செய்பவர்களின் கூட்டம் சாத்து எனப்படும். சாத்து வாணிகர் தம் பண்டங்களைக் கழுதைமேல் ஏற்றிச் செல்வர். வளைந்து தாழ்ந்த பலாக்கிளையின் இரண்டு பக்கங்களிலும் பலாப்பழங்கள் பழுத்திருப்பது போல் கழுதையின் மேல் பண்டப் பொதிகள் இருக்கும். பண்டப்பொதி இரு பக்கமும் இருப்பதால் அது புணர்பொதி எனப்பட்டது. பொதியைச் சுமந்து சுமந்து கழுதையின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. தாங்கிப் பழக்கப்பட்டதால் அதன் முதுகு நோன்புறம் ஆயிற்று. கவலை - பிரிந்து செல்லும் வழி கவலை எனப்படும். (அந்தப் பெண்ணா, இந்தப் பெண்ணா? திருமணம் நடக்குமா, நடக்காதா? என்பது போன்றெல்லாம் மனம் இரண்டு வழிகளில் பிரிந்து ஊசலாடுவதும் கவலைதான்.) உல்கு - வழிகள் கூடும் இடங்களில் வணிகரிடம் சுங்கவரி வாங்கப்பட்டது. வில் - அகன்ற காட்டுப்பாதை (இயவு) வழியின் குறுக்கே வில்மரத்தால் தடுத்து உல்கு வாங்கினர். இவர்களும் புதிய வழிப் போக்கர்களுக்கு உதவுவர்.

எயிற்றியர் குடிசை (83-88)
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது . . . .[85]

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை
புல்லரிசி எடுத்தல் (89-94)
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் . . . .[90]

இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல்
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் . . . .[89 - 94]
எயிற்றியர் அளிக்கும் உணவு (95-105)
பார்வை யாத்த பறை தாள் விளவின் . . . .[95]
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் . . . .[100]

வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் . . . .[95 - 105]

பொருளுரை:

நீண்ட அடிமரத்தையுடைய இலவ மரத்தின் கிளைகளில் பூளாப்பூ நிறத்தில் பஞ்சு வெடித்திருக்கும் பச்சைக் காயினைப் போல் முதுகினை உடையது அணில். கருப்பை எனப்படும் வெள்ளெலியும் அப்படித்தான் இருக்கும். அணிலும் வெள்ளெலியும் அங்கே விளையாடுவதும் உண்டு. விளையாடாமல் போய் விடுவதும் உண்டு. பாலை நிலத்துப் பெண்கள் எயிற்றியர் எனப்படுவர். எயிற்றியர் குரம்பை அவர்கள் குரம்பை எனப்படும் கூரைக்குடிசை வீடுகளில் வாழ்ந்தனர். குடிசை ஈச்சமர இலைமடல்களால் வேயப்பட்டிருந்தது. எயிற்றி மான்தோலை விரித்துப் படுத்திருப்பாள். தகர் எயிற்றிக்குப் பக்கத்தில் குட்டி போட்டிருக்கும் செம்மறி ஆடு முடங்கிக் கிடக்கும். அந்தப் பெண்ணாட்டை விட்டுவிட்டு ஆண்ஆடு [தகர்] மேயச் செல்வது உண்டு. அந்தத் தகர் ஆட்டுக்கு ஆற்றின் மணல்படிவு போல் அலையலையாய்ப் படிந்த மயிர். கொழுத்த மடல்போல் காது. வேலின் தலைப்பகுதியைப் போலக் கூர்மையான கொம்புகள் - இருந்தன. எயிற்றி பணி எயிற்றியும் தன் பணியை மேற்கொள்ள வெளியே சென்றாள். இரும்பினால் செய்யப்பட்ட அம்பை நுனியில் செருகிய கோல் ஒன்றை எயிற்றி கையில் வைத்திருந்தாள். கரம்பை நிலத்தை (கரட்டு நிலத்தை) அக்கோலின் உளிவாயிலிலுள்ள கூரால் புழுதி பறக்கக் கிண்டினாள். பல் வெளுக்கும் புல் அந்தக் கரம்பை நிலத்துப் புழுதியில் முளைத்திருந்த ஒருவகைப் புல்லை எயிற்றியர் தம் வாயில் அடக்கியிருந்தனர். அது அவர்களது பல்லை வெண்மை பெறச்செய்து பாதுகாத்தது. (சுரை = சூரி, கூர்மை) எயிற்றி சமையல் பின்னர் தன் குடிசைக்கு வந்து சமைக்கத் தொடங்கினாள். முற்றத்தில் விளாமரத்து நிழல். அங்கே நிலப்பாறையில் அமைந்திருந்த உரல். அதில் நெல்லைப் போட்டு உலக்கையால் குற்றி அரிசி யாக்கினாள். அந்த மர நிழலின் ஒரு பக்கத்தில் பார்வை வலை விரிக்கப்பட்டிருந்தது. அந்த வலையில் விழுந்த பறவையையும் பக்குவம் செய்து சமைத்தாள். நீண்ட வானிக்கிணறு. அதனைத் தோண்டி முகந்த ஊற்றுநீரில் உலை வைத்தாள். முரமுரப்பான வாயையுடைய பழைய பானை. அதனை விறகடுப்பில் ஏற்றினாள். (அரிசி ஒன்று வெந்தும் ஒன்று வேகாமலும் இருந்தால் அது வாரம் பட்ட புழுக்கல். புலவு, அரிசி ஆகிய இரண்டில் ஒன்று வெந்தும் மற்றொன்று வேகாமலும் இருந்தால் அதுவும் வாரம்பட்ட புழுக்கல். எல்லாம் பக்குவமாக வெந்திருந்தால் அது வாராது அட்ட வாடூன் புழுக்கல்.) இப்படி வாராது அட்ட வாடூன் புழுக்கலை (= பிரியாணியை) எயிற்றி தேக்கு இலையில் படைத்து விருந்தூட்டினாள். அது தெய்வ மடை (அமிழ்தம்) போன்றது. அன்று அவள் எங்களுக்கு அதனை வழங்கினாள். இன்று உங்களுக்கும் அதனை வழங்குவாள். நீங்கள் செய்யவேண்டியது அரசனை வாழ்த்தல் நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அரசன் பெயரைச் சொன்னால் போதும். அவன் தும்பைப்பூ வாடாமல் போரில் முன்னேறும் வயவர் படையின் தலைவன். மற்றும் புறமுதுகிட்டு ஓடாத பெரும் படையையும் உடையவன். இத்தகைய போர்த்தொழிலில் சிறந்த கழலை அவன் காலிலே அணிந்தவன். அவன் செவ்வரை நாடன் (செந்நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன்.) நாங்கள் அவன் சென்னியம் (நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம்.) என்று சொன்னாலே போதுமானது. மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள்.

பாலை நிலக் கானவர்களின் வேட்டை (106-117)
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் . . . .[110]
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்

பொருளுரை:

கானவன் மதியப் பொழுது வரையில் காட்டுப் பன்றியை வேட்டையாடுவான். மான்கள் விளையாடி அடி பதிந்திருக்கும் நிலப்பகுதியில் காட்டுப்பன்றியின் அடியைப் பார்த்துக்கொண்டே செல்வான். பயம்பு நிலத்தில் இருக்கும் நீரில் புரண்டுவிட்டு பயம்புச் சேற்றுக்குள்ளே அது ஒளிந்திருக்கும். போற்றிப் புகலும் வாகைப்பூ என்பது போரின்போது நூடிக்கொள்ளும் வாகைப்பூ. புகலா வாகைப் பூ என்பது போரில் வெற்றி தந்த வாள். வாள் போல் வளைந்த வாய்பல் கொம்பினை உடையது அந்த ஏனம் என்னும் காட்டுப்பன்றி. காட்டுப்பன்றி வேட்டை கிடைக்காவிட்டால் அவன் வேறு வேட்டைக்குச் சென்றுவிடுவான்.

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ . . . .[115]

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர்............... . . . .[106 - 117]
எயினரது அரணில் பெறும் பொருள்கள் (117-133)
.............................. பருந்து பட
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் . . . .[120]

சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின்
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர்
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் . . . .[125]

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன . . . .[130]

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின்
வறை கால்யாத்தது வயின்தொறும் பெறுகுவிர்

பொருளுரை:

முன்னிரவு வேட்டை வாய்க்காமல் போனால் பின்னிரவில் கானவன் முயல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். முயலின் காது தாமரை இதழ் போல இருக்கும். கானவர் வேட்டைநாயோடு முயல் வேட்டைக்குச் செல்வார்கள். இரண்டு வேலிகளுக்கு இடையே வலையைத் தொடுத்துக் கட்டுவார்கள். கருங்கண் என்பது கானவரின் கூர்மையான கண்ணைக் குறிக்கும். கடறு கூட்டுண்ணல் என்பது பலராகக் கூடி வழிமறித்துக் கொள்ளுதலைக் குறிக்கும்.முயல் தப்பிப் போக முடியாதவாறு கானவர் பலராகக் கூடி வேட்டையாடுவர். (இப்பகுதியில் கவனமுடன் கடந்து செல்ல வேண்டும்.) கானவரின் குடிசைப் பகுதிகளைக் கொடுவில் எயினக் குறும்பு என்று பாடல் குறிப்பிடுகின்றது. வேட்டையாடும் காட்டுப் பகுதியைத் தாண்டிச் சென்றால் வீட்டுப்பகுதி வரும். உயர்நிலை வரைப்பு அங்கே ஈட்டி, கேடயம், வில், அம்பு ஆகியவை கூரையில் சார்த்தப்பட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும். எஃகம் என்பது ஈட்டி. ஒவ்வாத பகைவர்கள் நடுங்கும்படியாக வீசியதால் கூர் மழுங்கிப்போய் புலவு வாயுடன் அந்த ஈட்டிகள் சார்த்தப்பட்டிருக்கும். இது நிகழ்ந்த போரிலும் ஈட்டிகள் சார்த்தப்பட்ட பகுதிகளிலும் பருந்துகள் வட்டமிடும். போரிடும்போது மார்புக் கவசமாக அணியப்படுவது பலகை. இதில் மணிகள் கோக்கப்பட்டிருக்கும். போர் முடிந்த பின்னர் அதுவும் வீட்டுக் கூரையில் ஈட்டியோடு சேர்த்துச் சார்த்தப்பட்டிருக்கும். உயரமாக ஊகம் புல்லால் வேயப்பட்ட குடிசைகள் அவை. அந்த வரைப்புக் குடிசைகளின் முன்புறம் பந்தல். பருத்த கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தல் அது. பந்தலில் பண்டங்களை வைத்துப் பாதுகாக்கும் புதைப்பகுதிகள் உண்டு. அப் புதைப்பகுதிக்கு முன்புறம் உடுக்கு தொங்கும். பந்தர்க்காலில் சங்கிலித் தொடரால் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட நாய் இருக்கும். வீட்டுப் பகுதிக்கு வெளியே தழைத்திருக்கும் முள்வேலியும், அதனைச் சுற்றி மிளைக் காடும் (புதர்முள் காடு), அதனை அடுத்து படப்பையும் (தோட்டம்) இருக்கும். தோட்டத்துக்கு வேலி. வேலியில் வாயில். வாயிலில் புதவு. (கதவு). புதவானது வேல்கள் பலவற்றை நிறுத்திச் செய்யப்பட்டது. குறுக்குமர நுகப் புதவுகளில் (துளைகளில்) வேல்களைச் செருகி அதனைச் செய்திருப்பர். எயினக் குறும்பில் விருந்து செந்நெல் அரிசி கொண்டு சமைத்த சோறு. முள்ளம்பன்றிக் கறிக்குழம்பு. உடும்புக்கறி வறுவல். இந்த விருந்தினை ஆங்காங்கே போகுமிடமெல்லாம் நீங்கள் பெறுவீர்கள். செந்நெல் (சிவப்பரிசி நெல்) ஒரு புன்செய்ப் பயிர். மேட்டு நிலத்தில் மழைநீரைக் கொண்டு விளையும். களர் நிலத்தில் வளர்ந்து காய்த்துப் பழுக்கும் ஈச்சம்பழம் போல இருக்கும். மனவு என்னும் முள்ளம் பன்றியும், உடும்பும் ஞமலி என்னும் வேட்டைநாய் பிடித்துத் தந்தவை.

குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும் (134-147)
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் . . . .[135]

சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு . . . .[140]

நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ . . . .[145]

பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண் தலை கழிந்த பின்றை மறிய . . . .[134 - 147]

பொருளுரை:

அடுத்து மறவர் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே செல்லலாம். மறவர்கள் தம் தாய் வயிற்றில் இருக்கும்போதே அஞ்சா நெஞ்ச மறம் படைத்தவர்கள். யானை தாக்க வந்தாலும், பாம்பு தன்மீது ஏறிச் சென்றாலும், மேக மூட்டம் இல்லாத வானில் இடி முழக்கம் கேட்டாலும் நிறை மாதத் தாய்மார்கூடக் கலங்குவதில்லை. (இடி இடிக்கும்போது கருப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்று இக்காலத்தில்கூடச் சொல்லப்படுகிறது.) (மேகமூட்டம் இல்லாத வானில் இடிமுழக்கம் கேட்டது பிக்பாங் தியரி ஒலியின் எச்ச மிச்சம் கேட்டிருக்குமோ என்று எண்ணிப் பார்க்கத் தூண்டுகிறது.) மறவர் வாட்குடியில் பிறந்தவர்கள். அது வலிகூட்டுண்ணும் வாட்குடி. உடல் வலிமையைக் கொண்டு உணவைப் பெறுவது வலிகூட்டுண்ணல். அவர்கள் இளந்தாடிக் காளையர். புலிக்குட்டியைப் போல வலிய போருக்குச் செல்வார்கள். செந்நாய் போலச் சுற்றத்தாரோடு கூட்டமாகச் செல்வார்கள். வலிமை மிக்க வில்லோடு செல்வார்கள். தன்னுடைய நாட்டு மன்னன் சொன்னதைக் கேளாத பகை மன்னன் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நாட்டுக்குச் செல்வார்கள். பட்டப் பகலில் அந்நாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து ஓட்டிக் கொண்டு வருவார்கள். தன் ஊருக்கு வந்ததும் நறவுக்கள் குடிப்பதற்காக அவற்றை விலையாகத் தருவார்கள். வீட்டுக்கு வந்து வீட்டிலே காய்ச்சிய தோப்பி என்னும் கள்ளைப் பருகுவார்கள். (நறவு = பழச்சாற்றிலிருந்து செய்யப்பட்ட கள். தோப்பி = சோற்றுக் கஞ்சியைப் புளிக்க வைத்துச் செய்த கள்.) பின்னர் மற்போர் புரியும் பொதுமன்றத்துக்கு வருவார்கள். தன் உடல் வலிமையைக் காட்டி மற்போர் புரிந்து விளையாடுவார்கள். அதில் சலிப்பு தோன்றும்போது கொழுத்த காளைகளைத் தூண்டி விட்டுத் தம் தோள் வலிமையைக் காட்டி அடக்கி விளையாடுவார்கள். காளையோடு விளையாடும்போது வாயை மடித்து வீளை (விசில்) அடிப்பார்கள். தண்ணுமை மேளத்தையும் அப்போது முழக்குவர். காளைகளை வளைத்து வென்றவண்ணம் நாள் முழுவதும் விளையாடுவார்கள். அங்குச் சோம்பிக் கிடந்து தூங்கி வழிபவர்கள் யாருமே இல்லாத்தால் அவர்களது இருப்பிடம் தூங்கா இருக்கையாகக் காணப்பட்டது. இப்படிப்பட்ட போர்பயிற்சிக் கூடத்தைப் (முரண் தலையைப்) பார்த்துக் கொண்டே செல்லலாம்.

கோவலர் குடியிருப்பு (148-168)
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை
செற்றை வாயில் செறி கழி கதவின்
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் . . . .[150]

அதளோன் துஞ்சும் காப்பின் உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி . . . .[155]

பொருளுரை:

முல்லைநிலத்தில் செல்லும்போது வழியில் இரவில் எங்கும் பாதுகாப்பாக உறங்கலாம். அதளோன், தோலை விரித்து அதன்மேல் உறங்குவான். அவன் துஞ்சும் காப்புதான் அந்தப் பாதுகாப்பான இடம். காப்பு என்பது கதவு உள்ள வீடு. அன்று, வீட்டுக்குத் தூணாக நடப்பட்ட உயரமில்லாத பந்தர்க்காலில் பசுந்தழைகள் கட்டப்பட்டிருந்தன. அது குரம்பை (கூரைவீடு) அதன் வாயில் கதவு தட்டைக்குச்சி போன்ற செத்தைகளையும் , மூங்கில் கழிகளையும் சேர்த்துக் கட்டிச் செய்யப்பட்டது. இந்தக் கதவை மூடிக்கொண்டு சாம்பின்மேல் (கட்டிலைப் போன்ற பரண்) தோலை விரித்து அதன்மேல் வீட்டுக்காரன் உறங்கினான். (அன்று அவன், நானும் அவ்வாறு உறங்க இடம் தந்தான். நீங்கள் சென்றால் உங்களுக்கும் தருவான்.) இந்த வீட்டுக்கு அப்பால் தொலைவிலுள்ள முற்றத்தில் ஆட்டுக்கிடை இருக்கும். மூங்கில் தட்டிகளைத் (தறிகள்) தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடையை அமைத்திருப்பார்கள். அதில் துருவை என்னும் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் அடைக்கப் பட்டிருக்கும். அதற்கும் அப்பால் வேலிப்பக்கத்தில் ஆட்டு எருக்களைக் கொட்டி வைத்திருப்பார்கள். பறவைகள் எழும்பிப் பறக்கும் விடியற் காலத்திலேயே இருள் இருக்கும் கருக்கல் நேரத்திலேயே எழுந்து இவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும்.

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி . . . .[160]

சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் . . . .[165]

மடி வாய் கோவலர் குடி வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்

பொருளுரை:

ஆயர் மகள் பால், மோரைக் குடும்பம் அருந்தி எஞ்சியதைக் காய்ச்சி வெண்ணெய், நெய் எடுத்து விற்று வரும் பணத்தைப் பொன்னாக வாங்காமல் கறவைக் கன்றுகள் வாங்கப் பயன்படுத்திக்கொள்வாள். ஆய்மகள் தரும் விருந்து - ஆய்மகள் காலையில் எழுந்ததும் மத்தால் தயிர் கடைவாள். தயிர் கடையும் ஓசை புலி உருமுவது போல் கேட்கும். நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் கடையும்போது காளான் வெள்ளை மொட்டை விரித்துக்கொண்டு பூப்பது போல நுரையிலிருந்து வெண்ணெய் திரண்டு வருகிறது. அன்று அந்த ஆய்மகள் நல்ல மாநிற மேனியுடன் காணப்பட்டாள். காதில் ஊசலாடும் குழை. பருத்த தோள். நெளிவுடன் படிந்திருக்கும் கூந்தல். தலையில் பூஞ்சுமட்டின் மேல் மோர்ப்பானை. வெண்ணெய் மிதக்கும் மோர்ப்பானை. அளை என்பது தயிர். தயிரில் விளைந்தது மோர். மோர் விற்று வந்த வருவாயைக் கொண்டு அவள் குடும்பம் நடத்துகிறாள். சேமிப்பு - வெண்ணெய் நெய் விற்றுவரும் பணத்தை அவள் அவ்வப்போது வாங்கிக் கொள்ளாமல் அவற்றை வாங்குவோரிடமே சேமித்து வைக்கிறாள். சேமித்த பணத்தை அவள் வாங்கிய போதும் அந்தப் பணத்தைக் கொண்டு பொன் அணிகளை அவள் வாங்குவது இல்லை. எருமைக் கன்றுகளும், பசுக் கன்றுகளும் வாங்குவாள். இவள் மடிவாய்க் கோவலர் குடியைச் சேர்ந்தவள். (பசு, எருமை போன்றவற்றின் பால்மடியைக் கொண்டு பிழைப்பவர் மடிவாய்க் கோவலர்) விருந்து - இவர்களது குடும்பத்தில் தங்கினால் நண்டுக்கண் போன்ற தினையரிசிச் சோற்றில் பால் ஊற்றித்தருவார்கள். விருந்துண்டு மேலும் செல்லலாம்.

முல்லை நிலக் கோவலரின் குழலிசை (169-184)
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை . . . .[170]

உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் . . . .[175]

பொருளுரை:

இடையன் தன் காலில் செருப்பு அணிந்திருந்தான். தோளில் கனக்கும் பால் கறந்த பானை இருபுறமும் தொங்கும் காவடித் தண்டைத் தாங்கிப் பிடித்தும், வாக்க வரும் விலங்கை வீழ்த்த வைத்திலுந்த மழுவை ஊன்றிப் பிடித்தும் அவனது வலிமை மிக்க கைகள் காப்புக் காய்த்துப் போயிருந்தன. இரண்டு பக்கமும் பால்குட உறி தொங்கும் காவடித் தண்டைச் சுமந்து சுமந்து அவன் தோளிலும் காப்புக் காய்த்திருந்தது. தலைமயிர் அவனது தோளில் சுருண்டு விழுந்தது. கறந்த பாலின் ஈரத்தை அவன் தன் ஓரி மயிரில் தடவிக் கொண்டான். மரக் கிளைகளிலும் கொடிகளிலும் பூக்கும் பலவகைப் பூக்களை ஒன்றை அடுத்து ஒன்றாக மாற்றி மாற்றித் தொடுத்த படலைக் கண்ணியை அவன் தலையில் அணிந்திருந்தான். மாற்று ஆடை இல்லாமையால் ஒரே ஆடையை விரும்பி உடுத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளவன். என்றாலும் வயிறாரக் கூழ் குடிப்பான்.

கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின் . . . .[180]

புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து . . . .[169 - 184]

பொருளுரை:

இடையனின் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்துவட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். கன்றுக் குட்டிகள் விரும்பி உடன்மேயும் ஆனிரைகளோடு அவன் கானத்து மேய்ச்சல் காட்டில் ஓய்வாகத் தங்குவான். அப்போது தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளையிட்டது அந்தக் குழல். துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அம்நுண் அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும். இந்தப் புல்வெளியைக் கடந்து சென்றால் சிற்றூர் வரும்.

முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன (185-196)
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் . . . .[185]

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர்
குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்
பருவ வானத்து பா மழை கடுப்ப . . . .[190]

கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்

பொருளுரை:

இந்தச் சிற்றூர் எழுந்தோங்கிய முள்மரக் காடுகளை ஆடையாக உடுத்திக் கொண்டிருக்கும். வரைப்பு எனப்படும் ஊரின் எல்லைப் பகுதிகளில் மாட்டுத் தொழுவங்கள் இருக்கும். அடுத்து தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் பெண் யானைக் கூட்டம் போல் காணப்படும் அது குதிர்முற்றம் முற்றத்தின் உட்பகுதியில் பந்தல். அதற்கு யானையின் கால்களைப் போலப் பந்தர்க்கால்கள். இவை முடிச்சுமரக் கால்கள். (திரிமரம்) பந்தலில் சாட்டு உருளைகள் மாட்டப்பட்டிருக்கும். (கதிர் சுமக்க உதவும் இந்தக் கூடைகளை இக்கால உழவர் சாட்டுக்கூடை என்று வழங்குகின்றனர்) அங்குக் கலப்பையும் சார்த்தப்பட்டிருக்கும். அங்கே கொட்டில் (சமையல்கூடம்) பகுதியில் சமைக்கும் புகை வரும். அதனால் அதன் சுவர் பறைந்து போயிருக்கும். (அழுக்குப் படிந்து காணப்படும்) வீடுகள் வானில் பரவிக் கிடக்கும் மழை மேகங்கள் போல் காணப்படும். வீடுகள் கருவை என்னும் மருக்கட்டான் புல்லால் வேயப்பட்டிருக்கும். அது அழகிய குடில்கள் கொண்ட சிற்றூர்.

நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று . . . .[195]

இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர்

பொருளுரை:

சமாத்து வடித்த தினைச்சோற்றில் அவரைக்காயைச் சேர்த்துச் செய்த வான்புழுக்கு (வெஜிடபிள் பிரியாணி) அச் சிற்றூரில் விருந்தாகக் கிடைக்கும். பயின்று பயின்று, சுவைத்துச் சுவைத்து இனிமையாக உண்ணும் அளவுக்குப் பெறலாம். சமைத்து வடித்த வரகஞ் சோற்றின் குறள்கள் (குறுநைகள்) அவிழ்ந்து மலர்ந்திருப்பதானது பூளாப் பூக்கள் போலத் தூய வெண்மையுடன் காணப்படும்.

மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம் (197-206)
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி . . . .[200]

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் . . . .[205]

வன்புலம் இறந்த பின்றை மென் தோல் . . . .[197 - 206]

பொருளுரை:

விருந்து உண்டபின் உழுத துடவை நிலங்களையும், உழாத வன் புலங்களையும் கடந்து செல்ல வேண்டும். ( கலப்பை உழுது செல்லும் பள்ளத்தை இக்காலத்தில் படைச்சால் என்பர். நன்செய் நிலத்தில் அவை உழும்போதே மறைந்துவிடும். புன்செய் நிலத்தில் அவை கரை கரையாகத் தெரியும். இது புன்செய் நிலத்தில் செஞ்சால் என்று குறிப்பிடப்படுகிறது. ) செஞ்சால் உழவர்களின் வீட்டில் சேமிப்பாகக் குடும்பத்தை நிறைவு செய்யும் வகையில் செந்நெல் போன்ற தானியங்கள் நிறைந்திருந்தன. என்றாலும் அவன் துடவையைத் துகள் ( துளர் ) படும்படி உழுகிறான். பழக்கப்பட்ட காளைகளை நுகத்தில் பூட்டி உழுகிறான். அவனது நாஞ்சில் கலப்பையானது துதிக்கையோடு கூடிய பெண்யானையின் தலை போன்றது. உடுப்புமுகம் என்பது உடும்பு போன்ற முகம். அது கலப்பையின் நாவுப் பகுதி. அதில் இரும்பாலான கொழுவும் சேர்ந்திருக்கும். நாவும் கொழுவும் மண்ணுக்குள் மூழ்கிப்போகும் அளவுக்கு உழவன் ஆழமாக உழுதான். புன்செய் உழவு - படைசாலில் விதைகள் போடப்பட்டன. ( அடுத்து வரும் உழவுக்காலின் போது விதை தானே ஊன்றப்பட்டு விடும். ) இப்படி உழப்பட்ட நிலங்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். அடுத்து வன்புலத்தைக் கடக்க வேண்டும். அங்கே குறும்பூழ்ப் பறவைகள் (காடை) மேயும். அவற்றின் குஞ்சுகள் நல்ல வண்ணமுள்ள கடப்பம்பூ போன்ற மயிர்களைக் கொண்டவை. வழிப்போக்கர்களைக் கண்டதும் அவை தம் குஞ்சுகளை அழைத்துக்கொண்டு சென்று தம் கட்சியில் (கூட்டில்) பதுங்கிக் கொள்ளும்.

மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள் - நாற்று நடுதல் (207-212)
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் . . . .[210]

உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில்
நெல் விளைதற் சிறப்பு (213-227)
களைஞர் தந்த கணை கால் நெய்தல்
கள் கமழ் புது பூ முனையின் முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி . . . .[215]

கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் . . . .[220]

புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில்

பொருளுரை:

அடுத்து கொல்லர் குடியிருப்புகளுடன் கூடிய நன்செய் உழவர் வாழும் இடங்களைக் கடந்து செல்ல வேண்டும். அந்த உழவர் வீட்டில் பழைய சோறு அருந்தலாம். நீர்நிலம் சண்டையிட்டுக்கொள்ளும் எருமை மிதித்துச் சேறாகும். அங்கு உழவு செய்யாமல் உழவர் பயிரிடுவர். காலால் மிதிக்கும் துருத்தியால் ஊதும் உலைக்களம் கொண்டவன் கொல்லன். அவன் கொடிறு (கொரடு) போல் கைகளை உடைய நண்டு. அதன் வளை சிதையும்படி காரேறு என்று சொல்லக்கூடிய எருமை சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும். அப்போது அங்கு வளர்ந்துள்ள பைஞ்சாய் (பாய் நெய்ய உதவும் கோரை) என்னும் கோரைகளும் மிதிபட்டு மடியும். எருமை கொம்பாலும் சேற்றைக் கிண்டும். உழாமலேயே இப்படிச் சேறுபட்ட வயலை நிரவி உழவுத் தொழிலாளர்கள் நாற்று முடியைப் பிரித்துப் பயிர் நடுவார்கள். உழவர் பின்னர் களை பறிப்பார்கள். அப்போது பூத்திருக்கும் நெய்தல் கொடிகளைக் களைந்து எறிவார்கள். அதிலுள்ள பூக்களைப் பறித்து உழவர்களின் சிறுவர்களும் சிறுமியர்களும் தலையில் சூடிக் கொள்வார்கள். இந்தப் பூக்கள் வேண்டாமென்றால் முள்ளிப் பூக்களைப் பறித்துச் சூடிக் கொள்வர். (முள்ளி என்பது ரோஜா போன்றதொரு செடி) முள்ளிச் செடியின் சிறு கிளையில் முள் இருக்கும். அதன் இதழ்கள் தகடுபோல் சூழ்ந்திருக்கும். இதழானது பிறண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். காம்பு வளைந்திருக்கும். பூ சற்றே பெரிதாக இருக்கும். இவற்றைக் கொய்துகொண்டு விளையாடுவர். விரும்பினால் நாரில் பூக்களைக் கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். நீரில் விளையாடி ஈரம் பட்டிருக்கும் தலையில் சூடிக்கொள்வர். முள்ளிப் பூக்களைப் பறிக்கும்போது அங்கே இருக்கும் பைஞ்சாய் என்னும் ஒருவகைக் கோரைப் புல்லைப் பிடுங்கி வாய் மணக்க மென்றுகொண்டிருப்பர். (இக்காலத்தில் சுவிங்கம் செல்லுவது போல் மெல்லுவர்) வண்ணப் பொடிகள் தூவப்பட்டிருக்கும் அவர்களின் மார்பானது தங்கம் உரசிய கட்டளைக் கல்லைப் போலக் காணப்படும். அவர்களின் மேனியிலுள்ள தோல் மென்மையாக இருக்கும். இவர்களின் பெற்றோர் வினைஞர். (உழவுத் தொழிலாளிகள்) இவர்களது கைகள் இரும்பால் வடித்தது போல் வலிமையாக இருக்கும். இவர்களின் அன்புச் செல்வர்கள் தாம் இப்படி விளையாடுவர். தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோற்றை உண்பதில் இவர்கள் முனைந்து நிற்பர். அவர்கள் பழஞ்சோற்றை உங்களுக்கு வழங்குவர்.

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் . . . .[225]
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் . . . .[213 - 227]

பொருளுரை:

கவிந்திருக்கும் குடைபோன்ற உழவரின் குடில்கள் புதிய வைக்கோலால் வேயப்பட்டிருக்கும். அக் குடில் முற்றத்தில் உழத்தியர் அவல் இடிப்பர். அந்த ஒலியைக் கேட்டுப் பக்கத்தில் மேயும் கிளிகள் பறந்தோடும்.

நெல் அரிந்து கடா விடுதல் (228-242)
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி
கடுப்பு உடை பறவை சாதி அன்ன
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் . . . .[230]

தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி

பொருளுரை:

வளம் குன்றாத வயல்களில் நெல் விளைந்திருக்கும். பறவைச் சாதி தன் சுற்றத்துடன் நீண்டு வளைந்த வரிசையில் வானில் பறப்பது போல் நெல்லின் கதிர்மணிகள் விளைந்திருக்கும். நெல்லந்தாள் உள்ளே துளையை உடையது. நெல்லைத் தாளோடு உழவர்கள் அறுப்பார்கள். (கட்டுகளாகக் கட்டி) அவற்றைக் களத்திற்குக் கொண்டு செல்வர். களத்தின் ஓரத்தில் மருதமரம் இருக்கும். அதன் நிழலில் பாம்பு இருக்கும். (நாகச்சிலை போலும்) அதற்குப் பலியூட்டிய பின்னர்தான் நெற்கட்டுக்களைக் களத்தில் அடுக்குவர்.

கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் . . . .[235]

சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால் . . . .[240]

செம்பொன்மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை . . . .[228 - 242]

பொருளுரை:

களத்தில் சேர்த்துள்ள நெற்கட்டுகளில் சிலந்திப் பூச்சிகள் கூடு கட்டியிருக்கும். (அந்த அளவுக்கு நெல்மணிகளை அரிந்த தாளிலேயே முதிர விடுவார்கள்.) அரிகளைப் பிரித்து நெல் அடிப்பார்கள். மாடுகளைப் பூட்டி அடித்த தாள்மீது போரடிப்பார்கள். அது பூதம் தன் உறவுக் கூட்டத்தோடு கை கோத்துக்கொண்டு துணங்கை நடனம் ஆடுவது போல இருக்கும். பின் வைக்கோல் , துரும்பு ஆகியவற்றை நீக்கி நெல்லைத் தனியே பிரித்து எடுப்பார்கள். அந்த நெல்லிலும் முதிராத பச்சை நெல் (கருக்காய்) போகும் வண்ணம் மேலைக் காற்றிலே தூற்றுவார்கள். நல்ல நெல்லை களத்தின் வடக்குப் பக்கத்தில் குவித்து வைப்பார்கள். அது செம்பொன் குவித்த மலைபோல் தோன்றும். இதுதான் தண்பணை தழீஇய தளரா இருக்கை. அதாவது ஈர வயல்கள் நிரம்பிய, செல்வ வளத்தில் தளர்ச்சியே காணாத குடியிருப்புப் பகுதிகள்.

மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள் (243-256)
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் . . . .[245]

முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல்
தச்ச சிறாஅர் நச்ச புனைந்த
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர்

பொருளுரை:

வீடுகளில் நெல்லை சேமிக்கும் ஓங்கி உயர்ந்த கூடுகள் இருக்கும். அவை குமரி மூத்த கூடுகள். அதாவது அழியாத் தன்மை வாய்ந்த பழமையான கூடுகள். அவற்றில் பழங்கால நெல்லின் சேமிப்பு உண்டு. ( புது நெல்லை விடப் பழைய நெல்லேசிறந்தது. விலையும் அதிகம். ) ஓங்கி உயர்ந்த அந்தக் கூடுகளின் மார்புப் பகுதியில் ஏணியைச் சார்த்தி நெல் எடுக்கும் பழக்கம் இல்லை. அதன் மேல் முகட்டை உடைத்துவிட்டு நெல்லை எடுப்பது வழக்கம். இந்தக் கூடுகளின் அல்குல் பகுதியில் ( குருகிய இடைவெளிப் பகுதியில் ) பசு ஈன்றெடுத்த கன்றுக் குட்டி நீண்ட கயிற்றில் தும்பு மாட்டிக் கட்டப் பட்டிருக்கும். ( கவைத்தாம்பு = தும்பு ) உழவரின் புதல்வர்கள் - தச்சர்களின் சிறுவர்கள் நடை வண்டிகளைச் செய்து தருவார்கள். அவை ஊர்ந்து செல்ல முடியாத வண்டிகள். உழவர்களின் புதல்வர்கள் அதனை உருட்டிச் செல்வர்.

தளர் நடை வருத்தம் வீட அலர் முலை . . . .[250]
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல்

பொருளுரை:

தக்கா புக்கா என்று தளர்நடை போட்டு வண்டி உருட்டிச் சென்ற குழந்தைகளின் வருத்தம் தீரும்படிச் செவிலியர் பாலூட்டுவர். செவிலியர் அலர்முலைப் பெண்டிர். மலர்ந்தமுலை உடையவர் எனக் கூறப்படுவதால் இவர்கள் வயது முதிர்ந்த பெண்டிர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தம் மார்போடு தழுவிக்கொண்டு பாலூட்டுவர். பாடூட்டித் தூங்கவைப்பர். வீட்டுக் கட்டில் மெத்தையில் தூங்கவைப்பர்.

தொல் பசி அறியா துளங்கா இருக்கை
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி . . . .[255]

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்

பொருளுரை:

அங்குள்ள மக்களுக்கு வேளை தவறி உண்ணும் பழம்பசி இல்லை. வளம் மிக்க அப் பேரூரில் செல்வ வளம் தளர்வதுகூட இல்லை. ஊரே தூங்கி விட்டாலும் வினைஞர் என்னும் தொழிலாளர் இல்லங்களில் விருந்து உண்டு. சோம்பலின்றித் தூங்காமல் பாடுபடும் உழவுத் தொழிலாளர்கள் விளைவித்துத் தந்த வெண்ணெல் (சம்பா) அரிசிச் சோறு பெறலாம். கோழிக்கறி வறுவலுடன் பெறலாம்.

ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல் (257-262)
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை . . . .[260]

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் . . . .[257 - 262]

பொருளுரை:

நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்ல நேரும். கரும்பாலையின் ஓசையைக் கேட்டுக் கரும்பின் அறுவடைக் காலம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மழை மேகங்கள் விளையாடும் மூங்கில் காடுகள் நிறைந்த மலையடுக்கப் பகுதியில் அச்சம் தரும் யாளிகள் யானையைத் தாக்கும். அப்போது யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் கம்பலை (ஓசை) கேட்கும். அங்கே விசயம் அடுவார்கள். (கரும்புப் பால் காய்ச்சுவார்கள்) அவ்விடம் சென்று கரும்புப்சாறு பருகுங்கள்.

வலைஞர் குடியிருப்பு (263-274)
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் . . . .[265]

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் . . . .[270]

மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியா
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் . . . .[263 - 274]

பொருளுரை:

குளத்தில் மீன்பிடித்து வாழ்பவர்களைக் கொடுமுடி வலைஞர் என்பர். இவர்களது குரம்பை வீடுகள் தருப்பைப் புல்லால் தாழைநார் முடித்து வேயப்பட்டிருக்கும். வேழம் என்பது கொறுக்கை அல்லது பேய்க்கரும்பு. இதனை நாணாத்தட்டை (நாணல்தட்டை) என்றும் கூறுவர். இந்த வேயம் குறுக்குக் கழிகளாகவும் வெண்கரும்பு என்னும் மூங்கில் நெடுக்குக் கழிகளாகவும் வீட்டுக் கூரைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டையும் தாழைமட்டை நாரால் முடிந்து கட்டியிருப்பார்கள். தருப்பைப் புல் போட்டுக் கூரை வேய்ந்திருப்பர். குறுகிய தாழ்வாரமும் [இறை] அந்த வீட்டுக்கு உண்டு. முற்றங்கள் செப்பனிடப்படாமல் பறிந்து போயிருக்கும். மணல் பரப்பப்பட்ட அந்த முற்றத்தில் புன்னை மரத்தைப் பச்சையாக வெட்டி அதன் காய்கள் தொங்கும்படிப் பந்தல் போட்டிருப்பார்கள். இளையவர்களும் முதியவர்களும் சுற்றத்தாருடன் ஒன்றுகூடிக் குளத்துக்கு மீன் பிடிக்கச் செல்வர். வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடி அவர்கள் மீன் பிடிப்பார்கள். அம்பின் நுனி புலவு நாற்றம் அடிக்கும். அந்த வில்லம்புகளைப் போலவே குளத்தில் சிவந்த கோடுகளையுடைய கயல் மீன்களும், இளைய இறால் மீன்களும் குளத்தில் பிறழும். குளங்கள் ஆழமானதால் கருமை நிறத்துடன் காணப்படும். கோடைக்காலம் நீண்டுகொண்டே போனாலும் மீன்கள் தம் குஞ்சு குட்டிகளுடன் எப்போதும் வலைஞர்களுக்கு குறைவின்றித் தம்மை வழங்கிக் கொண்டேயிருக்கும். தோடுகள் நிறைந்த தாமரைப் பூக்கள் வேரோடிக் கிடக்கும் அந்தக் குளத்தின் கரையில் கொடுமுடி வலைஞர்கள் தனித்தனியாக மீன் பிடிக்காமல் ஒன்றாகக் கூடிமீன் பிடிப்பதற்காக காத்திருப்பார்கள். அங்குச் சென்றால் விருந்துணவு பெறலாம்.

வலைஞர் குடியில் பெறும் உணவு (275-282)
அவையா அரிசி அம் களி துழவை . . . .[275]

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇ தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த . . . .[280]

வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் . . . .[275 - 282]

பொருளுரை:

பொங்கல், அடை, அரியல்கள், மீன்சூட்டு வறுவல் போன்றவை குளக்கரை மீனவர் தரும் விருந்து. அரிசியை சுவைத்து மெல்ல வேண்டிய நிலை இல்லாமல் களி போல் கிண்டப்பட்ட பொங்கல் சோறு கிடைக்கும். மலர்ந்த வாயினைக் கொண்ட பிழா என்னும் வட்டிலில் புலரும்படி ஆற்றிப் படைப்பார்கள். அத்துடன் அடை என்னும் பலகார வகைகளையும் படைப்பார்கள். அந்த அடை பாம்பு வாழும் புற்றில் மலர்ந்திருக்கும் கறையான் அடை போல் மொது மொதுவென உப்பியிருக்கும். அடையில் தேன் போன்ற இனிப்புப் பொருள்களை ஊற்றித் தருவார்கள். காலை வேளையிலும் இரவு வரும் வேளையிலும் இரண்டு முறை அந்த விருந்து படைக்கப்படும். அதன்பின் அரியல் பிழியைச் சுடச்சுடத் தருவார்கள். விரல் விட்டு நன்றாகக் கலக்கி நாவில் சுடாத பதம் பார்த்துத் தருவார்கள். அரியலானது வலிமையான சாடியில் வழவழப்பு இல்லாமல் நன்றாக விளையும் வரையில் காய்ச்சப்பட்டது. (இதனை இக்காலத்தில் தரப்படும் சூப் போன்றது எனலாம்.) இதனைப் பருகும்போது துணை உணவாகக் கொள்வதற்காக வறுவல் மீனை ஆற வைத்துத் தருவார்கள்.

காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல் (283-296)
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ . . . .[285]

கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்

பொருளுரை:

பாண்மகன் தூண்டில் போட்டு மீன் பிடிப்பான். மீன்தூண்டிலில் மாட்டுவதற்காகத் தரப்படும் இறைச்சி இரையைத் தோல் பையில் போட்டு அதனைத் தோளில் மாட்டிக் கொண்டிருப்பான். நீண்ட மூங்கில் கோலின் நுனித்தலையில் மெல்லிய நரம்பு நூலைக் கட்டி அதன் மற்றொரு நுனியில் இரும்பினாலான தூண்டிலைக் கட்டியிருப்பான் தூண்டிலின் இரும்பு தெரியாதபடி பச்சைக் கறி செருகப் பட்டிருக்கும். வாளைமீன் அந்த இறையைக் கவ்வும்.. எனினும் எப்படியோ தப்பிவிடும். தப்பிய வாளைமீன் பிரம்புப் புதருக்குப் பக்கத்தில் செல்லும்போது வளர்ந்திருக்கும் பிரம்பின் நிழலைப் பார்த்து அதனைத் தூண்டிலின் கோல் என்று எண்ணி நடுங்கும்.

நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி . . . .[290]

உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் . . . .[295]

பெருநாள் அமையத்து பிணையினிர் கழிமின் . . . .[283 - 296]

பொருளுரை:

இத்தகைய தன்மையினைக்கொண்டு அகன்று விரிந்த குளம் ஆழமானது. அக் குளத்தில் தீ எரிவது போலக் கடவுள் ஒண்பூ (செந்தாமரை) மலர்ந்திருக்கும். பிரம்பு நிழலைக் கண்டு நடுங்கிய வாளைமீன் கடவுள் ஒண்பூவின் பக்கம் செல்லாமல் பாதுகாப்பாக விலகிச் செல்லும். தன் உறைவிடத்தைத் தாமரையின் பக்கம் அமைத்துக் கொள்ளாமல் செங்குவளை பூத்திருக்கும் பகுதியில் அமைத்துக் கொள்ளும். அரக்கு நிறம் கொண்ட செங்குவளைப் பூவும் நீலம் என்று சொல்லப்படும் நீலப்பூவும் நீர் மட்டம் வரையில் ஓங்கி உயர்ந்து சிவப்பு, பச்சை (இலை), நீலம் என்றெல்லாம் முரண்பட்ட நிறங்களில் அந்த முதுநீர்ப் பொய்கையில் தழைத்திருக்கும். நாண் இல்லாத குறைவில் (குறைந்திருக்கும் வில்) தான் வானவில். பொய்கையில் பூத்திருக்கும் அந்தப் பூக்கள் முழுமையாகத் தோன்றாமல் அறைகுறையாகத் துண்டுபட்டிருக்கும் வானவில் போலத் தோன்றும். பொய்கையைத் தூய்மை செய்வோர் அப் பூக்களைக் களைந்து கரையில் எறிவர். கரையில் கிடக்கும்போதும் அவை மொட்டு விட்டுப் பூக்கும். அவற்றில் கடவுள் பூவாகிய தாமரையை விடுத்து ஏனையவற்றை நல்லநாள் பெரியநாள் வரும்போது கண்ணியாகவோ, மாலையாகவோ கட்டி அணிந்து கொண்டு செல்லுங்கள்.

அந்தணரது உறைவிடங்களில் பெறுவன (297-310)
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்
பைஞ்சேறு மெழுகிய படிவ நல் நகர்
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் . . . .[300]

மறை காப்பாளர் உறை பதி சேப்பின்

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்கள் நோன்பு நோற்கும் படிவ நிலையில் கொணப்படும். பருமன் இல்லாத கால் நட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும். அந்தப் பந்தர்க்காலில் பசுவின் கொழுகொழு கன்று கட்டப்பட்டிருக்கும். பந்தலின் கீழே உள்ள தரை பைஞ்சேற்றால் (பசுவின் சாணத்தால்) மெழுகப்பட்டிருக்கும். கோழியோ, நாயோ அங்கு இருக்காது. பந்தலில் உள்ள கூட்டில் வளர்க்கப்படும் வளைந்த வாயினையுடைய கிளிக்கு அவர்கள் தம் மறை மொழிகளைச் சொல்லிப் பயில வைத்துக்கொண்டிருப்பார்கள்.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல்
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் . . . .[305]

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்புறு பசும் காய் போழொடு கறி கலந்து
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர்
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் . . . .[310]

பொருளுரை:

மறைகாப்பாளர் வாழும் இடங்களுக்குச் சென்றால் அவர்களின் மனைவியர் நல்கும் உணவைப் பெறலாம். அகன்ற வானத்தின் வடபால் விளங்கும் சாலிமீன் (அருந்ததி விண்மீன் Polaris) அந்த விண்மீன் போன்று நிலைமாறாத இருப்புத் தன்மையைக் கற்பு எனல் தமிழர் கோட்பாடு. இப்படிக் கற்புக்கடம் பூண்ட அந்தணர் சலைக்கும்போது தம் வளையலணிந்த புறங்கைகளால் நெற்றியில் வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டு சமைப்பார்கள். சோற்றுக்கு வத்தல் போட்ட மோர்க்குழம்பு உண்டு. அந்த வத்தல் (வத்தம்) சுடர்க்கடைப் பறவையின் பெயரைக் கொண்டது. (கோழியவரை வத்தல் போலும்) மாதுளையின் பச்சைக் காயைப் பிளந்து வெண்ணெயில் வதக்கிய கறியும் உண்டு. மோரும் வெண்ணெயும் உண்ணத் தருவார்கள்.அவை செவ்விய பசு தந்த பாலைக் காய்ச்சிப் பெறப்பட்டவை. வத்தல் குழம்பிலும், கறிகாயிலும் கஞ்சுகத்தை (கறி வேப்பிலையைக்) கிள்ளிப் போட்டிருப்பார்கள். மாவடு ஊறுகாயும் உண்டு. (மாமரத்துக்குக் கொக்கு என்னும் பெயரும் உண்டு. வடி என்பது வடுவைக் குறிக்கும். நெடுமரக் கொக்கின் நறுவடி என்பது பாடலில் மாவடுவைக் குறிக்கும்.) (காடி என்பது உப்பிட்டுப் புளித்த ஊறுகாய்.) மறைகாப்பாளர் இல்லங்களுக்குச் சென்றால் வகைபடச் (வக்கணையாகச்) சமைக்கப்பட்ட இவற்றை வகையோடு பெறுவீர்கள்.

நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு (311-319)
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த . . . .[315]

வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும்
நீர்பெயற்று எல்லை போகி பால் கேழ் . . . .[311 - 319]

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்பது ஓர் ஊர். அவ்வூரிலுள்ள துறையின் புனலில் விளையாடும் மகளிர் விளையாட்டுத் தோழிமாரோடு சேர்ந்து தழுவிக் கொண்டு நீர்த்துறைக்குள்ளே வண்டல் விளையாடி மகிழ்வர். தண்ணீருக்குள் விளையாடும்போது அவர்கள் தங்களது தங்க நகைகளைக் கழற்றிக் கரைகளிலேயே வைத்து விட்டு விளையாடுவர். மணிச்சிரல் என்பது சிச்சிலி என்றும் சொல்லப்படும் அழகிய மீன்கொத்திக் குருவி. கரையில் தங்க நகைகளைப் பார்த்த மீன்கொத்திக் குருவி தனக்கு நல்ல தங்கமீன் இரை கிட்டியது என்று எண்ணி அதன்மீது பாயும். அவை இரை அன்மையால் மருண்டு போய் பக்கத்தில் பல பறவைகள் இருக்கும் புன்னைமர மடலில்கூட உட்காராமல் நெடுந்தூரம் பறந்து செல்லும். அங்கே ஊர்ப் பகுதியில் அந்தணர்கள் வேள்வித் தூண் நட்டு வேதம் ஓதித் தம் கடமைகளைச் செய்துகொண்டிருப்பர். அவர்களின் வேதம் எழுதப் படாதது. வழிவழியாகக் காதால் கேட்டு ஓதப்படுவது. பறந்து சென்ற மீன்கொத்திப் பறவை அவர்கள் நட்ட வேள்வித் தூணின்மேல் சிறிது நேரம் உட்காரும். அது உட்கார்திருப்பதிருப்பதானது அன்ன-விளக்கு போல் தோன்றும். அன்னப் பறவை பொம்மையை உச்சியில் வைத்துச் செய்த குத்து விளக்கை அக்காலத்தில் யவனர் கொண்டுவந்து தமிழ்நாட்டில் வாணிகம் செய்தனர். வேள்வித் தூணின்மேல் மீன்கொத்திப் பறவை அமர்ந்திருப்பது யவனர் தந்த ஓதிம (அன்ன) விளக்கைப் போலத் தோன்றும். அந்தணர் மிகுதியாக வாழ்ந்த அந்த நீர்ப்பெயற்று ஊரைத் தாண்டிச் செல்ல வேண்டும். கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரம் நீர்ப்பெயற்று என்னும் பெயருடன் விளங்கியது. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி என்னும் போது முந்நீர் என்னும் தொடரிலுள்ள ‘நீர்’ என்பது கடலை உணர்த்துகிறது. நீர் = கடல். நீர்ப்பெயற்று = கடல்மல்லை நீரின் பெயரைக் கொண்ட பட்டினத்தைப் புலவர் நீர்ப்பெயற்று என்று குறிப்பிடுகிறார். இது எயிற் பட்டினத்தைச் சிறுபாணாற்றுப்படை மதிலொடு பெயரிய … பட்டினம் என்று குறிப்பிடுவது போன்றது.

திமிலர் முதலியோர் உறையும் பட்டினம் (320-336)
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉ . . . .[320]

நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின்
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா . . . .[325]

மேழக தகரோடு எகினம் கொட்கும்

பொருளுரை:

நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் நாவாய்க் கப்பல்கள் சூழ்ந்திருந்தன. வெள்ளைக் குதிரைகள் அதில் வந்து இறங்கின. அத்துடன் வடநாட்டுச் செல்வ வளங்களும் வந்திறங்கின. அது நீர் வளம் மிக்க ஊர். அங்கே மாட மாளிகைகள் ஓங்கிய மணல் பரந்த குறுந்தெருக்கள். (பரதர் எனப்படுவோர் கப்பல் வாணிகர்) அவர்கள் வாழ்ந்த பெருந்தெருக்களில் வானளாவிய பெரும்பெரும் மாளிகைகள். அப்பகுதியில் சிலதர் என்னும் வில்லேந்திய அரசுக் காவலர்கள் காவல்பணியை மேற்கொண்டிருந்தனர். அங்கே வயலை உழுத கறவை காடுகளோ பால்மாடுகளோ இல்லை. மாறாக, சண்டையிடும் செம்மறியாட்டுக் கடாக்களும், சேவல்களும் ஏவிவிடப்பட்டுச் சுழன்று விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றைப் பரதர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் . . . .[330]

பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் . . . .[335]

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் . . . .[320 - 336]

பொருளுரை:

செல்வ வளம் கொழிக்கும் அங்குள்ள வானளாவிய, ஓங்கி உயர்ந்த மாடங்களில் மகளிர் வரிப்பந்து விளையாடுவர். அந்த மகளிர் இடுப்பில் மென்மையான ஆடைகளின் மேல் முத்தாரங்களைக் கோத்து அணிந்திருப்பர். கையிலே பூண் வளையலும், காலிலே தங்கச் சிலம்பும் கொண்ட அவர்கள் பொன்னணிகள் ஒலிப்ப அவர்கள் பந்தாடும்போது மலைக்காடுகளில் மகிழ்ச்சி பொங்க மயில்கள் ஆடுவது போல இருக்கும். கொன்றைப் பூக்கள் பனியில் தவழ்ந்து ஆடுவது போலவும் இருக்கும். மாடங்களில் ஓடியாடிக் கையால் தட்டி விளையாடுவது வரிப்பந்து. மணல் வெளியில் விளையாடுவது பொற்கழங்கு. முத்துக்கள் கிடக்கும் மணலில் பொன்னால் செய்த கழங்குகளைத் தூக்கிப் போட்டு விளையாடும்போது அவர்களது கைகளில் உள்ள வளையல்கள் தத்தித் தத்தி ஆடும். பந்து விளையாட்டில் சலிப்பு தோன்றும் போது கழங்கு விளையாடினர் போலும். பட்டினப் பகுதியில் ஆண்கள் கண்டு மகிழும் ஆட்டுச் சண்டை, கோழிச் சண்டை ஆகியவற்றையும், மகளிர் விளையாடும் பந்து, கழங்கு ஆட்டங்களையும் ஆசையோடு பார்த்து மகிழலாம். பசிக்கும்போது உணவை நாடிச் செல்லலாம்.

பட்டினத்து மக்களின் உபசரிப்பு (337-345)
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் . . . .[340]

ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் . . . .[337 - 345]

பொருளுரை:

பரதர் அன்னக்கொடி கட்டி உணவு படைப்பார்கள். உணவு படைக்கும் இடம் பலர் புகு வாயிலைக் கொண்டது. அது செம்மண்ணால் மெழுகப் பட்டிருக்கும். (இக்காலத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்படுவது போல) அன்று அங்கே சிவப்புப் பூக்களை முற்றத்தில் விரித்துப் பரப்பி விருந்தினரை வரவேற்பர். மகளிர் கள் காய்ச்சுவர் அதனை வள்ளத்தில் தருவார்கள். வழிய வழிய ஊற்றி அவர்கள் கள்ளைத் தருவர். அப்போது வழிந்து உகும் கள் நிலத்தைக் குழம்பாக்கிச் சேறாக்கும். அந்தச் சேற்றில் பன்றிக் குட்டிகள் தம் தாயோடு புரளும். பாயம் என்பது பன்றிகளுக்கு அதனை வளர்ப்போர் வார்க்கும் கஞ்சி. இங்குக் கள்ளுச் சேற்றில் புரளும் பன்றிகள் தமக்கு வார்க்கும் கஞ்சியை நாடிச் செல்வதில்லை அன்னக்கொடி கட்டி உணவளிக்கும் இடத்தில் பாயும் கஞ்சியைப் பருகிவிட்டுப் பல நாள் அந்தக் குழிகளிலேயே ஆண்-பன்றியையும் பெண்-பன்றியும் சேர்த்துகொண்டு தங்கி விடும். அங்குச் சென்றால் பன்றிக் கறியுடன் நறாக் கள்ளும் பெறலாம்.

ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை (346-351)
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் . . . .[350]

துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி . . . .[346 - 351]

பொருளுரை:

விண்ணைத் தொடுவது போல உயர்ந்தோங்கிய மாடத்தின் மேலுள்ள திறந்த வெளியில், வானளாவ ஊன்றிய தூண் போல, ஏணி சாத்தி ஏறமுடியாத உயரத்தில், நடப்பட்டிருக்கும் கம்பத்தில் சுடர் விட்டு எரியும் ஞெகிழியைக் (பந்தத்தைக்) கட்டியிருப்பர். அது கடலில் செல்லும் பெரிய கப்பல்களை (கலம்) இட அடையாளம் காட்டி அழைக்கும்.

தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம் (352-362)
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் . . . .[355]

பொருளுரை:

கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் மஞ்சள் விளையும் படப்பைப் பகுதியில் தண்டலை உழவர்களின் தனி மனைகளை அடையலாம். அந்தத் தனிமனை குன்றுபோல் உயர்ந்திருக்கும். யானைக்கால் போல் நான்கு கால் நட்டு அதன் பரண்மீது கட்டப்பட்டிருக்கும். அது தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு சென்றால் விருந்துணவு பெறலாம்.

தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம்
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம்
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் . . . .[360]

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் . . . .[352 - 362]

பொருளுரை:

தண்டலை உழவர் விருந்தில் பலாச்சுளை, பதநீர், இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு அவியல் முதலானவை படைக்கப் படும். பலாப்பழம் தாழ்ந்த வேரில் பழுத்தது. விழுதில்லாத தாழை என்பது தென்னை மரத்தையும், பனை மரத்தையும் குறிக்கும். இந்தத் தாழையின் இளங் குருத்துகளைச் சீவிப் பெற்ற வடிநீர் பருகலாம். குலையிலேயே முதிர்ந்து கனிந்து தொங்கும் வாழைப்பழம் தரப்படும். உரித்தால் வெள்ளையாக இருப்பதால் வாழைப்பழத்தை வெண்பழம் என்று பாடல் குறிப்பிடுகிறது. இது இரண்டு முலைக்காம்புகள் கொண்ட பெண்யானையின் தந்தம் போல் இருக்கும். அடி பருத்து ஓங்கியுள்ள பனைமரத்தின் நுங்கும் வெண்பழம் போன்றது. இவற்றை உண்டு சலிக்கும் போது நல்லுணவு (நெல்லஞ்சோறு) பெறலாம். அந்தச் சோற்றுக்குச் சேப்பங் கிழங்குக் குழம்பு. இப்படி வயிறார உண்பீர்கள்.

ஒதுக்குப் புற நாடுகளின் வளம் (363-371)
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின்
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர . . . .[365]

சோறு அடு குழிசி இளக விழூஉம்
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து

பொருளுரை:

அடுத்துப் பாக்குத் தோட்டமும், தென்னந் தோப்பும் சூழ்ந்த பாக்கத்தை அடையலாம். பாக்கு மரங்கள் அடியில் பருத்திருக்கும். மழை மேகங்கள் போல ஓங்கி உயர்ந்திருக்கும். அந்தத் தோப்புகளைச் சூழ்ந்து தென்னந் தோப்பு. அதன் தேங்காயில் மூன்று கண். அக்காய் சோறாக்கும் பானைக்குப் பக்கத்தில் விழும். தேங்காய் போட்டுச் சமைத்தால் சோறு இளகி வருமாம். அந்த வழியாகச் செல்லும் புதியவர்கள் தேங்காயும் தின்னலாம் தேங்காய்ச் சோறும் பெறலாம். பருவ காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் பெறப்படுவதால் தென்னையை வீயா யாணர் (அழியாத வருவாய்) என்பர்.

பல் மரம் நீள் இடை போகி நல் நகர்
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் . . . .[370]

நாடு பல கழிந்த பின்றை நீடு குலை . . . .[363 - 371]

பொருளுரை:

வள்ளிக் கொடி வாடக் கூடியது. வாடா வள்ளி என்பது கற்பகக் கொடி. கற்பக மரம் போல் கற்பகக் கொடியும் கற்பனை. பொன்னால் செய்யப்பட்ட கற்பகப் பூவை மகளிர் தலையில் அணிந்து கொள்வது வழக்கம். அறுகம்புல்லை வாடாவள்ளி என்றனரோ எனவும் எண்ணத் தூண்டுகிறது. இந்த வாடா வள்ளி போல் வளம் தரும் பல நாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும் (372-392)
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்

பொருளுரை:

அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும். குயின் என்பது மேகம். குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும். வெயில்கூட நுழைய முடியாது. பொதும்பர் மலைப்பகுதியில் இருந்தால் அதனைச் சிலம்பு என்பர். காரணம் மலை எதிரொலிக்கும். காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படிந்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம். (இப்போதுள்ள சின்ன காஞ்சி வரதராசப் பெருமாள்) காந்தள் மலர் படம் விரித்திருக்கும் நாகத்துக்கும், களிறு கரியநிறத் திருமாலுக்கும் உவமை.

குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி . . . .[375]

பாசிலை குருகின் புன் புற வரி பூ
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப
புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால் . . . .[380]

சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு

பொருளுரை:

பருத்த அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். பச்சையான இலைகளையுடைய குருகுக் கொடி அம்மரத்தைச் சுற்றிக்கொண்டு படரும். பூத்திருக்கும் அப்பூவிதழின் அடிப்பகுதியில் வரிகள் காணப்படும். (மாதவிக் கொடியொடு குருகுக்கொடி ஒப்புமை உடையது) (குருகுக்கொடி காஞ்சி மரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் கையைச் சுற்றிக் கொண்டிருக்கும் வளையலும் குருகு எனப்பட்டது) குருகு சுற்றிய காஞ்சியின் நிழலானது மணலில் தேங்கியிருக்கும் நீரில் விழும். அந்த நிழலினைப் போலக் கூவியர் சுடும் வட்டம் (அப்பம்) இருக்கும். சுட்ட வட்ட-அப்பத்தை அவர்கள் பாலில் கலந்து தருவார்கள். காரகல் என்னும் கருமையான வடையைச் சட்டியில் திரியிழையாகச் சுற்றி வட்டம் சுடுவார்கள். (இக்காலத்து ஜாங்கிரி போன்றது அக்காலத்து வட்டம் என்னும் பண்ணியம்.) காஞ்சி மகிழ்ச்சிப் பூங்காவில் இப்பண்ணியம் (பலகாரம்) பெறலாம். பொழில்களில் புனல் பாய்ந்து மரத்தின் கால்களைக் கழுவிச் செல்லும். பொழிலில் வைத்திருக்கும் நீலப் பைங்குடங்கள் பாக்கு மரத்தின் பாளை கருவுற்றிருப்பது போல் இருக்கும். நீலம் என்னும் கள் வகையைக் கொண்டிருப்பது நீலப் பைங்குடம். இந்தக் குடத்தைத் தொலைச்சலாம், அதாவது முற்றிலுமாகப் பருகலாம். இந்தப் பகுதியைப் பெருமகிழ் இருக்கை என்பர். (பெருமகழ்ச்சி தரும் இருப்பிடம்) இந்த இருப்பிடங்களை மருவிக்கொண்டு (பயன்படுத்திக் கொண்டு) செல்லலாம்.

குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் . . . .[385]

நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி

பொருளுரை:

மடவரல் என்போர் மடப்பத் தன்மை கொண்ட பருவம் எய்தாத இளம்பெண்கள். அவர்கள் இளநிலாவின் கோண் வளைவைப் போன்ற நெற்றியைக் கொண்டவர்கள். சுறவு என்னும் கரும்பாம்பின் வாயிலிருந்து வெளிவருவது போல் கூந்தலில் வண்டு மொய்க்க மலரும் நெற்றியைக் கொண்டவர்கள். நாவுக்கு இன்பம் தரும் நறவு என்னும் தேனைப் பிழிந்து வைத்தாற் போன்று கண்ணுக்கு இன்பம் தரும் கட்டழகு எழிலாக வாய்க்கப் பெற்றவர்கள். மழை போன்ற அவர்களது ஈரக் கண்களில் மடப்பத் தன்மை காணப்படும். பகலெல்லாம் இவர்களோடு விளையாடிக் கொண்டே செல்லலாம்.

பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின் . . . .[390]

அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும்
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின் . . . .[372 - 392]

பொருளுரை:

வேனில் விழாதான் பூமலி பெருந்துறைச் செவ்வி என்று போற்றப்படுகிறது. (சிலப்பதிகாரம் போற்றும் இந்திர விழா போன்றது காஞ்சியில் நடைபெற்ற திருமாலின் திருவிழா) துறக்கம் என்னும் சுவர்க்கம் பழமைச் சிறப்பினை உடையது. அதனைப் பெறுவதென்பது இயலாத ஒன்று. துறக்கம் என்பது பொய்மை. (காஞ்சி வேனில் விழா பெற்று மகிழக்கூடிய துறக்கம்.) உண்மையில் பொய்யாத மரபினைக் கொண்டு மண்ணுலகில் இருக்கும் துறக்கந்தான் வேனில் காலமும் அதில் கொண்டாடப்படும் விழாவும். காஞ்சியில் இந்த விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை (இந்திரன், காமன்) வாழ்த்திப் பாடுங்கள். \உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள்.

கச்சி மூதூரின் சிறப்பு (393-411)
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ
நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் . . . .[395]

களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்

பொருளுரை:

இளந்திரையன் ஊர் கச்சி. அம் மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக்கொண்டிருப்பர். காழோர் என்போர் யானைப் பாகர். அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர். இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பாரத்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும். வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம். கந்து என்பது பற்றுக்கோடு இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண். வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம். வேறு சில காழோர் வெளிறு இல்லாத கந்தினைப் பயன்படுத்திக் காட்டிலுள்ள யானையைக் குழியில் விழச்செய்து அதன் சினத்தை அடக்கிக் கொண்டிருப்பார்கள்.

திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ
கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த . . . .[400]

அடையா வாயில் மிளை சூழ் படப்பை

பொருளுரை:

கொடுக்கலும் வாங்கலுமாகப் பரபரப்பாக உள்ள தெருக்களில் நடந்து செல்வதுகூட எளிதாக இருக்காது. திண்மையான தேர் சென்றதால் நீண்ட தெருக்கள் குண்டும் குழியுமாக இருக்கும். அத்தெருக்களில் படை வீரர்களின் குடும்பங்கள் வாழும். அக்குடியினர் வலிமையால் புகழ் பெற்றவர்கள். வெளியிடங்களில் படைக்கருவிகளும் கையுமாகத் திரிவர். அவர்கள் அந்த வீரப் புகழைக் கடைக்காலிலே கட்டித் தூக்கி எறிந்து விட்டு வழியில் செல்வோரைத் தடுத்து பிடித்து வந்து கொடை வழங்குவதில் ஆர்வம் காட்டுவர். (கடைக்கால் = தண்ணீர் பாயும் கடைமடை) திரையன் அரண்மனையின் வாயில் கதவம் எப்போதும் அடைக்கப் படாமல் திறந்தே இருக்கும். · காவல் புரிவோரும் தம் வீரத்தை வெளிப்படுத்தாமல் வழிப் போக்கர்களைத் தடுத்து அரசனிடம் கொடை பெறச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி

பொருளுரை:

காஞ்சிமா நகரமானது நீலநிற உருவம் கொண்ட திருமால் படுத்திருப்பது போலவும், திரையனின் அரண்மனையானது திருமாலின் கொப்பூழில் தோன்றிய நான்முகன் அமர்ந்திருக்கும் தாமரையின் பொகுட்டு போலவும் அமைந்திருக்கும். காஞ்சிமா நகரம் தாமரை என்றால் அரசன் திரையனின் அரண்மனை அதன் பொகுட்டு. தாமரைப் பூவில் உள்ள நடுமேடு (அரசன் பிரமன் போன்றவன்)

சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் . . . .[405]

இழுமென் புள்ளின் ஈண்டு கிளை தொழுதி
கொழு மென் சினைய கோளியுள்ளும்
பழம் மீக்கூறும் பலாஅ போல
புலவு கடல் உடுத்த வானம் சூடிய
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ . . . .[410]

விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் . . . .[393 - 411]

பொருளுரை:

காஞ்சிமாநகரம் எப்போதும் விழாக் கொலமாக இருக்கும். காஞ்சிமா நகரத்தின் வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. கிளையில் பழுக்கும் பழங்கள் பலவற்றுள்ளும் பலா சிறந்தது. அதில் ஈ மொய்க்கும். இழுமென் புள் என்பது ஈ. உலகம் புலவு நாற்றம் அடிக்கும் கடலை ஆடையாக உடுத்திக் கொண்டுள்ளது. வானத்தை முடியாகச் சூடிக்கொண்டுள்ளது. பலாப்பழத்தின் சுளைகளில் பழம் தின்னும் கொசு-ஈக்கள் மொய்ப்பது போல உலகின் பல்வேறு திசைகளிலுள்ள மக்கள் விழாக் காலத்தில் காஞ்சிமா நகருக்கு வந்து தொழுவர். விழாக் கொண்டாடுவதில் பழம் பெருமை கொண்டது காஞ்சிமாநகரம்.

இளந்திரையனின் போர் வெற்றி (412-420)
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப
ஈரைம்பதின்மரும் பொருது களத்து அவிய . . . .[415]

பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர்
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து
கச்சியோனே கை வண் தோன்றல் . . . .[412 - 420]

பொருளுரை:

காஞ்சி அரசன் இளந்திரையன் கொடையையே கைக்கு வளமாகப் பெற்றுத் தோன்றியவன். நூற்றுவரை வென்ற ஐவர் போல பல போர்களில் வெற்றி கண்டவன். (பிறவிக் கொடையாளி) (வலிமையா, வளமா?) கையின் வலிமையை விடக் கையின் வளமே (கொடையே) மேலானது. போர்களத்தில், வெட்டப்பட்ட யானையின் வெண்ணிறத் தந்தத்தைச் சிவந்த குருதி-வெள்ளம் ஈர்த்துச் செல்லும் காட்சியானது வெயில் மறையும் மாலைக் காலத்தில் மழைமேகம் வெண்ணிறப் பிறை நிலாவைச் சூடிச் சிவந்து காணப்படுவது போல் இருக்கும். பிறை சூடிய சிவபெருமான் போல - நினைவோட்டம் தன் பகைவர்களைப் போர்க்களத்தில் மாயச் செய்த இளந்திரையன், நூற்றுவரைப் போர்க்களத்தில் மாயச் செய்த ஐவர் போரிடத் தேரில் சென்றது போலச் சென்று, வெற்றி ஆரவாரத்தோடு, தேரில் திரும்பி வந்த வள்ளல் ஆவான்.

அரசனது முற்றச் சிறப்பு (421-435)
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப
நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் . . . .[425]

துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்

பொருளுரை:

திரையனை விரும்பி அவனிடம் செல்பவர்களுக்கு அவன் பாதுகாவலாக விளங்குவான். நண்பர்கள் விரும்பியதை அவன் மழைபோல் அள்ளித் தருவான். பகைவர்களை அவன் தீயைப்போல் சுட்டெரிப்பான். அவனை எதிர்த்துப் போரிட்டவர்களின் நிலம் பாழாகும். அவனை நயந்து வாழ்வோரின் நிலம் பொன் கொழித்துப் பூக்கும். மலையிலிருந்து இறங்கும் அருவி கடலை நோக்கிச் செல்வது போல், அரசர்களும் மக்களும் அவனது நட்பைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். துணை இல்லாதவர்கள் அவனது துணை-வலிமையைப் பெறுவதற்காக அவனைச் சூழ்ந்து வந்து கொண்டேயிருப்பர். அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டேயிருப்பர். பணிந்து கொண்டேயிருப்பர்.

இமையவர் உறையும் சிமைய செ வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு . . . .[430]

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து . . . .[421 - 435]

பொருளுரை:

இமையோர் உறையும் சிமையம் ஆகையால் இமையம். (ஹிமம் = பனி - வடமொழி), இமயமலை = பனிமலை, அந்தச் சிறந்த இமையமலையின் வெள்ளைத் திரையைக் கிழித்துக் கொண்டு கங்கையாறு இறங்கிக் கொண்டிருக்கும். அது அந்த மலையில் விளங்கும் சுடர் போல் கங்கை இறங்கும். தன் பொலிவைக் காட்டிக் கொண்டு இறங்கும். கங்கையைச் படகின் துணை இல்லாமல் கடந்து செல்ல இயலாதாகையால் அது போக்கருங் கங்கை. கங்கையாற்றில் படகில் செல்வதற்குப் படகுக்காகக் கரையில் காத்திருக்கும் மக்களைப் போல இளந்திரையனின் முகப்பார்வை கிட்டாதா என்று அவனைப் பணியும் மன்னர்கள் காத்துக் கிடப்பார்கள். மதிப்பில் தொய்வு இல்லாத பெருஞ் செல்வத்துடன் வந்து நெருங்கி நின்று காத்துக் கிடப்பர்.

இளந்திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி (436-447)
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும்
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் . . . .[440]

பொருளுரை:

அரசன் இளந்திரையனின் அரண்மனை ஓங்கி உயர்ந்த மாடங்களைக் கொண்டது. அதில் புறாக்கள் வாழும். அவற்றில் ஆண்-புறாக்களின் கால்கள் சிவப்புநிறம் கொண்டவை. கொல்லர் போர்-யானைகளின் தந்தங்களுக்கு காப்பு வளையல்கள் செய்வார்கள். அதற்காக அவர்கள் உலைக்கூடத்தில் இரும்பைத் தட்டும் ஓசையைக் கேட்டு அஞ்சி வெருவி அங்குள்ள மாடப் புறாக்களின் சேவல்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அரண்மனையில் செல்வம் பயன்படுத்த முடியாமல் தூங்கும்.

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும்
வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி . . . .[445]

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகி . . . .[436 - 447]

பொருளுரை:

உரும்பில் சுற்றம் என்பது அரசனின் உரிமைச் சுற்றம். ஆட்சி உரிமை பெற்ற அலுவலர்களும் இதனுள் அடங்குவர். அவனைப் போலவே அவனது இந்த உரும்பில் சுற்றத்தாரும் கூம்பாமல் மலர்ந்திருக்கும் உள்ளம் படைத்தவர். கொடை வழங்குதலையும் தமது அன்றாடக் கடமையாகக் கொண்டு செயல்படுபவர்கள். அரசன் இளந்திரையன் முறை (நீதி) வேண்டுபவர்களுக்கு முறை வழங்குவான். கீழைக் கடலில் தோன்றி வெளிச்சம் தரும் பகலவன் போல நீதி வழங்குவான். தனக்கு இன்ன குறை உள்ளது, அதனைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தவர்களுக்கு அவர்களின் குறையைத் தீர்த்து வைப்பான். மற்றும், யார் எதை வேண்டுகிறார்களோ அவர்களுக்கு அதனை அருளி உதவுவான். உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் செல்ல வேண்டும்.

பாணன் அரசனைப் போற்றிய வகை (448-464)
பொறி வரி புகர்முகம் தாக்கிய வயமான்
கொடுவரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் . . . .[450]

கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை
கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ . . . .[455]

செல்வர் செல்வ செரு மேம்படுந
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி . . . .[460]

வந்தேன் பெரும வாழிய நெடிது என
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி
நின் நிலை தெரியா அளவை அ நிலை . . . .[448 - 464]

பொருளுரை:

உரும்பில் சுற்றத்தோடு காட்சி தரும் அவனிடம் நீங்கள் சென்று அவனை வாழ்த்த வேண்டும். இப்படி யெல்லாம் சொல்லி அவனை வாழ்த்தலாம். பொறிவரிப் புகர்முகம் = புள்ளிகளையும் கோடுகளையும் முகத்தில் கொண்ட யானை, வயமான் = சிங்கம். கொடுவரிக் குறளை = வளைந்த கோடுகளையுடைய புலியின் குட்டி. யானை சிங்கத்தைத் தாக்கியது. தாக்கப்பட்ட சிங்கம் புலிக்குட்டிகளைத் தாக்க விரும்பி எழுந்தது போல இளந்திரையன் பகைவர்மேல் போருக்கெழுந்தான். மக்கள் - யானை, திரையன்- சிங்கம், பகையரசர் -புலி. முறையும், குறையும், வேண்டுவனவும் வழங்கும்படி வேண்டிய வண்ணம் இளந்திரையனாகிய சிங்கத்தை மக்களாகிய யானைக்கூட்டம் தாக்கியது. இளந்திரையன் புலவர்களுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் செய்துவிட்டுச் சிங்கம் புலிக்குட்டியின் மீது பாய்வது போல் பகைவர்கள் மீது பாய்ந்தான். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். பகைவர்களின் காவல் மதில்கள் அவனுக்கு ஒரு பொருட்டு அன்று. பகைவர்களின் தலை முடிகளைப் (கிரீடங்களைப்) பறித்து வந்தான். அவன் கையிலிருந்த அவனது வாள் கண்டது வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே அவனது வினையுடம்பைச் சுட்டாலும் அவனது வாள் அவனுடன் ஒன்றாக வைத்துச் சுடப்படும். பகைநாட்டை வென்று பெற்ற கொண்டிப் பண்டங்களே தொண்டைநாட்டுப் படைவீரர்களின் உணவு. இப்படிப்பட்ட தொண்டையர்களின் மரபுவழித் தோன்றலே! - 1 மள்ளர் = உடல் திற வீரர். மறவர் = படைத்திற வீரர். மள்ளருக்கும் மள்ளனே! - 2, மறவருக்கும் மறவனே! - 3, செல்வர்களுக்கும் செல்வனே! - 4, போரில் மேம்பட்டவனே! - 5, துணங்கையஞ் செல்வி = பார்வதி = அம்மை = மாயவள். இவள் மாமோடாகிய ஆகாயத்தில் நடனமாடினாள். அணங்கு = மருளாட்டம். கடலிலே சூரபன்மாவைக் கொன்றவன் முருகன். அவனை உண்டாக்கித் தந்தவள் பார்வதி. (இவள் மாயவள் உருவம் கொண்டு மரக்கால் ஆட்டம் ஆடினாள். இதனைக் …காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள். மாயவள் ஆடிய மரக்கால் ஆடல் … என்று மாதவி ஆடிய பதினோர் ஆடல்களில் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. - கடலாடு காதை) அருட்தெய்வமாகிய அம்மை அணங்காட்டம் ஆடிய போது அள்ளித் தரும் கொடையால் அவளை ஆற்றுவிப்பது போல வந்தவர்க் கெல்லாம் வரையறை இல்லாமல் வாரி வழங்கும் கொடையால் திரையன் என்று பெயர் பெற்றவனே (திரை = கடல் அலை) - 6 … பெரும இப்படிப்பட்ட நின் பெரும்புகழைப் பாடிக்கொண்டு வந்துள்ளேன். நெடிது வாழிய! … என்று சொல்லிக்கொண்டே உங்களிடமுள்ள பேரியாழை முறையாக மீட்டுங்கள். (பேரியாழ் மீட்டியதால் இவன் பெரும்பாணன். இவனை ஆற்றுப் படுத்தியதால் இந்நூல் பெரும்பாணாற்றுப் படை.) உங்கள் கடமைகளை உங்களுக்குத் தெரிந்த அளவில் செய்து அவனைக் கைகூப்பித் தொழுங்கள். உங்களது வறுமை நிலையை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவனே தெரிந்து கொண்டு செயல்படுவான்.

பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல் (465-480)
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க . . . .[465]

நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ . . . .[470]

கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல்
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் . . . .[475]

விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் . . . .[465 - 480]

பொருளுரை:

இளந்திரையன் உணவு, உடை, பரிசில் தந்து பேணும் பாங்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. தன்னைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டான். உலகம் ஒரு நிலையில் நிற்பதில்லை. பொருள்களும் எண்ணங்களும் மாறி மாறி உருண்டோடிக் கொண்டே இருக்கும். உலகில் நிலையானது என்பது ஒருவனது செயலால் பிறருக்கு விளைவதை எண்ணிப் பார்க்கும் புகழோ, இகழோதான். இளந்திரையன் தனக்கு நற்பெயர் உலகில் அழிவு இல்லாமல் நிற்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காகத் தன் செயல்களைத் தானே சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டான். புத்தாடை - கிணற்றுப் பாசி போல் அழுக்குப் படிந்து கிழிந்துள்ள உங்களது ஆடைகளை நீக்கிவிட்டு, நீராவி போல் மென்மையும் தூய்மையும் கொண்ட புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சென்ற நீங்கள் மட்டுமல்லாமல் ஊரில் வாழும் உங்களது சுற்றத்தாரும் உடுத்திக் கொள்ளுமாறு தந்து உதவுவான். புழுக்கல் (பிரியாணி) - பலவகையான புலவுகளைச் சேர்த்துப் புழுங்கச் செய்த உணவை அவனே உங்கள்முன் நின்று கொண்டு ஊட்டுவான். எவ்வளவுதான் உண்டாலும் எப்படித்தான் சுவைத்துச் சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று சொல்லிப், பின்னும் உண்ணச் செய்ய வேண்டும் என்று எண்ணும் நிறைவுறாத ஆசையோடு ஊட்டுவான். கொடிய வாளைப் பிடித்துப் பிடித்து அதன் அழுத்தத்தால் காப்புக் காய்த்துப்போன தன் வலிமை மிக்க கைகளால் ஊட்டுவான். சமையல் தொழிலில் வல்லவன் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த புழுக்கலை ஊட்டுவான். அறுத்துப் போட்ட அரியிலேயே நன்றாக முற்றி விளைந்து தெரித்திருக்கும் நெல்லிலிருந்து உண்டாக்கிய அரிசியில் சமைத்த புழுக்கல் அது. விளையாத காரரிசிப் புழுக்கல் அன்று. அமுது என்பது குழம்பு. நல்ல மணமும், இனிய சுவையும் கொண்டது அந்த அமுது. உண்டவர் மீண்டும் மீண்டும் உண்ண விரும்பும் வகையில் வழி வழியாகச் சமைத்துப் பழகிய கைப்பக்குவத்தை உள்ளடக்கிப் புழுக்கிய உணவு அது. வானத்தில் மீன்கள் பூத்துக் கிடப்பது போல் பரந்த இடத்தில் உண்கல வட்டில்களைப் பரப்பிப் புழுக்கல் இட்டு ஊட்டுவான்.

பரிசு வழங்குதல் (480-493)
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி
உரவு கடல் முகந்த பருவ வானத்து
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பகம் பொலிய பொன்னின் . . . .[485]

தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து . . . .[490]

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் . . . .[480 - 493]

பொருளுரை:

அணிகலன் - (தாமரை) - மேகம் மேயும் வானத்தில் நிலா ஒளிர்வது போல், கரிய கூந்தலில் போடப்பட்ட பித்தைக் கொண்டையின் மேல் தாமரை ஒளிரும். வண்டுகள் மொய்க்காத பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை அழகு தோன்றும் வகையில் தானே தன் கைகளால் சூட்டி விடுவான். ஊட்டுவான்- பெற்ற மக்களுக்கு உணவு ஊட்டுவது போல ஊட்டுவான். அணிகலன் - மாட்டல் - கொண்டைமாலை பொன்னின் தொடையமை கொண்டை மாலை என்பது மாட்டல் கடலில் நீர் முகந்து சென்ற பருவ வானம் பகலில் பெய்துகொண்டு மின்னுவது போல் ஒளி வீசும் கொண்டை-மாலையை விறலியரின் கதுப்பில் சூட்டி வீடுவான். கதுப்பு என்பது காதுப் பக்கம் உள்ள மயிர். ஊர்தி - நாலு குதிரை பூட்டிய தேர் கடலின் சிறப்பை நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன. ஆசை கொள்ள வைக்கும் அந்தக் கடலிலுள்ள சங்குகள் போல் வெள்ளை நிறமுள்ள நான்கு குதிரைகள் பூட்டிய முத்துத் தேரைப் பரிசாக நல்குவான். ஊர்தி - சவாரிக் குதிரைகள் தன் கொடையில் அத்துடன் நிறைவடையாமல் படைக் குதிரைகளையும் பரிசாக நல்குவான். போர்க்களத்தில் பகைவர்களைத் தொலைத்து வெற்றி கண்ட போது அவர்கள் விட்டுச் சென்ற குதிரைகள் அவை. வானத்தில் பறப்பது போல் தாவிச் செல்லும் நடையோட்டம் கற்றவை அவை. இப்படி உடை, உணவு, அணிமணி, ஊர்திகள் முதலானவற்றை அவனிடம் பெறக் காத்திருக்க வேண்டுவதில்லை. அவனைப் பார்த்த அன்றே பெற்றுத் திரும்பலாம். பெற்ற வளங்களைத் தம் வரவுக்காகக் காத்திருக்கும் மற்றவர்களுக்கு விரைந்து உதவி மகிழலாமல்லவா!

இளந்திரையனது மலையின் பெருமை (494-500)
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் . . . .[495]

கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின்
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே . . . .[494 - 500]

பொருளுரை:

கின்னரம் என்னும் சில்லு வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அச்சம் தரும் மலைச்சாரலில் மயில்கள் மகிழ்ந்து விளையாடும். அந்த மரமடர்ந்த காடுகளில் ஆண் குரங்குகள் பாய்ந்து விளையாடும். அப்போது மண்ணில் வீழ்ந்த மலர்களைப் பெண்குரங்குகள் சீய்த்து விளையாடும். அங்கே விலங்குகள் துஞ்சும். புறவு என்பது முல்லைநிலம். அங்குள்ள குடில் முற்றங்களில் முனிவர்கள் தீ வளர்ப்பர். களிறுகள் கொண்டு வந்து தந்த விறகுகளைக் கொண்டு தீ வளர்த்து வேள்வி செய்வர். அருகில் தெளிந்த ஓளியுடன் பளிச்சிடும் அருவிகள் பல வீழ்ந்தோடும். இப்படிப்பட்ட மலைநாட்டை ஆளும் உரிமை பெற்ற அரசன் தான் தொண்டைமான் இளந்திரையன். ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைப்பகுதி தொண்டைமானின் ஆட்சிக்கு அக்காலத்தில் உட்பட்டிருந்தது போலும் சவ்வாது மலைப்பகுதி என்பது டாகடர் மா, இராசமாணிக்கனார் கருத்து.

முற்றிற்று
தனிப் பாடல்
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய்,
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சின வேல்
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை
யான் பயந்தேன்' என்னும் செருக்கு.

பொருளுரை:

இளந்திரையன் தொண்டையரின் வழித்தோன்றல்- மங்கித் தோன்றும் மழைமேகங்கள் முகந்து செல்லும்படி நீர் வழங்கும் கடல் இரவும் பகலும் தூங்காமல் ஆரவாரம் செய்துகொண்டிருப்பதற்குக் காரணம், வெஞ்சின வேலைக் கையில் ஏந்திக் கொண்டும், காட்டில் பூத்த பூவின் கண்ணி மாலையைத் தலையில் சூடிக்கொண்டும், பாயும் குதிரைமேல் செல்லும் திரையனைப் பெற்றுத் தந்த செருக்குத்தான். கான் பயந்த கண்ணி என்பது தொண்டைக் கொடியின் கண்ணிமாலை. தொண்டை = ஆதொண்டை = பல்லவம். ஆடி அம்மாவாசை நோன்பிற்கு உகந்ததாகப் போற்றப்படுவது ஆதொண்டங்காய். ஆதொண்டங் கொடியை அக்காலத்தில் மிகுதியாகக் கொண்டிருந்த நாடு தொண்டைநாடு. பிற்காலத்தில் காஞ்சியில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்த பல்லவரும் திரையன் மரபில் வந்தவர் என்பதை வெளிப்படுத்தும் சான்று இந்த வெண்பா.